மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

தொகுப்பு : வெய்யில், விஷ்ணுபுரம் சரவணன், தமிழ்ப்பிரபா, சக்தி தமிழ்ச்செல்வன்ஓவியங்கள் : கார்த்திகேயன் மேடி, பிரேம் டாவின்ஸி

கேள்விகளும் பதில்களும்தான் மனிதகுல வரலாறு. ஓர் அறிவுச் சமூகத்தின் இயக்கம் என்பது கேள்விகளாலும் பதில்களாலும் ஆனதுதான். கலை இலக்கியத்தின் விளைபொருள் என்ன? ஏதேனும் ஒரு வகையில் வாசகரிடம் ஒரு கேள்வியை அல்லது பதிலைக் கிளறுவதுதான். இந்தியப் பெருநிலத்தில் எப்போதுமே கேள்விகளைக் கருவிகளாகக்கொண்டு ஜனநாயகத்தை வலுப்படுத்தும் திரளாக, தமிழ்ச் சமூகம் இருந்துவந்திருக்கிறது; வரலாற்றின் பாதைகளை முறைப்படுத்தியிருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.

இந்த 25வது இதழின் சிறப்புப் பகுதியாக, 25 ஆளுமைகளிடம் 25 கேள்விகள் முன்வைத்து, 25 பதில்கள்களைப் பெறுவது எனத் திட்டமிட்டோம். மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், எனப் பல்வேறு துறை சார்ந்த கேள்விகளும் பதில்களும் எனத் தொகுப்பட்டிருக்கிறது இந்தப் பகுதி. மேலும் பல கேள்விகளும் விடைகளும் மறுகேள்விகளும் உருவாகி எழ, விவாதிக்கப்பட இப்பகுதி பயன்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

வட்டார மொழியில் எழுதப்படும் கவிதைகள் மீது ஒரு மதிப்பு குறைவான பார்வை உள்ளதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

நாஞ்சில் நாடன்

றியாமை என்று எடுத்துக்கொள்வேன். மொழியும் தெரியாது கவிதையும் அறிய மாட்டாதவர் என்றும். தத்தம் சொந்த மொழியைப் படைப்பில் ஆளத்தொடங்கிய போக்கு வலுத்த பின், அதன் மீதான வன்முறைதான் இந்த வட்டார வழக்கு என்ற அடையாளம். இலக்கியம் அறியா சில கல்லூரிப் பேராசிரியரும் தமிழறியா சில அறிஞரும் கையாண்ட சொற்றொடர் அது. கவிதைக்கு என்று மாத்திரம் இல்லை, சிறுகதை, நாவல் என்று படைப்பில் புதிய மொழிவாசல்களைத் திறந்து காட்டியவர் மீதான வசை அது. ஆர்.சண்முக சுந்தரம், நீல.பத்மநாபன், ஹெப்சிபா ஜேசுதாசன், ஆ.மாதவன், கி.ராஜநாராயணன்போன்ற மூத்த படைப்பாளிகள் அவ்வசைக்கு ஆளானார்கள்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்இந்த மண்ணின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வழங்கிய மொழியை, மனத்தடை நீங்கி இன்று சிலர் கவிதையிலும் முயன்று பார்க்கிறார்கள். வா.மு.கோமுவின், ‘வெறுங்குண்டி அம்மணம், போட்டுக்கடி சம்மணம்’. என்.டி.ராஜ்குமாரின் ‘தெறி’, ‘ஒடக்கு’, ‘ரத்த சந்தனப்பாவை’, ‘காட்டாளன்’ என்று பல தொகுப்புகள். தவசிக்கருப்புசாமியின் ‘அழிபசி’ தாணு பிச்சையாவின் ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ என்று உடனடியாகச் சில எனக்கு நினைவுக்கு வருபவை. அந்தக் கணக்கில் உயிருள்ள கவிதைகளை இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் ஈழத்துக் கவிஞர்களையும் இவர்கள் புறங்கையால் தள்ளிவிடுவார்கள்போலும்.

எம்மொழிக்குள்ளும் பிரதேசம் சார்ந்த சிறப்புத் தன்மைகள் உண்டு. சங்க இலக்கியங்களிலேயே அதற்குச் சான்றுகள் உண்டு. இந்தி, மராத்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பரிச்சயம் உடையவர்கள் பிரதேசத் தனித்தன்மையை உணர்வார்கள். வட்டார மொழி அல்லாத தமிழ் மொழி என்பது எது? கல்கியின், அகிலனின், நா.பா.வின் மொழியா? சென்னை வட்டாரத் தன்மைகள் இல்லையா? ஜெயகாந்தனிடம், புதுமைப்பித்தனிடம், சுந்தர ராமசாமியிடம், தி.ஜானகிராமனிடம், லா.ச.ராமாமிர்தத்திடம் இல்லையா? குமார செல்வாவும் கண்மணி குணசேகரனும் அழகிய பெரியவனும் பிரதேசச் சிறப்பான மொழியைப் பயன்படுத்தினார்கள். கீரனூர் ஜாகிர்ராஜா, ஐசக் அருமை ராஜன் எழுத்துக்களை எப்படிப் பாகுபாடு செய்வார்கள்? வட்டாரம் என்பது மதம் என்றும் இனம் என்றும் நீளுமா? வட்டார மொழியில் எழுதப்படும் கவிதைகளுக்கு மதிப்புக் குறைப்பு செய்பவர்கள், மதிப்புக்கூட்டும் மொழி என்ன என்று சொல்வார்களா? செய்யுளில் பயன்படுத்தப்படும் சொற்கள் என்று பட்டியல் ஒன்று தருவார்களா? தொல்காப்பியர் அனுமதி உண்டு, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் யாவும் செய்யுள் ஈட்டச் சொற்களே என்று. பிறகேன் புல்காப்பியர் பற்றிக் கவலை வேண்டும்? புறநானூற்றுக் காலம் தொடங்கி, கவிதைமொழிக்குள் தனி நிலம் சார்ந்த சொற்கள் விரவிக்கிடக்கின்றன. மொழியே இன்னதென அறிகிலார் செய்யும் பிழை இந்த வட்டாரப் பகுப்பு. மலையாளப் பிதாமகன் வைக்கம் முகம்மது பஷீர் எந்த மலையாள மொழியில் எழுதினார்? கவிதை என்பது மறைமலை அடிகளாரின், திரு.வி.க.வின் தமிழில்தான் எழுதப்படல் வேண்டும் என்று சொன்ன இலக்கண நூல்கள் எவை? பத்து லட்சம் சொற்களைக்கொண்ட மொழி இது. இதன் கவிதையை 5000 சொற்களுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், ஓங்கில் அறியும் உயர் கடலின் உள் ஆழம்!

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

அமைப்பியல், இருத்தலியல், பின்நவீனம் என்றெல்லாம் 90-களில் தமிழ் இலக்கியச் சூழலில் வளமான விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால், 2000-க்குப் பிறகு, குறிப்பிடும்படியான கோட்பாட்டு விவாதங்களே நிகழவில்லையே, இது இலக்கியத் துறைக்குப் பலமா? பலவீனமா?

ராஜன் குறை

ந்தக் கேள்வியில் குறிப்பிடப்படும் ‘இலக்கியச் சூழல்’, ‘இலக்கியத் துறை’ என்ற இரண்டு சொல்லாக்கங்களும் எதைக் குறிக்கின்றன என்பதை அறிவதே முக்கியம். தமிழ் இலக்கிய உலகு என்பதை 20-ம் நூற்றாண்டில் 1)ஜனரஞ்சக-வெகுஜன அச்சு ஊடகம், 2) சிறுபத்திரிகை என்ற சமூக வலைப்பின்னல் சார்ந்த ஊடகம் (இதில் சமூக-அரசியல் இயக்கங்கள் சார்ந்த செயல்பாடுகளும் அடக்கம்), 3)பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள் சார்ந்த பயிற்சிகள் என்று மூன்று முக்கியக் களங்களைக் கொண்டதாகக் கணிக்கலாம்.

கேள்வியில் குறிப்பிடப்படும் சில கோட்பாட்டு விவாதங்கள் சிறுபத்திரிகை, இயக்க வலைப்பின்னல் சார்ந்த களங்களில் முன்னெடுக்கப்பட்டன. சில சமயம் அவற்றில் ஏற்பட்ட உக்கிரமான கருத்துமோதல்கள்,  ‘சுவாரஸ்யம்’ கருதி பிற களங்களிலும் கவனிக்கப்படத் தொடங்கின; கல்விப்புலத் தொடர்புகள் அதிகரித்தன. ஜனரஞ்சக-வெகுஜன ஊடகங்களும் கவனம் தரத் தொடங்கின. தமிழில் வெளிவந்த ‘இந்தியா டுடே’, கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’ ஆகியவை சிறுபத்திரிகை வலைப்பின்னலைப் பரவலான ஊடகவெளிக்குள் நுழைத்தன. கல்வியாளர்களாக விளங்கிய வீ.அரசு, தமிழவன் உள்ளிட்ட பலரது முயற்சிகளால் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளில் இந்த விவாதங்கள் ஒலிக்கத் தொடங்கின.

உலகெங்கும், 90-கள் எனப்படும் 20-ம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகள் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. சோவியத் ரஷ்யா என்ற அமைப்பு, சிதைவாக்கம் பெற்று ஒற்றைத்துருவ உலகம் எனப்படும் ஒன்று உருவான தோற்றம் முக்கியமானது. தேசிய வாதங்கள் கடந்த அடையாளம் சார்ந்த கேள்விகள் தீவிரமாக உருவானதில் வர்க்க அரசியல், தேசிய அரசியல், அடையாள அரசியல் என்று மூவகை அரசியல் போக்குகள் உருவாயின. இதன் பகுதியாகவே தமிழில் மேற்சொன்ன களங்களிலும் அலை-பாய்தல் அதிகரித்தன.

21-ம் நூற்றாண்டின் மாற்றத்தினுடைய பெயர் இணையம். முதலில் ‘வலைப்பக்கம்’, ‘இணையப் பத்திரிகைகள்’ எனத் தொடங்கி, இன்று ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’, ‘யூ ட்யூப்’ எனப் பலவகையான புதிய களங்கள் உருவாகிவிட்டன. இவற்றில் பல்வேறு வலைப்பின்னல்களில் விவாதங்கள் முன்னெடுக்கப்படுவதாகவே தோன்றுகிறது. திடீரென விரிவுகொண்டுவிட்ட இந்தக் களத்தினால் என்ன நடக்கிறது, நடக்கவில்லை என்பதை உள்வாங்குவதே கடினமாக இருக்கிறது.

ஆனால், இலக்கியச் சூழலின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது படைப்பிலக்கியமே.  ‘தாண்டவராயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ போன்ற நாவல்கள் வெளியாகும் காலம் பொற்காலமே. இவை போன்ற படைப்புகளில் தன்னியல்பாக தத்துவங்களும் கோட்பாடுகளும் உள்மடிப்புகளாக அமைந்துவிடுகின்றன.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

கிராமங்களில் உள்ள நாட்டார் தெய்வக் கோயில்களையும் வழிபாட்டு முறைகளையும் வைதீகம் உள்ளிழுத்துக்கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், ‘நாட்டார் வழிபாட்டில் சாதியத்தை இறுக்கமடையச் செய்யும் கூறுகளுண்டு’ என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நிலையையும் விமர்சனத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆ.சிவசுப்பிரமணியன்

நா
ட்டார் தெய்வங்களில் பெரும்பாலான ஆண்தெய்வங்கள், சாதி, பதவி, பொருளாதாரம் என்பவனவற்றால் மேட்டிமை நிலையில் நின்ற ஆதிக்க வகுப்பினரின் ஆணவக்கொலைக்கு ஆட்பட்டுத் தெய்வமானவர்கள். இவர்களுள் பெரும்பாலோர் அடித்தள மக்கள் பிரிவினர் என்பதுடன் ஒடுக்கப்பட்ட சாதியினருமாவர்.

குடும்பப் பெருமையைக் காப்பாற்றுவது என்ற பெயரால் பெருமிதக்கொலைக்கு ஆளான பெண்களே அம்மன்கள் ஆகியுள்ளனர். இவ்வரலாற்றைக் கூறும் நாட்டார் தெய்வத் தோற்றக் கதைகளில் (Orgin Myth) மாறுதல் செய்து, இத்தெய்வங்களை மேல்நிலையாக்கும் பணியை மேட்டிமையோர் மேற்கொண்டு, தம் முன்னோரின் ஆணவக்கொலைச் செயலை மறைத்துள்ளனர்.

தம் சமூகப் பொருளியல் நிலையை உயர்த்திக்கொண்ட அடித்தள மக்களுள் ஒரு சாரார், வைதீகக் கடவுளர்களுடன் தம் கடவுளர்களை இணைத்து, தம்மை உயர்த்த விரும்புகின்றனர். ஆனால், இவ்விரு முறைகளாலும் வழிபாட்டு முறைகளில் மாறுதல்கள் நிகழவில்லை. மீனாட்சிபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள், இஸ்லாமியர்களாக மதம் மாறிய பின்னரும், மண்டைக்காடு கலவரம் நிகழ்ந்த பின்னரும், வலுப்பெற்ற இந்து முன்னணி, திட்டமிட்டு நாட்டார் சமயத்தில் ஊடுருவி, தெய்வங்களின் தோற்றக் கதைகளில் மட்டுமின்றி வழிபாட்டு முறைகளிலும் மாறுதல் செய்துவருகிறது. இதற்குத் துணையாக ‘கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை’ என்ற அமைப்பையும் தோற்று
வித்துள்ளது. அடையாள அழிப்பின் வழிமுறையாக இவை நிகழ்ந்துவருகின்றன.

