மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்

தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்

சூரியன் ஒவ்வொரு நாளும் புதியது - ஹீராக்ளிட்டஸ்

2018-ம் ஆண்டு பிறந்ததுமே, நல்லதொரு சந்திப்பும் நல்லதொரு திட்டமும் கிட்டின. ‘நூல்வனம்’ மணிகண்டனும் ‘கருத்துப்பட்டறை’ பரமனும் சந்திக்க வந்திருந்தனர். “முக்கியமான, இதுவரை வெளிவராத நூலைக் கொண்டுவர வேண்டும்” என்ற தன் ஆசையை மணிகண்டன் சொன்னார். “தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியமான நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் போன்ற வடிவங்கள் தமிழில் ஏராளமாக வெளிவந்துவிட்டன. அவரது நாட்குறிப்புதான் இதுவரை வெளிவரவில்லை” என்றேன். “தமிழாக்கம் செய்துகொடுங்கள், வெளியிடுகிறோம்” என்றார் மணிகண்டன். 

தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்

‘The Diary of a writer’ எனும் தலைப்பில் வெளியான போரிஸ் ப்ராஸலின் முதல் மொழியாக்கம் (1949) இரண்டு தொகுதிகளும், ‘A writer’s Diary எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்ட கென்னத் லாண்ட்ஸினுடைய பிரதியும் (1993) எஸ்.ராமகிருஷ்ணனிடமிருந்து உடனே கிடைத்தது உற்சாகத்தைத் தந்தது. படித்துப் பார்த்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள மூன்று மாதங்கள் பிடித்தன.

பொதுவான நபர்களின் நாட்குறிப்பு என்பது, அன்றைய நாளின் முக்கியமான நிகழ்வுகளைப் பதிவுசெய்துவைப்பது என்பதாக இருக்கும். பின்நாள்களில்  நினைவுபடுத்திப் பார்க்க வசதியாயிருக்கும் என்பதால், அதில் சில ரகசியப் பதிவுகளும் இருக்கக்கூடும். ஆனால், எழுத்தாளர்களின் நாட்குறிப்புகள், அவர்களது எண்ண ஓட்டங்களோடு அவர்களின் படைப்புகளுக்கான குறிப்புகளையும் கொண்டிருக்கும். காஃப்காவினுடைய குறிப்புகளைப்போல. 

தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்



தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு  இந்த இரண்டிலிருந்தும் வேறானது. இது அவர் தனிப்பட்ட முறையில் எழுதி வைத்ததில்லை. ஒரு மாத இதழாக வெளிவந்தது. முதலில் ‘தி சிட்டிசன்’ இதழில் பத்திகளாக இடம்பெற்று பிறகு, தனி இதழாகவே தஸ்தாயெவ்ஸ்கியால் நடத்தப்பட்டது. வெளியீட்டாளர், ஆசிரியர், எழுதுபவர் ஆகிய மூவரும் அவரே. 1873 முதல் 1881 வரை வெளிவந்தது.

மாதாமாதம் வெளிவந்து ஆண்டு முடிவில் தொகுப்பாக வர வேண்டும் என்பது தஸ்தாயெவ்ஸ்கியின் எண்ணம். இதில் புனைவுகள், கேலிச்சித்திரங்கள், விமர்சனங்கள், அரசியல் பிரச்னைகள், விவாதங்கள், படித்தவை, பார்த்தவை,  கேள்விப்பட்டவற்றின் பதிவுகள் என எல்லாம் உண்டு. இலக்கியத்தில் இது புது வடிவமாகவே கருதப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிக்கொண்டிருந்த ‘கரமஸோவ் சகோதரர்கள்’ நாவலைச் சற்று நிறுத்திவைத்துவிட்டு, இந்த இதழை நடத்தியிருக்கிறார். ‘அவரது நாவல்கள், கதைகளைவிடவும் நாட்குறிப்பில்தான் அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படுகிறது’ என்கிறார் கென்னத் லாண்ட்ஸ்.

நாட்குறிப்பில் என்னவெல்லாம் உள்ளன?

