
ஜி.கார்ல் மார்க்ஸ் - ஓவியங்கள்: ஸ்யாம்
ராமமூர்த்தி அந்த வீட்டை நெருங்கி அதன் வெளிப்புற இரும்புக் கதவின் மீது கைவைத்து உள்ளே பார்த்தார். தாழ்வாரமும் கார் நிறுத்துமிடமும் ஆளரவமற்று இருந்தன. அது ஒரு தனித்த, அலுவலர்கள் குடியிருப்பாக இருந்தது. கதைவைப் பற்றியபடி சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றவர், பிறகு வலது கையை உள்ளே விட்டு கதவின் கொண்டியைச் சுழற்றினார். மெல்லிய உராய்வுடன் அது விலகியது.
நடந்து உள்ளே போய், நிலைக்கதவை ஒட்டியிருந்த அழைப்புப் பொத்தானைத் தயக்கத்துடன் அழுத்தினார். அது அந்தச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் ட்ரிங்... எனும் பழைய தொலைபேசி ஒலியைப் போன்ற, நீண்ட நாராசமான சப்தத்தை உள்ளே எழுப்பியது. அவ்வொலி அவரது மண்டைக்குள் ஊடுருவியது. அதன் கூசச்செய்யும் அதிர்வு, ஒலிப்பான் நின்ற பிறகும் தொடர்ந்தது.
வீட்டின் உள்ளிருந்து மெல்லிய சரசரப்புடன் ஆள் நடந்து வரும் சப்தம் கேட்டது. வசந்தாவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். அவர் நின்ற இடத்திலிருந்து நிலைப்படி ஓர் அடிக்கு மேல் உயரம் இருந்தது. கதவைத் திறந்தவள், கெச்சலான உடம்புடன், புடவையை உயர்த்திக் கட்டியபடி, கைகளில் மினுங்கும் ஈரத்துடன் இருந்தாள்.

“யாருங்க....?”
‘வசந்தாவா இது... அவளா இப்படி மாறிப்போய் விட்டாள்...’ என்று மனதிற்குள் தோன்றியதை அவசரமாக நிராகரித்தார்.
“ம்ம்... சுப்ரமணியன் வீடுதான இது...?”
“ஆமாங்க, அவரு ஆபீஸ் போய்ட்டாருங்களே....”
அவளது பதில் ஏன் இப்படி நறுக்கென்று முடிகிறது என்று அவருக்குப் புரியவில்லை. அது அவ்வாறே பேசிப் பழகும் நகரத்தின் தொனியாக இருக்கலாம் என்று நினைத்தார். அவள் சொல்லிவிட்டு அவரது முகத்தைப் பார்த்தாள். “வீட்டில் வேறு யாரும் இல்லையா...” என்று கேட்கலாமா என அவர் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போது அவரது வாய் “வசந்தா வீட்லதான இருக்கு...?” என்று கேட்டது. அந்தக் கேள்வி அவரைவிட உயரமாக நின்றுகொண்டிருந்த வளைக் கொஞ்சம் இறக்கியது.
“அவங்க வீட்லதான் இருக்காங்க.... அந்த பெஞ்சில உக்காருங்க..” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். அவள் அந்தக் கூடத்தைக் கடந்து உள்ளே போனதும் மீண்டும் அந்த வீடு ஆழ்ந்த அமைதிக்குள் உறைந்தது. அவள் கைகாட்டிய இடத்தில் மரப்பலகையொன்று இருந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து அந்த வழவழப்பான பெஞ்சில் போட்டுவிட்டு அப்படியே அதில் உட்கார்ந்தார். நிலைப்படியில் அழகுக்காகக் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பட்டி அவரது கவனத்தை ஈர்த்தது. அதில் வெண்மணிகளும், பிளாஸ்டிக் ரோசாக்களும் ஒரு வெல்வெட் துணியின் மீது கோக்கப்பட்டு, அது அந்தப் பட்டியில் சேர்த்துக் கட்டப்பட்டு, அதுவொரு மாலையைப்போல நிலையின் மீது தொங்கவிடப்பட்டிருந்தது.
