
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
கபிலர் திரும்பி வந்ததும் அவரிடம் கேட்கப்பட்டதைவிட அலவனிடம்தான் அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. அவன் அனுப்பப்பட்டதும் அதற்காகத்தான். வேந்தர்களின் படைக்கலக் கொட்டிலில் நஞ்சு சேகரிப்பு இருக்கிறதா, எந்த வகை நஞ்சுகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் தேவைப்பட்டன. அதனால்தான் கபிலருக்கு உதவியாளனாக அலவனை அனுப்பிவைத்தான் தேக்கன்.
அலவனின் வேலையை எதிரிகளே பாதியாகக் குறைத்தனர். கபிலரை அழைத்துச்செல்லும்போதே ஆயுதச் சேகரிப்பு இடங்களான படைக்கலக் கொட்டில்கள் மூன்றின் வழியாகத்தான் சாகலைவன் அழைத்துச் சென்றான். வேந்தர்களின் போர் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதைக் காட்டும் உத்தியாக அவ்வாறு செய்தார்கள். ஆனால், அதுவே அலவனின் வேலையைக் குறைத்தது. படைக்கலக் கொட்டில்கள் மூன்றும் எங்கெங்கு இருக்கின்றன என்பதை முதலிலேயே பார்த்துக்கொண்டான்.

பிறகு பேச்சுவார்த்தை நடத்தும்போது, ``நீ வெளியில் இரு’’ என கபிலர் சொன்னதும் வெளியில் வந்த அலவன் மூன்று இடங்களையும் போய்ப் பார்த்தான். அவன் பார்க்க நினைக்கும் இடங்களுக்கு வீரர்களே அழைத்துச் சென்றனர். வேந்தர்களின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியேறிவந்து கேட்டதால், `அரச உத்தரவு’ என நினைத்து தங்குதடையின்றி அழைத்துச் சென்றனர். அலவன் சிறியவனாக இருந்ததால் அவனை ஐயம்கொள்ளவும் வழியின்றிப்போனது.
அலவன் நீண்டநேரம் சுற்றினான். நஞ்சின் வாடையை காற்றை நுகர்ந்தே கண்டறியும் உயிரினங்கள் உண்டு. நஞ்சின் குணமேறிய காற்று பட்டவுடன் வண்டுகள் குழறி ஒலிக்கும்; அன்றிற்புல் மயக்கமெய்யும்; காடை மயிர்சிலிர்க்கும்; மயிலோ நிலைபிறழ்ந்து துள்ளும். இவற்றைப்போலவே நஞ்சின் வாடையை நுகர்ந்தறியும் ஆற்றல்கொண்டவர்கள் நாகக்குடியினர். ஆனால், துள்ளுவது, சிலிர்ப்பது, மயங்குவது என எந்தவிதத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாதவர்கள். சிறுவன் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்துத் திரிகிறான் என உடன் இருந்த காவல் வீரர்கள் நினைத்தனர். ஆனால் அவனோ, காற்றில் கலந்திருக்கும் நஞ்சை நிதானமாக நுகர்ந்து ஆய்ந்துகொண்டிருந்தான்.
போய் வந்ததும் முறியன் ஆசான் அவனை அழைத்துப்போய்விட்டார். ஆறாம் குகைக்குள் மருத்துவர்கள் புடைசூழ அலவன் அமர்த்தப்பட்டான். எந்த வகையான நஞ்சுகள் அவர்களின் சேமிப்பில் இருக்கின்றன என அவன் பட்டியலிட்டபோது அனைவரும் வாயடைத்துப்போயினர். இவ்வளவையும் மனிதர்கள் மீது செலுத்த அவர்கள் ஆயத்தநிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விப்படவே பேரதிர்ச்சியாக இருந்தது. இவற்றைச் சேகரிக்கவும் உருவாக்கவும் ஆண்டுகள் பல ஆகியிருக்க வேண்டும்.
நஞ்சைச் சேகரித்தல் எளிதன்று; மருத்துவ அறிவு எங்கு செழிப்புற்று இருக்கிறதோ அங்குதான் நஞ்சைக் கையாளும் முறையும், சேகரிக்கும் முறையும் சிறப்புற்று இருக்கும். தாழைமலரின் மணம்கொண்ட நாகத்தின் நஞ்சும் புளியம் பூ மணம்கொண்ட விரியனின் நஞ்சும் மிக அதிக அளவில் இருந்தன சேரனின் படைக்கலக் கொட்டிலில். புகைநாற்றம்கொண்ட கந்தக நஞ்சு, பாண்டியனின் கொட்டிலிலும், நுகர்ந்த உடனே மார்பு எரிச்சலை உருவாக்கிய பற்பத்தாலான நஞ்சு சோழனின் கொட்டிலிலும் பாதுகாக்கப்பட்டிருப்பதை அலவன் விரிவாகச் சொன்னான்.
