மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 84

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

வேட்டுவன்பாறையில் இருந்த பெண்கள் கூட்டம் மயிலாவை அழைத்துக் கொண்டு வள்ளிக் கானம் நோக்கிப் புறப்பட்டது. கூத்துக்களத்தில் இசைக் கருவிகளை இசைக்கக்கூட ஆண்கள் யாருக்கும் அனுமதியில்லை. எல்லாவற்றையும் பெண்களே இசைக்க வேண்டும். எனவே, ஊரில் இருந்த பறை, துடி, முழவு என ஒன்றைக்கூட விடவில்லை. மந்தையில் கட்டியிருந்த காரிக்கொம்பைக்கூட கழற்றி எடுத்துக்கொண்டார்கள். கரைபுரண்ட உற்சாகத்தினூடே கூட்டம் புறப்பட்டது. பெருங்குரைப்பொலியோடு நாய்க்கூட்டமும் மொத்தமாக உடன் சென்றது.

சந்தனவேங்கை, காட்டின் எந்தத் திசையிலும் இருக்கக்கூடியதுதான். ஆனால், கருவுற்ற பெண்ணுக்கான சடங்கைச் செய்ய எந்தச் சந்தனவேங்கையைத் தேர்வுசெய்கின்றனரோ அந்த மரம் இருக்கும் பகுதியைத்தான் `வள்ளிக்கானம்’ என்பர். அங்கு நடக்கும் சடங்கு என்னவென்று இன்று வரை ஆண்களுக்குத் தெரியாது. பறம்புப்பெண்கள் காலங்காலமாய்க் காத்துவரும் ரகசியம் இது. இரவெல்லாம் கூத்து நடத்துகிறார்கள் என்று மட்டுமே ஆண்கள் அறிவர். அங்கு என்ன வகையான கூத்து நடக்கிறது என்பதெல்லாம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தச் சடங்கில் பங்கெடுத்துத் திரும்பும் பெண்கள், அதன் பிறகு நெடுநாள்கள் அந்த மகிழ்வைப் பேசிக் களிப்பர். அதுதான் ஆண்களை மேலும் சினமேற்றும். என்னதான் நடக்கிறது அங்கு எனத் தெரிந்துகொள்ள, எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தனர்.  ஆனாலும் இன்று வரை அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 84

காதல்வயப்பட்ட இளம்பெண், தன் காதலன் மீதான அளவுகடந்த அன்பால் இந்தச் சடங்கில் நிகழ்வதைப் பற்றிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆண்கள் அதற்கான முயற்சியையும் செய்துபார்த்தார்கள். ஆனாலும் எந்தக் காதலியும் தன் காதலனிடம் இதை மட்டும் பகிர்ந்து கொள்வதேயில்லை.

காரணம், இந்தச் சடங்கில் பங்கெடுக்கும் இளம்பெண்ணிடம் முதுபெண்கள் சொல்லும் முதல் எச்சரிக்கையே அவள் காதலனைப் பற்றியதுதான். ``வள்ளிக்கூத்தில் என்ன நடக்கிறது என்பதை உன் காதலனிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவ்வாறு பகிர்ந்துகொண்டால், உனது பிள்ளைப்பேறு வலி மிகுந்ததாக மாறும். அப்போது எந்த ஆணும் உனது வலியைச் சுமக்க வர மாட்டான். நாங்கள்தான் உடன் நிற்போம். அளவுகடந்த உனது வலியைவைத்தே நீ தப்பு  செய்துவிட்டாய் எனக் கண்டறிந்துவிடுவோம்’’ என்று சொல்லிவிடுவார்கள். இது ஓர் அச்சமூட்டும் எச்சரிக்கைக்காகச் சொல்லப் படுவதுதான். ஆனால், இளம்பெண்கள் பிள்ளைப்பேறு வலியை நினைத்துப்பார்த்து யாரிடமும் வாய் திறக்க மாட்டார்கள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 84


ஆணுக்குத் தெரியாத ஓர் உலகை, இன்று வரை பறம்புப்பெண்கள் காப்பாற்றிவருகின்றனர். அதுவே அவர்களுக்குப் பெருமகிழ்வைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அவர்களின் இந்த மகிழ்வுதான் ஆண்களை மீண்டும்  மீண்டும் கண்டறியத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. இன்றுகூட அதற்கான முயற்சிதான் நடந்தது.  இரலிமேட்டிலிருந்து வள்ளிக்கூத்துக்காக நீலன் புறப்பட்டபோது, ``காலம்பன் மூத்தமகன் கொற்றனையும் அழைத்துச் செல்’’ என்று வேட்டூர் பழையன் அனுப்பிவைத்தான். அதற்கான காரணம் இதுதான். உள்ளூர்ச் சிறுவர்களை அனுப்பினால் வள்ளிக்கானத்துக்கு அழைத்துச் செல்ல மறுப்பார்கள். அதுவே காலம்பன் மகன் என்றால், மறுத்து ஒதுக்க மாட்டார்கள் என நினைத்து அனுப்பிவைத்தான் பழையன். ஆனால், காட்டுக்குள் நுழையும்போது அவனை நீலனின் கையில் கொடுத்து, ``இங்கேயே இரு. நாங்கள் காலையில் வந்து உனக்கு விருந்துபடைக்கிறோம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் பெண்கள்.

