
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
கருங்கைவாணன் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவக் கூடாரத்துக்கு வந்தனர் பொதியவெற்பனும் முசுகுந்தரும். ``முகத்திலும் கை, கால்களிலும் ஆங்காங்கே நெருப்புக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு நாள்களில் குணமாகிவிடும்” என்றார் மருத்துவர். தீக்காயங்களின் தன்மையைப் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தான் பொதியவெற்பன். மழை பெய்யத் தொடங்கியது. நெடுநேரம் வரை மழை நிற்கவில்லை. வேட்டுவன்பாறையில் நடைபெற்ற தாக்குதலைப் பற்றி கருங்கைவாணனுடன் நீண்ட பொழுது பேசிக்கொண்டிருந்தான் பொதியவெற்பன்.
மூவேந்தர்களும் சோழவேழனும் வழக்கம்போல் இரவில் சந்தித்து உரையாடினர். பொதியவெற்பனும் முசுகுந்தரும் கருங்கைவாணனைப் பார்க்கப் போயிருந்ததால், இன்றைய உரையாடலில் அவர்கள் பங்கெடுக்கவில்லை. சோழவேழன் கேட்டார், `` `போர்விதிக்கான பேச்சுவார்த்தையை நடத்த பொருத்தமானவரை இன்றே அழைத்துவாருங்கள்’ என்று கபிலரிடம் சொல்லியிருக்கலாமே. நாளை அழைத்துவரச் சொன்னது அவர்களுக்கு நேரம் கொடுத்ததாகிவிடாதா?``
குலசேகரபாண்டியன் சொன்னார், ``நாம் திட்டமிட்டுக்கொள்ள நேரம் தேவைப்படுகிறது. அதனால்தான் நாளை அழைத்துவரச் சொன்னேன்.’’

போருக்கான விதிகள் எல்லோரும் அறிந்ததே. பல நூறு போர்க்களங்களில் குருதி கலந்த காற்றை நுகர்ந்தபடி தளபதிகளாலும் அமைச்சர்களாலும் பேசிப் பேசி உருவாக்கப்பட்ட வார்த்தைகள்தான் அவை. போர் என்பது அழிவின் களம். அங்கு ஒருபோதும் ஒழுங்கை உருவாக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் விதிகளை உருவாக்கி, போர்புரியும் மரபு பல தலைமுறைகளாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான போர்கள் விதிகளின்படிதான் தொடங்குகின்றன. ஆனால், விதிகளின்படி முடிவதில்லை. தமக்கு வெற்றி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கும் வரை விதிகளைப் பின்பற்ற அனைவரும் பழகியுள்ளனர். ஆனால், அந்த நம்பிக்கை தகரும்போது விதிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை.
போர்விதிகள், பொதுவான சில ஒழுங்குகளை முன்வைக்கின்றன. இருதரப்பினருக்கும் அந்த ஒழுங்குகள் தேவையாக இருப்பதால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றைப்போலவே வெற்றியும் இருதரப்புக்கும் தேவையாக இருப்பதால் இருவரும் விதிகளைப் பற்றிப் பேசி, உடன்பட்டு, போரைத் தொடங்கு கின்றனர். ஆனால், போர்க்களத்தில் ஒருவனின் கை வலிமைபெறும்போது இருவருக்கும் விதிகள் முக்கியத்துவமற்றுப் போய்விடுகின்றன.
வாளுக்கு வடிவமைக்கப்பட்ட உறைபோலத்தான் போருக்கு வடிவமைக்கப்படும் விதிகளும். கலை வேலைப்பாட்டுடன் மிளிர்வது உறைக்கு அழகு. ஆனால், வாளுக்கு அழகு, வெட்டிச் சரிக்கத் தேவையான கூர்முனை மட்டுமே. எல்லா வாள்களுக்கும் மேற்பூச்சுகொண்ட உறை தேவைப்படுவதைப்போலத்தான் போருக்கு விதிகள் தேவைப்படுகின்றன.
எல்லோரும் ஏற்றுக்கொண்ட போர்விதிகளை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவை, மூன்று பேரரசுகள்தான். பல காலங்களாக போர்க்களம் நீங்கா இந்தப் பேரரசுகள்தான் எதிரும் புதிருமான முறையில் எத்தனையோ விதிகளை உருவாக்கின. இன்று பொதுப் புழக்கத்தில் இருக்கும் போர்விதிகளில் பெரும் பான்மையானவை எதிரெதிரே இருக்கையில் அமர்ந்து இந்தப் பேரரசுகளால் உருவாக்கப் பட்டவைதான். வரலாற்றில் முதன்முறையாக மூன்று பேரரசுகளும் ஒன்றாய் உட்கார்ந்து பொது எதிரியோடு போர்புரிவதற்கான விதிகளைப் பற்றி இப்போது பேசுகின்றன.
``போர்விதிகளை உருவாக்குவதில் நாம் புதிதாய்த் திட்டமிட என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.
``போர்விதியின் அடிப்படையில் வெற்றிபெற முயல்வதைவிட, வெற்றி பெறுவதற்கான முறையில் விதிகளை வடிவமைத்துக் கொள்வதே அறிவுடைமை” என்றார் குலசேகரபாண்டியன்.
