சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ரஜினிக்கு ஒரு கடிதம்! - போராடினால் சமூக விரோதியா?

ரஜினிக்கு ஒரு கடிதம்! - போராடினால் சமூக விரோதியா?
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினிக்கு ஒரு கடிதம்! - போராடினால் சமூக விரோதியா?

ரஜினிக்கு ஒரு கடிதம்! - போராடினால் சமூக விரோதியா?

அன்புள்ள ரஜினிகாந்த்

மன்னிக்கவும். இது உங்கள் பழைய பட டைட்டில் அல்ல. உங்களுக்கான மரியாதை. 

நீங்கள் நெடுங்காலம் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துக்கொண்டே யிருந்தீர்கள். அப்போதெல்லாம் உங்கள்மீது அரசியல் விமர்சனம் எழவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் 31ல் ‘அரசியலுக்கு வருவது உறுதி’ என்றும் ‘தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்றும் அறிவித்தீர்கள். உங்கள் ரசிகர்களைச் சந்தித்து ஆலோசனைகள் நடத்தியதோடு, ரஜினி மன்றத்துக்குப் பொறுப்பாளர்களை நியமித்து, வலுப்படுத்தும் பணிகளையும் செய்துவருகிறீர்கள்.

ரஜினிக்கு ஒரு கடிதம்! - போராடினால் சமூக விரோதியா?

மேலும் அவ்வப்போது நடைபெறும் அரசியல், சமூகப் பிரச்னைகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தும், வீடியோ வெளியிட்டும் வருகிறீர்கள். ‘என்னுடைய அரசியல் வழக்கமான அரசியலுக்கு மாற்று அரசியல்; அது ஆன்மிக அரசியல்’ என்றும் தெரிவித்திருந்தீர்கள். அ.தி.மு.க, தி.மு.க. ஆட்சிகளின்மீது அதிருப்தி கொண்ட ஒருதரப்பு மக்கள், உங்கள் வருகையை நம்பிக்கையுடன் வரவேற்கவும் செய்தனர். எனவே நீங்கள் தூத்துக்குடி  துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வர்களைப் பார்க்கச் சென்றதும், அப்போது நீங்கள் தெரிவித்த கருத்துகளும் தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

நீங்கள் தூத்துக்குடிக்குக் கிளம்பும்போதே, ‘`ஒரு கலைஞனான என்னைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று தெரிவித்திருந்தீர்கள். காவல்துறையின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் செல்வது என்பது வெறுமனே ஆறுதல் சொல்வதற்கு மட்டுமல்ல; அவர்களின் தார்மீகப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்தான் நிற்கிறேன் என்று உணர்த்துவதும், காவல்துறையின் வன்முறையை எதிர்ப்பதும்தான் என்பதே பொதுவான புரிதல். ஆனால் நீங்களோ, ஒரு நட்சத்திரக் கலை விழாவுக்குச் செல்லும் மனநிலையில் தூத்துக்குடிக்குச்  சென்றீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

‘`நீங்க யார்?’’,  ``நான் ரஜினிகாந்த், சென்னையில் இருந்து வர்றேன்”, ‘`சென்னையில் இருந்து வர்றதுக்கு நூறு நாட்கள் ஆச்சா?” - ஓர் இளைஞன் உங்களைப் பார்த்துக் கேட்ட கேள்விகள் தமிழகம் முழுவதும் வைரல் ஆயின. அதற்குப்பிறகு, நீங்கள் ஆவேசத்தில் வெடித்ததற்கு அந்த இளைஞனின் கேள்விகள்தான் காரணம் என்பது தொடர்ச்சியாக நிகழ்வுகளைக் கவனித்துவந்த அனைவருக்குமே தெரியும்.

பொதுவாழ்க்கைக்கு வரும் அனைவருமே அரசியல் விமர்சனங்களைச் சந்திக்கத்தான் வேண்டும். இது பிரபலங்களைக் கண்டு பிரமித்துக்கொண்டிருக்கும் காலம் அல்ல. எல்லோரையும் கேள்வி கேட்கும் சமூக வலைதளங்கள் நிறைந்த காலம். ஒரு சின்ன அரசியல் விமர்சனத்தைக்கூட தாங்க முடியாத நீங்கள் எப்படி எதிர்காலத்தில் தீவிரமான அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்று உங்கள் ரசிகர்களே கவலைப்படுகிறார்கள்.

