
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
வளர்பிறை நிலவு, வானில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. மூவேந்தர்களும் அவரவருக்கான பாசறைக் கூடாரத்தில் இருந்தனர். முசுகுந்தர், திசைவேழரைக் கண்டு வேந்தர்களின் வேண்டுகோளை ஏற்கச்செய்து அழைத்துவரப் போயுள்ளார். உதியஞ்சேரலால் அவனது கூடாரத்துக்குள் இருக்க முடியவில்லை. `நேற்று இரவு அந்துவனை நிலைமான் கோல்சொல்லியாகத் தேர்வுசெய்வோம் என்று சொன்ன குலசேகரபாண்டியன் இன்று ஏன் மாற்றினார்? இதற்கான காரணம் என்ன? அதுவும், தான் சொல்லாமல் தன் அமைச்சனின் மூலம் ஏன் சொல்லவைத்தார்?’ என்ற கேள்விகள் அவனைக் குடைந்துகொண்டிருந்தன. `இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. ஆனால், என்னவென்று புரியவில்லை’ என்று குழம்பிப்போய் இருந்தவன், `இதுபற்றி சோழனிடம் விவாதிக்கலாம்’ என்று அவனது கூடாரம் நோக்கிப் புறப்பட்டான்.
செங்கனச்சோழன் தன் தந்தை சோழவேழனிடம் இதைப் பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தான். அந்நேரம் உதியஞ்சேரலும் உள்ளே வந்தான். ``நேற்றிரவு பேசியதும் இன்று காலையில் நடந்ததும் பேரையத்தை உருவாக்குகின்றன. பாண்டியன் நமக்குத் தெரியாமல் ஏதோ செய்யப்பார்க்கிறான்” என்றான் உதியஞ்சேரல்.
``எனக்கும் புரியவில்லை. திசைவேழர், மிகக் கடுமையானவர்; அறம் பிறழாதவர்; கபிலர் மீது மிகுந்த பற்றுகொண்டவர். அப்படியிருந்தும் ‘அவரைக் கோல்சொல்லியாக நியமிப்பது எந்த வகையில் உதவி செய்யும்? நம்மிடம் அந்துவன் எனச் சொல்லிவிட்டு அவையில் ஏன் மாற்ற வேண்டும்?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளோடுதான் நாங்களும் இருக்கிறோம்” என்றார் சோழவேழன்.
``திசைவேழரும் வேண்டாம், அந்துவனும் வேண்டாம். நம் கணியன் ஒருவனைக் கோல்சொல்லியாக நியமிப்போம். அமைச்சர்கள் நாகரையனையும் வளவன்காரியையும் அனுப்பி குலசேகரபாண்டியனுக்குத் தெரிவிப்போம்” என்று சற்று கோபத்தோடு சொன்னான் செங்கனச்சோழன்.

``அப்படியே செய்யலாம்” என்றான் உதியஞ்சேரல்.
``அவசரப்பட வேண்டாம். சற்றுப் பொறுத்திருப்போம். ஏன் நம்மிடம் தெரிவிக்காமல் திசைவேழரின் பெயரைச் சொன்னார் குலசேகரபாண்டியன்? அந்தக் காரணம் நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு ஏற்பதான் நம்முடைய அடுத்தகட்டச் செயல்பாடு அமைய வேண்டும்” என்றார் சோழவேழன்.
``அதற்குள் திசைவேழர் நிலைமான் கோல்சொல்லியாகப் பொறுப்பேற்றுப் போரைத் தொடங்கிவிடுவாரே?”
மெல்லிய சிரிப்போடு சோழவேழன் சொன்னார், ``திசைவேழர் அறம் பிறழாதவர். போரின் விதிமீறலை அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. நிலைமான் கோல்சொல்லி பொறுப்பிலிருந்து அவராக வெளியேறிச் செல்ல, ஒரு வீரன் தொடுக்கும் அம்பு போதும்” என்றார்.
‘அனுபவமேறிய மனிதர்களின் சிந்தனை தனித்துவமிக்கதுதான்’ எனத் தோன்றியது உதியஞ்சேரலுக்கு. தன் தந்தையின் கருத்தைச் சரியென ஒப்புக்கொண்டான் செங்கனச்சோழன். குலசேகரபாண்டியனின் செயலுக்குக் காரணம் என்ன என்பதை அறிவதுதான் இப்போது முக்கியம் என்பதில் அனைவரும் உடன்பட்டனர்.
பெருங்குழப்பத்திலும் கட்டுப்படுத்த முடியாத கோபத்திலும் இருந்த பொதியவெற்பன், குதிரையில் ஏறி, கருங்கைவாணனைப் பார்க்க விரைந்தான். மருத்துவக் கூடாரத்தில் இருந்த அவனோடு, நேற்று நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தான். மீண்டும் இன்றிரவு அவனைக் காண வந்துவிட்டான். இளவரசன் உள்ளே வந்ததும் மருத்துவர்களும் உதவியாளர்களும் கூடாரத்தை விட்டு வெளியேறினர்.