``இந்த வகை நஞ்சுகளை எந்த ஆயுதங்களினூடேயும் பயன்படுத்த வாய்ப்புண்டு. இதனால் நமது வீரர்கள் தாக்குண்டால் களத்துக்குள்ளேயே செய்துகொள்ளவேண்டிய மருத்துவம் என்ன... களம்விட்டு வெளியில் கொண்டுவரும் வரை தாக்கப்பட்டவருக்கு உயிர் நிலைக்குமா... அதற்கு என்ன வழி, மருத்துவச்சாலையை இவ்வளவு உயரத்தில் இரலிமேட்டிலே அமைத்துள்ளது எந்த வகையில் பயன்படும்... நாகக்கரடின் கீழே உடனடி மருத்துவத்துக்கு வகைசெய்யும் ஏற்பாட்டைச் செய்யவேண்டுமா?’’ என்று உரையாடல் தொடர்ந்தது. அலவன் கண்டறிந்து சொன்ன செய்திக்குப் பிறகு நஞ்சு முறியைச் சேகரிக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய பணி எது என்பது, மையூர்கிழாருக்கு பெருங்குழப்பமாகவே இருந்தது. பாண்டியப் பெருவேந்தனின் மனம்கோணாமல் நடப்பதுதான் அவருக்கு இருக்கும் முன்னுரிமை. ஆனால், என்று மூஞ்சல் நகர் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அரண் உருவாக்கப்பட்டதோ, அன்றிலிருந்து இன்று வரை அவரால் மூஞ்சல் நகருக்குள் செல்ல முடியவில்லை. வேந்தர்களுக்கான எல்லா தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான நிர்வாக ஏற்பாட்டுடனேயே அவர்கள் உள்ளனர். அமைச்சர் முசுகுந்தர் மூலமே செய்தியை அவ்வப்போது பரிமாறிக்கொண்டார். இளவரசி வந்துள்ள செய்தியை முசுகுந்தரிடம் தெரிவித்தார். அதேபோல போர்க்களம்விட்டு சற்று தொலைவில் தனித்த குடில் ஒன்றில் தங்கியுள்ள திசைவேழரைப் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது சொல்லிவந்தார்.

மூவேந்தர்களின் படைகள் நிலைகொள்ளும் வரை மையூர்கிழாருக்கு எண்ணற்ற வேலைகள் இருந்தன. ஆனால், படைகள் நிலைகொண்டவுடன் அவருக்குச் சொல்லப்பட்ட முக்கிய வேலை என்பது பறம்புமலைக்குள் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து சொல்லுதல் மட்டுமே.
அவர் வாக்கு மீறிய காரணத்தால் அவருடைய வெங்கல்நாட்டைச் சேர்ந்த ஆறு ஊர்க்காரர்கள் இந்தப் போரில் பங்கெடுக்க மாட்டோம் என முடிவுசெய்துள்ளதை அவர் வேந்தனிடம் தெரிவிக்கவில்லை. அது அவர் மீதான மதிப்பைக் குறைத்துவிடும் என நினைத்தார். ஆனால், ‘இந்தச் செய்தியை என்று இவன் சொல்கிறான் பார்ப்போம்’ எனக் காத்திருந்தார் குலசேகரபாண்டியன்.
ஒற்றாடுதல் என்பது, பெருங்கலையாக வேந்தர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது. வெங்கல்நாட்டு நிர்வாகத்துக்குள் என்னென்ன நடக்கின்றன என்பதை அறிந்து சொல்ல ஒற்றர்படைத் தலைவன் ஒருவனின் கீழ் ஒரு குழு இயங்கியது. அவர்களைப் பொறுத்தவரை மையூர்கிழார், பொற்சுவை, திசைவேழர் எல்லோரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்களே! அவர்கள் அறிந்த செய்தியை ஒற்றர்படைத் தலைவனிடம் நாள்தோறும் கூறுகின்றனர். அவனோ தனக்கு மேலிருக்கும் பொறுப்பாளனிடம் கூறுகிறான். அவனைப்போல எத்தனை பேர் ஒற்றர்படையில் இருக்கிறார்கள் என்பதை குலசேகரபாண்டியன் மட்டுமே அறிவார்.
குலசேகரபாண்டியன் அமைத்துள்ள ஒற்றர்படை, இணையற்றச் செயல்பாட்டுத் திறனைக்கொண்டிருந்தது. அதனால்தான் சேரனையும் சோழனையும் துணிந்து தனது போர் செயல்பாட்டுக்குள் இணைத்துக் கொண்டார். அவர்கள் இருவரின் படைகளும் பாசறைகளும் குலசேகரபாண்டியனின் செவிப் பறையால் கேட்கக்கூடிய இடங்களாகத்தான் இருந்தன.