வேட்டுவன்பாறையின் வயதான இரண்டு பெருசுகள், சோமக்கிழவனும் செம்பூந்தனும். பழையனைவிட சற்று வயது குறைவுதான். ஆனால், மலைப்பாறைகளில் உருண்டதால் நடமாட்டம் வேகமாகத் தளர்ந்துவிட்டது. அதிக தொலைவு நடக்க முடியாத கிழத்தன்மையை அடைந்திருந்தனர். அதனால்தான் இப்போது இரலிமேட்டுக்குப் போகாமல் ஊரிலேயே இருக்கின்றனர். காட்டுக்குள் நுழைந்த பெண்கள் கொற்றனை அழைத்துச் செல்லாமல் ``இங்கேயே இரு” எனக் கூறிச் சென்றவுடன், சோமக்கிழவன் தான் கொதித்தெழுந்தான்.

``சின்னப் பையன் ஆசையாகக் கேட்கிறான். அவனக்கூட கூட்டிப்போகாம விட்டுட்டுப் போறீங்களேடி!” எனப் பெரும்சத்தத்தை எழுப்பினான். ஆனால், பெண்கள் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. கிழவன் ஏன் கத்துகிறான் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். எல்லாக் காலங்களிலும் சிறுவர்களின் மூலமாகவும் காதலன்களின் மூலமாகவும்தான் ஆண்கள் முயல்கிறார்கள். இன்று வரை அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இப்போதும் கொற்றனைக் கொஞ்சிப் பேசி, நீலனுக்குப் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

அங்கவை, இதுவரை வள்ளிக்கூத்தில் கலந்துகொண்டதில்லை. முதன்முறையாக இப்போதுதான் அவள் கலந்துகொள்கிறாள். பெண்கள் கூட்டம், மயிலாவை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தது. தீப்பந்தங்களை ஏந்தியவர்கள் முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்தனர். ஆதினிக்கு அருகில் சற்றே அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அங்கவை. கூட்டத்தின் பேச்சொலியினூடே அவளின் அமைதியைக் கவனித்த ஆதினி அருகில் சென்று கேட்டாள், ``முதன்முறையாகப் பங்கெடுப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்ற சிந்தனையிலேயே வருகிறாயா?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 84

தலையாட்டி `இல்லை’ என்றாள் அங்கவை.

``பிறகு என்ன சிந்தனையில் இருக்கிறாய்?” எனக் கேட்டாள்.

அப்போதும் அங்கவையிடமிருந்து பதிலில்லை.

``இன்றிரவு `என்ன நடந்தது?’ என உதிரன் கேட்டால் சொல்லிவிடுவோம் என அச்சப் படுகிறாயா?” என்று கேட்டாள் சற்றே நக்கலாக.

சின்னப் புன்முறுவலோடு ஆதினியின் காதோடு வந்து சொன்னாள், ``உதிரன் கேட்டால் சொல்ல மாட்டேன். ஆனால், தந்தை கேட்டால் மறுக்க மாட்டேன்.”

ஆதினிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை, மகளைத் தோளோடு அணைத்துக் கொண்டு யார் காதிலும் விழாதபடி மெள்ள ``நிச்சயம் உன் தந்தை கேட்க மாட்டார். கவலைப்படாதே!” என்றாள்.

அங்கவை அதிர்ச்சியோடு ஆதினியைப் பார்த்தாள். அவளோ மகளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியபோது, முகத்திலிருந்து பொங்கி மேலெழுந்தது வெட்கம்.

அங்கவை ஒரு கணம் ஆடிப்போனாள். சற்றே கோபத்தோடு ``அப்படியென்றால் நானும் உதிரனிடம் சொல்வேன்” என்றாள்.

வெட்கம் படர தாயும் மகளும் மற்றவர்களின் காதில் படாமல் பேசிச் சிரிப்பதைப் பார்த்த பெண் ஒருத்தி ``நீங்கள் மட்டும் என்ன பேசிச் சிரிக்கிறீர்கள்?” எனக் கேட்டாள்.

கேட்டவளை அழைத்துக்கொண்டு பேச்சை மாற்றியபடி அங்கவையை விட்டு சற்றுத்தள்ளி முன்னே நடந்தாள் ஆதினி.

இன்னும் சிறிது தொலைவுதான் இருந்தது வள்ளிக்கானம். நேரம் செல்லச் செல்ல வேகம் கூடிக் கொண்டேயிருந்தது. இதற்காக மாதக்கணக்கில் காத்திருந்தவர்கள் அல்லவா அவர்கள்! கும்மிருளில் மலைப்பாதையில் அவர்களின் கால்கள் பெருமயக்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தன.