காற்றில் அந்த மணிகள் அசையும் ஒலி, பரத்தி வைக்கப்பட்டிருக்கும் காய்ந்த நெல்மணிகளின் மீது கொலுசுக்காலுடன் குழந்தைகள் அலைந்து விளையாடும் சப்தத்தை நினைவூட்டியது. சுவரில் பூசப்பட்டிருந்த அடர் வண்ணத்தையும் அது வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தை வடிகட்டி சூழலைக் குளுமையாக்கி விடுவதையும் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
மீண்டும் வீட்டின் உள்ளே பார்த்தார். யாரும் வருவதற்கான சுவடில்லை. இருப்பு கொள்ளவில்லை. எழுந்து நடைபாதையைக் கடந்து மீண்டும் வெளிப்புறக் கதவுக்கு வந்தார். அதைப் பற்றிக்கொண்டு வீட்டின் இரண்டு பக்கமும் பார்த்தார். வீட்டின் வலது பக்கத்தில் ஒரு புங்கை உயர்ந்திருந்தது. அடர்த்தியாக இருந்தாலும் இளம் மரம். அதைச் சுற்றி எந்தத் தாவரங்களும் இல்லாமல் தரை, திட்டுத்திட்டான புற்களுடன் இருந்தது. ஆனால் வீட்டின் இடது பக்கத்தில் முழு வீச்சிலான தோட்டம் வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டிருந்தது.

தோட்டத்தின் நடுவே இரண்டு துளசிச் செடிகள் அடர்த்தியான இலைகளின் சுனையோடு இருந்தன. அதற்கு அடுத்து காம்பவுண்டின் ஓரத்தில் கறிவேப்பிலை மரம் ஒன்று நெடுநெடுவென உயர்ந்து அடுத்த வீட்டிலும் கிளைகளை நீட்டியிருந்தது. குத்துக் குத்தாக டிசம்பர் மற்றும் கனகாம்பரச் செடிகள் இருந்தன. பிசிர்களற்ற புது எருக்கம் கயிற்றைப்போல நீர் பீய்ச்சும் ரப்பர்க்குழாய் தோட்டத்தினூடே நெளிந்துகிடந்தது. அதன் ஒரு முனை சுவரில் பதிக்கப்பட்டிருந்த திருகுக் குழாயில் பிணைக்கப்பட்டிருந்தது. சீரான இடைவெளியில் அதிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. அந்தத் திருகைச் சுற்றிலும் அதன் கீழே உள்ள சுவரிலும் கரும்பச்சையில் பாசி, ஒரு சீரற்ற கோட்டைப்போல வழிந்து தரையைத் தொட்டிருந்தது. அது முடியும் இடத்தில் அறுகம்புல் வளர்ந்து தழைத்திருந்தது. எப்போதும் சொட்டிக்கொண்டே இருக்கும் நீர் அறுகம்புல்லிதழின் நீளத்தையும் அகலத்தையும் கூட்டி, குத்திட்டு நிற்கும் அதன் இயல்புக்கு மாறாக அதைக் காற்றில் அசையச் செய்திருந்தது.
அந்த அறுகம்புல் திட்டை ஒட்டி, ஏழெட்டு வாழைக்கன்றுகள் வாழை ஆக்கையால் கட்டி சுவரின் ஓரமாக வைக்கப்பட்டிருந்தன. பதிப்பதற்காக, வேரை ஒட்டித் தண்டு சீவப்பட்ட வாழைக்கன்றுகள். அப்போதுதான் அகழ்ந்து எடுக்கப்பட்ட உருண்டைக் காவள்ளிக் கிழங்கைப் போல இருந்த அதன் வேர்ப்பகுதியின் கறுப்பு, தொடங்கிய இடத்தில் சீவப்பட்டிருந்த தண்டில் ஒளிரும் பச்சையால் மட்டுப்பட்டிருந்தது.
“கட்டுல இருக்கிறதுல ரெண்டு மூணு மொந்தங்கன்னா இருக்கும்போலயே...” என்று நினைத்தார். “அறுவம்புல்லுக்குத் தண்ணி வுடுற மாதிரி அதுக்கும் வுட்டா, தாரு போடுறதுக்கு முன்னாடியே தென்ன மரம் மாதிரில்ல வளந்து நிக்கும்...” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார். “புங்க மரத்துக்கு இந்தப் பக்கம், நடைபாதைக்குக் கொஞ்சம் தள்ளி மர நிழல் தொடாத எடத்துல ஊனுனா நல்லா வளரும்...” என்று தோன்றியது. “ஆனா வளந்துச்சுன்னா தோகை நடபாதைக்கு வரும்தான்...” என்றும் தோன்றியது.