நேற்று இரவு மூவேந்தர்களும் கூடி என்ன பேசினார்கள் என்பது பொதியவெற்பனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை திசைவேழரைக் கோல்சொல்லியாக நியமித்ததுதான் பேரதிர்ச்சியாக இருந்தது. கடுங்கோபத்தோடு வந்து செய்தியைக் கருங்கைவாணனிடம் பகிர்ந்துகொண்டான். கருங்கைவாணனுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. பொதியவெற்பன், சினமேறிய வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தான். ``தொடக்கம் முதலே தந்தையின் செயல் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. எதையும் தெரிவிக்க மறுக்கிறார். நான் தெரிவிக்கும் எல்லாவற்றையும் மறுக்கிறார். இந்தப் போரில் அவர் பின்பற்றும் உத்திகள் அனைத்தும் நமக்கே புரியாதபுதிராக இருக்கின்றன” என்று மூச்சு விடாமல் பேசினான்.
இளவரசரின் கோபத்தை, கருங்கைவாணனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ``பேரரசரின் நடவடிக்கை மிகவும் ஆழ்ந்த சிந்தனைகொண்டதாக இருக்கும். சற்றே நிதானமாக எண்ணிப்பார்க்கலாம்” என்று பொதியவெற்பனின் கோபத்தை மட்டுப்படுத்த முயன்றான் கருங்கைவாணன்.
ஆனால், பொதியவெற்பனால் எளிதில் சமாதானமாக முடியவில்லை. ``என் மனைவியை ஏன் மதுரையை விட்டு வெங்கல்நாட்டுக்கு வரவழைக்க வேண்டும்? அதுவும் அவள் வந்த பிறகுதான் எனக்குச் செய்தி தெரிவிக்கப்படுகிறது” என்றான். கருங்கைவாணன் இந்தச் செய்தியை இப்போதுதான் அறிகிறான். ``இளவரசியார் வெங்கல்நாட்டுக்கு வந்துள்ளாரா?” எனக் கேட்டான்.
``ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அவள் கபிலர் மாணவி. போர் நடவடிக்கையில் யாரும் எதிர்பார்க்காதபோது அவள் பயன்படக்கூடும் என்று சிந்தித்திருப்பார் எனத் தோன்றுகிறது. அது நல்ல சிந்தனைதான். ஆனால், என் மனைவி வந்துள்ளதையே நான் மையூர்கிழார் சொல்லித் தான் தெரிந்துகொள்கிறேன். இதையாவது பொறுத்துக்கொள்ளலாம். காலையில் வாரிக்கையன் என்ற அந்தக் கிழவன், `உன் மனைவி கருவுற்றிருக்கிறாளா?’ என்று அவையில் அவமதிக்கும் தொனியில் கேள்வி எழுப்பியபோது சினந்தெழுவார் என நினைத்து தந்தையைப் பார்த்தேன். அவரோ சிரித்துக்கொண்டிருக்கிறார். இது பாண்டியநாட்டு அரண்மனையன்று. மற்ற இருவேந்தர்களும் இருக்கும் அவையில் என்னை அவமானப்படுத்தவேண்டிய தேவையென்ன? என்னதான் நினைக்கிறார் அவர்?” என்று கோபத்தில் சீறினான் பொதியவெற்பன்.
சிறிது நேரம் பதிலின்றி அமைதியாக இருந்த கருங்கைவாணன், ``பேரரசரின் செயல் நமக்குக் கவலையைத் தந்தாலும் அதற்குள் ஆழ்ந்த பொருள் இருப்பதை நாம் பல நேரத்தில் உணர்ந்துள்ளோம். இதுவும் அப்படியொரு செயலாக இருக்கலாம் அல்லவா?” எனக் கேட்டான்.

``எதைச் சொல்கிறாய்?”
``இளவரசியாரை உங்களுக்குத் தெரிவிக்காமல் வரவழைத்ததைப் பற்றிக் கோபப்பட்ட நீங்கள், அதற்கான காரணத்தைச் சொல்லும்போது சரியானதுதான் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அதேபோலத்தான் திசைவேழரைக் கோல்சொல்லியாக நியமித்ததற்கும் சரியான காரணம் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.”
``என்ன காரணம்?”