மற்றொரு பக்கம் முற்போக்காளர்களும் பகுத்தறிவாளர்களும் நாட்டார் சமயத்தை, சாதி சார்ந்த ஒன்றாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், நாட்டார் தெய்வ வழிபாட்டின் மூலம் அடித்தள மக்கள், தம் முன்னோர்களை நினைவுபடுத்திக்
கொள்கிறார்கள். தமிழ்நாட்டின் உண்மையான சமூக வரலாற்று வரைவு, வட்டார அளவிலிருந்துதான் தொடங்கப்படவேண்டும். அவ்வாறு தொடங்கும்போது, வட்டார வீரர்களாக (Local Hero) இத்தெய்வங்கள் இடம்பெறும்.

கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, சுந்தரலிங்கம், கந்தன் பகடை, பாரதி, வ.உ.சி., காமராஜர் போன்ற விடுதலை வீரர்கள், சாதி அமைப்புகளால் இன்றுஅரவணைத்துக்கொள்ளப்
பட்டுள்ளார்கள். இதற்காக இவர்களை ஒதுக்கிவிடுகிறோமா? தமிழ்ச் சமூக அடித்தள மக்கள் பிரிவினர், தமக்கான அடையாளத் தேடலில் இதை மேற்கொள்கிறார்கள். இதுபோன்றதுதான் நாட்டார் தெய்வங்களுடன் தம்மை அடையாளப்
படுத்திக்கொள்வதும்.

மொத்தத்தில், ‘சாமிகள்’ ஆசாமிகளைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை, இன்று மாறுதலடைந்து, சாமிகளை ஆசாமிகள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற சமூக எதார்த்தம் உருவாகியுள்ளது.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

கடந்த சில வருடங்களில், தமிழில் சிறார் இலக்கியம் சார்ந்து ஏராளமான புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. உண்மையிலேயே சிறார் இலக்கியம் மகிழ்ச்சிகொள்ளும் அளவில் புத்தெழுச்சி பெற்றிருக்கிறதா?

யூமா வாசுகி


மிழ் சிறார் இலக்கியம் தீவிர செயல்பாட்டுடன் இருந்த காலம் ஒன்று இருந்தது, 50-களில். இப்போதைய நம் சூழலில் சிறார் இலக்கியத்தின் நிலை மிகவும் பலவீனம்கொண்டிருக்கிறது. இந்த வகையில் நிறைய நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன தான். ஆனால், அவற்றில் நல்ல புத்தகங்கள் காணக்கிடைப்பது அபூர்வம். சிறார் இலக்கியம் குறித்தான கருப்பொருள், கவித்துவம், சொல்முறை நுட்பம், வாசிப்பின் மகிழ்வு, இலக்காகக்கொள்ளும் மனவிரிவு - விழிப்பு ஆகியவற்றுக்கெல்லாம் நானறிந்த முன்மாதிரி அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா உள்ளிட்ட முன்னோடிகளின் படைப்புகள்; ரஷ்ய, மலையாள, இன்னபிற வேற்றுமொழி இலக்கியங்கள். இவற்றின் தரத்துடனும் அழகியலுடனும் ஒப்பிடும்போது, சமகாலத் தமிழ் சிறார் இலக்கியப் படைப்புகள், பெரும்பாலும் உட்சிதைந்த எலும்புகள் வெளித்தெரியும் விதமாக வறண்டு, உயிரற்று, இயல்பற்றுக் காகிதங்களில் முடங்குகின்றன.

பெரியவர்களுக்கு எழுதுவதைவிடப் பேரளவான கவித்துவம், சிறாரெழுத்தாளர்களின் நெஞ்சில் சுரக்கவேண்டும். மொழியின் மிகு லாகவப் பிரயோகம் கூடவேண்டும். கட்டற்ற குழந்தைமையும், விண்ணிலும் மண்ணிலும் உள்ள ஒவ்வொன்றும் குறித்த அக்கறையும் அன்பும் நிலவவேண்டும். தவிர, வெளிப்பாட்டு யுக்திக்கான பிரக்ஞையும் முக்கியமாகிறது. இதற்கான பாடுகளில், இதற்கான துயர்களில் தன்னை ஒப்புக்கொடுப்பவரே மனங்களைப் பூக்கச் செய்கிறார். நம் முன் மனமுவக்கும் படைப்பாக காலத்தில் எஞ்சுகிறார். இந்த எண்ணத்தினூடே பார்க்கும்போது, நமது  இக்கால சிறார் இலக்கியச் செயல்பாடுகள் மிகப் பெரும்பாலும் ஏமாற்றமும் சோர்வும் அளிக்கின்றன. வெகுசன  நாளிதழ் இணைப்பான சிறார் பக்கங்களில் வரும் படைப்புகளும்கூட, அடிப்படை ரசனையும் கவனமும் இன்றியே தேர்வுசெய்யப்
படுகின்றன.

நல்ல சிறார் இலக்கியப் படைப்புகள் தாய்ப்பாலுக்கு நிகரானவை என்று நம்புகிறேன். பிள்ளைப் பிராயத்தில் படித்துக் களிக்கும் நல்லதெதுவும் எக்காலத்திலும் உள்ளத்துக்கு உரமாக உடனிருப்பவையே. இன்று நம் தலைமேல் விழுந்து மூச்சுவிட முடியாமல் அழுத்தும் இழிவுகளையெல்லாம் நாளையேனும் அகற்றுவதற்கு, நாளையேனும் மனிதம் சகல உரிமைகளுடனும் மகத்தான கனவுகளுடனும் நிமிர்வதற்கு, நம் பிள்ளைகளுக்குக் கலை இலக்கியம் ஊட்டுவதொன்றே வழி.

மிகப் பரந்து விரிந்த தமிழ்வெளியில், அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சில முயற்சிகளைக்கொண்டு மட்டும் திருப்தியடைய வேண்டிய துரதிர்ஷ்டம் நமக்கு. நமது அரசும், பெரும் படைப்பாளிகளும், ஊடகங்களும், பதிப்பகங்களும், பெருநிறுவனங்களும், அமைப்புகளும்  சிறார் இலக்கியத்தின் காலகாலக் கட்டாயத் தேவையை உணர்ந்து, அதற்கு முகங்கொடுத்து, தீவிரமாகச் செயல்பட்டால், அதன் தொடர்ச்சியாகப் பெரும் சாதனைகள் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி சாதனங்கள் வழியே கிராமங்களும் கிராம மக்களின் மனஉலகும்கூட வெகுவாக மாறிவருகின்றன. இந்த மாற்றங்களின் பலமாக, பலவீனமாக எவற்றைப் பார்க்கிறீர்கள்?

சோ.தர்மன்

லகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கியிருக்கும் மாற்றங்களின் தாக்கம், கிராமங்களையும் விட்டுவைக்கவில்லை. கிராமங்களுக்கே உரிய அடிப்படைத் தொழிலான விவசாயம், அதன்மூலம் உருவான பண்பாடு, கூட்டுழைப்பு போன்றவை முற்றாக சிதைக்கப்பட்டதில் தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு பிரதானமானது. அதேசமயம், பொதுவெளி என்ற ஒன்று ஏற்றத்தாழ்வற்ற தன்மையை அடைய தொழில்நுட்பம் உதவியிருக்கிறது.

விவசாயம் பிரதானத் தொழிலாக இருக்கும்போது, சார்ந்துவாழ்தல் என்பது தவிர்க்கமுடியாத வாழ்வியல் கூறாக இருந்தது. ஆனால் தனி மனித, குடும்ப, சமூகங்களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, சார்ந்துவாழ்தல், கூட்டுழைப்பு போன்றவற்றை முற்றாக நிராகரித்திருக்கிறது.

உணவு, உடை, பண்பாடு, மதம், ஆன்மிகம், பாரம்பர்யம் போன்றவை ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு தன்மை உடையவையாக இருந்தன.தொழில்நுட்பத்தின் பிரதான அங்கங்களான அச்சு, ஒலி, காட்சி ஊடகங்கள் போன்றவை இன்று பொதுவெளியில் அவற்றை ஒற்றைப்பரிமாணம் கொண்டவையாக மாற்றியிருக்கின்றன. சாதாரண விவசாயி, தற்போது ஒரு தொழில்நுட்ப வல்லுனராகவும் மெக்கானிக்காகவும் விளைபொருள்களைச் சந்தைப்படுத்தும் நிபுணத்துவம் உடையவராகவும் கட்டாயமாக மாற வேண்டிய நிர்பந்தத்தைத் தொழில்நுட்பம் உண்டாக்கியிருக்கிறது.

வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பெருநகரங்களிலும் போய் வேலைசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் அதேவேளையில், வேலை வாய்ப்பிற்கான பரந்த வெளியையும் உருவாக்கி தந்திருக்கிறது. உணவு விஷயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம், கிராமம் - நகரம் என்ற இடைவெளியை முற்றாக தகர்த்திருக்கிறது. பிரதானமான சிறுதானிய உணவு வகைகள் இந்தத் தலைமுறைக்கே தெரியாது. உடை விஷயத்தில் ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளவிட முடியாதது.ஒரு சினிமா நடிகையிடம் அல்லது ஒரு மாடலிங் செய்யும் பெண்ணிடம் இருக்கும் அத்தனை வகை உடைகளும் அழகுசாதனப் பொருள்களும் கிராமத்துப் பெண்களிடம் இருக்கின்றன.அதன் தேவை சார்ந்த புரிதல்கள் அவர்களிடத்தில் இல்லை என்பதுதான் பெருந்துயரம். மொத்தத்தில் கிராமங்கள் சிதறடிக்கப்பட்டுவிட்டன.

முதியவர்கள் தவிர்த்து, பெரும்பாலான இளைஞர்கள் யாரும் கிராமங்களில் இல்லை. கிராமங்கள், முதியோர் இல்லங்களாக மாற்றப்பட்டுவிட்டன. முதியவர்கள், சாவுக்குப் பயப்படவில்லை. ஆனால், தனிமைக்குப் பயப்படுகிறார்கள். உறவுகள் இருந்தும் அருகிலிருக்க முடியாத நிர்பந்த வாழ்வுமுறை. மனிதர்கள் கூடும் மரத்தடிகள், சத்திரம், சாவடி, மடம் போன்ற பொது வெளிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அல்லது இடிந்து தூர்ந்துகிடக்கின்றன.  இதுதான் இன்றைய கிராம யதார்த்தம். தகவல் தொழில்நுட்பம், நகரம் - கிராமம் என்ற இடைவெளியை முற்றாகத் தகர்த்திருப்பதோடு, புதிய புதிய பண்பாட்டு மையங்களை உருவாக்கி வைத்திருக்கின்றது. கிராமம் - நகரம் என்ற பிரிவினை இனி ஆவணங்களில் மட்டுமே.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

பின்நவீனம் பற்றிய உரையாடல்களே கடந்த சில ஆண்டுகளாக இலக்கியச் சூழலில் இல்லை. அடையாள அரசியல் முன்னெடுப்புகளும்கூட குறுங்குழு அரசியலாக மாறிக்கொண்டிருக்கிறதே... பின்நவீனம், அடையாள அரசியல் ஆகியவை குறித்த விவாதங்களைத் தொடங்கியவர் என்ற முறையில் உங்கள் அவதானிப்பு என்ன?

அ.மார்க்ஸ்

பி
ன்நவீனத்துவம் குறித்த உரையாடல் மட்டுமா இன்று இல்லை... கால் நூற்றாண்டுக்கு முன் இருந்த என்னவெல்லாம் இன்று இல்லை என எண்ணிப் பாருங்கள். ஜனநாயகம், சோஷலிசம், மதச்சார்பின்மை, இலவசக் கல்வி, மருத்துவம், நிரந்தர வேலை முதலான சமூகப் பாதுகாப்புகள், தம் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கடைப்பிடிப்பதற்கான மக்களின் உரிமைகள் எல்லாம்தான் இன்று இல்லை. எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் மனச்சாட்சி என்று சொன்ன காலம் இல்லை இது. இன்று எழுத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள். அதைக் கண்டித்து அரசின் விருதைத் திருப்பிக் கொடுத்த மூத்த எழுத்தாளர்களை ஓர் இளம் எழுத்தாளர் கேலி செய்கிறார். எல்லாவற்றிலும் மரபைப் போற்றுதல் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. சாபவிமோசனம், யயாதி என்றெல்லாம் நமது புராணங்களைக் கேள்விக்குள்ளாக்கிய எழுத்தாளர்கள் இன்று இல்லை. பழம் புராணங்களை விமர்சனமின்றிக் கொண்டாடி 500 பக்க நாவல்கள் எழுதும் காலம் இது.
 
சமகாலத் தத்துவ வளர்ச்சியின் நாற்றங்கால் எனப் பல்கலைக்கழகங்களைச் சொல்வார்கள். இன்று பல்கலைக்கழகங்கள், கண்காணிப்பிற்குரிய சிறைச்சாலைகள் ஆகிவிட்டன. உயராய்வுகள் முடக்கப்
படுகின்றன. தரமற்ற ஆசிரியர்களைப் பல்கலைக்கழகங்களில் திணிக்கிறது அரசு. கலைப் பாடங்கள், Inter-disciplinary ஆய்வுகள் கூடாது என்கிற குரல்கள் மேலெழுகின்றன. JNU போன்ற பல்கலைக்கழகங்கள் IT மையங்களாக மாற்றப்படுகின்றன.

