மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 89

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

நான்கு புரவிகள் பூட்டிய தேர், அன்றைய பகல் முழுவதும் பயணித்துக்கொண்டிருந்தது. திசைவேழரின் எண்ண ஓட்டத்துக்கு இணையாகப் பாய்ந்து கொண்டிருந்தன குதிரைகள். திசையெங்கும் நிலம் விரிந்து கிடக்கிறது. ஆனால், போருக்கான களமாக அதில் எதுவும் திசைவேழருக்குத் தோன்றவில்லை. கபிலர் பேச்சேதுமின்றி அமைதியாக உடன் வந்தார். தேரில் திசைவேழரின் மாணாக்கர்கள் இருவர் இருந்தனர்.

மூஞ்சலிலிருந்து தேர் புறப்படும்போதே வலவனுக்கு மறைமுகமாக அரச உத்தரவு சொல்லப்பட்டது. அவன் அதற்கேற்ப வெங்கல்நாட்டின் உட்பகுதியை நோக்கித் தேரைச் செலுத்தினான். நெடுந்தொலைவு உள்ளே வந்ததும் திசைவேழர் கேட்டார்.

``உன் பெயர் என்ன?”

``முடத்திருக்கண்.”

``நான் உன்னை `படைகளின் எல்லையை விட்டு வெளியில் அழைத்துச்செல்’ என்றேன். நீ ஏன் இங்கு வந்தாய்?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 89

முடத்திருக்கண் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ``பரந்துவிரிந்த நிலப்பகுதி. எனவே, இங்கு அழைத்துவந்தேன்” என்று தலை கவிழ்ந்தபடி சற்றே அச்சத்துடன் சொன்னான்.

``குதிரைகளுக்கு மட்டும்தான் கடிவாளம் இருக்க வேண்டும். வலவனுக்கு இருக்கக் கூடாது” என்று கூறிய திசைவேழர், ``இருக்கையை விட்டுக் கீழிறங்கு” என்றார்.

முடத்திருக்கண் கீழிறங்கினான். தன் மாணவர்களைப் பார்த்து, ``நீங்கள் யாரேனும் தேர் ஓட்டுவீர்களா?” என்று கேட்டார்.

ஒருவன் தலையசைத்தான்.

``நீ வலவன் இருக்கையில் அமர்ந்து தேரைச் செலுத்து” என்றவர் கீழிறங்கிய முடத்திருக்கண்ணைப் பார்த்துச் சொன்னார், ``பாண்டியநாட்டுக்கும் பறம்புநாட்டுக்கும் உரிமையில்லாத நிலம் நோக்கி ஓடு. உனக்குப் பின்னால் தேர் வரும்” என்றார்.

`பெருந்தண்டனை வழங்கிவிடுவாரோ!’ என்று அஞ்சியவன், சற்றே ஆறுதலுடன் ஓடத் தொடங்கினான். வெங்கல்நாடு, பாண்டியநாட்டின் பகுதி. அப்படியென்றால், வெங்கல்நாட்டின் எல்லையை விட்டு வெளியேற வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் பாண்டியநாட்டுக்கு உட்பட்ட சிறுகுடி மன்னர்களின் ஆளுகைப் பகுதி. எனவே, அங்கு செல்ல முடியாது. மேற்குத் திசையில் பறம்பின் பச்சைமலைத்தொடர். அங்கும் செல்ல முடியாது. மீதம் இருப்பது தென்திசை மட்டுமே. அந்தத் திசையில்தான் தட்டியங்காடு இருக்கிறது. மனிதனின் காலடித்தடமே படாத பெரும்நிலப்பகுதி. காற்று மட்டுமே கடந்தறியும் நிலம் அது. மனிதனோ, மன்னர்களோ உரிமைகொள்ளாத நிலம் அது. அதை நோக்கி ஓடத் தொடங்கினான் முடத்திருக்கண். தேர், அவன் பின்னே சென்றது.

அந்தத் திசையில் செல்லச் செல்ல எதிர்க்காற்று வீசியது. புற்று நிறைந்த பகுதி அது. எங்கும் கருமணலும் ஈக்கி மணலும் பரவியிருந்தன. சரலையோடிய நிலம் கண்கொண்டு பார்க்க முடியாதபடி இருந்தது. முடத்திருக்கண் ஓடிக்கொண்டே இருந்தான். காய்ந்த சருகைப்போன்ற குணம்கொண்ட இந்த மண்ணில் செடிகொடிகள் முளைக்காது. படலைப்புற்றும் குடைப்புற்றும்தான் எங்கும் முளைத்துக் கிடந்தன. உள்ளே செல்லச் செல்ல அச்சம் மேலேறிக்கொண்டிருந்தது.

