அலசல்
Published:Updated:

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்?

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்?
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்?

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்?

தும்பைவிட்டு வாலைப்பிடித்த கதையைக்    கேள்விப்பட்டிருப்பீர்கள்... கோவை அருகே செயல்பட்ட சட்டவிரோத குட்கா ஆலை விவகாரத்தில் போலீஸின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது. ‘‘ஆலை உரிமையாளர்  கைது செய்யப்படவில்லை. அந்த ஆலையை ஆய்வுசெய்து ‘எந்தப் பிரச்னையும் இல்லை’ என அறிக்கை கொடுத்த அதிகாரிகள் யாரும்  விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இங்கிருந்து குட்காவை எந்தெந்த ஊர்களுக்கு சப்ளை செய்திருக்கிறார்கள், அது எப்படி சாத்தியமானது, ஏஜென்ட்கள் யார் யார் என்பதும் தெரியவில்லை. இப்படி இந்தப் பிரச்னையின் ஆணிவேர் எதையுமே போலீஸ் அலசவில்லை. மாறாக, போராடிய எங்கள்மீது வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் காரணம்’’ என்று வெடிக்கிறார்கள் கோவை தி.மு.க-வினர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்?

கோவை மாவட்டம் சூலூரை அடுத்து உள்ள கண்ணம்பாளையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ‘ரகசியமாக’ இயங்கிவந்த குட்கா ஆலையில், கோவை எஸ்.பி.மூர்த்தி தலைமை யிலான தனிப்படை ஏப்ரல் 28-ம் தேதி சோதனை நடத்தியது. சட்டவிரோத குட்கா வியாபாரம் மற்றும் லஞ்ச விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாள் நடந்த இந்த ரெய்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘ஒரு தொழிற்சாலை அரசுக்குத் தெரியாமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமான முறையில் செயல்பட முடியுமா?’ என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுந்தது. சி.பி.ஐ நடவடிக்கை எடுப்பதற்குள் நாம் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்ற போலீஸின் அவசரம் இதில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அந்த ஆலையின் மேனேஜர் ரகுராமனையும், அங்கு பணிசெய்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிலரையும் கைது செய்தது. அடுத்ததாக, இதன் உரிமையாளரான டெல்லியைச் சேர்ந்த அமித் ஜெயினைக் கைதுசெய்து உண்மையை வெளிக்கொண்டுவரும் வேலையில் இறங்கியிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், ‘விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்’ என்று போராடிய தி.மு.க-வினர் 10 பேர்மீது, ‘ரெய்டின்போது இடையூறு செய்தார்கள்’ என வழக்குப்பதிவு செய்து, அதில் ஏழு பேரைக் கைதுசெய்து அதிர்ச்சி கொடுத்தது போலீஸ். வழக்குப் போடப்பட்ட 10 பேரில் ஒருவரான சிங்காநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் தலைமறைவானார். போலீஸின் இந்த நடவடிக்கையால், தி.மு.க-வினர் ஏகத்துக்கும் கொதித்துப்போனார்கள். போலீஸைக் கண்டித்து கோவையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது தி.மு.க. அதில், ‘‘குட்கா ஆலைக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்களைக் காப்பாற்ற தி.மு.க-வினர்மீது பொய் வழக்குப் போடும் அதிகாரிகள், அடுத்த ஆட்சி தி.மு.க-வுடையது என்பதை மறந்து விடவேண்டாம்’’ என ஸ்டாலின் எச்சரித்தார். ‘‘எஸ்.பி மூர்த்திக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் உள்ள தொடர்பு எங்களுக்குத் தெரியும்’’ என்று வெளிப்படையாகவே பேசினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்?

ஆனாலும் போலீஸ் அசரவில்லை. கைது செய்யப்பட்ட தி.மு.க-வினர் ஏழு பேரும் ஜாமீனில் வெளியேவந்துள்ள நிலையில், கண்ணம்பாளையம் முன்னாள் பேரூராட்சித் தலைவரான தி.மு.க-வைச் சேர்ந்த தளபதி முருகேசனை சென்னையில் கைதுசெய்தனர். குட்கா ஆலை மேனேஜர் ரகுராமன் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் தளபதி முருகேசனைக் கைது செய்துள்ளதாகச் சொல்கிறது காவல்துறை. ‘தளபதி முருகேசன் பதவியில் இருந்த 2011 -2016 காலகட்டத்தில் உரிமம் பெறுதல், கட்டட அனுமதி பெறுதல், சாலைக்கு உரிமம் பெறுதல், குடிநீர் இணைப்பு பெறுதல், எல்.பி.ஏ அனுமதி பெறுதல், விவசாய நிலத்தை தொழிற்சாலைக்குரியதாக மாற்றித் தருதல் ஆகிய பணிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குட்கா ஆலைக்கு உதவினார்’ என்பது போலீஸ் சொல்லும் குற்றச்சாட்டு. டெல்லியைச் சேர்ந்த அமித் ஜெயின் இந்த இடத்தை வாங்கும்போதே இது கட்டடமாக இருந்தது என்பதும், போலீஸ் பட்டியல் போடும் பாதி வேலைகளில் பேரூராட்சித் தலைவருக்கான அதிகாரம் எதுவும் இல்லை என்பதும் எல்லோருக்குமே தெரியும். யாரையோ காப்பாற்றுவதற்குத்தான் போலீஸ் இப்படிச் செய்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்?

இதுகுறித்து விவரமறிந்தவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘இந்த ரெய்டை யார் சொல்லி நடத்தினார்கள் என்பது தெரியாது. ஆனால், ரெய்டுக்குப் பிறகு போலீஸ் நடத்தும் நாடகத்துக்கு அமைச்சர் வேலுமணிதான் டைரக்டர். ‘ரெய்டு என்ற பெயரில் குட்கா ஆலையில் நாள்முழுக்க இருந்து தடயங்களை போலீஸ் அழிக்கப் பார்க்கிறது’ என ரெய்டு நடந்தபோதே அந்த ஆலை முன்பு தி.மு.க-வினர் கூடி போராட்டம் நடத்தினர். அதை அமைச்சர் வேலுமணி ரசிக்கவில்லை. ஏற்கெனவே குட்கா விவகாரம் அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இது தங்களுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கும் என்று வேலுமணி டென்ஷன் ஆனார்.   அவர், எஸ்.பி மூர்த்திக்கு செம டோஸ் விட்டிருக்கிறார். ‘நீங்க ரெய்டு நடத்தின இடத்துக்கு தி.மு.க-வினர் எதுக்கு சம்பந்தமில்லாம வந்தாங்க? நீங்களெல்லாம் சேர்ந்து தி.மு.க-வுக்கு சப்போர்ட் பண்றீங்களா? அவுங்க மேல கேஸைப் போடலைன்னா வேற மாதிரி ஆகிரும் பார்த்துக்கோங்க’ என வேலுமணி மிரட்டலாகச் சொன்னதும், எஸ்.பி நடுங்கிப்போய்விட்டார். அதன்பிறகுதான், உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு தி.மு.க-வினரை டார்கெட் செய்கிறது போலீஸ்’’ என்கிறார்கள் அவர்கள்.

வெளங்கிடும்!

- எம்.புண்ணியமூர்த்தி,   படங்கள்: தி.விஜய்