தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

சிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்

சிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன், படம் : சங்கர்லீ

‘என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். எதை எழுத வேண்டுமோ அதை எழுதுகிறேன். இது செய்தால் என்ன கிடைக்கும், அதைச் செய்யாவிட்டால் என்ன கிடைக்கும் என்றெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம், நல்லவேளையாக எனக்கு இல்லை. மாறிக்கொண்டிருக்கும் சூழலுக்கு ஏற்ப நான் வினையாற்றுகிறேன். எப்போது ஒரு கட்டுரை எழுத வேண்டும், எப்போது ஒரு நாவல் எழுத வேண்டும் என்பதை நான் மட்டுமே தீர்மானிப்பதில்லை. `உன் படைப்புகளில் எது மையமாக இருக்கிறது' என்று என்னைக் கேட்டால், `நீதி' என்றே சொல்வேன். நீதி என்பது பிரமாண்டமான, அழகான, புரட்சிகரமான ஒரு சிந்தனை. அதைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.’

டெல்லியில் உள்ள அருந்ததி ராயின் வீட்டில் சமையலறையிலும்கூடப் புத்தகங்களும் பத்திரிகைகளும் நிரம்பி வழிந்துகொண்டிருக் கின்றன. மற்ற இடங்களில் துணிமணிகள். பேட்டி எடுக்க யாராவது வரும்போது மட்டுமல்ல, தன்னைப் புகைப்படம் எடுக்கும்போதுகூட தான் அமர்ந்திருக்கும் அறையையோ தனக்கு முன்னால் உள்ள மேஜையையோ ஒழுங்குபடுத்த அவர் முயற்சி செய்வதில்லை. ``இங்கே எல்லாமே குப்பையாகவும் அழுக்காகவும்தான் இருக்கும்'' என்று சிரிக்க மட்டுமே செய்கிறார். ``சில தினங்களுக்கு முன்பு, பசியெடுத்ததால் ஆம்லெட் செய்ய முயன்றேன். என்ன செய்தேன் என நினைவில்லை. வீடு முழுக்கப் புகை. வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டேன்!''

`நீங்கள் என்ன எழுதினாலும் கடும் எதிர்ப்புகள் வருகின்றன. தனியாக இருப்பதற்கு பயமாக இல்லையா?' எனக் கேட்டால், மறுக்கிறார்.

சிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்

``நான் தனியாக இல்லை. வீதியில் உள்ள வண்டி ஓட்டுநர்களும் சிகரெட் விற்பவர்களும் எனக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் தவிர, நான் நாய்களைப் பெரிதும் நம்புகிறேன். வாசலில், மாடிப்படிகளில் என என் வீட்டைச் சுற்றிலும் தெரு நாய்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து எனக்கு ஒன்றும் ஆகிவிடாது. என்ன ஒன்று, சிறிது காலம் முன்பு என் வீட்டை உடைப்பதாக நினைத்துக்கொண்டு பாவம் இரண்டு முறை பக்கத்து வீட்டில் கல்லெறிந்து கலாட்டா செய்திருக்கிறார்கள்...''

20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளி வந்துள்ள அருந்ததி ராயின் இரண்டாவது நாவலின் பெயர், `தி மினிஸ்டரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்'. அஞ்சும் என்கிற திருநங்கையைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது இந்த நாவல்.

`ஒரு ஹிஜ்ராவான உனக்கு, இங்கே இடமில்லை!' என்று அனைவரும் சொல்லி விட்டதால், வீட்டிலிருந்து வெளியேறி, தன்னைப்போன்ற மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார் அஞ்சும். அவருக்கு 46 வயதாகும்போது குஜராத் கலவரத்தில் சிக்கி மீள்கிறார். இந்த உலகிலிருந்து நான் வெளியேறினாலும் அதன் ஆக்டோபஸ் கரங்கள் என்னை விடுவிக்கப்போவதில்லை என்பதை உணரும் அஞ்சும், தன்னுடைய புதிய இருப்பிடத்தை விநோதமான ஓர் இடத்தில் அமைத்துக்கொள்கிறார். அது ஓர் இடுகாடு. `ஜனாத்' என்று அதற்குப் பெயரிடுகிறார். இந்த உருது சொல்லின் பொருள் - சொர்க்கம். நாளடைவில் இங்கே தீண்டத்தகாதவர்கள், இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்கள், ஹிஜ்ராக்கள் எனத் தொடங்கி, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் பலர் அடைக்கலம் புகுகிறார்கள். ஜைநாப் என்கிற குழந்தையும் ஒருநாள் அங்கே கண்டெடுக்கப்படுகிறது. அதை அஞ்சும் தத்தெடுத்து வளர்க்கிறார். அஞ்சுமின் போராட்டத்தோடு சேர்ந்து இந்துத்துவம், வகுப்புவாதம், காஷ்மீர் என, பல இழைகள் நாவலில் பின்னிப்படர்ந்திருக்கின்றன.

இது அரசியல் நூலா என்றால், ஆம். நாவலா என்றால் ஆம். இரண்டையும் பிரிக்கும் எல்லையைக் கண்டறிவது சிரமமானது. ``இந்த நாவலே எல்லைகளைப் பற்றியதுதான்'' என்கிறார் அருந்ததி ராய். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஓர் எல்லை உண்டு. `எதுவரை நான் அல்லது எதுவரை என்னுடையது?' என்னும் கேள்வி இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. எந்த எல்லை வரை நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள் என்பதும், எந்த எல்லை வரை உங்கள் சகிப்புத்தன்மை நீள்கிறது என்பதும்கூட முக்கியமானது. இந்த எல்லைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமானால், நீங்கள் ஜனாத்துக்கு வருகை தர வேண்டும். இது சொர்க்கமா எனத் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் நிச்சயம் இங்கே இடம் உண்டு என்பதால், அது சொர்க்கமாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சொர்க்கம் இறந்த காலத்தின்மீது எழுப்பப்பட்டிருக்கிறது என்பது ஒரு பொருட்டல்ல. காரணம், அது எதிர்காலத்தையே கட்டமைக்கிறது.

இந்த நாவலை அருந்ததி ராய் எழுதி முடித்தபோது, ``எந்தப் பதிப்பகத்துக்கு உங்கள் நாவலை அளிக்கலாம்?'' என்று கேட்டார் அவருடைய இலக்கிய ஏஜென்ட். ``கேட்டுவிட்டுச் சொல்கிறேன்'' என்று பதிலளித்தார் அருந்ததி ராய். இந்தப் பதிலைக் கேட்டுத் திகைத்துப்போனார் ஏஜென்ட். ``உறவினர்கள், நண்பர்கள் என யாரிடமும் நீங்கள் எதற்கும் அனுமதி கேட்பதுபோலத் தெரியவில்லையே ராய்? நீங்களும் நானும் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமல்லவா? ஏற்கெனவே பல விண்ணப்பங்கள் வந்துவிட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராயல்டி தொகையை அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். யார் அதிகம் அளிக்கிறார்களோ அவர்களுக்கு இந்த நாவலை வெளியிடும் உரிமையை அளிப்பதுதானே நடைமுறை?''

``இல்லை, அப்படிச் செய்ய வேண்டாம். என் நாவலில் இடம்பெறும் கதாபாத்திரங்களைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்'' என்று சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, தன்னுடைய தேர்வைச் சொன்னார், ``இருப்பதிலேயே குறைவான தொகையை அளிப்பதாகச் சொன்ன பதிப்பகம் அது. பரவாயில்லை, அவர்களுக்கு அந்தப் பதிப்பகத்தைப் பிடித்துவிட்டது. அவர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்!''