சேரனும் சோழனும் ஒற்றர்படை கொண்டிருந்தனர். ஆனால், மாபெரும் இயக்கம் ஒன்றின் ஒரு பகுதியாக இணைந்த பிறகு அதன் மொத்த இயக்கத்தைக் கண்காணிப்பது எளிய செயலன்று. ஆனாலும் அவர்களின் ஒற்றாடற்பணியும் தீவிரமாகத்தான் இருந்தது. அவர்கள் பணியின் இலக்காக இருந்தது பறம்பில் நடப்பதறிந்து வெல்லும் செயலுக்கானதன்று. மாறாக, எதிரியாலோ, மற்ற இரு பேரரசுகளாலோ தங்களுக்கு ஏதும் தீங்கு நேரிடாமல் காக்கும் செயலுக்கானதாக இருந்தது. எனவே, அவர்கள் தற்காப்பு ஆயுதமாக ஒற்றாடலைப் பயன்படுத்தினர். குலசேகரபாண்டியனோ தாக்கும் கருவியாக ஒற்றாடலை கூர்தீட்டியிருந்தான்.
``போரில் ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல; எந்த ஓர் ஆயுதத்தையும்விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை, கண்டறியப்படும் செய்திகளுக்கு உண்டு. எனவே, வெங்கல்நாட்டுக்குள் பறம்புக்குடிகள் சிலரையாவது அனுப்பிவைக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை ஒற்றறிவது அவசியம்’’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
``தன்னையும் தனது வீரத்தையும் நம்பாதவனே ஒற்றனை நம்புகிறான்’’ என்றான் பாரி.
வாரிக்கையன் மறுத்தான். ``வீரமும் தந்திரமும் சம முக்கியத்துவம்கொண்டவை. போர்க்களத்தில் இரண்டிலும் திறன்மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.’’
``வீரத்தின்வழி மட்டுமே போரை நடத்துவோம். அறமற்ற வழிக்கு `தந்திரம்’ எனப் பெயர் சூட்டுவது கோழைகளின் செயல்’’ என்று சொன்ன பாரி, சற்றும் இடைவெளியின்றி தொடர்ந்தான், ``நாம் விரும்பாத ஒரு வழிமுறையில் போரை நடத்தப்போவதில்லை. எதிரிகளின் அறமற்றச் செயலைப் பற்றி நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?’’

இப்போது கபிலர் குறுக்கிட்டார், ``போரென்று வந்துவிட்டால், அதற்கு வெற்றி மட்டுமே நோக்கமாக இருக்க முடியும். அந்த வெற்றியை அடைய நிகழ்த்தப்படும் கொலையில் அறமும் அடக்கம். எனவே, போரில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது. நாம் விரும்பாவிட்டாலும் இதுதான் உண்மை.``
``அறத்தின் கொலைக்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. அதுமட்டுமன்று, அந்தக் கொலைக்குக் கைம்மாறுசெய்யும் சீற்றத்தை நாம் இழந்துவிடக் கூடாது.’’
பாரியின் சொல்லுக்குப் பிறகு அங்கு எந்தக் கருத்தும் மிஞ்சவில்லை.
இரவு நீண்ட உரையாடல் முடிந்து தூங்குகையில் பொழுது நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
மறுநாள் மிகவும் காலம் தாழ்த்தியே பாரி எழுந்தான். அவன் எழுந்தபோது எதிரில் நின்றிருந்தான் நீலன்.
அவனைக் கண்டதும்தான் பாரியின் நினைவுக்கு வந்தது, இன்று மயிலாவுக்கான நிறைசூல் விழா. வள்ளிக்கூத்து நடக்கும் நாள். பெண் முதன்முறையாகக் கருவுறும்போது ஒன்பதாம் மாதம் அவளை அவளது இல்லத்திலிருந்து அழைத்துப்போய் சந்தனவேங்கை மரத்தின் அடிவாரத்தில் இரவெல்லாம் வள்ளிக்கூத்து நடத்துவர். பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பெருங்கூத்து இது. கூத்து முடிந்ததும் மூத்த மருத்துவச்சியின் குடிலுக்கு அழைத்துச்செல்வர். குழந்தை பிறக்கும் வரை அவள் அங்குதான் இருப்பாள். பெண்களின் முதல் மகப்பேறுக்காக நடக்கும் பெருவிழா இது.
