Published:Updated:

அன்பும் அறமும் - 12

அன்பும் அறமும் - 12
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 12

சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்

மறையும் சாம்பிராணிப் புகை!

மீபத்தில் தம்பி ஒருவன் முகநூலில் பதிவு ஒன்றை எழுதியிருந்தான்.  உரம் சார்ந்த தொழில் ஒன்றில் புதிய வகை இயற்கை உரம் ஒன்றின் ஃபார்முலாவைக் கண்டறிந்திருக்கிறான் அவன். அவனுக்குத் தனது புதிய கண்டுபிடிப்பைச் சந்தைப்படுத்துவதற்கு முதலீட்டாளர்கள் தேவை. இதற்கு முன்னர் அவன் வெற்றிகரமாகத் தேங்காய் நார் உரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அந்தத் தொழிலிலும் பெரிய ஆள்கள் கைமுதலோடு நுழைந்துவிட்டதால், அவனுக்குத் தொழிலில் கொஞ்சம் பாதிப்பு. அந்தத் தொழிலுக்கும் கைமுதல் வைத்திருக்கிற முதலீட்டாளர்களைத் தேடிக்கொண்டிருந்தான்.

அன்பும் அறமும் - 12


அவன், முகநூலில் புனைபெயரில் எழுதுகிறவன். அந்த உலகத்தின் தொடர்புகள் வழியாக ஒரு முதலீட்டாளரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அவரும் எல்லா விவரங்களையும் கேட்டபிறகு, அந்தப் பொருளுக்கு சர்வதேசச் சந்தை இருப்பதை அறிந்து உடனடியாகப் பணம் போட முன்வந்தார். அதற்கு அவர் வங்கிக்கணக்கு விவரங்களைக் கேட்டார். இந்தத் தம்பி அனுப்பிவைத்ததும், அவர் உடனடியாகப் பதில் அனுப்பிவிட்டார். “ஸாரி, நான் ஏதோ உங்களை வேற மாதிரி நினைச்சேன். முஸ்லிம்னு இப்பத்தான் தெரியுது. நான் அவங்ககூட பிசினஸ் பண்றதில்லை” என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார்.

எல்லாப் பக்கங்களிலும் இது மாதிரி இப்போது நிறைய நடக்க ஆரம்பித்துவிட்டன. மீன் ஆர்டர் எடுப்பதற்காக இஸ்லாமியர் ஒருவர் நடத்தும் உணவகத்துக்குச் சென்றிருந்தேன். அவர் தெளிவாக, அதே சமயம் என் மனம் கோணாமல் பதில் சொல்லி, திருப்பி அனுப்பி வைத்துவிட்டார். “கோவிச்சுக்காதீங்க. எங்க ஆளுங்கள்ள ஒருத்தரே மீன் போடுறார். பத்து இருபது ரூபாய் கூடன்னாலும் அவருக்குத் தொழில் கொடுக்கிற திருப்திக்காகச் செய்றோம்” என்றார். இதுமாதிரி நாங்கள் வளரும் காலத்தில் பார்த்ததே இல்லை. உண்மையில் எங்களை மாதிரியான ஆள்களுக்கு இது வித்தியாசமாக இருக்கிறது. சிறு நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் எல்லோரிடமுமே இந்த மனநிலையை எளிதாகப் பார்க்க முடியும்.

அன்பும் அறமும் - 12

எங்களுடைய கடைக்குத் தினமும் சாம்பிராணி போட ஒருவர் வருவார். கடைசி வரை அவர் எனக்கு இஸ்மாயில் மாமாதான். “முன்ன மாதிரில்லாம் தொழில் இல்லப்பா அவருக்கு. ஏதாவது மினிஸ்டர்கிட்ட சொல்லி செஞ்சு குடு. கைவண்டி மண்ணெண்ணெய் விக்கலாம்னு யோசிக்கிறார். நானும்கூட சேர்ந்து 10,000 ரூபாய் போடலாம்னு பாக்கேன். ஆர்டர் கொடுக்கிறதுக்கு 50,000 ரூபாய் கேட்கிறாங்க. கொஞ்சம் குறைச்சுக் குடுத்தா புண்ணியமாப்போகும்” என்று என்னுடைய அப்பா, இஸ்மாயில் மாமாவுக்காக ஒருதடவை போன் செய்தார். சேர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்தானே அவரும்? அங்கிருந்துதானே இதை நாங்களும் கற்றுக்கொண்டோம்.

