மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 86

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

“நாகரவண்டினைக் கொத்திக்கொண்டு வந்துவிட்டேன்” என்று சொல்லி மகிழ்வின் உச்சத்தை வெளிப்படுத்தினார் குலசேகரபாண்டியன். யவனத்தேறலைக் குடித்துக்கொண்டே அவர் கூறுவதை மகிழ்ந்து கேட்டனர் செங்கனச்சோழனும் உதியஞ்சேரலும். குடியில் ஒருவரை ஒருவர் விஞ்சினர். போர்ச்சூழலில் அளவின்றிக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனச் சொல்வதற்கு தொடர்ந்து முயன்றார் முசுகுந்தர். ஆனால், அதற்கான வாய்ப்பே அமையவில்லை.

இத்தனை நாள்கள் மையூர்கிழாரின் மாளிகை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த ஹிப்பாலஸ், இன்று மூஞ்சலுக்கு அழைக்கப்பட்டான். இந்த விருந்தில் அவனும் பங்கெடுத்தான். ஹிப்பாலஸிடம் குலசேகரபாண்டியன் மீண்டும் மீண்டும் சொன்னார், ``நாகரவண்டினை நமது கூட்டுக்குக் கொண்டுவந்துவிட்டோம். இனி நமக்கான இரை நம்மைத் தேடி வந்தே தீரும். மூவரும் இணைந்து வளைத்து வளைத்து வேட்டையாடுவோம்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 86

கருங்கைவாணனுக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவன் விருந்தில் பங்கெடுக்கவில்லை. மருத்துவர்களின் கூடாரத்தில் இருந்தான். நீண்டகாலத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் அவனது வீரத்தை அவையில் புகழ்ந்து பேசினார் குலசேகரபாண்டியன்.

பேரரசர் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கை, வைப்பூர் தாக்குதலால் சிதைந்துவிட்டது. அதை எப்படியாவது மீட்கவேண்டும் எனப் பேறுதியோடு செயல்பட்டு வந்தான் கருங்கைவாணன். ஆனால், இன்று அந்த உறுதி தளர்ந்தது. திட்டமிட்டபடி நீலனைச் சிறையெடுத்து வந்துவிட்டான். ஆனால், நேற்று இரவு நடந்த தாக்குதல் அவன் வாழ்வில் இதுவரை காணாத ஒன்று. சின்னஞ்சிறிய கூட்டம் ஒன்று, வேந்தர்பெரும்படையை முழுமுற்றாக அழித்தது. மாவீரர்களான திதியனும் துடிச்சாத்தனும் கொல்லப்பட்டனர். பங்கெடுத்த வீரர்களில் பத்தில் ஒரு பங்கு வீரர்கள் மட்டுமே உயிரோடு மீண்டுள்ளனர். அவர்களில் பாதிப்பேர் போர்க்களம் புக நீண்டகாலமாகும். இருமுறை மயிரிழையில் உயிர்தப்பினான் கருங்கைவாணன்.

இவையெல்லாம் பறம்புவீரர்களின் திறனை வெளிப்படுத்துவனவாக இருந்தாலும், நெருப்பைப் பிளந்துகொண்டு அவர்கள் தாக்குதல் தொடுத்தமுறை குருதியை உறைய வைப்பதாக இருக்கிறது. நினைக்கும்போதே நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தாக்குதலில் தப்பித்த ஒவ்வொருவனும் இனி இதைத்தான் பேசுவான். பறம்புவீரர்களின் கற்பனைக்கு எட்டாத வீரமும் ஆற்றலும் அடுத்து வரும் நாள்களில் வேந்தர்படை முழுவதும் பரவிவிடும்.

`எதிரிப்படையினர் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பது மாறி அவர்கள் பேராற்றல்கொண்டவர்கள் என ஆழ்மனம் நம்பிவிடும். நீரை நிலம் விழுங்குவதைப்போல, தனது வீரத்தைத் தானே விழுங்கி வற்றச்செய்யும் வேலையை மனம் நமக்குத் தெரியாமலேயே செய்துகொண்டிருக்கும். இதை எப்படி மாற்றப்போகிறோம்? அவர்களை வீழ்த்தும் வலிமை நமக்கு இருக்கிறது என்பதை படைவீரர்களின் எண்ணிக்கையால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. அறுநூறு வீரர்கள் கொண்ட படைப்பிரிவை அந்தச் சின்னஞ்சிறிய கூட்டம் அழித்து முடிக்க அதிக நேரமாகவில்லை. அப்படியென்றால், குவிக்கப்பட்டுள்ள இந்தப் பெரும்படையை அவர்களால் வென்றுவிட முடியும்தானே?’ கேள்விகள், விடாது மேலெழுந்து கொண்டேயிருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 86

``கண்களைச் சற்று மூடுங்கள். முகம் முழுவதும் பச்சிலை தடவ வேண்டும்” என்றார் மருத்துவர். கண்களை மூடினால் நெருப்பைப் பிளந்து கொண்டு பறம்புவீரர்கள் வெளிவந்துகொண்டே இருந்தனர். கருங்கைவாணனால் கண்களை மூட முடியவில்லை. சிந்தனையின் வெக்கை இமைகளைச் சுட்டது.

