மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 85

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ன் மகன் இளமாறனின் மரணத்துக்கு பறம்புவீரர்களே காரணம் என அறிந்த பிறகுதான் மையூர்கிழார் வெஞ்சினம் உரைத்தார். ``பறம்புக்கு எதிரான போரில் நானும் பங்கெடுத்து, பகை முடிப்பேன்’’ என்று முழங்கினார். காற்றைப்போல் இணையற்ற வேகத்தில் செல்லக்கூடிய இளமாறனின் குதிரையான `ஆலா’ வேட்டுவன் பாறையில் நிற்கிறது என்று, அவர் வெஞ்சினம் உரைத்து நீண்டநாள்கள் கழித்துதான் தெரியவந்தது. ஒன்றுக்கும் மேற்பட்டமுறை ஆள்களை அனுப்பி, பார்த்துவரச் சொன்னார். எல்லோரும் அதை உறுதிப்படுத்தினர்.

வைப்பூர் துறைமுகத்தின் மீதான தாக்குதலில் வேட்டுவன்பாறை வீரர்களே பங்கெடுத்துள்ளனர் என்பதை எல்லாவகைகளிலும் உறுதிப்படுத்திக்கொண்டார் மையூர்கிழார். நீலனின் வீரத்தை மலைமக்கள் அனைவரும் நன்கு அறிவர். எனவே, ஆலாவைக் கைப்பற்றி தகுந்த பதிலடி கொடுக்க பொருத்தமான நேரத்துக்காகக் காத்திருந்தார். வேட்டுவன்பாறையில் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து கவனித்தார்.

மயிலாவுக்கான நிறைசூல் விழாவைப் பற்றி பலரும் அறிவர். இந்த விழாவுக்காக நாகக்கரட்டில் இருக்கும் நீலன் உள்ளிட்ட வீரர்கள் வேட்டுவன்பாறைக்கு வருவர். போர்ச்சூழல் இருப்பதால் எண்ணிக்கையில் குறைவான வீரர்களே இந்த விழாவில் பங்கெடுப்பர். ஆனால், நீலன் உறுதியாகப் பங்கெடுப்பான் என எல்லா செய்திகளையும் திரட்டினார் மையூர்கிழார். அதன் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டது.

கருங்கைவாணனின் திட்டமிடல் மையூர்கிழாரிடம்கூட பகிர்ந்துகொள்ளாததாக இருந்தது. யட்சினி வழிபாட்டுக்கான ஏற்பாடுகள்தான் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தன. அது தொடர்பான பணிகள்தான் மையூர்கிழாருக்கு வழங்கப் பட்டிருந்தன. போருக்கான தொடக்கச் சடங்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நினைத்து பெருமிதத்தோடு இயங்கிக்கொண்டிருந்தார். அன்று நண்பகல் அவரை வரவழைத்த கருங்கைவாணன், ``நீலனை நன்கு அடையாளம் தெரிந்த இரு வீரர்களை அனுப்பிவையுங்கள்’’ என்றான். `யட்சினிக்கான சடங்கு நடக்கும்போது இருவரை எதற்காகக் கேட்கிறார்?’ எனச் சிந்தித்தபடியே இரண்டு வீரர்களை அனுப்பிவைத்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 85

காரிருளின் நள்ளிரவில் யட்சினி வழிபாட்டின் உச்சத்தில் பவளவந்திகையின் குருதி பீறிட்டுத் தெறித்தது. போர் நிலமெங்கும் பேரிகைகள் முழங்கின. வேட்டுவன் பாறையின் அடிவாரத்தில் இந்த ஓசையை எதிர்பார்த்தே கருங்கைவாணன் காத்திருந்தான். பேரிகைகள் முழங்கியவுடன் தனது படைக்கான உத்தரவைப் பிறப்பித்தான். மூன்று திசைகளிலிருந்தும் அவர்கள் மேலேறினர்.

எதிர்பார்த்ததைவிட கடும்தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. மிகக் குறைவான வீரர்கள் மட்டுமே இருந்தும் இவ்வளவு வலிமையான தாக்குதலை எப்படி நடத்துகின்றனர் என்பது பெரும்வியப்பாகவே இருந்தது. தாக்குதலை எதிர்கொண்டபடி மிக நிதானமாகவே மேலேறிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். வடதிசையில் இருந்த துடிச்சாத்தன், கருங்கை வாணன் அளவுக்குக்கூட முன்னேறவில்லை; கீழ்நிலையில் இருந்தான். ஆனால், தென்திசையில் திதியனோ கருங்கைவாணனைவிட இரு பனை உயரத்துக்கு மேலேறியிருந்தான்.

படைகள் இப்படி சமநிலையற்று முன்னேறுவது, எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். துடிச்சாத்தன் ஏன் இவ்வளவு பின்தங்கியுள்ளான் என்ற கவலைகூட பெரிதாக இல்லை; திதியனின் செயல்தான் அதிக கவலையளிப்பதாக இருந்தது. அவன் ஏறக்குறைய வேட்டுவன்பாறையின் மேல்நிலைக்குச் சென்றுவிட்டான். சற்றே பதற்றமானான் கருங்கைவாணன். அவனை பொறுத்திருக்கச் சொல்ல முயன்றான். ஆனால், நீலன் தலைமையிலான வீரர்கள் நடத்தும் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்தது. தாக்குதலை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது.