ஒரு மிகப் பெரிய அறவீழ்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் எவருக்கும் இது குறித்த பிரக்ஞையே கிடையாது. இந்த மாற்றங்களை எல்லாம் மறந்துவிட்டு,  ‘ஏன் பின்நவீனத்துவ விவாதங்கள் இல்லாமல் போச்சு’ எனப் பேசுவது என்ன நியாயம். நாங்கள் பின்நவீனத்துவம் பேசியது, ஒரு துருவ உலகம் உருவாகிக்கொண்டிருந்த காலம். அந்தப் பின்னணியில் கல்வி, மருத்துவம், அரங்கம், என அனைத்திலும் மாற்றை நாங்கள் முன்வைத்தோம். அப்படி முன்வைக்கப்பட்டதுதான் அடையாள அரசியலும். தலித் இலக்கியம் ஒன்று, மேலுக்கு வந்தது. இன்று மாற்றுகள் என்பதன் இடத்தில் எல்லாவற்றிலும் ‘பொதுப்போக்கு /regular/ மரபு’ என்பது மேலுக்கு வந்துள்ளது.

அடையாள அரசியல் சீரழிந்ததற்குக் காரணம், அது முற்றாக அறத்தைப் புறக்கணித்ததுதான். அருந்ததியர்கள் மீது பிற தலித்கள் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது என்றைக்கு அயோத்திதாசரின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டதோ அன்று தொடங்கியது, ‘தலித் அரசியலின்’ அறவீழ்ச்சி. அறிவொளிக் காலச் சிந்தனைகளை முற்றாக மறுத்தது பின்நவீனத்துவத்தின் மிகப் பெரிய பலவீனம் என்றால், ‘அறம்’ என்பதை கணக்கில் கொள்ளாமல்போனது தமிழக அடையாள அரசியல் வீழ்ச்சியின் தொடக்கம். பின் நவீனத்துவமும் அடையாள அரசியலும் அவற்றுக்குரிய முக்கியத்துவங்களை இழந்துபோனாலும், அவை ஏற்படுத்திய தாக்கங்களை இன்றைய இலக்கிய ஆக்கங்களோ, அரசியலோ முற்றாகக் கடந்துசெல்ல முடியவில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

‘சமகாலம் குறித்து ஓர் இலக்கியவாதி கவனம் தரத் தேவையில்லை’ என்று ஒருபுறம் குறிப்பிட்டுக்கொண்டே அவ்வப்போது சமகால நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்வது, சர்ச்சைகள் எழும்போது, ‘நான் வரலாற்றாய்வாளன் அல்ல; இது எழுத்தாளனின் தரப்புதான்’ என்று பதில் சொல்வது... இந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது?

ஜெயமோகன்

ங்கள் கேள்வியிலேயே ஒரு பகுதிதான் கேள்வி. இன்னொரு பகுதி அதற்கான விடை. ஓர் எழுத்தாளன் அனைத்துச் சமூக, அரசியல் பிரச்னைகளுக்கும் எதிர்வினை ஆற்றக் கூடாது. அது அவனைச் சமகால விவாதங்களுக்குள் இழுத்துவிட்டுவிடும். அதற்கு முடிவே இல்லை. அதன் விளைவாக அவன் தன் தனிப்பட்ட உணர்வுசார்ந்த, அறிவார்ந்த, ஆன்மிகமான கேள்விகளை இழந்துவிடுவான். இது என் தரப்பு, நான் கடைப்பிடிப்பது. ஆனால், முழுமையாக எதிர்வினையாற்றாமல் இருக்கவும் முடியாது. ஏனென்றால், அது ஒதுங்கிவிடுதல். அது காலப்போக்கில் சமகாலம் மீது அக்கறையற்றவனாக எழுத்தாளனை ஆக்கிவிடும். அப்படியென்றால் எதற்கு எதிர்வினையாற்றலாம்? எழுத்தாளனாக நின்று அவன் கருத்துசொல்ல இடமிருக்குமென்றால் மட்டும் பேசலாம். இதுவே நான் சொல்வது. 

நாம் குடிமகனாக, குடும்பத் தலைவனாக நம்மை வைத்துக்கொண்டு ஏராளமான கருத்துகளைக்கொண்டிருப்போம். அவற்றை ஓர் அன்றாட அரட்டையில் சொல்வோம். எழுத்தாளனும் சாமானியன்தான். ஆனால், அவன் அவ்வாறு குடிமகனாகவும் குடும்பத் தலைவனாகவும் உணர்பவை அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தால், எழுத்தாளன் என்ற இடம் இல்லாமலாகும். எழுத்தாளனாகவே அவன் கருத்து சொல்ல வேண்டும். கருத்து சொல்பவர் எந்த அடையாளத்தை முன்வைக்கிறார் என்பது முக்கியமானது. துறைசார் நிபுணர், அரசியல் ஆய்வாளர், அரசியல் செயற்பாட்டாளர், சமூகப்பணியாளர் எனப் பலநிலைகளில் நின்று கருத்துக்களைச் சொல்கிறார்கள். எழுத்தாளன், எழுத்தாளனாக நின்று மட்டுமே கருத்து சொல்லவேண்டும், மேலே சொன்னவற்றில் பல தகுதிகள் இருந்தாலும்கூட. ஏனென்றால், எழுத்தாளனுக்கு மேலே சொன்ன எவருக்கும் இல்லாத இரு தகுதிகள் உள்ளன. உள்ளுணர்வே எழுத்தாளனின் ஆயுதம். அதோடு அவன் தன்னைச் சூழ்ந்திருப்பவர்
களின் நடுவே அவர்களில் ஒருவனாக வாழ்பவன், அவர்களைக் கூர்ந்து கவனிப்பவன். இந்த இரண்டு தகுதிகளால்தான் அவன் கருத்துகள் முக்கியத்துவம் அடைகின்றன. தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களை வாசிப்பவர்கள் மிகக் குறைவு. ஆகவே, பலருக்கும் எழுத்தாளனும் ஒரு குரல் மட்டுமே. ஆனால், பிற பண்பாடுகளில் அப்படி அல்ல. அங்கே எழுத்தாளனின் குரல், தனியான ஒரு தரப்பாகவே கருதப்படும். ஆகவே, எழுத்தாளன் தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லவேண்டும். எந்தக் கட்சி, கொள்கை, மதம், இனம் சார்ந்தும் தன்னை அறுதியாக அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடாது.

இதெல்லாம் தமிழ்ச் சூழலில் நூறாண்டுகளாக புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் வரை பலரால் சொல்லப்பட்டவைதான். இன்று சமூகஊடகங்கள் வந்த பின் பலரும் எழுத்தாளனைச் சமூக ஊடகங்களில் அன்றாடம் கருத்து தெரிவிக்கிறவர்களில் ஒருவராக நினைக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் அவன் கருத்து சொல்லவேண்டும் எனக் கேட்கிறார்கள். கருத்துச் சொன்னால், “இதைச் சொல்ல நீ யார்?” என்று கொதிக்கிறார்கள். அவர்களுக்காகவே இதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

நவீன கவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை ஆகிய மூன்றுக்குமிடையிலாக ஒரு தெளிவான கோட்டை வரைவதற்கான இடைவெளி இருந்துவந்தது. இன்று சமூகஊடக சுயப்பிரசுர வாய்ப்புகளால், எது என்ன வகை, எனக் கண்டுகொள்ள முடியாமல், எல்லா தன்மைகளும் எல்லா வடிவங்களிலும் கலந்து, குழம்பிக்கிடக்கின்றனவே?

பெருமாள் முருகன்

ல்லாத் தன்மைகளும் எல்லா வடிவங்களிலும் கலந்து குழம்பிக்கிடக்கட்டுமே. எது என்ன வகை எனத் தெளிவாக வரையறுத்துதான் ஆக வேண்டுமா? வரையறுக்க முடியாமல் இருப்பதுதான் இன்றைய நிலை என்றால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய காலமே எல்லாம் கலந்து குழம்பும் காலம்தான்.

மரபிலிருந்து துண்டித்துக்கொள்ள முடியாது; மரபை அப்படியேவும் வைத்துக்கொள்ள இயலாது. மரபிலிருந்து எதை எடுக்கலாம், எதை விடலாம் என்பதையும் தீர்மானிப்பது கடினம். மரபின் பிடியை உதறிவிட்டு, நவீனத்துக்குள் அப்படியே குதித்துவிடுவதும் சாத்தியமல்ல. நவீனத்தின் எந்தெந்த அம்சங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளலாம், எவற்றையெல்லாம் மறுத்துவிடலாம்? பிரவாகமாய் வரும் நவீனத்தின் அம்சங்களைப் பிரித்துப் பார்ப்பதே கடினமாக இருக்கிறது.

வாழ்வின் பொருட்டு நகரத்திற்கு வருபவரின் மனதில் கிராம ஏக்கம் நிரம்பி வழிகிறது. சரி, கிராமத்திலேயே இருக்கலாம் என்றால், நகரம் வசீகரம் காட்டி ஈர்க்கிறது. நகரத்துச் சாலைகள் எல்லாம் கிராமம் நோக்கியே வருகின்றன அல்லது கிராமத்துச் சாலைகள் எல்லாம் நகரம் நோக்கியே செல்கின்றன. விவசாயம், சாதி, ஆறு குளம், கிணறு, சொந்தம், பந்தம் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டுவந்து நகரத்தின் மேல் சுமத்த வேண்டியிருக்கிறது. சுமை தாளாமல் தத்தளிக்கும் நகரம், தன் பங்குக்கு வழங்கும் அச்சு வார்ப்புக்குள் திணித்துக்கொள்ளவும் தயாராக வேண்டியிருக்கிறது.

வாழ்வு தரும் குழப்பமே கவிதையிலும் பிரதிபலிப்பதால்தான், பிரித்து வகைகாட்டிச் சீட்டு ஒட்டிவைக்க முடியவில்லை. ஆகவே, கவிதை சரியான திசையில்தான் செல்கிறது என்பது உறுதியாகிறது. எனினும் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை ஆகிய அடையாளங்களில் தெளிவு இருப்பதாகவே தோன்றுகின்றது. மரபுக்கவிதை என்னும் சொல்லாட்சியை உருவாக்கியது புதுக்கவிதைதான். யாப்பு வடிவக் கவிதைக்கும் அதை உதறிய புதுவடிவக் கவிதைக்குமான வேறுபாட்டைக் காட்ட, எதிரிணைகளாக மரபுக்கவிதை - புதுக்கவிதை ஆகிய சொல்லாட்சிகள் உருவாயின.

யாப்பு வடிவக் கவிதை இனி சாத்தியமில்லை என்றான பிறகு, புதுக்கவிதை ஏற்கப்பட்டு அதில் நவீன வாழ்வின் அம்சங்கள் எல்லாம் ஏறிய பிறகு, எதிரிணைச் சொல்லாட்சிகளின் போதாமையின் காரணமாக நவீன கவிதை என்னும் அடையாளம் வருகிறது. எல்லாம் கலந்து குழம்பிக்கிடப்பதுதான் நவீன கவிதை. இன்றைய காலத்தின் கவிதை, நவீன கவிதை!

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

தமிழ்த் தேசியத் தளத்தில் குணா, தலித்தியத் தளத்தில் ரவிக்குமார் போன்றோர் பெரியாருக்கு எதிராக முன்வைத்த கருத்துகளை இப்போது தீவிரமாகப் பேசுவதற்கும் முன்வைப்பதற்கும் கணிசமான இயக்கங்களும் செயற்பாட்டாளர்களும் உருவாகியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ந.முத்துமோகன்

சி
க்கலான கேள்வி. ஒவ்வொரு கணுவாகத் தெளிவுபடுத்துவோம். குணா, ரவிக்குமார் போன்றோர் முன்பு பெரியாரை விமர்சித்த அடிப்படைகளும், இப்போதைய பெரியார் குறித்த விமர்சனங்களும் வேறு வேறானவை. அவற்றை ஒன்றுபடுத்திப் பேச முடியாது. முன்பைவிட பெரியாரை விமர்சிக்க, இப்போது  ‘கணிசமான இயக்கங்கள் உருவாகி’யுள்ளன என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ் தேசியத் தளத்தில் விமர்சனங்கள் கூடியுள்ளன. தலித்தியத் தளத்தில் விமர்சனங்கள் குறைந்துள்ளன. தொல்.திருமாவளவனின் நிலைப்பாடுகள் நிதானமாக உள்ளன.  ‘கணிசமாகக்’ கூடியுள்ளன என்ற கணக்கில் இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புகளை நீங்கள் சேர்த்துக் குறிப்பிடுகிறீர்களோ, என்னவோ!

ஈழப் போருக்குப் பிறகான தமிழ் உணர்வுகளை மட்டும் கணக்கில் கொண்டு, தமிழ்த் தேசியம் தன்னைக் கட்டமைத்து வருகிறது. பிற தேசிய எதிரிகளை உருவாக்குவதை மட்டுமே அது உத்தியாகக் கையாண்டு வருகிறது. சமீபத்திய தமிழ்த் தேசிய உருவாக்கத்தில் ஈழத்தமிழர் போராட்டம், விவசாயம், காவிரி நீர், சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள், டாஸ்மாக் ஆகியவை சார்ந்த பிரச்னைகள் முக்கியப் பங்கேற்று வருகின்றன. தமிழ்த் தேசிய உணர்வு, வெகுமக்கள் சார்ந்ததாக உருவெடுத்துவருகிறது. இது, திராவிட இயக்கக் காலத்தில்கூட நிகழாத அடிப்படை மாற்றம். இந்த அம்சத்தை செழுமைப்படுத்தி, தமிழ்த் தேசியம் முன்செல்வது, தமிழ் மக்கள் அரசியலுக்கான நல்ல ஒரு திசைவழி.

