
தமிழ்மகன், தமிழ்ப்பிரபா - படங்கள்: க.பாலாஜி

80களில் தமிழர்களுக்கு இருந்த இரண்டு முக்கியமான பொழுதுபோக்குகள் தமிழ் சினிமாவும் தூர்தர்ஷனும். இன்று நாள்தோறும் பிரேக்கிங் நியூஸ், பிக் பிரேக்கிங் நியூஸ், ஃப்ளாஷ் நியூஸ் எல்லாம் ஓடினாலும் அன்று தூர்தர்ஷனில் ஒருநாளில் ஒரே ஒருமுறை செய்தி வாசிப்பவர்களுக்கு அவ்வளவு மவுசு! அன்றைய டிவி செய்தியாளர்களைச் சங்கமிக்கவைத்தோம். ஒவ்வொருவருக்கும் உற்சாகமோ உற்சாகம்!
வரதராஜன்: “1972-ல நாங்க பம்பாய்ல இருந்தோம். முதல்முறையா அங்கேதான் டிவி-யைப் பார்த்தேன். அப்போ ஞாயிற்றுக்கிழமையில நேஷனல் நெட்வொர்க் சேனல்ல `இருகோடுகள்’ படம் பார்த்துட்டிருந்தப்போ `இந்த டிவியெல்லாம் தமிழ்நாட்டுக்கு வருமான்னே தெரியலை’னு சொல்லிட்டிருந்தேன். பார்த்தா, 1975-ல தமிழ்நாட்டுக்கு டிவி வந்துடுச்சு. அப்புறம் 1977-ல டிவி-யில நானே வந்தேன். `எதிரொலி’க்கு, தொடர்ந்து கடிதங்கள் எழுதுவேன். அப்போ ஒருமுறை, `எனக்கும் செய்திகள் வாசிக்கணும்னு ஆர்வமா இருக்கு. வரலாமா’னு கேட்டிருந்தேன். ஒரு மாசம் கழிச்சு தூர்தர்ஷன்ல இருந்து என் வீட்டுக்கு அப்ளிகேஷன் வந்தது. ஃபில் பண்ணி அனுப்பினேன். ரெண்டு மாசம் கழிச்சு ஆடிஷன் நடந்தது. 42 பேர் கலந்துகிட்டாங்க. அதில் நான் மட்டும்தான் தேர்வானேன்.”

செந்தமிழ் அரசு: “ `உழைப்பவர் உலகம்’னு ஒரு நிகழ்ச்சி, தூர்தர்ஷன்ல பண்ணிட்டிருந்தேன். எனக்கு நியூஸ் படிக்கிறதுலதான் ஆர்வம் அதிகம். ஷோபனா ரவி, ஈரோடு தமிழன்பன், வரதராஜன் இவங்கெல்லாம் படிக்கிறதைப் பார்த்து ஆர்வப்பட்டு, 1980 அக்டோபர் 25-ம் தேதி நியூஸ் படிக்க வந்தேன். நான் செய்தி வாசிச்ச அந்த நாள் மறக்க முடியாதது. `திரு. மு.கருணாநிதி வந்தார்; திரு. எம்.ஜி.ஆர் சென்றார்’னு சொன்ன வேகத்திலேயே இந்திரா காந்தியையும் `திரு.இந்திரா காந்தி’னு சொல்லிட்டேன். அவ்ளோதான் முடிஞ்சது நம்ம வேலைன்னு வெளியே வந்து தயங்கிக்கிட்டே என் புரொடியூஸர் வீரராகவன்கிட்ட ‘இந்த மாதிரி சொல்லிட்டேன்’னு சொன்னபோது, `அப்படியா சொன்னீங்க... எனக்கே தெரியலையே! போகட்டும் இனிமே சரியா படிங்க’னு சிரிச்சுட்டே அனுப்பினார்.”
சந்தியா ராஜகோபால்: “நான் டெல்லியிலதான் இருந்தேன். எனக்கு செய்தி வாசிப்பாளரா ஆகணும்னு எந்தக் குறிக்கோளும் இல்லை. ஆனா, என் ரிலேஷன்ஸ் நிறையபேர் டெல்லி ஆல் இண்டியா ரேடியோவுலயும் தூர்தர்ஷன்லயும் இருந்தாங்க. நியூஸ் ரீடர் மினு தல்வார், எங்க காலனியில இருந்தாங்க. அவங்க டிரெஸ் பண்ணிட்டுப் போறதைப் பார்க்கிறதுக்காகவே ஃப்ரெண்ட்ஸெல்லாம் காத்துட்டிருப்போம். என் கணவருக்கு ஜாப் டிரான்ஸ்ஃபர் கிடைச்சு சென்னைக்கு வந்தோம். நாங்க சென்னையில இருந்த வீடு ஷோபனாவோட சொந்தக் காரங்களோடது. அவங்க என்னைப் பார்த்து `நீ டிவி ஷோ பண்ணலாமே!’னு சொல்லிச் சொல்லி உசுப்பு ஏத்தினாங்க. `நீ வொண்டர் பலூன் ஷோ பண்ணலாமே’னு சொல்லிட்டே இருப்பாங்க. ஒருமுறை ஷோபனாவை அறிமுகப்படுத்தினாங்க. அப்படியே அவரோடு பழக்கம் ஏற்பட்டு, 1981-ல நான் செய்தி வாசிக்க வந்தேன்.”