``வேட்டுவன்பாறையின் மீதான தாக்குதலின் தன்மையைப் பேரரசர் உணர்ந்திருப்பார். எதிரியின் திறன் வலிமைகொள்ளும் இடம் எது, வலிமை குன்றும் இடம் எது என்று அவரால் துல்லியமாகக் கணிக்க முடியும். களப்போர் என்பது பயிற்சியை அடிப்படையாகக்கொண்டது. பயிற்சியற்ற படைவீரர்கள், தாக்குதல் போரைப் போலவே களப்போரிலும் எல்லாத் திசைகளிலும் அளவற்ற ஆவேசத்தை வெளிப்படுத்துவர். அதனாலேயே அவர்களைச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கவைக்க வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்ல, பறம்பினரைப் போர் விதிகளுக்குள் அடக்குவது ஏதோ ஒருவகையில் அவர்களைக் கட்டுப் படுத்துவதுதான். காட்டாற்றின் வேகத்தைக் கரையெழுப்பிய வாய்க்காலின் வழியே பிரித்துப் பணியவைப்பதைப்போலத்தான். அவர்களின் தரப்பில் கோல்சொல்லியாகக் கபிலர் இருக்கும்போது திசைவேழரை நமது தரப்பு கோல்சொல்லியாக நியமித்தது சிறந்த தந்திரம் என்றே நினைக்கிறேன். போர் விதிகளுக்குள் மீண்டும் மீண்டும் அவர்களை உட்படுத்தும் ஆயுதமாகக் கபிலரையும் திசைவேழரையும் ஒருசேரப் பயன்படுத்த நினைத்துள்ளார். காட்டு யானையின் இரு காதுகளிலும் இரு அங்குசங்களை மாட்ட நினைக்கிறார் பேரரசர்” என்றான் கருங்கைவாணன்.
இப்படியொரு காரணத்தைப் பொதியவெற்பன் சிந்திக்கவில்லை. கருங்கைவாணன் சொல்வதைக் கேட்கும்போது மிக நுட்பமான சூழ்ச்சியாகத் தோன்றியது. பேரரசரின் திட்டம் மிகவும் கவனமிக்கதாக இருக்கிறது என்பதும் விளங்கியது. ஆனாலும், மனதுக்குள் வலி அகலவில்லை.
சட்டென நினைவுக்குவந்து மீண்டும் கேட்டான் பொதியவெற்பன், ``நேற்று `பறம்புடனான போருக்கு விதிகளே வகுக்கக் கூடாது’ என்று சொன்னாய். இன்று இப்படிப் பேசுகிறாயே?”
``ஆம். இப்போதும் எனது நிலை அதுதான். ஆனால், விதிகள் வகுக்கப்பட்ட போர் என்று முடிவெடுத்த பிறகு சிறந்த போர் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். இப்போது பேரரசர் அதைத்தான் செய்துள்ளார் என நினைக்கிறேன்” என்றான் கருங்கைவாணன்.
வெங்கல்நாட்டின் வடபுறத்துக் குடில் ஒன்றில் தங்கியிருந்தார் திசைவேழர். கபிலரும் வாரிக்கையனும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திசைவேழரைப் பார்க்க விரைந்தார் முசுகுந்தர்.
வைகைக்கரையில் இருந்த திசைவேழரை, போருக்கான நாள் குறித்துத்தரச் சொல்லித்தான் அழைத்தனர். ஆனால் அவரோ, ‘’போரைத் தவிர்க்க, கபிலர் மூலமாக ஏன் பேசிப்பார்க்கக் கூடாது?’’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் சொன்னதை ஏற்ற வேந்தர்கள், கபிலருக்குத் தூது அனுப்பிப் பேசிப்பார்த்தனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அன்று மாலையே திசைவேழருக்கு அந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.
தனது சொல்லைக் கேட்டு வேந்தர்கள் மூவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போரைத் தவிர்க்க முடியவில்லை. எனவே, இனி அவர்கள் கேட்பதுபோல போருக்கான நாள் குறித்துக் கொடுப்பதை மறுத்துச் சொல்ல முடியாத நிலை உருவானது. சற்று குழப்பமான மனநிலையுடனே குடில் விட்டு அகலாமல் இருந்தார் திசைவேழர்.
இரவு பரவும் வேளையில் குடிலுக்கு வந்துசேர்ந்தார் முசுகுந்தர். மாணவர்கள், விளக்கை ஏற்றிக்கொண்டிருந்தனர். செய்தி திசைவேழருக்குச் சொல்லப்பட்டது. `மீண்டும் நாள் குறித்துக் கேட்பதற்காக முசுகுந்தர் வந்துள்ளார்’ என நினைத்தபடி அவரை உள்ளே வரச்சொன்னார் திசைவேழர்.
தான் வந்துள்ள பணி எவ்வளவு கடினமானது என முசுகுந்தருக்கு நன்கு தெரியும். திசைவேழர் இதற்கு ஒப்புதல் தருவது எளிய செயலன்று. ஆனாலும், பேரரசர் குலசேகரபாண்டியனின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விடக் கூடாது என்ற முடிவோடு வந்திருந்தார்.
திசைவேழரின் முன் பணிவு குலையாமல் அதே நேரத்தில் எந்தவிதத் தயக்கமுமின்றி, தான் மனதுக்குள் பலமுறை சொல்லிப்பார்த்த சொற்றொடரைத் தலை தாழ்த்தியபடியே கூறினார் முசுகுந்தர். ``இப்பெரும் போருக்கான வேந்தர்படையின் நிலைமான் கோல்சொல்லியாகத் தாங்கள் இருந்து வழிநடத்த வேண்டும் என்று மூவேந்தர்களும் விரும்புகின்றனர் பேராசானே!”