பெரியார் குறித்த இந்துத்துவ எதிர்ப்புகள் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக்கொண்டவை. மத்தியில் இந்துத்துவக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்ற அதிகார மமதை, அவர்களின் செயல்பாடுகளில் தெளிவாகத் தெரிகிறது. சனநாயகபூர்வமான விமர்சனங்களை, விவாதங்களை மேற்கொள்வதற்கான முன்அனுபவம் எதுவும் அவர்களிடம் தென்படவில்லை. ‘ஆட்சி அதிகாரம் நம் கையில், ஏதாவது செய்யுங்கள்...’ என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளது என்றே தோன்றுகிறது.

இந்திய வரலாறு நெடுக, இந்து மதம், சாதியமைப்பு, ஆணாதிக்கம் ஆகியவை இந்நாட்டின் பல கோடி மக்களுக்கு இழைத்த கொடுமைகளை, அவமதிப்புகளை நவீன சமூக உருவாக்கத்தின் ஒரு கட்டத்தில் மிகக் காத்திரமாக மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து, அவற்றுக்கு எதிராகப் போராடும் சுயமரியாதை உணர்வை உண்டாக்கியவர் பெரியார். இந்திய நாட்டின் வேறு எந்தப் பகுதியிலுமே இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டுமே ஒரு பெரியார் தோன்ற முடிந்தது. எனவே, அவர் குறித்த காழ்ப்புணர்ச்சி சார்ந்த அவதூறுகள், அவரது கருத்துநிலைகளை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

80-களில் இருந்தே மாய யதார்த்தவாதம், அ-நேர்கோட்டுமுறை என்றெல்லாம் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் முன்வைக்கப்பட்டாலும், சிறுகதைகளிலும் நாவல்களிலும் யதார்த்தவாதமே மீண்டும் நிலைகொண்டிருக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

எஸ்.ராமகிருஷ்ணன்

தார்த்தவாதமே நிலை கொண்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. யதார்த்தவகை எழுத்துக்கும் இடமிருக்கிறது என்பதே நிஜம். யதார்த்தம் என்பதை எப்படி, யார் வரையறை செய்வது... எது யதார்த்தம், யாருக்கு யதார்த்தம், எவ்வாறு யதார்த்தம் எனப் பல கேள்விகள் எழுகின்றன. மொழியைப் பயன்படுத்த தொடங்கிய உடனே, யதார்த்தம் உருமாறிவிடுகிறது என்பதுதானே நிஜம். ஒரு காலத்தில், ‘சொந்த அனுபவத்தை எழுதத் தெரிந்தால் போதும்’ என்றே எழுத்தாளர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அனுபவ எழுத்தே யதார்த்த எழுத்து என நம்பப்பட்டது. அதில், அனுபவத்தைத் துல்லியமாக எழுதுவது, மேலோட்டமாக எழுதுவது என இரு வகையினர் செயல்பட்டார்கள். 90-களில் இந்த அனுபவ எழுத்து, கேள்விக்குள்ளாக்கப்பட்டது. கற்பனையின் உதவியால் எதையும் துல்லியமான அனுபவமாக உருமாற்ற முடியும் என ‘போர்ஹே’,  ‘உம்பர்தோ ஈகோ’, ‘கால்வினோ’, ‘மார்க்வெஸ்’ போன்றோரின் படைப்புகள் அடையாளம் காட்டியது பலருக்கும் பீதியூட்டியது. 

‘உயர்தட்டு மக்களின் யதார்த்தமும் ஒடுக்கப்பட்டவர்களின் யதார்த்தமும் ஒன்றில்லை. யதார்த்தம் என்பதே ஒருவகை மூடுதிரைதான். அதன் பின்னே பல விஷயங்கள் மறைக்கப்படுகின்றன; ஒதுக்கப்படுகின்றன. சுயதணிக்கை மற்றும் பண்பாட்டுத் தணிக்கை கொண்டதே யதார்த்த எழுத்து. யதார்த்தத்தின் பின்னுள்ள சமூகக் காரணிகள், அரசியல், அதிகாரம் ஏன் படைப்புகளில் கேள்விக்கு உட்படுத்தப்படாமல் போகின்றன’ என்ற சிந்தனைகள் உருவாகின.

90-களில் அறிமுகமான லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் இந்த வகை எழுத்துக்கு முன்னோடியாக விளங்கின. தமிழ் இலக்கிய மரபு, யதார்த்தத்தை மட்டுமே கொண்டதில்லை. கம்பனும் இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனும் எழுதியதை எந்த யதார்த்தத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது. மணிமேகலைதான் தமிழின் மிகப் பெரிய மேஜிகல் ரியலிசப் படைப்பு. நாட்டுப்புறக் கதைகளில் பெரும்பான்மை, மாயமும் மந்திரமும் விசித்திரமும் கொண்டதாகவே இருக்கின்றன. நம் புராணங்கள், இதிகாசங்கள், தொன்மங்கள் எதுவும் யதார்த்தமாக இல்லையே.

வரலாற்று நாவல்களை யதார்த்தமானவை என எப்படி வரையறை செய்வீர்கள். யதார்த்தமில்லை என்பதற்காக அறிவியல் புனைகதைகளை ஒதுக்கிவிட வேண்டுமா?

இன்று காணப்படும் யதார்த்த வகைப் படைப்புகள், யதார்த்தத்தினைக் கேள்வி கேட்கிற, அதன் பின்னுள்ள சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக் காரணிகளை ஆராய்கிற, வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்துகிற, பெண்ணிய, தலித்திய சிந்தனைகள் கொண்டதாக உருமாறியிருக்கிறது. இவற்றை, ‘யதார்த்தத்தைக் கேள்வி கேட்கிற யதார்த்தவகைப் படைப்பு’களாகவே கருதுகிறேன்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

இன்றைக்கும் மையநீரோட்ட அரசியலிலும் மற்ற துறைகளிலும் தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் இடம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இவ்வளவு நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிரான மனநிலை என்பது நமது சமூகத்தில் அவ்வளவு ஆழமாக வேரூன்றி உள்ளதா?

சல்மா

வீனத் தொழில்நுட்பத்தில் மனிதர்கள்   எட்டியிருக்கும் உயரங்கள் அபரிமிதமானவை. எட்டிய உயரங்களில் ஆண் எட்டிய உயரமும் பெண் எட்டிய உயரமும் ஒன்றேபோல ஏன் சமப்படவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு வார்த்தையில் சொல்லிவிட இயலும்தான். ஆனால்,  ஓராயிரம் வார்த்தைகளில் சொன்னாலும்கூட தீராது. 

இது ஆண்களின் உலகம். ஆண்களால் கட்டப்பட்டது இந்த சமூகம். ஆண் எனும் அகங்காரத்தினால் பின்னப்பட்டது இந்த  மொழி. நமது பண்பாட்டுத் தளங்களில் பெண்ணடிமைத்தனம், எண்ணற்ற கூறுகளால் புனையப்பட்டது. கருத்தாக்கங்களாலும் புனைவுகளாலும் வழிநடத்தப்படுகிற இந்த ஆதிக்க சமூகத்தில், பெண்ணின் இடமென்பது ஆண்களால் ‘விட்டுத்தரப்படுகிற’ அல்லது அனுமதிக்கப் படுகிற இடங்களாகத்தான் இன்னும் இருக்கின்றன. அந்த இடங்களில்தான் பெண் புழங்க முடியும்.

இப்படித்தான் இந்த நூற்றாண்டிலும்  பெண்ணின் இடம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அவள் எவ்வளவுதான் போராடினாலும் எத்தனைதான் தன்னை நிரூபித்தாலும் சமூக அமைப்பின் ஏதேனும் ஒரு புள்ளியில் அவளுக்கான வழிகள் அடைபட்டு விடுகின்றன. அங்கே தனது ‘ஆண் எனும் கற்பிதத்தை செங்கோலாய்’ கையில் ஏந்தி அவன் என்பவன் நின்று கொண்டிருக்கிறான். பெண்ணால் இயலாதது ஏதுமில்லை என்கிற ஒரே ஒரு புரிதல்தான் ஆணின் மிகப் பெரிய வீழ்ச்சியாக, ஆணின் ஆகப்பெரும் பயமாக இன்றும் இருந்துகொண்டிருக்கிறது.

மையநீரோட்டத்தில் பெண்ணின் பங்களிப்பென்பதே ‘வழங்கப்பட்டதாகவும், வரையறுக்கபட்டதாகவும்’தான் இந்த நூற்றாண்டின் பக்கங்களில் பதிவாகியிருக்கிறது. அதனால்தான், வரலாற்றின் பக்கங்களில் ஆண் எட்டிய உயரமும் பெண்  எட்டிய உயரமும் எந்த அளவீடுகளின் வழியேயும் இன்னும் சமப்படவேயில்லை. இதுவே யதார்த்தம்!

இந்த தொழில்நுட்பங்கள்,  பெண் எனும் ஜீவனுக்கானதா என்ன... அது சொல்லாடல்களை மாற்றவோ, அதிகாரத்தின் கட்டமைப்புகளை பாதிக்கவோ செய்திருக்கிறதா என்ன?

ஆண் எனும் கருத்தாக்கமும், ஆதிக்க உணர்வும் கட்டப்பட்டிருப்பது பெண் வெறுப்பெனும் அஸ்திவாரத்தில் அல்லவா? அந்த அஸ்திவாரத்தின்  இறுகிய செங்கற்களைத் துளியேனும் அசைக்க, ஆண்  முன்வராதபோது   மையநீரோட்டத்தில் பெண்ணைத் தலைமைப் பொறுப்புக்கு எப்படி வரவிடுவார்கள்.  

மாபெரும் போராட்டங்களால் உடைத்தெறிந்த கரைகளைத் தாண்டி, மையநீரோட்டத்தின் கரைகளைத் தொட்டுடைக்கத் தளும்பிக்கொண்டிருக்கும் பெண்ணை, தீராத  வெறுப்பின் வழிநின்று எதிர்கொள்கிறது ஆண் எனும் பிம்பம். அந்த பிம்பத்தை உடைக்கும் வழிமுறைகளை ஆணைவிட பெண் நன்கு அறிவாள். அந்த உடைப்பின் நாளில் மைய நீரோட்டத்தில் பெண்ணின் தலைமையை ஆண் ஏற்றே ஆக வேண்டும். அந்த காலம் வரும்!

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

அரசியல் உணர்வோடு வரலாற்றுப் புனைவு எழுதுகிற பலரும், பல நூற்றாண்டுகளைக் கடந்துபோய் எழுதுகிறார்கள். ஏன் அவர்களால் மிகச் சமீபகாலங்களை எழுத முடிவதில்லை அல்லது எழுத முன்வருவதில்லை?

பிரபஞ்சன்

ரலாறு என்பது எப்போதும் பின்திரும்பி ஓடாத, திட்டமான பழக்கங்களைக் கொண்டது. அது முன்னோக்கியே எப்போதும் நடக்கும். நிதானமாகவோ வேகமாகவோ நடக்கும். ஆனால் நடக்கும். அது பழைமையான, மிகப் பழைமையான ஆள்களைப் பற்றியும் பேசும். நேற்று பிறந்த சிசுவைப் பற்றியும் பேசும். ‘என்ன இப்படி என்று’ வரலாறு எழுதியல்காரர்கள் பேச முடியாது.

எப்போதுமே மிகப் பழைமையான ஒன்றே வரலாறு அல்லது வரலாற்றுக்குச் செறிவானது என்ற மூடக்கருத்து தமிழர்களிடம் இருக்கிறது. அப்படி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவுக்கு இருக்கும் செறிவான வரலாற்றைப்போலவே, பின்னாலும் இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஊடாகக் காந்தியைக் கொல்ல தீட்டப்பட்ட சதியும் சமூகச்சூழலும் ஒரு நாவலுக்கு எத்தனை அழகிய அடித்தளம்.

எதையும் எழுதலாம். எழுதிக்கொண்டுபோகும் வரிகளில் ‘வாழ்க்கை’ நடந்து போக வேண்டும். நடப்பது என்பதே வரலாறு. ஆறு என்பது வழி.

புதுச்சேரி மாநிலத்தில் விடுதலை வரலாறு நடந்து முடிந்தது 1954-ல்தான். அதற்கு முன் 30-களில் ஆலைத் தொழிலாளர்களின் மகத்தான போராட்டம் நிகழ்ந்தது. அதற்காக, வெகு அண்மையில் நடந்த சுதந்திரப் போராட்டம், இல்லை என்றாகிவிடாது. நான் இந்த அலைகளை எழுதியிருக்கிறேன். ‘கண்ணீரால் காப்போம்’ என்பதே அந்த நாவல்.

கரிகாலச் சோழனின் வரலாற்றை எழுதும்போது அவன் காலத்து மொழி, கலை, பண்பாடு வாழ்க்கை, மனித மனோபாவம் ஒரு படைப்பாளிக்குத் தெரியவேண்டும். எங்கள் மகத்தான தலைவர் வ.சுப்பையா 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 20-ம் நூற்றாண்டின் சகல வண்ணங்களையும், முகங்களையும் ஆசை நேசங்களையும் அறிந்த வரலாற்றாளன் நான். ஆகவே, அவரைத் துல்லியமாக எழுதி இருந்தேன்.

