நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இந்த முன்னேற்றம் தொடர்வது அவசியம்!

இந்த முன்னேற்றம் தொடர்வது அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த முன்னேற்றம் தொடர்வது அவசியம்!

ஹலோ வாசகர்களே..!

டந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டான ஜனவரி - மார்ச் இடையிலான ஜி.டி.பி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும்படி வெளியாகியிருக்கிறது. கடந்த மூன்றாம் காலாண்டில் 7.3% வளர்ச்சியைக் கண்ட நாம், நான்காம் காலாண்டில் 7.7% வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம். இந்தப் புள்ளிவிவரத்தின்படி, உலகின் எந்தவொரு நாடும் அடையாத பொருளாதார வளர்ச்சி வேகத்தை நம் நாடு அடைந்துவருவதைப் பார்த்து நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

இந்த முன்னேற்றம் தொடர்வது அவசியம்!



ஆனால், காலாண்டுக் கணக்கின் அடிப்படையில் மட்டுமான இந்த வளர்ச்சியைப் பார்த்து நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. நிதியாண்டுக் கணக்கின்படி பார்த்தால், நமது பொருளாதார வளர்ச்சி வேகம் கடந்த 2016-17-ல் 7.1 சதவிகிதமாக இருந்தது, கடந்த 2017-18-ல் 6.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி செயல்படத் தொடங்கியபின், மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி இதுதான்.

தற்போது வெளியாகியிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, கடந்த காலாண்டில் முக்கியத் தொழில்களின் வளர்ச்சி 4.4 சதவிகிதத்தில் இருந்து 4.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயத் துறையின் வளர்ச்சியானது 7.1 சதவிகிதத்திலிருந்து 4.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. சேவைத் துறையின் வளர்ச்சியும் 23.7 சதவிகிதத்திலிருந்து 18.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

கடந்த இரண்டாண்டுகளில் பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகிய இரண்டு முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்களுக்குப்பிறகு சுணக்கம் காணத் தொடங்கிய நமது பொருளாதார வளர்ச்சி, தற்போது வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த வேகத்தைக் குறையவிடாமல் தொடர்ந்து அதிகப்படுத்த மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு.

ஆனால், இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எளிதல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்ததினால்தான், பொருளாதார வளர்ச்சி ஓரளவுக்குக் குறைவாக இருந்தாலும், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. இதனால் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. பணவீக்கமும் கட்டுப்பாட்டில் இருந்தது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்த விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கத்தைச் சமாளிக்க, வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது. வட்டி உயர்த்தப்பட்டால்,  பலவிதமான பொருளாதாரப் பாதிப்புகள் வரும். 

இந்தப் பாதிப்புகளையெல்லாம் சமாளித்து, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைக் குறையாமல் பார்த்துக்கொள்வது சவால்தான். இந்தச் சவாலில் இருந்து மத்திய அரசாங்கம் எப்படித் தேறி வரப் போகிறதோ! 

- ஆசிரியர்