``இந்தப் போரை விதிகளால் ஒழுங்குப்படுத்த முடியாது. ஏனென்றால், எதிரிகளுக்கு என்ன ஆற்றல் இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. பிறகு எப்படி நாம் பொதுவிதியை உருவாக்க முடியும்?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
இன்று கபிலரோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையைச் சொல்லி நாளை போரின் விதிகள் பேசப்படவுள்ளதை முசுகுந்தர் பகிர்ந்துகொண்ட போது, கருங்கைவாணனின் மறுமொழியாக இது இருந்தது.
`கருங்கைவாணனா இப்படிப் பேசுவது!’ என வியப்போடு பார்த்தான் பொதியவெற்பன். முசுகுந்தருக்கும் நம்ப முடியாததாகத்தான் இருந்தது.
``மூவேந்தர்களின் கூட்டுப்படைத் தளபதியின் குரலா இது?” எனக் கேட்டார் முசுகுந்தர்.
``ஆம். நமக்கான விதிகளையும் அவர்களுக்கான விதிகளையும் ஒன்றாய்ப் பொருத்த முடியாது.”
``ஏன்? நம்மைவிட எந்த வகையில் அவர்கள் வேறுபட்டவர்கள்?”
``அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் நம்மைப் போன்றோர் அல்லர். புதருக்குள்ளிருந்து விலங்குகள் வெளிவருவதைப்போல நெருப்புக்குள்ளிருந்து வெளிவரும் மிருகங்கள் அவர்கள். அவர்கள் மீது இரக்கமற்ற தாக்குதலையே நடத்த வேண்டும். ஒழுங்குப்படுத்தப்பட்ட விதிகளெல்லாம் அந்தக் காட்டு மனிதர்களுக்குத் தேவையில்லை.”
கருங்கைவாணன் தீக்காயங்களிலிருந்து மீளாது துடித்துக்கொண்டிருப்பது அவனது சொற்களிலேயே தெரிந்தது.
``உனது வார்த்தைப்படியே வைத்துக் கொண்டாலும் விதி என்பது அவர்களது ஆற்றலைக் குறைக்கப் பயன்படுமேயானால், அதை நாம் ஏன் தவறவிட வேண்டும்?”
``அவர்களது ஆற்றல் என்னவென்று தெரிந்தால்தானே நம்மால் குறைக்க முடியும்?”
``அளவிட முடியாத ஆற்றல்கொண்டவர்கள் என்று சொல்கிறாயா?”
``இல்லை, எல்லாவகையான உத்திகளையும் பயன்படுத்தி அழிக்கப் படவேண்டிய ஒரு கூட்டம் என்று சொல்கிறேன். அந்தக் கூட்டத்துக்குப் பொதுவிதிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. அப்படிப் பொதுவிதிகளை உருவாக்குவது அவர்களுக்கு நாமே வாய்ப்பைத் தருவதுபோல் ஆகிவிடும்.”
``உருவாக்கப்படும் விதிகளின் படியே போர் புரியவேண்டும் என்பது முன்னோர் மரபு.”
``இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். சமதளத்தில் வாழ்கிற நமது முன்னோர்கள் உருவாக்கிய மரபு அது. மலைமனிதர்களுக்கு மரபு ஏது... அறம் ஏது?”
``நீ அவர்களின் திறனை மிகைப்படுத்துகிறாய் என நினைக்கிறேன். ஆத்திரப்படுவதால் அவ்வாறு தோன்றுகிறது.”
``இல்லை அமைச்சரே! யாராலும் நெருங்கவே முடியாது எனச் சொல்லப்பட்ட திரையர்களை அவர்களின் இருப்பிடத்துக்குள் நுழைந்து வீழ்த்தினோம். நானே அஞ்சி பின்வாங்க நினைத்தபோதுகூட சற்றும் இரக்கம்காட்டாமல் துணிந்து முன்னேறி அவர்களை வீழ்த்தினான் திதியன். ஆனால், சிறிய குன்றின் மேல் இருந்த சின்னஞ்சிறிய ஒரு கூட்டம், திதியனைக் கொன்றழித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. பெரும்பாறைகளை உருட்டுவதும், மரங்களைச் சாய்த்துத் தள்ளுவதும், நெருப்புக்குள் நுழைந்து வெளிவருவதுமாக அவர்கள் நடத்திய தாக்குதல் முழுவதும் நம்ப முடியாத மாயக்காட்சிகளாக இருந்தன. நாம் நடத்திய திடீர் தாக்குதலிலேயே அவர்களால் இவ்வளவு திறனை வெளிப்படுத்த முடிந்தபோது, திட்டமிட்டு முறைப்படுத்தப்பட்ட விதிகளை உருவாக்கி அதன்படி போரை நடத்த முற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் எனச் சிந்திக்கவே முடியவில்லை.”

``அதனால்..?’’
