
'செவகாமிய எங்கெட்டி ஆளயே காணோம்?’
தாமிரபரணி
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகிறாள் தாமிரபரணி. தமிழின் ஆதிகவி அகத்திய மாமுனிவர் வசித்த அந்த மலையின் பெயர், பொதிகை. அந்த வகையில் தமிழும் தாமிரபரணியும் உடன்பிறந்தவர்கள்.
பொதிகையில் தொடங்கி எங்கெங்கோ பாய்ந்து, அலைந்து, வளைந்து, திரிந்த களைப்பே தெரியாமல், வற்றாத ஜீவநதியாக இன்னும் இளமையுடன் இருக்கிறாள், தாமிரபரணி என்ற பொருநை!
'விண்ணவர் போற்றும் தெம்மான்
விமலை ஓர் பாகன் வாழும்
திண்நய வளங்கள் ஓங்கும்
தென்மலைத் 'தாம்ர பன்னி’
நண்ணரும் தீர்த்தம் ஆடி
நதிமுடி அரனைப் போற்றும்
எண்ணம(து) உடையார் யாரும்
இணைபதம் உறுவர் தாமே!’
- என்கிறது திருநெல்வேலித் தலபுராணம்.

தாமிரபரணியை திருநெல்வேலி மக்கள் வெறும் ஆறாகப் பார்ப்பது இல்லை. ரேஷன் கார்டில் பெயரைச் சேர்ப்பது இல்லையே தவிர, ஒவ்வொரு குடும்பத்திலும் தாமிரபரணியும் ஓர் உறுப்பினரே! பெண்களோடு பெண்களாக, தலையிலும் இடுப்பிலும் குடங்களைச் சுமந்துகொண்டு, குறுக்குத் துறை வழியாக ஊர்க் கதை பேசியபடியே தாமிரபரணிக்குச் சென்று குளித்து, தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த காலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன். பின்னர், படிப்படியாக தாமிரபரணி, குழாய் வழியாக திருநெல்வேலித் தெருக்களுக்கும், வசதி உள்ள வர்களின் வீடுகளுக்கும் வந்தாள்.
'செவகாமிய எங்கெட்டி ஆளயே காணோம்?’
'அவ வீட்டுக்குள்ளேயேதான் ஆத்தண்ணி பைப் வந்துட்டுல்லா! பெறகு, ரோட்டுப் பைப்புல வந்து தண்ணி புடிக்க ஒன்னையும் என்னையும் மாதிரி அவளுக்கென்ன தலையிளெழுத்தா?’
வீட்டுக்கே தாமிரபரணி வந்து சேர்ந்துவிட்டாலும், அவளை நேரில் சென்று பார்த்து உரிமை கொண்டாடி உறவாடும் கூட்டம் இன்னும் இருக்கிறது. நெல்லையப்பர் காந்திமதி தம்பதியரின் அபிஷேகத்துக்குத் தீர்த்தம் கொண்டுவரும் பொருட்டு அம்மன் சந்நதி வழியாக கோயில் யானையும், இரண்டு பட்டர்களும், காலி செப்புப் பானைகளுடன் தூக்கம் கலையாக் கண்களுடன் கீழப் புதுத் தெரு முக்கு திரும்பும்போது, தீவாகர ஜோசியர் உடம்பு எல்லாம் திருநீறு துலங்க, தோளில் சின்ன வெண்கலக் குடத்து நீரைச் சுமந்தபடி தாமிரபரணியில் இருந்து திரும்பிக்கொண்டு இருப்பார். ரகசியமாக அவர் உதடுகள் காயத்ரி மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு இருக்கும்.
