Published:Updated:

அன்பும் அறமும் - 14

அன்பும் அறமும் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 14

சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்

ண்பர் ஒருவருடன் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, ஆட்டோ ஒன்றை நிறுத்தினேன். ஆட்டோக்காரர் கேட்ட தொகைக்கு மறுப்பு எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்ததைப் பார்த்த நண்பர், பொங்கிவிட்டார். அவருடைய சிவந்த முகத்தில் கோபம் கொப்புளித்தது. ``என்னப்பா இது பழக்கம்... இந்தா இருக்கிற திருவல்லிக்கேணிக்கு அவர் ஐந்நூறு ரூபாகூட கேட்பார். பேரமே பேசாம ஏறி உட்கார்ந்திருவியா? நீ பேரம் பேசுறது உனக்காக இல்லைப்பா... உன்னை மாதிரி பின்னாடி வர்றவங்களுக்காக” என்றார். அதன் பிறகு, `பேரம் பேசாமல் எதையுமே வாங்குவதில்லை’ என உறுதி எடுத்துக்கொண்டேன்.

`பேரமே பேசக் கூடாது’ என்ற ஒரு வாழ்வியல்முறையை இங்கு வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பேரம் பேசுவது அசிங்கம் என நினைக்கும் ஒரு கூட்டமும் உருவாகிக்கொண்டிருக்கிறது. அவர்கள் உலவும் உலகில், பேரங்களுக்கு இடமே இல்லை. அது ஒரு தனி உலகம். அதன் விதிகள், அந்த உலகத்துக்குள் இல்லாதவர்களுக்குப் பொருந்தாது. அதன் ஆட்ட விதிகள் வேறு; அந்த உலகத்துக்கு வெளியே வாழ்பவர்களின் விதிகள் வேறு. அவர்களை விட்டுவிடலாம்.

அன்பும் அறமும் - 14

தமிழரின் வாழ்வில், `பேரம்’ என்பதற்கு உயரிய இடம் இருந்தது. காசிமேட்டில் அதிகாலையில் மீன் ஏலம் எடுப்பதற்காகக் காத்திருந்தேன். அந்த இருள் பிரியும் கடற்காற்றிலும் ஏலம் சூடாக நடக்கும். நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். பேரத்தில், அவர்கள் முறை தவறியதில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் கட்டையைப் போட்டு விதிகளைத் தாண்டிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலானோர், நூல் பிடித்த மாதிரி பேரத்தில் நேர்மையுடன் இருப்பார்கள்; `பேர வணிகம்’ என்ற பெயரில் எல்லோருடைய குரல்வளையையும் கடிக்கிறவர்களாக இருக்க மாட்டார்கள்; தமிழ் வணிகத்தின் அடிப்படையான விற்கும்/வாங்கும் சக்தியை ஒன்றிணைக்கும் நியாய பேரத்தில் ஈடுபடுவார்கள். எதற்குப் பேரம் பேச வேண்டும், எதற்குப் பேரம் பேசக் கூடாது என்ற விதிகளை நன்றாக அறிந்த கூட்டம் அது.

சப்வேயில் கடை போட்டிருக்கும் மனிதர்களிடமும், கறிகாய் விற்கும் எளிய மனிதர்களிடமும் உரக்க பேரம் பேசுவோம். ஆனால், மால்களில் பேரம் பேசாமல் வாயைப் பொத்திக்கொண்டு வாங்கி, கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வருவோம். எஸ்கலேட்டரில் நமக்குப் பின்னாடி நம்முடைய இயலாமையும் சேர்ந்து இறங்கும். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நான் சென்னைக்கு முதன்முதலில் வரவிருந்தபோது, ``பர்மா பஜார்ல ஒரு கண்ணாடியை நூறு ரூபா சொல்வாங்க. நீ பத்து ரூபாய்க்குத் தருவியான்னு கேளு” என்று சொல்லி அனுப்பினார்கள். பின்னாளில், அடிவாங்காமல் தப்பிப்பதே பெரும்பாடாகிப்போனது.

பேரம் என்பது, ஒருவரிடமிருந்து அடித்துப் பிடுங்குவதல்ல; விவசாயிகள் வீழ்ந்து கிடக்கும்போது, கழுத்திலேயே மிதித்து `இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ கத்திரிக்காய் தா!’ என்று பறிப்பதல்ல; விற்பவனுக்கும் பாதகம் இல்லாமல், வாங்குபவனுக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஒரு வணிகத்தை முடித்துவைக்கும் ஓர் ஒப்பந்தம்.