``அவர்கள் சிந்திப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது. எல்லா வகையிலும் அழித்தொழிப்பு ஒன்றே நோக்கமாகக்கொண்ட தாக்குதல் முறையைப் பின்பற்ற வேண்டும். சூழ்ச்சிகளும் வரைமுறையற்ற தாக்குதலும் அழித்தொழிப்புமே அவர்களை வீழ்த்துவதற்கான உத்தியாக இருக்க முடியும்.”
``பறம்புநாடு, இதுவரை விதிகள் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒரு போர்முறைக்குள் பங்கெடுத்ததில்லை. பறம்புக்குள் நுழைந்த எதிர் நாட்டினரின் மீது தாக்குதல் நடத்தி வென்றுள்ளனர். தாக்குதல் போருக்கும், விதிகளால் வரையறுக்கப்பட்ட களப்போருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. விதிகளால் முறைப்படுத்தப்பட்ட போரில் தாக்கும் திறன் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானித்துவிடுவதில்லை. பறம்பினர், தாக்கும் திறனை மட்டுமே நம்பியுள்ள கூட்டத்தினர். அவர்களின் வலிமையின் வழியே அவர்களை வீழ்த்த வேண்டும்” என்றார் குலசேகர பாண்டியன்.
அவர் சொல்வதை சற்று ஆழ்ந்து சிந்தித்தனர். `என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியே மிச்சமிருந்தது.
``முதன்முறையாக கபிலர் பேசவந்தபோது அவரை அறியாமலேயே முக்கியமான செய்தி ஒன்றை நமக்குத் தெரிவித்தார்.”
குலசேகரபாண்டியன் எதைச் சொல்கிறார் என்று மற்ற மூவரும் சிந்தித்தனர். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. அவரே கூறினார்,
`` `நாகக்கரட்டின் மேல் நின்று பார்த்தால் நமது படையில் மூன்றில் ஒரு பகுதி தெரிகிறது. இரலிமேட்டிலிருந்து பார்த்தால் முழுப் படையும் தெரிகிறது’ என்றார் அல்லவா?”
அப்போதுதான் மற்றவர்களுக்குக் கபிலர் கூறியது நினைவுக்கு வந்தது.
``அது எவ்வளவு முக்கியமான குறிப்பு. அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. வேட்டுவன்பாறையின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்றுதான் அந்தக் குன்றினைவிட்டு நமது படையை மிகத்தள்ளி கூடாரம் அமைக்கச் சொன்னேன். நம்மைக் கண்டு அஞ்சியே வேந்தர்படையினர் கூடாரத்தைப் பிரித்துக்கொண்டு போகிறார்கள் என்று எதிரிகள் எண்ணவேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தேன். அப்படிச் செய்ததன் மூலம்தான் வேட்டுவன் பாறையின் மீதான தாக்குதலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. அதில் கவனம் செலுத்திய நான் மற்றொன்றைக் கவனிக்கத் தவறிவிட்டேன்” என்றார் சற்று கவலையோடு.
குலசேகரபாண்டியனின் கவலை அனைவர் முகத்திலும் பரவியது.
``நாம் படையை மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டோம். அவர்கள் பார்வையால் மதிப்பிட முடியாத தொலைவில் நிறுத்தியிருக்க வேண்டும். இன்னொரு முறை படையை நகர்த்தினால், அது வீரர்களிடம் குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்கிவிடும். எனவே, நாம் போர் உத்தியை மிகக் கவனமாகத் திட்டமிட வேண்டும்” என்றார்.
``என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.
``இந்தப் போருக்கான களம் மலையடி வாரத்தில் அமையக் கூடாது. கிழக்கும் மேற்குமாக நின்று நாம் போரிடக் கூடாது. ஏனென்றால், மேற்குத்திசையில் மலை இருக்கிறது. எதிரிகள் படையின் பின்புறம் மலை இருப்பது அவர்களுக்கான வலிமையைக் கூட்டும். எனவே, படையின் அணிவகுப்பு வடக்கு தெற்காக இருக்க வேண்டும். அதேபோல அவர்கள் மேலிருந்து பார்த்தால் மதிப்பிட முடியாத தொலைவில் போர்க்களம் அமைய வேண்டும்” என்றார்.
இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என அனைவரும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினர். இதில் உள்ள பெரும்சிக்கல், போருக்கான களத்தையும் படைகள் நிற்கவேண்டிய திசையையும் தீர்மானிப்பது தளபதிகளோ அரசர்களோ அல்ல; போரின் விதி பிறழாத `நிலைமான் கோல்சொல்லி’களே!
போர் நிலத்தின் அனைத்து விதிகளையும் எழுதுபவர்கள் `நிலைமான் கோல் சொல்லி’களே. நாள்தோறும் போர் எப்போது தொடங்க வேண்டும் எப்போது முடிவுற வேண்டும் என்பதை, போர்க்களத்தில் நடப்பட்ட நாழிகைக்கோலைப் பார்த்துச் சொல்பவர்களை `கோல்சொல்லிகள்’ என்று அழைத்தனர்.
