சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“நாடகமே வாழ்க்கை!”

“நாடகமே வாழ்க்கை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நாடகமே வாழ்க்கை!”

விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: தே.அசோக்குமார், அ.குரூஸ்தனம், பிரியதர்ஷினி

“நாடகமே வாழ்க்கை!”

கூத்து பார்த்து வளர்ந்த சமூகம் நம்முடையது. விடிய விடியக் கூத்து நடத்தப்படும் கிராமத் திருவிழாக்களில்,பெண்களின் கதாபாத்திரங்களையும் ஆண்களே வேடமிட்டு நடிப்பார்கள். இன்றோ நவீன நாடகங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது வரவேற்கவேண்டிய விஷயம். சமூகப் பிரச்னைகளைப் பேசும் நாடகங்களில், மனதை உறையவைக்கும் காட்சிகளில் அப்பெண்களின் நடிப்பு அர்ப்பணிப்பு மிக்கது. நாடக மேடைகளில் அசல் நடிப்பை ஆத்மா கரைய, கொட்டிக்கொண்டிருக்கும் பெண்களில் சிலரிடம் பேசினேன். 

“நாடகமே வாழ்க்கை!”

ஆஷா பியூட்டிஷியன்

“சொந்த ஊரு நாகர்கோவில் பக்கத்துல இருக்கிற கடியபட்டினம். ஒரு தம்பி, ஒரு தங்கச்சி. எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பில் கவனமில்லை. சில வருஷங்கள் கழிச்சு நாகர்கோவிலில் இருந்த ‘முரசு கலைக் குழு’வில்  சேர்ந்து, கிராமிய நடனம், நாடகம், வீதி நாடகங்கள்னு இருந்தேன். குழுவின் தலைவர் ஃபாதர் சதீஷ்குமார் ஜாய், நான் பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்க உதவினார்.

2012-ம் வருஷம் புதுச்சேரிக் கடற்கரையில் நடந்த கிராமியக் கலைகள் விழாவுக்குப்  போயிருந்தப்போ, முருகபூபதியோட ‘மிருகவிதூர்ஷம்’ நாடகத்தைப் பார்த்தேன். அதன் தாக்கத்திலிருந்து சுலபமா விடுபடமுடியலை. பெரும் முயற்சிகளுக்குப் பின் முருகபூபதியின் ‘மணல்மகுடி’ நாடகக்குழுவில், ஆர்ட்டிஸ்ட் ரெஜின் ரோஸ்  மூலமாகச் சேர்ந்தேன். ‘குகைமரவாசிகள்’, ‘மாயக்கோமாளிகள்’ நாடகப் பயிற்சிகளில் முருகபூபதி மேடை நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். ‘கட்டியக்காரி’ குழுவின்   ‘மொளகாப் பொடி’, ‘மஞ்சள்’ நாடகங்களிலும் நடிச்சேன். பிரளயன் குழுவோடு நடித்த ‘வஞ்சியர் காண்டம்’, ‘வீராயி’ நாடகங்கள் நல்ல அனுபவங்கள் தந்தன. வருமானத்துக்கு பியூட்டிஷியன் வேலைக்குப் போவேன். நாடகப் பயிற்சி ஆரம்பிச்சதும் வேலையை விட்டுடுவேன். அப்புறம் நாடகம் முடிஞ்சதும் மறுபடியும் வேலைக்குப் போவேன். ஆனா கடந்த ஒரு வருஷமா நாடகம்தான் வாழ்க்கைனு முடிவெடுத்து நடிச்சிட்டிருக்கேன். சில வருஷங்கள் கழிச்சு தமிழ் நாடகங்கள் பற்றி எழுதும்போது, என் பெயர் தவிர்க்க முடியாததாக இருக்கணும் என்ற பேராசை இருக்கு. அதை நோக்கியே நாடகம் வழியே கிடைத்த வாழ்க்கைத்துணை செந்தூரனோடு  பயணிக்கிறேன்!”

“நாடகமே வாழ்க்கை!”

மிருதுளா  பள்ளி மாணவி

“நாடகத்தில் அப்பாவுக்கு நான் சீனியர்’’ எனப் பேசத் தொடங்குகிறார் பிளஸ் டூ மாணவி மிருதுளா. “நான் ஐந்தாம் வகுப்பு படிச்சப்போ ‘மொளகாப் பொடி’ நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. அப்போ, சென்னை நுங்கம்பாக்கம் நவபாரத் பள்ளியில் படிச்சிட்டிருந்தேன். பள்ளியின் முதல்வர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சார், என் நாடக ஆர்வத்துக்குப் பக்கபலமாய் இருந்தார். எட்டாம் வகுப்பு படிச்சப்போ பிரளயனின் ‘கூக்குரல்’, ‘இடம்’ நாடகங்களில் நடிச்சேன். டென்த் எக்ஸாமுக்குப் படிச்சுட்டே, ‘மஞ்சள்’ நாடகத்தில் நடிச்சேன். அதில், நான் அம்பேத்கர் புத்தகத்தைப் படிக்கிற காட்சி. அப்ப என் ஆசிரியர் அந்தப் புத்தகத்தைப் பிடுங்கி, கீழே எறிவார். ஆனாலும் நான் என் நினைவிலிருந்து அம்பேத்கரின் வரிகளை வசனமாகச் சொல்வேன். அப்போ அரங்கமே அதிரக் கைத்தட்டல் கிடைச்சப்போ, ரொம்ப சிலிர்ப்பா இருந்தது.

