
ஓவியம்: செந்தில்
வெயிலோடும் நிழலோடும்...
என் விரல்களின் மீது ஊர்ந்துகொண்டிருந்த
ஒரு வரியை எடுத்து வெயிலில் போட்டிருக்கிறேன்
இன்னொரு வரியை எடுத்து
மர நிழலில் போட்டிருக்கிறேன்
வெயிலில் போடப்பட்ட வரி
என் மீது சாபங்களை எழுதிக்கொண்டிருக்கிறது
நிழலில் போடப்பட்ட வரி
என் மீது ஆசீர்வாதங்களை எழுதிக்கொண்டிருக்கிறது
நிழலில் போடப்பட்ட வரி
நிழல் முழுவதையும் மெள்ள மெள்ள ஆக்கிரமித்து
தனதென்று பிரகடனப்படுத்திக்கொண்டு
மற்ற யாரையும் நிழலுக்குள் அனுமதிக்க மறுக்கிறது
வெயிலில் போடப்பட்ட வரி
எங்கெங்கோ ஒதுங்க வழி பார்த்து முடியாமல்
கறுத்துப்போய்
வெயிலோடு சிநேகமாகிவிட்டது
இப்போது எல்லா வெயிலையும்
அது தனதென்றே எழுதப் பழகிக்கொண்டது
நிழலில் பழகிய வரி
நிழல்களைத் தேடிக்கொண்டேயிருக்கிறது
நிழல்களைத் திருடுபவர்கள் வரும்போதெல்லாம்
ஓர் அழுகுரலோடு
இன்னொரு நிழலைத் தேடி ஓடுகிறது
வெயிலில் போடப்பட்ட வரியின் வாழ்வு
சகஜமாகிவிட்டது
நிழலில் போடப்பட்ட வரியோ
இன்னமும் நிலையாகாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது
- சௌவி

அரைவட்டக் கிளிஞ்சல்
கடல் பார்க்கப் போயிருந்த சிறுமி
கரையில் அமர்ந்து
கைகளால் மணலை அளந்தபோது
விரல்களில் சிக்கிய
பழுப்பு நிற
அரைவட்டக் கிளிஞ்சல் ஒன்றை
நெடுநேரம் உள்ளங்கையில் வைத்து
அழகு பார்த்துப் பின்
எதையோ நினைத்தவளாய்க்
கடலில் வீசியெறிந்து திரும்பினாள்
தேடும் அலைகளின்
தேவையைத் தீர்த்துவைத்த நிம்மதியில்!
- தி.சிவசங்கரி
பயணம்
பிரார்த்தனையின் நெடிய கணங்களில்
உக்கிரம்மிகுந்த
சன்னதப் பெண்ணாக
சுடர்க் கூந்தல் விரித்து
ஆடத் துவங்குகிறது தீபம்.
காற்றின் திசைக்கெல்லாம் திரும்பி
படபடக்கிறது.
எரிந்தடங்கும் இறுதிக்கணத்தில்
வேண்டுதல்களின் பட்டியலைச்
சேகரித்துக்கொண்டு
கடவுளிடம் பயணப்படுகிறது.
- தமிழ்த்தென்றல்
கொள்கை முரண்...
எப்போதும்
ஜீவகாருண்யம் குறித்தே
பேசித் திரியும் அந்த அன்பர்,
குறைந்தபட்சம்
தன் வீட்டு சுற்றுச்சுவரில்
பதித்திருக்கும்
கூரிய பாட்டில்
சில்லுகளையேனும் தவிர்த்திருக்கலாம்.
வந்தமரத் துடிக்கும்
சிறு பறவைகளுக்காக..!
- வே.முத்துக்குமார்