மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 20

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

அப்போது டி.வி-யில் பெப்ஸி விளம்பரத்துக்கு கங்குலி வந்துகொண்டு இருந்தார். எங்கள் ஊரில் அது வரை யாருமே பெப்ஸி குடித்தது இல்லை. கங்குலி விளம்பரத்தைப் பார்த்து, எங்கள் எல்லோருக்குமே பெப்ஸி மேல் மோகம்.

நாங்கள் குடியிருக்கும் கோடம் பாக்கம் ஃப்ளாட்டில் எல்.கே.ஜி. படிக்கும் என் அண்ணன் பொண்ணுக்கு விளையாட தோஸ்துப் பாப்பாக்களே இல்லை. முன்னர் குடியிருந்த ஹவுஸிங் போர்டு வீட்டிலாவது சாயங்காலம் பூங்காவில் கூடி பிள்ளைகள் விளையாடுவார்கள்.

இருக்கிற சொற்ப இடத்தில் சைக்கிள்விடுவார்கள். இங்கே அதுவும் இல்லை. வீட்டுக்குள் தனியே கிடந்து பொம்மை உருட்டும் பொன்மலரைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது. இவளது பால்யம், நினைவுகளை மலர்த்தும் விளை யாட்டுகள் இல்லாமலேயே போய்விடுமா?

வட்டியும் முதலும் - 20

தொலைக்காட்சியில் இருந்து இவளது உலகத்தில் குதிக்கும் கார்ட்டூன் கேரக்டர்கள் நிகழ்த்தும் சாகசங்களைத் தவிர, வேறு எந்த நேரடி சாகசத்தையும் இவளது பால்யம் நிகழ்த்தப்போவதே இல்லையா? வெட்டாற்றில் ஊறிக்கிடந்து, தாரை தாரை யாகத் தண்ணீர் வழிய பெரியம்மா அடித்து இழுத்துப்போகும் மீரா அக்காவின் சித்திரத்தைப் போன்ற ஒரு காட்சியை இவளது வாழ்வில் பார்த்துவிடுவேனா? கன்னிப்பொங்கலுக்கு சாமந்திப்பூ ஜடை கட்டி தென்னந்தோப்பில் திருடன்-போலீஸ் விளையாடிய சாந்தினி அக்காவின் சந்தோஷம் இவளுக்கு எதில் கிடைக்கும்? காமுட்டிகா ராத்திரியில் மன்மதன்-ரதி வேஷம் கட்டும் அனுபவத்தைப் போன்ற ஒன்று இவளுக்கு நடக்குமா? சிவன் கோயிலில் பஜனை பாடி பொங்கல்வாங்கித் தின்றுவிட்டு, பள்ளிக்கூட மைதானத்தில் சில்லு விளையாடும் வெண்ணிலாவின் மார்கழி மாத அதிகாலை ஒன்று இவளுக்கு வாய்க்குமா? திருக்களம்பூர் வரை நுங்கு வண்டி உருட்டி, சக்கிலடியில் புளியங்கா பறிக்கும் வினோதா சித்தியின் ஞாயிற்றுக் கிழமைகளில் இவள் வாழ்வாளா? நாட்டார் வீட்டு மாடியில் கண்ணாமூச்சி ஆடி, பட்டக்காலில் கூட்டாஞ்சோறு சமைத்து, அய்யனார் மேட்டில் கிச்சிக் கிச்சி தாம்பூலம் போட்டு, அம்மா குளத்தில் வெங்காயத் தாமரை படகு விட்டு, குருக்குமாரி வீட்டில் சொக்கட்டான் விளையாடி, கார்த்திகைக்குப் பனங்கருக்கு சுத்தும் சுவாரஸ்யங்கள் இவளுக்குக் கிடைக்கப்போவதே இல்லை என நினைக்கும்போது வருத்த மாகிறது!

எங்கள் தலைமுறையின்(எங்கள் தலைமுறை வரைக்கும்தான் என நினைக்கிறேன்) ஊர்காட்டுப் பால்யம் விளையாட்டுக்களால் நிறைந்துகிடந்தது. கிட்டிப்புள், பம்பரம், பளிங்கு, பேபே, ஓடிப்புடிச்சு என நினைவுகள் முழுக்க எத்தனை எத்தனை விளையாட்டுக் கள். கவட்டைதான் முக்கியமான அவுட்டோர் கேம். மூங்கில் குச்சி யில் ஆளுக்கொரு கவட்டைசெய்து கொள்வது!