தாமிரபரணியின் வாசனையைத் திருப் பணி முக்கு தாண்டி, அருணகிரி திரை யரங்கத்தில் இருந்து குறுக்குத் துறைச் சாலை துவங்கும்போதே நாம் நுகரத் துவங்குவோம். இரு புறமும் வயல் சூழ்ந்த, மரங்கள் அடர்ந்த சாலையில் செல்லும்போது, பால் வியாபாரம் பண்ணும் நாராயணன் வெற்று உடம்புடன் தனது டி.வி.எஸ். 50-யில் நம்மைக் கடந்து செல்வார். இடுப்புச் சாரத்தின் பின் பகுதியில் சோப்பு டப்பாவைச் சொருகி இருப்பார்.

தாமிரபரணிக்கு நாம் வந்து சேர்ந்துவிட்டதை அறிவிக்கும்வண்ணம், உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சொளுசொளுவென எண்ணெய் வடிய, ஒரு சின்ன ஸ்டூலில் இடுப்புச் சாரத்தை எவ்வளவு தூரம் சுருட்ட முடியுமோ, அவ்வளவு கவர்ச்சியாகச் சுருட்டி... கறுப்பு ஜெகன்மோகினிபோல் ஒரு மனிதர் எப்போதும் அவரது பெட்டிக் கடை முன் உட்கார்ந்து இருப்பார்.
'ஐயப்பா, இந்த அண்ணாச்சி எப்பொதாம்ல குளிப்பா? அன்னிக்கு ஒரு நாளு மத்தியானம் மூணு மணிக்கு பாக்கென். அப்பமும் ஸ்டூல விட்டு எந்திரிக்கல.’
'எல, வாய வெச்சுக்கிட்டு சும்ம இருக்க மாட்டியா. அவாள் காதுல விளுந்துரப்போது.’
'ஆனா, ஒண்ணுல. அண்ணாச்சி ஒடம்புல சூடுங்கறதே இருக்காது. என்ன சொல்லுதெ?’
'நல்லா இருப்பெ. ஆள விடுடே. நான் இந்த ஆட்டைக்கு வரலெ.’
ஐயப்பன் பதறி விலகி ஓடுவான். காரணம், எண்ணெய் உடம்பு அண்ணாச்சியின் சுடலை மாடன் மீசைதான்.
தாமிரபரணியை நோக்கி, படிகளில் இறங்கும்போது வலது புறத்தில் படித்துறை இசக்கியம்மன் ஒரு சிறு கோயிலில் வீற்றிருப்பாள். குளித்துவிட்டுத் திரும்பும்போது அவளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று ஜனங்கள் அவளைத் தாண்டிச் செல்வார்கள். முன்னடிப் படித்துறைக்கு முன்பு உள்ள கல் மண்டபத்தில் ஓர் ஆச்சி சோப்பு, பல்பொடி, ஷாம்பு பாக்கெட்டுகளை ஒரு சணல் கயிற்றில் தொங்கவிட்டு, பீடி, சிகரெட் டப்பாக்கள், கடலை மிட்டாய், முறுக்கு பாட்டில்கள் முன் உட்கார்ந்து இருப்பாள்.
முன்னடிப் படித் துறையில் ஆண்களும், அவர்களுக்கு அடுத்து பெண்களுமாகத் துவைத்துக் குளிக்க, சிறுவர்களில் இருந்து வாலிபர்களாக மாறத் துடிக்கும் விடலைகள் நடு ஆற்றில் இருக்கும் வட்டப் பாறைக்கு நீந்திச் செல்ல முனைவார்கள். மூச்சு இரைக்க வட்டப் பாறைக்குச் சென்று அமர்ந்தவுடன், முதுகைக் காட்டியவாறே சிறிது நேரம் இளைத்துவிட்டு, பின் யுவதிகள் குளித்துக்கொண்டு இருக்கும் பக்கமாகத் திரும்பி, வேறு எங்கோ பார்ப்பதுபோல் ரஜினிகாந்த் பார்வை பார்ப்பார்கள்.