இந்தப் பெரும்போருக்குத் தலைமையேற்கும் மகாசாமந்தனாகக் கருங்கைவாணனைத் தேர்வுசெய்தது எவ்வளவு பொருத்தமானது என உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் பாராட்டிப் பேசினர். `` `போர்க்களத்தில் சிறந்த தளபதியைக் கொண்டுள்ள மன்னன் நிம்மதியாகப் படுத்துறங்குவான்’ என்று சொல்வார்கள் அல்லவா!” எனக் கேட்டார் முசுகுந்தர்.

``ஆம்... ஆம்...” என வேந்தர்கள் வழிமொழிந்தனர். நிறைந்த மயக்கத்தில் குலசேகரபாண்டியன் ஹிப்பாலஸிடம் சொன்னார், ``நீங்கள் நாளை புறப்பட்டு மதுரைக்குச் சென்று ஓய்வெடுங்கள். பாரியை வீழ்த்திவிட்டு நாங்கள் வந்து சேருகிறோம்.”

ஹிப்பாலஸ், மகிழ்வோடு அதை ஏற்றுத் தலைவணங்கி நன்றி சொன்னான். மகிழ்வின் உச்சத்திலும் நிலைகொள்ளாத மயக்கத்திலும்கூட பாண்டிய வேந்தர் செயலில் கவனத்தோடு இருப்பார் என்பதைப் பலமுறை பார்த்து வியந்தவர் முசுகுந்தர். இன்றைய செயலும் அவரை எல்லையற்ற வியப்புக்கு உட்படுத்தியது.

`குலசேகரபாண்டியரை யாராலும் கணித்துவிட முடியாது. எந்தச் சொல்கொண்டு செயலின் திசையை எந்தப் பக்கம் திருப்புவார் என்பதை இத்தனை ஆண்டுகளாக உடனிருக்கும் தன்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையே... உதியஞ்சேரலும் செங்கனச்சோழனுமா புரிந்து கொள்ளப்போகின்றனர்’ என்று எண்ணியபடி ஹிப்பாலஸ்ஸை அனுப்பிவைக்கும் வேலையில் ஈடுபட்டார் முசுகுந்தர். நள்ளிரவுக்குப் பிறகும் வெகுநேரம் விருந்து நீண்டது.

மறுநாள் பொழுது விடிந்த பிறகு நாகக் கரட்டிலிருந்து தனித்த தேர் ஒன்று கீழிறங்கியது. கருநிறத்தாலான பெரும்போர்வையை உடல் முழுவதும் சுற்றி, தேரின் வலதுபுறக் கைக்கட்டையைப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார் கபிலர். வேந்தர்களின் படையணியை நோக்கிக் கீழிறங்கி வந்தது தேர். உடலின் அத்துணை உறுப்புகளும் செயலற்றதைப் போல உணர்ந்த நாள் இது. உயிர்த்துடிப்பற்று இருந்தன அவருடைய கண்கள். ஆனாலும் தன்னுடைய கடமையைச் செய்யவேண்டும் என்பதில், அவரது உள்ளம் தெளிவோடு இருந்தது. தேர், வேந்தர்களின் படையணிக்கு அருகில் வந்து நின்றது.

வீரன் ஒருவன் தேருக்கு அருகில் வந்து, ``செய்தி என்ன?” என்று கேட்டான்

``கபிலர் வந்திருக்கிறேன் என்று வேந்தர்களிடம் சொல்” என்றார்.

``சரி” எனக் கூறிய அவன் செய்தியைச் சொல்ல மூஞ்சலை நோக்கிக் குதிரையில் விரைந்தான்.

நள்ளிரவுக்குப் பிறகும் விருந்து நீண்டதால், வேந்தர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை. மூஞ்சலின் வாசலிலேயே அந்த வீரன் நின்றிருந்தான்.

நெடும்பொழுது கடந்தது. கபிலரின் தேர் அசைவற்று நின்றிருந்தது. அனுமதிக்காகக் காத்திருக்கும் நீண்டபொழுதை, கபிலர் முதன்முறையாகச் சந்தித்துக்கொண்டிருந்தார். மனம் கொந்தளிப்பிலேயே இருந்தது. தேரோட்டி வந்த வீரன், `இடதுபக்கக் கட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் மூங்கில் குடுவையில் உள்ள நீராகாரத்தைக் கபிலருக்குத் தருவோம்’ என நினைத்துத் திரும்பினான்.

``எக்காரணங்கொண்டும் திரும்பாதே. அழைப்பு வருகிறதா என்று மட்டும் பார்” என்றார்.

கபிலரின் திடமான குரல் கேட்டு, சற்றே அதிர்ச்சியானான் வீரன்.

