மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

மிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில் ஐந்து நூல்கள் இங்கு பேசப்படுகின்றன. இந்த நூல்களின் உள்ளடக்கம் இன்றைய காலத்தவை அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் நம்பிக்கைகள் உருப்பெற்ற தருணங்களை ஆராய்கின்றன. ஆவணம், கல்வெட்டு, வழக்காறு, கோட்பாடு சார்ந்த சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் மறுபடி எழுதிப்பார்க்கவும் இவை உதவக்கூடும்.  

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

‘பூலோக வியாஸன்’ தலித் இதழ்த் தொகுப்பு

தமிழ் வரலாற்றில் தலித் இதழியலுக்கு என்று நீண்ட தொடர்ச்சி இருக்கிறது. தமிழ்ச் சமூக வரலாற்றை உரையாடியபடியே கட்டியெழுப்பியதில் அந்த இதழ்களுக்கு என்று குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதை அண்மை ஆய்வுகள் புலப்படுத்தி வருகின்றன. எனினும், அவற்றுள் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ (1907-1940) ஏடு தவிர, மற்ற ஏடுகள் குறிப்புகளாகவும் முழுமையற்றுமே கிடைத்துள்ளன. இந்நிலையில்தான் ‘பூலோகவியாஸன்’ ஓராண்டு இதழ்களின் தொகுப்பை ஜெ.பாலசுப்பிரமணியம் தொகுத்து வெளிக் கொணர்ந்துள்ளார். இவ்விதழ், 1903-ம் ஆண்டு தொடங்கி, 1917-ம் ஆண்டு வரை சிறுசிறு இடைவெளிகள் தவிர்த்து முழுமையாக 14 ஆண்டுகள் வெளிவந்துள்ளது. அவற்றுள், 1909-ம் ஆண்டின் ஒரு வருட இதழின் கட்டுரைகளை மட்டுமே இத்தொகுப்பில் கொடுத்துள்ளார் ஜெ.பாலசுப்பிரமணியம்.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மரபான கல்வியும் அக்கல்வி வழியாக நிலைபெற்றிருந்த புலமை வடிவங்களும் மறைந்து, நவீனக் கல்வியும் அது சார்ந்த பார்வைச் சட்டகங்களும் பிறந்த இன்றியமையாத காலகட்டத்தில் வாழ்ந்து, அக்காலச் சூழலோடு இணையவும் விலகவும் விவாதிக்கவும் முற்பட்டுக்கொண்டிருந்த புலமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக தலித்துகளும் இருந்தனர். அவர்களுள் ஒருவரே முத்துவீரன் பிள்ளை என்கிற ‘பூலோகவியாஸன்’ இதழின் ஆசிரியர், தசாவதானம் பூஞ்சோலை எம்.முத்துவீர நாவலர். அன்றைய சென்னையின் பேர்பெற்ற அறிஞர்களுள் ஒருவர். மரபு தமிழ்க் கல்வி கற்பித்த ஆசிரியர். இவரிடம் தலித்துகள் மட்டுமல்லாது தலித் அல்லாதவர்களும் பயின்றனர். குறிப்பாக தலித் முன்னோடிகளான எம்.சி.ராஜாவுக்கும் சகஜானந்த சுவாமிகளுக்கும் தமிழ் கற்பித்த ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்மரபான புலமையாளர்கள் அன்றைக்கு ‘அச்சு’ என்கிற நவீனத்துக்கு மாறியதைப் போலவே இவரும் இதழ், நூல்கள் என்று செயல்பட்டார். அன்றைய பிற தலித் இதழ்களுக்கு இருந்ததைப்போலவே (இரட்டைமலை சீனிவாசனின் ‘பறையன்’, அயோத்திதாசரின் ‘தமிழன்’) இவ்விதழுக்கும் சொந்தமாக அச்சகம் வாங்கப்பட்டிருந்தது. அந்த அச்சகத்தில் ‘பூலோகவியாஸன்’ மட்டுமல்லாது, பிற பிரசுரங்களையும் நூல்களையும் அச்சிட்டு பேர்பெற்ற அச்சகமாக விளங்கியதாகத் தெரிகிறது. இதழின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் அரசியல், சமூகம், சமயம், விவசாயம், புதினங்கள், விளம்பரங்கள் ஆகியவை இடம்பெற்று முழுமையான அரசியல் இதழாக வெளியானது. தபால்துறை என்னும் பொதுச்சேவை அறிமுகமான காலத்தில், தீண்டாமை காரணமாக தலித் பகுதிகளுக்கு தபால் கொண்டு செல்லப்படாததைப் பற்றிய இவ்விதழின் பதிவு, நவீன மாற்றங்கள் உள்ளூரில் எதிர்கொள்ளப்பட்ட விதத்தைக் காட்டுகிறது. அதேவேளையில் கவிகள், சொற்பொழிவுகள், கேள்வி - பதில் பகுதிகள், கடிதங்கள் ஆகியவையும் வெளியாயின. அரசியல் நிலைப்பட்ட பதிவுகள் ஒருபுறம் வெளியானாலும், மற்றொருபுறம் மரபான புலமைப் பதிவுகளும் இடம்பெற்றுவந்தன. பொதுவாக தலித் இதழ்கள், அரசியல் என்றாலே, அவை முற்றிலும் நவீனம் சார்ந்தவை என்றும் மரபோடு அவற்றுக்கு தொடர்பே இருந்ததில்லை; அப்படியே இருந்தாலும் எதிர்மறையாக இருந்தது என்றும் கருதும்படியான பார்வைகளே தலித் அல்லாதவர்களிடம் மட்டுமல்லாது தலித்களிடமும் இருக்கின்றன. இக்கால இதழ்கள் அவற்றை உப்பக்கம் காண்கின்றன. மரபின் மீதான அவர்களின் பங்கு இவற்றின் வழி துலக்கம் பெறுகின்றன. 

