
பிரபலங்களின் பின்னே...மு.பார்த்தசாரதி, படங்கள் : க.விக்னேஷ்வரன்
அரசியல் விவாதங்களின்போது முகத்தில் புன்னகை மாறாமல் பேசுபவர் வானதி சீனிவாசன்... தமிழகத்தின் பா.ஜ.க செயலாளர். அரசியல் தாண்டி, தன் கிராமத்தைத் தத்தெடுத்து சமூகப் பணிகளும் செய்துவருகிறார். இதோ... அவர் சொந்த ஊரான கோவை மாவட்டம் உலியம்பாளையம் கிராமத்தில் ‘எ டே வித் வானதி!’
கிராமத்துக்குள் வானதியின் கார் நுழைந்ததுமே பலரும் அதனை நோக்கி வர ஆரம்பிக்க, வானதி காரிலிருந்து இறங்கிச்சென்று அனைவரிடமும் நலம் விசாரித்தார். “வானதி கண்ணு, உன் வீட்டுக்காரரு எப்படி இருக்காரு? புள்ளைங்கெல்லாம் சௌக்கியமா இருக்குதுங்ளா? போன தடவ தெக்கால இருக்குற கொளத்த தூர்வாரிப்போட்டியே... அதுல நல்லா தண்ணி சேந்து கெடக்குது கண்ணு” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண்மணி, “அப்டியே ஒரு எட்டு வந்து வீட்டுல காபித் தண்ணி குடிச்சுப்போட்டு போலாம்ல” என்று அழைக்க, “இல்லீங்க்கா, இப்போ இவங்ககூட வேலையிருக்கு. அடுத்த முறை வரும்போது வர்றேங்க்கா’’ என்று விடைபெற்றவர், ஊரின் மையத்திலிருந்த நூலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
‘மக்கள் நூலகம்’ என்று பெயரிடப் பட்டிருந்தது அந்தக் கட்டடம். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் பக்கத்திலிருந்த பள்ளி மாணவர்கள் தகவலறிந்து நூலகத்துக்கு வந்துவிட்டார்கள். “அக்கா, நேத்துதான் உங்கள டி.வி-யில பாத்தோம், சூப்பரா பேசினீங்க” என்றாள் ஒரு மாணவி. “மேடம், எங்க ஸ்கூல் பேச்சுப் போட்டிக்கு இங்கதான் நோட்ஸ் எடுத்திருக்கேன்’’ என்றான் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன். அவர்களிடம் பேசிக்கொண்டே நமக்கு நூலகத்தைச் சுற்றிக்காட்டினார் வானதி. ‘`இதோ, இந்தப் புத்தகங்கள் எல்லாம் கவிஞர் வைரமுத்து அனுப்பிவெச்சது. அந்தப் பக்கம் இருக்குறதெல்லாம் ஸ்மிருதி இரானி கொடுத்தாங்க. விவேகானந்தா கேந்திரத்துல இருந்தும் சில புத்தகங்கள் வந்திருக்கு. நாங்களும் சில கலெக்ஷன்ஸ் வாங்கி வெச்சிருக்கோம். எங்க கிராமத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதைப் பயன்படுத்திக்கிறாங்க. இங்கே இன்டர்நெட் வசதியும் வெச்சிருக்கோம்.

நான் ஸ்கூல் படிக்கும்போது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள்ல எல்லாம் முதல் பரிசு வாங்குவேன். அதேபோல என் கிராமத்துப் பிள்ளைகளுக்கும் படிக்கிற ஆர்வத்தைத் தூண்டும் அக்கறையில்தான், இந்த நூலகத்தை ஆரம்பிச்சேன். நூலகத்தோடு நிறுத்திடக்கூடாதுன்னு, என் கிராமத்தையும் தத்தெடுத்தேன். குளங்களைத் தூர்வாருறது, கழிப்பறைகள் கட்டிக்கொடுக்குறதுன்னு என்னால முடிஞ்ச காரியங்களைச் செஞ்சுட்டிருக்கேன் தம்பி’’ என்றவர், அடுத்ததாகப் போய் நின்றது அந்தக் கிராமத்தின் குளத்தங்கரையில்.
தண்ணீர் ததும்பிக்கொண்டிருந்த குளத்தைப் பார்த்ததும் வானதி முகத்தில் அப்படியொரு சந்தோஷம். கரையிலிருந்த ஆலமர விழுதுகளைப் பற்றியவர், “எங்க கிராமத்து இளைஞர்களின் முயற்சிதான் இதுக்கு முக்கியக் காரணம். இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள்கிட்ட `சமூகத்துக்கு ஏதேனும் செய்யணும்’கிற உணர்வு இருக்கு. அதை நாமதான் சரியான முறையில் பயன்படுத்திக்கணும்னு இந்தக் குளத்தை தூர்வாரினப்போ தெரிஞ்சுக் கிட்டேன். இனி ஊர்க்காரங்க இதைச் சுத்தமா வெச்சுப்பாங்க’’ என்றவாறே அங்கிருந்து கிளம்பினார்.