இடிந்தகரையில் அண்ணன் ஒருத்தர் கடற்கரைக்கு என்னை அழைத்துப்போனார். வல்லத்தில் பிடித்த மஞ்சள் பாறை மீன் ஒன்றைக் கொண்டுவந்து தரையில் போட்டார்கள். அதை ஏலத்தில் எடுக்க பெரிய கூட்டமே இருந்தது. ``சொந்த உபயோகத்துக்கு எடுக்கிறேன்பா. வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க” என்றார் அந்த அண்ணன். அவரும் மீனவர்தான். ஏலம் கேட்க வந்த மற்றவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். அண்ணனுக்கும் விற்பவருக்கும் இடையில் மட்டும் நூல் பிடித்து மேலேறி வந்தது பேரம். சொந்த உபயோகம் என வரும்போது ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்கிற நாகரிகம்சார்ந்த மனம், தமிழ் வணிகத்தினுடையதே! அது, கண்ணுக்குத் தெரியாத நல்விதிகள் பலவற்றைப் போட்டுவைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் வணிகக் காற்றில் விசிறியடித்துவிட்டோம். சூறாவளி வணிகத்தில் சூட்சுமங்களும் காணாமல்போய்விட்டன.

அன்பும் அறமும் - 14


தி.நகர் ரயில்வே பிளாட்பாரத்தில் ஊறுகாய் விற்பவரிடம், `இருபது ரூபாய்க்குத் தருவீங்களா?’ என்று ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார். எலுமிச்சைப்பழம் விலையே 120 ரூபாய்க்குமேல் போய்க்கொண்டி ருக்கிற காலத்தில் இப்படியான தரைமட்ட பேரம் கட்டுப்படி யாகுமா? அந்த ஊறுகாய் வியாபாரியும் இரட்டிப் பாகத்தான் சொன்னார். பொருளின் உண்மையான நியாயமான விலை இருவருக்குமே தெரியும். ஆனாலும் இரண்டு சீட்டு மூன்று சீட்டு விளையாடுவதைப்போல ஒரு வியாபாரத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.

குட்டி நாடு ஒன்றுக்கு மருந்து மாத்திரைகளை ஏற்றுமதி செய்யும் வணிக வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. நகரின் புகழ்பெற்ற மருந்து உற்பத்தி மையத்திடம் மருந்துகளை வாங்கி ஏற்றுமதி செய்வதான ஏற்பாடு. அவர்கள் கொடுத்த விலைப்பட்டியலை அந்த நாட்டு மருத்துவத் துறைக்கு அனுப்பிவைத்துவிட்டு, அடியில் `நெகோஷியபிள்’ என உற்சாகமாகப் போட்டு அனுப்பினோம்.

முகத்தில் துப்புகிற மாதிரி ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பதில் வந்து விழுந்தது, `முதலில் நியாயமான விலையைப் போடுங்கள். அதுதான் பேரத்துக்கு அழைப்பதற்கான முதல் நிலை. அதையே நீங்கள் செய்யாமல் விலையை  கண்டபடி போட்டு அனுப்பிவிட்டு பேரத்துக்கு அழைத்தால் எப்படி?’ படித்த மேல்தட்டு வர்க்கமே பேர விதிகளைத் தூக்கித் தூரத்தில் எறிந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன்.

என் பார்வையில் அந்த ஆட்டோ டிரைவருக்கும், ஊறுகாய் வியாபாரிக்கும், உயர் மருந்துக் கம்பெனி உரிமையாளருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லோருமே தமிழ் வணிகத்தின் பேர விதிகளை மீறியவர்கள்தான்.

``உலக அரங்கில் `இந்தியர்கள், பேரங்களில் முறைதவறுகிறவர்கள்’ என்கிற அழுத்தமான ஒரு பார்வை இருக்கிறது. விலையைக் கூட்டிச்சொல்வார்கள். இல்லாவிட்டால், தரைமட்ட விலைக்கு விவரம் புரியாமல் கேட்பார்கள்’’ என்றார் சிங்கப்பூர் வணிகர் ஒருத்தர். சமூகத்தை இரண்டாகப் பிரித்தால், இந்த இரண்டு பிரிவினரைத்தான் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் தூக்கிப் போட வேண்டும். இவர்கள் வணிகத்தில் மட்டுமா இருக்கிறார்கள்... வாழ்க்கையிலும்தான்!