சந்தனவேங்கையின் அடிவாரத்தில் கருவுற்ற  பெண்ணை அமரவைத்து நடக்கும் சடங்குகள் எல்லாம் வழக்கம்போல் ஊருக்குள் நடக்கும் சடங்குகள்தான். ஆனாலும் இன்றைய இரவின் முக்கியத்துவத்துக்குக் காரணம் வள்ளிக்கானத்தின் கொண்டாட்டம்தான். அந்தக் கொண்டாட்டத்துக்கு அடிப்படை, எங்கும் கிடைக்காத அதிசிறந்த மதுவகைதான்.

ஆண்கள் அறிந்திராத அரிதினும் அரிதான மதுவகை ஒன்று உண்டு. பெண்கள் மட்டுமே அறிந்து, இன்றுவரை ஆண்களின் வாடையே படாமல் காப்பாற்றிவைத்துள்ள மது வகை அது. `வள்ளிக்கானத்தின் கொண்டாட்டத்தில் பெண்கள் மது உண்டு களிக்கின்றனர்’ என்ற செய்தி ஆண்களால் யூகிக்கக்கூடியதுதான். ஆனால், அது என்ன வகை மது என்பது இன்றுவரை ஆண்களுக்குத் தெரியவில்லை.

சோமப்பூண்டு பானத்தைக் குடித்த ஒருத்தி, ``எங்களின் மதுபோல இது இல்லை” என்று ஒருமுறை சொல்லிவிட்டாள். அன்றிலிருந்துதான் வள்ளிக்கூத்தில் குடிக்கும் மதுவின் வகை என்ன என்பதைப் பற்றிய தேடலை ஆண்கள் தீவிரப் படுத்தினர். இன்றுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக அது காப்பாற்றப்படுகிறது. காரணம், அந்த மதுவை உருவாக்கும் பணியில் ஈடுபடு பவர்கள் முதுபெண்களே. அவர்களிடமிருந்து ஆண்களோ, மற்ற பெண்களோகூட இது தொடர்பான செய்தியைக் கேட்டறிய முடியாது.

ஒவ்வொரு வகை மலரின் தேனுக்கும் ஒவ்வொரு வகையான குணமுண்டு. ஆனால், இணையற்ற சுவைகொண்ட தேன் இருக்கும் மலர், `நாகசம்பங்கி’. அதில் துளிர்க்கும் தேனின் சுவையை எதனுடனும் ஒப்பிட முடியாது. துளித்தேனை நுனிநாக்கில் வைத்த கணம், மொத்த உடலும் தேனுக்குள் கரைவது போலிருக்கும். ஆனால், நாக்கில் வைக்கப்பட்ட தேன்துளி எளிதில் கரையாது; ஒட்டிக்கொள்ளும். அதன் சுவையை நாக்கு அடிக்கடி நுகரத் துடிக்கும். அப்போது அந்தச் சுவை உடல் முழுக்கத் தளும்பிக்கொண்டிருக்கும். நினைவுப் புலன்கள், சுவையுணர்வுக்குள் சிக்குண்டுவிடும். மீள முடியாத சுவையை, நினைவு மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்தபடியே இருக்கும். சுவை கரையாமல் தேன் மட்டுமே கரைந்திருக்கும். மறு துளி நோக்கி மனதை நகர்த்தாமல் நிறுத்தி வைக்கக்கூடிய மயக்கம் நாக சம்பங்கியின் தேனுக்கு மட்டுமே உண்டு.

வீரயுக நாயகன் வேள்பாரி - 84

நாகசம்பங்கி பூத்துக்கிடக்கும் பகுதியில் இருக்கும் தேன்கூட்டிலிருந்து தேன்கட்டியை எடுப்பதுதான் முதலில் செய்யும் பணி. அதன் பிறகு அந்தத் தேன்கட்டியைத் தகுந்த சேர்மானத்தோடு சேர்த்து நிலத்துக்குள் புதைத்து வைத்துவிடுவர். பெண் முதன்முறையாகக் கருவுற்றவுடனே முதுபெண்களின் முதல் வேலை நாகசம்பங்கியின் தேனை எடுப்பதுதான். எந்தச் சந்தனவேங்கையைத் தேர்வு செய்கிறார்களோ, அந்த இடத்தில்தான் அதைப் புதைத்துவைப்பர். நான்கு முதல் ஐந்து மாதம் மண்ணுக்குள் இருக்கும் தேன்கட்டி, நுரை துளிர்த்து சுவை இறுகி உறைந்திருக்கும். ஒற்றைத் துளியிலே மனிதரைக் கரைக்கக்கூடிய தேன், இப்போது தேறலாக உருத்திரண்டிருக்கும். இதன் துளி நாக்கில் பட்ட கணம், தேள் கொட்டியதைப் போல சுர்ரென ஒரு காரமயக்கம் உச்சந்தலைக்கு ஏறும். கண நேரம் கண் கட்டி அவிழும். அதன் பிறகு நிகழ்வதை நினைவில் தங்கவைக்க யாராலும் முடியாது.