போர்நிலத்தையே பார்க்கக் கூடாது என நினைப்பவனை, போரின் அத்தனை கொலைகளையும் உற்றுநோக்குபவனாக மாற்ற நினைக்கும் ஆலோசனை அவரை நடுங்கச் செய்தது. ஒருகணம் திகைத்துப்போனார். அதிர்ச்சி, சினமாக உருமாறியது. ஆனாலும் கட்டுப்படுத்தினார். மெல்லிய குரலில் உதிர்ந்த இலையை ஊதித்தள்ளுவதைப்போல இந்த ஆலோசனையை அப்புறப்படுத்தினார்.
சினமேறிய வெளிப்பாடு இல்லாதது முசுகுந்தருக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது. ஆனாலும் அவரின் ஏற்பைப் பெறுவது எளிய செயலன்று. எல்லாவகையிலும் முயன்று அவரின் ஒப்புதலைப் பெற மனதை ஆயத்தப்படுத்திக் கொண்டார்.
திசைவேழர், தனது வழக்கத்துக்கு மாறான செயலைச் செய்துகொண்டிருந்தார். பொங்கி யெழும் சினம் சொல்லின்மேல் படியாமல் பார்த்துக்கொண்டார். நிராகரிக்கும் ஒன்றின் மீது உணர்ச்சியைப் படியவிடுவது பொருளற்றது என்று அவருக்குத் தோன்றியது.

முழுமுற்றாக நிராகரிப்பதற்கும் நிராகரிக்கும் காரணத்தை விளக்குவதற்கும் நுட்பமான இடைவெளி உண்டு. கண்ணுக்குத் தெரியாமல் ஒருபடி கீழிறக்கும் செயல் அது. திசைவேழர் நிராகரிக்கும் ஒற்றைச் சொல்லை மட்டுமே இயல்பான தொனியில் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படியாவது அதற்கான காரணத்தை விளக்கும் இடத்துக்கு அவரை வரவழைத்துவிட வேண்டும் என முயன்றார் முசுகுந்தர்.
திசைவேழர் போன்ற பேராசானைத் துளித்துளியாகத்தான் கரைக்க முடியும். இந்தப் போரில் தனக்கு வழங்கப்பட்ட மிகக் கடினமான பணி இதுவாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தை உருத்திரட்டி எதைச் சொன்னால் திசைவேழரின் சொற்கள் கனிவு கொள்ளுமோ, அதற்கான வெக்கையை உருவாக்கும் காரணத்தைத் தேர்வுசெய்து கூறினார். ``போரின் அறத்தை, சிறந்த கோல் சொல்லிகளால் மட்டுமே நிலைநிறுத்த முடியும். எனவே, நீங்கள் மூவேந்தர்களின் கூட்டுப்படைக்கு நிலைமான் கோல்சொல்லியாக இருந்து இந்தப் போரை அறவிதிகள் மீறாமல் நடத்தித்தர வேண்டும்.”
நீண்ட அமைதிக்குப் பிறகு திசைவேழர் கூறினார், ``அறம்பேண, பொது இடமன்று போர்க்களம். அது நம்மை இரக்கமற்ற மனநிலைக்குள் முழுமுற்றாக மூழ்கவைக்கும். எனவே, இந்த ஆலோசனையை என்னால் ஏற்க முடியாது.”
இந்த இடத்துக்கு அவரை வரவழைக்கத்தான் இவ்வளவு முயன்றார் முசுகுந்தர். கரையத் தொடங்கிய ஒன்று மறுபடியும் தனக்குத்தானே உறைந்து இறுகுவது எளிதன்று. இனி வெக்கையின் அடர்த்தியை வெப்பத்தின் இளஞ்சூடாக மாற்ற முயன்றார் முசுகுந்தர், ``ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவிதிகளைத்தானே முன்னோர்கள் ‘அறம்’ என வகைப்படுத்தினர். நாற்றங்காலின் அறமும் அறுவடைக்களத்தின் அறமும் செயலின் வழியேதானே வெவ்வேறானவை. வரையறுக்கப் பட்ட கடமையின் அடிப்படையில் அவற்றுக்குள் வேறுபாடு ஏதும் இல்லையே. பயிரை நடுவதும் பயிரை அறுப்பதும் சமநிலைகொண்ட செயல்பாடுகள் என்பதே அறத்தின் குரல்.
அப்படியிருக்க, பொது இடம் என்றோ, போர்க்களம் என்றோ வேறுபடுத்துவது பொருளற்றதுதானே பேராசானே!”
``முசுகுந்தரே, விதிகளும் அறவுணர்வும் எப்போதும் பொருந்திப்போவதில்லை. விதிகள், சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பவை. அறவுணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றி நிற்பவை. போருக்குத் தேவை போர்விதிகள்தான். அவற்றைப் ‘போரின் அறம்’ எனச் சொல்வது அறிவுடைமையாகாது.”