இரலிமேட்டிலிருந்து பாரி, கபிலரைப் பார்த்துக்கொண்டேயிருப்பான். இவ்வளவு பொழுது அவர் நிற்கவைக்கப்பட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. உடனே திரும்பி வாருங்கள் என்று சொல்லிவிடக்கூடும். எனவேதான், ``எப்பக்கமும் திரும்பாதே” என்று கபிலர் வீரனைக் கடிந்து கூறினார்.

பொழுது நண்பகலைக் கடந்தது. தேர் தனது இடம் விட்டு நகராமல் நின்றுகொண்டேயிருந்தது. அனுமதி கேட்கச் சென்றவன் வந்துசேர்ந்தான். கபிலரின் தேர் படையணிக்குள் அனுமதிக்கப் பட்டது. குதிரைவீரன் வழிகாட்டி முன் சென்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 86

படையணிகளுக்குள்ளும் பாசறைகளுக்கிடையேயும் வளைந்து நெளிந்து சென்ற தேர், இறுதியில் மூஞ்சலை அடைந்தது. கபிலர் இறங்கினார். வரவேற்க எவரும் இல்லை. எந்தக் கூடாரம் நோக்கிப் போவது என்பது சற்றே குழப்பமாக இருந்தது. குதிரைவீரன், மூன்றாம் கூடாரத்தைக் கைகாட்டி ``உங்களை அங்கே வரச்சொன்னார்கள்” என்றான்.

கபிலர் அதை நோக்கி நடந்தார். அருகில் செல்லச் செல்ல இசைக்கருவிகளின் ஓசை கேட்டது. மகிழ்வின் வெளிப்பாடு முகத்தில் அறைந்தது. உடல் கூசி நடுங்கியது. நீண்டநேரம் நிறுத்திவைத்ததன் மூலம் ஏற்படுத்திய உணர்வை, அருகில் அழைப்பதன் மூலமும் ஏற்படுத்த முடிந்தது. கபிலரின் கால்கள் நகராமல் நின்றன. சற்று நேரத்தில் கூடாரத்திலிருந்து வெளியே வந்த முசுகுந்தர் அவருக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

இசை நிகழ்வு முடிவுற்றதும் கபிலர் உள்நுழைந்தார். வேந்தர்கள் மகிழ்வோடு வீற்றிருந்தனர். பெரும்புலவரை வழக்கத்தைவிடப் பேரோசையை வெளிப்படுத்தி வரவேற்றார் குலசேகரபாண்டியன். வரவேற்க ஆள்கள் இல்லாதபோது என்ன உணர்வை ஏற்படுத்த முடிந்ததோ, அதே உணர்வை வரவேற்கும்போதும் ஏற்படுத்த முடிந்தது. அவையை வணங்கினார் கபிலர்.

``என்ன புலவரே, நண்பகலில் இவ்வளவு பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு வந்திருக்கிறீர்... உடல் நடுங்குகிறதா?” எனக் கேட்டார் சோழவேழன்.

``தோழனின் நடுக்கத்தை பெரும்புலவர் தானும் உணர்கிறாரோ?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை. கணநேரத்தில் உடல் நடுங்கியது. சூம்பிப்போயிருந்த வலதுகால் நடுவிரல் உள்ளிழுத்தது. பின்னங்கால் நரம்பு இழுக்கத் தடுமாறுவதுபோல் இருந்தது. கண்களை மூடி உடலையும் மனதையும் திடப்படுத்திக்கொண்டார். தனக்கான சொற்கள் எதுவும் தன்னிடம் வரக் கூடாது என நினைத்தார். நீலனைப் பார்க்கும் வரை சொல்லேந்தக் கூடாது என்ற முடிவோடு இருந்தார்.

``பெரும்புலவர் நம்மைப் பார்க்க வரவில்லை. நீலனைப் பார்க்கவே வந்துள்ளார். எனவே, முதலில் அவர் நீலனைப் பார்த்துவிட்டு வரட்டும். பிறகு பேசலாம்” என்றார் குலசேகரபாண்டியன்.

``சரி’’ எனச் சொல்லி எழுந்த முசுகுந்தர், கபிலரை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார். மூஞ்சலில் பெரும்பெரும் கூடாரங்கள் போதிய இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடாரங்களுக்கு நடுவே சின்னதாய் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. முசுகுந்தர் அதை நோக்கி நடந்தார்.