வள்ளிக்கூத்தில் ஆண்களுக்கு அனுமதியில்லை. எனவே, இன்று வரை அந்தக் கூத்து எப்படி நடக்கிறது என்று எந்த ஆணுக்கும் தெரியாது. ஆனால், அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை யாரையும் விடுவதில்லை.
கருவுற்றவளை சந்தனவேங்கை நோக்கி அனுப்பிவைக்கும் சடங்கு, இன்று நடக்க இருக்கிறது. வள்ளிக்கூத்தில் கலந்துகொள்ள ஆதினியும் அங்கவையும் வேட்டுவன் பாறையில்தான் இருந்தனர். பாரியும் வேட்டுவன்பாறைக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனால், நேரம் அதிகமாகிவிட்டது. ``நீ இப்போது புறப்பட்டால்தான் மாலைக்குள் போய்ச்சேருவாய். காலம் தாழ்த்தாமல் புறப்படு. நான் இரவுக்குள் வந்து சேருகிறேன்’’ என்றான் பாரி.
பாரியின் சொல்லை ஏற்று புறப்பட்டான் நீலன். உடன் அவன் தோழர்கள் புங்கன் உள்பட பத்து பேர் புறப்பட்டனர். காலம்பனின் மூத்தமகனான கொற்றனும் உடன்வந்தான். இரலிமேட்டில் இருக்கும் குகைகளை இந்தப் போருக்காகத்தான் தங்குமிடமாக மாற்றினர். எனவே, இங்கிருந்து மற்ற இடங்களுக்கு செம்மையான குதிரைப்பாதைகள் உருவாகிவிடவில்லை. இரலிமேட்டிலிருந்து கீழே வந்து நாகக்கரடின் வழியே நெடுந்தொலைவைக் கடந்து பிறகு மீண்டும் காரமலையின் மீது ஏறித்தான் குதிரைப் பாதையைப் பிடிக்க முடியும். அதன் பிறகு விரைந்து பயணித்தால் மாலைக்குள் வேட்டுவன்பாறையை அடையலாம். அதனால்தான் ``காலம் தாழ்த்தாமல் புறப்பட்டுப் போ’’ என்றான் பாரி.
நீலன் புறப்பட்டுச் சென்ற பிறகு இரலிமேட்டின் மேற்புறம் இருந்த சிற்றருவியில் குளிக்கச் சென்றான். அவனது எண்ணம் முழுக்க நேற்றிரவு நடந்த உரையாடலையே மையம்கொண்டிருந்தது. `போரில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது’ என்ற கபிலரின் வார்த்தை, அவனை இரவெல்லாம் தூங்கவிடவில்லை. பெரும்போரை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது.
`நாம் இறங்கித் தாக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இப்படியே பறம்புவீரர்கள் எல்லோரும் ஊர் திரும்பினால் இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும். எதிரிகள், இப்போது இருக்கும் இடத்தைவிட்டு பறம்புக்குள் ஒருபோதும் நுழைய மாட்டார்கள். அப்படியே நுழைந்தாலும் அவர்களை அழிக்க நீண்ட பொழுதாகாது. அதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். அதனால்தான் கண்ணுக்கு முன்னால் பெரும்படையை நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றுகிறார்கள். எதிரி என்ன செய்கிறான் எனச் சிந்திக்கத் தொடங்குவதே அவனது நோக்கத்துக்குள் நாம் இழுபட்டதன் அடையாளம்தான். தேக்கன் அலவனை அனுப்பியிருக்கக் கூடாது. அவசரப்பட்டுவிட்டான். சேகரிக்கப்பட்டுள்ள கொடும்நஞ்சைப் பற்றிய செய்தி, வீரர்களை மேலும் முறுக்கேற்றிவிடும். நாம் அவர்களை நோக்கி இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது மரத்தின் மீதிருந்து சற்றே மாறுபட்ட பறவையின் ஒலி கேட்டது.
`என்ன பறவை இது... கேட்டிராத ஒலியாக இருக்கிறதே!’ என நினைத்து இங்கும் அங்குமாகப் பார்த்தான். எதுவும் தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் ஒலி கேட்டது. ஒலி வந்த திசையைக் கூர்ந்து நோக்கினான். சின்னஞ்சிறிய பறவை இன்று முறுக்கித்திரும்பும் கிளையில் உட்கார்ந்திருந்தது. உற்று அதையே பார்த்துக்கொண்டிருந்தான். `அதுதான் கூவியதா... என்ன பறவை அது?’ எனப் பார்த்தபடி இருந்தான். மீண்டும் கூவியது. இப்போதுதான் அதன் முகப்பகுதியை முழுமையாகப் பார்க்க முடிந்தது.