வரலாறு, நூற்றாண்டுக் கணக்கில் கணக்கிடப்படக் கூடாது. வரலாற்றில் புதுசும் இல்லை, பழசும் இல்லை. வாழ்க்கை மட்டுமே உள்ளது. எழுத்துகள் எழும், காத்திருப்போம்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

மதவாதம் - மதவாதத்துக்கு எதிரான மனநிலை பெருகிவரும் இந்தச் சூழலில், இடதுசாரிகள் தீவிரமாக இயங்கியிருக்க வேண்டும்; வலுவானவர்களாக மாறியிருக்க வேண்டும். ஆனால், இரண்டிலும் நம்பிக்கை தென்படவில்லையே?

ஆதவன் தீட்சண்யா

தற்றமும் பகையுணர்ச்சியும் மிக்கதாக சமூகத்தை பிளவுபடுத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குரிய உதவிகளை சங்பரிவாரத்திற்கு - தனது வர்க்க நலனுக்காக - வழங்கிவரும் கார்ப்பரேட்டியம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததை, தன் சொந்த வெற்றியாகப் பார்க்கிறது. அது, நாட்டின் வளங்களையும் பொதுச் சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும் தங்குதடையின்றி சுரண்டிக் கொழுக்க பாதுகாப்பளிக்கும் அடியாள் படையாக சங்பரிவாரத்தையும் மத்திய அரசையும் பயன்படுத்துகிறது.

காவிப் பயங்கரவாதமும் கார்ப்பரேட் பயங்கரவாதமும் ஒன்றெனக்கூடிய இந்திய வகைப்பட்ட பாசிச அரசானது, குடிமக்களின் தனிப்பட்ட வாழ்வு, நாட்டின் மாண்புகள், சமூகம் தன்னை நிர்வகித்துக்கொள்வதற்கென வரலாற்றுப்போக்கிலும் அரசியல் சாசனப்படியும் உருவாக்கிக்கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் நேரடியாகத் தலையிட்டுக் கட்டுப்படுத்த முயல்கிறது. மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எனச் சமூகத்தின் வெவ்வேறு அடுக்கிலுள்ளவர்களும் தெருவுக்கு வருமளவுக்கு, மக்களுக்கும் அரசுக்குமான முரண் முற்றிக்கொண்டிருக்கிறது. மக்களின் எந்தவொரு போராட்டமும் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றது. உயிர்ப்பலி இல்லாத நாளே இல்லை. நேற்று பசுகுண்டர்களால் இருவர் கொல்லப்பட்டனர் என்றால், இதை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையிலோ ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்களத்தில் 13 பேர் அரசால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், மக்கள் தம் போர்க்குணத்தால் நாட்டை கொந்தளிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

(உங்கள் கேள்விப்படி) நாடெங்கும் நாளுக்கு நாள் பெருகிவரும் போராட்டங்களில் பலவும் இடதுசாரிகளால் தலைமை தாங்கப் படாதிருக்கலாம். ஆனால், ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக உயிர்த்தியாகம் செய்தேனும் போராட வேண்டுமென அவர்கள் வளர்த்தெடுத்துவரும் கருத்தியலே அப்போராட்டங்களின் உள்ளுயிராக இயங்கி வருகிறது. ஆகவே, இடதுசாரிகளின் முன்னேற்றம், வலதுசாரிகளால் சிதைக்கப்படும் மக்கள் ஒற்றுமையை வர்க்கப் போராட்டங்களால் நேர்செய்வதற்கான செயல்பாட்டினாலேயே மதிப்பிடப்பட வேண்டுமேயல்லாது, தேர்தல் முடிவுகளை மனமேற்கொண்டு அல்ல.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

பெண் படைப்பாளிகள், கவிதைகளில் இயங்கிய அளவு மற்ற எழுத்து வடிவங்களில் தீவிரமாக இயங்கவில்லை என்றும் நீங்கள் உள்ளிட்ட ஒரு நான்கைந்து ஆளுமைகளுக்குப் பிறகு புதிய வலுவான பெண் படைப்பாளிகள் உருவாகவில்லை என்றும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

குட்டிரேவதி


ந்தச் சமூகத்திற்கு கவிஞர்களை மதிக்கத் தெரியவில்லை என்பதற்கு, இந்தக் கேள்வி தொடர்ந்து இன்னும் எழுந்து கொண்டிருப்பதுதான் உதாரணம். முதலில் கவிஞர்கள், மற்ற எழுத்து வடிவங்களில் இயங்குபவர்களைப் போன்ற இலக்கியவாதிகள் அல்லர். கவிஞர்கள், சமூகக் களப்பணியாளர்கள். எவரும் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ள வில்லை என்றாலும், மற்ற எழுத்து வடிவங்களில் இயங்குவோருடன் கவிஞர்களை இணைத்துப் பார்ப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தக் கேள்வி தொடர்வதற்கு இன்னுமொரு சாதாரண காரணம், நாவல், சிறுகதை, கட்டுரை போன்ற எழுத்து வடிவங்களில் இயங்குபவர்களுக்கு உள்ள கவிதை எழுதும் பேராசை. உண்மையில், பெரும்பாலும் இந்த வெளிகளில் இயங்குவோர் எல்லோரும் கவிதை எழுத முயற்சிசெய்து தோற்றவர்கள்; அந்த முயற்சியைத் தொடரமுடியாமல், கவிஞர்களின் கவிதை நூல்களைத் தங்களின் பழைமையான தராசுகளில் எடைபோட்டுத் தரம் நிர்ணயிக்க விரும்புபவர்கள்; கவிதை விமர்சகர்களாகக் காட்டிக்கொள்பவர்கள். முதலில், இவர்கள் தங்களின் நாவல், சிறுகதை போன்ற புனைவு வேலைகளையே தொடரும்படி பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன். பெண் படைப்பாளிகள், கவிதைகளிலேயே இன்னும் தீவிரமாக இயங்கவேண்டும் என்பதையே நான் முன்மொழிவேன்; விரும்புவேன். ஏதோ நீங்கள் குறிப்பிடும் அந்த நான்கைந்து ஆளுமைகளை மட்டும் இந்தச் சமூகம் கொண்டாடிவிட்டது போல், அவர்கள் கவிதைகளையெல்லாம் இந்தச் சமூகமெங்கும் முதுகில் சுமந்து எடுத்துச் சென்று சோர்ந்ததுபோல் இந்தக் கேள்வியும் தொடர்ந்து கேட்கப்படுவது, வேடிக்கையாக இருக்கிறது. மன்னியுங்கள். உங்களை வருத்தப்படுத்துவது என் நோக்கமன்று.

இன்னும் இன்னும் பெண்கள் எழுத வந்தாலும் அவதூறுகளால், தொடர் எச்சரிக்கைகளால், கண்டனங்களால், எஸ்.வி.சேகர் எழுதுவதுபோன்ற இழிவான சொற்களால், பெண் படைப்பாளிகள் மீது தங்கள் இழிவான மனநிலையை ஏவி, கொண்டாடும் குரூர சாதி ஆணாதிக்க விமர்சனம் இது.

தொடர்ந்து பெண்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். முகநூலில் தொடர்ந்து வீரியமான கவிதைகளை, முந்தைய படைப்பாளிகளைவிடவும் தீவிரமாக எழுதும் நிறைய பெண் படைப்பாளிகளை நான் அறிவேன். ஒருவேளை, புதிய வலுவான பெண் படைப்பாளிகள் என்பதன் வரையறை என்பது, சமூகத்தின் அவதூறுகளைத் தாங்கும் வலுதான் என்றால், அதை வேண்டுமானால் அந்த நான்கைந்து ஆளுமைகளுக்குக் குத்தகைக்குக்  கொடுத்துவிடுவோம். பெண்கவிதை இதுவரை பெற்றது எல்லாம் சர்ச்சைக்கான கவனம்தான். அதை, பெண் கவிதை இயக்கத்திற்கான வெகுமதி என்று எடுத்துக்கொள்ள முடியாது. ‘சர்ச்சை’, என்பதை புதிய பெண் படைப்பாளிகளின் படைப்புச் செயல்பாடுகளுக்கு அளவுகோலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் என்ன எழுதுகிறார்கள், ஏன் எழுதுகிறார்கள் என்ற அடிப்படையான கேள்விகளை முன்வைக்காமல், நேரடியாக பலப்பரீட்சையில் இறங்க முடியாது. ஒருவகையில், பெண்ணெழுத்தின் வலுவைச் சோதிக்கும் ஆணின் பலப்பரீட்சைகளாக இருக்கின்றன, இந்தக் கேள்விகள்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

சங்க இலக்கியத்திலேயே நெய்தல் நிலம் சார்ந்த பாடல்கள் குறைவு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அன்றுதொட்டு இன்று வரை கடல்சார் மக்களிடமிருந்து இலக்கியப் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?

ஜோ டி குருஸ்

பெ
ரும்பாலான கடற்கரை ஊர்களில் சுவடிகள் பல இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவையெல்லாம் இன்று பூச்சியரித்து அழிந்து போயிருக்கலாம் அல்லது அவர்களோடேயே புதைக்கப்பட்டிருக்கலாம் அல்லது குலசாமிக் குற்றம் என்ற பெயரில் கொளுத்தப்பட்டிருக்கலாம். உண்மை இப்படி இருக்கும்போது, நெய்தலில் மட்டும் இலக்கியப் பங்களிப்பு இல்லை என்று எப்படிக் கூற முடியும். இங்கு, சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளின் மெத்தனப் போக்கு நாம் அறியாததா?

அந்தக் காலங்களில் பெரும்பாலும், கடற்கரைப் பட்டினங்கள்தான் கோநகர்களாக இருந்தன. வெளியுலகத் தொடர்புக்கான பாலங்களாக இருந்தன. அப்படி இருக்கும்போது, அங்கே பதிவுகள் நடக்கவில்லை என்பதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. திரும்பத் திரும்ப சங்ககாலப் புலவர்களான அம்மூவனார், உலோச்சனார், நல்லந்துவனார் போன்றோருக்குப் பிறகு, நெய்தலில் ஆளுமைகள் இல்லை என்று ஆய்வாளர்களால் பரப்புரை செய்யப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைத்த இளங்கோவின்  ‘சிலப்பதிகாரமும்’, தண்டமிழ்ச் சாத்தனாரின்  ‘மணிமேகலை’யும் நெய்தல் புலவர்களால் பாடப்பட்ட கடற்கரை இலக்கியங்கள். ஆற்றுப்படை  நூல்களான ‘பெரும்பாணாற்றுப் படை’யும், ‘சிறுபாணாற்றுப்படை’யும் கடற்கரைப் புலவர்களாலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வுகள் உணர்த்தும் பாடம். சமீபத்தில் பள்ளம் புலவர் தொ.சூசைமிக்கேல் அவர்களும் தன்னுடைய ஆய்வு நூலில் திருவள்ளுவர் நெய்தல் நிலத்தவரே எனத் தரவுகளோடு ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்.

முதல் சங்கம் நடந்ததாகச் சொல்லப்படும் தென்மதுரையும், இடைச்சங்கம் நடந்ததாகச் சொல்லப்படும் கொற்கையும் மருத நிலத்திலா இருந்தன... ஏன், மதுரையில் மூன்றாம் சங்கமே கடற்கரைக்காரர்களான கொற்கைப் பாண்டியர்களால்தான் நிறுவப்பட்டது. நெய்தலின் பதிவுகளைக் கடல்கோள் கொள்வதற்கான வாய்ப்பும் இருக்கிறதே. கிடைத்தவற்றில் இவ்வளவு பங்களிப்பு…

16ம் நூற்றாண்டுக்குப் பிறகான வாழ்க்கைமுறை வேறு. தென் தமிழகத்தில் கத்தோலிக்கராக மதம் மாறிய அந்தோனிக்குட்டி அண்ணாவி போன்ற பரதவ ஆளுமைகள் உளவியல் சிக்கலால் புனிதர்களைப் பாடுவதிலேயே முடங்கிக்கிடந்தார்கள். அதுவும் ஒரு தொய்வுநிலைதானே தவிர, பங்களிப்பற்ற நிலையில்லை என்பதை இதன் மூலமாக உறுதிபடச் சொல்கிறேன்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

கல்வி அமைப்புகள், வரலாற்று ஆய்வுத் துறைகள், விருது கமிட்டிகளில் இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதிக்கமும் செல்வாக்கும் அதிகமிருப்பதாக ‘ஒரு தரப்பு’ விமர்சனங்களை முன்வைக்கிறதே... உங்கள் கருத்து?

ச.தமிழ்ச்செல்வன்

து புளித்துப்போன அறுதப்பழைய வலதுசாரி வாதம். நாட்டின் குடியரசுத் தலைவர், துணைத்தலைவர், பிரதமர், பல மாநில கவர்னர்கள், முதல்வர்கள் என முக்கியப் பதவிகளில் எல்லாம்
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அமர்த்தப்பட்டுள்ள காலம் இது. நாட்டின் முக்கியமான கல்வித்துறை (என்.சி.இ.ஆர்.டி, யு.ஜி.சி, பல பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் என) அறிவியல் துறை, வரலாற்றுத் துறை உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை, ராணுவம், காவல்துறை என எல்லா நிறுவனங்களிலும் சங்பரிவாரத்தின் குஞ்சுகள் ‘பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ள’ ஒரு காலம். மாணவர்கள், அறிவாளிகள், படைப்பாளிகள் அத்தனை பேரின் எதிர்ப்புக்கும் இடையே, பூனா திரைப்படக் கல்லூரி இயக்குநராக ஆர்.எஸ்.எஸ். ஆளை நியமித்ததை மறக்க முடியுமா? சமீபத்திய பத்ம விருதுகள் பெரும்பாலும் சங் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டதை அதற்குள் மறந்துவிட முடியுமா என்ன?