போர்க்களத்தின் ஒவ்வொரு நாளும் கோல் சொல்லியின் குரலிலேதான் தொடங்குகிறது; முடிகிறது. எனவே, இருதரப்பும் ஏற்றுக்கொண்ட கோல்சொல்லியானவர் அறம் தவறாத நிலைமானாக இருக்க வேண்டும் என்பதால், அவரை `நிலைமான் கோல்சொல்லி’ என்று அழைக்கும் பழக்கம் உருவானது. அவ்வாறு தேர்வுசெய்யப்படும் நிலைமான் கோல்சொல்லிதான், போர்புரிவதற்கான இடத்தையும் போருக்கான காலத்தையும் முடிவுசெய்கிறார்.
குலசேகரபாண்டியன் சொன்னார், ``எனது கணிப்பின்படி எதிரிகளின் தரப்பில் கோல்சொல்லியாகக் கபிலரையே கூறுவார்கள்.”
``ஆம், அவர்களின் தரப்பில் நாழிகைக்கோலைப் பார்க்கும் அறிவு வேறு யாருக்கு இருக்கப்போகிறது?” என்றார் சோழவேழன்.
``நமது தரப்பில் யாரை அறிவிக்கப் போகிறாம்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.
போர்க்களம் அமையும் இடம்தான், இந்தப் போரின் வெற்றி-தோல்வியை முடிவுசெய்வதில் முக்கியப் பங்காற்றப்போகிறது. எனவே, நாம் சொல்லும் இடத்தில் போர்க்களத்தை முடிவுசெய்பவராக நிலைமான்கோல்சொல்லி இருக்க வேண்டும். எதிரியின் தரப்பில் கோல்சொல்லியாக கபிலர் வந்தால், அவரும் நாம் சொல்லும் இடத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் திறன்கொண்டவராகவும் சூழ்ச்சி தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்” என்றார் குலசேகரபாண்டியன்.
அவர் சொல்வதை மறுப்பதற்கில்லை. நமது தரப்பில் யாரை நியமிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தனர். ``கபிலர், நாழிகைக்கோல் பார்க்கத் தெரிந்தவராக இருக்கலாம். ஆனால், போரின் விதிகளை முழுமையாக அறிந்தவர் என்று சொல்லிவிட முடியாது. எனவே, பொருத்தமானவரைத் தேர்வுசெய்தால் கபிலரை நமது முடிவுக்கு இணங்கச் செய்ய முடியும்” என்றான் உதியஞ்சேரல்.
``ஆம். அதனால்தான் இந்தப் பணிக்குப் பொருத்தமானவராக பாண்டியநாட்டு அரண்மனையின் தலைமைக் கணியன் அந்துவனைக் கருதுகிறேன்” என்றார் குலசேகரபாண்டியன்.
`அவன் பொருத்தமானவனா!’ என்று மற்றவர்கள் சிந்தித்தனர். ``அந்துவன், கபிலரைவிட மிக இளையவனாக இருக்கிறானே, பெரும்புலவரை திசைமாற்றி போர்க்களத்தை நாம் நினைக்குமிடத்தில் அமைக்கும் ஆற்றல்கொண்டவனா?” எனக் கேட்டான் செங்கனச்சோழன்.
``அவன், பெருங்கணியர் திசைவேழருக்கு மாணவன். எனவே, அவன்பால் கபிலருக்கு பெரும்மரியாதை உண்டு. அவனது கணிப்பு பல நேரங்களில் ஆசானைப்போல் உள்ளது என்று என்னிடமே கூறியுள்ளார். அதுமட்டுமன்று, கபிலரைக் கையாள்வதில் அவன் மிகவல்லவன். எனவே, நமது திட்டத்தை அச்சுபிசகாமல் நடைமுறைப்படுத்திவிடுவான்” என்றார்.
``அப்படியென்றால் அவனையே நமது தரப்பின் `நிலைமான் கோல்சொல்லி’யாக அறிவித்துவிடலாம்” என்றனர்.

சரியென்று ஏற்றுக்கொண்ட குலசேகரபாண்டியன், ``ஒரு முக்கியச் செய்தி. நாளை மட்டுமன்று, எப்போது கபிலர் பேச வந்தாலும் அவரை அதிகமாக பேசவிட வேண்டும். கோபப்பட்டு நிறுத்தக் கூடாது. அவராகவே நமக்கு வேண்டிய முக்கியக் குறிப்பைக் கொடுத்துவிட்டுச் செல்வார்” என்றார். மற்றவர்கள் மகிழ்ந்து சிரித்தனர்.
மறுநாள் போர்விதிகளை வகுக்க மூஞ்சலின் பெருங்கூடாரத்தில் எதிர்பார்ப்போடு இருந்தனர் வேந்தர்கள். கபிலரின் தேர்ப்படை எல்லைக்குள் நுழைந்ததும் மூஞ்சலுக்குச் செய்தி வந்தது, ``உடன் கிழவன் ஒருவனை அழைத்துக்கொண்டு வருகிறார் கபிலர்.”
``சென்றமுறை சிறுவனை அழைத்துவந்தார். இந்த முறை கிழவனை அழைத்துவருகிறார்” என்று பேசிச் சிரித்தனர். சிறிது நேரத்தில் மூஞ்சலுக்குள் நுழைந்தது கபிலரின் தேர்.