'சாட் பூட் த்ரீ’ போட்டு ஒருவன் ஆட்டத்தை ஆரம்பிப்பான். 'கல்லா... மண்ணா..?’ என மாறி மாறிக் கேட்டுவிட்டுப் படாரென ரெண்டில் எதையாவது சொல்வான். கல் என்றால் கல்லிலும் மண் என்றால் காய்ந்த சாணியிலும் கவட்டையை வைத்துவிட வேண்டும். எதிலும் வைக்காமல் திண்டாடுபவன் கவட்டையை இழுத்துக்கொண்டு ஓடுவோம். பாதிக்கப்பட்டவன் நொண்டியடித்துக்கொண்டே பின்னால் ஓடி வர வேண்டும். அவன் பின்னால் ஒரு கூட்டம் 'எங்க வீட்டு நாயி எதையோ திங்கப் போச்சு’ எனப் பாடி வெறுப்பேற்றிக்கொண்டே வரும்.

வட்டியும் முதலும் - 20

அப்போது பங்காளி உத்திராபதி சென்னையில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்தான். கோடை விடுமுறைக்கு மட்டும் ஊருக்கு வருபவன், எதற்கெடுத்தாலும் 'மெட்ராஸ்ல எப்பிடித் தெரியும்ல...’ என்பதையே பஞ்ச் டயலாக்காக வைத்து எங்களை வெறுப்பேற்றுவான். விளையாடிக்கொண்டு இருக் கும்போதே ஓடிப்போய் கொஞ்ச தூரத்தில் நின்று, 'ப்ளடி ஃபூல்ஸ்...’ எனக் கத்திவிட்டு வீட்டுக்கு ஓடி விடுவான். 'மெட்ராஸ்ல எல்லாம் கிரிக்கெட், பேட்மின்டன்தான்... உங்களுக்கு அதெல்லாம் தெரியாதா’ என அவன் டமாரம் தாங்கவில்லை.

ஒரு நாள் சபையைக் கூட்டி சதியாலோசனை செய்தோம். திட்டப்படி முபாரக் அலி, உத்திராபதியைக் கவட்டைக்கு இழுத்து வந்தான். டார்கெட் வைத்து அவனை செல்லூர் மார்க்கமாக இலையூர் வரை இழுத்துப் போனோம். சில பல கிலோ மீட்டர்கள் நொண்டியடித்தபடி உத்திராபதி ஓடி வர... எல்லோரும் 'எங்க வீட்டு நாயி எதையோ திங்கப்போச்சு, கல்லால அடிச்சோம் காலு உடைஞ்சுபோச்சு’ என உற்சாகமாகக் கத்தினோம். அதில் ஒருவன், 'மெட்ராஸு நாயி...’ எனக் கத்த, அழுதபடி ஓடிய பதி லீவு முடிகிற வரைக்கும் விளையாடவே வரவில்லை. இப்போது மறைமலை நகரில் ஒரு ஸ்டீல் ஃபேக்டரியில் வேலை பார்க் கிறான் பதி. சமீபத்தில் போன் பண்ணும்போது சொல்லிச் சிரித்தான், ''மெட்ராஸ்ல எப்பவுமே நாய்ப் பொழப்புதான்... அன்னிக்கே கரெக்ட்டாத்தாண்டா சொல்லியிருக்கீங்க!''