இவர்களுக்குக் கண்ணை உறுத்துவ தெல்லாம் சாகித்ய அகாடமி விருதுதான். வேற ஒரு புடலங்காயும் கிடையாது. சாகித்ய அகாடமியின் 60 ஆண்டு காலப் பயணத்தில் ‘ரகுநாதன்’,  ‘திகசி’, ‘பொன்னீலன்’, ‘மேலாண்மை பொன்னுச்சாமி’, ‘டி.செல்வராஜ்’, ‘சு.வெங்கடேசன்’ போல நாலைந்து அமைப்புசார் இடதுசாரிகளுக்கு விருது வழங்கப்பட்டதுதான் இவர்கள் பிரச்னை. நிகழ்கால அத்துமீறல்கள் எதுவும் பிரச்னை இல்லை. என்ன ஒரு மோசமான உளவியல் இது?!

இடதுசாரி என்றால் யார், வலதுசாரி என்றால் யார், அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின் சார்பாகக் குரல் எழுப்புகிறவரையே ‘இடதுசாரி’ என்கிறோம்.முதலாளி வர்க்கத்தின் சார்பாகக் குரல் எழுப்புகிறவரை ‘வலதுசாரி’ என்கிறோம். இடதுசாரிகளில் ‘அமைப்பு சார்ந்து இயங்கும் இடதுசாரிகள்’, ‘அமைப்புகளில் இல்லாத இடதுசாரிகள்’ என இரு வகை உண்டு.

பண்டித நேரு தலைமையில் முதல் சுதந்திர அரசு அமைந்தபோது, உருவாக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அறிவுசார் அமைப்புகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்தபோது, இடது சிந்தனைப்போக்கு உள்ளவர்களே பொருத்தமானவர்களாக அவருக்குக் கிடைத்தார்கள். ‘விமோச்சன சமரம்’ நடத்தி, அமைப்பு ரீதியாக இடதுசாரிகளை ஒடுக்கியவர்தான் நேரு என்கிற வரலாற்றையும் மனதிற்கொள்ள வேண்டும்.
‘வலதுசாரி அரசியல் தேசப்பிதா காந்தி’யைக் கொலைசெய்த பின்னணியில், வலதுசாரிகள் மக்களால் வெறுக்கப்பட்ட அக்காலத்தில், கல்வி கலாசாரப் பொறுப்புகளில் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்க முடியாது. இன்று கோட்சேயின் புதல்வர்கள் மீண்டெழுந்து வந்திருக்கும் பின்னணியில் இத்தகைய வாதம் மறுபடியும் எழுப்பப்படுவதாக நான் புரிந்துகொள்கிறேன்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

தமிழ் ஓவியமரபு, நீண்ட வரலாற்றைக்கொண்டது. தற்காலச் சூழலில் தமிழில் ஓவிய இயக்கம் எப்படி இருக்கிறது? இது குறித்த புரிந்துணர்வு சமகாலப் படைப்பாளிகளுக்கு இருக்கிறதா?

சி.மோகன்

பா
ரம்பர்யக் கலைச் செழுமையில் தொன்மையும் உயர்வும் பெற்றிருந்த இந்தியா, அந்நிய ஆதிக்கத்தாலும் கால மாற்றத்தாலும் பல துறைகளிலும் மனிதவளச் செயல்பாடுகளில் தேங்கிப் போய், 18-ம் நூற்றாண்டின் இறுதியில் திசை தெரியாது திகைத்தும் குழம்பியும் நின்றது. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கலை இலக்கியத் தளங்களில் வெளிப்பாடுகள் நிகழத் தொடங்கின. அச்சமயத்தில் நம் கலைமரபின் தொடர்ச்சியிலிருந்து துண்டுபட்டுவிட்டிருந்த இரண்டு நூற்றாண்டு
களின் அதலபாதாளம் விரிந்துகிடந்தது. தொடக்கத்தில் மேற்கத்தியக் கல்வித் துறைசார் ஓவியங்களை நகல் செய்யும் பயிற்சியே ஆதிக்கம் செலுத்தியது. இச்சூழலில், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் கலைக்குப் புத்துணர்ச்சியூட்டும் ஓர் இயக்கம் எழுந்தது. இந்தியக் கலையானது, அடிப்படையில் இலட்சிய, மாய, குறியீட்டுத்தன்மைகள் கொண்டது என்றும், இயற்கையை அது நகல் செய்வதில்லை; மாறாக, புனைவுக் கற்பனையோடு அதன் ஆத்மார்த்த அழகையே அகப்படுத்துகிறது என்றும் 1896-ல் கல்கத்தா கலைப் பள்ளியின் முதல்வராக இருந்த இ.பி.ஹாவெல் வலியுறுத்தினார். இதனையடுத்து, இந்திய ஓவியப் புத்துயிர்ப்பு இயக்கம் உருவானது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 1960-களில் ‘மெட்ராஸ் மூவ்மென்ட்’ என அறியப்பட்ட ஒரு நவீனக் கலை இயக்கம் கே.சி.எஸ்.பணிக்கரால் உருவானது. இந்தியக் கலையின் சாரமாக எது இருக்கிறதோ, அதுவே நவீனக் கலையின் உயிர்ப்பாகவும் இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது.  இவ்வியக்கத்தின் போது, ஐரோப்பியக் கல்வித் துறைசார் பகுப்பாய்வு உத்திகள் புறமொதுக்கப்பட்டன. காலனிய ஆதிக்கம், இந்தியக்கலை அரங்கிலிருந்து வெளியேறவும் நம் கலை மரபின் சாரம் நவீனக் கலையில் உயிர் கொள்ளவும் இவ்வியக்கம் உறுதுணையாக இருந்தது. பேராற்றல்மிக்க உருவபாணி கொண்டது நம் நாட்டார் மரபு. விசித்திரக் கவர்ச்சியும் ஒரு நிகழ்ச்சி பற்றிய குறுங்கதைத் தன்மையும் கொண்டது நம் மினியேச்சர் மரபு. மகத்தான காவியத் தன்மைகொண்டது நம் செவ்வியல் மரபு. ஆற்றல்மிக்க உருவம், குறுங்கதை, காவிய அம்சம் ஆகிய நம் மரபுக்கோலங்கள் தமிழக நவீன ஓவியக் கலைவெளியில் உள்ளுறைந்தன. அதன் தொடர்ச்சியாக, நவீன ஓவியக் கலையில் நாம் பெருமிதம் மிக்க பல படைப்பாளிகளைக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நவீன ஓவியக் கலைஞர்களுக்கும் சிற்றிதழ் இயக்கப் படைப்பாளிகளுக்குமிடையே ஓர் இணக்கமான பரிவர்த்தனை நிகழ்ந்துவருகிறது. இன்று, கதை கவிதைகளுக்கான சித்திரங்களாகவும், புத்தகங்களுக்கான முகப்போவியங்களாகவும் இவ்வுறவு மிகவும் நெருக்கமடைந்திருக்கிறது. நவீன ஓவியங்கள் தொடர்ந்து பார்வைக்கு உள்ளாகிவருகின்றன. நவீன ஓவியங்களைப் புரிந்துகொண்டு அழகியல் அனுபவங்களின் செழுமையை ஏற்க விழையும் மனோபாவமும் மேம்பட்டிருக்கிறது. எனினும், நவீன ஓவியவெளி இன்னும் பரவலாக அறியப்படாத புதிர்ப் பிரதேசமாகவே இருந்துவருகிறது.  அப்பிரதேசத்தில் நாம் தொடர் பயணங்கள் நிகழ்த்துவதன் மூலமாக மட்டுமே அவற்றோடு நாம் உறவாடவும், நம் அழகியல் அனுபவங்களின் சாத்தியங்களை விஸ்தரிக்கவும் முடியும்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

பல ஆயிரம் ஆண்டு காலத் தொடர்ச்சிகொண்ட தமிழ் நவீனக் கவிதையின் இன்றைய இடம் என்னவென்று கருதுகிறீர்கள்?

ரமேஷ் பிரேதன்

லக்கிய வடிவங்களில், ஒரு மொழியில் தொன்மையானதும் செய்நேர்த்தி மிக்கதுமான வடிவமாகக் கவிதையே இருக்கிறது. கவிதையின் உள்ளே ஒரு நிகழ்த்துக்கலையும் கதைசொல்லும் முறையும் இயங்குகின்றன. கவிதையைச் சிதைவாக்கினால், ஒரு நாடகத்தையும் கதையையும் உண்டாக்கலாம். கவிதை, நாடகம், கதை என்ற மூன்றும் இயல்பில் ஒன்றோடொன்று பிணைந்த வடிவம். பின்நவீன உள்ளம், கவிதையிலிருந்து வெளியேறிவிட்டதாகச் சொன்னால், அது மொழியாலான அனைத்துக் கலைவடிவங்களிலிருந்தும் வெளியேறி விட்டதாகவே பொருள்படும்.

இலக்கியம் என்ற கலைவடிவம், செயல்படும் ஊடகமாக, உடம்போ உடம்புக்கு வெளியிலுள்ள பொருளோ இருப்பதில்லை. அது உடம்புக்குள் நிகழும் உள்ளம் என்ற பேரமைப்பைத் தன் செயல்படும் ஊடகமாகக்கொண்டிருக்கிறது. உள்ளம் மொழியாலானது. மொழியிலிருந்து யாராலும் எக்காலத்திலும் வெளியேற முடியாது. மொழியே ஒரு விலங்கை மனிதராக்குகிறது. இந்த நிலப்பகுதியிலுள்ள விலங்காகிய நாம், பேசுவதால் மனிதராகிறோம். தமிழ் பேசுவதால் தமிழராகிறோம்.

செவ்வியல் உள்ளம் கவிதைத்தனமானது. 2000 ஆண்டு முதிய சங்கக் கவிதைகளும் இன்று எழுதப்படும் முகநூல் கவிதைகளும் ஒரே வகையான செவ்வியல்தனமான உள்ளஅமைப்பிலிருந்து வெளியாகின்றன. இன்று கவிதை எழுதும் தமிழ்த் தன்னிலையின் வயது, 2000 ஆண்டுகள். கிறிஸ்து பிறந்த பிறகு, எழுதப்பட்டுத் திரட்டப்பட்ட சங்கக் கவிதைகள் விளைந்த உள்ளமானது, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே பதப்படுத்தப்பட்டது. நவீனம், பின்நவீனம் என்றெல்லாம் கவிதைக்கு இல்லை. கவிதையுள்ளம் மிகப்பழையது.

இலக்கியம் தவிர்த்த பிற கலைகள், மொழி என்ற ஊடகத்தைத் தவிர்த்தவை. அவை புறப்பொருளாலான திடமான கட்டுமானங்களைக் கொண்டவை. மொழிவழிக் கலைவடிவங்கள் யாவும், தமது இயங்குத்தளமாக தனிமனித உள்ளத்தையே கொண்டிருக்கின்றன. எனவே, ஓர் இலக்கியப் பனுவலுக்கு ஒருபடித்தான முழுமையோ முற்றொருமையோ அமையாது. மனிதருக்கு மனிதர் அது வெவ்வேறாக நின்று பொருள் தருவது. அதிலும் கவிதை என்பது, அதிகப்படியான மறைபொருள்
தன்மை கொண்டது. ஆகவேதான் கவிதை, வாசிக்கப்படும் அளவிற்கு விமர்சிக்கப்படுவதில்லை. இம்மறைபொருள் தன்மையானது, கவிதையை இறைமைக்குள் கொண்டுசெலுத்துகிறது.
இருண்மை, இறைமை, பொருண்மை இவை கவிதையின் அடிப்படைப் பண்புகள். இம்மூன்றும் சேர்ந்த கலவையே செவ்வியல் தன்மையை ஒரு பனுவலுக்கு ஏற்றுகிறது. செவ்வியல் தன்மையே ஒரு பனுவலை, காலத்தை விஞ்சி நிலைநிறுத்துகிறது. இன்றைய தமிழ்க் கவிதை செவ்வியல் தன்மையைத் துறந்து நிற்கிறது. பின்நவீனத்துவச் செவ்வியலை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்ப்பது நடக்கிறதே... அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

சாரு நிவேதிதா

ன்றைய இந்தியா முழுவதுமே இந்தப் போக்கு இருந்துவருகிறது. அதுவே தமிழிலும் பிரதிபலிக்கிறது. இதை ஒருவிதமான இந்துத்துவ மீட்டுருவாக்கம் என்றே சொல்ல வேண்டும். சி.சு.செல்லப்பாவும், க.நா.சு.வும் தொடங்கிவைத்த நவீனத்துவம் (modernism), பின்னர் பின்நவீனத்துவமாக மாற்றமடைந்து, இப்போது சடாரென்று திரும்பி 100 ஆண்டுகளுக்குப் பின்னே போய்விட்டது.