ஒரு கணம் திகைத்துப்போனான். அது கருங்கிளி. காட்டின் வியத்தகு பறவைகளில் ஒன்று. எளிதில் யார் கண்ணுக்கும் தட்டுப்படாதது. மகிழ்ச்சி பொங்க அதையே பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. சிறிது நேரத்தில் அது பறந்து காட்டில் மறைந்தது. சிறுவயதில் தந்தையோடு பயணப்பட்டபோது பார்த்தது. ஆண்டுகள் பல ஆகிவிட்டன. நினைவு, கருங்கிளியையே சுற்றிவந்தது. குளித்து முடித்துத் திரும்பும்போதுதான் தோன்றியது, `கருங்கிளையைப் பார்ப்பது மிக நல்ல நிமித்தம். பறம்பில் உள்ள எல்லோரும் அதை அறிவர். இந்தச் செய்தியைச் சொன்னால் `தாக்குதலை இன்றே தொடங்க வேண்டும் என்று கூறுவார் வாரிக்கையன். எனவே, இதைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டாம்’ என நினைத்தபடி குகைத்தளத்துக்கு வந்தான் பாரி.
உணவு முடித்து சிறிது நேரத்தில் வேட்டுவன்பாறை நோக்கிப் புறப்பட ஆயத்தமானபோது நாகக்கரட்டிலிருந்து குதிரைவீரர்கள் இருவர் வந்தனர். ``முடியன் உடனே தங்களை அழைத்துவரச் சொன்னான்’’ என்றனர். போர் தொடர்பான முக்கியச் செய்தியாக இருக்கும். அதனால்தான் உடனே வரச்சொல்லி அழைப்பு அனுப்பியுள்ளான் முடியன் என்பதைப் புரிந்துகொண்ட பாரி, புறப்பட்டான். தேக்கனும் கபிலரும் பின்தொடர்ந்தனர்.

மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. நீலனின் பயணம் வேட்டுவன்பாறையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. செல்லும் வழியில் குமரிவாகையைப் பார்த்தான். வாகைமரத்தில் முதன்முதலாகப் பூப்பூக்கும் வாகையை `குமரிவாகை’ என்பர். குமரிவாகையின் மலர் பேரெழில் கொண்டதாக இருக்கும். மயிலாவுக்கு சூடுவதற்காக அதைப் பறித்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான்.
வேட்டுவன்பாறைக்குள் நுழையும்போது ஊரே விழாக்கோலம்கொண்டிருந்தது. சேவலின் நெற்றிக்கொண்டை போன்ற கவிர்மலரால் மலரணி வாயிலை உருவாக்கியிருந்தனர். தோரணங்களும் மாலைகளும் எங்கும் தொங்கவிடப்பட்டிருந்தன. சிறுமியர் எல்லாம் ஈங்கைமலரை கூந்தலில் சூடி ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர். சிட்டுக்குருவியின் குஞ்சு போன்ற அந்த மலர் சிறுமியரின் தலையாட்டலுக்கு ஏற்ப தாவித் தாவி பறந்துகொண்டிருந்தது. மலர் மணக்க, தண்டு மணக்க, தாது மணக்க எங்கும் நிறைந்த மனத்தினூடே மலர்ந்திருந்தது வேட்டுவன்பாறை.
மயிலாவின் தோழிகள் நீலனை வரவேற்று அவனது குடில் நோக்கி அழைத்துச்சென்றனர். மற்ற காலம் என்றால், ஊரே ஆட்டம்பாட்டத்தில் மூழ்கியிருக்கும். போர்ச்சூழலாதலால் அது இல்லை. நீலன், குடிலுக்குள் நுழைந்தான். நிறைசூல் மங்கை எதிரில் அமர்ந்திருந்தாள். குனிந்திருந்த மயிலாவின் முகம் சற்றே நிமிர்ந்தது. மாதம் கழித்து வந்தவனின் கைகளைப் பற்றி நிறை வயிற்றில் வைத்து மகவை உணரச்செய்ய வேண்டும் எனத் தோன்றியது. `நீ கொடுக்கும் முத்தத்தை உள்நாக்கு நழுவி உணர்வதுபோல இருக்கிறது அடிவயிற்றுக்குள் துடிக்கும் மகவின் செயல்’ என அவனது காதோடு சொல்லவேண்டும் என ஆசையாய் இருந்தது. ஆனால், அவனது முகத்தைப் பார்த்த கணம் எல்லாம் சொல்லப்பட்ட உணர்வோடு அமைதியானாள்.