``சமமான அளவீடுகளை உருவாக்குவதே, சமமற்றவற்றுக்கு எதிரான அறச்சிந்தனையின் வெளிப்பாடுதான். அதனால்தானே இந்தச் செயலில் தன்னைப் பொருத்திக்கொள்வது கடமை எனப் பெரும்புலவர் கபிலர் முன்வந்துள்ளார்.”
சற்றே அதிர்ந்தார் திசைவேழர். ``கபிலர் கோல்சொல்லியாக இருக்க முன்வந்துள்ளாரா?”
``ஆம். பறம்பின் தரப்பில் நிலைமான் கோல்சொல்லியாக இருக்கப்போகிறார் பெரும்புலவர் கபிலர். அதனால்தான் மூவேந்தர்களும் ஒருமித்த குரலில் பேராசானே எங்களுக்கான நிலைமான் கோல்சொல்லியாக இருக்க வேண்டும்” என விரும்புகின்றனர்.
``விதிகள், நீரை ஒழுங்குபடுத்தும் வாய்க்காலைப் போன்றவை; ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் நீரில் கரையக்கூடியவை. அதனால்தான் உருவாக்குபவனுக்குப் பணியும்தன்மை விதிகளின் இயல்பாகிறது. ஆனால் அறன் எனப்பட்டது, அனைவரையும் கூர்தீட்டிப்பார்த்து, தன்னை நிலைநிறுத்திக்கொள்வது. உங்கள் பேரரசர்களை நன்றாகச் சிந்தித்துக்கொள்ளச் சொல்லுங்கள். நான் போரின் விதிகளை நிலைநிறுத்தும் கோல்சொல்லியாகச் செயல்படேன். போரின் அறத்தை நிலைநிறுத்தும் கோல்சொல்லியாகவே செயல்படுவேன். அது வெற்றியின் சுவைக்கு உவப்பானதன்று.”
முழுமுற்றாக மறுத்துக்கொண்டிருந்த திசைவேழர், இவ்வளவு இறங்கிவந்ததும் இறுகப் பற்றிக்கொள்ள நினைத்தார் முசுகுந்தர். `குலசேகரபாண்டியனின் உத்தரவை நிறைவேற்ற முடியாமற்போய்விடுமோ!’ என்ற பதற்றம் தணியத் தொடங்கியது. திடமான குரலில் கூறினார், ``இதற்குமுன் இந்த மண் காணாத பெரும்போர் இது. மூவேந்தர்கள் ஓரணியில் அணிவகுத்து நிற்கப்போகின்றனர். பறவைகளால் பறந்து கடக்க முடியாத நிலப்பரப்பில் வீரர்கள் வாளேந்தி நிற்பர். ‘இந்த மாபெரும் போரை அறம் பிறழாமல் நடத்த வேண்டும்’ என்று பாண்டியப் பேரரசர் கருதுகிறார். வரலாறு இருக்கும் வரை இந்தப் போர் நிலைபெறப்போகிறது. இதில் அடையப்போகும் வெற்றி எந்தவகையிலும் குறைவுடையதாகக் கூடாது என்பதில் குலசேகரபாண்டியன் மட்டுமல்ல, மற்ற இரு பேரரசர்களும் மிகுந்த விருப்பத்தோடு இருக்கின்றனர். எனவேதான் தங்களின் ஒப்புதல் தலையாயது எனக் கருதுகின்றனர்” என்றார்.
திசைவேழர் எதிர்ச்சொல்லின்றி அமைதியானார்.
``வைகையின் தென்திசையில் நீங்கள் குடில் அமைத்திருந்தால் வெள்ளத்தைக் கடந்து அந்துவனால் வந்து உங்களைக் கண்டு பேசியிருக்கவே முடியாது. நீங்கள் வடதிசையில் குடில் அமைத்ததே இங்கு வந்து சேருவதற்காகத் தான். எனவே, திசைவேழர் இதற்கு ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கையோடு என்னை அனுப்பிவைத்தார் பேரரசர்” என்றார் முசுகுந்தர்.
இதற்குப் பிறகும் பதிலின்றி இருக்க முடியவில்லை. சற்றே தலையசைத்தார் திசைவேழர்.
மகிழ்ச்சி பொங்க அவரது கால் தொட்டு வணங்கினார் முசுகுந்தர்.

மறுநாள் அவை கூடியது. கபிலரும் வாரிக்கையனும் வந்துசேர்ந்தனர். சிறிது நேரத்தில் திசைவேழர் வந்தார். அவர் நிலைமான் கோல்சொல்லியாக இருக்க எப்படி ஒப்புக்கொண்டார் என கபிலருக்குப் பெரும் வியப்பாக இருந்தது. பேரரசர்களோ அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். மருத்துவக் கூடாரத்திலிருந்து கருங்கைவாணனும் வந்து சேர்ந்துவிட்டான். ‘குலசேகரபாண்டியனின் தந்திரம்மிக்க செயல் இது’ என்று அவன் நினைத்தான். ஆனால் குலசேகரபாண்டியனோ, ஏறக்குறைய கலங்கிய நிலையில் இருந்தார். நேற்று நடுப்பகலில் பேச்சுவார்த்தை முடிந்ததும் அப்படியே போய் மயங்கித் தூங்கியவர் நள்ளிரவுதான் எழுந்தார். அதன் பிறகுதான் என்ன நடந்தது எனக் கேட்டறிந்தார். நிலைமான் கோல்சொல்லியாக திசைவேழரைத் தேர்வுசெய்ததைக் கேள்விப்பட்டு நடுங்கிப்போனார். ``எப்படி இது நடந்தது?’’ என அவைக்குள் இருந்த பணியாளர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டார். `தான் எப்படி ஒப்புதல் கொடுத்தோம்’ என்பது அவருக்குப் புரியவேயில்லை. ``முசுகுந்தர் எங்கே?” எனக் கேட்டார்.