கபிலரின் கால்கள் முன்னகரத் தயங்கின. நீலன் எந்த நிலையில் இருக்கப்போகிறான் என்ற கவலை அவரை மேலும் நடுக்கமுறவைத்தது. முசுகுந்தர் கூடாரத்தின் திரைச்சீலையை விலக்கியபடி, கபிலர் உள்ளே செல்ல கையை நீட்டினார். உள்நுழைந்தார் கபிலர். கூடாரத்தின் நடுவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தூண் ஒன்றில் சாய்ந்துகிடந்தான் நீலன். உடலெங்கும் குருதி வழிந்த கருந்திட்டுகள் இருந்தன. இன்னும் சில இடங்களில் செங்கசிவு நிற்காமல் இருந்தது. கால்தொடையில் ஈட்டி இறங்கிய இடத்தில் துணிகளைக்கொண்டு கட்டியிருந்தான். ஆங்காங்கே தசைகள் பிய்ந்து தொங்க ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. கண்கள் உட்செருகியபடி கிடந்தவன், ஓசை கேட்டு விழித்துப் பார்க்க முயன்றான். புருவங்கள்தான் மேலேறிக்கொண்டிருந்தன. இமைகளைத் திறக்க முடியவில்லை. முயன்று இமை திறந்து பார்த்தான். எதிரில் கபிலர்.

அவனது தலையைக் கைகளால் மெள்ளத் தடவியபடி அருகில் மண்டியிட்டு அமர்ந்தார். விழிகள் ஏறிட்டு கபிலரைப் பார்த்தன. கலங்கிய கண்களோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் கபிலர். அவரின் கண்கள் அவனது காயங்களைத் தேடித் தேடி நகர்ந்தன.

எதிரியின் கூடாரத்தில் கட்டுண்டு கிடக்கும் மாவீரனிடம் நம்பிக்கையூட்டும்படி பேச கபிலரால் முடியும். ஆனால், நீலனைப் பல நேரங்களில் தன் மகனைப்போல உணர்ந்தவர் அவர். அவரது மனம் உணர்வுகளின் கொதிகலனாக இருந்தது. கண்களில் நீர் பெருகிக்கொண்டேயிருந்தது. அவனது காயங்களினூடே கைகள் நகர்ந்தபடி இருந்தன.

அவரை நீலனால் முழுமையாக உணர முடிந்தது. மெள்ள அவன் பேசத் தொடங்கினான், ``உங்களைச் சந்தித்த முதல் நாள் நான் என்ன சொன்னேன் என்பது நினைவிருக்கிறதா?”

தனது உடல்நடுக்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என முயன்றுகொண்டிருந்த கபிலருக்கு, நீலன் எதைக் கேட்கிறான் என்பது புரியவில்லை. சிந்தித்துப்பார்த்தார். அவன் கேட்பது நினைவுக்குப் புலனாகவில்லை.

நீலன் சொன்னான், ``வேட்டுவன்பாறைக்கு நீங்கள் வந்த அன்று சொன்னேன், ‘வீரனின் வாழ்வு மிகக் குறுகியது. பறம்புநாட்டுக்கு நாற்புறமும் எதிரிகள். எப்போது போர்மூளும் எனத் தெரியாது. போர்க் களத்தில் நான் சாயும்போது எனது ஈட்டியை இறுகப் பற்றி முன்னேற, என் மகன் வந்து நிற்க வேண்டும்’ என்று.”

கண்களை அகலத் திறந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் கபிலர். ``நான் எனது வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன். இன்னும் சில நாள்களேயானாலும் நான் மரணிப்பதற்குள் மயிலா வீரமகவை ஈன்றெடுப்பாள்” என்றான் நீலன்.

கலங்கியபடி கூறினார் கபிலர், ``நீ மாவீரன். போரிடும் முன்பே வாகைப்பூ ஏந்தி வந்த உன்னை மரணம் எப்படி அணுகும்?”

மயிலாவுக்காகக் குமரிவாகையைப் பறித்துப்போனது நினைவுக்கு வந்தது. ஆதினி இதைச் சொல்லித்தான் மயிலாவை ஆற்றுப்படுத்தியிருப்பாள் எனத் தோன்றியது.

``கொற்றவை உனக்கு வெற்றிவாகையைத் தந்து அனுப்பியுள்ளாள். அதனால்தான் உனது வீரத்தை இன்று பறம்பே பேசுகிறது” என்றார் கபிலர்.

தொடர்ந்து பேச முயன்றான் நீலன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. முயன்று சொன்னான், ``என்னைவிடப் பெரும்வீரத்தை வெளிப்படுத்தியவர்கள் சோமக்கிழவனும் கொற்றனும்தான். கிழவனும் சிறுவனும் எண்ணிலடங்காத எதிரிகளை அழித்தொழித்தார்கள்” என்றவன் சற்றே இளைப்பாறி, ``காலம்பனிடம் மன்னிப்பு கேட்டதாகச் சொல்லுங்கள். கொற்றனை நான் காக்கத் தவறிவிட்டேன்” சொல்லும்போது உடைந்து கலங்கினான் நீலன்.

``இல்லை. உரியநேரத்தில் உதவ முடியாததற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லிப் பாரி கூறினான்.”

