தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

ஒளி ஓவியப் பெண்கள்நிவேதிதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த `பி.எஸ்.எம்' எனப்படும் போட்டோகிராபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் நடத்திய `கான்ஃப்ளூயென்ஸ்’ புகைப்படக் காட்சியில்தான் இந்தச் சாதனைப் பெண்களைச் சந்தித்தோம். பெண் படைப்பாளிகள் மூவரும், தேர்ந்த புகைப்படக் கலைஞர்கள். ஒருவர் வைல்டு லைஃப் போட்டோகிராபியில் கலக்கியெடுத்தால், இன்னொருவர், இயற்கைக் காட்சிகளில் மனதை அள்ளிச் செல்கிறார். மற்றவரோ, பட்டாம்பூச்சிகளின் காதலி. இனி அவர்களுடன்…

ஒரு பறவையைத் தேடி...

``நா
ன் ஒன்பதாம் வகுப்பு முதல் பயணித்துக்கொண்டிருக்கிறேன்” என்று பேசத் தொடங்குகிறார் ஷீலா வெர்கிஸ். சென்னையில் பிறந்த இவருக்கு, பயணங்கள்மீது அதீதக் காதல். அதைவிட கிரிக்கெட்மீது மோகம். சென்னைப் பல்கலைக்கழக அணி, தமிழக மகளிர் அணி என மட்டையைச் சுழற்றியவர், இந்திய அணித் தேர்வு வரை சென்றிருக்கிறார்.

``திருமணம், குழந்தைகள் என்று பொறுப்புகள் கூடக்கூட, சிறு இடைவெளி எடுத்தேன். இருப்பினும், பயண ஆர்வம் எனக்குள் ஒளிர்ந்துகொண்டேயிருந்தது. என் கணவர் பயங்கர பயணப் பிரியர். இருவருக் குமே ஒரே மாதிரியான ஆர்வம் என்பதால், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயணப்படத் தொடங்கினோம். ஆரம்பத்தில் சாதாரண கேமராவைக்கொண்டுதான் புகைப்படங்கள் எடுத்தேன். புகைப்படக் கலைமீதான ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, நானே சிரத்தையுடன் தகவல் திரட்டிப் படிக்கத் தொடங்கினேன். சக்திவாய்ந்த புதிய கேமராக்கள் வாங்கினேன். பயிற்சி வகுப்புகள் எதற்கும் போகவில்லை. இன்னமும் நான் அமெச்சூர் போட்டோகிராபர்தான்!” என்று சொல்லும் ஷீலாவின் காலடி பதியாத இடங்கள் உலகில் மிகக் குறைவு. இந்தியாவின் அடர்ந்த வனங்கள் தொடங்கி தென்னமெரிக்காவின் கோஸ்டாரிக்கா, ஆப்பிரிக்கக் காடுகள், போர்னியோ எனப் பல இடங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறார்.

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

``பெங்களூருவைச் சேர்ந்த `டோ-ஹோல்ட்’ என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம்தான் நான் அதிகம் பயணித்தது. அதன் இணையதளத்தை நானும் என் கணவரும் பார்த்துக்கொண்டே இருப்போம். நாங்கள் ஆசைப்படும் விலங்கு, பறவை, என எதுவாக இருந்தாலும், அதற்கான விசேஷப் பயணங்களை அவர்கள் எப்போது திட்டமிடுகிறார்கள் எனக் கவனித்து, சரியான நேரத்தில் பதிவுசெய்துவிடுவோம். `ஹம்மிங் பேர்டு’ பறவைமீதான காதலில்தான் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொண்டோம். டூக்கன் பறவைகள், ஹம்மிங் பறவைகள் எனப் பொறுமையாகத் தேடித் திரிந்து படம் பிடித்துக்கொண்டேன். ஹம்மிங் பறவை மிகமிக வேகமாகச் சிறகசைக்கக்கூடியது. பார்க்க மிகவும் அழகானது. நீங்கள் இங்கு பிரின்ட்டில் பார்ப்பதைவிடப் பல மடங்கு வண்ணங்களைக்கொண்ட கண்கவர் பறவை அது.

அதுபோல ஆப்பிரிக்க மசாய் சரணாலயத்துக்கு, சிங்கங்களைப் படம்பிடிக்கச் சென்றோம். ஒராங்குட்டான் குரங்கை அதன் இயற்கையான வசிப்பிடத்தில் படம்பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் போர்னியோ சென்றோம். தங்கும் இடம், போக வேண்டிய இடங்கள் குறித்து என் கணவர் தெளிவாக ஆய்வு செய்துவிடுவார். இதுபோன்ற வைல்டு லைஃப் பயணங்களில் ஸ்கிப்பர்களின் பங்கு அளப்பரியது. மிருகங்களைப் படம்பிடிக்க சரியான இடம், நேரம் குறித்து ஸ்கிப்பர்களின் அறிவுரைப்படி நாம் வழிநடந்தால் எளிதாகப் படம்பிடித்துவிடலாம். சிறிய அசைவுகளைக்கூட நுணுக்கமாக உணரக்கூடியவர்கள் அவர்கள்.