``விரைந்து ஓடு” என்ற திசைவேழரின் குரல் கேட்டது. மீண்டும் வேகத்தைக் கூட்டினான். எதிர்க்காற்று அவனை முன்னேறவிடாமல் தள்ளியது. முயன்று ஓடினான். மூச்சிரைத்தது. குதிரைகள் அவன் மேல் பாய்வதைப்போல வந்துகொண்டே இருந்தன. வேகமெடுத்து ஓடினான். கூரியகற்கள் பாதங்களைக் கிழித்தன. குருதி ஒழுகியபடி ஓடிக்கொண்டே இருந்தான். திசைவேழரின் ஏவற்குரல் கேட்டுக்கொண்டே யிருந்தது.

முடிந்தளவுக்கு வேகமாக ஓடினான். கண்கள் கட்டின. மயக்கம் வருவதுபோல் இருந்தது. ஆனாலும் முயன்று ஓடினான். இன்னும் சிறிது நேரத்தில் விழுந்துவிடுவான் என்பது தெரிந்தது.

``அவன் எத்திசையை நோக்கி விழுகிறானோ, அத்திசையை நோக்கித் தேரைத் திருப்பி ஒரு பொழுதுக்கு விரைந்து ஓட்டிச் செல்” என்றார் திசைவேழர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 89

சிறிது நேரத்தில் முடத்திருக்கண் மயங்கி விழுந்தான். மேற்குத் திசை நோக்கி சாய்ந்து கிடந்தது அவனது தலை. தேரை மேற்கே திருப்பி முழு வேகத்தோடு ஓட்டினான் மாணவன்.

நான்கு குதிரைகள் பூட்டிய தேரை விரைந்து செலுத்த முயன்றான். ஆனால், குதிரைகளால் பாய்ந்து செல்ல முடியவில்லை. கனைப்பொலி எழுப்பியபடி தலையை மறுத்தாட்டித் துடித்தன. மாணவனுக்கு, தேரை ஓட்டப் போதிய பயிற்சியில்லை எனத் தோன்றியது. ஒரு பொழுதைக் கடந்ததும் தேரை நிறுத்தினான். திசைவேழரும் கபிலரும் கீழிறங்கினர்.

``தவறிழைத்தவன் தண்டனையின் வழியே காட்டிக்கொடுத்த இடம் இது” என்று சொல்லிக்கொண்டே இறங்கிய திசைவேழர், ``இந்த இடத்துக்கு ஏதோ பெயர் சொன்னானே?” எனக் கேட்டார்.

``தட்டியங்காடு” என்றான் மாணவன்.

``பெரும்புலவரே, நாம் இழைத்த தவறுகளுக்குத் தண்டனை இந்தத் தட்டியங்காடுதான். நம் தலை சாயும் வரையிலும் இந்த நிலம் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்.’’

தலையசைத்தபடி கபிலர் சொன்னார், ``ஆனாலும் கடமையைச் செய்வோம்.”

மாணவர்களை அனுப்பி அனைவரையும் அழைத்துவரச் சொன்னார் திசைவேழர்.

மாணவர்கள் மூஞ்சல் நகருக்கு வந்து செய்தியைத் தெரிவித்தனர். தட்டியங்காடு என்கிற இடத்தை இதுவரை யாரும் கேள்விப்படக்கூட இல்லை. மையூர்கிழாரை அழைத்துக் கேட்டனர். ``மனித வாடை அறியாத மண். கறையான்கள் ஆளும் நிலம். முழுமையாகச் சென்று பார்த்தவர் யாருமில்லர்” என்றார்.

மனக்குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரும் புறப்பட்டனர். பொழுது மறைவதற்குள் தட்டியங்காட்டுக்கு வந்து சேர்ந்தனர். குலசேகரபாண்டியன் தேர் விட்டுக் கீழிறங்கியதும் மேற்குத் திசையைத்தான் பார்த்தார். காரமலை, மிகத் தொலைவிலும் இல்லை; அருகிலும் இல்லை. இடைப்பட்ட இடத்தில் இருந்தது. அதை எதிரிகளால் பயன்படுத்த முடியுமா என்ற சிந்தனையில் மூழ்கினார்.