மீண்டுமொருமுறை நிலைக்கதவின் பக்கம் பார்த்தார். சுப்ரமணி வேலைக்குப் போயிருப்பாருதான்... வசந்தாவைத் தவிர வீட்டில் வேறு யாரும் இல்லையோ... என்று நினைத்தார். அவளுக்குக் கல்யாணம் கட்டிக்கொடுத்த வருஷத்தை நினைத்துப் பார்த்தால், அவளின் குழந்தைகள் இந்நேரம் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கவேண்டும் என்று மனது தோராயமாகக் கணக்கு போட்டது. அவளுக்குப் பிறகு பத்து வருஷம் கழித்துக் கல்யாணம் ஆன நமக்கே இன்னும் ரெண்டு வருடத்தில் கல்லூரிக்குத் தயாராகும் மகன் இருக்கிறானே என்று அதை ஒப்பிட்டுப் பார்த்தார். மகள்கள் குறித்து வந்த சிந்தனையை அவசர அவசரமாகத் தவிர்த்தார். வேண்டாம், இப்போது அதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று அகம் இறைஞ்சியது. அது இப்படியே வளர்ந்தால், அவர்களின் அம்மாவிடம் கொண்டு போய் நினைவை நிறுத்தும். வேண்டாம்... என்று நினைத்தார்.
“கொண்டுபோய் நிறுத்தட்டுமே...” என்கிற அகம்பாவமும் கூடவே வந்தது. எப்போதெல்லாம் அத்தகைய ஆத்திரம் வருகிறதோ, அப்போதெல்லாம் அது கழிவிரக்கமாக நிறைந்து மேலும் குமைச்சலுக்குத்தான் தம்மை ஆளாக்குகிறது என்று நினைத்தாலும், அந்தக் குறைந்தபட்ச ரௌத்திரம்தான் சிந்தனையைக் கட்டுக்குள் வைத்து மனதின் சமநிலைக்கு உதவுகிறது என்றும் நினைத்தார்.
அப்படி நினைக்கும்போது தான், ‘இப்போது எதற்காக வசந்தாவைப் பார்க்க வந்திருக்கிறோம்?’ என்ற கேள்வி அவர் முன் வந்து நின்றது. திரும்பி வீட்டின் நிலைப்படியை மீண்டும் பார்த்தார். இன்னும் அவள் வரவில்லை. இப்படியே கதவைத் திறந்துகொண்டு மீண்டும் வந்த வழியே திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தார்.

அப்படி யோசித்த அந்த கணத்தில், அவர் இப்போது நிற்கும் இந்தக் கதவுக்கும் அவர் கொஞ்ச நேரம் முன்பு உட்கார்ந்திருந்த அந்த மரப்பலகைக்குமான இடைவெளி அவரது பால்யத்துக்கும் இப்போது வந்து நிற்கும் முதுமையின் வாசலுக்குமான தூரத்தைப்போல நீண்டிருந்தது. மட்டுமல்ல, நேற்றிலிருந்து தோன்றிக்கொண்டே இருக்கும் ‘அடுத்து என்ன செய்யப்போகிறோம்’ என்கிற வாழ்வின் நிலையாமைக்கும், வங்கிப் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்த சுப்ரமணிக்கும், அதே காலத்தில் வசந்தாவுக்குக் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த தனக்குமான இடைவெளியைப் போல மிக நீளமானதாகவும் பெரும் அபத்தம் நிறைந்ததாகவும் இருந்தது. தாம் உட்கார்ந்திருந்த பெஞ்சை உற்றுப் பார்த்தார். அந்த பெஞ்சின் வழவழப்பிற்கு சற்றும் பொருத்தமில்லாத சருகு போன்ற தன்மையுடன் அவரது துண்டு அங்கே இருந்தது. தன்னையே தூரத்தில் இருந்து பார்ப்பது போல அப்போது அது அவருக்குத் தோன்றியது.