எங்களுடைய பால்யம் துலக்கமாக நினைவில் இருக்கிறது. ரம்ஜான் பிரியாணி, தட்டுப்பாடு இல்லாமல் தட்டில் நிறையும். தீபாவளிப் பலகாரங்களை வாங்கிக்கொள்வார்கள். அந்த அண்ணன்கள்தான் ‘பூஜையில வெச்சதை யெல்லாம் சாப்பிடக் கூடாது’ என்று சொல்வார்கள். அந்த அக்காக்கள் மறைமுகமாக வாங்கிச் சாப்பிட்டுக்கொள்வார்கள். ஃபாத்திமா அத்தைக்கு என் கையாலேயே திருப்பதிப் பிரசாத லட்டை ஊட்டிவிட்டிருக்கிறேன். “யா அல்லாஹ் போதும் போதும், விடு. மதம் மாத்தி அத்தையக் கல்யாணம் செய்துக்குவபோல” என சொன்னார் கேலியாக.

தூரத்து உறவினர் ஒருவர் கஷ்டப்படும்போது, அவருடைய கடை ஓனர் நிறைய உதவி செய்திருக்கிறார். துயரத்தில் கிடந்தபோது கைதூக்கிவிட்டிருக்கிறார். அதன் நிமித்தமாக இஸ்லாமிய மதத்துக்கு மாறி முதலாளியோடு தங்கிவிட்டார். இது நடந்து நாற்பது ஆண்டுகள் இருக்கும். இப்போது அவர் குடும்பத்தினர், இஸ்லாமிய நம்பிக்கைகளுடனான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்கு ன்றத்தில் நடக்கும் சந்தனக்கூடு விழாவுக்கு அழைத்துப்போயிருக்கி றார்கள். கருகமணித் தாலி கோக்கும் சடங்கு ஒன்றில் சோற்றுக்குள் முட்டையைப் பொதித்துவைத்துச் சாப்பிட்டது இன்னமும் நினைவிலிருக்கிறது. நாகூர் தர்காவுக்கு அழைத்துப்போவார்கள். சாதாரணமாகவே காய்ச்சல் வந்தால் தர்காவுக்கு அழைத்துப்போய் முகத்தில் தண்ணீர் தெளித்த பிறகே மருத்துவமனைக்கு அழைத்துப் போவார்கள். முகத்தில் ‘ச்ச்சூ’ எனப் பெருஞ்சத்தத்துடன் தண்ணீரை அள்ளித் தெளித்துவிட்டு மயில் இறகால் முகத்தை வருடிவிடும் இப்ராஹிம் தாத்தாவைக் கொஞ்சம் வளர்ந்த பிறகு கடைத் தெருவில் பார்ப்பேன். “வடை சாப்பிடுறியா மாப்ள?” என்பார்.

முகத்துக்கு நீர் தெளிக்கிற நேரம் போக, அவர் அந்த ஒட்டுமொத்த வீதிகளுக்கும் தண்ணீர் அளிப்பவராக இருந்தார். கைவண்டியில் தண்ணீரைச் சுமந்து கொண்டுவந்து வீடுகளுக்கு ஊற்றுகிற வேலையையும் செய்து கொண்டிருந்தார். தண்ணீருக்கு எப்போதும் பேதமில்லை. அது எந்த நிறத்தின் கைகள் தூக்கினாலும் அந்த நிறமாகவே மாறிவிடுகிறது. தர்கா மட்டுமா இருந்தது அப்போது? வேளாங்கண்ணிக்கு வருடம்தோறும் அழைத்துப் போய்விடுவார்கள். அந்தக் கோயிலில் கிடைக்கும் சுனைத் தண்ணீரைத் தீர்த்தம் எனச் சொல்லி, தலையில் திருநீறு பூசிவிட்டு, ஒரு மூடி அந்தத் தண்ணீரையும் வாயில் ஊற்றுவார்கள். வயிற்று வலி, கால் வலி என்றால் அப்படியே சங்கரன்கோவி லுக்குப் பேருந்து பிடித்துப் போய், வெள்ளி வயிற்று உருவங்களை வாங்கிக் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, அப்படியே நேரடியாகப் புளியங்குடிக்கு வண்டியை விடுவார்கள். அங்கு இருக்கும் அந்தோணியார் கோயிலில் ஒரு மொட்டை போட்டுவிடுவார்கள்.