அவளைப் பார்த்தபடி எதிரில் அமர்ந்த நீலன், சிறிது நேரம் கழித்து ஆதினியைத் தேடினான். சிரித்த முகத்தோடு நீலனின் அருகில் வந்து அமர்ந்தாள் ஆதினி. பெண்களின் கேலிப் பேச்சினூடே ஏதேதோ நடந்துகொண்டிருந்தது. ஒருத்தி மயிலாவின் காதோரம் போய் ஏதோ சொன்னாள். மகிழ்ந்து சிரித்தாள் மயிலா.
விரிந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை மயிலாவின் கையில் கொடுத்து நீலனுக்குச் சூட்டச் சொன்னாள் ஆதினி. அதை வாங்கிய மயிலா, மலர்ந்த முகத்தோடு விரிமலர் மாலையை நீலனுக்குச் சூடினாள். ஆணின் மலர்தல் பெண்ணின் சூலகத்திலிருந்தே விளைகிறது.
மணம்மிக்க பச்சிலைகளாலான படலை மாலையை நீலனின் கையில் கொடுத்து மயிலாவுக்கு சூட்டச்சொன்னாள் ஆதினி. இருகரம் ஏந்தி அவளுக்கு அணிவித்தான் நீலன். பச்சிலைகளின் ஆதிமணம் சூல்கருவுக்குள் இறங்கும்போது நீலனின் மணமும் இணைந்தே கலந்தது. குடிலெங்கும் நிரம்பிவழிந்தது குலவையொலி.
ஆதினி நீலனிடம் சொன்னாள், ``நீ கொண்டுவந்த பூவை இப்போது அவளுக்குச் சூட்டு.’’
நீலன் மறுமொழி சொல்லாமல் மயிலாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.
``என்ன பேசாமல் இருக்கிறாய்?’’ என ஆதினி மீண்டும் கேட்டதற்கு, மயிலாவைப் பார்த்துக்கொண்டே நீலன் சொன்னான், ``நிறைசூல் பெண்ணின் மலர்ந்த முகத்துக்கு இணையான மலர் இதுவரை கண்டறியப் படவில்லை. நான் எந்தப் பூவைச் சூட்டுவேன் அவளுக்கு?’’
அவன் சொல் கேட்டு ஆதினியின் கண்கள் கலங்கின. நீலனைத் தன் மகன் எனத் தழுவி நெற்றிமுகர்ந்து முத்தம் கொடுத்தாள். அப்போதுதான் கவனித்தாள், நீலன் கொண்டு வந்தது குமரிவாகை. ``வாகைப்பூவையா பறித்து வந்தாய்? வாகை, கொற்றவை குடிகொள்ளும் மரமல்லவா? இந்தப் போர்க்காலத்தில் போர் தெய்வத்தின் பூக்கள் உன்னிடமே இருக்கட்டும். அவை உனக்கானவை’’ என்றாள்.
நிறைந்திருந்த ஓசையின் நடுவே அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தோழி ஒருத்தி நீலனைப் பார்த்து சத்தம்போட்டுச் சொன்னாள், ``உனக்குரியது வாகைமலர்தான்; காந்தள் மலர் அல்ல. அதனால்தான் உன் வீட்டை அலங்கரிக்க காந்தள் மலரைப் பயன் படுத்தவில்லை. அதற்கான தகுதி உனக்கில்லை’’ என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு வீடு வெடிப்பதைப்போல பெண்கள் சிரித்தனர். தொடர்ந்து அவள் சொன்னாள், ``நீ குடில்விட்டு வெளியேறு. நாங்கள் மயிலாவை அழைத்துக் கொண்டு வள்ளிக்கூத்துக்குப் புறப்படுகிறோம்.”
சிரிப்பொலிக்கும் கேலிப்பேச்சுக்குமிடையே குடில்விட்டு வெளியேறி வந்தான் நீலன். காத்திருந்த தோழர்கள் அவன் அருகில் வந்தார்கள். குடிலுக்குள்ளிருந்து வெளிவந்தவனின் மீது வெளிப்படும் பூந்தாதுவின் மணம் யாரையும் மயக்கக்கூடியதாக இருந்தது. மணத்தை நுகர்ந்தபடியே புங்கன் சொன்னான், ``பெண்களின் விழாதான் இயற்கையின் திருவிழா. ஆண்களுக்கு இதுபோல எந்த விழாவும் இல்லையே!”
அந்தக் கவலை எல்லோருக்கும் இருந்தது. நீலனுக்கு, கூடுதலாக ஒரு கவலை இருந்தது. ஏன் இந்த விழாவில் காந்தள் மலர் பயன்படுத்தப் படவில்லை; தனக்கு அந்தத் தகுதி ஏன் இல்லை எனத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அங்குமிங்குமாக விசாரித்தான்.
