மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா?

அலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
அலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா?

டீ கிளட்டரிங்ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு எழுத்து வடிவம்: சாஹா, ஓவியம்: ரமணன்

நீங்கள் வேலைக்குச் செல்கிறவராக இருக்கலாம். அல்லது வீட்டிலேயே ஏதோ வேலை பார்ப்பவராக இருக்கலாம். வீட்டு ஆண்களின் வேலைக்குத் துணையாக வீட்டிலிருந்தபடியே சின்ன அலுவலகம் வைத்து நிர்வகிப்பவராகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் வொர்க் ஸ்பேஸ் எனப்படுகிற வேலையிடச் சூழலை அழகாக, அடைசலின்றி வைத்துக்கொள்வதன் மூலம் வேலைத்திறனை அதிகரிக்கச் செய்ய முடியும். வீட்டை நேர்த்தியாக வைத்துக்கொள்வதில் நமக்கிருக்கும் அதே முனைப்பு, வேலையிடத்திலும் இருக்க வேண்டும்.

வீட்டிலிருப்பதற்கு இணையான நேரத்தை வேலையிடத்திலும் செலவிடுகிறோம். வீட்டிலுள்ள பொருள்கள் அவற்றுக்கான இடங்களில் இருக்கும்போது, நம்மையறியாமல் நமக்குள் ஓர் அமைதி பரவும். அதே தத்துவம் பணியிடங்களுக்கும் பொருந்தும்.

தலைசுற்ற வைக்கும் பேப்பர் குவியல்கள்!

அலுவலக மேஜையைப் பராமரிப்பதென்பது பலருக்கும் மிகவும் அலுப்பான வேலை. பணியிடங்களில் சிலரின் மேஜைகளைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த அலுவலகத்தையே அவர்கள்தான் தாங்குகிறார்களோ என்று நினைக்கவைக்கும். பழைய கோப்புகளும் தேவையற்ற பேப்பர்களும் குவிந்துகிடக்கும் அந்த இடத்தைப் பார்த்தாலே மற்றவர்களுக்குத் தலைசுற்றும்.

அலுவலக மேஜையை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்ளும்போது, வேலையால் ஏற்படுகிற மன அழுத்தம் குறைவதுடன், வேலைத் திறனும் அதிகரிக்கும்.

தேவையில்லாத ஒரு ஃபைல் உங்கள் மேஜையில் இருக்கும்போது, உங்கள் மனம் அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கும். தேவையற்ற பொருள்கள் எதிரில் இல்லாதபோது உங்கள் கவனம் அவற்றில் போக வாய்ப்பில்லை. அலுவலக மேஜை என்பது சுத்தமாகவும் அடைசல்களின்றியும் இருக்க வேண்டியதன் அவசியம் அங்கிருந்தே ஆரம்பமாகிறது. பணியிட மேஜையைத் தவணை முறையில் நினைத்த போதெல்லாம் சுத்தம் செய்யக் கூடாது. ஒரே மூச்சில் சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும்.  டேபிளின் மேற்புறம், அடிப்பகுதி, டிராயர் என எல்லாம் இதில் அடக்கம்.

அலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா?

பயன்பாட்டை அறியுங்கள்!

டேபிளின் மேல் பகுதியையும் அடிப்பகுதியையும் டிராயர்களையும் ஆக்கிர மித்துக்கொண்டிருக்கிற அத்தனை பொருள்களையும் வெளியே எடுங்கள். அவற்றை தேவையானவை, தேவையற்றவை எனப் பிரியுங்கள். அவசியம்  தேவை என்கிற லிஸ்ட்டில் வருபவற்றை ஓர் அட்டைப் பெட்டியில் போட்டு வையுங்கள். மேஜையைச் சுத்தம் செய்த பிறகு அடுத்த ஒரு மாதத்துக்கு அந்த அட்டைப் பெட்டியில் வைத்தவற்றில் எவற்றையெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் எனப் பாருங்கள். அந்த ஒரு மாதத்தில் நீங்கள் பயன்படுத்தாதவற்றை அடுத்த முறை சுத்தம் செய்கிறபோது தேவையற்றவையாகக் கணக்கில்கொண்டு அப்புறப்படுத்துங்கள்.

மேஜையின் மீது எவற்றை வைக்கலாம்?

