மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

சிறந்த ஊழல்வாதிக்குப் பரிசு?!

##~##

யோகஸ்ரீராஜ், மும்பை.

 அறிவுபூர்வமான கேள்வி, ஆக்கபூர்வமான கேள்வி - என்ன வித்தியாசம்?

நீங்கள் இப்படிக் கேட்பதுகூட அறிவுபூர்வ மான கேள்வியே. கூடவே என்னிடம் 'ஒவ்வொரு வாரமும்  ஏன் நீங்கள்உயிரியல், சைகாலஜி, புராணம்,  நகைச்சுவை, அரசியல், சினிமா என்று ஒவ்வொரு தலைப்பில் கேள்விகளுக்குப்  பதில் சொல்லக்கூடாது?’  என்றொரு கேள்வியை நீங்கள்  கேட்டால்,  அது ஆக்கபூர்வமான கேள்வி!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

சிவந்த நிறப் பெண்கள், வெண்மையான பால் போன்ற நிறம்கொண்ட பெண்கள், கறுப்பு நிறப் பெண்கள், மாநிறப் பெண்கள் - இவர்களில் எந்த வகைப் பெண்கள் மிக அழகு?

அழகே இல்லாத வெண்மையான, பால்போன்ற நிறம்கொண்ட _ பெண்களையும் நான் பார்த்து இருக்கிறேன். மிக அழகான கறுப்பு நிறப் பெண்களையும் நான் பார்த்து இருக்கிறேன். அழகுக்கும் வண்ணத்துக்கும் சம்பந்தம் இல்லை. மோசமான கலர் போட்டோவும் உண்டு. அற்புதமான பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவும் உண்டு. பெர்சனலாக, எனக்கு மாநிறப் பெண்களைப் பிடிக்கும். அதுவே இந்திய வண்ணம்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.

உலகில் கௌரவமான தொழில் என்று எதைச் சொல்லலாம்? மோசமான தொழில் என்று எதைச் சொல்லலாம்?

சாக்கடையில் இறங்கி க்ளீன் பண்ணும் துப்புரவுத் தொழிலாளர்கள் செய்வது ஒன்றுதான் கௌரவமான தொழில். மற்ற எல்லாத் தொழில்களும், ஸாரி... ஊழல்மயமாகிவிட்டன என்பது என் தாழ்மையான கருத்து!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

சினிமா, அரசியல் - எது திறமையானவர்களை உருவாக்குவதில் முதல் இடம் வகிக்கிறது?

சினிமாதான். அரசியலில் முன்னேற வாரிசாகவோ அல்லது குறிபார்த்து சோடா புட்டி வீசக்கூடிய நல்ல (?) ரௌடியாகவோ இருந்தால் போதும்! அதே சமயம் சினிமாவிலும் நிறைய திறமைசாலிகள் வாய்ப்புக் கிடைக்காமல், அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் வெளியே நின்று தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நெருடலான விஷயம்!

கண்.சிவகுமார், திருமருகல்.

 பலாச் சுளைபோல இனிப்பதால்தான் 'அதை’ பலானது எனச் சொல்கிறீர்களா?

ஐயையோ!

  நான் எங்கே அப்படிச் சொன்னேன்?! நீங்கதான் சொல்றீங்க. 'கரெக்ட்டோ..?! (சினிமாவுக்கு நீங்க பாட்டு எழுத 'ட்ரை’ பண்ணலாமே?!)

ஹாய் மதன் கேள்வி - பதில்

விஜயலட்சுமி, சென்னை-74.

எல்லாச் சாதனையாளருக்கும் பரிசு தருவதுபோல் போகிற போக்கைப் பார்த்தால் சிறந்த ஊழல்வாதிகளுக்கும் பரிசு தருவாங்களோ?

நல்ல ஐடியா! ஆனால், வேறு யாராவது லஞ்சம் கொடுத்து சிறந்த ஊழல்வாதிக்கான பரிசைத் தட்டிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது? இன்னொரு பிரச்னை - சிறந்த ஊழல்வாதி, தான்தான் உலகிலேயே நேர்மையாளர் என்பதுபோல 'நல்லவராக’ நடமாடிக்கொண்டு இருப்பதால் அவரைக் கண்டுபிடித்து மேடைக்கு அழைத்து வருவது ரொம்பக் கஷ்டம்!

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

பல் துலக்கும்போது சிலர் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு பல் துலக்குகிறார்களே... இது ஏன்?

அப்போது மட்டும்தான் 'தான் யார்? தான் பிறந்ததன் நோக்கம் என்ன?’ என்கிற தத்துவ விசாரணையில் அவர்கள் இறங்குவார்களோ என்னவோ... விடுங்க!

ஏ.ஜி.வெங்கடேஷ், மதுரை-9.

ஹாய் மதன் கேள்வி - பதில்

எந்த ஊர்களுக்கும் கர்நாடக மாநிலம், கேரள மாநிலம், ஆந்திர மாநிலம் என்று பெயர் இருக்க... நமது மாநிலத்தை மட்டும் மாநிலம் என்றில்லாமல் தமிழ்நாடு என்று பெயர் வைத்துள்ளனரே... ஏன்?

பாரதியே செந்தமிழ் நாடு என்றுதான் அழைத்தார். அந்தத் தனித்தன்மை இருப்பதுபற்றி பெருமைப்படுவீர்களா..?!

மாரியப்பன், சின்னமனூர்.

உண்மையான பாசத்துடன் நம் மீது பற்றுடன் வாழ்பவர்களில் சிறந்தவர்கள் தாய், தந்தை, நண்பர், மனைவி தவிர வேறு யாரைக் கூறுவீர்கள்?

வளர்ப்பு நாய்!