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

அயோத்திதாசரின் ‘தமிழன்’ இதழ் வெளிவந்துகொண்டிருந்த சமகாலத்திலேயே இணை இதழாக இது பௌத்தம் பேசியுள்ளது. எனினும் இவ்விதழின் நடைமுறைகளில் வேறு மாற்றங்கள் இருந்தன. அயோத்திதாசரின் ‘தமிழன்’ இதழ்போல் முழுமையாக பௌத்த அம்சங்களுக்கே இடம்தராமல், அன்றைய பிற தலித் அரசியல் நடைமுறைகளையும் பதிவுசெய்துவந்திருக்கிறது. அந்த வகையில் அந்தக் காலகட்டத்தின் தலித் அரசியலில் நிலவிய வெவ்வேறு குரல்களைப் புரிந்துகொள்வதற்கான ‘நடுநிலை’ ஏடாக விளங்கி உள்ளதைப் பார்க்க முடிகிறது.

அன்றைய காலகட்டத்தில் பல தலித் முன்னோடிகள், தலித் மக்களின் மேம்பாடு சார்ந்து செயல்பட்டிருந்தாலும் அவர்க ளிடையே வெவ்வேறு கருத்துநிலைகள் இருந்தன. அவை சார்ந்து முரண்களும் நிலவியிருக்கின்றன. குறிப்பாக அயோத்திதாசருக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்கும் இடையே ஒடுக்கப்பட்டவர்களின் சமயம், பெயர், அடையாளம் எவை என்பதில் விவாதங்கள் இருந்தன. ஒருவரை பிரதிபலிக்கும் அமைப்பும் இதழும் மற்றோர் அமைப்பை பேச மறுத்தன. இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு தரப்புப் பதிவுகளையும் பிரதிபலித்த இதழாக ‘பூலோகவியாஸன்’ விளங்கியது. இரட்டைமலை சீனிவாசன் தொடங்கியிருந்த ‘பறையர் மகாஜன சபை’யின் நடவடிக்கைகள், தென்னாப்பிரிக்கா சென்ற பிறகு (1900) என்னவாயிற்று என்று அறிய முடியாத நிலையில், இவ்விதழ் அதைப் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. இவ்வாறு, ஓராண்டு இதழ்களே ஆனாலும் தலித்துகளின், தலித் அரசியல் செயல்பாட்டின் இன்றியமையாத 125 பக்கங்களைக்கொண்ட நூல் இது. (பூலோகவியாஸன்: தலித் இதழ்த் தொகுப்பு, ஜெ.பாலசுப்பிரமணியம் (தொ.ஆ.), காலச்சுவடு, 2017)

உட்பகை உணரும் தருணம்

பெருமளவு மொழிபெயர்ப்பாளராகவே அறியப்பட்டிருக்கும் அழகரசன், 1990-களில் எழுதத் தொடங்கியவர் என்றாலும், சொந்தமாகக் குறைந்த அளவிலேயே எழுதி வந்திருக்கிறார். ஏறக்குறைய 25 ஆண்டுகள் எழுதிவரும் நிலையில் அவ்வெழுத்துகளின் தொகுப்பாக வந்திருக்கும் முதல் நூல் இது.

1980-களிலிருந்து தமிழில் அறிமுகமாகி வந்த இலக்கியக் கோட்பாடுகள், அவற்றைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட வாசிப்புகள், தொடர்ச்சியாக மேலெழுந்த தலித் இலக்கிய பேச்சுகள் ஆகியவை மீதான வாசிப்புகளே இந்நூலில் பிரதானமாக அமைந்துள்ளன. நூலின் 17 கட்டுரைகளும் ‘சாதிக்கேடும் சாதியஅறிவும்’, ‘எழுத்துலகும் எழுத்ததிகாரமும்’, ‘பகை மறுக்கும் மொழி’ என்ற மூன்று தலைப்பில் அடுக்கப் பட்டிருப்பதே இந்நூல் பேச முனையும் உள்ளடக்கத்தை ஒருவாறு உணர்த்தி விடுகின்றன. கோட்பாடுகளை அறிமுகப் படுத்துதல், அவற்றைப் பொறுத்துவதன் மூலம் புலப்படாதவற்றைப் புரிந்துகொள்ளல், என்பதாகச் சொல்லப்பட்ட வாசிப்புக் கோட்பாடுகள், அதைப் பேசியவர்களாலேயே தத்தம் நிலைப்பாடுகளைக் கட்டமைத்துக் கொள்வதற்காகவும் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அதிகம் பயன்படுத்தப் பட்டுவிட்டதைப் பார்க்கிறோம். கோட்பாடுகளும் அதைப் பேசியவர்களுமே ஓர் அதிகாரமாக மாறியிருப்பதை இன்றைய அறிவுச்சூழலில் மிக தாமதமாகவாவது அறியவந்திருக்கிறோம். ஆசிரியனின் வன்முறையைக் காட்டி, விமர்சகன் கட்டமைத்த வன்முறையை அறிய முடியாது போய்விட்ட நமக்கு கோட்பாடு, ஆய்வுத்தரவுகள், ஆய்வு முறையியல், ஆவணக் காப்பகங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் இடைவெளிகளையும் அவற்றின் அதிகாரத்தையும் நிதானமாக விவாதிக்கும் இந்நூல் முக்கியமான திறப்பு.  