ஃபாத்திமா பாபு: “என் சொந்த ஊரு புதுச்சேரி. நிறைய ரேடியோ நாடகங்களுக்குக் குரல்கொடுப்பேன். அந்தச் சமயம் புதுச்சேரி ஆல் இண்டியா ரேடியோவுல செய்தி வாசிச்சுட்டிருந்த ஒருத்தர், லாங் லீவுல போயிட்டார். ஒரு நல்ல குரல் தேடிட்டிருந்தப்போ எனக்கு வாய்ப்பு கிடைச்சது. லைவா செய்தி வாசிக்கிற அனுபவம் ரொம்பவே த்ரில்லிங்கா இருக்கும். ரேடியோவுல செய்தி வாசிச்சுட்டிருந்தப்போ, ஷோபனா மேடத்தின் நண்பர் ஒருத்தர் `நீங்க ஏன் டெலிவிஷன்ல செய்தி வாசிக்க முயலக்கூடாது?’னு கேட்டார். எனக்கும் ஆர்வம் வந்தது.
சென்னைக்குப் போகணும்கிறதுக்காக, சென்னையில மட்டுமே இருக்கிற படிப்பைத் தேடி ஸ்டெல்லா மாரீஸ்ல MSW சேர்ந்தேன். ஆனா, அந்த ஹாஸ்டல்ல `6 மணிக்குமேலே யாரும் வெளியே போகக் கூடாது’னு ரூல். நியூஸ் வாசிக்கிற நேரமே 6 மணிக்குமேலதான். சென்னை வந்தும் யூஸ் இல்லாமப்போச்சு. இதுக்கு நடுவுல இந்தியன் ஆயில்ல கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. படிப்பை விட்டுட்டு வேலையில சேர்ந்தேன்.
1987-ல சென்னை தூர்தர்ஷனுக்கு வந்தேன். அங்கே யாரையுமே தெரியாது. உள்ளே வேலைசெய்ற தெரிஞ்சவங்க பேரைச் சொல்லிப் போயிட்டேன். போயி அப்ளிகேஷன் வாங்கி ஃபில் பண்ணி ஆடிஷன்லயும் செலெக்ட் ஆகிட்டேன். செலெக்ட் ஆன அன்னிக்கு லிஃப்ட்ல இருந்து வெளியே வந்த ஷோபனா மேடத்தைப் பார்த்த உடனே, ப்பா... எவ்ளோ சந்தோஷம் எனக்கு! அப்படியே ஸ்டன் ஆகிட்டேன். அவசரமா அவங்ககிட்ட போயி, என் உள்ளங்கையிலேயே ஆட்டோகிராப் வாங்கினேன். Unforgettable day!’’
ஷோபனா ரவி: “ஷோபனாவைப் பற்றி ஷோபனா ஏதாவது சொல்லலாமா... (அனைவரும் உரக்கச் சிரிக்க) எல்லாரும் மீட் பண்ணி ஜாலியா பேசலாம்னு சொல்லிட்டு, என்னைப் பற்றி மட்டுமே பேசிட்டிருக்கிறது என்ன நியாயம்?”
செந்தமிழ் அரசு: “செய்தி வாசிப்பாளர்களுக்கு நீங்கதானே முன்மாதிரி. உங்ககிட்ட இருந்துதானே ஆரம்பிக்க முடியும்?”