``திசைவேழரிடம் ஒப்புதல் பெறப் போயுள்ளார்” என்று தெரிவித்தனர்.
இவ்வளவு குழப்பங்களுக்குப் பிறகும் அவருக்கு இருந்த நம்பிக்கை, ‘திசைவேழர், இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மாட்டார்’ என்பதுதான். எனவே, நாம் முன்னரே தெரிவித்தபடி நாளைக் காலை அந்துவனை நிலைமான் கோல்சொல்லியாகத் தேர்வு செய்துவிடலாம் என நினைத்து அந்துவனுக்கும் செய்தி சொல்லி ஆயத்த நிலையில் இருக்கச் சொன்னார்.
ஆனால், அதிகாலையில்தான் செய்தி வந்தது, `திசைவேழர் ஒப்புதல் வழங்கிவிட்டார்’ என்று. குலசேகரபாண்டியனுக்குச் செய்தி சொல்லப் பட்ட அதே நேரத்தில் மற்ற இரு பேரரசர்களுக்கும் செய்தி சொல்லப்பட்டுவிட்டது. குலசேகர பாண்டியனால் நம்பவே முடியாத செய்தியாக இது இருந்தது. போர் தொடங்க நாள் குறித்துக் கொடுக்கச் சொன்னதற்கே அவ்வளவு தயங்கிய அவர், கோல்சொல்லியாக இருக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பெரும்கேள்வியாக இருந்தது. தனக்கு என்ன நேர்ந்தது என்பதும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் புரிபடாத நிலையில் மீள முடியாத குழப்பத்தில் மூழ்கினார்.
இந்தச் சிக்கலை எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றி முடிவெடுக்க மிகக் குறைந்த நேரமே இருந்தது. `அவையில், நான் சொன்னதை நானே மறுத்தாலோ, மாற்றிக் கூறினாலோ அது பெரும்பிழையாகிவிடும். வரும் நாள்களில் மூவேந்தர்களின் கூட்டுமுடிவுகள் நம்பகத் தன்மையை இழக்க நானே காரணமாகிவிடுவேன். எனவே, அந்துவனைப் பற்றிய புதிய செய்திகள் காலையில்தான் தெரியவந்தன. அவன் ஆபத்து நிறைந்தவன். அதனால் திசைவேழரைத் தேர்வுசெய்ய எண்ணினேன். ஆனால், முன்கூட்டித் தெரிவிக்க முடியாமற்போய்விட்டது’ என்று சொல்லிச் சமாளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
`எனக்கு என்ன நேர்ந்தது? சற்றே நினைவு தவறி மீண்டதுபோல் உள்ளது. காலையில் உண்ட உணவால் அப்படியானோமா? இது தற்செயலா அல்லது யாராலாவது திட்டமிடப் பட்டதா?’ என்று அவருள் கேள்விகள் எழுந்தபடியே இருந்தன. அனைத்தையும் தீவிரமாக விசாரிப்பது என முடிவுக்கு வந்தார்.
நடந்துள்ள நிகழ்வுகள் அனைத்திலும் மிகத் துடிப்பாகச் செயல்பட்டுள்ளவர் முசுகுந்தர். அவையில் திசைவேழரின் பெயரைச் சொன்னதும் நள்ளிரவு வரை அவருடன் வாதாடி ஒப்புதல் பெற்றதும் இப்போது அவைக்கு அழைத்துவந்துள்ளதும் முசுகுந்தர்தான். இவை அனைத்திலும் மிகத் தீவிரமாக அவர் செயல்பட்டுள்ளார். குலசேகரபாண்டியனின் ஐயம் முசுகுந்தரின் மீது படரத்தொடங்கியது. ஆனாலும் இப்போது நடக்கவேண்டியதில் மட்டும் கவனமாக இருப்போம் என்ற முடிவுடன் அவையில் அமர்ந்திருந்தார்.
திசைவேழரும் கபிலரும் ஒருங்கே அமர்ந்திருக்கும் பேரவை. மூவேந்தர்களும் அவர்களின் தளபதிகளும் அமர்ந்துள்ளனர். உடன் பறம்புநாட்டுப் பெருங்கிழவர் வாரிக்கையன் இருந்தார். மாபெரும் மனிதர்களால் நிறைந்த அவை இது. வேட்டுவன்பாறைக்கு வந்து திரும்பிய திசைவேழரை இவ்வளவு விரைவாகப் போர்க்களத்தில் காண்போம் என்று கபிலர் எண்ணவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு அவரை அருகில் சென்று வணங்கினார்.