தேரோட்டும் வலவனின் தோள்பற்றி கபிலர் இறங்க, அவரின் தோள்பற்றி வாரிக்கையன் இறங்கினார். ஊன்றுகோலை ஊன்றி கபிலரைப் பின்தொடர்ந்தார் கிழவர். இருவரையும் வரவேற்று கூடாரத்துக்குள் அழைத்துச்சென்றார் முசுகுந்தர். பெருவேந்தர்கள் வீற்றிருந்த அவையில் இருவரும் வந்து அமர்ந்தனர். கபிலர் மூவேந்தர்களையும் உடன் இருந்த சோழவேழன், பொதியவெற்பன், முசுகுந்தர் ஆகிய அறுவரையும் பற்றி வாரிக்கையனிடம் தெரிவித்தார். வாரிக்கையனைப் பற்றி வேந்தர்களிடம் சொல்லும்போது, ``பறம்பு நாட்டுப் பெருங்கிழவன்” என்று கூறினார்.
‘பன்னெடுங்காலத்துக்கு முன் பட்டுப்போன மரம்போல் இருக்கிறான் கிழவன். கால்கள் கவட்டை விழுந்து, நகங்கள் எல்லாம் சூம்பிச்சுருண்டு கிடக்கின்றன. மேல் தோல் செம்பட்டையோடு திட்டுத் திட்டாக இருக்கிறது. பார்க்கவே சற்று அருவருப்பூட்டும் இவரை ஏன் அழைத்துவந்துள்ளார் கபிலர்?’ என்று சிந்தித்தபடி இருந்தனர் அனைவரும்.
பணியாளர்கள் சுவைநீர் கொண்டுவந்து கொடுத்தனர். வாரிக்கையன், ``எனக்குத் தேவையான எல்லா சுவைகளும் வெற்றிலையில்தான் இருக்கின்றன” எனச் சொல்லி இடுப்பின் இடதுபக்கத்தில் சுருட்டிவைத்திருந்த வெற்றிலையை எடுத்தார். கபிலர், சுவைநீர்க் குவளையை வாங்கிக் குடிக்கத் தொடங்கினார். மற்றவர்களும் சுவைநீர் பருகினர்.
வலதுபக்கம் சுருட்டி வைத்திருந்த சுருக்குப்பையை எடுத்தார் வாரிக்கையன். அவர் என்ன செய்கிறார் என்று கண்களைத் திருப்பிப் பார்த்தார் கபிலர். பாக்குக்கொட்டை ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்தி உடைத்தார். கொட்டை உடையும் ஓசை ‘சடக்’கெனக் கேட்டது.
வாரிக்கையனுக்கு இடதுபக்கம் கபிலரும் வலது பக்கம் சற்று தள்ளி எதிரே உதியஞ்சேரலும் அமர்ந்தி ருந்தனர். வாரிக்கையனுக்கு நேர் எதிரில் குலசேகரபாண்டியன் இருந்தார். அவருக்கு வலதும் இடதுமாக மற்றவர்கள் இருந்தனர். கிழவன் பாக்குக்கொட்டையை விரல்களால் அழுத்தி உடைக்கும் ஓசை, பக்கத்தில் இருந்த உதியஞ்சேரலுக்குக் கேட்டது. `தள்ளாடி நடந்துவரும் கிழவன் பாக்குக்கொட்டையை விரல்களால் எப்படி அழுத்தி உடைத்தான்!’ என்று வியப்போடு பார்த்தான் அவன்.
சோழவேழன் சுவைநீரைப் பருகிய படியே கபிலரிடம் கேட்டார், ``நேற்று பெரும்மழை பெய்ததல்லவா? இரவு போதுமான உறக்கம் இருந்திருக்காது; நனைந்து ஈரம்கொண்டிருப்பீர்கள். வயதான காலத்தில் உடல்நிலையைப் பேணுதல் கடினமானது. ஒருவேளை நீங்கள் வர காலந்தாழுமோ என நினைத்தோம்.”
``நான் குகையில் இருந்ததால் மழையில் நனையவில்லை. உறக்கமும் கெடவில்லை” என்றார் கபிலர்.
``மழைக்கு குகை இதமான வெப்பத்தோடு இருக்கும். தூங்கவும் சுகமாகத்தான் இருக்கும். ஆனால், வௌவால்கள் நிறைய அடைந்துகிடக்குமே. ஆழ்ந்து தூங்கவிடாதே!” என்றார் சோழவேலன். கபிலரை கூடுதலாகப் பேசவிடுதல் நேற்றெடுத்த முடிவுகளில் ஒன்றல்லவா!
``வெளவாலை அதன் இருப்பிடத்திலிருந்து விரட்டுவது எளிய செயலன்று. அதுவும் நீண்ட குகையென்றால் விரட்ட விரட்ட அது உள்ளே போய் அடைந்துகொள்ளும்” எனச் சொன்ன உதியஞ்சேரல் “அந்தக் குகை எவ்வளவு நீளமானது?” எனக் கேட்டான்.
``எவ்வளவு நீளமாக இருந்தால் என்ன? குகையைவிட்டு வெளவாலை விரட்டுவதெல்லாம் பெரிய வேலையா?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் வாரிக்கையன்.
