Published:Updated:

அன்பும் அறமும் - 16

அன்பும் அறமும் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 16

சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்

இயற்கையை நேசித்தல் இனிது!

ன்னலோரக் கண்ணாடிகள் உடைந்து, மழைநீர் உள்நுழையும்படி யான அந்த மலைப்பேருந்தை வழி மறித்தது ஒற்றைப் பெண்யானை. காட்டு யானை!

அந்த மலைப்பேருந்தில் உட்கார்ந்திருந்த மலைவாழ்ப் பெண் ஒருவர் திடீரென எழுந்து நின்றார். பேருந்தை வழி மறித்து நின்றுகொண்டிருந்த அந்தக் காட்டுயானையை நோக்கிப் பேச ஆரம்பித்தார். ``போ கண்ணு. தெய்வம்லா. உள்ளே புள்ளக்குட்டியெல்லாம் உட்காந்திருக்குது. வயசான ஜீவன்கள் கெடக்குதுங்க” என்று அந்த யானையின் கண்களை நோக்கிச் சொன்னார். அதற்கு அந்தச் சத்தம் கேட்டிருக்குமா, புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.

ஆனால், சத்தம் காட்டாமல் திரும்பிப் போனது அந்த யானை. ``அது இடத்துல வந்து நின்னுக்கிட்டு திமிர் காட்டக் கூடாது. கையெடுத்துக் கும்பிட்டுப் பணிஞ்சு போயிடணும்” என்றார் அந்தப் பெண். பொதுவாகவே இயற்கை விஷயத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பணிந்து நடப்பவர்கள். இயற்கையை அடியாழத்தில் புரிந்துகொண்ட பணிவு அது.

இதே மாதிரி இன்னொரு மலைக்கிராமத்தில் யானை அடித்துச் செத்துப்போய்விட்டார் ஒரு பெண்ணின் கணவர். `மருந்து வெச்சுரலாமா!’ என, அவருடைய சொந்தங்கள் யானையைத் தேடிப் புறப்பட்டனர். அந்தப் பெண் நிதானமாக, ``என்ன எழவுக்கு நீங்க நிலத்தைவிட்டு மேலேறி வந்தீங்க? அது இடத்தை குறுக்க மறிச்சா போட்டுத்தள்ளத்தான் செய்யும்” என்றார். பிறந்தவுடனேயே மருந்து வைக்கும் கொடூரங்களையெல்லாம் தாண்டி வந்ததுதானே அந்தப் பாலினம்.

அன்பும் அறமும் - 16

எனக்குப் பாதி உயரத்தில் இருக்கிற மிளா ஒன்று, சத்தியமங்கலத்தில் ஓர் ஓடை அருகே நின்றிருந்தது. வெடி கலந்த மருந்தைக் கடித்ததால் அதன் தாடைகள் பிய்ந்து தொங்கின. ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அதற்கு தாகம் என்று, தள்ளி நின்று பார்க்கும்போது தெரிகிறது. அதனால் தண்ணீர் அருந்த முடியவில்லை. நம்முடைய வாயைக் கிழித்துவிட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட மசாலா டீ குடிக்கச் சொன்னால் எப்படியிருக்கும்? அதைத்தான் அந்த மிளாவுக்குச் செய்திருந்தார்கள்.

சமீபத்தில் வால்பாறை சென்றிருந்தபோது கிடைத்த அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, மரங்களை வெட்டுவதற்காக, சமதளத்தில் வசித்துப் பழக்கப்பட்ட யானைகளை மலையேற்றிக் கொண்டுவந்திருக்கிறார்கள். வேலை முடிந்ததும் பல்வேறு சட்டச்சிக்கல்கள் காரணமாக அப்படியே விட்டு ஓடிவிட்டனர். அவை இரை தேடிப் பழக்கப்பட்ட யானைகள் அல்ல. இரை கொடுத்து வளர்க்கப்பட்ட யானைகள். பசியில் அவை என்ன செய்யும்? தெருவில் போகிற வருகிறவர்களையெல்லாம் இழுத்துப்போட்டுச் சாய்க்கத்தான் செய்யும். அதுதான் வால்பாறையில் நடந்துகொண்டிருப்பதாகச் சொன்ன தேயிலைக் காட்டில் வேலை செய்யும் ஜெத்ரோ, `ரொம்ப மோசமா ஆகிட்டோம் மக்கா’ என மனம் வருந்தினான்.

காட்டில்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள். நிலத்தில் விலங்குகளை எப்படி நடத்துகிறார்கள்? மூன்றாவது மாடியில் நின்றுகொண்டு, நாயைத் தூர எறிந்து கொன்ற செய்தியைப் பார்த்திருப்பீர்கள். நாயைக் கொல்வது தப்பில்லை என்கிற மனம் இருந்தாலொழிய அதைத் தைரியமாகச் செய்ய முடியாது.