மயிலாவின் காதோரம் கேலிபேசி சிரித்த தோழி வெளியில் வந்தபோது அவளிடமே கேட்டான் நீலன். அவள் சொன்னாள், ``காந்தள் மலர் மலரும் வரை தேனீயோ வண்டோ காத்திருக்காது. கிண்டி மலரச்செய்து தேன் பருகும். ஆனால், நீ அப்படியல்ல. பொறுமை காத்திருக்கிறாய். மணம் ஆன பிறகுதான் மகவைப் பெற்றுள்ளாய். எனவே, உனக்கு காந்தள் மலரைச் சூடும் தகுதியில்லை” எனச் சொல்லியபடி சிரித்துக்கொண்டே ஓடினாள்.

நீலனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ``நான் அப்படியல்ல என்று சொல்வதா, அப்படித்தான் என்று சொல்வதா’’ புரியாத குழப்பத்தில் நின்றான்.
நேரமாகிக்கொண்டிருந்தது. வள்ளிக் கூத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகின. நீலன் தலைமையில் வந்த பத்து இளைஞர்களும் ஊரில் இருந்த கிழவர்கள் பன்னிருவருமாக 22 ஆண்களும் ஏக்கத்தோடு பார்த்திருக்க, மயிலாவை அழைத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமாகினர் பெண்கள்.
படைக்களத்தின் மூன்று மூலைகளிலும் போர்ப்பலிக்கான சடங்குகள் உச்சிப்பொழுதில் தொடங்கின. ஈனாமல் இளவயதிலேயே செத்துப்போன பசுவின் தோலை மயிர்சீவல் போத்தியிருந்த போர்முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. நிணத்தைத் தின்று குதித்தாடும் பேய்மகளிரின் ஆட்டத்துக்கான கருங்கூத்துக்களம் ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.
இணையற்ற வீரர்கள் களப்பலிக்குத் தேர்வுசெய்யப்பட்ட செய்தி படையெங்கும் பரவியது. கொப்புளிக்கும் குருதிபோல் வீரவுணர்ச்சி பெருக்கெடுக்க ஆயுதங்களை ஒன்றுடனொன்று உரசி பேரொலியை எழுப்பினர். சடங்குகள் தொடங்குவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. முரசுகளின் ஓசை சீரான வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடத்தொடங்கியது.
முரசு அதிரும் ஓசைகள் ஆங்காங்கே கேட்பதறிந்த முடியன், எதிரிப்படையில் ஏதோ நடக்கிறது என நினைத்து பாரியை அழைத்து வரச்சொல்லி வீரர்களை அனுப்பிவைத்தான். பாரியும் தேக்கனும் கபிலரும் நாகக்கரடுக்கு வந்து சேர்ந்தனர்.
படைகளின் மூன்று திசைகளிலும் மூன்று பலிச்சாலைகளில் சடங்குகள் தொடங்கின. ஆனால், முக்கியச் சடங்கு மூஞ்சலில் நடக்க விருந்தது. அது பகலின் மறைவுக்குப் பிறகுதான் தொடங்கவிருந்தது. ஆனால், மற்ற இடங்களில் பலிச்சடங்குகள் நண்பகல் இருந்தே தொடங்கின. பூசகர்கள் மலர்களையும் கனிகளையும் கொண்டுவந்து குடுவைநீரைத் தெளித்து தீ மூட்டி சடங்குகளைத் தொடங்கினர்.
சடங்குகளின் ஓசை, முரசுகளின் பேரொலி, பேய்மகளிரின் கூத்தாட்டம் எல்லாம் நேரமாக ஆக கூடியபடி இருந்தன. பொழுது மறையத் தொடங்கும்போது பலிச்சடங்கு உச்சம்கொள்ளத் தொடங்கியது. வீரனின் குருதி ஏந்தியபடி கதிரவன் களம் நீங்குவான். அவனது தாகம் நீக்கப்பட்டதன் கைம்மாறாக போர்க்களத்தில் தனது ஒளி படர்ந்துகிடக்கும் ஒரு பகல் பொழுதில் வெற்றியைத் தருவான். அதற்குத்தான் இந்தப் பலிச்சடங்கு நடக்கிறது.
கதிரவனின் தாகம் நீக்க பேரொலிகொண்ட சடங்கு நடக்கும்போது, இதற்குத் தொடர்பில்லாத இன்னொரு சடங்குக்காக மூஞ்சல் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அது யட்சினிக்கான சடங்கு. பேராற்றலைக்கொண்ட அழிவின் தேவதை யட்சினி. மலையெனக் குவிக்கப்பட்ட வீரர்களின் உடல்களைக் கண்டும் தாகம் தணியாதவள். மனிதப் பிணங்களையே புணர்ந்து மகிழ்பவள். அவளை இறைஞ்சி அழைக்கும் சடங்கு தொடங்கியது மூஞ்சலில்.