அனைவரும் ஆர்வத்தோடு பார்த்தனர். `தங்களுக்குத் தேவை பேச்சின் மூலம் பெறும் தகவல்தான். கபிலரோடு சேர்ந்து கிழவனும் அதிகம் பேசுபவனாக இருக்கிறான்’ என்று எண்ணியபடி அவர் சொல்லப்போவதைக் கவனித்தனர்.
வெற்றிலையை மென்றபடியே வாரிக்கையன் கேட்டான், ``உங்களுக்கு பனையேறி அணிலைப் பற்றித் தெரியுமா?”
``அணிலில் அது ஒரு வகை என்று அறிவேன். அவ்வளவுதான்” என்றான் உதியஞ்சேரல்.
வெற்றிலையை ஒருபக்கமாக ஒதுக்கிக் கொண்டே வாரிக்கையன் சொன்னார். ``தெளிந்த நீர் இருக்கும் கிணற்றில் கல்லைப் போட்டால் அது ஆழத்துக்குச் செல்வது வரை எப்படிப் பார்க்க முடியுமோ, அப்படித்தான் குகைக்குள் பனையேறி அணிலைவிட்டால் அடைந்துகிடக்கும் வெளவாலை கடைசிவரை விரட்டிப்போவதை பார்க்க முடியும்”.
சுவைநீர் அருந்தியபடியே ஆர்வத்தோடு உதியஞ்சேரல் கேட்டான், ``எப்படி?”
``மற்ற அணிலைப்போல பனையேறி அணில் மரத்தில் நேராக மேலேறாது. மாறாக, மரத்தைச் சுற்றிச் சுற்றித்தான் மேலேறும். அதைக் குகைக்குள் விட்டால் நேராக உள்ளே போகாது. குகையின் ஓரப்பகுதியைச் சுற்றிச் சுற்றியே உள்நுழையும். அணில் வருவது அறிந்தவுடன் வெளவால்கள் இருப்பிடத்தைவிட்டு சற்று உள்ளே போகும். அணில் மீண்டும் விளிம்பைச் சுற்றியபடியே உள்ளே போகும். இப்படி, குகையின் கடைசி எல்லை வரை அணில் விரட்டிக்கொண்டே போகும். மூன்று பனையேறி அணில்களை அடுத்தடுத்து குகைக்குள் விட்டால் போதும் ஒரு வெளவாலைக்கூட அந்தக் குகைக்குள் அடையவிடாது” என்றார்.
ஆனால், வெற்றிலையை இருபக்கமுமாக ஒதுக்கியபடி இதைச் சொல்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம். கேட்பவர்கள் பொறுமையை இழக்கும்படி மென்றுமென்று பேசினார்.
`இவ்வளவு மெதுவாகப் பேசக் கூடியவரல்லரே வாரிக்கையன். ஏன் இவ்வளவு மெதுவாகப் பேசுகிறார்?’ எனக் கபிலருக்கே விளங்கவில்லை. சிந்தித்துக்கொண்டிருக்கும் போது பொதியவெற்பன் கேட்டான், ``எந்நேரமும் வெற்றிலையை மென்று கொண்டேதான் இருப்பீர்களா? பேசும்போது கூட மெல்வதை நிறுத்த மாட்டீர்களா?”

கன்னத்தாடை இரண்டும் அகன்று மேலேறின. மென்றுகொண்டே சிரித்தார். ``கருவுற்றப் பெண்ணுக்கு வாயூறிக்கொண்டே இருக்குமல்லவா? அதேபோலத்தான் எனக்கும் வாயூறிக்கொண்டே இருக்கும். அதனால் வெற்றிலையை மென்றுகொண்டே இருப்பேன்” என்று சொன்னவர், கேள்விகேட்ட பொதியவெற்பனைப் பார்த்து, ``உன் மனைவி கருவுற்றிருக்கிறாளா?” எனக் கேட்டார்.
சற்றும் எதிர்பாராத கேள்வி. கபிலரே அதிர்ந்துபோனார். பொதியவெற்பனுக்கு அவையில் என்ன சொல்லவது எனத் தெரியவில்லை. அந்தரங்கத்துக்குள் நெருப்புப் பட்டதுபோல் இருந்தது. அதிர்ச்சியை வெளிக்காட்ட முடியாமலும், உட்செரிக்க முடியாமலும் திணறினான். இறுகிய நிலையை யார் உடைப்பது என யாருக்கும் புரியவில்லை. நிலைமையை அறிந்து முசுகுந்தர் தலையிட்டார் ``இளவரசருக்கு இப்போதுதான் மணமாகியிருக்கிறது.”
வாரிக்கையன் விடுவதாக இல்லை. ``இப்போது மணமானவரை ஏன் போர்க்களத்துக்குக் கூட்டிவந்தீர்கள்? பனையேறி அணில்போல மனைவியை அல்லவா சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். இங்கு வந்து கிழவர்களோடு உட்கார்ந்து வெளவாலைப் பற்றி ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்?” எனக் கேட்டார்.