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

இப்படித்தான் ஆப்பிரிக்காவின் `ம்புட்டு’ எனப்படும் சிங்கச் சரணாலயம் ஒன்றில் படம்பிடிக்கும்போது ஒரு தாய்ச் சிங்கம், தன் குட்டிகளுடன் இருந்ததை 20-30 அடி தொலைவிலிருந்து பார்த்தோம். ஸ்கிப்பர் சரியாக அவற்றைக் குறிப்பிட்டுக் காண்பித்ததுடன், எந்த அசைவுமின்றி நாங்கள் புகைப்படம் எடுக்கும் வரை அமைதி காத்தார். சற்றே எரிச்சலில் இருந்த சிங்கம் எங்களை முறைக்க, விரைவாகப் படங்கள் எடுத்துக்கொண்டு நைசாக நழுவிவிட்டோம்” என்று சொல்லிச் சிரிக்கிறார்.

``காடுகளில் சுற்றித் திரிவது பயமாக இல்லையா?’’

``என்ன பயம்? கூடவே கணவர், ஸ்கிப்பர், குழு எல்லாம் இருக்கிறார்கள். எந்த பயமும் இல்லை. வீட்டில் சரியான சப்போர்ட் சிஸ்டம் இருக்கிறது. குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். அதனால்தான் இப்படி கேமராவும் கையுமாக என்னால் சுற்றி வர முடிகிறது” என்று சொல்பவர், விரைவில் பெண் புகைப்படக் கலைஞர்களுக்கான தனிக்குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

அடர் வனத்தில் தாய் யானை!

யற்கையெழில் கொஞ்சும் ஓவியங்களா, புகைப்படங்களா எனத் திகைக்க வைக்கும் புகைப்படங்கள் காயத்ரி சுந்தருடையவை. அடர்வனத்துக்குள் ஊடுருவிப் பாயும் ஒளிக்கற்றைகளையும், மலைக்காட்டிடையே உள்ள நீரோடையின் மீது விழும் ஒளித்தீற்றலையும், பாய்ந்தோடும் நதிகளையும் இவரது கேமராவில் சிறைப்பிடித்திருக்கும் அழகு, வியப்புக் குரியது.

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

``காடுகளில் பயணிப்பது எனக்குப் பிடித்தமானது. இரண்டு நாள்கள் தொடர் விடுமுறை என்றால் போதும். நானும் கணவரும் குஷியாகக் கிளம்பிவிடுவோம். அவரும் சரியான பயண விரும்பி. தமிழகம், கேரளா, கர்நாடகம்; வடஇந்தியா என, கிடைக்கும் விடுமுறைக்கு ஏற்ப பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்வோம். நம் நாட்டிலேயே காணவேண்டிய அற்புதமான இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றைத் தேடித் தேடிப் பயணிக்கிறோம். விளம்பரக் கம்பெனி நடத்துவதால், அதையும் கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்துக்கொண்டுதான் இந்தப் பயணம். இதுவரை புகைப்படப் பயிற்சி என்று எதுவும் எடுத்துக்கொண்டதில்லை. கொஞ்சம் சிரத்தையும், விடாமுயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் புகைப்படக் கலைஞராகப் பரிமளிக்கலாம்” என்கிறார்.

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

``நிறைய பயணித்திருக்கிறீர்களே, அடர் வனங்களில் உங்களை பயமுறுத்துவதுபோல எதுவும் நிகழவில்லையா?”

``ஒருமுறை தாய் யானை ஒன்றை, குட்டியுடன் மிக அருகில் பார்க்க நேர்ந்தது. பொதுவாகவே குட்டிகளுடன் இருக்கும் மிருகங்கள், அதிக எச்சரிக்கை உணர்வுடனும் சட்டென உணர்ச்சிவசப்படும் நிலையிலும் இருக்கும். தாய் யானை எங்களைப் பார்த்ததும் இரண்டு அடி முன்னோக்கி எடுத்து வைக்க, சலனமில்லாமல் திரும்பி விட்டோம்.

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

பரதம்மீது எனக்குக் கொள்ளை ஆசை. நாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதை மிகவும் விரும்புவேன். என்னைப் பற்றி அதிகம் எழுத வேண்டாம். புகைப்படங்களைப் பதிவிடுங்கள். அவை பேசட்டுமே’’ என்கிறார் தன்னடக்கத்துடன்.

வாவ்... வண்ணத்துப்பூச்சி!

``நான் மிகச் சமீபமாகத்தான் இந்தத் துறைக்குள் வந்தேன்” என்று தொடங்குகிறார் ஹேமா மோகன்தாஸ். `மேக்ரோ போட்டோகிராபி’ எனப்படும் புகைப்படப் பிரிவில் வெளுத்துவாங்குகிறார்.

வண்ணத்துப்பூச்சிகளின் மீது இவருக்குப் பெருங்காதல். இந்தியா முழுக்கச் சுற்றி விரட்டி விரட்டி வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைப்பிடித்திருக்கிறார் தன் லென்ஸ் எனும் கண்ணின் வாயிலாக.