இன்றைக்குச் சந்தனவேங்கையின் அடிவாரத்தில் அமரவைக்கப்பட்ட மயிலா, முதல் மிடறு குடித்ததிலிருந்து தொடங்கியது வள்ளிக்கூத்து. ஆறு வகையான துடிகளை அடித்து, ஆண்களால் அறியவே முடியாத மதுவின் சாரமேற்றி, பெண்களின் கூட்டம் ஆடத் தொடங்கியது. நேரமாக ஆக துடியின் ஓசையும், பறையின் அதிர்வும், முழவின் சத்தமும் காட்டை உலுக்கின. பெண்கள் தங்களின் ஆதியாட்டத்தை நிலம் பிளக்க ஆடினர்.

வேட்டுவன்பாறையில் இருந்த ஆண்கள் துடியின் ஓசை கேட்டு, காரமலையின் வடபுறம் நோக்கி ஏக்கத்தோடு பார்த்திருந்தனர். பொழுது, நள்ளிரவை நெருங்கவில்லை. ஆனால், அதற்குள் ஆட்டம் தொடங்கிவிட்டதை இசைக்கருவிகளின் ஓசை சொல்லியது. செம்பூந்தன் சொன்னான், ``அது என்ன தேறல்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. எந்த ஆம்பளையினாலும் கண்டுபிடிக்க முடியலை. இவளுக மட்டும் இந்த ஆட்டம் போடுறாளுக!”

சோமக்கிழவனோ ``தொடங்கும்போதே சத்தம் இப்படி இருக்கே... இன்னும் போகப்போக எப்படி இருக்கும் பாரு!” என்றார்.

இளைஞர்கள், ஓசை கேட்ட மலை உச்சியை நோக்கி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர். ஓசை கூடிக்கொண்டேயிருந்தது.

வேட்டுவன்பாறையைச் சுற்றிப் பல நூறு வீரர்கள் செடிகொடிகளினூடே நுழைந்து மேலேறிக் கொண்டிருந்தனர். கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. இருப்பதோ இருபத்துநான்கு பேர்தான். எல்லோரின் கவனமும் உச்சிமலை பார்த்து வள்ளிக்கூத்தில் நிலைகொண்டிருந்தது.

மூன்று சேனைகளைக்கொண்ட அறுநூறு பேரோடு மேலேறிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். நிறையிருள் நாள் எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்தது. மிகத்தேர்ந்த வீரர்களைக்கொண்ட படையணியைத் தேர்வுசெய்திருந்தான். பறம்பின் காவல் தலைவர்கள் இருக்கும் ஊருக்குள் நுழைந்து தாக்கப்போகும் இந்தப் படைக்கு, தானே பொறுப்பேற்று வந்தான். திரையர்களைத் தாக்கிய போரில் பெரும் வீரத்தை வெளிப்படுத்திய திதியனை தென்புறத்துக்கும், சேரநாட்டுப் பெருவீரன் துடிச்சாத்தனை வடபுறத்துக்கும் தலைமைதாங்கச் செய்தான். கிழக்குப்புறத்திலிருந்து வீரர்களோடு முன்னேறினான் கருங்கைவாணன்.

வேட்டுவன்பாறையின் பாதி உயரத்தைக் கடந்துகொண்டிருந்தனர். நாய்கள் ஏதும் ஊரில் இல்லாதது அவர்களுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. புது ஆள்களை மலையடிவாரத்தில் கண்டாலே மேலேயிருந்து பாய்ந்து இறங்குபவை இடுப்புயர நாய்கள். சூழ்ந்துவிட்டால், யானைகளையே நகரவிடாமல் நிறுத்தக்கூடியவை. அத்துணையும் இன்று பெண்களோடு சேர்ந்து மலைமேல் ஏறிவிட்டன. குரைப்பொலி ஏதுமற்று அமைதி கொண்டிருந்த வேட்டுவன்பாறையை நோக்கி எதிரிகள் மேலேறிக்கொண்டிருந்தனர்.

ஊரின் மந்தையில் உட்கார்ந்தபடி காரமலையில் துடியோசை கேட்கும் பகுதியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தனர் ஆண்கள். துடியோசை, பெருகத் தொடங்கியது. பெண்கள் இல்லாத ஊரில் பெண்களைப் பற்றிப் பேசத்தான் எவ்வளவு கதைகள் இருக்கின்றன. அதுவும் அவர்களால் நிராகரிக்கப்பட்ட வலியை, கேலிப் பேச்சின் மூலம்தான் கடக்க முடியும். பேச்சு, களைகட்டத் தொடங்கியது. சிறுவன் கொற்றனுக்குத் தூக்கம் வந்தது. அதைக் கவனித்த நீலன், ``நள்ளிரவுக்குப் பிறகு பனி அதிகமாக இருக்கும். நீ போய் குடிலுக்குள் படுத்துக்கொள்” என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 84