நிலைமை மிக மோசமாகிக்கொண்டிருக்கிறது என அனைவரும் உணர்ந்தனர். `இதற்குமேல் இந்தப் பேச்சை நீட்டிக்க வேண்டாம். போர்விதிகளுக்கான பேச்சைத் தொடங்கலாம்’ என எண்ணி குலசேகரபாண்டியனைப் பார்த்தார் சோழவேழன். அவரோ வாரிக்கையனைக் கூர்ந்து பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். நேரமாகிக்கொண்டிருந்தது.
`சரி, நாமே தொடங்கலாம்’ என நினைத்த சோழவேழன், “பறம்பின் தரப்பில் நாழிகைக்கோலைப் பார்த்துச் சொல்லப்போகும் நிலைமான் கோல்சொல்லி யாரென முடிவுசெய்துவிட்டீர்களா?”
கேட்டு முடிக்கும் முன் வாரிக்கையன் சொன்னார், ``கபிலர்தான்.”
குலசேகரபாண்டியன் கணித்தது துளியளவும் பிசிறவில்லை. மிகச்சரியாக இருந்தது. கபிலரைக் கைக்கொள்ளும் திட்டம் ஏற்கெனவே தீட்டப்பட்டிருந்தது.
சற்று இடைவெளிக்குப் பிறகு, ``உங்களின் தரப்பில் நிலைமான் கோல்சொல்லி யார்?” எனக் கேட்டான் வாரிக்கையன்.
குலசேகரபாண்டியன்தான். பெயரைச் சொல்ல வேண்டும்... நேற்று அப்படித்தான் பேசப்பட்டது. ஆனால் அவரோ, வாரிக்கையனைக் கூர்ந்து பார்த்தபடி பேசாமல் இருந்தார். அவையில் அமைதி நீடித்தது. மற்ற இரு வேந்தர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. நேற்றைய பேச்சில் பொதியவெற்பனும் முசுகுந்தரும் கலந்துகொள்ளாததால் அவர்கள் இயல்பான அமைதியோடு இருந்தனர்.
வாரிக்கையன், தான் வெற்றிலையை மென்றுகொண்டே கேட்டதால் சரியாகப் புரியவில்லையோ என நினைத்து, மீண்டும் ஒருமுறை கேட்டார் ``உங்களின் தரப்பில் நிலைமான் கோல்சொல்லி யார்?”
அவையில் பேச்சு ஏதும் எழவில்லை. ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்று கபிலருக்குப் புரியவில்லை. செங்கனச்சோழன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். உதியஞ்சேரலோ சோழர்கள் இருவரையும் பார்த்தான். எதிரில் உட்கார்ந்திருப்பவர்கள் ஏன் திகைத்தபடி ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் எனக் கபிலருக்குப் புரியவில்லை.
`இனியும் பேசாமல் இருக்கக் கூடாது’ என நினைத்த சோழவேழன், ``தலைமைக் கணியன்...” என்று தொடங்கினார். ஆனால், பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை. நினைவுகூர்ந்தபடி நிறுத்தினார்.
குலசேகரபாண்டியனின் அருகில் நின்றிருந்த முசுகுந்தரோ ஒரு கணம் அதிர்ச்சியானார். `திசைவேழரையா சொல்கிறார்!’ எனத் திகைத்து குலசேகரபாண்டியனைப் பார்த்தார். அவரோ எதுவும் பேசாமல் வாரிக்கையனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அவையோருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. முசுகுந்தர், குலசேகர பாண்டியனுக்கு மிக அருகில் சென்று மெல்லிய குரலில், ``திசைவேழரா பேரரசே?” எனக் கேட்டார்.
குலசேகரபாண்டியன் மெல்லிய சிரிப்போடு தலையசைத்தார். முசுகுந்தருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. `திசைவேழரைப்போன்ற அறம் தவறாத மாமனிதரை, போருக்கான கோல்சொல்லியாக நியமித்தால், அவரை நம்மால் எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. போர்க்களத்தின் பிடிமானம் நம்மிடம் இல்லாமல்போகும் வாய்ப்புண்டு’ எனச் சிந்தித்தபடி மீண்டும் அவரை உற்றுப்பார்த்தார். அதே சிரிப்போடு தலையசைத்தார் குலசேகரபாண்டியன்.
பேரரசர் என்பவர், எப்போதும் யாரும் சிந்திக்காததைச் சிந்திக்கக்கூடியவர் என்பதை வாழ்வு முழுவதும் அறிந்தவர் முசுகுந்தர். எனவே, அவரின் திட்டமிடல் மற்றவர்கள் எண்ணத்துக்கு அப்பாற்பட்டுதான் இருக்கும் என்ற பெருமிதத்தோடு ``எங்கள் தரப்பின் நிலைமான் கோல்சொல்லியாகப் பெருங்கணியர் திசைவேழர் செயல்படுவார்” என அறிவித்தார்.