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

சாதி என்பது, மோதல் நிகழும்போது பேசப்படுவதாகவும், தானெடுக்கும் முற்போக்கு நிலைப்பாடே அதில் தனக்கிருக்கும் பொறுப்பு என்றும், சுருங்கிவிட்டது. இன்றைய இந்தப் புரிதலில், இந்நூலிலிருக்கும் ‘சாதியும் தன்னிலை உருவாக்கமும்’ என்ற முதல் கட்டுரை, பெரும் கட்டுடைப்பை நிகழ்த்துகிறது. இந்தக் கட்டுடைப்பு, கோட்பாட்டின் வழியே நடக்கவில்லை; சமூக மனிதனாக தான் சந்திக்கும் அனுபவத்தை முன்வைப்பதன் மூலம் கட்டுரையாளர் நிகழ்த்துகிறார். 90-களுக்குப் பிந்தைய தலித் சமூக எழுச்சியின் விளைவுகளைப் பார்ப்பதைவிட, அவற்றை விவாதிக்க முனைந்த நம் அறிவுச்சூழல் அதை எவ்வாறு எதிர்கொண்டது? எவ்வாறு வெளிப்படுத்தியது? என்று கட்டுரை விவாதிக்கிறது. ஒருவர் சாதியை எதிர்த்துப் பேசுகிறவராக மாறுவது என்பது, தனக்கல்லாது - சாதி வெளியே இருப்பதாக கருதி அதை மட்டுமே விவாதிப்பதாக ஆகிவிட்டதை முன்வைக்கிறது.

தொடர்ந்து, தலித் வரலாற்றறிஞர் தி.பெ.கமலநாதன் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. அயோத்திதாசரின் சகபயணியாக இருந்த ஏபி.பெரியசாமி புலவரின் மகன், கமலநாதன். அவரது தந்தையின் காலத்தில் தலித்களால் நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்கள், மேம்பாடுகள் பற்றிய தரவுகளைக் காத்துவந்ததோடு, அதன் தொடர்ச்சியை எடுத்துக்காட்டி கி.வீரமணிக்கு மறுப்பு நூலொன்றையே எழுதினார். அவர் எழுதிய நூலைக்காட்டிலும் நூலுக்கான தரவுகள் பற்றி விவாதித்திருக்கிறார் அழகரசன். அந்நூலை வரலாற்று ஆய்வாளரின் இடையீடாகப் பார்க்கும் அதேவேளையில், கடந்தகால போராட்டத் தொடர்ச்சியைச் சேர்ந்த ஒருவரின் அகவயமான தவிப்பு என்கிறார்.அதுபோலவே ஆவணக் காப்பகங்களின் தரவுகளுக்கே வரலாற்றை எழுதும் அங்கீகாரம் உள்ள நிலையில், இது போன்ற தனிப்பட்ட சேகரங்கள் தரவுகளாக மாறி, வரலாற்று உரையாடலுக்குள் கொணரப்படும்போது, ஆவணக் காப்பகங்களின் அதிகாரம் வரையறைக்கு உட்பட்டதாக மாறிவிடுவதை அறிகிறோம். அங்கிருப்பது மட்டும்தான் வரலாற்றுத் தரவுகளா? இவ்வாறு, தலித் பற்றியதாக அமையும் இவ்விவாதங்கள்,அவற்றையும் தாண்டி மொத்த கோட்பாட்டுச் சூழலுக்கும் பொருந்தக்கூடியதாக மாறிவிடுகிறது.

கதைப்பாடல்களில் தம் கல்விப்புல ஆய்வை மேற்கொண்டிருக்கும் அழகரசன் திரௌபதி, மணிமேகலை அவர்கள் பற்றி ஆங்கில அறிவுலகம் புரிந்துகொண்டுள்ள முறை பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் பின்காலனிய ஆய்வுப் பார்வைக்கான அசலான சான்றுகள். எல்லாவற்றையும் கோட்பாடு, தரவுகள், ஆய்வுத்திட்டங்கள் ஆகியவற்றுக்கானதாக ஆக்கிப்பார்க்கும் மேலை ஆய்வுமுறையியல், உள்ளூர் அறிவுமுறையை தத்தம் தேவைக்கேற்ப சுருக்கிப் பார்ப்பதையும் விவாதிக்கின்றன கட்டுரைகள். (உட்பகை உணரும் தருணம், அழகரசன், மாற்று வெளியீட்டகம், 2016)

அதிகாரமும் தமிழ்ப் புலமையும்

இந்த நூல் நதானியேல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (1762-1831) என்ற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியையும், அவரின் புலமை செயல்பாடுகளையும் பதிவுசெய்வதன் மூலம், காலனிய அறிவுச்சட்டகத்துக்குள் தமிழ் என்னும் அடையாளம் அதிகாரச் சொல்லாடலாக மாறிய விதத்தை விவாதிக்கிறது. இந்தியா பற்றிய காலனிய அறிஞர்களின் தொடக்க ஆய்வு, சம்ஸ்கிருத இலக்கியங்கள் சார்ந்து உருவானது. இதில், 1784-ம் ஆண்டு கல்கத்தாவில் தொடங்கப்பட்ட ‘ஆசியவியல் கழக’மும் (Asiatick Society) வில்லியம் ஜோன்ஸும் முக்கியமானவர்கள். ஜோன்ஸ், ‘ஆசிய இலக்கியம்’ என்றும் ‘இந்திய இலக்கியம்’ என்றும் சம்ஸ்கிருத இலக்கியங்களையே குறிப்பிட்டார். இந்நிலையில்தான் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான இவர், 1794-ம் ஆண்டு ‘இந்து இலக்கிய மாதிரிகள்’ என்ற நூலை வெளியிட்டு, காலனிய அறிவாராய்ச்சியில் தமிழையும் கவனப்படுத்தினார். தமிழ் குறித்து அவர் எழுதிய இந்த நூலை, காலனியத் தமிழ்ப் புலமை வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்று அறுதியிடும் ந.கோவிந்தராஜன், இந்நூலை வைத்து காலனிய அறிவுலகில் நடந்தவற்றையும் மாற்றங்களையும் விவரிக்கிறார். 