ஷோபனா ரவி: “1975 சமயம். `செய்தி வாசிக்க, ஆளே இல்லை’னு வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்த அம்மா ஒருநாள் புலம்பிட்டிருந்தாங்க. அப்போ நான் எட்டு மாசம் கர்ப்பமா இருந்தேன். `நான் வேணும்னா வரட்டுமாம்மா?’னு கேட்டேன். `வேணாம் வேணாம். நான் அங்கே வேலை செய்றேன். நீயும் வந்தா சரியா இருக்காது’னு மறுத்துட்டாங்க. ஆனா, எனக்கு ஆர்வம் இருந்தது. கொஞ்சநாள் கழிச்சு அங்கே நடந்த ஆடிஷன்ல அம்மாவுக்குத் தெரியாம கலந்துகிட்டேன். அம்மாகூட வேலை செய்றவங்க என்னைப் பார்த்துட்டாங்க. என் பேரு வீட்ல ஷீலா. `என்ன ஷீலா... இங்கே என்ன பண்ணிட்டிருக்க?’னு கேட்க, பயத்துல உளறினேன். அம்மாகிட்ட கூட்டிட்டுப்போய் விட்டாங்க. ஆனா, எல்லா ரவுண்டுலயும் செலெக்ட் ஆகிட்டுதான் அவங்க முன்னாடி போய் நின்னேன். அவங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அப்படி ஆரம்பிச்சதுதான் என் செய்தி வாசிப்பாளர் வாழ்க்கை.”
வரதராஜன்: “அதிகமா மரணச் செய்திகள் படிச்ச ஒரு சோக வரலாறு எனக்குண்டு. கே.பி. சுந்தராம்பாள் இறந்த சமயம் என் ஆபீஸ் நண்பர்கள்கிட்ட சொல்லிட்டிருந்தேன். `இன்னிக்குச் செய்தி வாசிக்கப்போறது நான் இல்லை. ஷோபனாதான்’னு சொல்லி முடிக்க, அவங்ககிட்ட இருந்து என் ஆபீஸ் லேண்ட் லைனுக்கு போன். `வரதா, தொண்டை சுத்தமா சரியில்லை. ப்ளீஸ்... எனக்காகப் படிச்சுடு’னு சொல்ல, அன்னிக்கும் நான்தான் மரணச்செய்தி வாசிச்சேன்.”

சந்தியா ராஜகோபால்: “எம்.ஜி.ஆர் இறந்ததைச் செய்தியா வாசிச்ச அனுபவத்தைச் சொல்லுங்க வரது சார்.”
வரதராஜன்: “நான் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன். அவர் உடல்நிலை சரியில்லாத சமயத்துல அதைப் பற்றி ஒரு செய்தி வந்தது. நான் அதைப் படிக்கிறப்போ எங்க, அவர் இறந்து போயிடுவாரோனு அந்தச் செய்தி வாசிக்கிறதையே தவிர்த்தேன். ஏன்னா, என் ராசி அப்படி! அவர் முடியாம இருந்த நாள்ல எல்லாம் நியூஸ் வாசிக்கிறதையே அவாய்ட் பண்ணிக்கிட்டிருந்தேன். ஆனா, அவர் இறப்புச் செய்தியையும் நான்தான் வாசிக்கவேண்டியதா போச்சு. எனக்கு அப்போ கை உடைஞ்சிருந்த சமயம். என் நண்பரோடு டூவீலர்ல தூர்தர்ஷனுக்குப் போறேன். வழியெல்லாம் ஒரே கலவரம். அடிக்க வந்தவங்ககிட்ட எல்லாம் `செய்தி வாசிக்கத்தாங்க போறேன்’னு சொல்லிட்டு ஸ்டுடியோ வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. என் உயிருக்கு உயிரான தலைவர் இறந்த செய்தியை என் வாயாலேயே சொன்ன நாள் என்னால மறக்கவே முடியாது. என்னையும் மீறி வாசிக்கும்போதே கண்ணு கலங்கிட்டேன்.”
ஷோபனா ரவி: “ஏறத்தாழ 25 வருஷம் செய்தி வாசிச்சிருக்கேன். இன்னிக்கு செய்தி வாசிக்கிறவங்க நிறைய மெனக்கெடணும். நம்மள எப்படி பிரசென்ட் பண்ணணுங்கிறது எவ்ளோ முக்கியமோ, அதே அளவுக்கு வார்த்தை உச்சரிப்பையும் கவனமா கையாளணும்.”
சந்தியா ராஜகோபால்: “எப்படி கம்மல் போடணும், எந்த மாதிரி டிரெஸ் போடணும், உடல்மொழி எப்படி இருக்கணும்னு அப்போ எங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்துச்சு!”
செந்தமிழ் அரசு: “என்னதான் உங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் நீங்கள்லாம் டிவியில செய்திகள் வாசிக்கும்போது எல்லாரும் நியூஸ் பார்க்கிறாங்க. வரதராஜன், நான், ஈரோடு தமிழன்பன் எல்லாரும் வாசிக்கிறப்போ `நியூஸ் கேக்குறாங்க’னு எங்களுக்குள்ளேயே வேடிக்கையா சொல்லிப்போம்.”