மேலும் ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல், கதிராமங்கலம், தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்கள், இப்போது ஸ்டெர்லைட் போராட்டம் என்று தமிழகமே போராட்டக்களமாகத்தான் இருக்கிறது. எந்தப் போராட்டத்திலும் எட்டிப் பார்க்காத நீங்கள், துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தால் இந்தக் கேள்வி எழத்தானே செய்யும்? ‘எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துக்குக் கண்டிப்பா வருவேன்’ என்பது உங்கள் பிரபலமான வசனம். ஆனால் ‘வரவேண்டிய நேரத்துக்கு’ நீங்கள் வரவில்லை என்பதுதானே அனைவரின் ஆதங்கமும். அதுதானே அந்த இளைஞனின் கேள்வியிலும் எதிரொலித்தது?

ரஜினிக்கு ஒரு கடிதம்! - போராடினால் சமூக விரோதியா?

‘போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதும், போலீஸார் தாக்கப்பட்டதும்தான் துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘எனக்குத் தெரியும்’ என்று அழுத்தமாக மறுபடியும் சொல்லியிருக்கிறீர்கள். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, சினிமா பிரபலமாக, முதல்வர் பதவியை விரும்பும் வருங்கால அரசியல் தலைவராக, அந்த சமூக விரோதிகள் யார் என்பதை நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? 13 பேர் கொல்லப்பட்ட துக்குக் காரணமே, அந்த ‘சமூக விரோதிகள்’தான் என்றால், அதை நீங்கள் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமையில்லையா? குறைந்தபட்சம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள அருணா ஜெகதீசன் ஆணையத்திலாவது ஆஜராகி, அந்த ‘சமூக விரோதிகள்’ யார் என்பதைச் சொல்வீர்களா ரஜினி?

அதேபோல் சமூக விரோதிகள் ஊடுருவியதைத் தெரிந்த உங்களுக்கு இந்தக் கேள்விகளுக்கும் நிச்சயம் பதில் தெரிந்திருக்கும்.

* 99 நாள்கள் நடைபெற்ற போராட்டத்தில் இல்லாத சமூக விரோதிகள் நூறாவது நாள் மட்டும் எப்படி ஊடுருவினார்கள்?

* போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என்பது தமிழக அரசுக்கும் உளவுத்துறைக்கும் தெரியாமல் போனது எப்படி?

* ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் அடுக்கும் அத்தனைக் காரணங்களையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அப்படியானால் 99 நாள்கள் போராட்டத்தை நீடிக்கவிட்டது ஏன்?

* துப்பாக்கிச்சூடு நடந்தபிறகு, தூத்துக்குடிக்குச் சென்று, ‘சமூக விரோதிகள்’ ஊடுருவிவிட்டார்கள் என்று கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள், இந்தப் போராட்டத்துக்கு அமைதியான தீர்வு கிடைக்க எடுத்த முயற்சிகள் என்ன?

* ‘சமூக விரோதிகளுக்கு எதிராகத்தான் துப்பாக்கிச்சூடு’ என்றால் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் யார் சமூக விரோதி?

* ஒரு போராட்டம் வன்முறையை எட்டினாலும், அதைக் கலைக்க தடியடி, கண்ணீர்ப்புகை, வானத்தை நோக்கிச் சுடுதல், ரப்பர் குண்டுகள் மூலம் சுடுதல், முழங்கால்களுக்குக் கீழ் சுடுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தவிர்க்க முடியாத சூழலில்தான் இறுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும். ஆனால் இந்த அணுகுமுறைகள் எவையுமே தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கடைபிடிக்கப்படாதது ஏன்?