அப்போது எங்கள் ஊர் கபடி அணியின் பெயர் 'அபிவை செவன் ஸ்டார்’. கிரிக்கெட்டின் ஆக்ரமிப்புக்குப் பிறகு, வைப்பாட்டி புகுந்த வீட்டில் பொண்டாட்டியின் கதி ஆகிவிட்டது கபடிக்கு! 20 வருடங்களுக்கு முன்பு வரை ஊருக்கு ஊர் கபடி டோர்னமென்ட்தான் களைகட்டும். விளையாட்டு என்றால், வெற்றியும் தோல்வியும்தானா? அது அலாதியான அனுபவம். 'வெண்ணிலா கபடிக் குழு’ மாதிரியே எங்கள் 'செவன் ஸ்டார்’ குழுவும் செம மொக்கை டீம். அதில் நான் சைக்கிள் மிதித்து, துணி மூட்டை சுமந்து, குளூக்கோஸ் விநியோகிக்கும் சூப்பர் ஜூனியர். கோவிந்தராஜ் சித்தப்பா தலைமையில் சைக்கிளில் ஆக்ரோஷமாகப் புறப்பட்டுப் போகும் டீமை அக்கம்பக்கத்து ஊர்களில் அடித்துத் துவைத்துக் காயவைப்பார்கள். ஒரு முறை கூத்தாநல்லூர் டோர்னமென்ட்டில் திடுதிப்பென செவன் ஸ்டாருக்கு எதிராக திருவாரூர் குண்டர்கள் களம் கண்டார்கள். 'பளாக்’ அடிப்பதில் மாவட்டத்திலேயே அவர்கள்தான் 'அட்டாக்’ பாண்டிகள். எங்கள் டீமில் இருந்து ரைடு போகிற ஒவ்வொருவரையும் அநாயாசமாகத் தூக்கி வெளியே வீசினார்கள். பாதி ஆட்டத்திலேயே அவனவனுக்கு நுரை தள்ளியது. கடைசி ஆளாக ரைடு போன சாகுலை ஒரு குண்டன் தூக்கி டியூப் லைட் மீது வீசினான். சிதறி விழுந்த சாகுலுக்கு வலது கால் சப்பை நழுவியது. அப்படியே ஊருக்கு அள்ளிவந்து கருப்புவிடம் மாவுக் கட்டு போட்டு, வீட்டில் ஒப்படைத்தோம். அவனது அம்மா 'கழிச்சல்ல போவ... கழிச்சல்ல போவ...’ என கோவிந்தராஜு சித்தப்பாவைக் கட்டையோடு துரத்தியது. சித்தப்பா ஒரு வாரம் தஞ்சாவூரில் தலைமறைவாகி, திரும்பினார்.

இன்னொரு முறை துபாய் போவதற்கு விசா ஏற்பாட்டில் இருந்த செந்திலை சேங்காலிபுரம் டோர்னமென்ட்டுக்குக் கொண்டுபோய், கை மூட்டை இறக்கிக் கொண்டுவந்தோம். ''அடுத்த வாரம் திருச்சிக்கு மெடிக்கல் டெஸ்ட்டுக்குப் போறவனைக் கொண்டுபோயி இப்பிடிக் கொண்டாந்திருக்கீங்களேடா... கம்னாட்டிங்களா...'' என நண்பனின் அப்பா எங்களை வெறிகொண்டு துரத்தினார்.

பெரிய சரவணாதான் எங்கள் டீமின் பஃபூன். சாயங்காலம் கிளம்பிப் போனால் ராத்திரி எல்லாம் கண் விழித்து விளையாடி விட்டு அதிகாலையில் பல ஊர்களைக் கடந்து திரும்புவோம். ஜெயிப்போ, தோப்போ பெரிய சரவணாவின் பாட்டும் கூத்துமாக அந்தப் பயணங்கள் மறக்க முடியாதவை. வரும் வழி எல்லாம் ஒரு கெட்ட வார்த்தையைச் சத்தம்போட்டுக் கத்திக்கொண்டே வருவது பெரிய சரவணா வின் ஹாபி. ஒரு சாயங்காலம் அப்படிப் போகும்போது வழியில் ஒரு கல்யாண வீட்டைக் கடந்து போனோம். பெரிய சரவணா அந்தக் கெட்ட வார்த்தையை முழங்கியபடி ஏரியாவைக் கடந்தான். செருகளத்தூரில் தோற்றுவிட்டு நள்ளிரவில் திரும்பும்போது மறுபடி அந்தக் கல்யாண ஏரியாவில் சரவண கோஷம் ஆரம்பித்தது. எங்கெங்கிருந்தோ ஒளிந்திருந்தவர்கள் தடதடவென ஓடிவந்து எங்களை மடக்கிப்போட்டுப் பொளந்தார்கள். ''பல மாசமா ஒங்கள நோட் பண்றம்டா... இன்னிக்கு சிக்குனீங்கடா... பொண்டுபுள்ளைங்க பொழங்குற எடத்துல...'' எனப் பிரித்து மேய்ந்தவர்கள், பெரிய சரவணாவின் சைக்கிளைப் பிடுங்கிக் குளத்தில் எறிந்தார் கள். சைக்கிளை மீட்க கட்டாரி மாமாவோடு போய் பஞ்சாயத்து நடந்ததெல்லாம் செம காமெடி!

