Published:Updated:

அன்பும் அறமும் - 15

அன்பும் அறமும் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 15

சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்

மூன்று கலர் கனவுகள்!

ழக்கமாக நான் போகும் பாதைதான் அது. கருவேல முள்களைக் கிழித்துக்கொண்டு போகும் அந்தப் பாதையில் திடீரென ஒரு சுற்றுச்சுவர் முளைத்தது. சிறிய ஓட்டு வீடு ஒன்றையொட்டி `ப’ வடிவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் அது. தீப்பெட்டி அளவு இருக்கும். காயப்போடும் களத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவர். தினமும் அதிகாலையில் மூன்று பெண்களும் ஓர் ஆணும் சாந்தைக் குழைத்துக்கொண்டிருப்பார்கள். சின்னப் பெண், பக்கத்தில் இருக்கிற அடி பம்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருப்பார். பெரிய பெண்ணின் தலையில் இருக்கும் சாந்துச்சட்டியில் சிமென்ட் கலவையை அள்ளிப்போடுவார். அந்தப் பெரிய மனிதர் இரண்டு பக்கங்களும் அண்ட்ராயர் தெரிகிற மாதிரி கம்பின்மீது காலைப் போட்டுக்கொண்டு,  பூசிக்கொண்டிருப்பார்.

என் கார் தூரத்தில் வருவது தெரிந்தால், அந்த மூத்த பெண் வீட்டுக்குள் ஓடிவிடுவார். உள்ளிருக்கும் கண்ணாடியில் பார்ப்பேன். தயக்கத்தோடு வந்து எட்டிப் பார்த்துவிட்டு சாந்துச் சட்டியை மறுபடியும் தூக்குவார். இதுமாதிரிப் பத்து நாள்களுக்கும்மேல் நடந்தது.

எனக்கு விவரம் புரிந்துவிட்டது. அடுத்த நாள் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து போய், அவர்கள் நால்வருக்கும் கேட்கிற மாதிரி ``கட்டடத்துக்குக் கம்பி கட்டுற வேலை இருந்தா சொல்லுங்க. சின்ன வயசுல லீவ் டைம்ல நானும் செஞ்சிருக்கேன்” என்று சொன்னது, சத்தியமாக எல்லோருக்கும் புரிந்துவிட்டது. அந்தப் பெரிய மனிதர் உடனடியாகப் புரிந்துகொண்டு, ``சபாஷ்!’’ எனச் சத்தமாகச் சொல்லிவிட்டுத் தலையாட்டினார். பெண்பிள்ளைகள் சிநேகிதமாகச் சிரித்தார்கள். அந்தம்மா சேலையில் முகத்தைத் துடைத்துவிட்டு, ``இதைச் சொல்றதுக்கா இப்படி எறங்கி வந்தீங்க? பார்த்துப் போங்க. நெருஞ்சிமுள் நிறைய கிடக்குது” என்றார்.

அன்பும் அறமும் - 15

நெருஞ்சிமுள்களைக் கடந்து வரும் வாழ்க்கை அவர்களுடையது. அவர்கள் பூக்கட்டுகிற சிறு குடும்பம். பிளாஸ்டிக் பூக்களின் காலத்தில் தெருப்பூக்களுக்கு மதிப்பில்லை. அந்த மூத்த பெண், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளைய பெண் பிளஸ் 1.

ஒருநாள் என்னை வழியில் நிறுத்தி அந்த அப்பா சொன்னார், ``சொல்றதுக்கே சங்கடமா இருக்கு. இதுக்கு முன்னாடி டூ பாத்ரூம் போறதுக்கெல்லாம் எங்க பிள்ளைங்க நீங்க போற பாதையிலதான் உட்காருவாங்க. இப்ப ஆள் நடமாட்டம் நிறைய வந்திருச்சுங்கிறதால கொஞ்சம் கடனை உடனை வாங்கி சுற்றுச்சுவர் வெச்சு ஒரு கக்கூஸ் கட்டினேன்” என்றார். அந்தப் பெண் கல்லூரி போகும்போது அணிந்திருக்கும் உடைகளைப் பார்த்திருக்கிறேன். முந்நூறு ரூபாய் மதிப்பிலான சுடிதார்கள் அவை.

இந்த முந்நூறு ரூபாய் சுடிதார்களை யாரிடம் போட்டியிடச் சொல்கிறார்கள் தெரியுமா? நவ அங்காடிகளில் தொங்கும் டிசைனர்ஸ் சாய்ஸ் சுடிதார்களோடு. இளவயது சுடிதார் டிசைனர் ஒருவருடன் பேசினேன். ``எங்க வீட்ல பெட்ரூம் சைஸுக்கு பாத்ரூம் கட்டித் தரணும்னு எங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கேன். பிராண்டட் அயிட்டங்களா வெச்சு அட்டகாசமான ஒரு லிவ்விங் ரூம் மாதிரி...” எனக் கண்கள் விரிய, பறக்கும் தலைமுடியைக் கோதிக்கொண்டு கனவைச் சொன்னார். அவர் அடைய முடியும் கனவைக் காண்கிறார் என்ற வகையில் அவர்மீதொன்றும் வருத்தமில்லை. `பணக்காரன் எல்லாம் கொழுப்பெடுத்தவன்’ என்று பார்க்கிற பழைய பார்வைமீது எனக்குக் கொஞ்சம் விருப்பம் கம்மிதான். ஒவ்வொருவரின் கனவிலும் ஒவ்வோர் ஏக்கம். அதை அளவிட,  துலாக்கோல்கள் எதுவும் இல்லை.