அவர்கள் வந்த சிறிது நேரத்தில் சிறு தேர் ஒன்று வந்தது. அதில் வாரிக்கையனோடு புதிய மனிதன் ஒருவன் வந்தான். கருங்கைவாணனுக்கு இணையான உடல் அமைப்பைக்கொண்ட அவனை, அனைவரும் உற்றுப்பார்த்தனர். ``இவன்தான் பாரியா?” என்று கேள்வி எழுந்துகொண்டிருந்தது.
தேர் விட்டு இறங்கிய வாரிக்கையன் உரத்த  குரலில் சொன்னார், ``பறம்பின் தளபதி முடியன்.”

இங்கு நிற்கும் எந்த ஒரு தேரையும் ஒரே அடியில் நொறுக்கும் அளவுக்கு இறுகித் திருகிய உடலமைப்பைக்கொண்டவன். அனைவரின் பார்வையும் அவனை நோக்கி இருந்தபோது திசைவேழர் அறிவித்தார், ``நாற்புறமும் நிலைமாறாக் குணம்கொண்ட இடம். எவ்வளவு குருதி சிந்தினாலும் குடித்து முடிக்கக் காத்திருக்கும் நிலம். மலையெனப் பிணங்கள் குவிந்தாலும் மறுநாளில் இல்லாமலாக்கும் கோடானுகோடிக் கறையான்கள் வாழ்கின்ற மண். அழுகல், நாற்றம் மேலேறி வராது. அடைமழை பொழிந்தாலும் நீர் நிற்காது. மரங்களோ, புதர்களோ. நீர்நிலைகளோ இல்லாத போர்க்களத்துக்கே உரிய பாழும் நிலம். எனவே, இந்தத் தட்டியங்காடே போர்க்களமாகும்.”

அனைவரின் கண்களும் முன்னும் பின்னுமாகத் திரும்பி எல்லா திசைகளையும் பார்த்தன. திசைவேழர் அறிவிப்பைத் தொடர்ந்தார், ``இங்கிருந்து வடதிசையில் வேந்தர்படையும் தென்திசையில் பறம்புப்படையும் அணிவகுக்க வேண்டும்.”

வேந்தர்களுக்கு சற்றே நிம்மதியானது. படை கிழக்கு மேற்காக அணிவகுத்தால் பறம்புப்படைக்குப் பின்புற அரணாகக் காரமலை அமைந்துவிடும். எனவே, படையணியின் திசை மாறியது ஆறுதலாக இருந்தது.

வாரிக்கையன் உள்ளுக்குள் மகிழ்ந்தார். கிழக்கு மேற்குமாகப் படையணி இருந்தால் எதிர்த்திசையில் கண்ணுக்கு அப்பால் வேந்தர்படை நிற்கும். பார்த்தறிவது கடினம். இப்போது வடக்கு தெற்காகப் படையணி நிற்கப்போகிறது. வடதிசையில் வேந்தர்படை எவ்வளவு நீளத்துக்கு நின்றாலும் மலைமேல் இருந்து துல்லியமாகப் பார்த்தறிய முடியும்.

திசைவேழரின் குரல் மேலும் ஒலித்தது, ``இந்த இடம் கோபுரப் பரண் அமைக்கப்பட்டு அதன் மேல் நாழிகைத் தட்டு வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் பகல் ஐந்தாம் நாழிகை தொடங்கும்போது போர் தொடங்க முரசறைவோம். பகலின் இறுதி ஐந்தாம் நாழிகை தொடங்கும்போது போர் முடிவதற்கான முரசறைவோம். முரசறைய இருபுறங்களிலும் ஐந்தைந்து கோபுரங்கள் அமைக்கபட்டு அவற்றில் முரசறைபவரோடு என் மாணவர்களும் நிற்பர்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 89

அனைவரும் கேட்டுக்கொண்டு நின்றனர்.

``போரின் விதிகள் ஏற்கெனவே படிக்கப்பட்டுவிட்டன. இனி புதிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லை” என்றார்.

அனைவரும் பார்த்திருக்க, கருங்கைவாணன் முன்வந்தான். மூவேந்தர்களையும் பணிந்து வணங்கினான். மூவரும் வாழ்த்தினர். கோல்சொல்லிகளின் முன்வந்து குனிந்து தட்டியங்காட்டு மண்ணை எடுத்தான்.