வண்ணத்துப்பூச்சிகள் தவிர விட்டில்பூச்சி எனப்படும் பிரேயிங் மான்டிஸ், ஸ்டிக் இன்செக்ட், சிலந்திகள் எனப் பூச்சிகள் உலகமே வர்ணஜாலம் காட்டுகிறது இவரது கைவண்ணத்தில்.

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

``அமெச்சூர் போட்டோகிராபர்தான் நான். சில ஆண்டுகளுக்கு முன்புதான் கேமராவைக் கையில் எடுத்தேன். வண்ணத்துப்பூச்சிகளைப் படம்பிடிக்க மிகுந்த பொறுமையும் விடாமுயற்சியும் தேவை. சில பயணங்களில் ஒரே நாளில் எக்கச்சக்கமான பூச்சிகளைப் பிடித்துவிடுவேன். சில நேரம் எதுவுமே கண்ணில் தென்படாது. இறகின் ஒரு சிறு புள்ளியில் உள்ள வண்ண மாற்றம்கூட ஒருவகையிலிருந்து மற்றொரு வகையை வேறுபடுத்திவிடும். தமிழ்நாடு பட்டர்ஃப்ளை சொசைட்டி - டிபிஎஸ் அமைப்பினர் நடத்தும் இயற்கை நடைகளில் பங்குகொண்டிருக்கிறேன். பூச்சிகள் பற்றிய என் பார்வையைக் கொஞ்சம் விசாலப்படுத்தியிருக்கிறேன்.

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

சமீபத்தில் இடுப்பில் ஹிப்-ரீப்ளேஸ்மென்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதனால், என்னால் அதிக நேரம் நடக்க முடிவதில்லை; குனிந்து படங்கள் எடுக்க முடிவதில்லை. இடுப்பளவுக்குமேல் இருப்பதைத்தான் இப்போது படங்கள் எடுக்க முடிகிறது. இதுபோன்ற நடைப்பயணங்களுக்குச் சென்று வரும்போதெல்லாம் என் மகன் கேட்பதுண்டு, `எதற்கு அம்மா இப்படி உங்களை வருத்திக்கொள்கிறீர்கள்?’
என்று. ஆனால், நான் எடுத்து வந்த படங்களைக் காட்டியதும் அதை அப்படியே மறந்து, என்னைப் பாராட்டத் தொடங்கிவிடுவான்.

ஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே!

இன்னும் நிறைய பெண்கள் இந்தத் துறைக்கு வர வேண்டும்.  போட்டோகிராபி துறையில் தனியாகச் செல்வதைவிட குழுக்களாகச் செல்வதில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பெண் புகைப்படக் கலைஞர்களுக்கு என ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். லென்ஸுகள், விலை யுயர்ந்த கேமராக்கள் போன்றவற்றை, கலைஞர்கள் தங்களுக்குள் சிறிய அளவு வாடகை கொடுத்து உபயோகிக்கவும் வழிசெய்ய யோசித்துக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் ஹேமா.

சரித்திரப் புகழ்பெற்ற சங்கம்!

இந்தப் பெண்களின் படங்களைக் காட்சிக்குத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ஊக்கம் கொடுத்துவரும் போட்டோகிராபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸின் செயலாளராக ஆர்வத்துடன் செயல்படுகிறார் பாலசுப்பிரமணியன் ஜிவி. இவர் இந்தியன் வங்கியின் முன்னாள் பொதுமேலாளர்.

``இன்னும் நிறைய பெண்கள் ஆர்வத்துடன் இந்த சொசைட்டிக்கு வர வேண்டும். மாதம் ஒருமுறை எங்கள் கூட்டங்களில் பங்கெடுத்தாலே போதும். இந்தத் துறைக்கான சரியான வழிகாட்டுதல் கிடைத்துவிடும்” என்கிறார் அவர்.

1857-ல் தொடக்கப்பட்ட பி.எஸ்.எம்., சரித்திரப் புகழ்பெற்றது. அலெக்ஸாண்டர் ஹன்டர் என்கிற ஆங்கிலேயரால் தொடக்கப்பட்ட இந்த அமைப்பில், வால்டர் எலியட், அன்றைய மெட்ராஸின் ஆளுநராக இருந்த லார்ட் ஹாரிஸ், ஆளுநர் சார்லஸ் ட்ரெவெல்யான் போன்றோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர்கள் பலரும் இன்று இந்த சொசைட்டியில் உறுப்பினர்கள். புகைப்படத் துறையில் ஆர்வமுள்ளவர் யாராக இருந்தாலும், இந்த சொசைட்டியில் இணைந்துகொள்ளலாம். photomadras.org என்ற சுட்டியில் மேலும் தகவல்கள் பெறலாம்.

வண்ணங்களைச் சட்டங்களுக்குள் சிறைப் பிடிக்க, இன்னும் பல வண்ணத்துப்பூச்சிகள் ஆர்வத்துடன் வர வேண்டும்!