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

‘இந்து இலக்கிய மாதிரிகள்’ என்ற நூலில் குறளின் சில அதிகாரங்களை மொழிபெயர்த்ததோடு, உள்ளூர்த் தொன்மங்கள் குறித்த செய்திகளுடன்  ‘நளராஜா’ வரலாற்றின் மொழிபெயர்ப்பையும் செய்திருக்கிறார் கிண்டர்ஸ்லி. அந்த வகையில் குறள், ஆங்கிலத்துக்கு இந்த நூல் மூலமே முதலில் சென்றது. ‘திருவள்ளுவர் குறள்’ அல்லது  ‘ஞானக்கடலிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவை’ என்ற அப்பகுதியில் 11 அதிகாரங்களை மொழிபெயர்த்திருக்கிறார். இதற்காக கிண்டர்ஸ்லி உள்ளூரில் எந்தப் பிரதிகளை ஆதாரமாகக்கொண்டார்? அவை யாரால் காக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு வந்தது? அவற்றின் பயில்வுமுறை யாது? என்பவற்றை விவாதிப்பதன் வழியாக காலனிய அறிவுப்புலத்தோடு தொடர்புகொண்ட சமூகக் குழு அல்லது சமயக் குழு பற்றிய செய்தி கிடைக்கிறது.

பொதுவாக, ஆங்கிலேயர்கள் இந்திய நூல்களை வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் நூலுக்கு அமைந்த உரைகளையும் சேர்த்தே வாசிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். இவ்விடத்தில் உள்ளூரார் செந்தமிழில் அமைந்த (செய்யுளாகவோ, உரையாகவோ) நூல்களை, உரைநடைக்குப் பெயர்த்துவைத்திருந்த விதத்தையும் அவை புழக்கத்திலிருந்த கொச்சைத் தமிழில் இருந்ததையும் சுட்டும் நூலாசிரியர், குறள் பரவலாகப் படிக்கப்பட்டு வந்ததை குறிப்பிடுகிறார்.

கிண்டர்ஸ்லி பயன்படுத்திய உரை சாதாரண மக்கள் வாசிப்பில், எளிதில் கிடைக்கக்கூடியதாக இருந்திருக்கிறது என்கிறார். அந்த ‘உரைநடையிலான உரை’ எது என்று விவாதிக்கிறார். கிண்டர்ஸ்லி, குறளைப் பெரும்பாலும் பேச்சுத் தமிழில் கொடுத்திருந்த கவிராஜ பண்டிதரின் உரையையே தன் மொழிபெயர்ப்புக்கான மூலமாகக்கொண்டிருக்கிறார். கவிராஜ பண்டிதர் ஒரு சமண உரையாசிரியர். சாதாரண மக்களும் கேட்பதற்காக நூலுக்கு பொருள் சொல்லும் வழக்கம் சமணர்களிடம் இருந்துள்ளது. அன்றைய குறள் பற்றிய உள்ளூரின்  புரிதலுக்கு, சமணர்களின் எளிய உரையே வாயிலாக அமைந்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது. கிண்டர்ஸ்லியை முன்வைத்து இந்நூல் மேலும் தரும் குறிப்புகள் முக்கியமானவை. காலனிய அறிவுலகத்தை, தொடக்கநிலையில் உள்ளூர் பற்றிய புரிதலுக்காகப் பாதித்தவை, சாதாரண மக்களிடையே பேச்சுத் தமிழோடு தொடர்பு-வாசிப்புகொண்ட பிரதிகளும், சமணம் போன்ற அவைதீக பிரதிகளும்தான் என்பவை அறியப்படவேண்டியவை. தொடக்கநிலையில் வாய்த்த இந்தப் போக்கு, காலனிய காலத்திலேயே எவ்வாறு உள்ளூர் உயர்சாதி மற்றும் உயர்வழக்கு சார்ந்தோரால் காலனியத் தொடர்போடு மாற்றியமைக்கப் பட்டது என்பதையே இந்நூல் மூலம் நாம் அறியவேண்டிய முக்கியச் செய்தியாக இருக்கிறது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட போக்கே தமிழின் வரலாறாக இன்று வரை நிலைத்து நிற்கிறது. இதைக் காணும் போதுதான் இதுபோன்ற ஆய்வுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

குறள் மொழிபெயர்ப்புக்கு அடுத்து, நளராஜா வரலாற்றின் மொழிபெயர்ப்பு இந்நூலில் விவாதிக்கப்படுகிறது. இந்நூல் கிண்டர்ஸ்லியால் வசன நூலாகவே மொழிபெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் வாசிப்பவர், கேட்பவர் என்ற கூட்டுவாசிப்பு என்ற அம்சம் இருந்ததை கவனப்படுத்துகிறார் கோவிந்தராஜன். வசன நூல்கள் கேட்டதற்கானவை. உரையைப்போலவே வசன நூல்களும் இலக்கிய வாசிப்பின் இன்னொரு பரிமாணம்தான் என்று கூறும் அவர், ‘அவை வாசகர் கூட்டம் நோக்கி செய்யப்பட்டவை’ என்கிறார். இதன்படி வாசிப்பவர் மட்டுமல்ல, கேட்கும் கூட்டமும் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