``போரின் விதிகளை மீற மாட்டோம்” என்று கூறியபடி போர்க்கள மண்ணை திசைவேழரின் கைகளில் கொடுத்து வாக்களித்து வணங்கினான்.

அதேபோல முடியன் முன்வந்தான். குனிந்து மண் அள்ளி கபிலரின் கைகளில் கொடுத்து வாக்களித்து வணங்கினான்.

திசைவேழர் பறம்பின் தரப்புக்காக நின்றிருந்த கபிலர், வாரிக்கையன், முடியன் ஆகியோரைப் பார்த்துக் கூறினார், ``எமது தரப்பில் அளிக்கப்பட்ட வாக்கு மீறப்பட மாட்டாது. போர்விதிகளை வேந்தர்படை காக்கும். இது நான் அளிக்கும் உறுதி.”

நின்றிருந்த மூவேந்தர்களையும் தளபதிகளையும் பார்த்து கபிலர் கூறினார், ``திசைவேழர் நிலைமான் கோல்சொல்லியாக இருக்கும் மேடையில் அவரோடு நின்று பொழுதை அளக்கும் தகுதி வேறு யாருக்குமில்லை. எனவே, அவரின் வாக்கையே நாங்களும் ஏற்கிறோம். பறம்பின் தரப்பில் போரின் விதிகள் மீறப்பட மாட்டாது என்று நிலைமான் கோல்சொல்லியாகிய நான் உறுதியளிக்கிறேன்.”

போர் தொடங்க இரவின் நாழிகையே மிச்சமிருந்தது. தொடக்கத்துக்கு முன்பு அனைத்தையும் திட்டமிட வேண்டி யிருந்தது. தட்டியங்காட்டைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. நிலவாகு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி முழுமையான செய்தியோடு நள்ளிரவுக்கு முன் வரவேண்டும் என மையூர்கிழாருக்கு உத்தரவிட்டான் `மகாசாமந்தன்’ கருங்கைவாணன்.

அளவற்ற உற்சாகத்தோடு இருந்தது கருங்கைவாணனின் செயல். ``மலைக்காடைபோல் நாகரவண்டைத் தூக்கி வந்ததால் நமக்கான இரை நம்மைத் தேடி வரப்போகிறது. பாரி, மலையை விட்டுக் கீழிறங்கித் தாக்க ஒப்புக்கொண்டபோதே அவனது முடிவு உறுதியாகிவிட்டது. தட்டியங்காடே அவனது மரணம் நிகழப்போகும் இடம்” என்று சீறி முழங்கினான் கருங்கைவாணன்.

தன் தளபதிகளுடன் போர் உத்திகளைப் பற்றி விரிவாகத் திட்டமிட்டான். மலைமக்களின் இணையற்ற போர்க்கருவிகள் வில்லும் அம்பும்தான். அவற்றை எதிர்கொண்டு நிற்பது மட்டுமே சற்று கடினமானது. அதற்குத் தகுந்தபடி படையின் அமைப்புகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டனர். ``வேந்தர்களின் படையோடு ஒப்பிடும்போது பறம்பின் படையில் மிகவும் வலிமையிழந்த படைப்பிரிவு வாட்படையாகத்தான் இருக்கும். எனவே, வேந்தர்களின் வாட்படை விற்படைக்குத் துணையாக, மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சேனைகளை அணிவகுக்கலாம்’’ என்ற ஆலோசனையைக் கூறினான் விற்படைத்தளபதி துடும்பன். ஆனால், இந்த ஆலோசனையை வாட்படைத்தளபதி சாகலைவன் ஏற்கவில்லை.

``மலைமக்கள், போதிய வாட்பயிற்சி அற்றவர்கள். நமது படைத்தொகுப்பில் வலிமைமிக்கது வாட்படைதான். இதை முழுமையாக ஒருங்கிணைத்துத் தாக்கினால்தான் எதிரியின் படையைப் பிளந்து முன்னேற முடியும். முதல் நாள் நமது தாக்குதல் எந்த அளவுக்கு வலிமை கொண்டதாகவும் பிளந்து முன்னேறக் கூடியதாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்குப் போரின் போக்கைத் தீர்மானிக்கும்” என்றான்.