என்ன பேசுகிறார்கள் என அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தார் முசுகுந்தர். நீலனின் மீது மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களை விரட்டியபடி, தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து உதறாமல் அவன்மீது இறுகச்சுற்றிப் போர்த்தினார் கபிலர். அவனது காலிலே குருதி வடியத் தொங்கிக்கொண்டிருந்த மேலாடையின் சிறு பகுதியைக் கிழித்து எடுத்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 86

கபிலர் என்ன செய்கிறார் என முசுகுந்தருக்கு விளங்கவில்லை. கிழித்து எடுத்த அந்தச் சிறு துணியைக் கைவிரல்களில் சுருட்டியபடியே சொன்னார், ``வரும் முழுநிலா நாளில் கொற்றவைக்குக் குருதியாட்டு விழா. கூத்துத்திடலில் திரி போட வேண்டுமல்லவா?” என்றார். நீலன் அவரை உற்றுப்பார்த்தான்.

``பாரிதான் எடுத்துவரச் சொன்னான்” என்று சொல்லியபடியே துணியைச் சுருட்டி முடித்தார்.

நீலனுக்கு விளங்கியது. போர் முடிவுற்றவுடன் நடப்பதுதான் குருதியாட்டு விழா. முழுநிலவுக்கு இன்னும் பன்னிரண்டு நாள்கள் உள்ளன. அதற்குள் எதிரிகளை வென்று முடிப்பேன் எனச் சொல்லி அனுப்பியுள்ளான். அதுமட்டுமன்று, போரிலே தமது குருதி படிந்த ஆடைகொண்டே கொற்றவைக்கு விளக்கேற்றத் திரி போடுவர். நீலனின் குருதி படிந்த மேல்துணியை எடுத்துவரச் சொன்னதற்குக் காரணம், குருதியாட்டு விழாவுக்கு நீலன் திரி போட வந்து சேருவான் என்பதே. நீலனிடம் சொல்ல வேண்டிய எல்லாச் செய்திகளையும் சொல்லி முடித்தார் கபிலர்.

`பன்னிரண்டு நாள்களில் எதிரிகளை வென்று உன்னை மீட்பேன்’ என்று பாரி சொன்னதாகக் கபிலர் சொன்ன எதுவும் முசுகுந்தருக்குப் புரியவில்லை. ``சரி, புறப்படலாம்” என முசுகுந்தரைப் பார்த்துச் சொல்லியபடி நீலனிடமிருந்து எழுந்தார் கபிலர். மகிழ்வின் ஒளியேறிய முகத்தோடு அவரைப் பார்த்தான் நீலன். அந்தப் பார்வை விளங்கிக்கொள்ள முடியாத ஆழத்தோடு இருந்தது. விடைபெற்று கூடாரத்துக்கு வெளியில் வந்தார் கபிலர்.

சிறிது தொலைவு கடந்ததும் முசுகுந்தர் கேட்டார், ``அவன்மீது அளவுகடந்த அன்புகொண்டுள்ளீர்களே!”

`ஆம்’ என்று தலையை மட்டும் ஆட்டினார் கபிலர்.

``நீங்கள் போர்த்தியிருந்த போர்வையை அவனுக்கு ஏன் போர்த்தினீர்கள்?”

``மேலெல்லாம் ஈக்கள் மொய்க்கின்றனவே. அதிலிருந்தாவது அவனைக் காப்போம் என்றுதான்.”

``நீங்கள் நினைத்தால் அவனையே காப்பாற்றலாம்!”

சற்றே நடையின் வேகத்தைக் குறைத்த கபிலர் முசுகுந்தரைப் பார்த்தார்.

``மூவேந்தர்களுக்கு உதவுவதாக வாக்களியுங்கள். உங்களின் தேரிலேயே அவனை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன்.”

சிரித்தார் கபிலர். ``மேகம் எப்படி காற்றுக்கு எதிராகப் பயணிக்கும்?”

``நீலனின் மீது உங்களுக்கு இருப்பது உண்மையான அன்பென்றால், வீசும் காற்று ஒரு பொருட்டன்று.”

``அன்பின் உண்மைத்தன்மையை உங்களால் கண்டறிய முடியுமா முசுகுந்தரே?”

``நிச்சயம் முடியும். கபிலரை எத்தனையோ ஆண்டுகளாக அறிந்தவன் நான். எளிய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத பேரறிஞர். ஆனால், இன்று அவனோடு பேசும்போது உங்களின் கண்கள் எத்தனை முறை பெருக்கெடுத்தன என்பதைக் கவனித்தேன். `கபிலர்தானா இவர்?’ என்று உங்களின் மீதே எனக்கே ஐயம் வருமளவுக்கு இருந்தது, அவன் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு. அவன் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று புரிந்துகொண்டேன். அதனால்தான் சொல்கிறேன் உங்களால் அவனைக் காப்பாற்ற முடியும்.”

``அவனது துன்பங்கள் கண்டு என்னை அறியாமல் கண்ணீர் சிந்தினேன். ஆனால், எனது துன்பத்தை பாரி அறிய நேர்ந்தால் குருதி சிந்துவான்.”