திடீரெனப் புங்கை தன் கிளைகளை அசைத்தது. எட்டி, தெருவில் பார்த்தார். காற்று கொஞ்சம் கூடுதலாக வீசியது. அதன் வீச்சில் குளுமை கூடியிருந்தது. இல்லை... இப்படி ஒரு குளிர்ந்த காற்று நமது வீட்டிலோ வயலிலோ வீசவில்லை என்று நினைத்தார். இந்த வருடமும் ஆற்றில் தண்ணீர் வராது என்று தெரிந்துவிட்டது. இருக்கும் ஒரு ஆயில் இன்ஜினை வைத்துக்கொண்டு, தண்ணீர் வராத போது இடையில் சமாளித்துக்கொள்ள முடியுமே தவிர, முழு விவசாயத்தையும் அதை நம்பிச் செய்ய முடியாது. கட்டுப்படியாகாது. தொடர்ந்து மூன்றாவது வருடமாக விவசாயம் பொய்க்கிறது. இப்போதுகூட வயலில் விளையும் நெல், சாப்பாட்டுக்கு மட்டும்தான் ஆகிறது. மீதி நாள்களில் வேலைக்குத்தான் போக வேண்டியிருக்கிறது. முழு விவசாயமும் பொய்த்துப் போனால், வெறும் கூலியாளாகச் சுருங்க வேண்டியிருக்கும். சொற்ப வயலாக இருந்தாலும், தன் வயலில் பயிரிட்டுவிட்டு ஓய்வு நேரத்தில் வேலைக்குப் போவது போன்ற கற்பிதத்தில் இருக்கும் ஆசுவாசம், முழுக்கூலியாளாக வேலைக்குப் போவதில் இல்லை. வேறு எந்த வேலைக்குப் போவது என்று அவருக்குத் தெரியவில்லை. விவசாயம் குறைந்துகொண்டே போகும் வேகமும், வீட்டின் செலவினங்கள் கூடிக்கொண்டே போகும் வேகமும் சம அளவில் இருந்தன. சொந்த ஊரில் இனி வாய்ப்பே இல்லை. வேறு எங்காவதுதான் போகவேண்டும். வயதுக்கு வந்த குழந்தைகளை விட்டு விட்டுத் தூரமாகவும் போய்விட முடியாது. மனைவியால் தனியாகச் சமாளிக்க முடியாது. அவளுக்குத் தெரியாது.
வெறும் கடுங்காப்பியைக் குடித்துவிட்டு எந்த அதிருப்தியையும் முகத்தில் காட்டாமல், இருக்கும் சொற்ப சோற்றை அவருக்கு அவளால் பரிமாற முடியும். கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த அதே நாளில் கொண்டிருந்த மையலில் ஓரிழையைக் கூடத் தவறவிடாமல், இப்போதும்கூட அவரை அதே கண்களுடன் பார்க்க முடியும். ஆனால், வாழ்வதற்கு என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியாது. வாழ்தலும், வாழ்தலுக்கான யத்தனமும் இரண்டு துருவங்களாக அவள் முன் நின்றன.
அதனால்தான் குழந்தைகளின் ஆற்றாமையை, அவை தகப்பனின் மீது வெளிப்படுத்தும் அவமரியாதையைக்கூட அவளால் அவருக்குக் கடத்த முடிந்ததே இல்லை. ஆனாலும் அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த வாழ்வை நகர்த்த வேண்டுமெனில் இப்போதைக்கு உறுதியான தவணைகளில் பணம் வேண்டும். இதற்கு மேலும் இந்தக் குறுவிவசாயத்தின் நிச்சயமற்ற தன்மையில் உழல முடியாது. அதற்கு ஒரு வேலை வேண்டும். அப்படி யோசித்தபோது அந்த இரும்புக் கதவை அனிச்சையாக இறுகப் பற்றினார்.
‘இப்போது நான் வசந்தாவைப் பார்க்க வந்திருப்பது, உன் புருஷனிடம் சொல்லி எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடு என்று கேட்பதற்குத்தானா...?’