``குதிரையும் தேரும் நம்மிடம் இருப்பதில் பத்தில் ஒரு பங்குகூட எதிரிகளிடம் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல எதிரிகளிடம் பெரும் எண்ணிக்கையிலான யானைப்படை இருப்பதற்கான எந்தச் செய்தியும் இல்லை. எனவே, முதல் நாளில் நாம் வகுக்கும் உத்தி எல்லா வகையிலும் போரை முடித்து வெற்றியை அறிவிப்பதாக இருக்க வேண்டும்” என்றான் கருங்கைவாணன்.

காரிருள் சூழ்ந்தது. இரவின் இந்த அமைதி இன்று மட்டுமே இருக்கப்போகிறது. நாளைய இரவில் எத்தனை ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்து முடியவிருக்கின்றன எனக் கணக்கிட முடியாது. காற்றுவெளி முழுவதும் சிதைவுற்ற மனிதர்களின் ஈனக்குரலால் நிறைந்திருக்கப்போகிறது. பேரோலமும் பெருக்கெடுக்கும் குருதி ஆறும் தட்டியங்காடு எங்கும் நின்றாடும் மரணத்தின் ஆட்டமும் சொல்லி மாளாது. மனம் நிலை பிறழ்ந்து இருந்தது. குழப்பத்தினூடே தனது குடிலுக்கு வந்தார் திசைவேழர்.

தேரை விட்டு இறங்கும்போதே குடிலுக்குள் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. `இந்த இரவில் தனது குடில் அறிந்து வந்திருப்பது யாராக இருக்கும்?’ என்ற எண்ணத்துடனே உள்நுழைந்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 89

உள்ளே அமர்ந்திருந்தது பாண்டியநாட்டு இளவரசி பொற்சுவை.

பெருந்திகைப்புக்குள்ளானார் திசைவேழர். உள்நுழைந்ததும் திசைவேழரின் கால் தொட்டு வணங்கினாள் பொற்சுவை. அருகில் இருந்த சுகமதி, திசைவேழரை வணங்கி வெளியேறினாள். பாண்டிய இளவரசி இந்த இரவு வேளையில் இங்கு வந்திருப்பது ஏன் என அவருக்குப் புரியவில்லை. சிறு விளக்கு எரியும் அந்தக் குடிலில் மண் மெழுகிய திண்ணையில் அமர்ந்தாள் பொற்சுவை. மரச்சட்டகத்தால் ஆன இருக்கையில் அமர்ந்தார் திசைவேழர்.

முகம் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து விளக்கின் சுடரைப் பார்த்துக்கொண்டே பொற்சுவை கேட்டாள், ``கோள் கணிக்கும் பேராசான் கொலை நிலத்தில் பரண் ஏற எப்படி ஒப்புக்கொண்டீர்?”

முதல் கேள்வியே திசைவேழரை நேர்கொண்டு தாக்கியது. அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும்  தாக்குண்ட உணர்வை வெளிக்காட்டாமல் மெல்லிய குரலில் சொன்னார், ``மூவேந்தர்களும் கேட்டுக்கொண்டதால் என்னால் மறுக்க முடியவில்லை.’’

``காலம் கணிக்கும் பேராசானே அதிகாரத்தின் சொல்லை மறுக்கும் ஆற்றலை இழப்பதுதான் கேடுற்ற காலத்தின் அடையாளம்.”

ஈட்டிபோல் இறங்கின சொற்கள். திசைவேழரால் பொற்சுவையின் நோக்கத்தைக் கணிக்க முடியவில்லை. சற்றே அமைதியானார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பொற்சுவை சொன்னாள், ``இந்தப் போருக்குக் காரணமானவர் இருவர்.”

``ஒருவன் குலசேகரபாண்டியன். இன்னொருவன் வேள்பாரி. அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள்?” எனக் கேட்டார் திசைவேழர்.

``இல்லை.”

``அப்படியென்றால் யார் அந்த இருவர்?”

``ஒருத்தி நான். இன்னொருவர் நீங்கள்.”

மிரட்சியுற்றார். ``நான் எப்படிக் காரணமாவேன்?!”