அவரின் முகக்கவலையை உணர முடிந்தது. என்ன சொல்வதென்று சிந்தித்தபடி திசைவேழர், ``புலி முன் ஆடா... புலி முன் புலியா... புலி முன் யானையா என்பதை இணைந்து கண்டறியப் போகிறோமா?” எனக் கேட்டபடி இருக்கையில் அமர்ந்தார் திசைவேழர்.
முகத்தில் பரவிய சிறு சிரிப்போடு தனது இருக்கையில் அமர்ந்தார் கபிலர்.
திசைவேழர் அமர்ந்ததும் போர்விதிகளுக்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. ``இதுவரை வழக்கத்தில் உள்ள விதிமுறைகளைக் கூறுங்கள்” என்றார் திசைவேழர்.
குலசேகரபாண்டியனின் வலதுபுறமிருந்து முசுகுந்தர் எழுந்த அதே நேரத்தில் சோழவேழனின் பக்கத்தில் இருந்த வளவன்காரி கையில் ஏட்டுடன் எழுந்து முன்வந்தான்.
உள்ளே வந்து அமர்ந்ததிலிருந்து வாரிக்கையன் அவையில் உள்ள ஒவ்வொரு முகத்தையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். குழப்பமும் பதற்றமும் மிரட்சியுமாக முகங்கள் இருந்தன. மிகுந்த தெளிவோடு இருந்த ஒரே முகம் முசுகுந்தரின் முகம் மட்டுமே. குலசேகரபாண்டியன் இட்ட கட்டளைப்படி பேராசான் திசைவேழரின் ஒப்புதல் பெற்று அவரை அழைத்துவந்துவிட்டேன் என்ற மகிழ்வில் இருந்தார். ஆனால், தனக்கு எதிர்த்திசையில் இருந்த சோழநாட்டு அமைச்சன் வளவன்காரி கையில் ஏட்டோடு முன்னகர்ந்து வந்தது அவருக்குச் சற்றே அதிர்ச்சியாக இருந்தது. திரும்பி, பேரரசரைப் பார்த்தார். குலசேகர பாண்டியன் கையைக் காட்டி முசுகுந்தரை இருக்கையில் அமரச் சொன்னார். நம்ப முடியாத அதிர்ச்சியோடு பின்னிருக்கையில் போய் அமர்ந்தார் முசுகுந்தர்.
வளவன்காரி, போர்விதிகளைப் படிக்கத் தொடங்கினான்.

``போர்க்களம், எதிரியைக் கொன்றழிக்கும் உரிமையை ஒவ்வொரு வீரனுக்கும் வழங்குகிறது. ஆனால், அந்த உரிமைக்குச் சில கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் உண்டு. அதையே `போர்விதிகள்’ என்கிறோம்.
படை என்பது, இரு தரப்பானது. அதன் எண்ணிக்கை அவரவரின் வலுவைப் பொறுத்தது. எக்காரணம்கொண்டும் எண்ணிக்கையின் மீது இன்னொருவர் சம உரிமை கோர முடியாது.
போர்க்களம் என்பது, வெற்றி தோல்விகளைக் கண்டறியும் இடம். அதில் தீர்ப்பு சொல்ல யாரும் தேவையில்லை. வெற்றியோ தோல்வியோ, அதை அடைகிறவனுக்கு அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிடும். நிலைமான் கோல்சொல்லிகள், போரை விதிமீறாமல் நடத்திச்செல்வர்.
இப்போது சொல்லப்படும் விதிகள் எல்லாவற்றையும் மீறாமல் இருக்கவேண்டியது இரு தரப்பினரின் பொறுப்பு. மீறப்பட்டதாகக் கோல்சொல்லிகள் கூறினால் அதுவே முடிவு.
போர் என்பது, நாள்தோறும் கோல் சொல்லிகளின் அறிவிப்புடன் தொடங்கும். அவர்களின் அறிவிப்புடன் முடிவுறும். அறிவிப்புக்கு முன்னரோ, பிறகோ வானிலும் மண்ணிலும் போர்ச்செயல்பாடுகள் எதுவும் இருக்கக் கூடாது. அறிவிப்புக்கு முன் நாண் இழுக்கப்பட்டுவிட்டால், அந்த அம்பை மண்ணை நோக்கித்தான் எய்ய வேண்டும். முடிவுறும் ஓசைக்குப் பிறகு போர்க்களத்துக்குள் குதிரைகளைத் தாற்றுக்கோலால் அடித்து ஓட்டக் கூடாது. யானைகள் பிளிற பாகன்கள் அனுமதிக்கக் கூடாது. அந்தக் கணமே அனைத்தையும் நிறுத்துதல் வேண்டும்.