கொற்றன், மந்தையிலிருந்து எழுந்து நீலனின் குடில் நோக்கி நடந்தான். வேட்டுவன்பாறையின் கிழக்கு முனையில் நாங்கில்மரத்தின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட குடில் அது. அங்கிருந்து பார்த்தால், கிழக்குத்திசைக் குன்றின் சரிவும் விரிந்துகிடக்கும் சமவெளியும் முழுமையாகத் தெரியும். கொற்றன் தூக்கக்கலக்கத்திலேயே குடில் நோக்கி வந்தான். படல்கொண்டு மூடப்பட்டிருந்தது வாசல். படலை மெள்ளத் தூக்கிச் சுவர் ஓரமாகத் திரும்பினான். சரிவுப் பகுதியில் இங்கும் அங்குமாக மனிதத்தலைகள் தெரிந்தன. ஆயுதம் ஏந்திய பெருங்கூட்டம் மேலேறிக்கொண்டிருப்பது தெரிந்தது. கும்மிருட்டினூடே தலைகள் பதுங்கி மறைந்தன. எதிரிகள் வந்துகொண்டிருப்பது கண நேரத்தில் புரிந்தது. `இப்படியே சத்தம்போட்டுக்கொண்டு மந்தை நோக்கி ஓடலாமா?’ எனத் தோன்றியது. `அப்படிச் செய்தால் எதிரிகள் விழிப்படைந்து விடுவார்கள்’ எனச் சிந்தித்தபடியே குடிலுக்குள் போய் படலை மூடிக்கொண்டான் கொற்றன். 

ஒரு கணம் சிந்தித்தவன் சட்டென குடிலின் மேற்புறக் கூரையை ஆள் நுழைவதற்கு ஏற்ப பிரித்தெடுத்தான். நாங்கில்மரத்தின் கிளைகள், குடில் மேல் படர்ந்திருந்தன. கூரையினுள் நுழைந்து கிளையின் மேல் ஏறினான். மரங்கள் ஒன்றுடனொன்று நெருங்கிப் பின்னிக் கிடந்தன. கொப்புகளின் வழியே ஊர்ந்து கடந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்றாம் மரத்தின் அடிவாரத்தில் தரையில் குதித்தான்.  

`யாரோ மரத்திலிருந்து குதிப்பதுபோல் இருக்கிறதே!’ என்று மந்தையில் இருப்பவர்கள் திரும்பிப் பார்த்தனர். பதறிப்போய் ஓடிவந்தான் கொற்றன். இப்படி ஒரு நள்ளிரவில்தான் தன்னுடைய ஊர், எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டது; மக்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டனர். மந்தையில் வைத்து ஊரே வெட்டிச் சாய்க்கப்பட்ட கொடுமையை நேர்கொண்டு பார்த்தவனுக்கு, இப்போது உடலெல்லாம் நடுங்கியது; பேச வார்த்தை எழவில்லை. `ஏதோ விலங்கைப் பார்த்துதான் அஞ்சி ஓடிவந்துள்ளான்’ என முதலில் நினைத்தனர். ``அஞ்சாமல் சொல், எதைப் பார்த்தாய்?” என நீலன் கேட்டதற்கு, மேலேறிக்கொண்டிருக்கும் எதிரிகளைப் பற்றிச் சொன்னான் கொற்றன்.

மந்தையில் இருந்தவர்கள் சரிவு நோக்கிப் பாய்ந்து சென்றனர். மூன்று புறங்களிலும் எதிரிகள் மேலேறிக்கொண்டிருந்தனர். சத்தமின்றி நீலன் கையைக் காட்டி ஏதோ சொன்னான். வீரர்கள் சிலர் வீடுகளுக்குள் இருந்த ஆயுதங்களை எல்லாம் வெளியே எடுத்து வந்தனர். புங்கன், தென்புறச் சரிவில் மேலேறும் எதிரிகளைப் பார்த்தான். சோமக் கிழவன் வலதுபுறச் சரிவைப் பார்த்தான். கிழக்குத்திசை முனையிலிருந்து முப்புறமும் பார்த்தான் நீலன். வந்து கொண்டிருப்பது பெரும் எண்ணிக்கையிலான படை என்பது தெரிந்தது. `இருபத்திநான்கு பேர்தான் இருக்கிறோம். அதில் பாதிப்பேர் வயதான கிழவர்கள். அதற்குத் தகுந்த தாக்குதல் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சிந்தித்தபடியே ஊரின் நடுப்பகுதிக்கு ஓடிவந்தான்.

மற்ற திசையில் பார்த்துக் கொண்டிருந்த வர்களும் நீலனின் மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டு ஒன்றுகூடினர். ``பேசுவதற்கான நேரமில்லை. வேட்டுவன்பாறையின் மீது எதிரிகள் ஏறிவிடக் கூடாது. மூன்றாகப் பிரிவோம் எல்லா வகையான தாக்குதல் உத்திகளையும் பயன்படுத்துங்கள்” என்றான் நீலன். குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மூன்று திசைகளிலும் தாக்க ஆயத்தமானார்கள்.

