
செல்லம்
இந்தியாவுக்குள் மட்டுமே மர்மம் நிரம்பிய இடங்கள் நிறைய உண்டு. அந்த மர்மத்தை ‘அமானுஷ்யம்’ என்றும், ‘புரியாத புதிர்’ என்றும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் விளக்கங்களை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட, திகில் நிறைந்த த்ரில்லர் இடங்கள் சிலவற்றைப் பற்றிய அதிபயங்கரத் தகவல்கள் இதோ..!
பாங்கர் கோட்டை!
இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. இதனால், இந்தியாவின் அமானுஷ்ய இடங்கள் பட்டியலில் இந்தக் கோட்டையே முதலிடம் வகிக்கிறது. இந்த இடத்தின் பெயர், ‘பாங்கர் ஃபோர்டு’. இதைப் பற்றி உலவும் கதை சுவாரஸ்யமானது.

இளவரசி ரத்னாவதியின்மீது மந்திரவாதி சிங்கியாவுக்கு விருப்பம் உண்டாகிறது. அவளைக் கவர்வதற்காகத் தன் மந்திர தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். இதை அறிந்த இளவரசி, அவனைக் கொல்ல உத்தரவிடுகிறாள். சாவதற்கு முன் ஒரு சாபம்விடுகிறான் மந்திரவாதி சிங்கியா. ‘கோட்டையில் குடியிருப்பவர்கள் அனைவரும் இறக்க வேண்டும்; கோட்டையில் இருக்கும் கிராமத்தினர், இனி எப்போதும் கூரை இல்லாத குடிசையிலேயே வசிக்க வேண்டும்’ என்பதே அந்தச் சாபம். இப்போதும் கூரை இல்லாத குடிசைகளிலேயே சில கிராமவாசிகள் வசிக்கிறார்கள். கூரை வேய்ந்தாலும், சில நாள்களிலேயே அந்தக் கூரை சரிந்துவிடுகிறதாம்.
குல்தாரா கிராமம்!
ஜெய்சல்மர் நகரின் ஒரு கிராமமான குல்தாராவின் இன்னொரு பெயர், ஆவி கிராமம். இது, 19-ம் நூற்றாண்டிலிருந்தே ‘பேய்கள் சுற்றும் சிற்றூர்’ என்று அஞ்சப்படுகிறது. ராஜஸ்தானில் 1291-ம் ஆண்டில் பாலிவால் என்கிற பிரிவினரால் இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1825-ம் ஆண்டில் ஒருநாள் குல்தாரா கிராமம் மற்றும் சுற்றுப்பட்டு 83 கிராமங்களில் வசித்த மக்கள் அனைவரும் திடீரென மறைந்துபோனார்கள்.

இந்த அமானுஷ்யத்தைப் பற்றியும் ஒரு கதை இருக்கிறது. அப்போது, மாநிலத்தில் மந்திரியாக இருந்த சாலிம் சிங் என்பவர், குல்தாரா கிராமத் தலைவரின் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினாராம். ‘`அவளைத் திருமணம் செய்துகொடுக் கவில்லை என்றால், ஏகப்பட்ட வரிகளை விதிப்பேன்’’ என்று மிரட்டினாராம். அதனால், அந்தக் கிராமத் தலைவர், சுற்றியிருந்த 83 கிராம மக்களையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டாராம். போகும்போது, இனி இந்தக் கிராமத்தில் யாரும் வாழ முடியாது என்று சாபமும் கொடுத்துவிட்டுப் போனாராம்.
பிரிஜ்ராஜ் பவன் அரண்மனை!
இந்த அரண்மனை, 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. பிறகு, 1980-ம் ஆண்டில் பாரம்பர்ய ஹோட்டலாக மாற்றப்பட்டது. இந்தியாவின் அமானுஷ்ய இடங்கள் பட்டியலில் இது வித்தியாசமானது. மேஜர் பர்ட்டன் என்பவர் தங்கியிருந்த அரண்மனை இது. சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1857-ம் ஆண்டில் சிப்பாய்கள் கிளர்ச்சி செய்தபோது, பர்ட்டன் கொல்லப்பட்டாராம். பணியில் ‘ஸ்ட்ரிக்ட்’ ஆன அதிகாரியாம் இவர்.

இவரது ஆவி, இந்த பிரிஜ்ராஜ் பவனில் இப்போதும் சுற்றிவருகிறதாம். சும்மாயில்லை, இரவு நேரத்தில் சுற்றும் பர்ட்டன் ஆவி, வேலை நேரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் காவலாளிகளைப் பார்த்தால் செவுளில் அறைந்துவிடுகிறதாம். கடமை தவறாத ஆவி!
டூமாஸ் கருமணல் கடற்கரை!
ஓர் இடம் அமைந்திருக்கும் இயற்கைச்சூழல் மற்றும் நிலத்தின் வகை ஆகியவற்றைப் பொறுத்து, அமானுஷ்யக் கதைகள் கிளம்புகின்றன. சூரத் நகரில் இருக்கும் டூமாஸ் கருமணல் கடற்கரையின் கதை, அவற்றில் ஒன்று. நீண்டகாலமாக இந்தக் கடற்கரை இடுகாடாகப் பயன்பட்டுவந்ததாம். அதனால், அமைதி அடையாத பல ஆத்மாக்கள் இங்கே சுற்றிவருகின்றனவாம். பீச்சுக்குத் தனியாகப் போகிறவர்கள், பக்கத்தில் யாரோ முணுமுணுப்பதைப்போலவும் விம்மி விம்மி அழுவதைப்போலவும் சத்தம் கேட்டிருக் கிறார்கள். பீச்சுக்குப் போனவர்களில் இப்படித் தகவல் சொன்னவர்கள் சிலர்தான். மற்றவர்கள் எல்லாம் பீச்சிலிருந்து திரும்பி வரவேயில்லை.

தெரியுமா?
இங்கிலாந்து நாட்டின் தேசிய மலர், ரோஜா.