இங்கு செய்யுளுக்கு மாற்றாக கூட்டத்தோடு தொடர்புடைய வசன மரபை கிண்டர்ஸ்லி காலனிய ஆய்வுக்குள் கொண்டுவந்திருக்கிறார். அவர் இவற்றை ஏன் சார்ந்திருக்கவேண்டியிருந்தது என்ற மேலதிக ஆய்வு தேவை. எனினும், ‘காலனிய அறிஞர்கள் உடனடியாகவோ அவ்வளவு எளிமையாகவோ சார்ந்து கொள்ளக்கூடிய ஒன்றாக, கீழோர் அறிவு மரபு இங்கு செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது’ நாம் அறியவேண்டிய உண்மையாக இருக்கிறது. இந்நூல், மேலோர் என்போர் அங்கீகரிக்காத தமிழிலக்கிய மரபு ஒன்று தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டு வரை இருந்தது என்பதையே காட்டுகிறது. அந்த மரபு எவ்வாறு மாறியது அல்லது மறைக்கப்பட்டது என்ற ஆய்விற்கும் செல்கிறது. இதை ஆராய பிந்தைய எல்லீஸ், அவர் உருவாக்கிய சென்னை கல்விச்சங்கம், அதில் பணியாற்றிய ஆசிரியர்கள் சார்ந்த தொடர்பில் வைத்து விவாதிக்கிறது நூல். 18-ம் நூற்றாண்டில் காலனிய தொடர்புக்குள் வந்த உள்ளூரின் எளிய வசனமரபு சார்ந்த கீழோர் மரபு, 19-ம் நூற்றாண்டில் மெள்ள மெள்ள இலக்கண வழிப்பட்ட செவ்வியல் புலவர் மரபு சார்ந்ததாக மாறியிருக்கிறது. அதன் தொடக்கமாக எல்லீஸ் தொடர்பிலான சென்னை கல்விச்சங்கப் பணிகள் இருந்திருக்கின்றன என்று ந.கோவிந்தராஜன் வாதிடுகிறார். இதை இவ்வாறும் கூறலாம்: சமண வழிப்பட்ட உள்ளூரின் மரபை சைவம் என்ற மரபு, காலனியம் என்ற அதிகார காலகட்டத்தைப் பயன்படுத்தி, தமிழ் அடையாளத்தை முழுவதும் தன்னுடையதாக மாற்றியது. அதற்கு அன்றைய அச்சுப் பண்பாடு என்ற அதிகாரத்திற்கான அங்கீகாரச் சட்டகமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சீகன்பால்கு, வீரமாமுனிவர் ஆகிய மிஷனிரிகளுக்கிடையே நடந்த ‘செந்தமிழ்’,  ‘கொடுந்தமிழ்’ என்ற விவாதத்தையேகூட மொழி என்பதைக் கடந்து, அவை எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டிருந்தன என்ற பார்வையிலிருந்து புதிதாக அணுக வேண்டியுள்ளது. (அதிகாரமும் தமிழ்ப் புலமையும், ந.கோவிந்தராஜன், க்ரியா, 2016)

மக்கள் தெய்வங்கள்

சங்க இலக்கிய தலைவன் - தலைவியின் நேரிய காதலில் தொடங்கும் வரலாறு, இறைவன் வானுலகத்திலிருந்து இறங்கிவந்து நடத்திய திருவிளையாடல்கள் வரையிலும் நீடிக்கிறது. ஆனால், இவற்றில் எளிய மக்கள் நடமாடும் சமூக வரலாற்றுக்கு இடமில்லை. இவ்வகையான வரலாற்றை எழுதிப் பார்ப்பதற்குக் கெடுவாய்ப்பாக நம்மிடம் எழுதப்பட்ட சான்றுகள் இல்லை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ சமூக வரலாற்றுக்கான தடயங்கள், உள்ளூரில் புழங்கும் சடங்குகளிலும் கதைகளிலும் நம்பிக்கைகளிலும்தான் இருக்கின்றன. அவை நேரடியாகவோ குறியீட்டு ரீதியாகவோ பல்வேறு கடந்தகால நினைவுகளைத் தாங்கிநிற்கின்றன. இந்தப் பின்னணியில் கோ.பழனி தொகுத்திருக்கும் ‘மக்கள் தெய்வங்கள்’ என்ற அதிகம் கவனிக்கப்படாத நூல் முக்கியமானதாகிறது. இந்நூலில் தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களில் வழிபடப்படும் தெய்வங்கள், தோன்றியதைப் பற்றி உள்ளூரில் புழங்கும் கதைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இதன்படி 40 தெய்வங்கள் பற்றி படிக்கத் தோதான எளியநடையில் 40 கட்டுரைகள் உள்ளன.   

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

40 தெய்வங்களும் வைதீகத் தொடர்பைப் பெறாமல் அந்தந்த வட்டாரம் சார்ந்தவையாக உள்ளன. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் தனித்தனி கதைகள் உள்ளன. அந்த வகையில் அவை பிறந்த, வழங்கிய, குறிப்பிட்ட சூழலிலேயே அர்த்தம் பெறுகின்றன. செல்லியம்மன், பொன்னியம்மன், வெள்ளைச்சியாயி அம்மன், கோடியம்மன், தூண்டி முத்து, பளிச்சியம்மன், வெள்ளைக்கார சாமி என்றமைந்த அவற்றை, அச்சூழலின் பின்னணியில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். இக்கதைகளுக்கு, பெரும்பாலும் பிரதிகள் இல்லை. குறிப்பிட்ட ஊரில் ஒரு தெய்வம் இருக்குமானால், அந்த தெய்வம் பற்றிய கதை அந்த ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும் மட்டுமே வாய்மொழி யாகப் புழங்கும். இத்தெய்வங்களுள் பலவும் துடியானதாகவும் பெருவாரியான மக்கள் வணங்கக்கூடியதாகவும் வேண்டுதல்களை நிறைவேற்றித் தருவனவாகவும் உள்ளன. ஆனால், பிரதி அதிகாரம் இல்லாத காரணத்தால் எழுத்துப் பிரதிகளை மட்டுமே சான்றாகக்கொண்டு எழுதும் இன்றைய நவீன வரலாற்றியலில் இவற்றுக்கு இடமில்லாமல் போய்விடுகின்றன. மதுரை மீனாட்சி அம்மனைக்காட்டிலும், எல்லா நாள்களும் பெருவாரியான மக்கள் கூடும் கோயிலாக மதுரை பாண்டிமுனி  கோயில் உள்ளது. இருந்தாலும், மதுரையின் அடையாளமாக பிரதியோடு தொடர்புடைய மீனாட்சியே அறியப்படுவதைப் பார்க்கிறோம்.