கருங்கைவாணனின் படை, மிகக் கவனமாக மேலேறிக்கொண்டிருந்தது. இப்போதுவரை யாரும் நம்மைப் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில்தான் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். நீலனின் குடிலுக்குச் சற்று கீழ்முனையில் பெரும்பாறை ஒன்றை யாரோ நகர்த்துவதுபோல் தோன்றியது. `மேலே ஏதோ சத்தம் கேட்பதுபோல் இருக்கிறதே!’ என உணர்ந்த கருங்கைவாணன், அண்ணாந்து பார்த்தான். பெரும்பாறை ஒன்று மெள்ள உருளத் தொடங்கியது. மேலேறிக்கொண்டிருந்த எதிரிகள் சத்தம் கேட்டு மிரண்டு பார்க்கும்போது பாறைகள் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக உருளத் தொடங்கின. உருளும் பாறைகள் நேர்க்கோட்டில் இறங்குவதில்லை. எந்தத் திசையில் நெளியும் எனக் கணிக்க முடியாததால், வீரர்கள் எங்கும் தெறித்துச் சிதறினர். இருட்டு, ஒன்றின் ஓசையை இன்னொன்றுக்கு மாற்றிக்காட்டக்கூடியது. எனவே, பாறைகள் எல்லாப் பக்கங்களும் உருளுவதுபோல் உணர்ந்தனர்.

எதிரிகள் தாக்கத் தொடங்கிவிட்டார்கள் எனத் தெரிந்ததும், எதிர்த்தாக்குதல் நடத்த உத்தரவிட்டான் கருங்கைவாணன். ஆனால், உருளும் பாறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதே வீரர்களுக்கு முதல்நிலைப் பணியாக இருந்தது. ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் நிலைகொண்ட பிறகே எதிர்த்தாக்குதலைத் தொடங்கினர்.

மூன்று திசைகளிலிருந்தும் வேந்தர்களின் படைகள் தாக்குதலைத் தொடங்கின. சிறிது நேரத்திலேயே மேலிருந்தும் ஆயுதத்தாக்குதல் தொடங்கியது. அம்புகளும் ஈட்டிகளும் இணையற்ற வேகத்தோடு காற்றைக் கிழித்துக்கொண்டு இறங்கின. இருட்டில் எந்தத் திசையிலிருந்து ஆயுதங்கள் வருகின்றன எனத் தெரியாததால், வேந்தர்படை தற்காத்துக்கொள்ள மிகவும் திணறியது. மேலிருந்து தாக்குபவர்களின் வேகம் எண்ணிப்பார்க்க முடியாதபடி இருந்தது.

அம்புகளும் ஈட்டிகளும் இறங்கினாலும், பாறைகளும் ஆங்காங்கே உருண்டுகொண்டுதான் இருந்தன. பாறைகளை உருட்டுவதால் எதிரிகளை அதிக அளவில் கொன்றுவிட முடியாது. ஆனால், மேலேறிக்கொண்டிருப்பவர்களுக்குப் பெரும் அச்சத்தை உருவாக்கலாம். எப்போது எந்தப் பாறை உருளுமோ என ஒவ்வொரு பாறையையும் பார்த்துப் பார்த்து அஞ்சியஞ்சியே முன்னோக்கி நகர முடியும்.

``எரியம்புகளைப் பயன்படுத்த வேண்டாம்’’ என்று நீலன் உத்தரவிட்டான். குறைவான வீரர்களே இருக்கிறார்கள் என்பதை அது காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் அவ்வாறு சொன்னான்.

வடக்குப்புறச் சரிவில் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த சோமக்கிழவன், வீரன் ஒருவனை அந்தத் திசையின் உச்சியில் இருக்கும் மரம் ஒன்றில் ஏறச் சொன்னான். அதேபோல இன்னொருவனை மறுவிளிம்பில் இருக்கும் மரத்தில் ஏறச் சொன்னான். மற்றவர்கள் அம்புகளையும் ஈட்டிகளையும் எறிந்துகொண்டிருந்தனர். இரண்டு கிழவர்களை வைத்துக்கொண்டு பாறைகளை நகர்த்தித் தள்ளிக்கொண்டிருந்தான் கொற்றன். அவனது வெறி, கிழவர்களையும் தினவோடு இயங்கவைத்தது. சரிவுகளில் இருக்கும் பாறைகள் எல்லாம் அடப்புக் கொடுத்துச் செருகப்பட்டிருந்த சிறுகற்களால்தான் நின்றுகொண்டி ருந்தன. எந்தெந்தப் பாறைக்கு எப்படியெல்லாம் அடப்புக்கொடுக்கப்பட்டுள்ளது என்பது கிழவர்களுக்குத் தான் நன்கு தெரியும். கும்மிருட்டில்கூட சரியான முறையில் அடப்புக்கல்லை ஈட்டியால் குத்தி நகர்த்தினார்கள். அடப்பை நகர்த்துவதும் அதற்கேற்ற கோணத்தில் பாறையை அசைப்பதும் மிகத் தேர்ந்தவர்களால் மட்டுமே எளிதில் செய்ய முடியும். பெருவீரனால்கூட நகர்த்த முடியாத பாறையை இரண்டு கிழவர்கள் எளிதில் நகர்த்துவார்கள். யானைகளின் உச்சந்தலைக் கும்பம்போலப் பருத்த இரு  தோள்கள் திரையர்களுக்குத் தோன்றக் காரணம், குழந்தைப் பருவத்திலிருந்தே பாறைகளுடனான அவர்களின் பழக்கம்தான். திரையர்குடியின் இளம்வீரனான கொற்றன், பாறைகளின் குழந்தை. கிழவர்கள் சொல்லச் சொல்ல, தோளால் முட்டி எம்பினான் பாறைகளை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 84