அருந்ததி ராயின் முதல் நாவலுக்கு (காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்), உலகம் ஆரவாரமான வரவேற்பை அளித்தது. ``புக்கர் விருது பெற்ற அந்த நாவல், 42 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 80 லட்சம் பிரதிகள் விற்பனையாகின. பணம் குறித்த என் கவலைகள் அனைத்தையும் தீர்த்துவிட்ட நாவல் அது. எவ்வளவு ராயல்டி வருகிறது என நினைவில்லை'' என்று சிரிக்கிறார் அருந்ததி ராய். ``ஆனால், அதை நான் மட்டுமே எடுத்துக்கொள்வதில்லை. அது வேறு வழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது'' என்கிறார்.

முதல் நாவல் வெளிவந்து, அசாதாரண மான புகழ் வெளிச்சத்தில் நீந்திக்கொண் டிருந்தபோது, அருந்ததி ராய் நாவல் எழுது வதை நிறுத்திக்கொண்டார். ``அப்போது நான் மத்திய தர மக்களின் இதயத்தைக் கவர்ந் திருந்தேன். எல்லா இதழ்களும் அட்டையில் என் புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. அதற்குப் பிறகு இந்தியா அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியது. எல்லாமே மாறிப்போனது'' என்கிறார் அருந்ததி ராய்.

சிரிய கத்தோலிக்க அம்மாவுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெங்காலி இந்து அப்பாவுக்கும் பிறந்தவர் அருந்ததி ராய். இவருக்கு இரண்டு வயதாகும்போது பெற்றோரின் திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது. ``நானும் அம்மாவும் நெருக்கமாக இருக்கும்போது அணுகுண்டு களைச் சுமந்துகொண்டு இருக்கும் இரு நாடுகளைப்போல இருப்போம்'' என்று அருந்ததி ராய் சிரித்தாலும், தன் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுள் அம்மாவும் ஒருவர் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

கேரளாவில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கி நடத்தியதோடு மனித உரிமைகளிலும் ஆர்வம் செலுத்திய மேரி ராயின் துணிச்சலும் நம்பிக்கையும் அருந்ததி ராயை பாதித்தன. தன்னுடைய எல்லைகளை மற்றவர்கள் நிர்ணயிக்கக் கூடாது என்பதில் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருந்தார் அருந்ததி ராய். மனைவி, தாய் போன்ற அடையாளங்கள், காற்றில்லாத ஓர் அறையில் அடைத்துவைத்த உணர்வையே அளித்தன எனச் சொல்லி, திருமண உறவிலிருந்து வெளியேறிவிட்டார்.

எழுதத் தொடங்கும்போதே சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன. முதல் நாவலில் `சமூகத்தைக் கெடுக்கும் கருத்துகள்’ இருப்பதாகச் சொல்லி ஐந்து வழக்குரைஞர்கள் இணைந்து வழக்கு தொடுத்தனர். 2002-ம் ஆண்டு நர்மதா அணைக்கு எதிராக ராய் குரல்கொடுத்தபோது கைதுசெய்யப்பட்டு ஒருநாள் சிறையில் அடைக்கப்பட்டார். காஷ்மீர் குறித்த அவருடைய நிலைப்பாட்டுக் காக தேசத்துரோகக் குற்றச்சாட்டு அவர்மீது சுமத்தப்பட்டது. ``வழக்குகளும் மிரட்டல் களும் சர்ச்சைகளும் என்னைத் தடுத்து நிறுத்துவதில்லை'' என்கிறார் அருந்ததி ராய்.

அவருக்கு எல்லைகள்மீது நம்பிக்கை யில்லை. ``வர்க்கம், சாதி, மதம், இனம், பாலினம் போன்ற எல்லைகளை அரசியல் நம்மீது திணிக்கிறது. நீ ஒரு பிராமணன். நீ ஒரு பெண். நீ ஒரு தலித். நீ ஒரு திருநங்கை. நீ ஒரு சேரிவாசி. நீ ஓர் ஓரினப்புணர்ச்சியாளர். இவை எல்லாம்தான் உன் அடையாளங்கள்; உன் எல்லைகள் என்பது நம்மைப் பிளவுபடுத்தும் அரசியல். இந்த அரசியல், மனிதர்களுக்கு எதிரானது'' என்கிறார் ராய். ``நான் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க விரும்புகிறேன். அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களை எளிதில் நசுக்கி வீசிவிட முடிகிறது என்பதால், அவர்கள் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் நம்பிக்கையற்றுப் போயிருக்கிறார்கள். அவர்களிடம் சொற்கள் இல்லை. எனவே, நான் அவர்களுக்காக எழுதுகிறேன். நான் அவர்கள் பக்கம் நிற்பதால் அதிகாரத்துக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டியிருக்கிறது. எதிர்ப்புகள் வரத்தானே செய்யும்?''