அன்பும் அறமும் - 16


தரையில் விலங்கு நேசர்களாக இருப்பவர்களை யெல்லாம் பார்க்கும்போது ஒரு பொதுச்சித்திரம் கிடைக்கிறது. நண்பர் ஒருவர் சாலையில் கார் ஒன்றில் அடிபட்ட நாய்க்குட்டியைப் பார்த்துப் பரிதாபப்பட்டு தூக்கிவந்து வளர்த்தார். அந்த நாயைப் பாடுபட்டு வளர்த்தார். அந்த நண்பரின் செய்கையை, கூடுகைகளில் சொல்லும்போதுகூட இருக்கும் நண்பர்கள் எல்லோருமே, ``வேலைய விட்டுட்டு முட்டாள்தனமான வேலையை செஞ்சுக்கிட்டு இருக்க” எனக் கண்டித்தார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் நண்பரின் மனநிலை மீதே சந்தேகம்கொண்டார்கள். அவர்கள் கணக்குப்படி வலியில் துடிக்கும் ஓர் உயிருக்கு அளிக்கும் ஆதரவு என்பது ஒருவகையான மனப்பிறழ்வு. இதே விஷயத்தைப் பெண் நண்பர்களின் கூடுகையின்போது சொன்னேன். சொல்லிவைத்த மாதிரி எல்லோருமே ``ஸோ க்யூட்!” என்றார்கள். ஒரு பெண்தோழி, `செலவுக்கு எவ்வளவு வேண்டும்?’ என உடனடியாக செக்புக்கைத் தூக்கினார். அவர்களின் கண்களில், கருணை கரைபுரண்டு ஓடியது.  பெண்களிடமிருந்து ஆண்கள் எதைக் கற்கிறார்களோ இல்லையோ, இயற்கை சார்ந்த இந்தக் கருணையை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.
ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு உலகில் ஒவ்வொரு துறை சார்ந்தும் புதிய பார்வைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. திரட்டித் தொகுக்கப்படும் அது மாதிரியான பார்வைகள்தான் இனி எதிர்கால உலகை வழிநடத்தும். மனிதனை முன்வைத்து இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் பார்வை தவறானது என்பது அந்தப் புதிய பார்வைகளில் ஒன்று.

பிரபஞ்சம், மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல; அதில் வசிக்கும் எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது. சிற்றெறும்புக்கும் சொந்தமான காடுதான் அது. அது சிற்றெறும்பு என யார் தீர்மானிப்பது? தன்னை யானையாகக்கூட அது பாவித்துக்கொண்டு நடைபயிலலாம். தவிர, உயரம் என்பது ஒவ்வொருவரின் பார்வை தூரத்தைப் பொறுத்ததும்கூட. என் உயரம் எனக்கு எதிரே இருக்கிற நாவல் மரம்தான். கழுகின் உயரம் மலைச்சிகரங்கள் என்பதாகக்கூட இருக்கலாம் அல்லவா? இந்தப் பார்வை இனிவரும் தலைமுறையிடம் அழுத்தமாக உள்நிறுத்தப்பட வேண்டும்.

உருவாகி வளரும் தலைமுறைக்கு இயற்கையின் மீதான கருணையைப் பெண்கள்தானே கற்றுத்தரவேண்டும்! அவர்கள் சொன்னால்தானே யானைகூட தலையாட்டிக்கொண்டு சத்தம் காட்டாமல் காட்டுக்குள் திரும்பி ஓடிக்கொண்டி ருக்கிறது. சங்க இலக்கியத்தில் புலியை முறத்தால் விரட்டிய பெண் என்று நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னவோ அவர் இப்படித்தான் சொல்லியிருப்பார் எனத் தோன்றுகிறது. ``போ ராசா. கூறுகெட்ட பயபுள்ளைங்க தெரியாம உன்னோட எடத்துக்கு வந்துட்டாங்க. புள்ள குட்டில்லாம் இருக்கு. போயிடு ராசா”. இப்படியான வார்த்தைகளைக் கேட்ட பிறகுதானே அந்த யானை காட்டுக்குள் ஓடியது. விலங்குகளுக்கு இருக்கும் கருணைகூட மனிதர்களுக்கு இல்லை என்பது துரதிர்ஷ்ட வசமானது. மனிதன் தன்னை எப்போது மனிதன் என உணர்ந்தானோ அப்போதே கருணையைத் தொலைத்துவிட்டான்.

- அறம் பேசுவோம்!