தாக்குதல் தொடங்கியவுடன் பெரும்கூச்சலிட்டபடி வேந்தனின் வீரர்கள் அங்கும் இங்குமாகச் சிதறி, தற்காப்புக்கு ஏதுவான இடங்களில் நின்றுகொண்டு, அதற்கு ஏற்பவே எதிர்த்தாக்குதலைத் தொடுத்தனர். இந்த நிலையில் நமது தாக்குதலைத் தீவிரப்படுத்தாமல் `கிழவன் ஏன் மரம் ஏறச் சொல்கிறான்?’ எனச் சிந்தித்தபடியே இருவர் வேகவேகமாக மரத்தில் ஏறினர்.

அதில் ஒன்று, தணக்குமரம். இன்னொன்று, அகில்மரம். இரண்டும் முருங்கையைப்போல வலிமையற்றவை. ``சொல்லும் இடத்தில் வேல்கம்புகளால் குத்தி, காலால் மிதித்து, கிளைகளை ஒடி” என்றான் கிழவன். அவ்வாறே வேல்கம்புகளால் குத்தியும் அமுக்கியும் பெரும்பெரும் கிளைகளை `மடார் மடார்’ என ஒடித்துச் சரித்தனர் வீரர்கள்.

மேலேறிக்கொண்டிருந்த வேந்தர்படை மிரட்சிக்குள்ளானது. `பெரும்பெரும் மரங்களையே கணப்பொழுதில் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்; ஏது செய்யப் போகிறார்களோ!’ என எதிரிகள் மிரண்டு நின்றனர். எதிரிகளின் வடக்குப்புறப் படைக்குத் தலைமையேற்ற துடிசாத்தன் வீரர்கள் முன்னேறுவதை நிறுத்தி ``தற்காத்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான்.

இருட்டுக்குள்ளிருந்து அம்புகள் பாய்வதும் ஈட்டிகள் இறங்குவதும் பாறைகள் உருள்வதுமாக இருக்க, இப்போது மரங்களை உருட்டியோ எறிந்தோ தாக்கப்போகிறார்கள் என நினைத்துத் திகிலடைந்து நின்றது வலப்புறப்படை.

கிழக்குப்புறம் நீலனின் தாக்குதல், எதிரிகளை நிலைகுலையச்செய்தது. மேலிருந்து எறியப்படும் ஈட்டிகள் பாறைகளில் பட்டுத் தெறிக்க, தீப்பொறி விடாது பறந்துகொண்டே இருந்தது. தனது வேகத்தை எக்காரணம் கொண்டும் குறைத்துக்கொள்ளக் கூடாது என உறுதியோடு இருந்தான் கருங்கைவாணன். தாக்குதலைச் சற்று நிறுத்தச் சொன்னால் கூட வீரர்களுக்குப் பின்வாங்கும் மனநிலை உருவாகிவிடும். எனவே, என்ன இழப்பு வந்தாலும் விடாது முன்னேறச் சொல்லி, பேரோசை எழுப்பிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். ஆனால், மேல்நிலையி லிருந்த நீலன் தலைமையிலான வீரர்களின் தாக்குதலை மீறி மேலேறுவது எளிய செயல் அல்ல. கருங்கைவாணன் எவ்வளவு கத்தினாலும் அவனது படை சற்றுப் பதுங்கியே நின்றிருந்தது.

அனைத்து திசைகளிலும் ஆவேசமிக்க தாக்குதலை மேலிருந்து நடத்திக் கொண்டிருந்தனர். தங்களைப் பன்மடங்கு காட்டிக்கொள்ள, ஒவ்வொரு வீரனும் இணையற்ற வேகத்தோடு இயங்கிக் கொண்டிருந்தான். ஆனால் தென்புறத்தில் வேந்தர்படைக்குத் திதியன் தலைமையேற்று வந்துகொண்டிருந்தான். அவனது வேகத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் திணறியது புங்கனின் தலைமையிலான படை.

சிறிது நேரத்தில் சீழ்க்கை அடித்தபடி ஊரின் நடுப்பகுதிக்கு ஓடிவந்தான் புங்கன். கண நேரத்தில் சோமக்கிழவனும் நீலனும் வந்து சேர்ந்தனர். ``அவர்கள் மேலேறிக்கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் மிகக் குறைவான வீரர்களே இருக்கிறார்கள். சற்றே பின்வாங்கி, காரமலையில் ஏறிவிட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கோபத்தோடு கத்தினான் நீலன், ``நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், கூத்தோசை கேட்கும் வள்ளிக் கானம் நோக்கி எதிரிகளின் படை போனால், நிலைமை என்னவாகும் என நினைத்தாயா?”