ஆனால், சமூக யதார்த்தம் ஒன்றைப் பற்றித்தான் பேச விரும்புகிறேன். விளம்பரம் ஒன்றைப் பார்த்துவிட்டு, ‘இன்டர்வியூவுக்கு இந்தச் சட்டைதான் போடுவேன்’ என அப்பாவிடம் சண்டைபோட்டு சட்டை வாங்கினான் இளைஞன் ஒருவன். எல்லாச் சட்டைகளும் நல்ல சட்டைகள்தான் என்று ஏன் இந்த விளம்பரங்கள் கொஞ்சம் கனிவாகப் பேச மறுக்கின்றன? இல்லாதவன் எங்கே போய் வாங்குவான்? முந்நூறு ரூபாய் சுடிதாரும் டிசைனர் சுடிதாரும் ஒரே கல்லூரிக்குத்தான் படிக்கப் போகவேண்டியிருக்கின்றன; ஒரே அலுவலத்தில்தான் முட்டி மோதவேண்டி யிருக்கின்றன; ஒரே மாதிரியான போட்டித் தேர்வைத்தான் எழுதுகின்றன. எல்லோருக்கும் ஒரே மாதிரியான கலர்் கனவுகள்தான் காட்சி ஊடகங்கள் வழி காட்டப்படுகின்றன. லிவ்விங் ரூம் மாதிரியான பாத்ரூம்களின் வாழ்க்கைதான் அதிகம் காட்டப்படுகின்றன. தப்பில்லை. ஓர் ஓரமாக வண்ணமயமாக வாழுங்கள். அது உங்களது உரிமையும்கூட.

அன்பும் அறமும் - 15


ஆனால், உங்களுடையது சிறந்தது என்பதற்காக எங்களுடையது மோசமானது என விளம்பரங்கள் தொடங்கி எல்லாவற்றிலும் ஏன் மட்டம் தட்டுகிறீர்கள்? `இதைப் போட்டால்தான் நான் சிறந்தவன் ஆவேன்’ என்று ஏன் வலியுறுத்து கிறீர்கள்? கடுமையான ஏற்றத்தாழ்வுகளைப் பொதுவெளியில் விதைக்கிறீர்கள்? அவர்கள் மனம் புண்படாதா? மஞ்சள் பூத்த சட்டை போட்டால் அவன் திறமையில்லாதவன் ஆகிவிட மாட்டானா? திறமையும் திறமையின்மையும் எல்லாத் தட்டுகளிலும் இருக்கத்தானே செய்கின்றன?

இது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். இருப்பவன்/இல்லாதவன் என்கிற ஒற்றைக்கோடு எப்போதும் நல்லதல்ல. எல்லோரும் ஒரே கனவைச் சுமந்துகொண்டு ஓட முடியாது.

பல கொள்ளைச் சம்பவங்களைப் பாருங்கள். பொறியியல் பட்டதாரிகள் பலரும் கொள்ளையடிக்க இறங்கியிருக்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல, அலுவலகத்திலேயே திருடிய பெண் ஒருத்தியைப் பற்றி சில அத்தியாயங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன். பணத்துக்காகக் கொலை செய்கிறார்கள். அதிகப்படுத்தியெல்லாம் சொல்லவில்லை. ஒருவாரம் செய்தித்தாள்களில் இது மாதிரியான செய்திகளை மட்டும் தேடுங்கள். எத்தனை தட்டுப்படுகின்றன என்பது உங்களுக்கே புரியும்.

எதற்காக இவர்கள் கொள்ளையடிக்க வேண்டும்? ஏற்கெனவே சொன்ன மாதிரி நீங்கள் விதைத்த ஒற்றைக் கலர்க் கனவுகளுக்காகத்தான் கொள்ளையடிக்கிறார்கள். வீட்டுப் பக்கத்தில் சுவரைத் தாண்டிப் போய்த் திருடி கேமரா செட் மொபைலை வாங்கிக்கொண்டு வந்த பையனை மட்டும் எப்படித் தனிமைப்படுத்திக் குற்றம் சொல்வீர்கள்? ‘அந்த மொபைல் இருந்தால்தான் அழகான பெண்கள் உன்னைச் சுற்றி வருவார்கள்’ என்ற கருத்தை விதைத்தது யார்? அதன் நீட்சியாக இந்த விஷயத்தைப் பற்றித் திறந்த மனதோடு யோசித்துப்பாருங்கள்.

இருநூறு சதுர அடியில் தங்களது கைக்கு அடக்கமான விலையில் வாங்கிப் பதித்த பாத்ரூம் டைல்ஸையும் இத்தாலிய மார்பிள் பதிக்கப்பட்ட லிவ்விங் ரூம் பாத்ரூமையும் ஏன் ஒரே டிராக்கில் ஓடச் சொல்கிறீர்கள்? இந்த மலையளவு வித்தியாசம் உங்களுக்கே தெரியவில்லையா? மேலே ஏறி வந்த பிறகுதானே ஒரே டிராக்கில் ஓட முடியும்!

 மேலே ஏறும் எத்தனங்களின்போதே ஏன் ஒற்றைக் கனவைக் காட்டி எங்களுடைய கலர் கனவுகளை முறித்துப்போடுகிறீர்கள்?

உங்களுடையதும் யாருக்கும் சளைத்ததல்ல. எல்லோரையும்போலவே உங்களுடையதும் சிறந்ததுதான் என்கிற உணர்வை அவர்கள் மத்தியில் ஏன் உருவாக்கத் தயங்குகிறீர்கள்? கல்லூரிக்கு முந்நூறு ரூபாய் சுடிதாரை அணிந்துகொண்டு போகும் அந்தப் பெண்ணின் முகத்தை வந்து பாருங்கள். அந்தக் குட்டிக்கண்களிலும் ஏராளமான கலர் கனவுகள் உள்ளன!

- அறம் பேசுவோம்!