‘மஞ்சள்’ நாடகத்தில் என் அப்பாவும் நடிச்சார்.  அவர், முன்னோடி நாடகக் கலைஞர் கண்ணப்பத் தம்பிரானின் வாரிசுதான் என்றாலும், அதற்கு முன் நடிச்சது கிடையாது. தனியார் நிறுவனத்துல அக்கவுன்டன்ட்டா இருக்கார். நான் நடிக்க ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் கழிச்சுதான் அப்பா நடிக்க வந்தாங்க. ‘வீட்லதான் அப்பா, ஸ்டேஜில் நீங்க எனக்கு ஜூனியர்’னு சொன்னா சந்தோஷமா சிரிப்பாங்க. அம்மா நகராட்சியில டைப்பிஸ்ட்டாக இருக்காங்க. என் நாடக ஆர்வத்தை ரெண்டு பேருமே ஊக்குவிக்கிறாங்க. இப்ப, பெரம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். சுமாராதான் படிப்பேன். ஆனா சூப்பரா நடிப்பேன். டெல்லியில இருக்கிற தேசிய நாடகப் பள்ளியில் படிக்க ஆசை!”

“நாடகமே வாழ்க்கை!”

அஸ்வினி நடிகர்

“நாடகத் துறையில என் வீட்டில் நான் ஆறாவது தலைமுறை” எனப் பெருமிதம் பொங்கச் சொல்லும் சென்னைப் பெண் அஸ்வினி, புரிசை கண்ணப்பத் தம்பிரானின் பேத்தி. பேராசிரியர் அ.மங்கை, ‘நாடகத் துறையில் நம்பிக்கை தரும் இளம் நடிகர்’ என அஸ்வினியைக் குறிப்பிடுகிறார். “அப்பா நாடகங்களில் நடிச்சுட்டே சென்னையில் அஞ்சல் துறையில் வேலைபார்க்கிறார். புரிசையிலிருந்து தாத்தா வரும்போது வீட்டிலேயே ரிகர்சல் நடக்கும். இப்படி சின்ன வயதிலிருந்து நாடகப் புலத்தில் புழங்கிட்டிருந்தாலும், புதுவையைச் சேர்ந்த குமரன் வளவன்தான் என்னை நடிக்க அழைத்தார். ‘ஆண்டிகளே’ என்ற நாடகத்தில் என் பயணம் தொடங்கியது. பிறகு, பேராசிரியர் அ.மங்கையின் ‘லெஷ்மன் கனவு’, ‘ஒளவை’, ‘ஆண்மையோ ஆண்மை’, பிரளயனின் ‘இடம்’, ‘மாநகரம்’, ஸ்ரீ ஜித்தின் ‘மொளகாப் பொடி’, ‘மஞ்சள்’ உள்ளிட்ட நாடகங்களில் தொடர்ந்து நடிச்சிட்டுவர்றேன். தெருக்கூத்திலும் நடிச்சிருக்கேன்.

ஒரு காலத்தில் பெண் வேடங்களையும் ஆண்களே நடித்த நிலை மாறி, இன்று ஒவ்வொரு குழுவிலும் ஐந்தாறு பெண்கள் இடம் பிடிச்சிருக்கோம். இது சாத்தியமானதுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், பெண்கள் துணிவோடு முயன்றதையே முதன்மையான காரணமா நான் பார்க்கிறேன். இதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. பொதுமேடையில் நாடகம் நடிச்சிட்டிருக்கும்போது, மேடைக்கு அருகே சில இளைஞர்கள் நின்றுகொண்டு, எங்கள் உடை, மேக்கப் பற்றி சத்தமா கமென்ட் அடிப்பாங்க. அதை நாங்க கொஞ்சமும் பொருட்படுத்தாம தொடர்ந்து நடிப்போம். இப்போ நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். என் கணவர் சம்பத், கராத்தே பயிற்சியாளர். அவரும் இப்போ என்கூட சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சுட்டார். கணவர் மட்டுமல்ல, பொண்ணு நித்திலாவும் நடிக்க வந்திருக்கிறதால, ஏழாவது தலைமுறையாக நாடகப் பயணத்தின் கண்ணி அறுந்துடாமல் தொடர்ந்திட்டிருக்கோம். ‘மஞ்சள்’ நாடகத்தில் இணை இயக்குநர் பொறுப்பும் எடுத்திருந்தேன். சாதி மறுப்பை வலியுறுத்தும் நாடகம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை!”

