Published:Updated:

மெய்ப்பொருள் காண்

மெய்ப்பொருள் காண்
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண்

மெய்ப்பொருள் காண்

பச்சை - ந.முருகேசபாண்டியன்

`சொல்லுக்குப் பொருண்மை தேடியலைதல்’ என்பது ஒருவகையில் புதிர்தான். ஒவ்வொரு சொல்லுக்கும் ஏதோ ஒரு பொருளைக் கற்பித்தல், காலம்தோறும் தொடர்கிறது. `எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற, சொல் குறித்த தொல்காப்பியரின் கருத்து இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது. மொழியியல், குறியீட்டுநிலையில் சொற்பொருள் குறித்து அர்த்தப்படுத்த முயல்கிறது. கவிஞர்களின் சொல் குறித்த தேடல்கள்தான் கவிதையாக உருவெடுக்கின்றன. யதார்த்தத்தில் சொல் விளையாட்டின் பின்புலத்தில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்ற தமிழர் வாழ்க்கையில், சொல் ஒரு நிலையில் அறமாக வடிவெடுத்துள்ளது. சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை.

மெய்ப்பொருள் காண்

ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில், வைகை ஆற்றில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் இறங்கும்போது உடுத்தியிருக்கும் ஆடையின் வண்ணம் முக்கியமானது. பல்வேறு வண்ணப் பட்டுத்துணிகளை ஒரு பெட்டியில் வைத்து மூடி, அதற்குள் கையைவிட்டு எடுக்கும்போது வரும் ஆடையின் வண்ணம்தான், அந்த வருடத்தின் இயற்கை வளத்தை முன்கூட்டியே அறிவிக்கும் என்பது ஐதீகம். இந்த வருடம் கள்ளழகர் பச்சை நிறப் பட்டு அணிந்திருந்ததால், சிறப்பான மழை பொழியும் என மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பச்சை என்பது, வண்ணத்தை மீறி வளத்தை மட்டும் குறிக்கிறதா? யோசிக்கவேண்டியுள்ளது. 

மெய்ப்பொருள் காண்தமிழில் `பச்சை’ என்ற சொல், புதை நிலையில்கொண்டிருக்கிற பொருண்மைகள் அளவற்று விரிகின்றன. அவற்றை அனுபவரீதியில்தான் விளங்கிட இயலும். பச்சை, வெளிப்பாட்டு நிலையில் தோற்றுவிக்கிற வேறுபட்ட அம்சங்கள் கவனத்துக்குரியவை. கள்ளங் கபடமற்றவரைக் குறித்திட `ஆளு, பச்சை மண்’ என்பது வழக்கினில் இருக்கிறது. அதேவேளையில், `பச்சை மண்’ என்பது ஈரமான மண்ணைக் குறிக்கிறது. அழகிய பெண் என்பதற்கு `பச்சைக் கிளி’ எனச் சொல்வது எப்படிப் பொருத்தமாகும்? பிற வண்ணக் கிளிகள் அழகு இல்லையா? இங்கு கிளியின் பச்சை நிறம், அழகின் குறியீடா?

கிராமத்தில் பெரியவர்கள் `கொஞ்சம் பச்சைத்தண்ணீர் கொடு’ என்று கேட்பதில் இடம்பெற்றுள்ள பச்சை, குளிர்ச்சியைக் குறிக்கிறது. பிறந்த குழந்தையைப் பச்சைக்குழந்தை எனக் குறிப்பிடுவதில், `பச்சை’ என்பது ஒரு வருடத்துக்குட்பட்ட குழந்தையைக் குறிக்கிறது. பட்ட மரத்திலிருந்து வேறுபடுத்திடப் பயன்படுகிற `பச்சைமரம்’ என்ற சொல்லின் முன்னோட்டான `பச்சை’, உயிருள்ள மரம் என்பதன் அடையாளமாகும். தானியம் செழித்து வளர்ந்துள்ள வயலை `பச்சை வயல்’ எனக் குறிப்பது, பயிர்கள் தளதள வென்றிருக்கும் வளமான வயல் என அர்த்தமாகிறது. போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி வதங்கிடும்போது, கொஞ்சம்கூட பச்சையே இல்லை என்பது, வளமின்மைக்கு அடையாளம்.