வானதியின் தோட்டத்துக்குள் கார் சென்றது. ‘`தோட்டத்துக்குள்ளேயேதான் நம்ம வீடு இருக்குது. சுத்திலும் தென்னை, வாழைனு போட்டுருக்கோம். எறங்குனதும் அய்யா எளனி பறிச்சுப்போடுவார் பாருங்க’’ என்றார் வானதியின் அம்மா பூவாத்தாள். நம்மை வரவேற்ற வானதியின் அப்பா கந்தசாமி அய்யா, உடனடியாக ஓடிச்சென்று வீட்டின் சுவர்மீது ஏறி, செவ்விளநீரைப் பறித்துக் கீழே போட்டார்.
“அப்பா இந்த வயசுலயும் நல்ல எனர்ஜியோடு இருப்பாங்க. எல்லாம் அந்தக் காலத்துச் சாப்பாட்டு முறைதான் காரணம்’’ என்ற வானதி, ‘`இளநீரைக் குடிங்க, இதோ வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
“சின்ன வயசுலயிருந்தே எம்பொண்ணு பொறுப்பா நடந்துக்குவா. இந்த ஊரு கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் அஞ்சாவதுவரை படிச்சா. ஆறாங்கிளாஸுக்கு பக்கத்துல தொண்டாமுத்தூர் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்த்தோம். டீச்சருங்களுக்கு எல்லாம் ரொம்பப் புடிச்ச புள்ள வானதி. நல்லா படிப்பா. மேடையில பேசி, பரிசு வாங்கிட்டு வந்து கொடுப்பா. வீட்டுக்கு மூத்த பொண்ணுங்கிறதால எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வா. அவ தம்பி கொஞ்சம் சுட்டி. இன்னிக்கு ரெண்டு புள்ளைங்களும் நாங்க சந்தோஷப்படுற மாதிரி வளர்ந்து நிக்குதுங்க. எம்பொண்ணு இன்னிக்கு அவ பொறந்த ஊரையே தத்தெடுத்துருக்கா. ஊருல என்ன பிரச்னைனாலும் சரி, எது வேணும்னாலும் சரி, ‘வானதி அக்காவுக்குத் தெரியாம எந்த முடிவும் எடுக்கக்கூடாது’னு எல்லாரும் சொல்வாங்க. வானதிய புள்ளையா பெத்ததுக்கு தெனந்தெனம் எங்க வயிறு குளுந்து கெடக்குது” - ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கிறது பூவாத்தாள் அம்மாளுக்கு.

“வானதி பொறந்தப்போ, பக்கத்து பெட் குழந்தைக்கு ‘வானதி’ன்னு பேரு வெச்சாங்க. கல்கியின் நாவல்ல அந்தப் பேரை படிச்சதா ஞாபகம். எனக்கு அந்தப் பேரு ரொம்பப் பிடிச்சதால எம்பொண்ணுக்கும் அதே பேரை வெச்சுட்டேன்’’ என்று பரவசமாகப் பேசுகிறார் கந்தசாமி அய்யா. ‘`வானதி காலேஜ் படிப்பை முடிச்சதும், வக்கீலுக்குப் படிக்கப்போறேன்னு சொன்னுச்சு. ஊருல எல்லாரும், ‘பொம்பளப் புள்ளைய பட்டணத்துக்கெல்லாம் அனுப்பாதீங்க’னு சொன்னாங்க. ஆனா, நான் வானதியைச் சென்னையில படிக்கவெச்சேன்.
‘அரசியல்ல ஈடுபடப்போறேன்’னு வானதி சொன்னப்போ, நாங்க யோசிக்கவெல்லாம் இல்ல. நான் சுதந்திரப் போராட்டக் காலத்துல காங்கிரஸ்ல ஈடுபாட்டோட இருந்தவன். அதனால என் பெண்ணின் அரசியல் முடிவு எனக்குப் பெருமையாதான் இருந்துச்சு. ‘நீ விருப்பப்படுறத செய், நாங்க பக்கபலமா இருப்போம்’னு சொன்னேன்’’ - அரை மணி நேரத்துக்கும் மேலாக எங்கள் பேச்சு தொடர்ந்துகொண்டே போக, “எங்கே வானதியக் காணோம்?” என்று தேடினார் பூவாத்தாள் அம்மாள். வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த மாட்டுக்குத் தீவனம் போட்டுவிட்டு, பால் கறந்துகொண்டிருந்த வானதியைப் பார்த்த நமக்கு சர்ப்ரைஸ்!
``பால் கறக்கவெல்லாம் தெரியுமா மேடம்?” என்று நாம் கேட்க, ‘`சின்ன வயசுலேருந்தே தெரியும். அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் மாடுங்களை கவனிச்சுக்குறது, தீவனம் போடுறது, பால் கறக்குறது, உரல்ல மாவு அரைக்குற துன்னு எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுட்டுச் செய்வேன்.பொண்ணா பொறந்துட்டோமேன்னு பொலம்புறதெல்லாம் பிடிக்காது. வீட்டு வேலைகளைப் பார்த்து வளர்ந்த என்னைப்போன்ற ஒரு கிராமத்துப் பெண்ணால, அரசியல் சபைகளையும் அடைய முடியும்னு இதைப் பாசிட்டிவா பார்க்கலாம்’’ - கிண்ணத்தில் இருக்கும் நுரைத்த பாலைப்போலவே சிரிக்கிறார் வானதி சீனிவாசன்!