அப்போதுதான் ஆபத்தை உணர்ந்தான் புங்கன். ``அப்படியென்றால் உடனடியாகக் காரிக்கொம்பு ஊதச்சொல்லி, செய்தியைத் தெரிவிக்கலாமா?” என புங்கன் கேட்டு முடிக்கும் முன் சோமக்கிழவன் சொன்னான், ``நான் அப்போதே அதற்கான முயற்சியைச் செய்துவிட்டேன்.

பெருங்காரிக்கொம்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். இருக்கும் சிறுகொம்பை ஊதினாலும் ஓசை பெரிதாக வெளிப்படவில்லை. மலையின் மேலேயிருந்து கேட்கும் கூத்தின் ஓசைதான் எங்கும் கேட்கிறது” என்றான்.

``என்ன செய்யலாம்?” என புங்கன் கேட்டபோது, ``செய்தியைப் பாரியிடம் சொல்ல, குதிரை எடுத்துக்கொண்டு ஒரு வீரன் மட்டும் விரைந்து செல்லட்டும். நாம் எக்காரணம் கொண்டும் வேட்டுவன்பாறையை விட்டுப் பின்னகரக் கூடாது. நாகக்கரடிலிருந்து வீரர்கள் வரும் வரை நாம் இந்த இடத்தைக் கடக்க எதிரிகளை அனுமதிக்கக் கூடாது” என்றான் நீலன்.

சொன்னவுடன் வீரன் ஒருவன் குதிரைக் கொட்டிலை நோக்கி ஓடத் தொடங்கினான், அவனிடம் சத்தம்போட்டு நீலன் சொன்னான், ``இடதுபுறமாகத் தனித்துக் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒன்று உண்டு. அதுதான் ஆலா. அதை எடுத்துச் செல். இருமடங்கு வேகத்தோடு பாயும்.”

முன்களத்தில் இருக்கும் வீரர்கள், முடிந்தளவுக்குத் தாக்குதல் தொடுத்து நிலைமையைச் சமாளித்துக்கொண்டிருந்தனர். மூவரும் மீண்டும் தாக்குதல் இடத்தை அடைந்தனர். நீலனின் அம்புகள், இருளைத் துளைத்து இறங்கத் தொடங்கின. கும்மிருட்டின் பிடியில் மேலிருந்து பேரோசையோடு நடத்தும் எதிரிகளின் தாக்குதலைச் சமாளித்துத் தற்காத்துக் கொள்ளவே முயன்றுகொண்டிருந்தது கருங்கை வாணனின் படை. வடக்குப்புறத்தில் சோமக்கிழவனின் தாக்குதலால் எதிரிகள் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தனர். மேலேறவில்லை. ஆனால், தெற்குப்புறத்தில் புங்கனின் தலைமையிலான வீரர்களால் எதிரிகளின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை. எதிரிப்படையின் தளபதி திதியனின் ஆவேசம் இணையற்று இருந்தது. எத்தனை வீரர்களைப் பலிகொடுத்தாலும் முன்னேறும் வேகத்தைக் குறைத்துக்கொள்ளுதல் அவனது பழக்கத்திலேயே இல்லை. அந்தத் திசையில் மட்டும் எதிரிகள் அடுத்தடுத்த நிலைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். 

ஆலாவின் மீதேறி விரைந்தான் வீரன். ஊரின் பின்புறத்தில் இருக்கும் குதிரைப்பாதை, கார மலையினூடே பயணிக்கிறது. வள்ளிக்கானத்தின் கூத்தோசைக்கும் வேட்டுவன்பாறையின் தாக்குதலோசைக்கும் நடுவில் குதிரையை வெறிகொண்டு செலுத்தினான்.

மறு குன்றைத் தாண்டும்போதுதான், மயிலாவின் ஊரான செம்மனூர் இந்தத் திசையில் இருப்பது நினைவுக்கு வந்தது. அங்கு போய் செய்தியைச் சொல்லிவிட்டுப் போகலாம் எனக் குதிரையைத் திருப்பினான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோன்றியது, `ஊரில் இளைஞர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும் நாகக்கரட்டுக்குப் போயிருப்பார்கள். மிகவும் வயதானவர்கள்தான் இருக்கக்கூடும்’ என்று.  குதிரைகளும் அங்கு இல்லை. அவர்கள் நடந்தே வேட்டுவன்பாறைக்குப் போய்ச் சேருவதற்குள் நாமே நாகக்கரட்டிலிருந்து வீரர்களை அழைத்துவந்துவிடலாம் என முடிவுசெய்து மீண்டும் குதிரையைத் திருப்பினான். பதற்றமும் அலைக்கழிப்புணர்வும் மேலோங்க, இருளுக்குள் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது ஆலா.