எவ்வளவு தாக்கினாலும் எதிரிகள் மேலேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தபடியே தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தினான் நீலன். சோமக்கிழவனின் திசையில் எதிரிகள் மிகவும் கீழ் நிலையில் இருக்கின்றனர். ஆனால், புங்கனின் திசையில் எதிரிகள் மிகவும் மேலேறிய நிலையை அடைந்துள்ளனர் என்பதை அறிந்தபடி என்ன செய்யலாம் எனச் சிந்தித்தான் நீலன். `சோமக்கிழவனின் பக்கம் இருக்கும் மூன்று வீரர்களை இந்தப் பக்கம் அனுப்பலாமா?’ எனச் சிந்தித்தபோதுதான் கொற்றனின் நினைவுவந்தது.

அவன் மிகச் சிறியவன். எதிரிகள் மேலேறிக்கொண்டிருக்கின்றனர். இனி தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும். காலம்பன் மகனுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என எண்ணிய நீலன், சட்டென சோமக்கிழவனின் திசை நோக்கி ஓடினான். அங்கு எதிரிகளை மேலே ஏறவிடாமல் அனைவரும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர். விரைந்து வந்த நீலன், கொற்றனை தனியே அழைத்தான். பாறைகளை முடிந்த அளவுக்குத் தூக்கித் தள்ளிக்கொண்டிருந்த கொற்றன், மறுதிசையில் தாக்குதல் தொடுக்க அழைக்கிறான் என நினைத்து வேகமாக மேலேறிச் சென்றான்.

வேட்டுவன்பாறையின் மேலே குடில்களுக்கு இடையே ஆங்காங்கே பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. தாக்குதலின் ஓசையும் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இவற்றையெல்லாம் மீறி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது வள்ளிக்கானத்தில் நடைபெறும் கூத்தின் ஓசை. எல்லா வகையான இசைக் கருவிகளும் அங்கு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காரமலையின் அமைதியை முழுமுற்றாக விரட்டிக்கொண்டிருந்தன கூத்தின் ஓசையும், வேட்டுவன்பாறை தாக்குதலின் சத்தமும்.

கொற்றனை தனியாக அழைத்துவந்த நீலன், பின்புறம் செல்லும் ஒற்றையடிப் பாதையைக் காட்டி, ``இந்த வழியில் ஒருபொழுது நடந்தால் அருவியும் அதன் அடிவாரத்தில் பெரும் பாறைகளும் இருக்கும். நீ அங்கு போய்விட்டால் யாராலும் அதற்குள் வந்து உன்னைக் கண்டறிய முடியாது. நாளை காலை வரை நீ அங்கேயே இரு. விடிந்ததும் ஊருக்கு வா” என்றான்.

எதிரிகளோடு கடும்மோதல் நடந்து கொண்டிருக்கும்போது தன்னை மட்டும் ஏன் தனியே காட்டுக்குள் போகச் சொல்கிறான் என்பது கொற்றனுக்குப் புரியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிப் புரியவைப்பதற்கான நேரமில்லை. கொற்றன் விழித்துக்கொண்டு நின்றதைப் பார்த்த நீலன், ``காலையில் வந்து உன்னிடம் விளக்கமாகச் சொல்கிறேன். இப்போது புறப்படு” என்றான்.

அதற்குமேல் நீலனின் குரலை மறுத்து நிற்க முடியாது. மனமேயில்லாமல் அவன் சொன்ன பாதையை நோக்கிப் புறப்பட்டான் கொற்றன். அவன் புறப்பட்ட பிறகு நீலன் மீண்டும் கிழக்குத்திசை நோக்கி ஓடத் தொடங்கினான். மூன்று திசைகளிலிருந்தும் தாக்குதலின் ஓசை அதிகமாகிக்கொண்டிருந்தது. தென்திசையின் ஓசை மிகவும் மேலேறிக் கேட்டது. புங்கனின் தலைமையிலான வீரர்கள் வேந்தர்படையின் தாக்குதலைத் தடுக்க முடியாமல் பின்னோக்கி வந்துகொண்டேயிருந்தனர்.

பெருங்குரலெழுப்பியபடி திதியன் முன்னேறிக்கொண்டிருந்தான். காரமலையை நோக்கி விரைந்துகொண்டிருந்த கொற்றன், எதிரிகளின் ஓசை இவ்வளவு அருகில் கேட்கிறதே என நினைத்து சற்றே திரும்பினான். பந்தத்தின் ஒளியில் சீறிக்கொண்டிருந்த திதியனின் முகம் நேர் எதிரே தெரிந்தது. ஓடிக்கொண்டிருந்த கொற்றன் அந்த முகத்தைப் பார்த்த கணத்தில் உறைந்து நின்றான்.