முசுகுந்தர் சற்றே அதிர்ச்சியோடு கபிலரைப் பார்த்தார்.

கபிலர் சொன்னார், ``ஒருவேளை காற்றை எதிர்த்துக்கூட மேகம் பயணிக்கலாம். ஆனால், வானத்தை விட்டு விலகிச் செல்ல கதிரவனுக்கு வழியேதுமில்லை.”

முசுகுந்தர் பேச்சின்றி அமைதியானார். பெரும்புலவரை வசப்படுத்துதல் எளிதன்று என அவருக்குத் தெரியும். ஆனாலும் கண்கலங்கியதைப் பார்த்துக் கல்லெறியலாம் என முயன்றார். எதுவும் நடக்கவில்லை. இருவரும் வேந்தர்களின் கூடாரத்துக்குள் நுழைந்தனர்.

அவருக்கான இருக்கையில் அமரும்வரைகூடக் காத்திருக்க ஆயத்தமாயில்லை. வந்தவுடன் சோழவேழன் கேட்டார், ``என்ன கபிலரே, இதை எதிர்பார்த்திருக்க மாட்டீரே!”

இருக்கையில் அமர்ந்துகொண்டே கபிலர் சொன்னார், ``ஆம். பெருவேந்தர்கள் மூவரும் கோழையின் செயலைச் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?”

அதிர்ந்தது அவை. தனக்கான சொற்களைக் கைக்கொள்ளத் தொடங்கினார் கபிலர். பாரி என்ன நோக்கத்துக்காக அனுப்பிவைத்தானோ, அந்த வேலை முடிந்தது. நீலனுக்கான செய்தி சொல்லப்பட்டுவிட்டது. இனி கபிலர் சொல்லைச் சுழற்றத் தடையேதுமில்லை.

``எது கோழையின் செயல்? திரண்டு நிற்கும் படை கண்டு தோள்கள் புடைக்க களம் காணாமல் காடுகளுக்குள் ஒளிந்துகிடப்பது கோழையின் செயலா? அவனது எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி அவன் தளபதிகளில் ஒருவனைச் சிறைப்பிடித்து வந்தது கோழையின் செயலா?” சீறினான் உதியஞ்சேரல்.

``ஒற்றறிந்து, இருள்போர்த்தி, பம்மிப் பதுங்கி நீங்கள் நடத்திய தாக்குதலுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், அந்தச் செயலுக்கான குணம் கோழையினுடையது.”

``ஒற்றறிவதோ, இருள்போத்தி நகர்வதோ, பதுங்கிப் பாய்வதோ போரின் பகுதியென்று நீங்கள் அறியாதவர் அல்லர். பாரியுடனான நட்பு, போர் நியதியை மறந்தவராக உங்களை மாற்றியுள்ளது.”

``நியதிகளையும் மரபுகளையும் அறியாதவர்களின் பட்டியலில் என்னைச் சேர்க்கும் அளவுக்கு, போருக்கான மனநிலையில் மூழ்கிவிட்டீர்கள். உங்களின் நோக்கம் அதுவென்றால், உங்களுக்கு உதவ நான் ஒரு வழிமுறை சொல்கிறேன், கேட்கிறீர்களா?”

``பெரும்புலவரே! உங்களால் எங்களுக்கு உதவ முடியாது. எங்களுக்கு உதவுவதாக நீங்கள் எது செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது எங்களின் எதிரியான பாரியின் நலனே” என்றார் குலசேகரபாண்டியன்.

சற்றே வாய்விட்டுச் சிரித்தபடி கபிலர் சொன்னார், ``இதைத்தானே நான் சொன்னேன். போருக்கான மனநிலைக்குள் முழுமுற்றாக மூழ்கிவிட்டீர்கள். இனி குருதி பிசையாமல் உங்களால் உணவருந்த முடியாது.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 86

சொற்களின் கூர்மை நுனிமூக்கைக் குத்தி இழுத்தது. உயர்த்திய குரலோடு உதியஞ்சேரல் கேட்டான், ``சரி, சொல்லுங்கள். எங்களுக்கு உதவ என்ன சொல்லப்போகிறீர்கள்?”

``பாரி மலைவிட்டுக் கீழிறங்கிப் போரிட வேண்டும். அதனால்தானே நீலனைச் சிறைப்பிடித்து வந்துள்ளீர்கள்?”

அவையில் அமைதி நீடித்தது. கபிலர் தொடர்ந்தார், ``நீலனைத் தூக்கிவந்தால்கூட அவன் உடனடியாகப் போர்தொடுக்க மாட்டான். சற்று காலம் தாழ்த்துவான். உங்களின் அவசரம் கருதிச் சொல்கிறேன். நீலனை விடுவித்துவிடுங்கள். என்னைச் சிறையிலிடுங்கள். இந்தக் கணமே போரைத் தொடங்குவான் பாரி.”