வட்டியும் முதலும் - 20

நாங்கள் சீனியர் ஆகும்போது கிரிக்கெட் யுகம் ஆரம்பித்துவிட்டது. ஏ.சி.சி-யை (அபிவை கிரிக்கெட் க்ளப்) உருவாக்கினோம். நானும் சித்தார்த்தனும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். கருங்கபில் (கறுப்பின எஃபெக்ட்டில் இருக்கும் செந்திலுக்கு பெட் நேம்) ஓப்பனிங் பௌலர். அய்யா, ஒயிடு உத்திராபதி, ஒலிவில்லா என செம டீம் ஃபார்மானது. இரவு பகல் சோறு தண்ணி இல்லாமல் எப்போதும் கிரிக்கெட்தான். கொரடாச்சேரிக்கு முதல் தடவையாக டோர்னமென்ட் போனோம். மைக் கட்டி கமென்ட்ரி எல்லாம் எங்களுக்குப் புதுப் பரவசம். அதுவரை ஸ்டிச் பாலில் ஆடியதே இல்லை. முதலில் பேட் பிடித்த கொரடாச்சேரி பின்னிப் பிரித்தார்கள். கல்லியில் நின்று இருந்த உத்திராபதிக்குப் பந்து தாக்கிக் கன்னம் பணியாரமானது. 178 ரன்கள் டார்கெட். அடுத்து இறங்கிய எங்கள் டீமில் மளமளவென விக்கெட்டுகள் காலி. உத்திராபதி விளையாடுகிற கண்டிஷனில் இல்லை. எங்கள் ஊருக்கு வெல்லம் விக்க வருகிற ரவி ஓரமாக உட்கார்ந்து சரக்கடித்துக்கொண்டு இருந்தார்.

கடைசி விக்கெட்டாக இறங்க வேண்டிய பதிக்குப் பதில் 'நான் இறங்குறேண்டா’ எனக் கைலியை வரிந்து கட்டிக்கொண்டு ரவி இறங்க, அவருக்குச் சரியாக பேட் பிடிக்கவே தெரியாது என்பதால், எதிர் டீம் தடுக்கவேஇல்லை. ஆவேசமாக இறங்கிய வெல்லம் ரவி மானாவாரியாகச் சுழற்றி அஞ்சாறு சிக்ஸர்களைப் பறக்கவிட, திடீர் திருவிழா வானது. டீம் தோற்றாலும் ரவியின் புயல் ஆட்டத்தால் டீம் மானம் காக்கப்பட்டது. ''நீ பேட்டே பிடிச்சதுல்ல... எப்பிடியா அடிச்ச?'' என்றால், ''கண்ணை மூடிட்டு சுத்துனேன் மாப்ள...'' என்ற ரவியை 'மோடுமுட்டி ரவி’யாக்கி அன்றில் இருந்து டீமில் சேர்த்துக்கொண்டோம்!

அப்போது டி.வி-யில் பெப்ஸி விளம்பரத்துக்கு கங்குலி வந்துகொண்டு இருந்தார். எங்கள் ஊரில் அது வரை யாருமே பெப்ஸி குடித்தது இல்லை. கங்குலி விளம்பரத்தைப் பார்த்து, எங்கள் எல்லோருக்குமே பெப்ஸி மேல் மோகம்.