நிலமெங்கும் இருள் கவிழ்ந்தது. சடங்குக்காக மலர்களாலும் குருதி பிசைந்த தினைமாவாலும் நாற்சதுரமிடப்பட்ட நிலம் நோக்கி அதை அழைத்து வந்துகொண்டிருந்தனர். பேய்முரசு முழங்கியது. வீரர்களே அஞ்சி நடுங்கும் பேரோசை இரவெங்கும் பரவியது. நிறைசூலியின் பால்கட்டிய மார்புபோல திரண்ட கும்பத்தையுடைய யானை அது. நேற்று வரை பாண்டியப் பேரரசின் சிறப்புக்குரிய முதுயானை பவளவந்திகை; இப்போதோ யட்சினியின் வாகனம்.
முரசுகளின் முழக்கத்துக்கேற்ப அதை இருளுக்குள் அழைத்துவந்தனர். சடங்கு நிலத்தில் பூசகர்களின் பெருங்கூட்டம் நின்றிருந்தது. குளித்த ஈரத்தை உலர்த்தாமல் நீர்வடிய நின்றிருந்தனர் மூவேந்தர்களும்.
பேய்முரசுகளின் ஓசை இருளை உலுக்கியது. கடல்போல் கிடந்த படையெங்கும் பேரமைதி நிலவியது. சடங்குகளின் தனித்த ஓசை இரவெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அதிர்ந்து அதிர்ந்து பரவிய ஓசை கேட்டு பேய்மகளிர் மூன்று திசைகளிலிருந்தும் மூஞ்சலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்களின் கூந்தல் முழுவதும் வீரர்களின் குருதியால் நனைந்திருந்தது. அவர்கள் ஆடிய கருங்கூத்தால் நிலம் அதிர்ந்துகொண்டிருந்தது. அவர்கள் மூஞ்சலுக்கு வந்துசேர்ந்தபோது பவளவந்திகையும் வந்துசேர்ந்தது.
நள்ளிரவைத் தொடுவதற்கு சிறிது நேரமே இருந்தது. பவளவந்திகையை, மண்ணில் அமரச்செய்தான் பாகன். அதன் முகம் முழுவதையும் தோலாடைகளால் இறுகக் கட்டினர். பேய்முரசின் மேல்தோல் விடாது புடைத்தெழுந்துகொண்டிருந்தது. மேலெழும் ஓசை இருளின் செவிப்பறையைக் கிழித்துக் கொண்டிருந்தது.
நாகக்கரடின் உச்சியில் நின்றபடி படைகள் இருக்கும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. நண்பகலில் போர்ச்சடங்குகள் மூன்று மூலைகளில் தொடங்கின. ஆனால், இரவான பிறகும் சடங்குகள் முடியவில்லை. படைகளின் நடுப்பகுதியில் சடங்கொன்று தொடங்கும் ஓசை கேட்டதும் `இது என்ன புதியதாய் இருக்கிறதே!’ என இருளின் திசையைப் பார்த்தபடியே நின்றிருந்தனர்.
நள்ளிரவைத் தொடும் நேரத்தில் யானை ஒன்றின் சாவுப்பிளிறல் இருளெங்கும் எதிரொலித்தது. வேந்தர்களின் வீரர்கள் அனைவரும் பேய்க்கூச்சல் எழுப்பி ஆயுதங்களை ஒன்றுடனொன்றை உரசி வெற்றி முழக்கமிட்டனர்.
நாகக்கரடின் மேல் இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. ஆனால், யானையின் பிளிறல் கேட்ட கணம் கபிலரின் உடல் நடுங்கி மீண்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு மெள்ளச் சொன்னார், ``அவர்கள் யட்சினிக்கான சடங்கை நடத்துகிறார்கள்!”
``அப்படியென்றால்?’’ விளக்கம் கேட்டான் முடியன்.
``காக்கும் போருக்கும் தாக்கும் போருக்கும் அந்தந்தத் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளை நடத்துவார்கள். ஆனால், பேரழிவை உருவாக்கும் போருக்கு யட்சினி வழிபாட்டை நடத்துவார்கள். அவள் அழிவின் தேவதை. எதிரியின் படை நோக்கி அவளை ஏவிவிடும் சடங்குக்கான பெரும்பலியை அவர்கள் கொடுத்துள்ளனர்.”
எல்லோரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க, கபிலர் சொன்னார் ``அவர்கள் தாக்குதலைத் தொடங்கப்போகிறார்கள்.’’
- பறம்பின் குரல் ஒலிக்கும்...