Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்

“அதாவது கண்ணுங்களா!” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்

ஜான்ஸி ராஜா

கோடைக்காலம் வந்தாலே இந்த நகரத்தில் இருப்பவர்கள் ‘உஸ்... உஸ்...’ என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவார்கள். அங்கு அதிரிபுதிரி பெயர் வாங்கி யிருக்கும் கல்வி நிறுவனம் அது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் தேடிவரும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பட்டங்களை அள்ளிக் கொடுக்கும் அந்தக் கல்வி நிறுவனத்தில், ‘‘எதுக்கும் அமுதா மேடத்துக்கிட்டே பேசிடுங்க’’ என்ற டயலாக்கை திரும்பிய பக்கமெல்லாம் கேட்கலாம். ‘‘தோள் கொடுக்க நானும் வேந்தரும் இருக்கும்போது, உங்களுக்கு என்னதான் குறை கண்ணுங்களா?’’ என மாணவிகளையும் இளம்பெண்களையும் வளைக்கும் அமுதாவைத் தெரியாதவர்கள் அதிகாரிகள் வட்டத்தில் இருக்கவே வாய்ப்பில்லை.

அமுதா சார்ந்துள்ள கல்வி நிறுவனத்துக்கு அரசியல் தொடர்புகள் ஏராளம். ‘இந்தக் கட்சி’ என வித்தியாசம் எதுவும் பார்க்காமல், எல்லோருக்கும் வரவேற்பு கொடுக்கும் இடம் அது. கல்லூரி அட்மிஷன், கான்ட்ராக்ட் என்று பல ரூட்களில் தடையில்லாமல் வருமானம் கொட்டிக்கொண்டிருக்கிறது. எப்போதும் ஏதாவது காரணங்களுக்காக மீடியா வெளிச்சத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்தில், எந்த நிழலான வேலைகளுக்கும் இடமில்லை. அங்கு பணிபுரியும் எவருக்கும் தொந்தரவு இருக்காது; மாணவிகளும் கூட கண்ணியமாக நடத்தப்படுவார்கள். 

“அதாவது கண்ணுங்களா!” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்

‘பப்ளிக் சர்வீஸ்’ என்ற பெயரில் கல்வி நிறுவனத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடக்கும். மருத்துவம், கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு, மரம் நடுதல் தொடர்பான விழிப்பு உணர்வு போன்ற சமூக சேவைகளுக்காக இந்த முகாம்கள் அடிக்கடி நடக்கும். இந்தப் பகுதியில் பலரும் பெருமையாக இந்தக் கல்வி நிறுவனத்தைப் பார்ப்பதற்கு இந்த முகாம்களும் முக்கியமான காரணம். இந்த முகாம்கள் அக்கறையும் நேர்த்தியுமாகவே நடக்கும்.

ஆனால், இந்த முகாம்களை நடத்துவதற்கான மறைமுகக் காரணம் அமுதாவுக்கு மட்டுமே தெரியும். அப்பா காலத்தில் உள்ளே நுழைந்த அமுதா, மகன் தலையெடுத்துள்ள இந்தக் காலத்திலும் அதே கல்வி நிறுவனத்தில் நிலைத்து நிற்கிறார் என்றால், அமுதாவின் திறமை(?)யைப் புரிந்துகொள்ளலாம்.

அமுதாவின் வேலை என்ன? பல்வேறு அடையாளங்களுடன் இந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் முகாம்களைக் கண்காணிப்பதுதான் அவரின் முக்கியமான வேலை. இந்த முகாம்களைக் கல்வி நிறுவனம் தனியாக நடத்துவதில்லை. ஏதாவது தொண்டு நிறுவனங்கள், மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள் என இணைந்து நடத்துவார்கள். இந்த முகாம்களில் அங்கிருந்து சமூக சேவகர்கள், இளம்பெண்கள், மாணவிகள் ஏராளமாகக் குவிந்துவிடுவார்கள். இப்படி வரும் பெண்களில் யார் யார் எந்தெந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அவர்களுக்கு என்னவெல்லாம் பிடித்திருக்கின்றன என்பதைக் குறிப்பெடுத்து ஒரு ‘நோட்’ போட்டு வைத்துக்கொள்வார் அமுதா. அந்த முகாமில் சுற்றிச் சுழல்பவர்களில் பளிச்செனத் தெரியும் பெண்களை மட்டும் தனியே புகைப்படமும் எடுத்து வைத்துக்கொள்வார்.

“அதாவது கண்ணுங்களா!” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்

அவர்களை ஒவ்வொருவராகத் தனியாக அழைத்துப் பேச்சுக் கொடுப்பார். முகாமை நடத்தும் கல்வி நிறுவனத்தின் முக்கியமான அதிகாரி என்பதால், அமுதாவிடம் அவர்கள் மிகவும் பணிவுடன் வந்து பேசுவார்கள். அவர்களின் ஊர் எது, குடும்பச்சூழல் என்ன, என்ன வேலை செய்கிறார்கள், மாணவிகள் என்றால் எப்படிப் படிக்கிறார்கள் என ‘அக்கறை’யுடன் விசாரிப்பார். பேசிக்கொண்டி ருக்கும்போதே, அமுதாவின் மனக் கம்ப்யூட்டரில் எல்லா தகவல்களும் ‘சேவ்’ ஆகிவிடும். ‘‘அடுத்த கேம்ப் நடக்கும்போது, நாங்களே நேரா உங்களுக்குத் தகவல் சொல்லலாம் இல்லையா? போன் நம்பரைக் கொடுங்க’’ என்று சிலரிடம் கேட்டு வாங்கிக்கொள்வார்.

முகாம் முடிந்தபிறகு இவை அத்தனையும் கல்வித் தந்தையின் பார்வைக்குப் போய்விடும். அவரின் ரசனைக்குப் பிடித்த பெண்கள் யார் எனத் தனியாகப் பிரித்து எடுத்துக்கொண்டு, அவர்களின் குடும்பச்சூழல் அலசப்படும். கஷ்டமான குடும்பம், வேலை தேடுவதையே வாழ்க்கையாகக் கொண்டவர், ஆடம்பர வாழ்க்கைக்காக ஏங்குபவர் என்று தூண்டிலில் சிக்கும் மீன்களாகத் தேடி கல்வித்தந்தை ‘டிக்’ அடித்துக் கொடுப்பார்.

அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரிடமும் அமுதா பேசுவார். அப்படியொரு அழைப்பை எதிர்பார்க்காத பெண்கள், திகைத்துவிடுவார்கள்.  ‘‘அன்றைக்கு உன் கஷ்டத்தைச் சொன்னது என் மனசுல அப்படியே இருந்தது. திடீர்னு சேர்மனை சந்திக்கற வாய்ப்பு கிடைச்சுது. உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கேன். பார்ப்போம். நல்லது நடக்கும்’’ என அன்பொழுகப் பேசுவார் அமுதா.

அடுத்த சில நாள்களில், அந்தப் பெண்களுக்குக் கடிதம் போகும். ‘எங்கள் நிறுவனத்தில் பகுதிநேரப் பணிக்காக உங்களைத் தேர்வு செய்துள்ளோம்’ என அந்தக் கடிதம் அறிவிக்கும். கடிதத்தைப் பார்த்து விட்டு ஓடோடிவரும் இளம்பெண் களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்படும். அங்குதான், ‘‘தோள் கொடுக்க நானும் சேர்மனும் இருக்கும்போது, உங்களுக்கு என்னதான் குறை கண்ணுங்களா?’’ என்ற டயலாக்கை அமுதாவின் திருவாய் உதிர்க்கும். அந்தப் பயிற்சியிலேயே, ‘இது தேறும், இது தேறாது’ என்று தரம் பிரிக்கும் வேலையை மிகவும் நேர்த்தியாக அமுதா செய்து முடித்துவிடுவார். அந்தப் பெண்களில் யாரெல்லாம் ‘எதைப் பணயம் வைத்தாவது முன்னேறலாம்’ என்ற நினைப்பில் உள்ளனர் என்பது சாதாரணக் கண்களுக்குத் தெரியாது. அமுதாவின் ஞானக் கண்களுக்குத்தான் அது தெரியும்.

சரியாக ஒரு பெண்ணைத் தனியாக அழைத்துப் பேச்சுக்கொடுப்பார்.

‘‘என்ன புவனா... என்ன நினைக்கிற இந்த ட்ரெயினிங் பத்தி?’’

‘‘பயிற்சி இனிமேத்தான் இருக்கும்னு தோணுது.’’

‘‘ஹேய்... என்ன சொல்றே?’’

‘‘மேம்... ஒவ்வொரு நாள் பயிற்சியிலயும் நீங்க போற போக்குல ‘சம்பாதிக்கிறது ஒரு டெக்னிக்’னு சொல்றீங்க. பணம் இருந்தா போதும்னு சொல்றீங்க. இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்குப் பொழைக்கவே தெரியலைனு சொல்றீங்க.’’

அமுதா, ‘‘குட்’’ என்பார். புவனா செலக்டட். கழுகு, இரை தேடும். சில நேரங்களில் இரையும் கழுகை அடையாளம் கண்டுகொள்ளும்.

பயிற்சியின் கடைசி நாளில் சேர்மன் பங்கேற்று லெக்சர் கொடுப்பார். அப்போது, பயிற்சி முடித்த பெண்கள் அந்தக் கல்வித்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். அவரைப் பார்ப்பதே பாக்கியமாக, பெருமையாக, காணக்கிடைக்காத அருமையாக ஏற்கெனவே சொல்லிவைக்கப்பட்டிருக்கும். அதனால் அந்தப் பெண்கள் ‘அபிராமி... அபிராமி...’ மனநிலையில் இருப்பார்கள். ‘சிறப்பாக’ப் பயிற்சி முடித்த மாணவிகள் மட்டும் அவரிடம் தனியாக, விசேஷமாக அறிமுகம் செய்யப்படுவார்கள். அந்த அறிமுகத்துக்குப்பின், அவர்களின் வெளியுலக வாழ்க்கை ‘வெளிச்ச’ மாகவும், தனிப்பட்ட வாழ்க்கை மோசமாகவும் ஆகிப்போவது கண்கூடாகவே தெரியும். சேர்மனின் கல்வி நிறுவனச் சிக்கல்கள், டெல்லி விருந்தினர் வருகை அனைத்தையும் எதிர் கொள்ளப்போவது இந்த மாணவிகள்தான். ஒவ்வொரு வருடமும் இப்படி இரண்டு, மூன்று பேரை அடையாளம் காட்டுவது அமுதாவின் வேலை. ஆனால், அப்படி வந்த பெண்களால் அமுதாவின் இடத்தைப் பிடிக்க முடியாமல் இருப்பது ஏன் என்பது சேர்மனுக்கே வெளிச்சம். விரும்பியோ, தூண்டுதலின் பேரிலோ, தனிப்பட்ட ஆதாயத்தின் காரணமாகவோ, இப்படி நுழைந்த சில பெண்கள்தான், இன்று சேர்மனின் நம்பிக்கையான வட்டாரத்தில் இருந்தபடி பொறுப்புகள் வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இதேபோன்ற முகாம்களை சேர்மனின் வாரிசுகளும் நடத்தத் தொடங்கியிருப்பதுதான் இப்போது ஹைலைட்.

(அடுத்தது யார்?)