‘நீ என்ன மதம்?’ என்று அப்போது எங்களுக்கு கேள்வி கேட்கவே தெரியாது. ஒரு கூட்டு வாழ்க்கை அங்கே சாத்தியப்பட்டிருந்தது. அதிகாலை மார்கழிக் குளிரில் அக்காக்களுடன் கோயிலுக்குப் போய் சர்க்கரைப் பொங்கலையும் சுண்டலையும் ஒரே கையில் பிசைந்து அள்ளிக்கொண்டு வருவோம். வாய் முழுக்க எறும்பு மொய்த்துவிடும் என்கிற அளவுக்குப் பொங்கல் ஒட்டிக்கொண்டிருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே, சர்ச்சுகளுக்கு சில அக்காக்களுடன் போய், ‘சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் இயேசு ராஜாவைப் பார்க்காமலே...’ எனப் பாடிவிட்டு வருவோம். எல்லா அக்காக்களும் ஒன்றாக ஒரே விளக்கொளியில் அமர்ந்துதான் தீப்பெட்டிக் கட்டைகளை அடுக்குவார்கள்.  அவர்களுக்கிடையே சொந்தச் சண்டைகள் இருந்திருக்கின்றன . “சுவர்ல செருகி வெச்சிருந்த சிங்கர் பொட்டு பாக்கெட்டை என்னைக் கேக்காம எடுத்துட்டா” என்கிற ரீதியில்தான் சண்டைகள் இருக்கும். அவர்களுடைய சண்டையில் மதம் உள்ளே வந்ததே இல்லை. இதுமாதிரியான வாழ்விலிருந்து புறப்பட்டு வந்தவர்களுக்கு, இப்போது எல்லாப் பக்கங்களும் எழுந்து வரும் புதிய அலை அச்சமூட்டுகிறது.

அன்புப் பிரசாதங்கள் எல்லா பக்கங்க ளிலும் மூர்க்கமாக மறுக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்த பழ வியாபாரியான பாய் அண்ணன் ஒருத்தருக்கு, அந்தச் சின்ன ஊரில் கடை வாடகைக்குக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். அதே பாய் அண்ணன் மிகச்சரியாக அவருடைய ஆள்களுடன் மட்டுமே தொழில் செய்கிறார். என்ன நடந்தது இவர்களுக்குள்? பனிக்கட்டி மாதிரி ஒட்டிக்கொண்டிருந்த வாழ்வில் ஏன் சம்மட்டியை இறக்குக்கிறார்கள்?

நகரங்களில் மட்டுமே இருந்த இந்தப் போக்கு, இப்போது கிராமங்களிலும் மெல்லப் பரவ ஆரம்பித்துவிட்டதைப் பார்க்கும்போது தெரிகிறது. உண்மையைச் சொன்னால், என்னுடைய அப்பாவிடமும் கேட்க பயமாக இருக்கிறது. கால இடைவெளியில் அவரும்கூட ஒருவேளை கருத்தை மாற்றிக்கொண்டிருக்கலாம். பிரிவுகள், ஆழமாக ஊன்றப்படுகின்றன.

ஒதுங்கிப் போய் ஓரம்சாரமாக வியாபாரம் நடத்துவது என்பது வேறு. இன்னார் கடைக்கு இனி நம் சொந்தங்கள் போகாதீர்கள் என்று சாக்பீஸில் எழுதி வெளியே தட்டி மாட்டுவது என்பது வேறு.

ஒருத்தரை ஒருவர் குத்திக்கொள்ளாமல் தனித்து அவரவருக்கான நம்பிக்கையோடு வாழத்தானே சொல்ல வேண்டும். அதைவிடுத்து, பிரியாணி அண்டாவுக்குள் கலகத்தை விதைக்கச் சொல்ல வில்லையே! திருப்பதி லட்டுக்குள் அவநம்பிக்கையைப் புதைத்துத் தரச் சொல்லவில்லையே! அதிகாலைக் குளிரில் முகத்தில் சர்க்கரைப் பொங்கலை அப்பிக்கொண்டு, மதியம் தேவாலயத்தின் புகழ்பாடும் வீட்டில் சிக்கன் குழம்பை ருசித்துவிட்டு, மாலை எங்கோ ஒரு திருமண வீட்டில் போட்ட பிரியாணியை ஞாபகமாக தூக்குப்போணியில் எடுத்துக்கொண்டு வந்து இரவு வீட்டைத் தட்டிக் கொடுக்கும் ஃபாத்திமா அத்தை, இன்னமும் கண்ணுக்குள்ளே நிற்கிறார். அந்த ஆறிப்போன பிரியாணியைத் தூக்கக் கலக்கத்தில் தின்றுவிட்டு குளிருக்கு இதமாய்ச் சாக்குக்குள் காலை நுழைத்துக்கொண்டு தூங்கிய ஒரு தலைமுறையின் பிரதிநிதியாய்ச் சொல்கிறேன். அப்போது வாழ்க்கை மகிழ்ச்சியாக, சிக்கலில்லாத ருசியோடு இருந்தது. இப்போது லட்டும்கூட சில நேரங்களில் கசக்கிறது.

- அறம் பேசுவோம்!