``வான்வெளியில் சிறுபிசகு ஏற்பட்டாலும் காலத்தின்கோலம் எப்படியெல்லாம் மாறும் என்பதைக் கண்டறிந்து கூறும் பேராசான் நீங்கள். உங்களிடம் இதைச் சொல்லவேண்டிய நிலைக்கு வருந்துகிறேன். இருந்தாலும் சொல்கிறேன். எனது திருமணத்துக்காகக் கட்டப்பட்ட பாண்டரங்கத்தின் மேற்கூரையில் வானியல் அமைப்பை வரைய நிலைப்படம் கொடுத்தீர்கள். அது என்னவென்று யாருக்கும் புரியவில்லை. பேரரசரின் பிறப்பைக் குறிக்கும் படமும் ஒன்று; அரசியாரின் பிறப்பைக் குறிக்கும் படமும் ஒன்று. என்ன வானியல் அமைப்பது என நீங்கள் தெளிவாகச் சொல்லாததால், வெள்ளியைத் தவறாக வரைந்தான் அந்துவன்.”

`இதை எதற்கு இப்போது சொல்கிறார்?’ என்று எண்ணியபடி கேட்டுக்கொண்டிருந்தார் திசைவேழர்.

``மேற்குமலை பெருமழைகொண்டால் வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கும். `பாண்டரங்கத்தில் ஆடலும் பாடலும் செழிக்க, பாண்டியநாட்டில் உழவும் வணிகமும் தழைக்க இந்தக் கோள் நிலையே அடிப்படை!’ என்று கூறினீர்கள்.”

``அது இருக்கட்டும். இந்தப் போருக்கு நாம் இருவரும் எப்படிக் காரணம்?”

``அதைத்தான் சொல்ல வருகிறேன். எனது திருமணத்தின் பொருட்டே மையூர்கிழார் தேவவாக்கு விலங்கைப் பரிசாகத் தந்தார். பாண்டரங்கத்தில் வெள்ளியைத் தவறுதலாக வரைந்ததால் சினம்கொண்ட நீங்கள், அந்துவனைக் கண்டித்தீர்கள். உங்களின் சொல்லுக்கு அஞ்சியே அவன் புதிய படத்தை வரைந்து முடிக்கும் வரை பாண்டரங்கை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே தங்கியிருந்தான். அந்தக் காலத்தில்தான் தேவாங்கு வடதிசை நோக்கி உட்காரும் என்பதைக் கண்டறிந்தான். தேவாங்கின் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் எல்லா சிக்கல்களும் தொடங்கின. ஒருவகையில் நீங்களும் நானும்தான் இந்தச் சிக்கலுக்கான மூல முடிச்சின் கயிற்றை இணைத்தவர்கள்” என்றாள் பொற்சுவை.

திசைவேழருக்கு இந்தக் கூற்று ஏற்புடையதாக இல்லை. ``தற்செயலுக்கு மிகையான காரணம் கற்பிக்கிறீர்கள் இளவரசி.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 89

``இல்லை பேராசானே... இல்லை. எந்தத் தற்செயலும் தன்னியல்பில் நடப்பதில்லை. காரணங்கள் வழியேதான் காரியங்கள் நிகழ்கின்றன. தேவாங்கு மதுரைக்கு வந்து சேர்ந்ததற்கும் வடக்கில் இருக்கும் அதன் ஆற்றல் கண்டறியப்பட்டதற்கும் நீங்களும் நானும்தான் அடிப்படைக் காரணம்.”

``அப்படிப் பார்த்தால் அந்துவனும் பொதி யவெற்பனும் இதில் பங்கெடுப்பவர்கள்தானே?”

``நீங்கள் இல்லையென்றால் அந்துவன் படத்தை மறுமுறை வரைந்திருக்கவே மாட்டான். நான் இல்லையென்றால் இன்னொரு நாட்டு இளவரசியோடு பொதியவெற்பனுக்குத் திருமணம் நடந்திருக்கும். ஆனால், வணிகக்குலத்தின் பெருந்தலைவனின் இல்லத் திருமணமாக அது இருந்திருக்காது. அனைவரும் கவர்ச்சியான பொருள்களையே பரிசுப்பொருள்களாகத் தந்திருப்பர். தேவாங்கு போன்ற விலங்கைப் பரிசுப்பொருளாகத் தந்து பேரரசரின் கவனத்தை ஈர்க்கும் மனநிலை ஏற்பட்டிருக்காது. அந்துவனும் பொதியவெற்பனும் இதில் பங்கெடுத்தவர்கள்தான். ஆனால், பொறுப்பேற்கவேண்டியவர்கள் அல்லர்.”

காரணங்களைப் பொற்சுவை அடுக்கியவிதம், திசைவேழரை மறுக்கும் சொல்லின்றி நிற்கவைத்தது. சற்று நேரம் கழித்துக் கேட்டார், ``என்ன செய்யச் சொல்கிறீர்கள் இளவரசி?”

