பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

படம்: அருண் டைட்டன்

ஆதி நிறம்!

நேற்று சில நட்சத்திரங்களைக்
கடந்து செல்லக் கிடைத்தது
கடந்து செல்லும்போது
சில மலைகளையும்
சில மேகங்களையும்
கடந்து செல்லவேண்டியிருந்தது
யார் யாரோ யோசிக்கலாம்
இப்படிக் கடந்து செல்லும்போது
நான் யாரென!
நான் பறவை என்பதா
நான் காற்று என்பதா

ஆழத்தின் அறிதலை
மனப்பேழை நிரப்பி
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
சில நேரம்
குகை ஒன்றுக்குள்
ஓவியமாய் இருக்கிறேன்
சில நேரம்
ஆதி நிறத்தின்
வண்ணமாய் இருக்கிறேன்
சில நேரம்
சலனங்களைப் பருகிய
பெருங்கடலாய் இருக்கிறேன்
நான் யார் என்பதை
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
உங்களது ஒவ்வொரு முடிவிலும்
காலத்தையும் வாழ்வையும்
கடந்து செல்கிறேன் நான்.


- சாமி கிரிஷ்

சொல்வனம்

வேண்டுதல்

மேற்கூரையில் அமர்ந்து
விடியலைக் கூவியெழுப்பும் சேவல்
குப்பைமேடு கிளறி
ஒழுங்கீனம் செய்கிறது
குடிசைக்குள் ஊடுருவும்
ஊர்வன ஜந்துக்களை
விரட்டிக் கொல்கிறது
மும்மாரி பொழிந்து
பட்டி பெருக
அம்மனுக்குத் தாத்தா நேர்ந்துவிட்ட
சேவல் அது.
மழை இல்லாமல்
விளைநிலங்கள் வெடிப்பதைக்
காணச் சகிக்காமல்
மாரடைப்பில் உயிர்நீத்தார் தாத்தா
வீட்டின் தாழ்வாரத்தில் செருகிய
சேவல் இறகு மட்டும் மிச்சமாய்...


- முகில் முருகேசன் 

அஃறிணை அறிதல்!

தேடிப் பிடித்த கறுப்புக் கோழியைத்
தூக்கிப் பார்த்து
மீண்டும் கூட்டுக்குள் விட்டுத் துழாவும் கையில்
செம்மண் நிறக் கோழி மாட்டுகிறது.

படபடக்கும் பக்கத்துக் கோழிகளின் சத்தம்
கம்பிகள் அடைத்த போர்க்களத்தை
நினைவூட்டுகிறது.
 
எடை போதாது
என உணர்ந்த கை
அதை விடுத்து
வேறு கோழி தேடுகிறது

இம்முறை கரும்பச்சை சிக்குகிறது.
அதீத எடை என யோசிக்கும் கை
யோசித்து நிற்கிறது
மீண்டும் துழாவும் அனுபவத்தில்
கச்சிதமாக சாம்பல் நிறக் கோழி மாட்டுகிறது

ஒன்று மாட்டும்போது மற்றவை
`கொக்க... கொக்க.. கொக்க... கொக்க...’ எனப்
பதறியடித்துக் கூட்டுக்குள்
மூலை தேடி ஒளியும் காட்சி
மரணம் பதைபதைக்கும் ரணம்!

மாட்டியதைக்
கதறக் கதற வெளியே எடுத்துக்
கூட்டை அடைத்த பிறகு
கூட்டுக்குள் கப் சிப்!

இப்போது கையில் அகப்பட்டிருப்பது
கோழியின் றெக்கையா,  என் றெக்கையா
என எழுந்த சந்தேகத்தில்
கோழியோடு சேர்ந்து
நானும் அலறுகிறேன்


- கவிஜி