கூடாரம் அதிர்வதைப்போலச் சிரித்தார் குலசேகரபாண்டியன். ``பெரும்புலவரே! இதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன். எங்களுக்கு உதவுவதாக நீங்கள் எது செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது எங்கள் எதிரியான பாரியின் நலனே!”

கபிலர் சற்று அதிர்ந்தார்.

``தமிழ் நிலத்தின் பெரும்புலவரை மூவேந்தர்கள் சிறைப்பிடித்தனர் என்ற அவப்பெயர் எங்களுக்கு நேர வேண்டும். ஆனால், அவரை மீட்கப் போரிட்டு உயிர் நீத்தான் பாரி என, புலவர்குடிகள் காலம்காலமாக அவனைப் போற்றவேண்டும். அதுதானே உங்களின் நோக்கம்?”

கபிலர் சொன்னார், ``நீங்கள் விரும்பும் போர்க்களத்துக்குப் பாரியை உடனடியாக வரவைக்கும் வழியைத்தான் நான் கூறினேன். அதில் துளியும் மிகையில்லை. ஆனால், இந்தச் செயலில் என்பால் அவனுக்கு இருக்கும் அன்பு உங்களுக்குப் புலப்படவில்லை. அவன் அடையப்போகும் புகழ் மட்டுமே உங்களின் கண்களுக்குத் தெரிகிறது. இதைப் பற்றிதான் பேச நினைக்கிறேன்.”

``இன்னும் பேச என்ன இருக்கிறது?”

``இருக்கிறது. உங்களது போர், அவன் கொண்டுள்ள பொருளுக்கானதன்று; அவன் பெற்றுள்ள புகழுக்கானது. ஒருவனின் செல்வத்தைக் கவர்ந்திட நீங்கள் போரிட்டால் அந்தப் போரில் வெற்றி-தோல்வி உண்டு. ஆனால், ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது.”

குலசேகரபாண்டியன் உயர்த்திய குரலோடு சொன்னார், ``இந்தப் போரில் நாங்கள் வெல்வதைத் தடுக்க யாராலும் முடியாது. ஆனாலும் போர் தொடங்கும் முன்பே ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம். அதுதான் எங்களுக்கு ஆறாத்துயரை ஏற்படுத்துகிறது.”

``யாரை?” எனக் கேட்டார் கபிலர்.

``உங்களைத்தான். தமிழ் நிலத்தின் பெரும்புலவர்; மூவேந்தர்களின் அவைகளையும் பாட்டால் பொலிவுறச்செய்த பேரறிஞர். இன்று எங்களின் எதிரியோடு போய் நிற்கிறீர். அவன் உங்களின் தமிழால் எங்களைச் சீண்டுகிறான். உங்களின் புலமைகொண்டு நம் நட்பைத் தகர்க்கிறான். தயவுகூர்ந்து உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கோழையை உங்களின் மேலாடையை விட்டு வெளியில் வந்து பேசச் சொல்லுங்கள்.”

பாரியுடனான நட்பும் வேந்தர்களுடனான நட்பும் ஒரே நேரத்தில் இகழ்ச்சிக்குள்ளானது. ``எனது புலமையும் எனது தோழமையும் எத்தனையோ முறை சீண்டப்பட்டிருக்கின்றன. ஆனால், தனிமனிதனாக நான் இப்போது சீண்டப்படுகிறேன்…” என்ற கபிலர் அடுத்த வார்த்தையை உச்சரிக்கும் முன் சட்டென இடைமறித்தார் முசுகுந்தர்.

``இதற்குமேல் பேசிக்கொண்டிருப்பது பொருளற்றது. சிறைப்பிடிக்கப்பட்டவனை மீட்க,  துணிவிருந்தால் போரிட்டு மீட்டுக்கொள்ளச் சொல்லுங்கள்” என்று நிறுத்தினார் பேச்சை.

அவையில் சட்டென அமைதி திரும்பியது. தலையசைத்தபடி `சரி’யெனச் சொன்ன கபிலர். ``போரிட்டு மீட்பான் பாரி. ஆனால், போர் முடியும் வரை சிறைப்பிடிக்கப்பட்டவனைப் பாதுகாக்கும் அறத்திலிருந்து நீங்கள் நழுவ மாட்டீர்கள் என நம்புகிறேன்.”

``அவனுக்கு உணவும் நீரும் அளிப்போம். மருந்தளிக்க மாட்டோம். தாக்குண்ட காயத்தால் அவன் மரணம் எய்துவானேயானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றார் முசுகுந்தர்.

``உணவும் நீரும் அளியுங்கள். அது போதும்” என்றார் கபிலர்.

``சரி. அப்படியென்றால், போரின் விதிகளை வரையறுத்துக்கொள்ளலாமா?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``போரின் விதிகளைப் போரிடுபவரிடம்தானே நீங்கள் பேசவேண்டும். நான் போரிடுபவன் அல்லன். போரிடப்போகிறவனுக்கு நண்பன்.”

