
விருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்!
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் இன்னும் அடங்காத நிலையில், நிர்மலாதேவியின் சொந்த மாவட்டமான விருதுநகருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்காகச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையிலிருந்து மே 11-ம் தேதி காலையில் விமானம் மூலம் மதுரைக்கு வந்தார் கவர்னர். மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்த விதத்தால், டென்ஷனின் உச்சத்துக்கே சென்றார் கவர்னர். வி.வி.ஐ.பி-க்களை பொதுவாக விமான ஓடுதளம் அருகே வாகனத்தைக் கொண்டுவந்து அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், பன்வாரிலாலுக்கான வாகனத்தை உள்ளே அனுப்ப, பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மற்ற பயணிகள் செல்லும் வாகனத்தில் கவர்னரையும் வரச் சொன்னார்கள். கவர்னர் கடுப்பாகிவிட்டார். பிரதமர் அலுவலகம் உள்பட பலருக்கும் கவர்னரின் தனிச்செயலாளர் பேசிய பிறகுதான், கவர்னருக்கான வாகனம் உள்ளே அனுமதிக்கப்பட்டது.

மதுரையிலிருந்து நேராக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற கவர்னர், அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யானைக்குப் பழங்கள் கொடுத்து ஆசி வாங்கினார். ஜீயரைச் சந்திக்க அழைப்பு வந்தும், சர்ச்சை எழும் என்ற அச்சத்தில் அதைத் தவிர்த்து விட்டார் கவர்னர். நிர்மலாதேவியால் ஏற்பட்ட பிரச்னையிலிருந்து விடுபட, கவர்னர் சார்பில் பூஜை செய்யப்பட்டதாகவும் சிலர் கிசுகிசுத்தார்கள். அங்கிருந்து கிளம்பிய கவர்னர், விருதுநகரிலுள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் வழிபட்டார். இவர் விருதுநகர் வந்த அதே நேரத்தில், கோவில்பட்டி விழாவுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடிக்கு விருதுநகரில் வரவேற்பு கொடுத்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதனால் ஊரெங்கும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
பகல் 12 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகைக்கு கவர்னர் வந்தார். செய்தியாளர்கள் யாரும் வளாகத்துக்குள் வராத வகையில் விரட்டப்பட்டனர். ஒவ்வொருவரின் மனுவையும் அதிகாரிகளும் காவல்துறையினரும் படித்துப் பார்த்தபின்பே உள்ளே அனுப்பினார்கள். நிர்மலாதேவி விவகாரம் சம்பந்தமாக யாரும் மனு கொடுக்க வருகிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க இந்த ஏற்பாடு என்று சொல்லப்பட்டது. நிர்மலாதேவி விவகாரம் சம்பந்தமாக சில அமைப்புகள் போராட்டம் நடத்த வருகிறார்கள் என்ற தகவல் வெளியானதால், ஒருவித பதற்றத்துடனேயே காவல்துறையினர் இருந்தனர். ‘‘ஏற்கெனவே பதிவுசெய்தவர்களை உள்ளே அனுப்பாமல், முக்கிய நபர்களை மட்டும் உள்ளே அனுப்புகிறார்கள்’’ என்று மனு கொடுக்க வந்திருந்தவர்கள் கூச்சலிட்டனர். நிறைய பேர் காத்திருந்ததால், ஒரு கட்டத்தில் கவர்னரே வெளியில் வந்து மனுக்களைப் பெற்றார். பிறகு ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
கவர்னரைச் சந்திக்க மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்தினரும் நேரம் கேட்டிருக்கிறார்கள். கவர்னர் சொல்லி, அதை அதிகாரிகள் தடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. விருதுநகரில் கவர்னர் இருந்த நேரத்தில்தான், நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த தகவல் வெளியானது.
விருதுநகருக்குச் செல்ல வேண்டுமென்று கவர்னர் திட்டமிடவில்லையாம். ராஜ்பவனில் இருக்கும் முக்கிய அதிகாரிதான் இந்தச் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தாராம். ‘நிர்மலாதேவி விவகாரம் விருதுநகர் மாவட்டத்துக்குள் இன்னும் எரிந்துகொண்டிருக்கும் நிலையில், கவர்னரை அங்கு போகவைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்’ என்று திட்டமிட்டு இந்த நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
- செ.சல்மான், படம்: ஆர்.எம்.முத்துராஜ்