ஒருநாள் தெருவில் பொறுக்கிப்பையன் ஒருவனைக் கவனித்து, அவனைப் பின்தொடர்ந்து சென்று, அவன் குடும்பம் தங்கியுள்ள நிலவறைக்குப் போய்ப்
பார்க்கிறார். அந்தக் குடும்பத்தினரின் வறுமை கண்ணில்படுகிறது. இவன் ரகசியமாக மது வாங்கி வருகிறான். இந்த விஷயத்தின் தாக்கம் தொடர்ந்து மனதில் இருக்கவே, அந்த நகருக்கு அருகில் உள்ள இளம் குற்றவாளிகள் குடியிருப்பைப் போய் பார்க்கிறார். எங்கும் எதற்கும் அடங்காத இருவரை தனித்தனிக் கொட்டடிகளில் அடைத்துவைத்திருக்கின்றனர். என்ன காரணங்களால் இவர்கள் தண்டிக்கப் பட்டனர், இப்போது எந்த அளவு மாறியுள்ளனர் என்று பரிசீலிக்கிறார். நிறைய தற்கொலைகள் நடக்கின்றன. அவற்றைப் பதிவுசெய்கிறார். குழந்தையின் கையில் வெந்நீரைக் கொட்டித் தண்டிக்கும் தாய், மனைவியை சதா அடித்துத் துன்புறுத்தி இறுதியில் கொன்றுவிடும் கணவன் என்றெல்லாம் தொடர்ந்து வெளியாகும் குற்றச் செய்திகளைக் கவனித்துவருகிறார்.

1876-ல் விசித்திரமான வழக்கொன்று, கர்ப்பிணியாக இருக்கும் 20 வயதுப் பெண், தன் வளர்ப்புக் குழந்தையை நான்காவது மாடியிலிருந்து வீசிக் கொல்ல முயல்கிறாள். கணவன், தன் முதல் மனைவியைப் பற்றிப் பெருமையாகப் பேசி, இவளைத் திட்டுவதும் அவமதிப்பதுமாக இருக்க, ஒருநாள் அவனைத் தண்டிப்பதாக, முதல் மனைவிக்குப் பிறந்திருந்த குழந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறாள். உடனே, காவல் நிலையம் சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறாள். அதுவே புகாராகி, இரண்டரை ஆண்டுகள் சைபீரிய வாசத்தை அவளுக்குத் தண்டனையாகப் பெற்றுத்தருகிறது.குற்றமிழைத்தவள் தனது முதல் குழந்தையைக் கருவுற்றிருக்கிறாள். ஒரு செவிலியின் துணையுடனேயே நீதிமன்றம் வருகிறாள்.

தண்டனை பெற்ற சில மாதங்களிலேயே அவள் இயல்பாக இருக்கிறாள். யாருடனும் விரோதம் இல்லாதவளாக இருக்கிறாள், கணவனிடம்கூட. “பிறகேன் இப்படிச் செய்தாய்?” எனப் பிரசவ வார்டில் உள்ள கேதரீனா கோர்னிலோவா எனும் அந்தப் பெண்ணிடம் தஸ்தாயெவ்ஸ்கி வினவுகிறார். “கொடுமையானதாக ஏதோவொன்றை செய்ய விரும்பினேன். ஆனால், அது என்னுடைய விருப்புறுதியாக இல்லாமல் இன்னொருவடையதுபோல இருந்தது” என்பது கேதரீனாவின் பதில்.

‘கர்ப்பிணியாக இருப்பவள், காரண காரியத் தொடர்பற்று செயல்படுவாள்’ என்று தஸ்தாயெவ்ஸ்கியின் தாயார் அவரிடம் சொல்லியிருந்த ஒரு தகவல், அப்போது அவருக்கு நினைவுக்கு வருகிறது. நண்பர்களின் வீடுகளுக்கு, பொது இடங்களுக்கு போகும்போதெல்லாம் அவள் பணம், பொருள் என சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுவாள் என்பது தெரியவருகிறது. இவ்வளவுக்கும் சகல வசதிகளும் உள்ளவள் அவள். இந்த வழக்கிலுள்ள முரண்பட்ட பல அம்சங்கள், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் எல்லாவற்றையும் துருவித்துருவி ஆராய்ந்துவிட்டு தன் இதழில் தஸ்தாயெவ்ஸ்கி எழுதுகிறார்: ‘முதல் குழந்தையைக் கருவுற்றுள்ள பெண்ணிடம் பைத்தியமற்ற பைத்திய நிலை இருக்கும். அவள் செய்கிற விஷயங்கள் ஏன் எதற்கு என அவளுக்குத் தெரியாது. குழந்தை பிறந்ததும் இயல்பான பெண்ணாகிவிடுவாள். இப்படித்தான் கேதரீனாவுக்கும் நிகழ்ந்துள்ளது. அத்துடன், தண்டனையின் பக்கம் தவறுவதைவிடவும் கருணையின் பக்கம் தவறுவது மேலானது.’

மேல்முறையீட்டு நீதிமன்ற நடுவர்கள், தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகங்களையே ஆதாரமாகக்கொண்டு கேதரீனாவை தண்டனையிலிருந்து விடுவிக்கின்றனர்.