திருநெல்வேலியில் சமத்துவத்தை எங்கு பார்க்க முடிகிறதோ, இல்லையோ, நிச்சயமாக தாமிரபரணியில் பார்க்கலாம். கோடீஸ்வரத் தொழிலதிபரான செல்லமுத்து நாடார் அண்ணாச்சியும், சென்ட்ரல் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் சுப்பு மாமாவும் அருகருகே தத்தம் வேட்டிகளுக்கு சோப்பு போட்டுக் கொண்டு இருப்பார்கள். உள்ளூர் ஜவுளிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் தனது பால்ய சிநேகிதர்களுடன் அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு திருநெல்வேலிக்கு வந்து இருக்கும் வெங்கடபாலகிருஷ்ணன் கேலியும் சிரிப்புமாகக் குளித்துக்கொண்டு இருப்பான்.
'மக்கா, அமெரிக்கால ஆம்பிளைங்க, பொம்பளைங்க எல்லாரும் சேந்துதான் குளிப்பாங்களாமெ... நெசமாவால?’

நண்பர்கள் குழாமில் திருநெல்வேலி யிலேயே பிறந்து, வளர்ந்த ராஜஸ்தானிய இளைஞர்களும் இருப்பார்கள். வருடத்துக்கு ஒரு முறை ராஜஸ்தானுக்குச் சென்று வரும் அவர்கள் ஊருக்குத் திரும்பியவுடன் செய்யும் முதல் வேலை, தாமிரபரணியில் குதிப்பதுதான்.
'ஆயிரந்தான் சொல்லுங்கண்ணே. நம்ம ஊர் தண்ணிய தலைல ஊத்துனாத்தான் உயிரே வருது. என்ன சொல்லுதியெ?’
ராஜேஷ் எலெக்ட்ரிக்கல்ஸ் மஹாவீர் சொல்லுவான்.
குறுக்குத் துறை படித்துறையில் குளிப்பவர்கள், அவரவர் வசதிக்கு ஏற்ப சோப்பு பயன்படுத்துவார்கள் என்றாலும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது
லைஃபாய் சோப்புதான். அதாவது மேலுக்கும், துணிக்கும். அதுவும் ரிட்டையர்டு தாசில்தார் பொன்னையா அண்ணாச்சி அந்த சோப்பிலேயே வேட்டியையும் துவைத்து, தானும் குளித்து, பின் தன் செல்ல நாய் 'மணி’யையும் குளிப்பாட்டுவார்.
'ஏ மூதி. ஒளுங்காதான் நில்லேன். மோரைக்கு சோப்பு போட வேண்டாமா?’
வருடா வருடம் தாமிரபரணியில் வெள்ளம் வரும்போது எல்லாம் குறுக்குத் துறை திருவுருவு மாமலை சுப்பிரமணிய சுவாமி அங்கு இருந்து அவசர அவசரமாக மேட்டுக்கு ஏறிவிடுவார்.
சுதந்திரப் போராட்டக் காலங்களில் சுப்பிர மணிய சிவா, வ.உ.சி போன்றவர்கள் தாமிர பரணி ஆற்றங்கரையின் தைப் பூச மண்டபத்தில் கூட்டம் போட்டு, பேசி இருக்கிறார்கள். டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகங்களும் ஆற்று மணல் திட்டில் அரங்கேறி இருக்கின்றன. பாரதியின் புகழ்பெற்ற 'பாலத்து சோசியனும் கிரகம் படுத்து மென்றுவிட்டான்’ என்னும் வரியில் வரும் பாலம், தாமிரபரணியாற்றின் கொக்கிரகுளத்துப் பாலம்தான் என்றொரு தகவல் உண்டு.
இரட்டை நகரங்களான திருநெல்வேலி யையும், 'தென்னகத்து ஆக்ஸ்ஃபோர்ட்’ பாளையங்கோட்டையையும் பிரிப்பது தாமிரபரணிக்குக் குறுக்கே கட்டப்பட்டு இருக்கும் சுலோச்சனா முதலியார் பாலம்தான்.