மதுரை பக்கத்துக் கிராமங்களில் இறந்தவரை சுடுகாட்டில் தகனம் செய்த பிறகு, அன்றிரவு பெண்கள் சேர்ந்து பொரி, கடலையுடன் இறந்தவர் நிமித்தம் செய்யப்படுகிற சடங்கு, `பச்சை போடுதல்’ எனப்படுகிறது. இறப்புக்கும் பச்சைக்கும் என்ன தொடர்பு? `காம்ஃபெர் லாரெல்’ என்ற மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கற்பூரத்தை, `பச்சைக் கற்பூரம்’ எனச் சொல்வதின் அர்த்தம் புலப்படவில்லை. அழியாத பச்சை மையால் உடலில் உருவங்களைக் குத்திக்கொள்ளும் `பச்சைக் குத்துதலில்’ பச்சை ஆகுபெயராகிவிட்டது. பாலியல் தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவதை, ‘பச்சைப் பச்சையாகப் பேசுதல்’ என்று சொல்வதில் இடம்பெற்றுள்ள பச்சை, எதைக் குறிக்கிறது?

தொழில்ரீதியில் விபசாரம் செய்யும் பெண்ணைப் `பச்சத் தேவடியாள்’ என்பதில் இடம்பெற்றுள்ள பச்சை, தொழிலில் கைதேர்ந்தவள் என்பதன் குறியீடாகும். தமிழர்களைப் பொறுத்தவரையில் பசுமை, பச்சை என்ற சொற்கள் உவப்பானவை. வெயிலின் தாக்கம் காரணமாக வறட்சியும் புழுக்கமும் நிலவும் தமிழகத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் `பச்சை’ என்ற சொல்லை தமிழர்கள் நேசித்தனர். தொண்டரடிப் பொடியாழ்வார், பெருமாளை `பச்சை மாமலைபோல் மேனி’ என்று பாடியிருக்கிறார்.

காதலின் நிறமும் பச்சை எனச் சொன்னால் மறுப்பதற்கில்லை. `அலை பாயுதே’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில், ‘பச்சை நிறம்’ இளம்பெண்ணுக்குக் குறியீடாகியுள்ளது.

பச்சை நிறமே... பச்சை நிறமே!
இச்சை ஊட்டும் பச்சை நிறமே!
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே!


பச்சை என்ற சொல் மூலம் பாடலாசிரியர் வைரமுத்து உருவாக்கியுள்ள புனைவு, பச்சையின் வழியாக காதல் ரசத்துடன் சிறகடிக்கிறது.

இறுதியாக, கவிஞர் யுவனின் கவிதையில் வரும் பச்சை:

குறிப்பு
கிளியென்று சொன்னால்
பறவையைக் குறிக்கலாம்
பச்சையைக் குறிக்கலாம்   
மூக்கைக் குறிக்கலாம்
பெண்ணைக் குறிக்கலாம்
சிறையைக் குறிக்கலாம்
சமயத்தில் அது
கிளியையும் குறிக்கலாம்   


பச்சை என்ற சொல் நீங்கள் நினைப்பதுபோல சில வேளைகளில் பச்சை வண்ணத்தையும் குறிப்பது, மொழி விளையாட்டின் விநோதம்தான்!   