சாதாரண சச்சரவு ஒரு கர்ப்பிணியை அசாதாரண சம்பவத்தை நிகழ்த்துமாறு இட்டுச் சென்றது என்பது, ‘அசாதாரணமான உளவியல்’ நிலையே என்று தஸ்தாயெவ்ஸ்கி அன்று எழுதியதால்தான் கேதரீனா விடுபட முடிந்தது. தொடர்ந்து குற்ற நிகழ்வுகளைப் பரிசீலித்து வந்ததின் அவரது நோக்கம், குற்றமற்றவர்கள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது. ஏனெனில், செய்யாத குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் சைபீரிய உறைபனியில் வதபட நேர்ந்தவர் தஸ்தாயெவ்ஸ்கி.

அன்று தொடராக வெளிவந்து கொண்டிருந்த டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ நாவலின் இறுதிப் பகுதியைப் வாசித்ததும் பரவசப்பட்டு இப்படிப் பதிவு செய்கிறார்: ‘இது தனிச்சிறப்பு வாய்ந்த வரலாற்று அம்சம். ரஷ்ய மேதைமை இந்த அம்சத்தைப் பிறப்பிக்கக்கூடுமானால், அது ஆண்மையின்மையில் நாசமாகிவிடவில்லை. அதனால் படைக்க முடியும்; தனக்கேயான ஒன்றை அது வழங்க முடியும்; காலங்களும் பருவங்களும் கடந்துபோகையில் தன்னுடைய ஒன்றை அது தொடங்கி முடிக்க முடியும்.’

சக எழுத்தாளரின் புனைவை தனிப்பட்ட பங்களிப்பாகக் கருதாமல் ரஷ்ய மேதைமையின் அம்சமாகப் பார்த்துப் போற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் பண்பை இங்கே பார்க்கிறோம். இவ்வளவுக்கும் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதே இல்லை. டால்ஸ்டாயைவிட தஸ்தாயெவ்ஸ்கி மூத்தவர். டால்ஸ்டாய் இறந்தபோது, அவரின் கைகளிலிருந்த இரு புத்தகங்களில் ஒன்று, தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற படைப்பான ‘கரமசோவ் சகோதரர்கள்.’

தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்



தஸ்தாயெவ்ஸ்கி, மனிதர்களின் அகத்தை, சமூகத்தை, குற்றங்கள் உண்டாகிற புள்ளியை, குற்றஉணர்விலிருந்து விடபடத் துடிக்கிற மனக்கொந்தளிப்பை எப்போதும் ஆழமாகக் கவனித்து வந்திருக்கிறார். அவரது நாட்குறிப்பு அவரது புனைவுகளைப்போலவே பன்மடங்கு விசித்திரமானது.  

‘செயலின்மையில் மகிழ்ச்சியில்லை, ஈடுபாடில்லாத மனம் கருகிவிடும். தன்னுடைய உழைப்பிலிருந்து கிடைத்துள்ளதில் சிறிதைத் தியாகம் புரியாமல் அண்டை வீட்டாரை நேசிக்க முடியாது, மகிழ்ச்சி மகிழ்ச்சியில் இல்லை. மாறாக, அதை அடையும் முயற்சியிலேயே இருக்கிறது’ என்று குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி, ‘மக்கள் நம்மைப் பின்பற்ற வேண்டுமா - மக்களை நாம் பின்பற்ற வேண்டுமா எனும் கேள்விக்கு இப்படி பதிலளிக்கிறார்: ‘மக்கள் முன் தலைவணங்கவேண்டியது நாம்தான்.கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்குமே அவர்களிடம் நாம் காத்திருக்க வேண்டும்.  ‘மக்கள் உண்மை’யின் முன்னே நாம் தலைவணங்கி, அதை உண்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.”

1991-ல் கோணங்கியின் ‘கல்குதிரை’ தஸ்தாயெவ்ஸ்கி  சிறப்பிதழாக வெளிவந்தது. ஏற்கெனவே ‘வெண்ணிற இரவுகளு’ம்  ‘சூதாடி’யும் தமிழ் வாசகர்களை ஈர்த்திருந்தபோதும், அதுதான் தமிழில் தஸ்தாயெவ்ஸ்கியின் முறையான அறிமுகமாக நிகழ்ந்தது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு அவரது படைப்புகள்போலவே தமிழ் வாசகர்களின் மனதில் ஆழமாக நிலைகொள்ளும். அவரின் நாட்குறிப்புகளின் வழியாக அந்தக் காலத்திற்குள்ளேயே சென்று பிரவேசித்துக்கொண்டிருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.