இல்லை... இல்லை...! இந்த மூச்சு முட்டும் அலைக்கழிப்பிலிருந்து நான் வெளியேற வேண்டுமெனில், அழுத்தும் இந்த வயதிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். ஏதோ ஒன்றிற்கு நான் திரும்பிப் போகவேண்டும். எனக்குக் கொஞ்சம் சக்தி வேண்டும். இந்த வறுமையை நான் சகிக்க வேண்டும். என் குழந்தைகள் யோசிப்பதுபோல, நான் தோற்றுப்போனவன் அல்ல... பிழைக்கத் தெரியாதவன் அல்ல... நான் வெறும் விவசாயி மட்டும் அல்ல... நான் வெறும் கூலியாள் மட்டும் அல்ல... சரி, நீ வேறு யார்...? நீ வேறு யார்...?
ஆமாம்... நான் யார்...? இதோ இந்த சுப்ரமணி எழுதிய தேர்வை நானும் எழுதி எளிதாகத் தேறியிருக்க முடியும். பிறகு ஏன் அதைச் செய்யவில்லை...? சதா பதற்றத்துடன், புத்தகமும் அடுக்களையும் அம்மாவின் முந்தானையுமாகத் திரிந்த, சிறார்களின் கிண்டலுக்கு ஆளான சுப்ரமணியா நான்...? இதே வசந்தாவை மிகவும் நிதானமாக என் வீட்டுப் பத்தாயத்தில் சாய்த்துவைத்து முத்தமிட்ட போது, இந்த சுப்ரமணி பார்த்திருந்தால்கூட அவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்திருக்காது. ஆனால் வசந்தாவின் சுபாவம் தனக்கும் சுப்ரமணிக்கும் இடைப்பட்ட தாக இருந்தது என்று நினைத்தார்.
அந்த முத்தத்துக்கு ஒன்றும் அவள் பதறியிருக்கவில்லை. ஆனால் அங்கிருந்து அவள் குடும்பம் நகரத்துக்குக் குடியேறி, அவள் படிப்பைத் தொடர்ந்த போது, ராமமூர்த்தி பன்னிரண்டாவதுடன் படிப்பை நிறுத்திக்கொண்டு தன்னை இளம் பண்ணையாராக உருவகித்துக்கொண்டிருந்தான். சுப்ரமணியோ அந்த வங்கி வேலையில் சேர்ந்திருந்தான். அதண்டு பேசாத சுப்ரமணி, ராமமூர்த்தியின் அப்பாவிடம் தனக்கு வேலை கிடைத்து விட்டதைச் சொல்லி ஆசீர்வாதம் வாங்க வந்த போது, “எங்க மனு போடணும், எப்படி அந்தப் பரீட்சையை எழுதணும்னு நம்ம ராமமூர்த்திக்கும் சொல்லுடா...” என்று அவனிடம் சொன்னார். “சரி பெரியப்பா...” என்று அவனும் ஆமோதித்திருந்தான். ஆனால் ராமமூர்த்தியிடம் சுப்ரமணி அதுகுறித்துப் பேசியதில்லை, அவரும் கேட்டதில்லை.

ஒடுக்கமாக இருந்தாலும் தன்னளவில் கெட்டிக்காரத்தன மாக இருப்பது ஒருவித சுபாவம். அது எந்தக் காலத்திலும் ராமமூர்த்திக்குக் கைவந்த தில்லை. நிலங்கள் குறைந்து, அப்பா இறந்து, சொத்துகள் பிரிந்து, இதோ இந்த கேட்டைப் பிடித்துக்கொண்டு நிற்கும் இப்போது கூட, ஒன்று மட்டும் ஆழமாக, மிக ஆழமாக உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருக்கிறது. ஒருவித வேட்கை. புறச் சாதனைகளை அற்பத்தனம் என்று வரையறுத்துவிடுகிற, அதில் பிரமிப்பு கொள்ளாத ஒரு வித விலக்கம். ஆனால், வயது கூடக் கூட அந்த அழுத்தம் வாழ்வை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. கொஞ்சம் நெகிழ்ந்துகொடு என்கிறது. அடங்கிப் போயேன் என்கிறது. குனிந்து கொடுக்காமல் நீ இனி தப்பித்துக்கொள்ள முடியாது என்று இப்போது அறிவிக்கிறது.