ட்ரம்பின் அமெரிக்காவாக இருந்தாலும் சரி, மோடியின் இந்தியாவாக இருந்தாலும் சரி. நீதி அச்சுறுத்துலுக்கு உள்ளாகும்போதெல்லாம் அருந்ததி ராய் எழுதத் தொடங்கிவிடுகிறார். ``சரி, இருவரில் யார் ஆபத்தானவர்?'' எனக் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில்...

``இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தினர் தாங்கள் ஒட்டுமொத்தமாக `கெட்டோ'வில் (ஒதுக்கப்பட்ட சேரி) அடைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். மக்கள், தெருக்களில் வைத்து அடித்தே கொல்லப்படுகிறார்கள். அரசாங்கத்தை யாரெல்லாம் விமர்சிக் கிறார்களோ, அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்பதே இன்றைய நிலை. வன்முறை நிகழ்வுகள், அனைவரையுமே அச்சத்தில் தள்ளியிருக்கின்றன. `ட்ரம்பைவிடவா மோடி ஆபத்தானவர்?' என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆம், அப்படித்தான் நானும் கருதுகிறேன். ட்ரம்ப் குறித்து அங்குள்ள நீதிமன்றமும் ஊடகமும் மற்ற அமைப்புகளும் கவலைப்படுகின்றன. இந்தியாவிலோ, அமைப்புகள் அனைத்தும் மோடியிடம் சரணடைந்துவிட்டன. அடிப்படையில் நான் வன்முறையை எதிர்க்கிறேன்'' என்கிறார் அருந்ததி ராய்.

செயல் அளவில் மட்டுமல்ல, சிந்தனை அளவிலும். சாதியமைப்பு என்பதும் வன்முறைதான். மேலே உள்ளவர்கள் கீழே இருப்பவர்களை ஒடுக்குகிறார்கள். அதற்கான அதிகாரத்தையும் நியாயத்தையும் சாதியமைப்பு அவர்களுக்கு வழங்குவதால், அந்த அமைப்பை அவர்கள் பாதுகாக்க விரும்புகிறார்கள். பெண்கள்மீதான அதிகா ரத்தை ஆண்கள் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் மீதான அதிகாரத்தை அரசு தக்கவைத்துக்கொள்கிறது. இதில் வலது, இடது பேதங்கள் எனக்கில்லை.

அருந்ததி ராயைப் பொறுத்த வரை, அரசியல் இல்லாத படைப்பு என்றொன்று இல்லை. நீங்கள் ஒரு பாலிவுட் கதையை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அது ஒரு காதல் கதை. வெள்ளைச் சருமம் கொண்ட இருவர், படம் முழுக்கக் காதலிக்கிறார்கள், அவ்வளவுதான். இருந்தும், இது அரசியலற்ற படம் எனச் சொல்லிவிட முடியுமா? இந்த இரு காதலர்களும் ஏன் வெள்ளைச் சருமம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் சராசரி இந்தியர்களைவிட மாறுபட்டிருக்கிறார்கள்? ஏன் இந்தப் படத்தில் அவர்களுடைய சமூகம் தென்படவில்லை? ஏன் இந்தப் படத்தில் சாதி இல்லை? நம்மை பாதிக்கும் எது ஒன்றைப் பற்றியும் ஏன் இந்தப் படம் பேசவில்லை? இந்தக் கேள்விகளில் அரசியல் இல்லையா? காஷ்மீரில் பள்ளிக்கூடக் குழந்தைகள் ஏன் கற்களைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்? சத்தீஸ்கரில் பெண்களின் கரங்களில் ஏன் துப்பாக்கிகள் இருக்கின்றன?