நவீனத்துவம் என்பது ஒரு ஸ்டைல் அல்ல; டெக்னிக் அல்ல. அது ஒரு பார்வை. பாரம்பரியத்தின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டு, நவீன காலச் சிந்தனைகளை நோக்கிய பாய்ச்சலே நவீனத்துவம். உதாரணமாக, தன் கணவனையே தெய்வமாகக்கொண்டு தொழுது துயில் எழுபவள், பெய் என்றால் மழை பெய்யும் என்கிறது திருக்குறள். ஆனால், தி.ஜானகிராமனின்  ‘மரப்பசு’வில் வரும் அம்மணி, தனக்குப் பிடித்த அத்தனை ஆண்களோடும் உறவு வைத்துக்கொள்கிறாள். இப்படிச் சொன்னால், நவீனத்துவம் என்றால் ‘பாலியலை எழுதுவது’ என்று தவறான புரிதலை ஏற்படுத்தலாம். அது தவறு. நவீன சிந்தனை வளர்ச்சிக்கேற்ப பிரச்னைகளைக் காண்பதே நவீனத்துவம். ஒரு பெண்ணின் துயரத்தை  ‘அது அவள் விதி’ என்று பார்க்கிறது பாரம்பரியம். ஆனால், அந்த விதியை எதிர்த்துக் கலகம் செய்கிறது நவீனத்துவம். ஆனால், பழைய இதிகாசங்களைத் திரும்ப எழுதுவதன் மூலம், நம் எழுத்தாளர்கள் மொழியையும் சிந்தனைப்போக்கையும் திரும்பவும் 100 ஆண்டுகளுக்குப் பின்னே கொண்டுசெல்கிறார்கள்.

பின்நவீனத்துவத்துக்கு நேர் எதிரான இந்தப் போக்கினால் இலக்கியத்தின் பன்முகத்தன்மை அடிபட்டுப்போகிறது. எல்லாவற்றுக்கும் ஒற்றை முடிவு கொடுக்கப்படுகிறது. இது ஒருவகையில் அரசியல்ரீதியான பாசிசப் போக்கோடு ஒத்துப்போவதாகும். ‘வேறு’ அல்லது ‘பிறிது’ (Other) என்ற அடையாளத்தை அழித்து, ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு கடவுள், ஒரு கலாசாரம் என்று எல்லாவற்றையும் ஒரே அச்சில் வார்ப்பதுதான் இதன் இறுதி விளைவாக அமையும். ஆக, இதிகாசங்களைத் திரும்ப எழுதுவது, இன்றைய இந்தியாவின் அரசியல் சமூகப் பிரச்னையாக இருக்கும்; ஒற்றை அடையாளத்தோடு ஒத்துப்போவதாகவே இருக்கும். இது இலக்கியத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரானது. இங்கே இலக்கியம் என்பதை தேசம் என்றும் வாசித்துக்கொள்ளலாம்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

முள்ளிவாய்க்கால் சம்பவம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றில் தொடங்கிய தமிழர் அடையாள எழுச்சி, இன்று தீவிரமடைந்திருக்கிற சூழலில், தமிழரின் அடையாள அரசியலின் அடிப்படையாக இருக்க வேண்டிய விஷயங்கள் எவை என்று கருதுகிறீர்கள்?

பொ.வேல்சாமி

டையாள அரசியல் என்பதே பொதுமக்களை முட்டாள்களாக்கும் உள்ளடக்கம்கொண்டது. கடந்த கால தமிழ்நாட்டு வரலாறு, நமக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது. உள்ளத்தில் உண்மையில்லாதவர்கள், தங்களுடைய வார்த்தை ஜாலங்களைக்கொண்டு பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, நாட்டையும் மக்களையும் நட்டாற்றில் விட்டதைத்தான் பார்க்கின்றோம். அடையாள அரசியலை முன்னெடுத்த மனிதர்கள் அனைவரும் பாசிஸ்ட்டுகளாகத்தான் இருந்தனர் என்பதை உலக வரலாறு உணர்த்துகிறது. மொழியையோ, இனத்தையோ, மதத்தையோ முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்திய எவராலும் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்ததில்லை. அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றில் பொதுமக்களுக்கு ஈடுபாட்டை உண்டாக்கத் தகுதியில்லாத மனிதர்கள்தான் அடையாள அரசியலைக் கையில் எடுக்கின்றனர்.

கடந்த கால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில்,  ‘தேனாறு பாயும் பாலாறு பாயும்’, ‘தமிழ் மொழியின் பெருமை உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கும்’ என்று பொதுமக்களுக்குக் கிளுகிளுப்பூட்டி ஆட்சியில் அமர்ந்தவர்களால் எத்தகைய மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கண் உள்ளவர்களும் கருத்து உள்ளவர்களும் நன்றாகப் புரிந்துவைத்துள்ளனர். இன்றைய தலைமுறைக் குழந்தைகள், நம்முடைய தாய்மொழியான தமிழை வீட்டில்கூட பேசுவதை மறந்துவருகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதேபோன்று, நம்முடைய பொருளாதார நிலையும் எந்த அளவு நோஞ்சானாக மாறிக்கொண்டுவருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரசியல், பொருளாதாரம், அறிவியல், பண்பாட்டு தளத்தில் இன்று உயர்ந்துநிற்கும் எந்த நாடும் தன்னுடைய வளர்ச்சிக்கு அடையாள அரசியலைக் கையில் எடுக்கவில்லை.

 பொதுமக்களிடையே கல்வியையும் பொதுக்கருத்தியலில் பகுத்தறிவையும் போதித்து, அதன் வழியாக ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால்தான் இன்றைய உன்னத நிலையை அடைந்துள்ளன. இனம், மொழி, மதம் போன்றவற்றால் வெறியூட்டப்பட்ட மனிதர்கள் வாழும் நாடுகளில் ரத்தக்களறியும் பொருளாதார வீழ்ச்சியும் அதன் வழியே அம்மக்களின் அவலமான கதறல்கள்தான் நிகழ்ந்துவருகின்றன. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகச் சூழலில் அறிவை செம்மையாகப் பயன்படுத்துகின்ற மக்கள்தான் வெற்றியடைந்துவருகின்றனர். நாம் அறிவை அடகுவைத்துவிட்டு, உணர்ச்சிகளுக்கு அடிமையானால் நம்முடைய வீழ்ச்சியை எவராலும் தடுக்க முடியாது.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

காசி ஆனந்தன், சிவாஜி லிங்கம் போன்றோர் இந்துத்துவ அமைப்புகளின் மேடைகளில் கலந்துகொள்வது, ஈழப் படைப்பாளிகளான அகரமுதல்வன் அரவிந்த் நீலகண்டனை வைத்து நூல் வெளியிடுவது, வாசு முருகவேல், புலிகளின் இஸ்லாமிய வெளியேற்றத்தை நியாயப்படுத்தி நாவல் எழுதுவது, எனத் தொடர்ச்சியாக ஈழ ஆதரவாளர்களில் சிலர் இந்துத்துவ ஆதரவு நிலையை மேற்கொள்கின்றனர். இப்படியாக ஈழ, புலி ஆதரவளர்களின் இந்துத்துவ நகர்வை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

தமிழ்நதி

மு
தலில், ‘ஈழ, புலி ஆதரவாளர்களின் இந்துத்துவ நகர்வு’ என்று, சிலரது நகர்வை ஈழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் பொதுமைப்படுத்தும் கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை. தமிழகத்தில் 80-களிலிருந்து நிலவிய ஈழ ஆதரவு அரசியல் (இடையில் பின்னடைவுகளும் உண்டு) பற்றிய வரலாற்றுப் புரிதல் சிலருக்கு இல்லை. கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரிகள் என்றால் சி.பி.எம். மட்டுமே என்றும், திராவிட அரசியல் என்றால், தி.மு.க. (2006-க்கு முன்பிருந்த தி.மு.க.வேறு) மட்டுமே என்றும் சுருக்கிப் புரிந்துகொள்கிறார்கள். அதேபோல, இந்துத்துவ சக்திகள் ஒருபோதும் ஈழவிடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை என்பதையும் இவர்கள் கவனத்திற்கொள்ளவில்லை.

திராவிட, பெரியாரிய அரசியலின் பாதிப்பினால் தமிழகத்தில் எப்படி இந்துத்துவ அரசியல் தலையெடுக்க முடியாமற் போயிற்றோ, அதேபோல ஈழத்திலும் இனவிடுதலை, உரிமை மீட்பு ஆகியவற்றின் தாக்கத்தினால் பெருவாரியான மக்கள் இந்துத்துவ அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாதிய படியமைப்பு முறையை மீளக் கட்டமைத்தலும், மதத்துவேசமும் இந்துத்துவ அரசியலின் முக்கியமான அடிப்படைக் கூறுகள். இவை பெரும்பான்மையான மக்களை அரசியற் களத்திலிருந்து வெளியேற்றும் தன்மைகொண்டவை. எனவே, இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவான எத்தகைய செயற்பாடுகளும் இனவிடுதலை அரசியலுக்கு எதிராகவே அமையும். இந்த இடத்தில், காசி ஆனந்தன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரின் செயற்பாடுகள் (என்னதான் ராஜதந்திர நடவடிக்கை என்று முட்டுக்கொடுக்கப் பார்த்தாலும்) தவறானதே!

அகரமுதல்வன், அரவிந்தன் நீலகண்டனை தனது நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்க வைத்ததைப் பொதுவெளியில் கண்டித்திருந்தேன். ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளச் செய்து அவர்களது கருத்துக்கு எதிர்வினையாற்றுவது அல்லது அம்பலப்படுத்துவதென்பது வேறு, தலைமை தாங்க வைப்பது வேறு. அப்படிச் செய்யும்போது அத்தகையோரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகிவிடும். இந்துத்துவவாதிகளின் செயற்பாடுகள், நாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிற இடதுசாரி தமிழ்த் தேசிய அரசியலுக்கும், விடுதலை நலன்களுக்கும் எதிர்த்திசையில் செல்வன. விடுதலைப் புலிகளின் காலத்தில் மதம், சாதி இன்னபிறவற்றின் அடிப்படையில் சகமனிதரைத் தாழ்த்துவது, இழிவுசெய்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இந்நிலையில், இந்துத்துவவாதிகளுடன் ஒட்டியுறவாடிக்கொண்டே இலங்கைப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல்கொடுப்பதென்பது வினோதமானது!

எழுத்து வழி என்னதான் நியாயப்படுத்தி னாலும், காரணங்களை அடுக்கினாலும் இஸ்லாமியர்களை யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றியது தவறு. தாங்கள் செய்தது தவறு என விடுதலைப் புலிகளே ஏற்றுக்கொண்டு வருத்தமும் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்காக வாசு முருகவேலின் நாவலுக்கு எதிராக கையெழுத்துகளைத் திரட்டுவதென்பது அதீதம். மேற்குறித்த ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்துக்கொண்டு, ஈழமண்ணில் இந்துத்துவம் தலையெடுத்துவிடும் என்று சிலர் அஞ்சுகிறார்கள். அது, அர்த்தமற்ற, மிகைப்படுத்தப்பட்ட பயம். ஈழத்தில் சிவசேனாவின் செயற்பாடுகள் வெறும் சலசலப்புகளாகவே எஞ்சும்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

வட்டார மொழிகளில் சாதியக்கூறுகள் ஒலிப்பதை அந்த இலக்கியத்தின் அல்லது மொழியின் அரசியல் சிக்கலெனக் கொள்ளலாமா?

இமையம்

மொ
ழியின் வழியாகத்தான் மக்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வோர் இனக்குழுவும் தனக்கான மொழியைப் பாதுகாத்துக்கொள்வதில் அக்கறையுடன் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல வட்டாரங்கள் இருக்கின்றன. அந்தந்த வட்டாரத்திற்கேற்ப தனித்த பேச்சுவழக்கும், வட்டாரவழக்கும் இருக்கிறது. வட்டாரவழக்கு நிலம் சார்ந்து, வாழும்முறை, செய்யும் தொழில், நிலவியல், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், சடங்குகள் சார்ந்து உருவாவது.

மொழியில் எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு, உயர் வழக்கு, புலவர் வழக்கு வட்டார வழக்கு என்று பல வகைமைகள் இருக்கின்றன. எழுத்து வழக்கு இலக்கண ரீதியாக ஒருங்குபடுத்தப்பட்ட வாக்கிய அமைப்பைக்கொண்டது. பேச்சு வழக்கு எந்த வரையறையுமின்றி, மக்கள் தங்கள் இஷ்டம்போல் தெருவில், வீட்டில், வேலை பார்க்கும் இடங்களில் இயல்பாகப் பேசுவது. இதில் ஒழுங்கான வாக்கிய அமைப்போ, இலக்கண அமைப்போ இருக்காது. வட்டார வழக்கு என்பது, குறிப்பிட்ட நிலப்பரப்பில், பண்பாட்டுச் சூழலில் வாழக்கூடிய மக்கள், பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே. ஒரே சொல்லை பல வட்டாரத்து மக்கள் பயன்படுத்தினால், அது ‘வட்டார வழக்கு’ அல்ல.

மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ் என்று சொல்வதெல்லாம் இந்த அடிப்படையில் தான். எழுத்து வழக்கிற்கு ஓர் அழகு இருப்பதுபோல பேச்சு வழக்கிற்கும், வட்டார வழக்கிற்கும் ஓர் அழகு இருக்கிறது. மதுரைப் பகுதி மக்கள் பேசுவதுபோல சென்னைப் பகுதி மக்கள் பேசுவதில்லை. சென்னை மக்கள் பேசுவதுபோல கொங்கு வட்டார மக்கள் பேசுவதில்லை. பேச்சு வழக்கில் மட்டும்தான் இந்த வேறுபாட்டை உணர முடியும்.

ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்களும் ஒவ்வொரு தொனியில் பேசுகிறார்கள். அதனால், இந்த வேறுபாட்டை பிராமணர் பேச்சுவழக்கு, பிள்ளைமார், முதலியார், தேவர், தலித், செட்டியார், வன்னியர் பேச்சுவழக்கு என வகைப்படுத்தலாம். இஸ்லாமியர்களின், கிறிஸ்தவர்களின் பேச்சுவழக்கும் வேறுபட்டுக் காணப்படுகிறது. வட்டார வழக்குச் சொற்கள் மொழிக்கு வலிமையையும் வளமையையும் சேர்க்கக்கூடியது. ஒரு வட்டார வழக்குச் சொல், மற்றொரு வட்டார வழக்கு மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருப்பதனால் அந்தச் சொல் வீண் என்றோ; தேவையற்றது என்றோ சொல்ல முடியாது.

ஒரு மொழிக்கு உயர் வழக்கு, புலவர், இலக்கிய, பொது, எழுத்து வழக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு வட்டார வழக்குச் சொல்லும் முக்கியமானது. வட்டார வழக்குச் சொற்களில் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை. ஒரு மொழியின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு, வட்டார வழக்குகள் பெரிய பங்களிப்பைச் செய்ய முடியும். வட்டார வழக்கு என்பதே சாதிய வழக்குதான். சில சாதி வழக்கை மட்டும் இழிவாகப் பார்ப்பதும் பேசுவதும்தான் சாதிய அரசியல். அது இலக்கியத்திலும் இருக்கிறது.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

ஈழப் போர் குறித்தும் போராட்ட இயக்கங்கள் குறித்தும் பல ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன; எடுக்கப்பட்டுவருகின்றன. அந்த முயற்சிகள் எப்படி இருக்கின்றன. அதன் மீது உங்களுக்கு இருக்கும் விமர்சனம் என்ன?

ஷோபாசக்தி

ழத்தில் பொன்மணி (1977), வாடைக்காற்று (1978) ஆகிய இரு தமிழ்ப் படங்களும்  உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தில் நல்ல தமிழ் சினிமா உருவாகிவிடும் என்ற நம்பிக்கைக் கீற்று உருவானது. குறிப்பாக இந்த இரு படங்களிலும் இலக்கியவாதிகளின், நவீன  நாடகக் கலைஞர்களின் நிறைந்த பங்களிப்பு இருந்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே போர் உக்கிரமடைந்ததால், எங்களது வாழ்வின் அனைத்து அம்சங்களும் அழிந்து தொலைந்தது போலவே நல்ல சினிமாவும் முளையிலேயே கருக்கப்பட்டது.

இதற்குப் பின்னான 30 வருடப் போர்க் காலத்தில் ஈழத்தில் அனைத்துக் கலைச் செயற்பாடுகளும் போரையே மையமாகக் கொண்டன. அதேபோல  கலைஞர்களுக்கான இறுக்கமான எல்லைகளைப் போர் வைத்திருந்தது. ஒவ்வொரு கலைஞனும் ஏதாவதொரு அரசியற் தரப்பின் பக்கம் நிலையெடுக்க வேண்டிய அகப் - புறக் காரணங்கள் உருவாகின. அதிகாரத்தில் இருந்தவர்கள் மீதான விமர்சனங்களை வைத்த கலைஞர்கள் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டார்கள். சிலர் கொல்லப்பட்டார்கள். சுதந்திரக் கலையும் கலைஞனுக்கான சுதந்திரமும் போராலும் முற்றிய இனவாதத்தலும் முடக்கிப்போடப்பட்டன.

போர்க்காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களுக்கான சினிமாவை வளர்த்தெடுக்க முயன்றார்கள். அந்த முயற்சிகளெல்லாம் பெரும்பாலும் பிரசார சினிமாக்களாவும் கலைக் குறைபாடுடையதாகவுமே இருந்தன. போருக்குப் பின்னான காலத்தில் ஈழத்திலும் புகலிட நாடுகளிலும் கொஞ்சம் பரபரப் பாகத்தான் திரைப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த முயற்சிகளில் பெரும்பாலனவை கருத்தளவில் தட்டையான பிரசாரங்களாகவும் கலையில் தமிழக வணிகச் சினிமாவைப் பிரதியெடுப்பதுமாகவுமே இருக்கின்றன. இந்த மொண்ணைத் தனமான போக்கிலிருந்து துண்டித்துக்கொண்டு அசலான சினிமாவை உருவாக்கும் முயற்சிகள் சில நடந்து அவை சர்வதேச  அளவில் கவனங்
களையும் விருதுகளையும் பெற்றுக்கொள்வது மறுபடியும் நம்மிடையே நல்ல சினிமா உருவாகிவிடும் நம்பிக்கைக் கீற்றைத் தெறிக்கவிடுகின்றன. 2017 கான்ஸ் திரைப்பட விழாவில் ஜூட் ரட்ணத்தின் ‘Demons in paradise’ தேர்வாகித் திரையிடப்பட்டது. லெனின் எம்.சிவத்தின் ‘Gun and Ring’  சில சர்வதேசத் திரைப்படவிழாக்களில் தேர்வாகியது. பிரதீபனின் ‘A Mango Tree in the Front Yard’ சதா பிரணவனின் ‘God is death’, காசிநாதர் ஞானதாஸின் ‘உரு’, நிருவின் ‘Unlock’ போன்ற குறும்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பயணித்தன.

ஈழப் போர் குறித்த ஒரு தட்டையான அரசியல் பிரசாரப் பிரதியை உருவாக்குவது மிக எளிதானது. ஆனால், போரும் மானிடமும் குறித்த நல்ல - தீவிரமான கலைப் படைப்பைத் தருவதற்கு ஈழத்துக் கலைஞர்கள் பயணிக்க வேண்டிய துாரம் மிக அதிகமானது. முதலில் அவர்கள் போர் குறித்த சாகசவாத மனநிலையிலிருந்து வெளியேறி, போர் எதிர்ப்பாளர்களாக மாறவேண்டியிருக்கிறது. இந்த உலகத்தில் நல்ல போர், புனிதப் போர் என்றெல்லாம் ஏதுமில்லை என்பதை அவர்கள் உள்வாங்கவேண்டும். பிற இன, மதக் குழுமங்களின் மீதான வெறுப்பைக் கைவிட வேண்டும். அப்படித் தோன்றியவைதான் ‘No man’s land’, ‘The pianist’, ‘Death on full moon day’ போன்ற மகத்தான திரைப்படைப்புகள்.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

கலையும் இலக்கியமும் ஓர் அரசியல் இயக்கத்துக்கு, மக்களுக்கு எந்த அளவு பயனுள்ள ஒரு வடிவமாக இருக்கிறது? இருக்கிறதா?

மனுஷ்ய புத்திரன்

லைகளும் இலக்கியங்களும் ஒரு சமூகத்தின் சிந்தனா முறைகள். கலைகள் வழியாகவே மனிதகுலம் காலங்காலமாக சிந்தித்துவருகிறது. கலைகளுக்கும் சமூகவளர்ச்சிக்கும் இடையிலான உறவை ஜார்ஜ் தாம்ஸன் ‘மனித சாரம்’ நூலில் விளக்குகிறார். ஆனால், பொதுவாக‌க் கலைகளை அரசியலுக்குக் கீழாக வைக்கும் ஒரு போக்கு வளர்ந்துவந்திருக்கிறது. இலக்கியத்தை சமூக மாற்றத்திற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்துவது பற்றி உற்சாகமாகப் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். கலைகளையும் இலக்கியத்தையும் ஓர் அரசியல் இயக்கம், தான் நம்புகிற கருத்துகளை மக்களிடம் கடத்துவதற்கான ஒரு கருவி என்று கருதுவது, அரசியல், இலக்கியம் இரண்டையுமே குறுகலான நோக்கங்களின் அடிப்படையில் அணுகுவதாகிறது.

இன்னொரு புறம், அரசியல்நீக்கம் செய்யப்பட்ட தூயக் கலைநோக்கு, இறுக்க‌மான அரசியல் பார்வையைப் போலவே கலை, இலக்கியங்களின் எல்லைகளை மிகவும் குறுக்கிவிடுகிறது. ஒரு சமூகம், தனக்கான சிந்தனா மொழியையும் தத்துவார்த்த மொழியையும் உரையாடும் மொழியையும் கலை, இலக்கியங்கள் மூலமே உருவாக்கிக்கொள்கிறது.

மிகச் சிறந்த அரசியல் - தத்துவார்த்த நூல்கள் அனைத்தும், செப்பமான கலை, இலக்கியப் பிரதிகளால் தாக்கம்பெற்றவை. உலகின் மாபெரும் சிந்தனையாளர்கள், தங்கள் மொழி வளத்தை ஆகச் சிறந்த இலக்கியப் பிரதிகள் மூலமாகவே கட்டமைக்கிறார்கள். மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். தமிழ்ச் சமூகத்தில் அண்ணாவும் கலைஞரும் அதற்குச் சாட்சியங்கள்.

இன்னொரு புறம், மக்கள் அரசியல் - சமூகப் பிரச்னைகளைத் தங்கள் அனுபவங்கள், நினைவுகள் வழியாகவே புரிந்துகொள்கிறார்கள். அனுபவங்களும் நினைவுகளும் கலை, இலக்கியப் பிரதிகளின் மூலமாகவே மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு மக்களின் உணர்ச்சிகரமான தருணங்களாக மாறுகின்றன. ‘சிலப்பதிகாரம்’ இல்லையேல் கண்ணகி கேட்ட நீதி எப்படி இத்தனை தலைமுறைகளைத் தாண்டி அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு குரலாக மாறும்... நல்லதங்காள் கதைப்பாடல் இல்லாவிட்டால், மக்கள் தங்கள் வாழ்வின் ஆறாத் துயரங்களை எப்படித் தொகுத்துக்கொள்வார்கள்?

நான் என் காலத்தின் முக்கியமான எல்லா நெருக்கடிகளையும் கவிதைப் பிரதிகளாக்கி வருகிறேன். இது தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பண்பாடு சார்ந்த போராட்டங்களுக்கான மொழியைக் கட்டமைக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். இத்தகையை படைப்புகளைக் கேலியாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சின்னஞ்சிறு உலகில் நிம்மதியாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் காலம் அவர்களுக்கு அந்த நிம்மதியைத் தராது.

ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்

வட்டார, இனக்குழு இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது ஏற்படும் பிரதானச் சிக்கல்கள் எவை?

வெ.ஸ்ரீராம்


ர் இலக்கியப் படைப்பை மொழிபெயர்க்கும்போது, சொற்களின் செறிவு, வாக்கிய அமைப்பின் நேர்த்தி, நடையின் அழகு, இவற்றுக்கு அப்பால் தொனி என்ற அம்சத்தையும் கவனத்தில்கொள்வது அவசியம். பெரும்பாலும் பேச்சுமொழியில் எதிர்கொள்ளப்படும் வட்டாரவழக்கு, இந்தச் சவாலுக்குக் கூடுதல் பரிமாணத்தை அளிக்கிறது. ஒரு பிரதேசம், ஓர் இனம், இவற்றின் தனித்தன்மை தமிழ் வட்டார வழக்கில் இருப்பதைப்போல பிரெஞ்சு மொழியிலும் இருந்தாலும், பாரிஸ் போன்ற பெருநகரங்களில் பல்வேறு சமூகப் பின்னணிகளில் சொற்கள் உருமாற்றம் பெறுவதும் உண்டு. உதாரணமாக, ஒரு பாத்திரம் போலீஸ்காரரைக் குறிப்பிடும் சொல்லைக்கொண்டு பிரெஞ்சு சமூகத்தில் அவருடைய இடம் எது என்று சொல்லிவிட முடியும்.

ஆனால், அதில் தொனிப்பது கேலியா, வெறுப்பா, பயமா என்று எதையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. சூழலின் தன்மை கெடாமல் கூடுமான வரை பொருத்தமான சொல்லைப் பயன்படுத்தலாம். வட்டார வழக்கையும் கொச்சை வார்த்தைகளையும் பிரிக்கும் கோடும் மிக மெல்லியதாக இருப்பதால் தொனியில் அதிக கவனம் தேவைப்படும்.

பிரெஞ்சுக்காரர்களுக்கு உச்சரிப்பு மிக முக்கியம். (இதற்காகவே ஐரோப்பாவில் அவர்கள் கேலிக்குள்ளாவது சகஜம்). வட்டார உச்சரிப்பைப் பின்பற்றி சொல்லில் திரிவு ஏற்படும்போது, மொழிபெயர்ப்பாளருக்குக் குழப்பம் ஏற்படலாம். மேலும், சில வட்டார வழக்குகளுக்கு வரலாற்றுப் பின்னணியும் இருக்கும். மொழிபெயர்ப்பில் அவற்றுக்கு அடிக்குறிப்புகள் அளிப்பது பயனுள்ளதாக இருந்திருக்கிறது.

பண்பாடு, பழக்கவழக்கங்கள் சார்ந்தவற்றுக்கும் வட்டார வழக்குக்கும் இடையே உள்ள குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சமயங்களில் தாய்மொழியை நன்கறிந்த பிரெஞ்சுக்காரர்கள், பேராசிரியர்களிடம் என் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டிருக்கிறேன். எல்லா அம்சங்களிலும் நிறைவுகாணும் முயற்சியில்தான் மொழிபெயர்ப்பு என்ற செயல்பாட்டின் சவால் இருக்கிறது. சில சமயங்களில் வட்டார வழக்கிற்கான அடிக்குறிப்புகள் மொழிபெயர்ப்பாளரின் மனசாட்சிக்குச் சமாதானமாக இருப்பதோடு, அவருடைய முக்கிய பொறுப்பாகவும் அமைகிறது.