அதுதான் வசந்தாவின் வீட்டு வாசலில் இப்போது கொண்டுவந்து அவரை நிறுத்தியிருக்கிறது. கழுத்து வரை நெல் நிறைக்கப்பட்டிருந்த அந்தப் பத்தாயத்தின் மறைவில் வைத்து அவளை அணைத்தபோது, அது அவள்மீதான தீராத காதல் என்று நினைத்தபோது, அது குறித்து எந்த மறுபரிசீலனையுமற்று, பெரும் களிப்பும் உன்மத்தமுமாக அவளது உதட்டில் முத்தமிட்ட போது அந்த இளம் ராமமூர்த்தியிடம் இருந்த ஏதோ ஒன்று இப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதை அணைக்கவே முடியவில்லை. அதைத் தணிக்கவே முடியவில்லை. இந்த லௌகீகத்தில் ஒட்டவிடாமல் அதுதான் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அது கொஞ்சம் அடங்கி எரிந்திருந்தால், வங்கிப் பரீட்சை எழுதியிருக்கலாம், அப்போதே வேறு வேலைக்குப் போயிருக்கலாம், ஒரு உரக்கடை வைத்திருக்கலாம், கொஞ்சமாக வட்டிக்குக் கொடுத்து வாங்கியிருக்கலாம், கொஞ்சம் தந்திரமாக, வேலையில் இருக்கும் ஒருத்தியைக் கட்டிக்கொண்டிருக்கலாம், நான்கு குழந்தைகள் என்று அசட்டையாக இருந்திராமல் இரண்டோடு நிறுத்தியிருக்கலாம். ஏதோ ஒன்று இதிலிருந்தெல்லாம் தன்னைத் துண்டித்து விட்டது. ஒரு தீராத அலைக்கழிப்பை நோக்கி உந்தி, இப்போது அதன் எல்லையில் கொண்டுவந்து நிறுத்தி யிருக்கிறது. அதே துடிப்பு மீண்டும் மனசு முழுக்கப் பரவிக்கொண்டே இருக்கிறது.
“வசந்தாவிடமிருந்து எனக்கு என்ன வேண்டும் இப்போது...” என்று கேட்டுக்கொண்டார். மனதின் உள்ளே உள்ள உரையாடலாக அல்லாமல் அவரையுமறியாமல் சப்தமாகக் கசிந்தது, பிரார்த்தனையைப் போல.
‘நீ தோற்றுப்போனவன் அல்ல... நீ வேறொருத்தன்... அபூர்வமானவன்... என்று அவள் சொல்லவேண்டுமா...?’ - பதில் தேட முயன்ற கணத்தில் அந்த உரையாடலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் அதை இடைவெட்டியது.
“நீங்களா.... வாங்க.. வாங்க... ஏன் அங்கே போயி நிக்கிறீங்க... உள்ள வாங்க...” வசந்தா வந்துவிட்டிருந்தாள்.
அங்கிருந்தபடியே, நிலைப்படியை ஒட்டி நின்றுகொண்டிருப்பவளின் ஆகிருதியைப் பார்த்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கல்யாண வீட்டில் வைத்து அவரிடம் நலம் விசாரித்தவளின் அதே உடல்மொழி. அவளது உடலின் வனப்பிலும் அளவிலும் எந்த மாற்றமும் இல்லை. அவளது முகத்தில் சிநேகமோ வெறுப்போ இல்லை. துள்ளலோ சோகமோ இல்லை. வயதோ இளமையோகூட இல்லை.
“இல்ல... இல்ல.... சும்மாதான்” என்று சொல்லிவிட்டு அவளை நோக்கி நடந்தார்.
“குளிச்சிட்டிருந்தேன்...” என்று சொல்லிவிட்டு, நிலைப்படியில் ஏறி, கூடத்தை அடைந்தவள் அங்கிருந்து அவரைத் திரும்பிப் பார்த்து “உள்ள வாங்க... ஏன் திரும்பவும் அங்கேயே உக்காருறீங்க...” என்றாள்.