நினைவுகளால் மூச்சுமுட்டியது. தம்பிகளோடு சேர்த்து தன்னையும் கால்களைக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டவன். கையில் சிக்கியவர்களை எல்லாம் கொன்று குவித்தவன். கதறித் துடித்த பெண்களை எல்லாம் கழுத்தை அறுத்து வீசியவன். கண் முன்னால் ஊரையே வேட்டையாடித் தீர்த்தவன். உறைந்து நின்ற கொற்றனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆனால், நீலன் சொன்ன பாதையை நோக்கி ஓட கால்கள் மறுத்தன.

புங்கனால் திதியனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. சிறிது சிறிதாக பின்னோக்கி நகர்ந்து வந்துகொண்டேயிருந்தான். வேந்தர்படையணிக்குத் தலைமை தாங்கிய திதியனின் உறுதிப்பாடு, புங்கனை நிலைகுலையச் செய்தது. அவன் எந்தத் தாக்குதலையும் கண்டு அஞ்சாமல் முன்னோக்கி வந்துகொண்டே யிருக்கிறான். அவனைக் கட்டுப்படுத்த எந்த வழியிலும் புங்கனால் முடியவில்லை.

திதியன் ஏறக்குறைய மேல்நிலைக்கே வந்துவிட்டான். அவனது வருகையை எதிர்பார்த்தபடி தோதக்கத்திமரத்தின் கிளையின் மேல் ஏறி மறைந்து பார்த்துக்கொண்டிருந்தான் கொற்றன். மரத்தின் மீது படர்ந்திருந்த கொடியைப் பிடித்தபடி காத்திருந்தான். மேல்நிலைக்கு அருகில் வந்ததும் திதியனின் ஆவேசம் இன்னும் அதிகமானது. ஆங்காங்கே பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. ஆனால், வீரர்கள் யாரும் தென்படவில்லை. தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் புங்கன் மேலும் மேலும் பின்நோக்கி வந்துகொண்டிருந்தான்.

திதியன் சரியான இடத்துக்கு வரும்வரையில் காத்திருந்தான் கொற்றன். அன்று தலைகீழாய்க் கட்டித்தொங்கவிடப்பட்ட நிலையில் தன்னையும் தம்பிகளையும் சுட்டிக்காட்டி, `அம்பு வீசிக் கொல்’ எனக் கொக்கரித்தவனின் தலையை உச்சியில் தொங்கியவாறு எந்தக் கோணத்தில் கொற்றவன் பார்த்தானோ, அவன் தலை இப்போது அதே கோணத்தில் தனக்கு நேர்கீழே வந்து நிற்பதைப் பார்த்தான் கொற்றன். இந்தக் கணத்தை எதிர் பார்த்துதான் இவ்வளவு நேரமும் கொப்போடு கொப்பாக ஒட்டிக்கிடந்தான். எந்தவித ஓசையும் எழுப்பாமல் கொடியைப் பிடித்தபடி உச்சிக்கொப்பிலிருந்து கீழ்நோக்கிக் குதித்தான். `ஏதோ ஓசை கேட்கிறதே!’ என நினைத்த திதியன் சட்டென மேல்நோக்கி அண்ணாந்து பார்க்கும்போது கூர்வாளின் முழுமுனையும் அவனது முகத்தைக் கிழித்துக்கொண்டு நெஞ்சுக்கூட்டுக்குள் இறங்கியது.

திதியனோடு வந்தவர்கள் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதலாக அது இருந்தது. தங்கள் படையணித்தலைவன் மண்ணில் சாய்ந்த கணத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தபோது, விழிப்படைந்த புங்கன் வீறுகொண்டு தாக்கி முன்னோக்கி நகரத் தொடங்கினான். நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் வேந்தர்படைவீரர்கள் சற்றே பின்நோக்கி இறங்கினர். ஆனால், திதியனோடு சாய்ந்து கிடந்த கொற்றனின் உடலில் எண்ணில்லாத ஈட்டிகள் இறங்கியிருந்தன.

யட்சினி வழிபாடு பற்றி கபிலர் சொன்னதும் அடுத்து செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கத் தொடாங்கினான் முடியன். யட்சினி வழிபாடு என்பது தாக்குதலுக்கு முன்பு நடக்கும் சடங்கு என கபிலர் கூறிய பிறகு `தாக்குதலை விடிந்ததும் தொடங்குவார்களா... இப்போதா?’ என்று கேள்வியை எழுப்பியபடி இருந்தான்.

நாகக்கரட்டுக்குச் சென்ற பாரியும் கபிலரும் இன்னும் வரவில்லையே என நினைத்த தேக்கனும் வாரிக்கையனும் இரலிமேட்டிலிருந்து நாகக்கரட்டுக்கு வந்துசேர்ந்தனர். நள்ளிரவைக் கடந்து நீண்டநேரமாகியிருந்தது. அவர்கள் வந்ததும் மீண்டும் யட்சினிக்கான சடங்கு பற்றி கபிலர் கூறினார், ``எதிரிகளின் தாக்குதலை எதிர்பார்த்துதானே இருக்கிறோம். எப்போது தாக்கினாலும் எதிர்த்தாக்குதலால் அவர்களை வீழ்த்துவோம்” என்றான் தேக்கன்.