தாக்குதல் கண்டு புறமுதுகிட்டு ஓடுகிறவனையோ, கைகூப்பி வணங்குகிறவனையோ, அவிழ்ந்த தலைப்பாகையைச் சரிசெய்கிறவனையோ, ஆயுதம் இழந்தவனையோ தாக்கக் கூடாது.
காலாட்படை, காலாட்படையுடன்தான் மோத வேண்டும். அதேபோல குதிரைப்படையும் யானைப் படையும் தேர்ப்படையும் தன்மையொத்த படைகளுடன் மட்டுமே மோத வேண்டும்.
தேரை ஓட்டும் வலவனும் யானையைச் செலுத்தும் பாகனும் போர்க்களத்தில் இருந்தாலும் அவர்கள் போர்வீரர்கள் அல்லர். எனவே, அவர்கள் ஆயுதங்களைத் தொடக் கூடாது. அவர்களின்மேல் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது.
ஆயுதங்களில் விலங்கினங்களின் நஞ்சையோ, தாதுக்களின் நஞ்சையோ பயன்படுத்துதல் கூடாது.”
அதுவரை படிக்கப்படுவதைக் கேட்டுக்கொண்டிருந்த வேந்தர்கள் மூவரும் நஞ்சினைப் பற்றிக் கூறும்போது ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்தனர். இது பொதுவாக எல்லாப் போர்களிலும் உள்ள விதிதான். ஆனால், எந்தப் போரிலும் திசைவேழர் போன்ற மாமனிதர் நிலைமான் கோல்சொல்லியாக இருந்ததில்லை. எனவே, இந்த விதி படிக்கப்படும்போது சற்றே கலக்கமாக இருந்தது. எண்ணற்ற நஞ்சின் வகைகள் மூவேந்தர்களின் படைக்கொட்டில்களிலும் பயன்படுத்த ஆயத்தமாக இருந்தன.
நஞ்சினைப் பற்றிய பேச்சு வந்ததும் குலசேகர பாண்டியனின் நினைவு நேற்றைய நிகழ்வுக்குள் போனது. `எனக்குக் கொடுத்த சுவைநீரில் நஞ்சேதும் கலக்கப்பட்டிருக்குமோ? அதனால்தான் நான் நினைவுபிறழ்ந்தவனாக மாறினேனோ?’ என்று எண்ணினார். இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே கடந்தமுறை கபிலர் வந்தபோது கருங்குரங்கின் செயலைவைத்து சுவைநீரில் நஞ்சு கலந்துள்ளது என சேரன் பதறியது நினைவுக்கு வந்தது. தொடர்ந்து ஏதோ ஒரு முயற்சி இங்கே நடந்துவருகிறது என்ற எண்ணம் உறுதியானது. அது யாராக இருக்கும் என்ற சிந்தனைக்குள் இருந்து குலசேகரபாண்டியனால் எளிதில் வெளிவர முடியவில்லை.
போர்விதிகளை முழுமையாகப் படித்து முடித்த வளவன்காரி, இறுதியாக ``விதிகளுக்கு எதிராகப் போர்தொடுத்தல் பெருங்குற்றம். எந்தத் தரப்பு விதிகளை மீறிச் செயல்பட்டது என நிலைமான் கோல்சொல்லிகள் கூறுகின்றனரோ, அந்தத் தரப்பு தண்டனையைத் தாழ்ந்து பெறவேண்டும். இனி போருக்கான களத்தையும் போருக்கான காலத்தையும் நிலைமான் கோல்சொல்லிகள் அறிவிப்பர்” என்று முடித்தான்.
வேந்தர்களின் முகங்கள் பெருங்கலக்கத்தில் இருந்தன. முதல் நாள் இரவு குலசேகரபாண்டியன் சொன்னதே அனைவருக்கும் நினைவில் ஓடியது. `இந்தப் போரின் வெற்றியைத் தீர்மானிப்பதில் போர்க்களம் அமையப்போகும் இடத்துக்கு முக்கியப் பங்குண்டு’. தாங்கள் நினைத்த இடத்தில் களத்தைத் தேர்வுசெய்ய எல்லா ஏற்பாடும் செய்திருந்தார் குலசேகரபாண்டியன். ஆனால், இப்போது நிலைமான் கோல்சொல்லியாக வந்திருப்பது திசைவேழர். அவர் முடிவுசெய்யும் இடமே போர்க்களமாகப்போகிறது.
சற்றே கலக்கத்தோடு மற்ற வேந்தர்கள் குலசேகரபாண்டியனைப் பார்க்க, அவரது முகமோ பெருங்கலக்கம் கொண்டிருந்தது.
``நானும் கபிலரும் போர்க்களத்தைத் தேர்வுசெய்ய முன்செல்கிறோம். எங்களின் அழைப்பு வந்ததும் இருதரப்புத் தளபதிகளும் வருக. அதன் பிறகு மற்றவர்கள் வரலாம்” என்று சொல்லி விட்டு வெளியில் நின்றிருந்த தேர் நோக்கி நடந்தார் திசைவேழர். பின்தொடர்ந்தார் கபிலர்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...