சாமி படம் வைப்பதிலிருந்து, ‘கோ’ படத்தில் வருவது போல குட்டிச் செடி, ‘கவண்’ படத்தில் வருவது போல மீன்தொட்டி வைப்பது என மேஜை மீது வைக்கப்படுபவை அவரவர் கற்பனை மற்றும் விருப்பங்களைப் பொறுத்தது. ஆனால்,  `இந்தப் பொருள்கள் இல்லாமல் வேலை செய்ய முடியாது’ என்பனவற்றை மட்டுமே மேஜையின் மீது வைக்க வேண்டும். நோட் பேடு முதல் கம்ப்யூட்டர் வரை அவரவர் வேலையின் தேவையைப் பொறுத்து எதுவாகவும் இருக்கலாம். வேலைக்குத் தேவையில்லை என்கிற பொருள்களை மேஜையில் வைக்காதீர்கள். உதாரணத்துக்குப் புத்தகங்கள், உங்களுக்கு யாரோ பரிசளித்த காபி மக், உங்களுடைய தனிப்பட்ட படம் மற்றும் குடும்பத்தாரின் போட்டோ போன்றவற்றுக்கு அலுவலக மேஜையில் இடம் கொடுக்காதீர்கள். உங்கள் வேலைக்கு உதவுகிற பொருள்கள் என்றால், உதாரணத்துக்குப் பேப்பர் கிளிப், ஸ்டேப்ளர், பேனா, பென்சில் என அவரவர் பார்க்கும் வேலை தொடர்பான பொருள்களை மேஜை டிராயரின் முதல் அறையில் வைத்துவிடுங்கள்.

பணியிடத்தை விஸ்தரியுங்கள்!

பிரின்ட்டர், ரெஃபரென்ஸுக்கான புத்தகங்கள் எனக் கொஞ்சம் பெரிய பொருள்களையும் மேஜையின் மேல் வைக்க வேண்டாம். பெரிய பொருள்கள் மேஜையின் பெரும்பான்மை இடத்தை அடைத்துவிடும். பிறகு அத்தியாவசியப் பொருள்களை வைக்க இடமிருக்காது. டேபிளுக்கு அடியில் அவசியம் வைக்க வேண்டியது டஸ்ட் பின். தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துவதில் இதன் பங்கு முக்கியமானது. கம்ப்யூட்டர் கேபிள், பிரின்ட்டர் கேபிள் என  டேபிளைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் வயர்கள் தொங்கும். நீளமாகத் தொங்கும் கேபிள்களை மடித்துக் கட்டிவைப்பது உங்கள் டேபிள் ஸ்பேஸைக் கொஞ்சம் அழகாக்கும்.

அலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா?

`எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி விட்டேன். அதன் பிறகும் என் டேபிள் அடைசலாகவே தெரிகிறது’ என நினைக்கிறீர்களா? அதி அத்தியாவசியமான பொருள்களை மட்டும் டேபிளில் வைத்துக்கொண்டு, பிற பொருள்களைப் பக்கத்தில் எக்ஸ்ட்ரா கபோர்டு அல்லது அலமாரிகளுக்கு மாற்றுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பணியிடத்தை விஸ்தரிக்கிறீர்கள். எனவே, உங்கள் மேஜை நிச்சயம் சுத்தமாகும்.

தள்ளிப்போடும் பழக்கத்தைத் தவிருங்கள்!

வேலை முடிக்கப்படாமல் நீண்ட நாள்களாக ஒரு ஃபைல் உங்கள் மேஜையின் மீது இருக்கிறதா? முதலில் அந்த வேலையை முடிக்கப் பாருங்கள். அவசரமான வேலையை மட்டும் உடனே முடிப்பது, மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுவது பலருக்கும் வழக்கம். ஒருகட்டத்தில் அந்த வேலையை அப்படியே மறந்துவிடுவோம். அதைத் தவிர்த்து அந்தந்த வேலைகளை அதற்கான நேரத்தில் முடிக்கப் பழகினால், வேலையும் சேராது; மேஜையும் சுத்தமாகும்.

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும், அந்த டேபிளைச் சுத்தம் செய்து வைத்துவிட்டுக் கிளம்புவதன் மூலம் அடுத்த நாள் காலையில் அந்த டேபிள் உங்களை அழகாக வரவேற்கும்.

(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!)