``பொழுது விடியும்போது எல்லா நிலைகளிலும் வீரர்களை ஆயத்தநிலையில் இருக்கச் சொல்லுங்கள். நிலைமைக்கு ஏற்ப முடிவெடுப்போம்’’ என்றான் பாரி.

இந்தப் பேச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் வேட்டுவன்பாறையிலிருந்து வந்த வீரன் நாகக்கரட்டின் இடதுமுனையை அடைந்தான். அந்தத் திசைக்குத் தலைமையேற்ற நீலன் நிறைசூல் விழாவுக்குப் போய்விட்டதால், அந்தப் பொறுப்பை வேட்டூர்பழையன் ஏற்றிருந்தார். வந்த வீரன் மூச்சிரைக்க, தாக்குதலை விவரித்தான். செய்தியைக் கேட்டுத் துடித்தெழுந்த பழையன், முதற்படைப் பிரிவை அழைத்துக்கொண்டு வேட்டுவன்பாறை நோக்கிப் பாய்ந்து சென்றான்.

இடதுமுனையிலிருந்து காரிக்கொம்பு ஊதப்பட்டது. ஏதோ பிரச்னை என்பது நாகக்கரட்டின் மேல் இருந்த ஐவருக்கும் தெரிந்தது. வீரன் ஒருவன் நாககரட்டின் மேல்நிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். ஐவரும் குதிரையில் ஏறி காரிக்கொம்பு ஊதப்பட்ட இடதுபுறத்தை நோக்கி விரைந்தனர். ஏதோ நடந்திருக்கிறது என்பது புரிந்தது. என்ன என்பதைக் கணிக்க முடியவில்லை. குதிரைகள் விரைந்தன.

வீரன் எதிர்பட்டான். நடந்துகொண்டிருக்கும் தாக்குதலை அவன் விவரித்தபோது அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். வீரன் சொல்லி முடிக்கும்போதே, நீலனைக் காக்க பாய்ந்து செல்லத் துடித்தது பாரியின் மனம். அதை உணர்ந்த வாரிக்கையன், ``பாரி இங்கே இருக்கட்டும். தேக்கனும் முடியனும் புறப்படுங்கள்’’ என்றார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 85

பாரி மறுசொல் சொல்லும் முன் பெருங்குரலில், ``எல்லோரையும் வேட்டுவன்பாறையை நோக்கித் திருப்பிவிட்டு, எதிரியின் தாக்குதல் இந்தத் திசையில் அமைய வாய்ப்பிருக்கிறது” என்று சொன்ன தேக்கன், கணநேரம்கூடக் காத்திருக்காமல் குதிரையைத் தட்டி விரட்டினான். முடியனும் வீரர்களும் பின்தொடர்ந்தனர். இமைக்கும் நேரத்துக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டன. குதிரையின் காலடிக்குளம்பிலிருந்து தெரிந்த மண்துகள் கபிலரின் நெற்றியில் பட்டபோதுதான் திகைப்பு மீண்டார்.

எதிரிகள் மூன்று திசைகளிலும் வேட்டுவன் பாறையின் மேல்நிலையை நெருங்கிவிட்டனர். பறம்பின் தரப்பில் தாக்குதல் தொடுத்த வீரர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இனியும் தாக்குதல் உத்தியை மாற்றாமல் இருக்கக் கூடாது என நினைத்த நீலன், பின்னோக்கி விரைந்தான். ``குடில்களின் மேற்கூரைகளை எல்லாம் இழுத்துக் கீழே போடுங்கள். காய்ந்த மரங்கள், கட்டைகள் எல்லாவற்றையும்கொண்டு பெரும்வட்டத்தை உருவாக்குங்கள்’’ எனச் சொல்லிவிட்டு, மீண்டும் தாக்குதல் முனைக்கு ஓடினான். மேல்நிலையில் நின்றிருந்த வீரர்கள், குடில்களின் மேற்கூரைகளை எல்லாம் கீழே சரித்தனர். திண்ணைகளிலும் முற்றத்திலும் இருக்கும் பெரும்பெரும் கட்டைகளைப் பொருத்தமான இடைவெளிகளில் போட்டு நிரப்பினர். மீண்டும் மீண்டும் வந்து என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லியபடியே தாக்குதல் தொடுக்க கிழக்குமுனைக்கு ஓடினான் நீலன்.

வேட்டுவன்பாறையின் மந்தையைச் சுற்றி பெரும்வட்டத்தில் கூரைகளையும் மரங்களையும் கட்டைகளையும் கொண்ட ஓர் அரணை உருவாக்கிய பிறகு, எல்லோரையும் உள்ளே வரச் சொன்னான் நீலன். வேட்டுவன்பாறையைச் சேர்ந்த எஞ்சிய வீரர்கள் எல்லோரும் உள்ளே வந்த பிறகு எல்லா திசைகளிலும் ஒரே நேரத்தில் தீயிட்டான். தீக்கங்குகள் வெடித்து மேலேறத் தொடங்கின. பாறைச் சரிவுகளின் வழியே மூன்று பக்கங்களிலிருந்து மேலேறிய வேந்தர்படை, வேட்டுவன்பாறை முழுக்க குடில்கள் தீப்பிடித்து எரிவதைப் பார்த்துத் திகைத்து நின்றது. `எதிரிகள் தனது கைகளில் சிக்காமல் குடில்களுக்கு தீவைத்துவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்’ என நினைத்தான் கருங்கைவாணன். எந்தத் திசையிலிருந்தும் ஊருக்குள் நெருங்க முடியவில்லை. கூரைகளில் பற்றிய நெருப்பு, பெருங்கட்டைகளைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது.

