சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியங்கள்: செந்தில்

சொல்வனம்

அரூப ஊஞ்சல்

சடை சடையாய் விழுதுகள் தொங்க
ஆலமரங்கள் எதிர்ப்படும் சாலைகளில்
பயணிக்க நேரும்போதெல்லாம்
என்னிடமிருந்து கழன்றுகொள்ளும்
இளவயதுக் குறும்புக்காரி
அரூபமாய்த் தன் தோழிகளையும்
வரவழைத்துக்கொண்டு
ஊஞ்சலாடத் தொடங்கிவிடுவாள்.
குட்டிக்குட்டி விழுதுகளாய்
ரெட்டைஜடை அசைந்திட
முன்னும் பின்னுமாய்க் காற்றில்
மிதக்கத் தொடங்கிவிடுவோம்.
பறவைகளின் ஒலியொத்த
எங்களின் குதூகலக் குரல்கள்
வெளியெங்கும் எழும்பி நிறையும்.
இதற்கு முன் இவ்வாறு
ஆடியவர்களின் மாய பிம்பங்கள்
மனக்கண்ணில் மங்கலாய்த் தெரியும்.
இப்போதெல்லாம்
சாலை விரிவாக்கத்தில் சாய்க்கப்பட்ட
மரங்களைப் போலவே
அரூப ஊஞ்சல் ஆசையையும்
வேரோடு பிடுங்கியெறிந்து செல்லப்
பழகிக்கொள்கிறாள்.

- தி.சிவசங்கரி

சொல்வனம்

அவள்

கையளவு வானம் பூத்திருக்கும்
குளத்தங்கரையில்
புறாவின் சிறகு உலர்த்திய நீர்த்துளி
விழுவதில் துளிர்க்கிறது
மகிழ்நிலாவின் முகம்
அவள் தவளைக் கல்லெறிந்த
இந்தக் குளத்தில்
மீன்கள் அப்போதுபோலவே
இப்போதும் துள்ளிக் குதிக்கின்றன
கொக்குகளும் தட்டான்களும் வந்தமர்கின்றன
அடிவயிற்றிலிருந்து
மேலெழும்பும் குமிழ்களைப்போலோர்
உணர்வினைத் தரும் சின்னஞ்சிறு குமிழ்கள்
நீரின் ஆழத்திலிருந்து மேற்பரப்பில் வந்து
வெடிக்கின்றன
தலை கோதும் அவளின் ஸ்பரிசங்களும்
மூக்கை இழுத்து சேட்டைசெய்யும்
குறும்புத்தனமும்
ஒவ்வோர் இதயத்துடிப்பிற்கு இடையிலும்
வந்து வந்து போகின்றன
ஒரு பெருங்காட்டினை உள்ளடக்கிய
படர்மரத்தை நெடுஞ்சாலை
அமைக்கும் சாக்கில் பிடுங்கியெறிவதுபோல்
சாலையோரம் நின்றிருந்தவளை
அந்த அகோர வாகனம்
நசுக்கித் தூக்கி வீசிய இடத்தில்
துளிவிழுந்தெழும்
சிற்றலை எனக் குமுறுகிறது நெஞ்சம்.

  - கிருபா

சொல்வனம்

ஞாபகத் துயர்

யானைகளை மட்டும் விட்டுவிடுமா?
இந்த ஆற்றில்தான்
அதன் அந்திக் குளியல்

இந்தப் படித்துறைகள்தான்
அதன் புத்துணர்வு முகாம்கள்

பார்த்தேயிராத பகவானுக்காய்க்
குடத்தில்  சுமக்கையில்
இதன் பெயரே தீர்த்தங்கள்!

ஹோஸ் பைப் நீராடலும் 
ஷவர் குளியல் அபத்தங்களும்  
நீச்சல்குள அனுபவங்களும்
வாய்க்கப்பெற்ற
பரிதாபமான நவயுக யானையொன்று

வறண்டுபோன ஆற்றின்
மணலை அள்ளித்
தலையில் போட்டுக்கொண்டு 
நினைவின் நதியில் நீராடும்போது

பாழாய்ப்போன பழமொழி சொல்லும்
பைத்தியங்கள், அந்தப் பக்கமாய் வராதீர்கள்!

- ரா.பிரசன்னா

சொல்வனம்

ஊடலின் முடிவு

ஒரு சிறு சண்டைக்குப் பிறகான
கட்டாய இருசக்கரப் பயணம்...

இருபக்கம் கால்கள்
போட்டமரும் வழக்கம் மாறி
ஒரு பக்கமாய் அமர்கிறாய்...

வழக்கமான தோள் பிடியின்றி
கம்பிகளைக் கெட்டியாய்ப்
பிடித்துக்கொள்கிறாய்...
இருவருக்குமிடையேயான
இருக்கையின் இடைவெளியில்
ஒரு சிட்டுக்குருவி பறந்து போகிறது...

பக்கவாட்டுக் கண்ணாடியை
உன் முகம் பார்க்கத் திருப்பினால்
அதைப் பார்த்து நீ திரும்பிக்கொள்கிறாய்.

வாகன இரைச்சல்கள் மத்தியில்
உன் மெளனங்களை
உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கின்றன
என் காதுகள்.

திடீரெனக் குறுக்கே ஓடிவரும்
நாயைக் கண்டு அனிச்சையாய்
``பார்த்துங்க” என்ற உன் ஒற்றைச் சொல்
உடைத்தெறிந்துவிடுகிறது
மொத்த ஊடலையும்...

மெள்ள மீண்டெழுகிறது
மொத்த நேசமும்!

- பிரபுசங்கர்