வேந்தரின் தரப்பில் இருந்த மற்றவர்கள் திகைத்துப்போனார்கள். பொதிய வெற்பனுக்கோ தலையே சுற்றுவதுபோல் ஆனது. என்ன நடக்கிறது இங்கு என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
தான் பேசட்டும் என்று மற்றவர்கள் கருதுவதாக நினைத்த முசுகுந்தர், ``திசைவேழரை நாளை அழைத்துவருகிறோம். கோல்சொல்லிகள் இருவரும் போரின் விதிகளை வரையறுக்கட்டும்” என்றார்.
`சரி’யெனச் சொல்லி அவை நீங்கினர் கபிலரும் வாரிக்கையனும்.
பிற்பகலின் இறங்குவெயிலில் தேர், வேந்தர்களின் படையைவிட்டு வெளியேறியது. நீண்டநேரம் கபிலர் எதுவும் பேசவில்லை. அவருக்கு அவையில் நடந்ததைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“ஏன் பேசாமல் வருகிறீர்கள்?” எனக் கேட்டார் வாரிக்கையன்.
“இல்லை, பேரரசர்களில் மூத்தவர் குலசேகரபாண்டியன். அவர்தான் எல்லாவற்றையும் பேசுவார். ஆனால் இன்று, அவர் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். மற்றவர்கள், அவரின் முகத்தையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தனர். காரணம் எதுவும் எனக்குப் பிடிபடவில்லை” என்றார்.
சற்றே சிரிப்போடு, ``காரணம் நான்தான்” என்றார் வாரிக்கையன்.
``நீங்களா?” என அதிர்ச்சியோடு கேட்டார் கபிலர்.

``ஆம். நான் முதலில் இடதுபக்க இடுப்புப் பையில் இருந்த வெற்றிலையை எடுத்தேன் என்பதை நீங்கள் கவனித்தீர்கள். ஆனால், வலதுபக்க சுருக்குப்பையைத் திறந்து என்ன செய்தேன் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை” என்றார்.
``சுருக்குப்பையில் என்ன செய்தீர்கள்?”
``அதற்குள்தான் திகைப்பூச்சியை வைத்திருந்தேன். பாக்கு எடுப்பதைப்போல அவற்றுள் மூன்றை முதலில் எடுத்து வெளியில் விட்டேன். அவை போவதை மற்றவர்கள் எளிதில் பார்த்துவிட முடியாது. ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால்தான் பாக்கை மற்றவர்களுக்குக் கேட்பதைப்போல சத்தமாக உடைத்தேன். எல்லோரின் கவனமும் எனது கைக்கு வந்தது. திகைப்பூச்சிகள் எனக்கு நேராக உட்கார்திருப்பவனின் இருக்கை நோக்கிப்போனது. அது கடித்து சிறிதுபொழுதுக்குப் பிறகுதான் திகைப்புத்தன்மை உருவாகும். அதனால்தான் வெற்றிலையை மென்றபடி மெள்ள மெள்ளப் பேசி நேரத்தை நீட்டித்தேன்” என்றார்.
கபிலர் உறைந்துபோனார். ``நீங்கள்தான் குலசேகரபாண்டியனைப் பேசவிடாமல் செய்ததா? அப்படிச் செய்ததால் நமக்கென்ன நன்மை?”
``நம்மிடம் போர்விதிகளை எப்படிப் பேசுவது, யார் யார் பேசுவது என்பதையெல்லாம் அவர்கள் ஏற்கெனவே முடிவுசெய்திருப்பார்கள். திகைப்பூச்சி கடிப்பதன் மூலம் அவர்களில் ஓரிருவர் பேச முடியாத நிலையை எய்துவர். முடிவுசெய்தபடி ஏன் பேசவில்லை என்று மற்றவர்களுக்கு பேச முடியாதவர் மீது ஐயம் உருவாகும். அந்த ஐயம்தான் விரிசலுக்கான வழியை உருவாக்கும்” என்றார்.
கபிலர், விரித்த கண்களை இமைக்காமல் வாரிக்கையனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மேலும் சொன்னார், “அவர்கள் மூவரும் நண்பர்கள் அல்லர்; நம்மை அழிப்பதற்காக ஒன்றுபட்டுள்ளனர். எனவே, அவர்களுக்குள் விரிசலை உருவாக்க, சிறிய காரணமே போதுமானது.”
நாகக்கரட்டின் அடிவாரத்தில் தேர் வந்து நின்றது. கபிலர் கீழிறங்கினார். அவரின் தோள்பற்றி இறங்கிய வாரிக்கையன் சொன்னார், “இந்தப் போரில் வலிமைமிகுந்த எண்ணற்ற ஆயுதங்களை நாம் பயன்படுத்தப்போகிறோம். ஆனால், நாம் பயன்படுத்தப்போகும் எந்தவோர் ஆயுதத்தையும்விட கண்களுக்குத் தெரியாத இந்தச் சிறுபூச்சி செய்துள்ள நன்மை இணையற்றதாக இருக்கும்”.
பேச்சின்றி நடந்தார் கபிலர்.
``அது சரி, யார் அந்தத் திசைவேழர்?”
வாரிக்கையனின் கேள்விக்கு அதிர்ச்சியிலிருந்து மீண்டபடி பதில் சொன்னார் கபிலர், ``அறத்தின் அடையாளம்.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...