மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹேண்ட் பேக்... நமக்கு நாமே நான்கு கேள்விகள்!

ஹேண்ட் பேக்... நமக்கு நாமே நான்கு கேள்விகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேண்ட் பேக்... நமக்கு நாமே நான்கு கேள்விகள்!

டீ கிளட்டரிங் : ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு எழுத்து வடிவம்: சாஹா, ஓவியங்கள் : ரமணன்

ங்கள் ஹேண்ட் பேகில் என்னவெல்லாம் வைத்திருக்கிறீர்கள்? `பெண்களின் ஹேண்ட் பேகில் என்ன இருக்கிறது என எட்டிப் பார்ப்பதும் கேட்பதும் அநாகரிகம்’ என்கிறீர்களா? சரிதான். அடுத்தவர்களுக்குத் தெரிவது அநாகரிகமாக இருக்கலாம். ஆனால்,  உங்கள் பையில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது உங்களுக்கே தெரியாமலிருப்பது சரிதானா? `இதென்ன கேள்வி? பணம், விசிட்டிங் கார்டு, கிரெடிட், டெபிட் கார்டுகள், கொஞ்சம் மேக்கப் அயிட்டம், பேனா, இத்யாதி...’ எனச் சொல்வீர்கள் பலரும்.

இன்னொருமுறை உங்கள் பையை முழுவதுமாக செக் செய்து பாருங்கள். எப்போதோ குடித்த ஜூஸுக்கான கடை பில், என்றைக்காவது தேவைப்படலாம் என நீங்கள் செருகி வைத்திருந்து காலாவதியாகிப்போன வெட் வைப்ஸ், உடைந்து நசுங்கிப்போன மாத்திரைகள், தலையைச் சீவிவிட்டு உள்ளே போட்ட சீப்பிலிருந்து உதிர்ந்த முடிகள்... இன்னும் இப்படி ஏராளமாக இருக்கும்.

சிலருக்குத் தினம் ஒரு ஹேண்ட் பேக் மாற்றும் பழக்கம் இருக்கும். சிலர் நேரெதிர். அது அறுந்து கீழே விழும்வரை மாற்றவே மாட்டார்கள். தினம் ஒரு பை எடுத்துச் செல்கிறவரும் சரி, பல வருடங்களுக்கு ஒரு பை உபயோகிக்கிறவரும் சரி... அதை ஒரே மாதிரிதான் கையாளுகிறார்கள் என்பதுதான் வியப்பான விஷயம்.

ஹேண்ட் பேக்... நமக்கு நாமே நான்கு கேள்விகள்!

ஹேண்ட் பேகைத் தேர்ந்தெடுப்பது எப்படி? 

ஹேண்ட் பேக் வாங்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். சில பைகள் காலியாக இருக்கும்போதே கனமாக இருக்கும். அதனுள் பொருள்களை வைத்தால் இன்னும் அதிகமாகக் கனக்கும். அதைத் தவிர்த்து லைட் வெயிட் பைகளைத் தேர்ந்தெடுக்கலாம். தோள்பட்டையில் மாட்டும்போது உறுத்தாது; வலிக்காது. உங்கள் உபயோகத்தைப் பொறுத்து வாஷபிள் பைகள் தேவையா என முடிவு செய்யலாம். சில பைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், புது மெருகு போனதும் துவைத்துப் பயன்படுத்த முடியாததாக இருக்கும். சணல் மாதிரியான மெட்டீரியல்களில் இந்தப் பிரச்னை இருப்பதால் வாங்கும்போதே டார்க் கலராகப் பார்த்து வாங்குவது சிறப்பு.

வெளித்தோற்றத்துக்கு உங்கள் ஹேண்ட் பேக் அழகாக, ஆடம்பரமாக இருந்தால் மட்டும் போதுமா? உள்ளேயும் அதே போன்று இருக்க வேண்டாமா? அதற்கு முதல் வழியாக வாரம் ஒருமுறையாவது உங்கள் ஹேண்ட் பேகைச் சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். கூடவே இன்னும் சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

சேர்த்துக்கொண்டே போகாதீர்கள் ரசீதுகளை!

எந்தப் பொருள் வாங்கினாலும் பில் வாங்குவது சிறந்த பழக்கம்தான். அவற்றைக் குப்பையாகப் பைக்குள்ளேயே போட்டு வைப்பதும், மை அழிந்த நிலையிலும் எதற்காக வாங்கிய பில் என்றே தெரியாத நிலையிலும்கூடச் சுத்தம் செய்யாமல் சேர்த்துக்கொண்டே போவதுதான் மோசமான வழக்கம். இதைத் தவிர்க்க அன்றாட பில்களை உடனுக்குடன் செல்போனில் போட்டோ எடுத்துத் தனியே ஃபோல்டர் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். வரவு செலவுக் கணக்குக்கு இது போதும். பில்களை வேலையிடத்தில் கொடுக்க வேண்டும் என்றால் அவற்றை அன்றன்றே வெளியில் எடுத்துத் தனியே ஃபைல் செய்து வைப்பது அவசியம்.

ஹேண்ட் பேகின் கனத்தைக் குறைப்பது எப்படி?

