Published:Updated:

அன்பும் அறமும் - 13

அன்பும் அறமும் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 13

சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்

ஒரு சொல் 

றந்தாங்கியைச் சேர்ந்த, 20 வயதுடைய, கற்றலில் கொஞ்சம் குறைபாடு உடைய இளைஞர் அவர். அது தெரியாமல் அவரைப் பல இடங்களிலும், ‘படிக்க வரவில்லை’ என்று படுத்தியெடுத்துவிட்டார்கள். இந்தக் குறைபாடு இருப்பதை யாருமே கண்டறியவில்லை.

ஒருநாள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, மீன்தொட்டி ஒன்றை கைதவறிப் போட்டு உடைத்துவிட்டார். எதிர்வினையாக, அவருடைய அப்பா அவர் மீது சுடுசொல் ஒன்றை வீசிவிட்டார். அதைக் கேட்ட அந்த இளைஞரின் உள்ளம் சிதறிவிட்டது. உடனே இன்னொரு பையனை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஊரே வண்டி போட்டுக்கொண்டு தேடிக் கண்டுபிடித்து அவரை அழைத்துவந்தார்கள்.

வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசவில்லை. அந்தப் பையனுடைய அப்பா, ``மீன் சாகிறதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்குப்போய் கோபிச்சுக்கிட்டுப் போயிட்டானே” என்று சொல்லியிருக்கிறார். உடன் போன பையன் உடனடியாக அதை மறுத்து, ``அங்கிள், அதெல்லாம் காரணமில்லை. நீங்க `பைத்தியக்காரப் பயலே’னு சொல்லிட்டீங்களாம். அதைத்தான் அவனால பொறுத்துக்க முடியலை” என்றார்.

அந்த இளைஞரை நானும் பார்த்தேன். ``எங்க அப்பா இதுக்கு முன்னாடி இப்படிச் சொன்னதேயில்லை அங்கிள்” என்று சொன்ன அந்த இளைஞரை, `பைத்தியக்காரன்’ என்ற வார்த்தை பல நாள் துரத்திக்கொண்டே இருந்தது.

அன்பும் அறமும் - 13

சுடுசொல் பொறுக்க முடியாத தலைமுறை ஒன்று உருவாகிவிட்டதைக் கவனித்தீர்களா? தற்கொலைக்கு முயன்ற பள்ளிக்கூடப் பெண் ஒருத்தியிடம் காரணம் கேட்டபோது, ``செத்துப்போயிடு சனியனே!” என்று அவருடைய அம்மா சொன்னதாகச் சொன்னார். அவருடைய அம்மாவை அழைத்துக் கேட்டால், ``சும்மா ஏதோ கோபத்துல சாதாரணமா சொன்னதுங்க’’ என அழுதுகொண்டே சொன்னார். அந்தப் பெண், அவருடைய அம்மாவை சில நாள் மன்னிக்கவே இல்லை. அந்த அம்மாவைப் பொறுத்தவரை அது சாதாரண சொல்தான். அழுத்தமாய் இறங்குகிற இடத்தில் அழுத்தமான சொல்தானே அது!

கோவையில் வழக்கறிஞர் நண்பர் சரவணன், ஒரு கதை சொன்னார். பனையையே வெயில் அடித்துச் சாய்க்கும் திருச்செந்தூர்க்காரர் அவர். கோவையில் தொழில் செய்கிறார். ஒருமுறை அவருடன் வந்த உதவியாளர், வண்டியில் மோதிய ஒருத்தரைப் பார்த்து இதே மாதிரியான சுடுசொல் ஒன்றை எறிந்துவிட்டார். மறுநாள் அந்த நபர் அலுவலகத்துக்கே படியேறி வந்து, ``என்னைப் பார்த்து எப்படி சார் அந்த வார்த்தையை உங்களுக்குச் சொல்லத் தோணுச்சு?” என அழுதேவிட்டாராம். இவருக்கு வியப்பு தாங்கவில்லை. என்னிடம் அவர், ``தலைவா வேறொண்ணும் சொல்லலை, சட்டுன்னு `சங்க அறுத்திருவேன்’னு அசிஸ்டென்ட் சொல்லிட்டான். அந்தாளுக்கு மூஞ்சி அப்படியே சுருங்கிருச்சு. நம்ம பக்கமெல்லாம் டெய்லி நாலு தடவை இந்த வார்த்தையைக் கடந்து வரணும். எப்படி இருக்காங்க பாருங்க. இந்த ஊரைவிட்டுப் போக மனசு வருமா?” என்றார் மனம் திறந்து.

