Published:Updated:

ஆம்னி பஸ் அதிபர்களுக்காக... அந்த்யோதயா ரயில்கள் நிறுத்தமா?

ஆம்னி பஸ் அதிபர்களுக்காக... அந்த்யோதயா ரயில்கள் நிறுத்தமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆம்னி பஸ் அதிபர்களுக்காக... அந்த்யோதயா ரயில்கள் நிறுத்தமா?

ஆம்னி பஸ் அதிபர்களுக்காக... அந்த்யோதயா ரயில்கள் நிறுத்தமா?

சென்னை தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கும், திருநெல்வேலிக்கும் அறிவிக்கப்பட்ட இரண்டு அந்த்யோ தயா ரயில்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியில் ஆம்னி பஸ் முதலாளிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஏழை மக்களின் வசதிக்காக முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே கொண்ட அந்த்யோதயா விரைவு ரயில்கள் பல்வேறு மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப் படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. அதன்படி, ‘தாம்பரத்திலிருந்து செங் கோட்டை, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி என முழுக்கவும் முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே கொண்ட இரண்டு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம்’ சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு டெல்டா மற்றும் தென் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, கோடை விடுமுறையில் வெளியூர்களுக்குப் பயணம் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த இரண்டு ரயில்களும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டன. ‘தொழில்நுட்பக் காரணங்களால், அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன’ என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த இரண்டு ரயில்களும் தாம்பரம் குரோம் பேட்டையில் சும்மா நின்றுகொண்டிருக்கின்றன.

ஆம்னி பஸ் அதிபர்களுக்காக... அந்த்யோதயா ரயில்கள் நிறுத்தமா?

இதுகுறித்து கும்பகோணம் அனைத்துத் தொழில் மற்றும் வணிகர் சaங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயணனிடம் பேசினோம். ‘‘2017 நவம்பரில் தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில், ‘தாம்பரத்தி லிருந்து திருநெல்வேலிக்கும், செங்கோட்டைக்கும் புதிதாக இரண்டு அந்த்யோதயா விரைவு ரயில்கள் இயக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. முன்பதிவில்லா பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில்களில், குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணம் செய்ய முடியும். ஒரு பெட்டிக்கு 72 இருக்கைகள் வீதம் 16 பெட்டிகளில் 1,152 இருக்கைகள் இருக்கும். தவிர, கீழே உட்கார்ந்து பயணம் செய்பவர்கள், நின்றுகொண்டே பயணம் செய்கிறவர்கள் என எல்லோரையும் சேர்த்தால், 1,500 பேருக்கு மேல் ஒரு ரயிலில் பயணம் செய்ய முடியும்.

விரைவு ரயிலில், முன்பதிவு பெட்டிகளுக்குப் பல மடங்குக் கட்டணம் அதிகம். அதிகபட்சம் நான்கு பெட்டிகள்தான் முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். இதனால், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். கோடை விடுமுறைக் காலம் என்பதால், அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இந்த அந்த்யோதயா ரயில்கள் இரண்டும் இயக்கப்பட்டிருந்தால், பெரிதும் பயனுள்ளதாக இருந்திருக்கும். பல மாவட்டங் களைச் சேர்ந்த மக்கள் நிம்மதியாகப் பயணம் செய்திருப்பார்கள். இந்த ரயில்கள் 2018 ஏப்ரல் 27-ம் தேதியிலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் சொல்லப்பட்டது. ஆனால், திடீரென அவை நிறுத்தப்பட்டன. இந்த இரண்டு ரயில்களும் இயக்கப்பட்டால் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று பயந்த ஆம்னி பஸ் முதலாளிகள், தங்கள் அமைப்பின் மூலமாக ரயில்வே வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்தே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு முன்பதிவில்லா விரைவு ரயிலில் பயணம் செய்ய 100 ரூபாய்தான் கட்டணம். ஆனால், ஆம்னி பஸ்ஸில் செல்ல 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். திருநெல்வேலிக்கே அதிகபட்சம் 250 ரூபாய் செலவில் போய்விடலாம். தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அந்த்யோதயா ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புவார்கள். அதனால், அச்சமடைந்த ஆம்னி பஸ் முதலாளிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த ரயில்களை நிறுத்திவிட்டனர் என்று தெரிகிறது. கோடை விடுமுறைக்குப் பிறகுதான் இந்த ரயில்கள் இயக்கப்படலாம்” என்றார் வருத்தத்துடன்.

ஆம்னி பஸ் அதிபர்களுக்காக... அந்த்யோதயா ரயில்கள் நிறுத்தமா?

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தெற்கு ரயில்வே முதன்மை இயக்க அதிகாரி அனந்தராமனிடம் கேட்ட போது, ‘‘தொடக்க விழா நடத்தித்தான், புதிய ரயில்களை இயக்குவோம். இதற்காகத்தான் காத்திருக்கி றோம். ரயில்வே போர்டுதான் தொடக்க விழாவை முடிவு செய்யும். ஆம்னி பஸ் முதலாளிகளுடன் இதைச் சம்பந்தப்படுத்துவது தவறு. அதில் உண்மையில்லை’’ என்றார்.

ஆனால், ‘‘தாம்பரம் - செங்கோட்டை இடையே அந்த்யோதயா விரைவு ரயிலை 15 நாள்கள் இயக்கியுள்ளனர். எனவே, தொடக்க விழாவைக் காரணமாகச் சொல்வது ஏற்புடையதல்ல. அப்படியே தொடக்க விழாவை ஒரு காரணமாகச் சொன்னாலும்கூட, அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை தினமும் சிரமப்பட வைப்பது நியாயமா?” என்று கேள்வி எழுப்புகிறார் சத்தியநாராயணன்.

ரயில்வே வாரியத்தின் பயணிகள் குறைதீர்க்கும் பிரிவின் தலைவரும் பி.ஜே.பி தேசியச் செயலாளருமான ஹெச்.ராஜாவிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘‘கர்நாடகா தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கேரளா வந்திருக்கிறேன். அந்த்யோதயா ரயில்கள் குறித்து என் கவனத்துக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம்  விசாரிக்கிறேன்” என்றார்.

ரயில்வேயும் தமிழகத்தைப் புறக்கணித்து விடக்கூடாது!

- கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: தெ.அசோக்குமார்