துலுக்கன் - கீரனூர் ஜாகிர்ராஜா

`துலுக்கன்’ என என்னைக் காழ்ப்புடன் அழைப்பார், இன்று எவருமில்லை. ஆனால், என் சிறுபிராயத்தில் எல்லா சமூகத்துப் பையன்களுடனும் சேர்ந்து விளையாடிய சந்தர்ப்பங்களில் இவ்வாறு சிலரால் அழைக்கப்பட்டு மனதளவில் காயம்பட்டிருக்கிறேன். `துலுக்கன் புத்தி, தொண்டைக்குழி வரைக்கும்தான்’ என்கிற கிண்டலான வசை, என்னைப் பலமுறை துன்புறுத்தி அழவைத்திருக்கிறது. அந்த நாள்களில் நான் அண்ணன் அளவுக்கு மதித்த ஒருவர், `துலுக்கனுங்களுக்கெல்லாம் இங்கே என்னடா வேலை? பாகிஸ்தானுக்கு ஓடுங்கடா’ என்று விளையாட்டுக்குக் கூறியதைக் கேட்டு மனம் நொந்திருக்கிறேன். பிறகு, அவர் என் தோளில் கைபோட்டு சமாதானப்படுத்தி மன்னிப்பும் கேட்டார். என்றாலும், என் மனது ஆறாமல் உடனடியாக அவருடைய உறவைத் துண்டித்துக்கொண்டேன்.  

மெய்ப்பொருள் காண்

இன்றைக்கு அவருக்கு வயது 70. அவருடைய ஒரே மகள், முஸ்லிம் பையனைக் காதலித்து மணம்புரிந்துகொண்டதாக ஊரில் உள்ள நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன். அந்த அண்ணன், அவர்களுடைய திருமணத்தை அங்கீகரித்தார் என்றும், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து, தீபாவளியும் ரம்ஜானும் கொண்டாடுகிறார்கள் என்றும் அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த முறை ஊருக்குப் போனால், முதல் சந்திப்பும் உரையாடலும் அந்த அண்ணனுடன்தான் என்று இப்போதே திட்டமிட்டிருக்கிறேன்.

வாசிப்பும் எழுத்தும் தீவிரமாகத் தொற்றியிராத அந்தப் பள்ளிக்கூட நாள்களில், `துலுக்கன்’ போன்ற பொருளற்ற வசைகளுக்கு உடனே எதிர்வினையாற்ற இயலாமை குறித்து இப்போது நினைக்கையிலும் அவமானமாக இருக்கிறது. வாசிப்பும் எழுத்தும் வசப்பட்டபோது, என் வேர்களைக் குறித்தும் புரிதல் ஏற்பட்டது. இன்றைக்கு எவரேனும் `துலுக்கன்’ என்கிற விமர்சனத்துடன் என்னை வந்தடைந்தால், அவரை அமரவைத்து இரண்டு மணி நேரம் தீவிரமாக `வகுப்பு’ எடுத்துத் திருப்பியனுப்புகிறேன். இந்த `அனுபவம்’ சிலருக்குச் சமீபமாக வாய்த்தது. பிறகு, அவர்கள் `வாயை’ மூடிக்கொண்டு நண்பர்களாகி, “உங்கள் ‘கருத்த லெப்பை’ படித்தேன். ‘வடக்கேமுறி அலிமா’ படித்தேன்” என குறுந்தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

மெய்ப்பொருள் காண்`துருக்கர்’ எனும் சொல் தேய்ந்து `துலுக்கர்’ ஆயிற்று என்பார்கள். துருக்கியிலிருந்து வந்தவர்கள் என இதற்கு ஒரு விளக்கமும் தருகிறார்கள். 150 - 200 ஆண்டுகளுக்கு முன், மதம் மாறிய தமிழர்களை `துருக்கியன்’ என அந்நியமாக அழைப்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. தமிழகம் தவிர்த்து, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இஸ்லாமியர்கள் இவ்வாறு பொருளற்ற சொல்லால் அழைக்கப் படுவதில்லை.

கலிங்கத்துப் பரணியில் `சூத்திரர் குத்தர் குடக்கர் பிடக்கர் குருக்கர் துருக்கர்’ என்று ஜெயங்கொண்டார் எழுதுவதன் மூலம், 11-ம் நூற்றாண்டிலேயே `துருக்கர்’ எனும் சொல் புழக்கத்திலிருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்
ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்
சீனர் தெங்கணர் நெஞ்சகர் சோமகர்
சோனகேசர் துருக்கர் குருக்களே  


என, ராமனின் திருமணத்துக்கு வந்து குவிந்த மன்னர்களின் வரிசையை கம்பன் குறிப்பிடுவதாக, கம்பனை ஆய்ந்து எழுதி, பேசி, பாடிவரும் அண்ணன் நாஞ்சில்நாடன் கூறுகிறார்.