உயிரோடு மிஞ்சிய வேட்டுவன்பாறை வீரர்கள் வளையத்துக்குள் ஒன்றுகூடினர். ஊர்தோறும் தீக்களியை தாழி நிறைய சேகரித்து வைத்திருப்பது பறம்பின் வழக்கம். இடதுதோளிலும் காலிலுமாக இரு அம்புகள் தைத்த நிலையிலும் இயங்கக்கூடிய திறனோடு இருந்தான் சோமக்கிழவன். அவன்தான் தீக்களியை நீர்விட்டு பிசைந்து எஞ்சியிருக்கும் எட்டு வீரர்களின் உடலில் பூசினான். தீ நன்றாகப் பற்றி நாலாபுறமும் சீறி எரிவது வரை அவர்கள் காத்திருந்தனர். யார் யார் எந்தத் திசையின் வழியே வெளியேறிச் சென்று தாக்க வேண்டும் என வழிகாட்டினான் நீலன்.

வேந்தர்படை அடுத்து என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் நின்றிருந்தபோது, நெருப்பைப் பிளந்துகொண்டு பறம்புவீரர்கள் வெளிப்பட்டனர். இரண்டு கைகளிலும் இரு வாள்களை ஏந்தியபடி படைக்குள் தாவிய அவர்கள், மின்னல் வேகத்தில் சிக்கியவர்களை எல்லாம் வெட்டிச் சரித்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் புகுந்து மறைந்தனர். நடுங்கிப்போனது வேந்தர்படை. நெருப்பைப் பிளந்து எதிரிகள் வெளியேறி வந்து தாக்குதல் தொடுக்கின்றனர் என்பதை யாராலும் நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை. இரு வாள்களோடு வெளிவந்த நீலன், கண நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டோரை சீவியெறிந்துவிட்டு மீண்டும் தீக்குள் புகுந்தான்.

வீரர்களின் பேரோலத்தைக் கேட்டு ஓடிவந்தான் கருங்கைவாணன். ``நெருப்புக்குள்ளிருந்து வெளியேறி வந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் உள்ளே போய்விடுகின்றனர்’’ என்று மற்ற வீரர்கள் தெரிவித்தனர். மிரண்டுபோய்ப் பார்த்தான் கருங்கைவாணன். எல்லா திசைகளிலும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ``உள்ளே போனவன் எந்த வழியில் போனான்?’’ எனக் கேட்டான் கருங்கைவாணன். உடன் இருந்த வீரர்கள், அவன் தாக்குதல் நடத்தித் திரும்பிய இடத்தைக் காண்பித்தனர். மனிதன் நுழைந்து வெளியேறும் அளவுக்கு அந்த இடத்தில் நெருப்பு சிறுத்து எரிகிறதா என, சற்றே உற்றுப்பார்த்தான் கருங்கைவாணன். ஆனால், ஆள் உயரத்துக்கு மேலாக நெருப்பின் கீற்றுகள் மேலெழுந்து கொண்டிருந்தன. இதற்குள்ளிருந்து எப்படி வெளிவந்து மீண்டும் உள்ளே போக முடியும் என்பது புரியாத குழப்பத்தில் மிரண்டு நின்றான்.

தாக்குதல் நடத்திவிட்டு வீரர்கள் உள்ளே வந்ததும், அவர்கள் வந்த நெருப்பின் தடத்துக்குள் ஏற்கெனவே ஆயத்தநிலையில் இருந்த வீரர்கள் மிளகுக் குடுவையை உருட்டிவிட்டனர். குடுவையில் தீப்பொறி பட்டவுடன் சூடேறும். கண நேரத்தில் பெரும்சத்ததோடு வெடிக்கும். வெடிப்புற்ற கணம் மேலே கிடக்கும் கட்டைகளையே தூக்கிவீசும். நெருப்புக் கங்குகள் எல்லா பக்கங்களிலும் தெறிக்கும். நீலன் நெருப்புக்குள் நுழைந்த இடத்தை கருங்கைவாணன் உற்றுப்பார்த்தபோதுதான் மிளகுக்குடுவை வெடித்துச் சிதறியது. முகமெல்லாம் கங்குத்துளிகள் தெறித்துவிழ துடித்துப்போனான் கருங்கைவாணன்.

உடனடியாக கருங்கைவாணனுக்கு மற்றவர்கள் உதவிக்கொண்டிருந்தபோது, சற்று தொலைவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிவந்த வீரன் ஒருவன் இரு வாள்களைக்கொண்டு வெட்டிச் சரித்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான். வேந்தர்படை உறைந்து நின்றது. எதிரிகள் தாக்குதலை எந்தத் திசையிலிருந்து எப்படி நடத்துகின்றனர் என்பது புரியாதபுதிராக இருந்தது. வடக்குப் பக்கத்தில் நெருப்பைப் பிளந்து வெளியேறும் மனிதர்களைக் கண்டவுடன் துடிச்சாத்தன் செயலற்று நின்றான்.