“நாடகமே வாழ்க்கை!”

அருணா  தமிழ் நாடகங்களில் கலக்கிவரும் கன்னடப் பெண்,

“நான் படிச்சது பெங்களூருவில். கன்னடம்தான் தெரியும். ஆனா, தமிழ் நாடகங்களில் வசனம் பேசி நடிக்கிறது எனக்கே ஆச்சர்யமாக இருக்கு. எம்.பி.ஏ முடிச்சிட்டு சென்னையில் கால் சென்டரில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாள் என் நண்பர்  சங்கர், ‘நாடகம் பார்க்க வர்றியா?’னு கேட்டார். போனேன். அது ‘மொளகாப் பொடி’ நாடகம். எனக்கு அந்தச் சூழலின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாடகத்தின் இயக்குநர் ஸ்ரீஜித் அண்ணாவின் அறிமுகம் கிடைக்க, அவரின் அடுத்த நாடகத்தில் பாலியல் தொழிலாளி ரோல் கொடுத்தார். பக்கம், பக்கமா இருந்த வசனத்தை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் பண்ணி நடிச்சேன்.

‘மஞ்சள்’ நாடகத்தில் செப்டிக் டேங்க்கைச் சுத்தம் செய்யும்போது இறந்துபோன கன்னையனின் மனைவி கதாபாத்திரத்தில் நடிச்சேன். கிட்டத்தட்ட ஒரு வருஷம் அதுக்குப் பயிற்சி எடுத்தோம். எங்க குடும்பத்தினர் எல்லோரும் வந்து அந்த நாடகத்தைப் பார்த்தாங்க. அதில் என் கணவராக நடிச்ச சங்கருக்கும் எனக்கும், சில மாதங்களுக்கு முன்தான் திருமணமானது. இப்போ குடும்பத்தோடு அரிதாரம் பூசிட்டிருக்கோம்!” 

“நாடகமே வாழ்க்கை!”

புஷ்பநந்தினி

பாண்டிச்சேரிப் பல்கலைக்கழத்தில் நாடகத்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி.

“எனக்குச் சொந்த ஊர் மதுரை. அப்பா தச்சுத் தொழிலாளி. பள்ளி நாள்களில் நாடகத்துக்குப் பெயர் கொடுக்கும்போது, நான் உயரம் குறைவா இருப்பதால் என்னைச் சேர்க்கமாட்டாங்க. அந்த ஏக்கம்தான், அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ தமிழ் படிச்சப்போ, கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடிச்சுக்கவெச்சது. அங்கே நாடகக் கலைஞர் பேராசிரியர் சண்முக ராஜா குழுவில் சேர்ந்து நிறைய பயிற்சி எடுத்தேன். எம்.ஃபில் படிக்கும்போது, வீட்டில் சண்டைபோட்டு அனுமதி வாங்கி, சாருடன் புதுச்சேரி நாடக விழாவுக்குப் போனேன். அங்குதான் என் வாழ்க்கையே மாறுச்சு.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ராஜூ சார் என் நடிப்பைப் பாராட்ட, அந்த ஊக்கத்தில் அங்கேயே உதவித்தொகை பெற்று, நாடகத் துறையில் படிச்சிட்டிருக்கேன். எங்க வீட்டில் யாருக்கும் நான் நாடகங்களில் நடிக்கிறதில் உடன்பாடில்லை. ஆனாலும் நான் பிடிவாதமா முயன்றேன். எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ கதையை நாடகமாக்கும்போது, நாயகியின் அம்மா கதாபாத்திரம் கிடைச்சது. எனக்கு முதன்முறையா கிடைச்ச  பவர்ஃபுல் கேரக்டர் அது. அந்நாடகத்தை மதுரையில் நடத்தியபோது வந்து பார்த்த என் அம்மா, அப்பா பிரமிச்சுப் பேசினாங்க. ஆனாலும், படிப்பு முடிஞ்சதும் வீடு திரும்பிடுவேன், கல்யாணம், குடும்பம்னு செட்டில் ஆகிடுவேன்னு எதிர்பார்க்கிறாங்க. எக்காரணம் கொண்டும் நாடகத்தை விட்டு விலகிடக்கூடாதுனு நான் நினைக்கிறேன். முனைவர் பட்டப் படிப்பு முடிந்ததும், முழுக்க நாடகம் தொடர்பாக, நண்பர்களோடு இயங்கப்போறேன். என்னை மாதிரி படிப்பில் ஆவரேஜ் ஸ்டூடன்ட்ஸ் எல்லோரும், தங்களோட திறமையைக் கண்டறிஞ்சு அதில் பெஸ்ட்  பர்ஃபார்மர் ஆகணும்!”