`ஐயோ, வன்முறைக் கலாசாரம் பெருகி விட்டது' எனக் கூச்சலிடாதீர்கள். ஏன் இப்படி நடக்கிறது என்று கேளுங்கள். இப்படியொரு நிலை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏன் ஏற்பட வேண்டும்? எது அல்லது யார் அவர்கள் கையில் கற்களையும் துப்பாக்கிகளையும் திணித்தார்?

தெரிந்துகொள்ள காஷ்மீருக்குச் சென்று உரையாடினார் அருந்ததி ராய். சத்தீஸ்கரின் காடுகளுக்கும் இந்தக் கேள்விகளே அவரை இழுத்துச் சென்றன. பிரிவினைவாதிகள் என்றும், கலகக்காரர்கள் என்றும், தேசத் துரோகிகள் என்றும், மாவோயிஸ்டுகள் என்றும் தூற்றப்பட்டவர்களிடம் அருந்ததி ராய் உரையாடினார். ``எனவே, பிரிவினை வாதி என்றும் கலகக்காரி என்றும் தேசத் துரோகி என்றும் மாவோயிஸ்டு என்றும் அழைக்கப்படுகிறேன்'' என்கிறார் ராய்.

சிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்

அருந்ததி ராயின் எழுத்து களை மேலோட்டமாகப் பார்வையிடும் ஒருவருக்குக்கூட அவர் ஓர் இலக்கியவாதியாக அல்ல; அரசியல்வாதியாகவே பெரிதும் தோற்றமளிப்பார். இதை அருந்ததி ராயே உணர்ந் திருக்கிறார். ``என்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை உடனுக்குடன் என்னால் பதிவு செய்ய முடிகிறது. உடனடியாகச் சொல்லியே தீரவேண்டிய விஷயம் அது என்பதால், தடையின்றி என்னால் எழுத முடிகிறது. மலையிலிருந்து பாய்ந்து விழும் அருவியைப்போல் சொற்கள் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு உருண்டோடி வருகின்றன. ஆனால், நாவல் என்று வரும்போது நிதானம்
வந்துவிடுகிறது.

சத்தீஸ்கரில் நடப்பதை உடனுக்குடன் சொல்லியாக வேண்டும். இந்துத்துவ அபாயத்தை உடனே சொல்ல வேண்டும். பாசிசம் உங்களை வீழ்த்த வருகிறது என்பதைக் கத்திச் சொல்ல வேண்டும். ஆனால், ஒரு கதையை நீங்கள் நிதானமாகச் சொன்னால் போதும். ஒவ்வொரு சொல்லும் உங்களிடம் வந்துசேரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். ஒரு கதாபாத்திரம் உருதிரண்டு உங்கள் மனம் முழுக்க நிறைந்து கொள்ள அவகாசம் தேவைப்படும். அந்த அவகாசத்தை அளிக்க நான் தயாராக இருக்கிறேன். வாழ்க்கையில் எனக்குப் பெரிதாகக் குறிக்கோள் எதுவும் இல்லை'' என்கிறார் அருந்ததி ராய்.

``நான் எங்கும் செல்ல விரும்பவில்லை. எனக்கு வேறு எதுவும் வேண்டாம். யோசித்துப் பார்த்தால் `இதுதான் நிஜமான சுதந்திரமோ!' என நினைக்கத் தோன்றுகிறது. எனக்குப் பரிசுகளோ விருதுகளோ பணமோ தேவையில்லை. நான் உணர்வுபூர்வமானவள். கோபப்படுகிறேன், சீறுகிறேன், துடிக்கிறேன். இதெல்லாம் இல்லாவிட்டால், நான் ஒரு ரோபோவாக மாறிவிடுவேன் என அஞ்சுகிறேன். எனவே, எழுதுகிறேன்!''