இன்றைய தலைமுறைக்கு தாமிரபரணியின் மகிமை தெரியவில்லை என்பது பழைய தலைமுறையினரின் வழக்கமான குற்றச்சாட்டு.
தாமிரபரணியை, அதன் வெவ்வேறு படித்துறைகளை கடவுளுடன் சம்பந்தப்படுத்தி மனமுருக வழிபடும் வயது முதிர்ந்த பெரியவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.
'முந்திமா விலங்கலன்று எடுத்தவன்
முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி ஒருவிரல் உகிர்நுதியால்
அடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர
மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலியுறை
செல்வர்தாமே’
'ஈர வேஷ்டியுடனும், காய்ந்தும் காயாமல் நெற்றியிலும், உடம்பிலும் திருநீறு மணக்க திருஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறையை முணுமுணுத்தபடி தளர்ந்த நடையில் ஒரு தாத்தாவையாவது தாமிரபரணியின் சிந்துபூந்துறையில் நாம் பார்க்கலாம்.
பொதுவாக, திருநெல்வேலிப் பகுதி உணவு வகைகள் ருசிக்கு பெயர்போனவை. அதுவும் புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வாவின் ருசிக்குக் காரணம், தாமிரபரணி. திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற அல்வா தயாரிப்பாளர்களே சென்னையில் அதே தொழிலாளர் களைவைத்து அல்வா தயாரித்துப் பார்த்தார்கள். அல்வா மாறுவேடத்தில் வந்த சோன்பப்டியாகவே ருசித்தது. தமிழ் சினிமாவின் புண்ணியத்தில் புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வாவை மோசடிக் காரியங்களுக்கு உதாரணமாகச் சொல்லி அது கிட்டத்தட்ட குழந்தைகள் மனதில்கூட தங்கிவிட்டது வருத்தத்திலும் வருத்தமான விஷயம்.
தாமிரபரணி, அழகானவள். ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு மாதிரி இருப்பாள். திருநெல்வேலி குறுக்குத் துறையின் தாமிரபரணி அழகும், அம்பாசமுத்திரத்தில் நிறையப் பாறைகளுடனான அழகான படித்துறை அமைந்த தாமிரபரணியும் வெவ்வேறு அழகு உடையவை. சின்ன சங்கரன்கோவில் தாமிரபரணியின் அழகைச் சொல்லி மாளாது. சுலோச்சனா முதலியார் பாலத்தில் இருந்து பார்க்கும்போது தைப் பூச மண்டபம் அவ்வளவு அழகாக இருக்கும். அப்படி ஒருநாள் அழகை ரசிக்கப்போன மக்களின் கண்களுக்கு, ஒரு கோரக் காட்சியை தாமிரபரணி காட்டினாள். கூலி உயர்வு கேட்டுப் போராடி சிறை சென்ற தம் தோழர்களை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரை, உயிருடன் அடித்துத் தள்ளி, உயிரற்ற சடலங்களாக மிதந்த நாள் அது. இன்றைய தாமிரபரணியின் நிலை குறித்து எத்தனையோ போராட்டங்கள், கண்டனங்கள். அவை எல்லாமே உண்மைதான். ஆனாலும் தாமிரபரணியை முற்றிலுமாக அழித்துவிட முடியாது. அவ்வளவு வீரியம் கொண்டவள் அவள். சந்தேகம் உள்ளவர்கள், அவள் உற்பத்தியாகி வழியும் 'பாணதீர்த்தம்’ அருவி யைப் போய்ப் பார்த்தால் தெரியும். படகில் செல்லும்போதே ஒரு திருப்பத்தில் 'ஹோ’வென அவள் விழும் அழகே அழகு.