* துப்பாக்கிச்சூடு என்றால் தூரத்திலிருந்து சுடப்படுவதுதான் வழக்கம். ஆனால் ஸ்னோலின் என்ற பள்ளிமாணவியின் வாயில் துப்பாக்கி வைத்து சுட்டிருக்கிறார்களே, ஸ்னோலின் சமூகவிரோதியா, அல்லது கொடூரமாகக் கொல்லப்படும் அளவுக்கு சமூகவிரோதியை விட மோசமானவரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இப்போதாவது விடை சொல்வீர்களா ரஜினி?

காவிரி மேலாண்மை வாரியம் கோரி, ஐ.பி.எல்லுக்கு எதிராக சென்னையில் நடந்த போராட்டங்களில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடந்ததையும், தூத்துக்குடியில் காவல்துறையினர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதையும் கடுமையாக எதிர்த்திருக்கிறீர்கள். ‘போலீஸ் யூனிஃபார்ம் போட்டவங்க மேல கை வெச்சா நான் ஏத்துக்கமாட்டேன்’ என்று ஆவேசப்பட்டி ருக்கிறீர்கள்.

ரஜினிக்கு ஒரு கடிதம்! - போராடினால் சமூக விரோதியா?

நியாயம்தான். எந்தவகையான வன்முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசியல் போராட்டங்கள் அமைதிவழியில்தான் நடக்கவேண்டும். ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக எதிர்வன்முறையைத்தான் எதிர்த்துக்கொண்டி ருக்கிறீர்களே தவிர, எல்லாவற்றுக்கும் காரணமான முதல் வன்முறையை அல்ல. காந்தி தலைமையில் நடந்த அகிம்சையான சுதந்திரப் போராட்டத்தில்கூட சௌரி சௌராவில் வன்முறை வெடித்தது. சௌரி சௌரா சம்பவத்தை முன்வைத்து ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை நியாயப்படுத்திவிட முடியுமா, என்ன?

இப்போதுகூட காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டைக் கடுமையாகக் கண்டிப்பதைவிட காவல்துறையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதில்தான் தீவிரம் காட்டுகிறீர்கள். ‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியதும் காவல்துறையினர் தாக்கப்பட்டதும்தான் துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதிகட்டத்தில் காவல்துறையினரே வாகனங்களுக்குத் தீ வைப்பதாக வெளியான வீடியோக்கள் குறித்தும் நடுக்குப்பத்தில் மீனவர் குடியிருப்பு காவல்துறையால் சூறையாடப்பட்டது குறித்தும் நீங்கள் இவ்வளவு தீவிரமாகக் கருத்து சொல்லவில்லையே ரஜினி?

இறுதியில் மக்கள் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு... `மக்கள்...’ என்று ஆரம்பித்து, ‘போராட்டம், போராட்டம்னு நடந்துக்கிட்டிருந்தா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும்’ என்ற பொன்மொழியையும் உதிர்த்திருக்கிறீர்கள். உலகில் எந்த மாற்றங்கள் போராட்டங்கள் இல்லாமல் நிகழ்ந்திருக்கிறது ரஜினி?

பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், ஈழப்போராட்டம், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள், அரபுப் புரட்சி என்று மனித சமூகம் போராட்டங்களின் வழிதான் புதிய எல்லைகளை வந்தடைந்திருக்கிறது. அவ்வளவு ஏன், நெடுவாசலில் மக்களின் நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகுதான் தற்காலிகமான தீர்வாவது கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இளைஞர், மாணவர் எழுச்சிதான் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது.

‘போராட்டங்கள் வேண்டாம்’, ‘போராடுபவர்கள் சமூக விரோதிகள்’, ‘காவல்துறையின் வன்முறையைக் கண்டிக்க மாட்டேன், காவல்துறை மீதான வன்முறையை மட்டும்தான் கண்டிப்பேன்’ என்பதில் எது ஆன்மிகம், எது அரசியல்?

சொல்வீர்களா ரஜினி?

இப்படிக்கு

‘சமூகவிரோதி’ பட்டம் சூட்டப்பட வாய்ப்புள்ள
தமிழச்சி/தமிழன்