``நிகழவிருப்பது போரன்று; பேரழிவு. மூவேந்தர்களின் கூட்டுப்படை கடல்போல் பரந்துகிடக்கிறது. சின்னஞ்சிறிய ஒரு நாட்டின் மீது இவ்வளவு பெரும்படையெடுப்பை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. மதுரையிலிருந்து வரும் வழி எங்கும் துயருற்ற மக்களின் கண்ணீரைக் கடந்தே வந்தேன். உழவும் தொழிலும் நின்றொழிந்துபோயின. வேந்தர்களும் செல்வந்தர்களும் வாழ்வார்கள். படைக்கு வந்துசேர்ந்த வீரர்களின் குடும்பங்களை எல்லாம் மரணம் விழுங்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. காற்றெங்கும் விம்மல் ஓசை
கேட்டுக்கொண்டேயிருக்கிறது. இந்தக் கொடும் அழிவு தடுக்கப்பட வேண்டும். பறம்பின் மீது வேந்தர்கள் கோபம்கொள்ள எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆனால், பாரி அழியக் கூடாது. பாரியைப்போல அறவழிப்பட்ட ஒரு தலைவனை இதுகாறும் நான் கேள்விப்பட்டதில்லை. அவன் அழிக்கப்பட்டால் அறம் அழிக்கப்பட்டதாகவே பொருள். நீங்களும் நானும் அந்த அழிவுக்கான மூலமுடிச்சுகளாக இருந்தோம் என்பதை நினைக்கும்போதே உடல் நடுங்குகிறது. வாழ்வு எந்தக் கணத்திலும் முடிந்துவிடும். ஆனால், அறத்தின் அழிவுக்கான காரணம் நமது வாழ்வின் மீது படியுமேயானால் அதைவிட இழிவு வேறில்லை.”

பொற்சுவையின் குரலிலிருந்த ஆவேசம் திசைவேழரை நடுங்கவைத்தது. பாண்டரங்கின் மேற்கூரையைத் தவறாக அந்துவன் வரைந்தபோது `பாண்டியநாடு பாழ்படும்’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

`அந்துவன் முதலில் வரைந்ததே சரி. நிகழப்போகும் பேரழிவைப் பாண்டரங்கத்தின் மூலம் முன்னுணர்த்தியிருக்கிறது காலம். வைகையில் வெள்ளம் பெருகுகிற அதே நாள்களில்தான் இந்தப் பேரழிவும் அரங்கேறவிருக்கிறது. நான் அதைத் தவறென்று சொல்லி மாற்றினேன். காலத்தை மாற்ற நான் யார்? வெள்ளம் புரண்டோடும் வைகையின் கரையில் இருந்த என்னை அதே அந்துவன் அழைத்துவந்து அழிவின் நாள்களுக்குள் நிறுத்தியுள்ளான். அந்த வரைபடத்துக்குள் இப்போது நான் நிற்கிறேன். மாற்றிப்பார் என்கிறது காலம். நான் எனது சீற்றமிழந்து நிற்கிறேன். உள்ளுக்குள் புரண்டெழுந்த சொற்கள் தனக்குத்தானே உதிர்ந்து கரைந்தன. செயலற்று நின்றார் திசைவேழர். அவரைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பொற்சுவை.

சிறுவிளக்கின் சுடர் உமிழும் கரும்புகை மட்டுமே திசைவேழரின் கண்களுக்குத் தெரிந்தது.

``இந்தப் போரை நிறுத்த வழியேதும் இல்லையா? பேராசான் நீங்கள் நினைத்தால் முடியும் எனக் கருதுகிறேன்.”

பேசும் ஆற்றல் மேலெழவில்லை. ஆனாலும் முயன்று கூறினார். ``அந்த முயற்சியில் ஏற்கெனவே தோற்றுவிட்டேன். நிலைமான் கோல்சொல்லியாக இருக்க வாக்களித்த நான், இனி போரை வழிநடத்த மட்டுமே முடியும்.”

``அப்படியென்றால், வேறு என்னதான் வழி?”

அமைதி நீடித்தது. சற்று நேரத்துக்குப் பிறகு திசைவேழர் சொன்னார், ``ஒரு வழி உண்டு. அதை உங்களால் மட்டுமே செயல்படுத்த முடியும்.”