ஒரு தலைமுறையே இப்படி சுடுசொல்லைத் தாங்கியே மேலேறி வந்திருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள்கூட மிகச் சாதாரணமாகப் பேசுவார்கள் எங்கள் காலங்களில். என்னையெல்லாம் ஒரு ஆசிரியர், `செத்துத் தொலைக்க மாட்டீயா... செத்துத் தொலைக்க மாட்டீயா?’ எனச் சொல்லிக்கொண்டே முடியைக் கொத்தாகப் பிடித்து சுவரில் முட்டவைப்பார், இன்றைக்கும் நான் தாள்பணிந்து வணங்கும் என்னுடைய ஆசான் அவர். நான் செய்கிற சேட்டை அப்படி!

அன்பும் அறமும் - 13


ஒரு சமூகம் வளர வளர, தன் மொழியில் இருக்கும் சுடுசொற்களைத் தூக்கி எறிந்தபடியே வளரவேண்டும் எனத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் பெரிய கட்சியின் தலைவர்களே தயங்காமல் சுடுசொற்களை வீசியெறிய ஆரம்பித்துவிட்டார்கள். குடும்பம், சமூகம் என எங்கும் சுடுசொற்கள் நிறைந்து கிடக்கின்றன. `கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்றெல்லாம் எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும் எதிலிருந்தும் பாடம் கற்கவில்லை. மிகச் சாதாரணமாக எப்படி எதையும் கடந்து போக முடியும்?

எனக்குத் தெரிந்த அம்மா ஒருவருக்கு, நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன. அதற்கடுத்து மூன்று ஆண் குழந்தைகள் பிறந்து, இறந்துவிட்டன. கடைசியாக எட்டாவதாகப் பிறந்த அந்தப் பையனைப் பொத்திப்பொத்தி வளர்த்தார். பையனுக்கே பெண் குழந்தை பிறந்துவிட்டது. ஏதோ ஒரு சண்டையில் பையன், அம்மாவின் நடத்தையைக் குறிவைக்கும் அந்தச் சுடுசொல்லை முகத்துக்கு நேராக உதிர்த்துவிட்டார். அந்த அம்மா அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட பத்து வருடம் அவரிடம் பேசவேயில்லை. பையனும் நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்துவிட்டார். அந்தச் சாவு வீட்டில் பையனின் முகத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை அந்த அம்மா. சுடுசொல் பொறுக்க முடியாத வைராக்கியம் அது.

18 வருடம் பேசவில்லை, முப்பது வருடம் பேசவில்லை என்றெல்லாம் சொல்வார்கள். ஆற அமர்ந்து அவர்களுடைய கதைகளைக் கேட்டுப்பாருங்கள். அந்தக் கதைகளின் அடியாழத்தில் ஏதாவது ஒரு சுடுசொல் கிழட்டுப்பூனைகளைப்போல காற்றில் நகங்களைக் கீறி மர்ந்துகொண்டிருக்கும். `ஊர் மேயப் போறியா?’ என மிகச் சாதாரணமானதாக நினைத்துக்கொண்டு கேட்ட அண்ணன் ஒருவரின் முகத்தில், தங்கை  20 வருடம் விழிக்காமல் இருந்தார்.

தங்கையின் மகள் சடங்குக்கு, அண்ணனுக்குப் போக வேண்டும் என ஆசை. ஊராரிடம் தூதுவிட்டுப் பார்த்தார். எல்லோரும் போய் அந்தப் பெண்ணிடம் கெஞ்சினார்கள். ``என் பிள்ளை கால்ல விழுந்து, `நான் கேட்ட வார்த்தை தப்புதான்’னு எங்க அண்ணனைச் சொல்லச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண். இவரும் மருமகள்மேல் இருக்கிற பாசத்தால் வீம்பு பிடிக்காமல் போய் காலில் விழுந்துவிட்டார்.