உள்ளே போய் உட்கார்ந்தார். அவளும் அவருக்கு எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டாள். பிறகு சம்பிரதாயமாக அவரின் மனைவி குழந்தைகளைப் பற்றி விசாரித்தாள். அவளிடம் பிள்ளைகளின் படிப்பைப் பற்றிச் சொல்வதில் அவருக்கும் ஆர்வமாக இருந்தது. அவளின் மகன்கள் இருவரும் படிப்பு முடிந்து வெளியூரில் வேலையில் இருப்பதாகச் சொன்னாள். ஒருவன் பெங்களூரில் இருந்தான். இன்னொ ருவன் சென்னையில் இருந்தான். பத்து நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டி ருந்தார்கள். சமீபத்தில் தெருவில் நடந்த கல்யாணம், தொண்ணூறு வயதில் செத்துப்போன ராசம் கிழவி என்று பேச்சு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் ராமமூர்த்திக்கு வேலைக்காரப் பெண் காபி கொடுத்திருந்தாள். அவர் அதை ஆற்றி, பேச்சினூடே குடித்து முடித்திருந்தார்.
இவ்வளவு விரைவாக அவளுடனான உரையாடல் முடிவுக்கு வந்துவிடும் என்பது அவருக்குத் திகைப்பாக இருந்தது. அவள் மௌனமாக இருக்கும் நேரங்களில் அவரால் அந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருக்க முடியவில்லை. ‘அப்படியான நேரங்களில் ஒரு வித நெருக்குதல் தோன்றுகிறதே, ஏன்?’ என்று நினைத்தார். ‘இல்லை... இல்லை... அப்படியிருக்க வாய்ப்பில்லை. தன்னிடம் இதைத்தாண்டி எப்படி ஒருத்தி இலகுவாகப் பேசமுடியும்?’ என்று சமாதானம் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில், “என்ன இத்தனை வருஷத்துல திடீர்னு வந்திருக்கீங்க...” என்று கேட்பாள் என்று எதிர்பார்த்தார். பிறகு அவள் அப்படிக் கேட்டுவிடக் கூடாது என்றும் அலைக்கழிந்தார். ஆனால் அவள் மிதமான மனநிலையில், அவரது இருப்பின் எந்த நெருக்குதலும் இல்லாமல் அவரின் கண்களை, முகத்தை, ஜன்னலை, அருகில் கிடந்த ஒரு வார இதழை எனப் பார்த்துக்கொண்டே பேசினாள்.

அவர் இரண்டு விநாடிகள் அமைதிக்குப் பிறகு “சரி நான் கிளம்புறேன்... சும்மா இந்தப் பக்கம் வந்தேன். அப்படியே வந்துட்டு போலாம்னு தோணுச்சு...” என்று சொல்லிக்கொண்டே எழ யத்தனித்தார். “ஏன் உடனே கிளம்புறீங்க...” என்று அவள் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்ததைப்போல உடல் இன்னும் இருக்கையின் ஆழத்திலேயே அழுந்தியிருந்தது. “ஓ... அப்படியா...” என்று சொல்லிவிட்டு அவள்தான் முதலில் எழுந்தாள்.
அவர் வெளியே வந்து பெஞ்சில் கிடந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டுகொண்டார். திடீரென நினைவு வந்தவராக, “ஆமா... செவுத்து ஓரமா கொஞ்சம் வாழக்கன்னு கெடக்குதே... எங்க வைக்கிறதுக்கு... பேத்து நாலஞ்சு நாள் ஆவும் போலயே...?” என்று கேட்டார். ‘ஓ... அதுவா... நான்தான் கொண்டுவரச் சொன்னேன்... இந்தப் பக்கம் வைக்கலாமேன்னு..’ என்று அவர் உத்தேசித்திருந்த பக்கமாகக் கைகாட்டினாள்.
“வைக்கவேண்டியதுதான...?”
“வைக்கிறதுக்கு ஆளு வரச் சொல்லியிருந்தாங்க... அவன் இன்னும் வரல....”
“மம்புட்டி இருக்கா வீட்ல...”
“ம்ம்ம் இருக்கே...”
அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வேலைக்காரப் பெண் உள்ளே போய், மாடிப்படிக்குக் கீழே இருந்த மண்வெட்டியைக் கொண்டுவந்து அவரின் முன்னால் வைத்தாள்.