வரதராஜன்: “எல்லார் வீட்லயும் ஷோபனா ரவி என்ன புடவை கட்டியிருக்காங்க, என்ன கம்மல் போட்டிருக்காங்கனுதான் பெரிய டிஸ்கஷனே நடக்கும். எங்களை யாருமே கண்டுக்க மாட்டாங்க. அப்போல்லாம் ஒரே ஒரு செய்தி சேனல்தான் இருந்தது. நாட்டுநடப்பு என்னன்னு நாங்க சொல்றதுதான் செய்தியே. இப்போ 24 மணி நேரமும் செய்தி கேட்டுட்டிருக்கோம். இப்போல்லாம் நியூஸுக்கே வேல்யூ இல்லாமப்போச்சு.”
ஃபாத்திமா பாபு: “அப்போல்லாம் டிவி செய்தி வாசிக்கிறவங்களை வெச்சு நிறைய காஸிப் வரும். மு.க.ஸ்டாலின் என்னை கார்ல துரத்திட்டு வந்ததா ஒரு வதந்தி கிளம்ப, நானும் என் கணவர் பாபுவும் சேர்ந்து பேப்பர்ல படிச்சுதான் அதைத் தெரிஞ்சுகிட்டோம். அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கவே இல்லைனு என் குடும்பத்துக்கோ, நண்பர்களுக்கோ தெரியும்னாலும் இன்னிக்கு வரை அது என்னைத் தொடர்ந்துட்டே இருக்கு. ஆனாலும் சோர்ந்துபோகலை. அப்ப தூர்தர்ஷன் ஸ்டேஷன் டைரக்டர் ஒண்ணு சொன்னார்... `இது, உன் புகழுக்குக் கிடைச்ச விலைனு நினைச்சுக்கோ.’ அன்றைக்கு செய்திவாசிப்பாளருக்கு எவ்வளவு மவுசு இருந்ததுன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு இது ஓர் உதாரணம்.”
செந்தமிழ் அரசு: “வானிலை அறிக்கை வாசிச்சுட்டு அடுத்த நாள் எங்கேயும் நடமாட முடியாது. இப்போ இருக்கிற துல்லியமான வானிலைத் தகவல்கள் அப்போ கிடையாது. நாம சொல்ற அன்னிக்கு மழையே வராது. நாம எங்கேயாவது நல்லது கெட்டதுக்குப் போனா, `என்ன சார்... மழை வரும்னு சொன்னீங்க, வரவே இல்லை!’னு வறுத்தெடுப்பாங்க.”

வரதராஜன்: “ஒருதடவை கடுமையான மழை. யாருமே நியூஸ் வாசிக்க வரலை. ரோடு முழுக்க வெள்ளம். நான் அப்போ திருவல்லிக்கேணியில இருந்ததால, என்னை எப்படியாவது வரச் சொல்லிட்டாங்க. அன்னிக்கு என்கிட்ட கொடுத்த செய்தியில `இன்றோ, நாளையோ இடியுடன்கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்’னு இருந்தது. `வானிலை ஆராய்ச்சி நிலையத்துல இருந்து அப்படித்தான் கொடுத்திருக்காங்க. நாம மாற்ற முடியாது’னு சொல்லிட்டாங்க. இதை வாசிச்சு முடிச்சதும் கொஞ்சம் இடைவெளி விட்டு... `பெய்யக்கூடும் என்ன... இப்போதே பெய்துகொண்டு தானிருக்கிறது’னு சொல்லிட்டேன். டைரக்டர் என்ன சொல்வாரோங்கிற பயம். அப்போ டைரக்டரா இருந்தது எழுத்தாளர் சு.சமுத்திரம். செய்தி முடிந்ததும் ஓடிவந்து அணைச்சுக்கிட்டார்.”
எல்லோரும் நினைவுகளை அசைபோட்டு நெகிழ்ச்சியுடன் கிளம்பும்போது ``இந்தச் செய்தி அறிக்கை இத்துடன் நிறைவுபெற்றது” என ஷோபனா ரவி சொல்ல, அனைவரும் சிரித்தனர்.