
பள்ளி, கல்லூரிகளில் நிதி நிர்வாகம் பற்றி கற்றுத்தர வேண்டும்!
இன்றைய இளைஞர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அத்தனை பணத்தையும் செலவு செய்துவிடுவதுடன் கடனையும் வாங்கி, வட்டி கட்டிக் கஷ்டப்படுகிறார்கள். பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் இப்படிச் செய்யமாட்டார்கள்.

அந்தவகையில், கல்லூரி மாணவர் களிடையே தனிநபர் நிதி நிர்வாகம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் 142 நகரங்களில் 369 கல்லூரிகளில் ‘யூத் மணி ஒலிம்பியாட்’ (YMO) போட்டியை நடத்தியிருக்கிறது சென்னையில் உள்ள மணி விசார்ட்ஸ் அமைப்பு.
இந்தப் போட்டியில் கல்லூரி இளைஞர்கள் தனிநபர் நிதி நிர்வாகம் குறித்து எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்துக் கேள்விகள் கேட்டு ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து, தேசிய அளவில் போட்டி நடத்தினார்கள். இதில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, சென்னையில் ‘யூத் மணி ஒலிம்பியாட் விருது’ வழங்கிக் கெளரவித்தது மணி விசார்ட்ஸ் அமைப்பு.
இந்த விருது குறித்து மணி விசார்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் வெங்கடேஷிடம் பேசினோம். ``வேலையில் இருக்கும் இளைஞர்கள் சம்பளமாகக் கிடைக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்கிறீர்கள் என்று கேட்டால், சரியாகப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். நன்கு சம்பாதிக்கக் கூடிய டாக்டர்கள்கூட நிதித் திட்டமிடுதல் குறித்துக் கவனம் செலுத்துவதில்லை. இந்த நிலையை மாற்றியமைக்கும் நோக்கில், தனிநபர் நிதி மேலாண்மையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என்று சொன்னவர், இந்த ஆண்டு விருது பெற்றவர்களை அறிமுகப்படுத்தினார்.

ஹைதராபாத், ஷிவானி இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் பிரித்விராஜு முதல் பரிசையும், பெங்களூரு இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் இரண்டாம் ஆண்டு படிக்கும் படிக்கும் உதித் கஷ்ரா இரண்டாவது பரிசையும், ஒடிசாவில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோத்தக்கில் அமைந்துள்ள ஐ.ஐ.எம்-ல் இரண்டாம் ஆண்டு மூன்றாவது பரிசையும் பெற்றார்.
பள்ளி மாணவர்களிடையே தனிநபர் நிதி மேலாண்மையைக் கற்றுக்கொடுத்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தியதற்காகக் கோவை ராமகிருஷ்ணா பள்ளியின் முதல்வர் ரவிக்கும் மற்றும் சென்னையில் உள்ள ஜி.டி.ஏ வித்யாமந்திர் பள்ளியின் தலைமை நிர்வாகி குமரனுக்கும் நினைவு கேடயம் வழங்கிக் கௌரவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஐ.ஐ.டி பேராசிரியர் தில்லை ராஜன், “கல்லூரிகளில் நிதிசார்ந்த படிப்பைப் படிக்கிறவர்கள்கூடத் தனிநபர் நிர்வாகம் குறித்து அதிகம் கவனம் செலுத்துவதில்லை. தற்போது உயர்கல்வி படிக்கவரும் மாணவர்கள் 30 - 40% பேர் கல்விக் கடன் பெறுகின்றனர். குறைந்த வயதிலேயே எந்தவிதமான நிதி நிர்வாகமும் தெரியாமல் கிரெடிட் கார்டு பெறுகிறார்கள். இவர்கள் மெடிக்கல் இன்ஷூரன்ஸ், மோட்டார் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வதுகூடத் தெரியாமல் இருக்கின்றனர். இந்த நிலையை மாற்றியமைக்க பள்ளி, கல்லூரிகளில் தனிநபர் நிதி நிர்வாகத்தைச் சொல்லித் தரவேண்டும்’’ என்றார்.

ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜானகிராமன், “பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும் போதே நிதி சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் நிதி அறிவு என்பது குறைவே. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். நீண்டகால அடிப்படையில் செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்கள் தொடர்வதில்லை. இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே திட்டத்தில் இருந்து வெளியேறுவிடுகிறார்கள். 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்பவர்கள் கணிசமான அளவு நல்ல வருமானம் பெற்றிருக்கின்றனர்” என்றார்.
கோவை ராமகிருஷ்ணா பள்ளியின் முதல்வர் ரவி, “கடந்த ஐந்தாண்டுகளில் மூவாயிரம் மாணவர்களுக்குப் பண மேலாண்மை குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாணவரும் 100 ரூபாய் முதலீட்டில் ஆறு மாணவர்கள் கொண்ட ஒரு குழுவாக அமைத்து அவர்கள் தயாரித்த பொருள் களை விற்பனைக்கு வைத்தோம். ஒரு குழு 600 ரூபாய் முதலீடு செய்து ரூ.11,000 வருமானமாகப் பெற்றது’’ என்றார்.
ஜி.டி.ஏ வித்யாமந்திர் பள்ளியின் தலைமை நிர்வாகி குமரன், “குடும்பத்தில் பிள்ளைகளிடம் பணத்தின் மதிப்பைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், கற்றுக் கொடுப்பதில்லை. தற்போது நிறுவனங்கள் விற்பனை நிதி சார்ந்த திட்டங்களைப் பெருமளவில் விற்பனை செய்யவே போட்டி போடுகிறார்கள். எனவே, பாடத்திட்டங்களில் தனிநபர் நிதி மேலாண்மையைக் கொண்டு வருவது அவசியம்” என்றார்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அவசியம் கவனிக்கவேண்டிய விஷயம் இது.
- ஞா.சக்திவேல் முருகன்
படங்கள்: ப.பிரியங்கா.