அவர் சட்டையைக் கழற்றிச் சுருட்டி வெளிப்புற கேட்டின் கம்பி இடைவெளியில் செருகி வைத்தார். தோளில் கிடந்த துண்டை முண்டாசாகக் கட்டினார். வேட்டியைத் தழைத்து இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டு, ஆக்கையைப் பிரித்துக் கன்றுகளை எடுத்து வரிசையாக அடுக்கினார். ஏழு கன்றுகள் இருந்தன. குழி வெட்டி, கன்றுகளைப் புதைத்து, பாத்தி கட்டி, தண்ணீர் ஊற்றியபோது, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. தண்ணீர்க் குழாயை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, கைகால் முகத்தைக் கழுவிக்கொண்டார். முண்டாசை அவிழ்த்து ஈரத்தைத் துடைத்துக்கொண்டு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார். மனம் அதன் சுணக்கத்தின் ஆழத்துக்குப் போய்க்கொண்டே இருந்தாலும், உடம்பில் ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோல இருந்தது. கொஞ்ச நேரம் நிற்கவும் உட்காரவும் உள்ளே போகவுமாக இருந்த வசந்தாவை இப்போது அங்கு காணவில்லை.
அவர் கிளம்ப யத்தனிப்பதற்கும் அவள் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.
“வேற யாரா இருந்திருந்தாலும் இவ்வளவு நறுவுசா செஞ்சிருக்க முடியாது...” என்று பாராட்டும் தொனியில் சொன்னாள். ஆனால் அதற்குப் பிறகு ஏதோ சொல்வதற்காக அவள் தயங்குவது போலத் தோன்றியது. பிறகு சடுதியான வேகத்தில் உள்ளே போய்விட்டுத் திரும்ப வந்தாள். அவளது கையில் ஒரு நிறைந்த எடை கூடிய மஞ்சள் பை இருந்தது. அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
“இந்தாங்க, இத வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க...” என்று அவரிடம் கொடுத்தாள்.
‘அது என்ன...?’ என்று கேட்பதற்கு அவருக்கு தைரியம் வரவில்லை. அதே அச்சம். தன் வாழ்நாள் முழுக்கத் தன்னைப் பின்தொடரும் ஆதி அச்சம் என்று நினைத்தார். அந்தப் பையை வாங்கிக்கொண்டு அவளிடம் விடைபெற்று அந்த நீண்ட தெருவின் முனைக்கு வந்து இடது புறமாகத் திரும்பியபோது அந்த இடத்தில் கற்குவியல் ஒன்று இருப்பது கண்ணில் பட்டது. அதில் வைத்து அந்தப் பையில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். பை நிறைய அரிசி. பச்சரிசி. அந்த வெயிலுக்கு அவ்வெண்மை ஒளிர்ந்தது. கொஞ்ச நேரம் எந்தப் பிரக்ஞையுமற்று அங்கேயே நின்றுகொண்டிருந்தார். பிறகு பையை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தார்.
நிறுத்தத்துக்கு முன்பு பிரமாண்டமான பெருமாள் கோயில். சற்று யோசித்தவர் அதன் உள்ளே நுழைந்து வெளிப்புறப் பிராகாரத்தைக் கடந்து தெப்பக்குளத்தைச் சமீபித்தார். படிகளில் இறங்கினார். படிக்கட்டுகள் சூட்டில் கொதித்தன. தோளில் இருந்த துண்டை எடுத்து கடைசிப் படியில் போட்டு அதில் உட்கார்ந்தார். கணுக்கால் வரை தண்ணீரில் நனைந்தது.
கற்படிகளின் சூட்டுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாமல் தண்ணீர் ஜில்லென்று இருந்தது. அந்தக் குளுமை உடலின் மீது கவிந்த கதிர்களின் சூட்டை ஒன்றுமில்லாமலாக்கியது. ஒரு பிடி அரிசியை அள்ளி, குளத்து நீரில் விசிறினார். சில விநாடிகள் எந்தச் சலனமும் இல்லை. பிறகு சலசலவென மீன்கள் குவிவது தெரிந்தது. மிக மெதுவாகப் பையிலிருந்த எல்லா அரிசியையும் குளத்தில் தூவி முடித்தார். அந்த மீன்களின் மீது இனம்புரியாத கனிவு வந்தது. வெயிலில் ஒளிரும் அரிசி நீரில் மூழ்குவது வசீகரமாக இருந்தது. குளம் தனது தனித்த அமைதியுடன் அசைவற்று இருந்தது.