இத்தொகுப்பிலுள்ள 40 கட்டுரைகளில் பத்துக்கு மேற்பட்ட கட்டுரைகள் ஆண் தெய்வங்களின் பெயரால் அமைந்துள்ளன. மற்றவை பெண்கள். இப்பெண் தெய்வங்கள் தமிழக அளவிலான பெண் தெய்வங்களாக இல்லாமல் முற்றிலும் ஒரே வட்டாரத்தோடு நின்றுவிடக்கூடியவையாக இருக்கின்றன. ஆனால், ஒரு கதையின் ஒன்றிற்கு மேற்பட்ட வடிவங்கள் வெவ்வேறு வட்டார தெய்வங்களின் கதைகளில் ஊடாடியுள்ளன. சில இடங்களில் அங்கு ஏற்கெனவே செல்வாக்காக வணங்கப்பட்டு வரும் தெய்வங்களின் பெயர்களிலும் சடங்குகளிலும் கதைகளிலும் இந்த தெய்வங்கள் தொடர்புபெற்றிருக்கின்றன. உதாரணமாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு என்ற சிற்றூரில் வண்ணார் சமூகப் பெண்ணை ‘வண்ணாத்தி இசக்கி’ என்ற பெயரில் வணங்குவதை இங்கு கூறலாம்.

இக்கதைகளில் பெரும்பாலானவை, சாதி மீறி காதலித்ததால் ஆணும் பெண்ணும் கூட்டாகவோ தனித்தனியாகவோ கொல்லப்பட்டு பின்பு தெய்வமாக்கப் பட்டவர்களாக உள்ளனர். உண்மையில் தமிழகத்தின் உள்ளூர் யதார்த்தத்தில் சாதியை மீறியதால் கொல்லப்பட்டு வணங்கப்படுவோரே அதிகம் என்பது பெரும் முரண்நகை. அதனாலேயே, இந்த உள்ளூர் தெய்வங்களின் கதைகளிலும் சடங்குகளிலும் தலித் சாதியினருக்கு இப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். இத்தொகுப்பில் ஆரணி அருகே உள்ள பொன்னியம்மனை முதலியார்களும் தலித்துகளும் சேர்ந்து வணங்கும் வழக்கம் குறிப்பிடப்படுகிறது. சாதி மீறிய திருமணத்திற்காகக் கொல்வதும் பின்பு, பயந்து வணங்குவதும் நம் மரபில் ஏற்கெனவே இருந்துவருகிறது. என்றாலும், இன்றும் நம்மிடையே ஆணவக்கொலைகள் தொடர்ந்து நடந்துவருவதை எவ்வாறு புரிந்துகொள்வது என்ற கேள்வி, எல்லாவற்றையும் அரசியலாக மட்டுமே புரிந்துவைத்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சாதி மீறியதால் கொல்லப்பட்டவர்களைத் தெய்வமாக்குதலில், பழிவாங்கப்படுவோம் என்ற பயம் முக்கிய இடம்பிடிக்கிறது.மேலும், சாபம் பலிக்கும் என்ற நம்பிக்கையும் இவற்றில் பங்கு வகிக்கின்றன. சாதிய மீறலுக்கு எதிரான கோபமும், அவற்றிற்கு மாற்றீடாக எதையேனும் நிகழ்த்துவதின் மூலம் சமாதானம்கொள்வதும் அதே குழுவுக்குள்ளேயே நிகழ்கின்றன. இவ்வாறு மனித உணர்ச்சியும் கலாசாரமும் கட்டமைத்துக்கொண்டிருக்கும் ‘அறம்’ என்பதுதான் எத்தகையது என்பதைப் பேசிப் பார்க்க இக்கதையாடல்களில் இடமிருக்கின்றன.

இந்த உள்ளூர் கதைகளில் இரண்டு அம்சங்கள் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. முதலாவது அண்ணன்கள் மற்றும் பாசம் மிகுந்த ஒரு தங்கை. காதலித்ததாலோ, சந்தேகத்தாலோ தங்கையைக் கொன்றுவிட்டு, பயத்தால் அவளை அண்ணன்கள் வணங்குகிறார்கள். கணவனோடு தீப்பாய்ந்து செத்துப்போகும் பெண்கள் பற்றிய கதை மற்றொன்று. இவை காதலின் தீவிரத்தைக் காட்டுவதாக உள்ளன. இதே கதையாடல்களைப் பிரதிசெய்த தமிழ் சினிமாக்கள் பெருவெற்றி பெற்றது இத்தகைய சமூக நினைவின் தொடர்ச்சிதான் போலும்.

இந்த உள்ளூர் தெய்வக்கதைகள், புராணக் கதைகள் போன்றவை அல்ல. ஆனால், இவை தெய்வக்கதைகளாக ஆக்கப்படும்போது, புராணக்கதைத் தொடர்பையும் சட்டகத்தையும் பெற்றுவிடுகின்றன. தெய்வமாக வணங்கப்படும் மனிதன், பிறப்புக்கு முன் சிவனிடம் சாபம் பெற்றவராகவோ, இறப்புக்குப் பின் சிவனை அடைபவராகவோ மாற்றப்படுகிறார். இவை உள்ளூர் கதையாடல் மரபுதாம். இவை மேலோர் என்போரின் தெய்வங்களோடு தொடர்பைக் காட்டும் உள்ளூர் கதைகளாக இருக்குமே தவிர, மேலோர் தெய்வங்களை முதன்மைப்படுத்தும் வைதிகப் பிரதிகளில் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தெய்வப் பெயர், தெய்வத்தின் இருப்பிடம், உருவ அமைப்பு, திருவிழா, சடங்கு ஆகியவற்றில் சமூக வரலாற்றைத் தக்கவைத்திருக்கும் நினைவுகள், உள்ளூர் மரபில் இருக்கின்றன என்ற வகையில் இதைத் தொகுத்துக்காட்டும் இந்நூல் முக்கியமானது. (மக்கள் தெய்வங்கள் – கோ.பழனி, புலம் வெளியீடு, 2015).