காலில் விழுந்த அடுத்த நிமிடம் அண்ணனின் காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதார் அந்தப் பெண். ``எண்ணே நீ கேட்டது இன்னிக்கு வரைக்கும் நெஞ்சை அறுத்துக்கிட்டு இருந்துச்சுண்ணே. நீ கேக்கலாமா அந்த மாதிரி? உன் தோளில போட்டு வளர்த்த பிள்ளை தப்பு செய்யுமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சியா? நீ முதல்லயே மன்னிப்பு கேட்டிருந்தா இத்தனை வருஷம் உன்னைப் பிரிஞ்சிருந்திருப்பேனா. எனக்குக் கிடைக்கலை... என் பொண்ணுக்குக் கிடைச்சிட்ட” என உடைந்து அழுதார். இதைக் கேட்கும்போது மிகச் சாதாரணமாக நம்மால் கடந்து போய்விட முடியும் என்றால், சுடுசொற்களுக்குத் தோல் பழகிவிட்டது என அர்த்தம்.

இப்போது உள்ள பையன்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். எங்கள் தலைமுறை மாதிரி, அவர்களால் சாதாரணமாக எதையும் கடந்து போக முடியவில்லை. நண்பன் ஒருவன் வந்து அமரும்போதே, சிரித்துக்கொண்டே அம்மாவை நோக்கிச் சொல்லப்படும் வசைச்சொல்லைத் துப்பிவிட்டுத்தான் பேச்சை ஆரம்பிப்பான். இப்போது அப்படி யோசிக்கக்கூட முடியாது. நண்பர்கள் வட்டத்தில்கூட அவர்கள் கண்ணியமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒன்றிரண்டு தப்பிப்போகும் கணக்கு என்பதைப்போல சிலர் இருக்கவும் செய்யலாம். ஆனால், பெரும்பான்மையானோர் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் இடத்துக்கு நகர்ந்துவிட்டார்கள் என உறுதியாகச் சொல்ல முடியும். இது ஓர் அருமையான மனநிலை மாற்றம். எல்லா பக்கங்களுக்கும் இது பரவ வேண்டும்.

விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் சுடுசொற்கள்தான் முக்கிய இடம்பிடிக்கின்றன. தெரிந்த பெண் ஒருவரை விரட்டி விரட்டிக் காதலித்த நண்பன் ஒருவன், ஒரு வார்த்தையால் தனக்குக் கிடைக்கப்போகும் வாழ்வாங்கு வாழ்க்கையை இழந்தான். அந்தப் பெண் அதற்குப் பிறகு அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இத்தனைக்கும் அவன் பொருளாதாரரீதியில் மிக உயரமான இடத்தில் இருப்பவன். அந்தப் பெண் பள்ளத்தில் இருந்தாலும், பக்குவமற்ற அந்த வார்த்தையை மூர்க்கமாக நிராகரித்துவிட்டார். நண்பனுக்கு வேறு திருமணம் நடந்தது. அவன் எப்போதெல்லாம் நெகிழ்ச்சியாக இருப்பானோ, அப்போதெல்லாம் `ஒரு நிமிஷம் யோசிக்காமச் சொல்லிட்டேன். இன்னிக்கு வரைக்கும் ஏன் அப்படிச் செஞ்சேன்னு புரியவேயில்லை. ஒரு வார்த்தையால வாழ்க்கையை இழந்துட்டேனே!’ எனப் புலம்பியபடியே இருப்பான்.

அண்ணனின் வார்த்தைகளை நெஞ்சில் ஏந்திய அந்தப் பெண்ணும், இழந்த வாழ்க்கை குறித்து இப்படி ஏங்கத்தான் செய்தார். இழந்த வாழ்க்கைகள் குறித்து இரு தரப்பும் எப்போதுமே இப்படி ஏங்கும். நினைவில் வந்து விழும் அந்தச் சுடுசொல், எப்போதும் இரைஞ்சியபடியே எஞ்சியிருக்கிற வாழ்க்கையைச் சுற்றி வந்துகொண்டே இருக்கும். சொற்களுக்கு எப்போதுமே மறைவில்லை. ஆதியில் நமக்கு முன்னே பிறந்தது சொல். சொற்களை மடியில் போட்டுத் தாலாட்டுங்கள். நிம்மதியான தூக்கத்தை அது நமக்கு அருளும். சொற்களின் பிள்ளைகளான நாம், பொறுப்பற்ற பிள்ளைகளாய் சொல்லை விசிறியடிக்கக் கூடாது.

- அறம் பேசுவோம்!