வெளியேறியவர்களின் வாள்வீச்சில் குருதி பொங்கித் தெறித்தது. நெருப்பின் சீற்றத்தினூடே குருதியைக் குடித்தபடி வாள்கள் மீண்டும் தீப்பிழம்புக்குள் நுழைந்து மறைந்தன.

`மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட செயலை பறம்புவீரர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். இனியும் தாம் இங்கு இருப்பது எந்த வகையிலும் நல்லதன்று’ எனச் சிந்தித்த துடிச்சாத்தன், கருங்கைவாணனை நோக்கி விரைந்தான். வீரர்கள் சுற்றி நிற்க நெருப்பைவிட்டு மிகவும் தள்ளி பாறை ஒன்றின் மேல் கருங்கைவாணன் அமர்ந்திருந்தான். அவனது முகத்தை துணிகொண்டு மூடி இளைப்பாறச் செய்துகொண்டிருந்தனர்.

தாக்குதல் நடத்திவிட்டு உள்ளே வரும் வீரர்களின் உடலில் தீக்களி காய்ந்தோ, உதிர்ந்தோபோயிருந்தால், மீண்டும் தீக்களியைப் பூசி தாக்குதலுக்கு ஆயத்தம் செய்யும் வேலையைச் செய்துகொண்டிருந்தான் சோமக்கிழவன். நீலன், புங்கன், மேலும் இருவர் என நான்கு பேர்தான் தீக்களி பூசி இரு வாள்கள் ஏந்தி எதிரிகளை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தனர். மற்ற மூவரும் மிளகுக்குடுவையை நெருப்புக்குள் இங்கும் அங்குமாக வீசியெறிந்துகொண்டிருந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 85

என்ன நடக்கிறது என எதிரிகள் அறியும் முன், பறம்புவீரர்கள் நால்வரும் ஐந்து முறைக்கும் மேலே சென்று தாக்கிவிட்டு மீண்டும் நெருப்புக்குள் திரும்பியிருந்தனர். ஒவ்வொரு வீரனும் பத்துக்கும் மேற்பட்டோரை வெட்டிச்சாய்த்திருந்தான். நீலனின் தாக்குதலில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் சரிந்திருப்பர். நெருப்பெங்கும் வடியும் குருதியோடு வாளை சூடாக்கிக் கொண்டேயிருந்தனர் பறம்புவீரர்கள்.

முகமெல்லாம் மிளகுப்பொறி பட்டு சுட்டுக்கருகியபோது துடித்துக் கத்தினான் கருங்கைவாணன். ஆனாலும் அவனது இலக்கை விட்டு திரும்பிச் செல்ல அவன் ஆயத்தமாக இல்லை. நெருப்பின் வட்டத்துக்குள்ளிருந்து எப்படி இவர்கள் வெளிவருகின்றனர்; நெருப்பின் சூட்டை இவர்கள் எப்படி தாக்குப்பிடிக்கின்றனர் என எதுவும் புரியவில்லை. வேந்தர்படை வீரர்கள், வெடித்துச் சிதறும் நெருப்பின் பொறி கண்டு அஞ்சி இருளுக்குள் பதுங்கினர். ஆனாலும் ``நெருப்பைவிட்டு அகலாமல் நில்லுங்கள்’’ என்று வீரர்களை நோக்கி மீண்டும் மீண்டும் கூறினான் கருங்கைவாணன்.

வள்ளிக்கானத்தில் நாகசம்பங்கியின் தேறல் தேள்போல் கொட்டி உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. துடியும் முழவும் பறையும் அடர்காட்டை உலுக்கின. பெண்கள் களிவெறிகொண்டு ஆடினர். பெருங் கூக்குரலினூடே இருளைக்கிழித்து பெண்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, நெருப்பைப் பிளந்து வாள் ஏந்தி ஆடிக்கொண்டிருந்தனர் ஆண்கள். இருவிதமான ஓசைகள் காரமலையின் இரு இடங்களிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன.

கலங்கிப்போய் வந்த துடிச்சாத்தனிடம் நம்பிக்கைகொடுத்து, தாக்குதலுக்கான வழிமுறைகளைப் பற்றிப் பேசினான் கருங்கைவாணன். பறம்புவீரர்கள் நடத்தும் இந்தத் தாக்குதலால் சிலர்தான் வெட்டுப்பட்டு சாகின்றனர். ஆனால், மனித முயற்சிக்கு அப்பாற்றபட்ட அவர்களின் இந்தச் செயலால் வீரர்கள் எல்லாம் நம்பிக்கை இழந்து மிரண்டு நிற்கின்றனர். `பறம்பினரை ஒன்றும் செய்ய முடியாது. தீயின் தேவதை அவர்கள் பக்கம் நிற்கிறாள்’ என வீரர்கள் கருதுவதாகவும் ``வேந்தர்படை, விரைவில் இந்த இடம்விட்டு நகர்வது நல்லது’’ எனவும் துடிச்சாத்தன் கூறினான்.