தமிழகத்தில் சாதி உருவாக்கமும்  சமுக மாற்றமும்


சாதி பற்றி நமக்கிருக்கும் புரிதல்களில் பெரும்பாலானவை சான்றாதாரங் களிலிருந்து உருவாக்கிக்கொண்டதாக அல்லாமல், பொதுவான நம்பிக்கை களிலிருந்து பெற்றவையாக இருக்கின்றன. எனவே, இதைப் புரிந்துகொள்ள பல்வேறு தரவுகளையும் ஆய்வுமுறையியல்களையும் கைக்கொண்டு விவாதிக்க வேண்டி யிருக்கிறது. அதற்கான தரவுகளில் ஒன்றுதான் கல்வெட்டு. அதுவும்கூட வரையறைக்கு உட்பட்டதே. எனினும், அவற்றில் புனைவுகளுக்கான வாய்ப்பு குறைவு என்ற முறையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், தமிழகப் பகுதியில் மிக அதிகமான கல்வெட்டுகள் கிடைத்தும்கூட அவை முழுமையாகப் படிக்கப்படவோ, அவற்றைவைத்து சாதி போன்ற சமூக அம்சங்களை விரிவாக விவாதிக்கும் போக்கோ எழவில்லை. இப்பின்னணியில் கல்வெட்டுகளை அடிப்படையாகக்கொண்டு, தமிழக வரலாற்றில் சாதி அமைப்பு பற்றிய போக்குகளை ஆராய்ந்த நொபுரு கராஷிமாவும் (1933-2015), எ.சுப்பராயலுவும் (1940) கவனிக்கப்படவேண்டியவர் களாகிறார்கள். கராஷிமா தென்னிந்தி யாவைப் பற்றி ஆராய, ஜப்பானிலிருந்து வந்த அறிஞர். சோழர்கால கல்வெட்டுகளையும் விஜயநகர கல்வெட்டுகளையும் எடுத்து, தென்னகத்தின் நிலவுடைமை, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம் பற்றி ஆய்வு மேற்கொண்டார். எ.சுப்பராயலு வாழ்ந்துவரும் அறிஞர்களுள் ஒருவர். கல்வெட்டியல் அறிஞரான இவரும் சோழர்கால மற்றும் விஜயநகரகால கல்வெட்டுகளை முன்வைத்து தென்னகத்தின் நிலவுடைமை, சமூக மற்றும் அரசு உருவாக்கம் பற்றி ஆய்வுசெய்தார். இவ்விருவரின் ஆய்வுகளும், சாதியமைப்பு கட்டிறுக்கம்பெற்ற சோழர் காலம் மற்றும் விஜயநகர காலம் சார்ந்ததாக இருப்பதால், தமிழ்ச் சமூகத்தில் சாதி பற்றிப் புரிந்துகொள்ள முக்கியத் தரவுகளாக அவை விளங்குகின்றன. ‘தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்’ என்ற இந்நூலில் நான்கு கட்டுரைகளும், பின்னிணைப்பாக நொபொரு கராஷிமாவின் ஆய்வியல் தன்னனுபவக் கட்டுரையான ‘நானும் எனது ஆய்வுகளும்’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இந்த ஐந்து கட்டுரைகளில் மூன்றை மொழி பெயர்த்ததோடு நூலையும் தொகுத்திருக்கிறார். ஆய்வாளர்
க.காமராசன். 

கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளும் பொ.ஆ.800 முதல் 1500 வரையிலான (கி.பி. என்பதை பொது ஆண்டு என்றே கட்டுரையாளர்கள் குறித்துள்ளனர்) தமிழ்ப் பகுதி சமூக வரலாற்றின் சில கூறுகளை ஆராய்கின்றன. முதலில் தமிழ்நாட்டில் ‘தீண்டாதார்’ என்ற கராஷிமாவின் கட்டுரை இருக்கிறது. பொதுவாக, சாதி பற்றியும் ஒடுக்கப்பட்டோர் பற்றியும் பேசும்போது, இரண்டாயிரம் கால நடைமுறை என்றே பேசுவோம். இவ்வாறு சாதியமைப்பைக் காலாதீதமாகக் காட்டுவது அறிவியலுக்குப் புறம்பானது. உண்மையில் அது சாதியமைப்பில் உயர்சாதியோர் கட்டமைத்துக்கொண்டிருக்கும் பெருமிதத்தையும் ஒடுக்குண்டோர் மீதான இழிவையும் வரலாற்றுபூர்வமானதாக மாற்றி நியாயமாக்கிவிடுகிறது. கராஷிமாவின் இக்கட்டுரை அந்நம்பிக்கையைத் தகர்க்கிறது.  

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்

சோழர்கால கல்வெட்டுகளில் வரக்கூடிய தீண்டப்படாதார் குடியிருப்பு பகுதி, தொழில், சமூக மதிப்பு ஆகியவற்றை ஆராய்கிறார். தீண்டாதாரில் ‘பறையர்’ பற்றியே அதிகம் ஆராய்கிறார். தமிழ்க் கல்வெட்டுகளில் தீண்டாமை பற்றி வரும் குறிப்புகள் அரிது. ஆனால், அது சோழர் காலக் கல்வெட்டுகளில் துல்லியமாவதைக் காண்கிறார். முதலாம் ராஜராஜன் கல்வெட்டிலுள்ள ‘தீண்டாச்சேரி’ என்ற சொற்பயன்பாட்டை ஆராய்கிறார்.  ‘தீண்டாச்சேரி’ என்று குறிப்பிடப்படுவதைப் போலவே ‘பறைச்சேரி’ என்ற குடியிருப்பும் குறிப்பிடப்படுகிறது. இவ்விரண்டும் சாரத்தில் ஒன்றானவைபோலிருந்தாலும் இதற்கிடையே உறவு தெளிவற்று உள்ளது என்பதே அவர் அடையும் முடிபு. ஏனெனில், அவர் ஆராய்ந்த 33 கிராமங்களில் இரண்டு கிராமங்களில் மட்டும் பறைச்சேரியுடன் தீண்டாச்சேரியும் இருக்கிறது. ‘பறையர்கள் தீண்டப்படாதவர்கள் எனில், தீண்டாச்சேரி என்பது எதைக் குறிக்கிறது’ என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல எல்லா கிராமங்களிலும் பறைச்சேரி இல்லை. மேலும், அவர்கள் பல்வேறு தொழிலோடும் தொடர்பு பெற்றிருந்தனர். அவர்களோடு புலையர்களும் அடிமைகளாக்கப்பட்டு வாங்கவும் விற்கவும்பட்டனர். என்றாலும், அதில் வெள்ளாளர்களும் விற்கப்பட்டனர் என்பதையும் காட்டுகிறார். இக்கட்டுரையின்படி நமக்குக் கிடைக்கும் முடிவுகள் முக்கியமானவை. சோழர்கால தீண்டாமை, கட்டிறுக்கம் பெறாத, தொடக்கக் காலத்தது. இது படிப்படியாகவே பல்வேறு மாற்றங்களினூடாக இறுக்கம் பெற்றிருக்கிறது. 10-13 நூற்றாண்டுகளில் சாதி, ஒரு சமூக நிறுவனமாக மாறி வளர்ந்திருக்கிறது. எனவே, ஒரு சாதி இன்றைக்கு இருக்கும் நிலையை எடுத்துக்கொண்டு, அதை கடந்த காலத்தில் அப்படியே பொருந்திப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்ற பார்வையை அடைகிறோம்.