``அப்படியென்றால் நாளைக் காலை போர் விதிகளை முடிவுசெய்வதற்கான மனிதரை அழைத்துவாருங்கள்” என்றார் குலசேகரபாண்டியன்.

``சரி” எனச் சொல்லி அவை நீங்கினார் கபிலர். அவரைப் பொறுத்தவரை வந்த வேலை எல்லா வகையிலும் சிறப்பாக முடிந்தது. நீலனுக்கு அவர் போர்த்திய போர்வை பருத்தி நூலால் நெய்யப்பட்டது மட்டுமன்று, பருத்தி நூலோடு சேர்த்து மூலிகை நார்களால் பின்னப்பட்டது. எல்லாவகையான மருத்துவப் பொடிகளும் அதன்மீது போர்த்தி மேவப்பட்டிருந்தது. அதை மேலே போர்த்தியவுடன் குருதிக்கசிவுகள் உடனே நிற்கும். காயங்கள் விரைவில் குணமாகும். புத்துணர்ச்சியும் ஆற்றலும் பிறக்கும்.

ஒருவேளை, அவனுக்கு உண்ணக் கொடுக்கும் உணவில் நஞ்சு இருந்தாலும் நஞ்சுமுறியாகவும் அது செயல்படும். முறியன் ஆசான் கொடுத்தனுப்பிய மருத்துவ ஆடை அது. அதன் கீழ் விளிம்பில் சற்றே பெரிதான சரடு போன்ற ஒன்று உண்டு. அது தராக்கொடியும் செவ்வகத்தி வேரும். ஒருவேளை இரும்புத்தூணில் அவன் கட்டப்பட்டிருந்தால் அந்தக் கொடியின் பால் பட்டு இரும்பு உருகும்.

அதைப்போலவே குறுங்காது முயலின் குருதியில் ஊறிய நரம்புகள் போர்வைக்குள் இருக்கின்றன. கையில் கிடைக்கும் சிறு தடியைக்கொண்டுகூட வில்லைச் செய்ய அது பயன்படும். மருந்து, ஆயுதம் ஆகிய அனைத்தும் கொண்டதாக இருந்தது அந்தப் போர்வை. நீலனுக்குத் தேவையான அனைத்தும் அவனுக்குத் தரப்பட்டு விட்டன.

கபிலர் நிறைவோடு படை நீங்கி வெளியேறினார். நாகக்கரட்டில் ஏறும்போதே இரவாகிவிட்டது. அவரின் வரவுக்காக ஆறாம் குகையில் பாரி, தேக்கன், முடியன், காலம்பன், கூழையன், வாரிக்கையன், முறியன் ஆசான் ஆகியோர் காத்திருந்தனர். கபிலர் வந்தவுடன் முறியன் ஆசான் எண்ணற்ற கேள்விகளைக் கேட்டார். நீலனின் ஒவ்வொரு காயத்தைப் பற்றியும் விளக்கினார் கபிலர். முறியன் ஆசான் சொன்னதுபோலத்தான் நீலனின் உடல் முழுவதும் விரல்களால் தொட்டுப்பார்த்தார். எந்தெந்த இடத்திலெல்லாம் நீலன் வலிமிகுதியை உணர்ந்தான், எந்தெந்த இடத்திலெல்லாம் உணர்வற்று இருந்தான் என்பதையெல்லாம் துல்லியமாகக் கேட்டார். அவன் எந்தெந்த வடிவில் கைகால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்திருந்தான் எனக் கேட்டார்.

வலதுகால் தொடையில்தான் ஈட்டி இறங்கிய பெருங்காயம் இருப்பதைச் சொன்னார் கபிலர். ``தொடைப் பகுதியில்தான் போர்வை சுருண்டும் மடங்கியும் அதிக நேரம் குவிந்துகிடக்கும். எனவே, ஓரிரு நாள்களில் அது குணமடைந்துவிடும்” என்றார் முறியன் ஆசான்.

முறியன் ஆசானின் வேலை முடியும் வரை மற்றவர்கள் காத்திருந்தனர். அவர் குகை விட்டு வெளியேறியவுடன் வேந்தர்களோடு நடந்த பேச்சு வார்த்தையைப் பற்றிச் சொன்னார் கபிலர். அனைவரும் கவனமாகக் கேட்டனர்.

போர்விதிகளைப் பற்றிப் பேச, பொருத்தமானவரை அழைத்துக்கொண்டு வருகிறேன் எனக் கூறி வந்துள்ளதாகக் கபிலர் சொன்னார்.

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு முடியன் சொன்னான், ``அப்படியென்றால் நாளை கபிலரோடு தேக்கன் செல்லட்டும்.”

எல்லோரும் `சரி’ என்பதுபோலத் தலையசைத்தபோது, பாரி சொன்னான், ``தேக்கன் வேண்டாம்.”

சற்றே வியப்போடு பார்த்தனர்.

``கபிலரோடு வாரிக்கையன் செல்லட்டும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...