முகத்தில் நெருப்புப்பொறி பட்டபோதுகூட இப்படிக் கத்தவில்லை. இப்போது கத்தினான் கருங்கைவாணன். ``நான் வந்த வேலையை முடிக்காமல் திரும்பினால் மூவேந்தர்களின் பெரும்படைக்குத் தலைமைதாங்கும் தகுதியை இழந்தவனாவேன். எனது உயிரே போனாலும் வெற்றிகொள்ளாமல் இந்த இடம்விட்டுத் திரும்ப மாட்டேன்” என நரம்பு புடைக்கக் கத்தினான்.

``எதிரிகளைக் கண்டு அஞ்சாதீர்கள். அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான். நெருப்புக்குள் நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியாது. விரைவில் வெளிவந்துதான் தீரவேண்டும். அந்தக் கணத்துக்காகக் காத்திருப்போம். உரிய நேரத்தில் ஒன்றுபட்டு தாக்குதல் தொடுத்தால் அவர்களை வீழ்த்திவிட முடியும்” என்று பாறையின் மீது நின்று முழங்கினான் கருங்கைவாணன்.

கட்டைகள் வெடித்து நெருப்புப்பொறிகள் எங்கும் சிதறிக்கொண்டிருந்தன. ``வீரர்களே... நெருப்பைவிட்டு மிகவும் தள்ளி நில்லுங்கள். அவர்கள் எவ்விடம் வெளியில் வருகிறார்களோ, அவ்விடம் அம்பு எய்தித் தாக்குங்கள். வாளால் தாக்க முயலாதீர்கள்” என்று வடப்புறமாகக் கத்திவிட்டு, தென்புறம் திரும்பினான் கருங்கைவாணன். கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியில் வந்து, மூவரின் தலைகளைச் சீவியெறிந்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான் நீலன்.

நெருப்பைக் கிழித்து வெளிவரும் கணத்திலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்தான் கருங்கைவாணன். தீச்சுடரே நீண்டுவந்து தலைகளைச் சீவிச்செல்வது போல இருந்தது. நீலனை நன்கு அடையாளம் தெரிந்த இருவரும் எந்நேரமும் கருங்கைவாணனின் அருகிலே இருந்தனர்.

பெருவட்டத்தில் நிலைகொண்டு எரிந்த நெருப்பிலிருந்து எந்தத் திசையிலும் வெளியேறி தாக்கிக்கொண்டே இருந்தனர். கருங்கைவாணன் அந்த வட்டம் முழுவதும் சுற்றியபடி வீரர்களிடம் நம்பிக்கையூட்டினான். ஆனால், அவன் உருவாக்கும் நம்பிக்கைகள் நெருப்பைப் பிளக்கும் மனிதர்களால் கணநேரத்தில் எரியூட்டப்பட்டன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 85

ஆனாலும் விடாது முயன்றபடி அங்கும் இங்குமாக ஓடினான் கருங்கைவாணன். நெருப்புக்குள் மூங்கில்கட்டைகள் வெடிப்புற்று தெறித்தபோது, தெறிக்கும் நெருப்புக் கொப்புளங்களுக்குள்ளிருந்து வெளிவந்தான் நீலன். அவன் எதிரில் வாளேந்திய கையை உயர்த்தினான் துடிச்சாத்தன். நீலனின் வாள்வீச்சின் வேகம் துடிச்சாத்தனின் கழுத்தில் குறுக்கிட்டு இறங்கியது.

தெறித்த குருதி மண்ணில் விழும் முன் நெருப்பைப் பிளந்து அந்தப் பக்கத்தை அடைந்தான் நீலன். உருண்டு வந்த துடிச்சாத்தனின் தலை, கருங்கைவாணனின் காலில் வந்து முட்டி நின்றது. ஒரு கணம் அப்படியே நின்றான் கருங்கைவாணன். அருகில் இருந்தவன் சொன்னான், ``தாக்கிச்சென்றது நீலன்.”

எந்தத் திசையிலிருந்தெல்லாம் பறம்பினர் வெளிவருகிறார்களோ, அந்தத் திசையில் எல்லாம் வேந்தர்படையினர் விலகியிருந்து அம்பு எய்தனர். நெருப்பைப் பிளந்து வெளியேறியவர்களின் உடல்களில் அம்புகள் தைக்கத் தொடங்கின. உள்ளிருந்து தாக்குதல் தொடுத்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழத் தொடங்கினர். ஆனாலும் நீலனின் வேகம் குறையவேயில்லை. நெருப்புக்கு வெளியேயிருந்து தாக்குதல் தொடுப்பவர்கள் மிகவும் விலகி நிற்கிறார்கள் என அறிந்து, அதற்கு ஏற்ப தாக்குதல் திட்டத்தை மாற்றுங்கள் என நீலன் சொன்னபோது, புங்கன் ஈட்டியால் குத்தப்பட்டு நெருப்புக்குள் இருந்து வெளிவர முடியாமல் சாய்ந்தான். எது கண்டும் கலங்கும் நிலையில் நீலன் இல்லை. அவனோடு எஞ்சிய வீரர்கள் இருவர் மட்டுமே.

