சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

புக் மார்க்

புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

மிழின் மூத்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பா.செயப்பிரகாசம். தனது அடுத்த நாவலாக அவர் எழுதவிருப்பது மணல் கொள்ளையைப் பற்றித்தான். "இந்த ஆறு உண்டாகி 2500 வருஷம் இருக்குமா? 3000 வருஷம் இருக்குமில்லையா? மூவாயிரம் ஆண்டுகளாய்ச் சேர்த்துவெச்ச மணலைப் பத்து வருஷத்தில தீர்த்திட்டாங்க. மணலை, நீரைக் கொள்ளையடிப்பது அதிகாரச் சக்திகளின் செயல்பாடெனில் நிலத்தையும் நீரையும் காக்கப் போராடுதல் மக்களின் அறம். வாழ்வாதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளையை எதிர்த்து, கிராமம் கிராமமாய் சனங்களைத் திரட்டினார்கள்; போராடினார்கள்.அந்தக் கதைதான் இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் புதிய நாவல் ‘மணல்’ ” என்கிறார்

பா. செயப்பிரகாசம்.

புக் மார்க்

``புதிதாக எழுதுபவர்கள் மட்டுமன்றி சமூக வலைதளச் சூழலில் மூழ்கிவிட்ட பிரபலக் கவிஞர்களிடம்கூட நகலெடுத்தல்தான் நடக்கின்றன. மக்கள் எதை ரசிக்கிறார்களோ, அதைக் கவிதையாக்குகின்றனர். ஒரு சிற்பியைப் போல மொழியைச்  செதுக்குங்கள். நிறைய கவிதைகள் எழுதத் தேவையில்லை.  வாழ்நாள் மொத்தமும் 25 கவிதைகள் எழுதினால்கூட போதும். ஆனால், அவை காத்திரமான கவிதைகளாக இருக்க வேண்டும்” என்கிறார் கவிஞர் ரமேஷ் பிரேதன்.

புக் மார்க்

“திருநெல்வேலிப் பகுதியில், கிறிஸ்துவம் எவ்வாறு பரவியது என்பதோடு, அந்த மாவட்டத்தின் போக்குவரத்து, நோய்த்தடுப்புமுறை, நாட்டு வைத்தியம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் அடங்கிய ஒரு வரலாற்று ஆவணம் ‘சவரிராயப்பிள்ளையவர்கள் சர்னலும் காகிதங்களும்’ என்கிற நூல். சவரிராயன் தனக்கு வந்த கடிதங்களையும் அவற்றிற்குத் தான் எழுதிய பதில்களையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். சர்னல் என்றால் நாட்குறிப்பு என்று பொருள். அதில் அப்போது நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் நாட்குறிப்புகளாகக் குறித்துவைத்திருந்தார். அவர் இறந்ததும் அவர் மகன் தேவசகாயம் அவற்றைத் தொகுத்து நூலாக்கினார். அதுவும் 25 படிகள் மட்டுமே அச்சிட்டார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட மூன்று தொகுதிகள். மேலோட்டமாகப் பார்த்தால் சமய அலுவலர் ஒருவரின் பதிவுகள் என்று தோன்றலாம். அந்நூலில் 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன. இந்த நூல் மறுபதிப்பு வெளிவரும்பட்சத்தில் சமூக வரலாற்று ஆய்வாளர்கள், மொழி ஆய்வாளர்கள், சமய ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”

-ஆ.சிவசுப்ரமணியன்

புக் மார்க்

“என்னதான் தொடர்ந்து வாசித்தாலும் ஆரம்பகட்ட வாசிப்பில் நம்மை உலுக்கிய நூலை மறந்துவிடமுடிவதில்லை. அப்படி நெஞ்சில் பதிந்ததுதான் டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு'. சமீபத்தில் படித்து முடித்த நாவல் தேவகாந்தனின் ‘கலிங்கு'. ஈழப் பேரழிவுகளைப் பின்னணியாகக் கொண்டு வந்தவற்றுள் எந்த ஓர் இயக்கச் சார்பும் இன்றி எழுதப்பட்ட நுணுக்கமான படைப்பு. போருக்கு ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம். ஆனால் போர் எனில் அதனூடாக மேலெழும் அநீதிகள் கொடியன. தமிழ் மக்கள் அனுபவித்த துயர்களின் ஊடாகப் பல கேள்விகளை எழுப்புகிறார் தேவகாந்தன்”

- அ. மார்க்ஸ்

புக் மார்க்

ழைய புத்தகங்களைத் தேடிச் சேகரிப்பது மனதுக்கு நெருக்கமான அனுபவம்.  பழைய புத்தகக் கடைகளுக்கென்றே வாசகர்களும் இருக்கிறார்கள். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஏ. கோவிந்தராஜூ. 82 வயதாகும் கோவிந்தராஜூ தான்  நடத்திவரும் பழைய  புத்தகக் கடையில் 6,000 புத்தகங்களைச் சேகரித்துவைத்துள்ளார். தனது 24 வயதிலிருந்து புத்தகங்கள் சேகரித்துவருகிறார் கோவிந்தராஜூ. பத்திரிகைகளில் வெளிவந்த கோபுலு, மணியன்செல்வன்  உள்ளிட்டவர்களின் ஓவியங்களையும் சேகரித்துவைத்துள்ளார். ஆர்.ஏ.புரம் செல்லும் வாசிப்பாளர்களுக்கு இவரது புத்தகச் சேமிப்பு புதையலைக் கண்ட அனுபவத்தைத் தரும் என்பது உறுதி.

புக் மார்க்

“தி.ஜானகிராமனின் மொத்தச் சிறுகதைகளையும் சமீபத்தில் வாசித்தேன். அந்நூலின் முன்னுரையில், ‘சிறுகதை எழுதுவது எப்படி’ என எழுதியிருக்கிறார். அது ரொம்ப முக்கியமானது. கதை எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல, எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. நாம் செய்யும் செயல் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய செய்தி ஒன்றுதான் என்பதை அந்த முன்னுரையைப் படிக்கும்போது உணர்ந்தேன்”

- சீனு ராமசாமி

புக் மார்க்

“நாஞ்சில் நாடனுக்கு... புதிய நூற்றாண்டில் நீங்கள் ஏன் நாவலே எழுதவில்லை? கும்பமுனியையும் தவசிப்பிள்ளையையும் வைத்தே நீங்கள் அந்நாவலைத் தொடங்கலாமே?

ச.தமிழ்ச்செல்வனுக்கு... புனைவெழுத்தின் பக்கம் நீங்கள் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அமைப்புப்பணிகள், கட்டுரைகள் என்பதோடு திருப்தியடைந்து விடப்போகிறீர்களா? சிறுகதை, நாவல் எழுதும் எண்ணம் இல்லையா?”

- கீரனூர் ஜாகிர்ராஜா