பொதிகை உச்சியில் இருந்து புத்தம் புதிதான நீர் நம் தலையை நனைத்து உடம்பையும், மனசை யும் நிறைத்து அனுப்பும். அருகிலேயே 'ரோஜா’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த ஒரு பிள்ளையார் உட்கார்ந்து இருப்பார். இப்போது எல்லாம் பாண தீர்த்தத்தில் இருந்து வரும்போது, அங்கேயே சுடச்சுட சுக்கு வெந்நீர் கிடைக்கிறது. தாமிரபரணி துவங்கும் பாணதீர்த்தத்தில் குளித்துவிட்டு படகில் திரும்பும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் முகங்களில் அப்படி ஒரு துலக்கத்தைப் பார்க்கலாம்.
பாண தீர்த்தத்துக்கும் மேலே பொதிகை மலையின் உச்சியில் உள்ள அகத்தியரைத் தரிசிக்க வருடா வருடம் சித்திரை மாதத்தில் கடும் பிரயத்தனங்களுக்கு இடையே ஒரு கூட்டம் இப்போதும் சென்று வருகிறது.
'நெசமாவே அகத்தியர் அங்கெ இருக்காரா அண்ணாச்சி?’
'என்னடே, இப்பிடிக் கேட்டுட்டெ? இன்னிக்கு நேத்து இல்லடே. முத்துராமலிங்க தேவரய்யாவே அந்தக் காலத்துல அங்கே போயிருக்காக. தெரியும்லா?’
திருநெல்வேலி ஊரைச் சுற்றிலும் நெல் வயல்கள், வேலிபோல அவை ஊரைச் சுற்றி இருப்பதால் அது திருநெல்வேலி என்று அழைக்கப்படலாயிற்று என்று பெயர்க் காரணம் சொல்வார்கள். இன்னொரு கதை உண்டு. கடும் மழைக் காலத்தில் வேதபட்டர் என்னும் அந்தணர் ஒருவர் சிவபெருமானுக்குப் பூஜை செய்து வந்திருக்கிறார். நைவேத்தியத்துக்காக அவர் நெல்லைக் காய வைத்திருந்தபோது, மழை. பதற்றத்துடன் நெல்லை அள்ள அவர் ஓடிவந்தபோது நெல் நனையாமல், நெல்லைச் சுற்றிலும் மழை பெய்து இருக்கிறது. வேணுவனநாதரே நெல்லுக்கு வேலியாக நின்று காத்தார் என்பதால் திருநெல்வேலி என்று பெயர் வந்ததாம்.
பொதுவாக, திருநெல்வேலி என்றாலே அது தாமிரபரணிதான் என்பார்கள். அதற்கு ஏற்றாற்போல தாமிரபரணி பாயும் திருநெல்வேலி யின் நகர்ப்புறத்திலேயே இரு புறமும் பச்சை வயலை விரித்து உயிரூட்டி இருப்பாள் தாமிரபரணி. நெல்லுக்கும், ஊருக்கும், மக்களுக்கும் வேலியாகக் காவல் காக்கும் தாய்தான் அவள்.
சேரன்மகாதேவியில் நண்பர்கள் எல்லோரும் குளித்துக்கொண்டு இருக்க, குளித்து முடித்துவிட்டு கரையில் நின்று தலை துவட்டிக்கொண்டு இருந்தேன். அருகில் ஒரு பெரியவர் துவைத்துக்கொண்டு இருந்தார்.

''மேக்குப் பக்கம் போகாதீய தம்பிகளா. இங்கனக்குள்ளெயே குளிங்க.''
இரண்டு மூன்று முறை சொன்னார்.
''ஏன் அண்ணாச்சி? ஆளம் இருக்குமோ?''
''கொள்ளைல போவானுவொ... மண்ண அள்ளி அள்ளிக் கசமாயிட்டுல்லா. ஆளு உள்ள சிக்கினா, வெளிய வர முடியாது. பாடியும் கெடைக்காது. அப்பிடித்தான் என் மகன் போன வருஷம் போயிட்டான்!''
- சுவாசிப்போம், படங்கள் : ஜோஸ்