ஹேண்ட் பேகில் உள்ள எல்லாவற்றையும் வெளியே எடுத்துப் போடுங்கள். அழகு சாதனங்கள், நாப்கின்கள், மாத்திரைகள் எனத் தனித்தனியே எடுத்து அவற்றின் காலாவதி தேதியைச் சரிபார்த்த பிறகு தனித்தனி பவுச்சுகளில் போட்டு உள்ளே வையுங்கள். சிலரின் ஹேண்ட் பேகுகளில் அழகு சாதனங்கள் கட்டாயம் இடம்பிடிக்கும். தவறில்லை. ஃபேஸ் வாஷோ, பியூட்டி க்ரீமோ எதுவானாலும் சின்னச்சின்ன அளவுள்ள டியூப்களாக வாங்கி வைத்துக்கொண்டால் பையினுள் இடத்தை அடைக்காது. தேவையானபோது வாங்கிக்கொள்ளலாம்.

எல்லோருடைய பைகளிலும் கிரெடிட் கார்டுகளும் பணமும் இருக்கும். அவற்றை வைக்கச் சிலர் வாலட் உபயோகிப்பார்கள். அது நல்ல ஐடியாதான். ஆனால், ஹேண்ட் பேகின் எடையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும். அதைத் தவிர்த்து அந்தக் காலத்தில் நம் அம்மாக்கள் பயன்படுத்தியது போன்ற காட்டன் பர்ஸும், கிரெடிட் கார்டுகளை வைக்க வெயிட்லெஸ் ஃபோல்டர்களும் பயன்படுத்தலாம்.

சில்லறையைச் சேர்த்து வைப்பதிலும் சிலருக்குத் தனி ஆர்வம் உண்டு. பை நிறைய சில்லறை சேர்ந்து கனக்கும். சில்லறைக் காசுகளை வீட்டில் உண்டியல் வைத்துச் சேகரியுங்கள். அல்லது யாருக்காவது பணம் கொடுக்கும்போது சில்லறையை முதலில் கொடுத்துப் பழகுங்கள்.

ஹேண்ட் பேகில் இருக்க வேண்டியவை?

சானிட்டரி நாப்கின் ஹேண்ட் பேகில் அவசியம் இருக்க வேண்டும். `லோ பிளட் பிரஷர்' பிரச்னை உள்ளவர்கள் ஹேண்ட் பேகில் சாக்லேட் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு உள்ளவர்களின் ஹேண்ட் பேகில் ட்ரை ஃப்ரூட்ஸ், சாக்லேட் கட்டாயம் இருக்க வேண்டும் (சுகர் பிரச்னைக்காக அவர்கள் போட்டுக்கொள்ளும் ஊசி, எடுத்துக்கொள் ளும் மருந்து மாத்திரைகளின் காரணமாக சில நேரங்களில் `லோ சுகர்' பிரச்னை ஏற்பட லாம். அப்போது சாக்லேட் சாப்பிடலாம்).

ஹேண்ட் பேக்... நமக்கு நாமே நான்கு கேள்விகள்!

பயணம் செய்கிற பணிகளில் இருக்கும் பெண்கள் என்றால் சின்ன டப்பாக்களில் கடலை மிட்டாய், நட்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ் போட்டு வைக்கலாம். ஆனால், இவற்றை அன்றன்றே காலி செய்துவிட வேண்டும்.
ஒரு பொருளை ஹேண்ட் பேகில் வைப்பதற்கு முன்  `இது எனக்கு அவசியமா?’, `காலாவதி தேதி முடிந்து விட்டதா?’, `இது எப்போதும் ஹேண்ட் பேகில் வைத்திருக்க வேண்டிய பொருளா?’, `இதுவரை ஒருமுறையாவது இந்தப் பொருளைப் பயன்படுத்தியிருக்கிறோமா?’ என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

லேப்டாப் பை... நிறைய பிரிவுகள் கொண்டதைத் தேர்ந்தெடுங்கள்!

பணிநிமித்தம் இன்று பெண்கள் பலரும் ஹேண்ட் பேகோடு சேர்த்து லேப் டாப் பையையும் தூக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். அதையும் குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தப்படுத்திப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

முதலில் லேப்டாப் பையில் உள்ள எல்லாப் பொருள்களையும் வெளியே எடுங்கள். லேப்டாப் பைக்குள் வைக்கவேண்டியவற்றை மட்டும் மீண்டும் உள்ளே வையுங்கள். அப்படிப் பார்த்தால் அதனுள் லேப்டாப், கேபிள், சார்ஜர், மவுஸ் போன்றவற்றை மட்டும் அவற்றுக்கான இடங்களில் வையுங்கள்.

கேபிளை வைக்கும்போது அப்படியே சுருட்டி உள்ளே திணிப்போம். இப்படியே தொடர்ந்து செய்வதால் அது சீக்கிரமே லூஸாகிவிடும். ஒவ்வொரு முறை அதை எடுக்கும்போதும் மற்ற பொருள்களையும் தொந்தரவு செய்யும். இதைத் தவிர்க்க கேபிளை முறையாகச் சுற்றி அதற்கென பையினுள் பிரிவு இருந்தால் அங்கே வையுங்கள். அது இல்லாவிட்டால் கேபிளுக்கென ஒரு சின்ன பை வைத்துக்கொண்டு அதில் வைத்து லேப்டாப் பையினுள் வைத்தால் தொந்தரவின்றி இருக்கும்.

லேப்டாப் பேக் வாங்கும்போதே அதில் நிறைய பிரிவுகள் இருக்கும்படி பார்த்து வாங்குங்கள். உதாரணத்துக்கு நோட் பேடு, பேனா வைக்கத் தனியே, கேபிளுக்குத் தனியே, சார்ஜர் வைப்பதற்குத் தனியே... இப்படி நிறைய பிரிவுகள் இருக்கட்டும்.

(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!)