அவர்களுக்கும் தீக்களியைப் பூசிக்கொண்டிருந்தான் சோமக்கிழவன். நெருப்புக்கு அப்பால் எந்தத் திசையில் சென்று தாக்கலாம் என நெருப்பின் கீற்றுகளை நீலன் பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் காற்று அதிரக் கேட்டது காரிக்கொம்பின் ஓசை.

ஒரு கணம் மனதுக்குள் மின்னல்வெட்டியதைப்போல மகிழ்ச்சி பூத்தது. இரண்டாம் குன்றுக்கு அப்பால் வரும்போதே வேட்டூர்பழையன் காரிக்கொம்பை ஊதச் சொல்லிவிட்டான். `நாங்கள் அருகில் வந்துவிட்டோம்’ என்று சொல்வதற்கான ஓசை அது. காரிக்கொம்பின் ஓசை கேட்ட கணம் உற்சாகம் பீறிட வெறிகொண்டபடி நெருப்பைப் பிளந்துகொண்டு வெளிவந்தான் நீலன். நெருப்பைவிட்டு விலகி நின்றிருந்த எதிரிகளின் மீது மூன்று ஈட்டிகளை எறிந்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான்.

அவனது வருகையை எல்லா திசைகளிலும் எதிர்பார்த்திருந்த கருங்கைவாணன், கண்ணெதிரே வந்து திரும்பும் நீலனைப் பார்த்தவுடன் தனது கைநரம்பே அறுந்து கொண்டுபோவதைப்போல வீசினான் ஈட்டியை. நெருப்புக்குள் நுழைந்த நீலனின் வலது பின்னங்கால் தொடையில் இறங்கியது ஈட்டி. நெருப்போடு சாய்ந்தான் நீலன். ``அவனை வெளியே இழுங்கள்” எனக் கத்தியபடி அருகில் ஓடிவந்தான் கருங்கைவாணன்.

இரு குன்றுகளுக்கு அப்பாலிருந்து எரியும் நெருப்பைப் பார்த்தபடி என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்ள முடியாமல் பதற்றத்தோடு குதிரையை விரட்டிவந்தான் வேட்டூர்பழையன். அவனோடு படையணி வீரர்கள் அனைவரும் படு ஆவேசத்தோடு வந்துகொண்டிருந்தனர். ``காரிக்கொம்பை விடாம ஊது’’ என்று சத்தம்போட்டபடி குதிரையை விரட்டினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 85

இரண்டு குன்றுகளையும் தாண்டி வேட்டுவன்பாறைக்குள் நுழையும்போது கிழக்கின் ஒளிக்கீற்று மெள்ள மேலெழுந்துகொண்டிருந்தது. தீயின் நாக்குகள் இங்கும் அங்குமாக எரிந்துகொண்டிருந்தன. மனிதர்கள் யாரும் உயிருடன் இருப்பதுபோல் தெரியவில்லை, `நீலன்... புங்கன்...’ என ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கத்தியபடி எங்கும் ஓடினான் வேட்டூர்பழையன். வீரர்கள், நான்கு திசைகளிலும் தேடித் தவித்தனர்.

நெருப்புக் கட்டைகளுக்கு நடுவே கரிக்கட்டைகளாக சிலர் கிடந்தனர். இரு பக்கங்களிலும் குருதியில் மிதந்தபடி எண்ணற்ற உடல்கள் கிடந்தன. குன்றின் சரிவு முழுக்க வேந்தர்படைவீரர்கள் மாண்டுகிடந்தனர். ஒருவன் சத்தம்போட்டு வேட்டூர்பழையனை அழைத்தான். அவன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான் வேட்டுர்பழையன். வீட்டின் மண்சுவர் ஓரம் குற்றுயிராய்க் கிடந்தான் சோமக்கிழவன்.

பழையனைப் பார்த்ததும் கீழ்ப்புறமாகக் கையை நீட்டி, ``அவர்கள் நீலனைக் கொண்டுசெல்கின்றனர்” என்றான்.

கிழக்குத் திசையில் நீலனின் குடில் இருந்த முனைப்பகுதிக்கு வந்து பதற்றத்தோடு பார்த்தான் வேட்டுர்பழையன். காலைக்கதிரவன் மேலெழுந்துகொண்டிருந்தான். வேட்டுவன்பாறையின் அடிவாரத்திலிருந்து வேந்தர்படைவீரர்கள் குதிரைகளில் புறப்பட்டனர்.

முன்னால் போய்க்கொண்டிருந்த தேரில் கிடத்தப் பட்டிருந்த நீலன் பெருங்கயிறுகளால் கட்டப்பட்டிருந்தான். அந்தத் தேரின் முன்நிலையில் நின்றுகொண்டிருந்த கருங்கைவாணன் உடலெல்லாம் குருதிகொட்ட, முகமெல்லாம் மகிழ்வு பூக்க ஆவேசக்குரல் எழுப்பியபடி தேரைச் செலுத்தினான்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...