‘ஊழித் துலுக்கல்ல ஒட்டியான் துலுக்குமல்ல
வீழித் துலுக்கு வந்துற்றதே’


- என்றும் பழம்பாடல் பெருந்தொகை என நினைவுகொள்கிறேன்.

`துலுக்கு’ எனும் சொல் மருவி `மலுக்கு’ என்றும்கூட புழக்கத்தில் இருந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், பாண்டிச்சேரி ஃப்ரெஞ்சு இன்ஸ்டிட்யூட்டில் நடைபெற்ற நாட்டார் வழக்கு தொடர்பான நிகழ்வு ஒன்றில், சிறுவர் சிறுமிகள் கிராமத்தில் பாடிய `துலுக்கா மலுக்கா...’ பாடலை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அழகாகப் பாடிக்காட்டியது நினைவிருக்கிறது.

கிராமப்புறங்களில் இஸ்லாமியர் அல்லாத மாற்றுச் சமூகத்தினர், இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளை `துலுக்கத் தெரு’ எனக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் காலத்தில் இந்த வசிப்பிடங்கள் `துலுக்காணம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. `துலுக்காணம்’ இன்றைக்குப் பெயர்ச்சொல்லாகவும் மாறியிருக்கிறது.

எனக்குப் பிடித்த பாரதியின் சிருங்கார ரசம் சொட்டும் கண்ணம்மா பாடல்,

`தில்லி துருக்கர் செய்த வழக்கமடி
பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்துவைத்தல்’ என்றே தொடங்குகிறது.

இன்றைக்கும் ஆய்வுகள்செய்து ஆயிரக்கணக்கிலான பக்கங்களில் வரலாற்றுப் புதினங்கள் எழுதும் சில நாவலாசிரியர்கள், `துலுக்க ராஜாக்கள்’, `துலுக்க மன்னர்கள்’ என்றே எழுதுகிறார்கள். தேடிப்பார்த்தால் இன்னும் எத்தனையோ பழம்பாடல்களில் `துருக்கர்’ என்னும் சொற்பிரயோகத்தைக் கண்டெடுக்கலாம்.

தமிழகம் முழுக்க உள்ள கல்வெட்டுகளில் `துலுக்கர்’ குறித்த தகவல்கள் விரவிக்கிடக்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பத்தூர் கல்வெட்டு ஒன்றில், `துலுக்கராயன்’ எனும் சொல் காணப்படுகிறது. துலுக்கரில் வலியவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது அந்தக் கல்வெட்டு ஆய்வாளரின் அனுமானம்.

துலுக்கப்பட்டி, துலுக்கன்குளம், துலுக்கங்குறிச்சி, துலுக்கமுத்தூர், துலுக்கமொட்டை, துலுக்க தண்டாளம் என எண்ணற்ற தமிழ்நாட்டுக் கிராமங்களின் பெயர்களை அறிந்திருக்கிறேன். துலுக்க மல்லி, துலுக்கச் செவ்வந்தி என நம் மலர்களுக்குப் பெயர் உண்டு. சாலை விபத்தில் காயம்பட்டு கைகள் வீங்கிக்கிடந்த எனக்கு, `துலுக்கக் கற்றாழை அரைத்து, பத்துப் போடணும்’ என்று மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. கீரை வகைகளில் `துலுக்கப் பசலை’ பயறு வகைகளில் `துலுக்கப் பயறு’ என்றும் இருப்பது ஆச்சர்யத்துக்கு உரியது.

`துலுக்கர்’ எனும் பதம், தமிழோடு கலந்து இவ்வாறு பின்னிப்பிணைந்துவிட்டாலும், தமிழனாகிய நான் `துலுக்கா’ என்றழைக்கப்பட்டால் கோபப்படுகிறேன். அதுதான் சொல்லின் சூட்சுமம்!