சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 1

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 1
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 1

புதிய தொடர்

1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்தரம் அடைந்தது. உலகத்தைக் கடல் வழியாக முதன் முதலில் வலம் வந்தவர் மெகல்லன். முதலாம் பானிபட் போர் 1526-ம் ஆண்டு நடைபெற்றது. உலகில் ஏழாவதாகக் கண்டறியப்பட்ட கண்டம் அன்டார்டிகா... இவை மட்டும் வரலாறு அல்ல; நம் பாடப்புத்தகத்தில் நிரம்பியுள்ள வரலாற்றுத் தகவல்கள். உண்மையில் வரலாறு என்பது அவ்வளவு சுவாரஸ்யமானது, சுவையானது, சிலிர்ப்பூட்டுவது, அச்சமூட்டுவது, நெகிழச் செய்வது, மகிழச் செய்வது, கலகலவெனச் சிரிக்கவும் வைப்பது.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 1

புன்னகை தரும் வரலாற்றுப் பக்கங்களை மட்டும், நாம் இந்தப் பகுதியில் படிக்கலாம். சிரிக்கலாம்.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 1

த்தொன்பதாம் நூற்றாண்டில் வியட்நாம் பிரஞ்சுக்காரர்களின் காலனியாக இருந்தது. அங்கே ஹனோய் நகரத்தில் எலித்தொல்லை மிக அதிகம். அதை ஒழிக்க பிரெஞ்சுக்காரர்கள் திட்டம் ஒன்றை அறிவித்தார்கள். ‘எலிகளைக் கொன்றால் தகுந்த வெகுமதி வழங்கப்படும். கொல்லப்பட்ட எலியின் வாலை மட்டும் எடுத்துவந்தால் போதும். வால்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் உண்டு.’ வியட்நாம் மக்கள் எலி வால்களை எடுத்துச் சென்று பணம் பெற்று வந்தார்கள்.

பிறகுதான் வியட்நாமிய அதிகாரிகள், ஊருக்குள் பல எலிகள் வாலே இல்லாமல் திரிவதைக் கண்டார்கள். உண்மையையும் புரிந்துகொண்டார்கள். எலிகளைப் பிடிக்கும் மக்கள், வால்களை மட்டும் அறுத்துவிட்டு, எலிகளை விட்டுவிட்டார்கள். அந்த எலிகள் மேலும் குட்டிகள் போட்டு எண்ணிக்கையில் பெருகின. மக்கள் அதிகம் சம்பாதிக்க எலிகளின் வால்களே போதுமானவையாக இருந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரெஞ்சுக்காரர்கள், அந்த எலி வால் திட்டத்தையே ரத்து செய்தனர்.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 1

வியட்நாமுக்கு எலிகள் என்றால், இந்தியாவுக்குப் பாம்புகள். பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலத்தில், டெல்லி பகுதியில் விஷப் பாம்புகளின் தொல்லை மிக அதிகமாக இருந்தது. பாம்புக்கடியால் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன. எனவே, பிரிட்டிஷார் ஒரு திட்டத்தைச் செயல் படுத்தினர். விஷமுள்ள பாம்புகளை, மக்கள் கொன்று எடுத்து வந்தால் அதற்குத் தகுந்த பணம் வாங்கிச் செல்லலாம் என்று அறிவித்தனர்.

மக்களும் பாம்புகளைக் கொன்று எடுத்து வந்து கொடுத்து, மகிழ்ச்சியுடன் பணம் வாங்கிச் சென்றார்கள். நாளுக்கு நாள் மக்கள் கொன்று எடுத்து வரும் செத்த பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனால், பாம்புகளின் எண்ணிக்கை குறைவது போலத் தெரியவில்லை. பிரிட்டிஷார் குழம்பிப் போயினர். பின்பே ஓர் உண்மையைக் கண்டறிந்தனர்.

மக்கள் விஷப்பாம்புகளை அதிக அளவில் வளர்க்கத் தொடங்கியிருந்தார்கள். ஒரு பாம்பை வளர்க்க ஆகும் செலவைவிட, அதைக் கொன்று எடுத்துச் சென்றால் அதிகம் பணம் கிடைத்தது. எனவே, கொல்வதற்காகவே பாம்புகளை வளர்த்து நிறையவே சம்பாதித்தனர். இந்த உண்மை தெரிந்ததும், கடுப்பான பிரிட்டிஷார், ‘இனி பாம்புக்குப் பணம் கிடையாது’ என்று அறிவித்தனர்.

இனி தாம் வளர்க்கும் பாம்புகளால் எந்த உபயோகமும் இல்லை என்று தெரிந்ததும், மக்கள் அந்தப் பாம்புகளை எல்லாம் வெளியில் திறந்து விட்டனர். முன்பைவிட, பல மடங்கு பாம்புத் தொல்லை அதிகமாகிப் போனது.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 1

டால்ஃப் ஹிட்லர் என்ற பெயரைக் கேட்டதுமே எல்லோருக்குமே தோன்றுவது, உலகில் வாழ்ந்த மிக மோசமான சர்வாதிகாரி என்பதுதான். லட்சக்கணக்கில் யூதர்களைக் கொன்று குவித்தவர். ஹிட்லர் மீதான பயம், அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகளையும் உருவாக்கியது. ஹிட்லரைப் பற்றி என்ன சொன்னாலும் அன்றைக்கு மக்கள் நம்பினார்கள். அதில் மூன்றே மூன்று காமெடி பொய்கள் மட்டும் இங்கே.

1.ஹிட்லர் ஸோம்பிக்களால்  ஆன ஒரு படையை உருவாக்கி வைத்திருந்தார். யாராலும் தோற்கடிக்கவே முடியாத, அசுர பலம்கொண்ட அந்த நாஸி ஸோம்பி படைப் பிரிவைக் கொண்டு இரண்டாம் உலகப்போரின் முக்கியமான கட்டத்தில் பெரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

2. ஹிட்லர், எதிரிகளைத் துவம்சம் செய்யும் வகையில் நாய்களால் ஆன படையை உருவாக்கியிருந்தார். அந்த நாய்கள் பேசும் சக்தி படைத்தவை. ஹிட்லரைப் பார்க்கும் போதெல்லாம், அவை ‘Heil Hitler!’ என்று வாழ்த்திக் கத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

3. ஹிட்லர், ஏலியன்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். நவீன சூப்பர் ராக்கெட், பறக்கும் விண்கலம் போன்றவற்றை உருவாக்கி வைத்திருந்தார். எதிரிப் படைகள் சூழ்ந்தபோது, இறுதியில் ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. எல்லோரையும் ஏமாற்றிய அவர், ராக்கெட்டில் ஏறி நிலாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். நிலவில் காலடி பதித்த முதல் மனிதன் ஹிட்லர்தான்.

இன்றைக்கும் ஹிட்லர் எங்கேயோ தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்புபவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள்.