அப்போது வலங்கைமானில் கிரிக்கெட் டோர்னமென்ட் வந்தது. ''இதுல ஏதாவது பிரைஸு வாங்கிட்டா, அந்தக் காசுல எல்லாருக்கும் பெப்ஸிரா...'' என்றான் சித்து. அதனாலேயே உயிரைக் கொடுத்து விளையாடி அந்தப் போட்டியில் மூன்றாவது பரிசு தட்டினோம். எல்லோரும் குடவாசலுக்கு வந்து ஒரு கடையில் எங்கள் கனவு பானம் பெப் ஸியை வாங்கினோம். ஆசை ஆசையாக ஒரு வாய் குடித்த சசி, ''அய்யே... ஒறைக்குதுரா'' எனக் கத்தியபடி பாட்டிலை அப் படியே கீழே உருட்டி விட்டான். ''மொள வாப் பொடி தூவிருக் கானுங்கடோய்... இதுக்குப் போயா இந்த கங்குலி கம்னாட்டி இந்த பில்டப்பு குடுக்குது...'' என ராஜு கத்தினான்.

சமீபத்தில் ஊருக்குப் போகும்போது பார்த்தால் யூனிஃபார்ம், லோக்கல் கடை களின் ஸ்பான்சர், லோக்கல் கேபிளில் செய்திகள் என எங்கள் ஊர் டீம் மினி சென்னை சூப்பர் கிங்ஸ் மாதிரியே இருக் கிறது. வயலில் கிரவுண்ட் போட்டு அவர் கள் ஹோவென ஆடுவதைப் பார்க்க ஏக்க மாக இருக்கிறது. ''நானும் வர்றேண்டா...'' என பேட் கேட்டால், ''நீங்க அம்பயரா இருங்கண்ணே'' என்றார்கள். நமக்கு அம்பயராக இருக்கும் வயது வந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கடுப்பாக இருக்கிறது!

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் என்னைப் பார்க்க சிவந்தி வந்திருந்தார். வெட்டாற்றில் எங்கள் ஊர்க் கரையில் இருந்து கம்மங்குடி கரைக்கு நீச்சல் போட்டி நடத்துவோம். அடித்துப் பொங்குகிற நீரில் பாதி ஆறு போவதற்குள் மூச்சு முட்டும். அந்தப் போட்டிகளில் அதிகம் ஜெயிப்பது சிவந்திதான்.

தோப்பில் இருந்து ஆற்றை நோக்கிச் சரிந்திருக்கும் ஒரு மரத்தில் இருந்து தெப்பலங்கட்டி குதிப்பது, காதர் பாய் வீட்டுத் தூங்குமூஞ்சி மரத்தில் இருந்து சொருவல் விடுவது, டியூப் போட்டு ராக்கபெருமாள் கோயில் வரை போவது என வெட்டாற்றை ரவுண்டு கட்டி அடிப்பதுதான் எங்களுக்கு விடுமுறை. இப்போது சிவந்தியைப் பார்த்ததும் எனக்கு நுரைத்துப் பொங்கும் வெட்டாறுதான் ஞாபகத்துக்கு வந்தது.

''என்ன சிவந்தி எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?''

''நான் சென்னைக்கு வந்து மூணு வருஷமாச்சுங்க. இங்கதான் பக்கத்துல கங்கையம்மன் கோயில் தெருவுல ஒரு நீச்சல் கொளத்துல வேலை பாக்குறேன்...''

''நீச்சல் கொளத்துலயா?''

''ஆமாங்க... ஸ்விம்மிங் டிரெயினிங் வர்ற பிள்ளைங்களைப் பார்த்துக்கறது. சம்பளம் ரெண்டாயிரத்துச் சொச்சம்தான் தர்றான். அதான் வேற வேலை தேடிட்டு இருக்கேன். சமைச்சுச் சாப்பிட்டாலே பதினஞ்சு நாளைக்குத் தாக்குப்புடிக்க முடியல. எதாவது வேலை இருந்தா சொல்லுங்க...'' என்றபோது தொபுக்கடீர் என அவர் குதித்த வெட்டாறு என் மேல் தெறித்தது.

பால்யம் என்ற திரும்பி வராத பேராற்றின் கரையில்  சந்திக்கும்போது, நினைவுகளின் ருசியும் நிகழ்வுகளின் வலியும் கைகுலுக்கிக்கொள்கின்றன. விளையாடுவதை நாம் நிறுத்தும்போது, நம்மை வைத்து இந்த உலகம் விளையாட ஆரம்பிக்கிறது!              

(போட்டு வாங்குவோம்...)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan