அலசல்
Published:Updated:

மணலும் காலி... மலையும் காலி!

மணலும் காலி... மலையும் காலி!
பிரீமியம் ஸ்டோரி
News
மணலும் காலி... மலையும் காலி!

கேரளாவுக்குக் கொள்ளைபோகும் கன்னியாகுமரி வளங்கள்

“கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து கருங்கல், ஜல்லி, எம் சாண்ட் போன்றவை டாரஸ் லாரிகள் மூலம் சட்டவிரோதமாகக் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. முக்கிய அதிகாரிகள் சிலர், இந்தக் கடத்தல்காரர்களுக்குத் தொழில் பார்ட்னர்களாக உள்ளனர்” என அதிர்ச்சி கிளப்புகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான மனோ தங்கராஜ்.

குமரி மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான தாமிரபரணி, வள்ளியாறு, பாழாறு ஆகியவற்றில் அதிகாரிகளின் உடந்தையுடன் மணல் திருடப்பட்டு, கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த மணல் கொள்ளையால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குமரி ஆறுகளில் மணல் காலியாகிவிட்டது. இப்போது, குமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் உடைக்கப்பட்டு கல், ஜல்லி, எம் சாண்ட் ஆகியவை கேரளத்துக்குக் கடத்தப்படுகின்றன. சிலர் தைரியமாகக் கடத்தலைச் செய்கிறார்கள். கனிமங்களாகக் கடத்தினால் பிரச்னை ஏற்படும் என்பதால், வேறு சிலர் நவீன டெக்னிக்கில் இந்தக் கடத்தலைச் செய்கிறார்கள். ரோடு போட ஜல்லி தேவையென்றால், குமரி மாவட்டத்திலேயே தாரில் ஜல்லியைக் கலந்து அந்தக் கலவையைக் கடத்துகிறார்கள்; கட்டடங்கள் கட்டுவதற்கு ஜல்லி தேவையென்றால், இங்கேயே கான்க்ரீட் கலவையாகக் கலந்து கேரளாவுக்குக் கடத்துகிறார்கள். இதில் கோபமான பொதுமக்கள், கேரள வாகனங்களைச் சிறைபிடித்துத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மணலும் காலி... மலையும் காலி!

டெம்போ உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜோசப் மைக்கேல்ராஜா, ‘‘கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தேவைக்கு ஜல்லி எடுத்துச் செல்லும் எங்களுடைய டெம்போக்களை வி.ஏ.ஓ முதல் ஆர்.டி.ஓ. வரை விரட்டிப் பிடிக்கிறார்கள். கேரளா செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கேரளாவுக்கு ஜல்லி, எம் சாண்ட் கொண்டு சென்ற ஆறு டாரஸ் லாரிகளைக் கடந்த வாரம் சிறைபிடித்தோம். அவர்களிடம், கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. குமரியில் முன்பு ஒரு யூனிட் ஜல்லி 1,000 ரூபாய்க்குக் கிடைக்கும். ஆனால், கேரளாவுக்கு கடத்தப்படுவதால், ஒரு யூனிட் ஜல்லியை 3,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. அதேபோல, 2,000 ரூபாய்க்குக் கிடைக்கவேண்டிய எம் சாண்ட், 4,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கனிமவளங்கள் கடத்தப்படுவதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால், குமரி மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்’’ என்றார்.

பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜ், ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 45 கல்குவாரிகள் செயல்பட்டுவந்தன. மாவட்ட கலெக்டராக நாகராஜன் இருந்தபோது, பெரும்பாலான குவாரிகளைச் செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தினார். சஜ்ஜன்சிங் சவான் கலெக்டராக வந்தபோது, அத்தனை குவாரிகளும் மீண்டும் செயல்பட தொடங்கின. மேலும், நான்கு குவாரிகள் கூடுதலாக ஆரம்பிக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும்தான் பெரும்பாலான குவாரிகள் செயல்படுகின்றன. அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்கள் மூலம் மலைகளை உடைக்கிறார்கள். பொத்தைகள் எனப்படும் சிறிய பாறைகள் மட்டும் முன்பு உடைக்கப்பட்டு வந்தன. இப்போது பெரிய மலைகள்கூட வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன. மலையில் உள்ள மண்ணையும் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

மணலும் காலி... மலையும் காலி!

குமரி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் 36 சாலைகளிலும் செக்போஸ்ட்கள் போடப்பட்டுள்ளன. நெட்டா பகுதியில் உள்ள செக்போஸ்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி பெறாத லாரிகள் பிற செக்போஸ்ட்கள் வழியாக கேரளாவுக்குச் செல்கின்றன. ஒரு யூனிட்டுக்கு 1,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கிறார்கள். தமிழகத்தைவிட ஆறுகளும் மலைகளும் கேரளாவில் அதிகம் உண்டு. அங்கு அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாகக் கடைபிடிப்பதால், கனிமவளங்களைக் கொள்ளையடிக்க முடியாது. சட்டவிரோதமாகக் கனிமவளங்களைக் கேரளாவுக்குக் கடத்துபவர்களுடன் தொழில் பார்ட்னர்களாக முக்கிய அதிகாரிகள் சிலர் சேர்ந்துள்ளனர். இந்தக் கொள்ளை தொடர்ந்தால், குமரி மாவட்டத்தின் மலைகள் முழுவதையும் உடைத்து கேரள மாநிலத்துக்கு விற்றுவிடுவார்கள். பிறகு உள்ளூர் கட்டுமானத் தேவைகளுக்காக வெளி மாவட்டங்களில் கையேந்தும் நிலை ஏற்படும். இதைத் தடுத்து நிறுத்த, பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

மணலும் காலி... மலையும் காலி!

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் கேட்டதற்கு, ‘‘குமரி மாவட்ட எல்லையில் உள்ள 36 செக்போஸ்ட்களிலும் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்களுடன் வரும் லாரிகள் மட்டுமே கேரளத்துக்கு அனுமதிக்கப்படுகின்றன. ஆவணங்கள் இல்லாமல் கல், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லும் லாரிகள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக ஏதேனும் புகார்கள் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 

குமரி கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவிடம் பேசினோம். ‘‘கோர்ட் உத்தரவுப்படிதான் கல்குவாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

- ஆர்.சிந்து
படங்கள்: ரா.ராம்குமார்