சோழர்காலத்தின் சமூக மாற்றங்களின் சில தன்மைகளை அடுத்த கட்டுரை விவரிக்கிறது. நிலவுரிமைக்கு உரிமை கொண்டாடிய சாதிகள், படைப் பிரிவுக்கான சமூகக் குழுக்கள், இடங்கை வலங்கைக் குழுக்கள் பற்றிய தகவல்களை தருகிறது கட்டுரை. இதுவும் சாதி பற்றி சில அடிப்படையான புரிதல்களைத் தருகிறது. சாதிமுறை முற்றிலும் நிலைபெறவில்லை. ஆனாலும், அவை நிலைபெறுவதற்கான ஊடாட்டங்களைப் பதிவுசெய்கிறது. புதிய நிலவுடைமை இனங்கள் தோன்றுவதன் காரணமாக முரண்பாடுகள் வளர்கின்றன. ஒவ்வோர் இனமும் தங்கள் நிலையை உயர்த்தவும் உறுதிசெய்யவும் கூட்டமைப்புகளை உண்டாக்குகின்றன என்று கூறுகின்ற கட்டுரை, அடுத்த சில நூற்றாண்டுகளில் பல்கிப்பெருகிய சாதியச் சமூகத்துக்கு உறுதியான அடித்தளம், 12-13ம் நூற்றாண்டுகளில் அமைந்துவிட்டது என்று அறுதியிடுகிறது.

‘புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்’ என்ற மூன்றாவது கட்டுரை, இத்தொகுப்பில் முக்கியமானது. நிலதானம் பற்றிய கல்வெட்டுகளின் இறுதியில் அமையும் பகுதி ‘ஓம்படைக்கிளவி’. பிராமணர்கள் சாதிச் சமூகத்தில் பெற்ற உச்சத்தை, இக்கட்டுரை சிறப்பாக விவரிக்கிறது. 13-ம் நூற்றாண்டு ஓம்படைக்கிளவிகளில், நிலதானத்திற்கு இடையூறு செய்பவர்களைச் சேரும் பாவம் மற்றும் தண்டனை முறையில் ‘துரோகி’ என்ற சொல் எழுச்சி பெறுவதை விவாதிக்கிறார் கராஷிமா. ‘பாவம்’ பற்றிய கருத்து விரிவடைவதற்கும் நிலவுடைமையில் நடந்த இறுக்கத்திற்கும் இடையேயான உறவை விவரிக்கிறார். அரச அதிகாரத்தின் வீழ்ச்சியால் வட்டார அமைப்புகள் உருவாகியதையும் இதனுள் அடக்கிக் காட்டுகிறார்.

‘15-ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி’ என்பது நான்காவது கட்டுரை. பொ.ஆ. 1429 -ம் ஆண்டில் நடந்த ஓர் உழவர் கிளர்ச்சி பற்றிய நா.வானமாமலையின் தகவல்களைச் சரிப்படுத்தும்விதத்தில் தொடங்கும் இக்கட்டுரை, கிளர்ச்சிப் போக்கு வட்டார ரீதியாகவும் படிப்படியாகவும் பரவலான விதத்தை விவரித்து முடிகிறது. அக்கிளர்ச்சியின் அடிப்படை, வரிப்பளு. அது விஜயநகர ஆட்சிக்காலம். 1370-1420க்கு உட்பட்ட விஜயநகர காலத்தில் பரம்பரை காலனியாளர்களும் புதிதாக வந்த அதிகார வர்க்கத்தினரும் பல வகைகளில் கைவினைத் தொழிலாளிகளைச் சுரண்டத் தலைப்பட்டார்கள். இத்தொல்லை மிகவும் வளர்ந்த நிலையில், விஜயநகர மன்னன், குடிகளின் புலம்பலுக்குச் சிறிது செவிகொடுத்தான். அதனால் சிறிது ஊக்கமடைந்த மக்கள், காணியாளரையும் அதிகாரவர்க்கத்தையும் எதிர்க்கத் துணிவுபெற்று கிளர்ந்தெழுந்தார்கள். இதற்கு, காணியாளர்கள் உடனடியாகப் பணிந்தனர். அதிகாரவர்க்கமும் அப்போதைக்குப் பணிந்திருக்கலாம். ஆனால், அக்கிளர்ச்சி, குறுகியகால வெற்றியே கண்டது என்று முடிக்கிறார் சுப்பராயலு.  எதிர்ப்பில் தோல்வியடையலாம். ஆனால், அழுத்தப்படும் மக்கள் எதிர்ப்பே இல்லாமல் எவ்வாறு இருந்திருப்பார்கள்?

தமிழ்நாட்டுச் சமூக வரலாறு பற்றிய ஆய்வுகள், இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ள நிலையில், இந்நூல் முக்கியமான வரவு. (தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும், நொபொரு கராஷிமா,
எ.சுப்பராயலு, NCBH, 2017)