பெண் பார்க்கும் படலம் ஒன்றுக்கு, சமீபத்தில் சென்றிருந்தேன். இந்தக் காலத்திலும்கூட மாட்டை விற்கப் பேரம் பேசுவதைப்போலப் பேசிக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் மிகக் கொடுமையான நியாயமற்ற பேரம். கொடுக்க முடியாததைக் கேட்கும் பேரம். வெறுத்துப்போய் போன் பேசுகிற சாக்கில் வெளியே ஓடி வந்துவிட்டேன்.

ஒரு சமூகமே இப்படிப் பேரம் பேசத் தெரியாமல், `பேரம்’ என்ற பெயரில் கேட்கக் கூடாததைக் கேட்டுக்கொண்டிருப்பது விந்தையிலும் விந்தை! இத்தனைக்கும், உலக வணிகத்தில் மிகச் சிறந்த பேரங்களை நிகழ்த்திய சமூகம் அது. பேரமே பேசாமலும், பேரம் என்றால் என்ன என்பதே தெரியாமலும் ஒரு கூட்டம் அதே சமூகத்தில் உருவாகிக்கொண்டி ருக்கிறது.  யோசித்துப்பாருங்கள், எங்கேயாவது எப்போதாவது பதற்றப்படாமல் குற்றவுணர்வு இல்லாமல் சமீபத்தில் எதையாவது பேரம் பேசியிருக்கிறீர்களா?

அலுவலகம் ஒன்றில் இளைஞர் ஒருவருக்கு மிகக் குறைந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அவர் பேரம் பேசவில்லை. ஆனால், அந்த நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்துக்குச் செல்லும் வரை அந்த நிறுவனத்துக்கு எதிராக சம்பளம் வாங்கிக்கொண்டு செயல்பட்டார். மனம் உவந்து அவர் ஒருநாள்கூட வேலை பார்க்கவில்லை.

மிகச்சிறந்த கல்லூரிகளில், இப்போதெல்லாம் மாணவர்களுக்கு இயல்பாகவே பேரம் பேசச் சொல்லித்தருகிறார்கள். ஆனால், கொஞ்சம் பின்தங்கிய பகுதிகளிலிருந்து வருகிறவர்கள், இது மாதிரி தலையாட்டி வைத்துவிட்டு, பிற்பாடு இப்படி உளச்சிக்கல்களுடன் சுற்றிக்கொண்டி ருக்கிறார்கள். உயரிய நோக்கங்கள்கொண்ட அந்த நிறுவனமும் அவருக்கான நியாயமான ஊதியத்தை வழங்கியிருக்கலாம். இங்கேதான் எல்லோரும் தவறுகிறார்கள். அந்த ஆட்டோக்காரரும் நானும் இந்த நகரங்கள் எங்கும் நிறைந்திருக்கிறோம்.

இன்னொரு கோணத்தில் சொல்வதென்றால், சமூகத்தில் நீதிவேண்டி நமக்காகப் பேரம் பேசுபவர்களை எப்போதும் ஒதுக்கிக்கொண்டு தான் இருக்கிறோம். எதற்காகவும் நாம் கேட்க மாட்டோம். நமக்காகக் கேட்பவர்களையும் புறம் தள்ளுவோம் என்கிற மனநிலை வந்துவிட்டது. எதில் மீட்டெடுக்கிறோமோ இல்லையோ, வணிகத்தில் மட்டுமாவது அதன் அடிப்படை விதிகளை மீட்டெடுக்கலாம் எனத் தோன்றுகிறது. தமிழ் வணிகம் குறித்து உரக்கப் பேசவேண்டிய தருணம் இது. பேரம் என்பது, வெறும் வணிகம் மட்டுமல்ல; எங்கே எதைப் பேச வேண்டும் என்பதைச் சுட்டும் கலையும்கூட. அதைக் கற்றுக்கொள்கிறவர்கள், வாழ்வில் சிக்கலில்லாமல் ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் எதையும் சுகிப்பர்!

- அறம் பேசுவோம்!