``என்னால் செயல்படுத்தக்கூடிய வழியா... என்ன அது?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 89

``தேவாங்கு என்னும் விலங்குக்காக இத்தனை ஆயிரம் மனிதர்களின் மரணம் நிகழவேண்டுமா? இந்தக் கேள்வி பாரியின் முன் வைக்கப்பட வேண்டும். முல்லைக்குத் தேர் ஈந்தவன் பல்லாயிரம் மரணங்களைத் தடுக்க தேவவாக்கு விலங்கைக் கொடுத்து உதவுவான் என்றே நம்புகிறேன். அவன் அந்த விலங்கைத் தர ஒப்புக்கொண்டால் பாண்டியனை இந்தப் போரிலிருந்து என்னால் வெளியேற்றிவிட முடியும். பாண்டியன் வெளியேறிவிட்டால் சேரனும் சோழனும் ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் கணமே போர் முடியும்.”

``பாரியிடம் இதை...” என்று பொற்சுவை கேட்டு முடிக்கும் முன் திசைவேழர் சொன்னார், ``நீங்கள் முயன்றால் உங்கள் ஆசான் கபிலரின் மூலம் இதைச் செயல்படுத்த முடியும்.”

நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்தது. போர்நிலத்தைப் பற்றிய செய்தியைச் சேகரிப்பதும் அதற்கேற்ப படை நிலை கொள்வதற்கான ஆலோசனை வழங்குவதுமாக கருங்கைவாணன் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தான். இந்த நாளுக்காகவே காத்திருந்த பொதியவெற்பன் கருங்கை வாணனுடன் இணைந்து  திட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

அவனது உத்தரவின்பேரில் போர்க்களக் கொட்டிலில் ஆயுதவாரிகளின் செயல்பாடுகள் தொடங்கின. கொடுத்தனுப்பிய வரைபடத்தின் அடிப்படையில் ஆயுதங்களைக் கொண்டு செல்ல வாகனங்கள் ஆயத்தமாக இருந்தன. சேனை முதலிகள் தங்களின் படைப்பிரிவுக்குத் தேவையான ஆயுதங்களை விரைவில் பெற்று அடுத்தகட்டச் செயல்பாட்டில் இறங்குவதில் மும்முரமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் நேரடியாக ஆயுதவாரியை அணுக முடியாது. பன்னிரு சேனைகொண்ட பிரிவுக்குத் தலைமை தாங்கும் சேனைவரையர்களைத்தான் அவர்கள் அணுக முடியும்.

தனக்குக்கீழ் இருக்கும் சேனைகளுக்குத் தேவையான ஆயுதங்களை ஆயுதவாரியிடமிருந்து பெற்றுத்தரும் பொறுப்பு சேனைவரையரைச் சார்ந்தது. எனவே, சேனைவரையர்கள் எல்லோரும் படைக்களக் கொட்டிலில் மொய்த்துக் கிடந்தனர்.

ஆயுதமேற்றிய வண்டிகளும் யானைகளும் நெருக்கடிக்குள் திணறிக்கொண்டிருந்தன. எங்கும் கூச்சலும் பேரோசையுமாக இருந்தது. ஆயுதவாரிகள் தங்களுக்குக் கீழுள்ள பணியாளர்களுக்கு இட்ட கட்டளைப்படி படைக்கலக் கொட்டிலிலிருந்து ஆயுதங்கள் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்தப் பேரோசை எதிரொலிக்காத அமைதி, சோழனின் கூடாரத்துக்குள் இருந்தது. அங்கு செங்கனச்சோழன், சோழவேழன், உதியஞ்சேரல் ஆகிய மூவரும் இருந்தனர். குலசேகரபாண்டியன் நிலைமான் கோல்சொல்லியாக திசைவேழரை அறிவித்ததன் காரணத்தைத் தெரிந்துகொள்ள எல்லாவகையிலும் முயன்றுகொண்டிருந்தனர். இருநாட்டு ஒற்றர்படைக்கும் அதுவே வேலையாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

திசைவேழர், கோல்சொல்லியாகி போர்க்களத்தையும் தேர்வுசெய்துவிட்டார். மூன்று நாட்டுத் தளபதிகளும் நாளைய போருக்கான ஆயத்த வேலைகளை ஒருங்கிணைந்து செய்துகொண்டிருந்தனர். ஆனால், வேந்தர்களின் மனங்களுக்குள் ஆழமான ஐயம் ஊடுருவியிருந்தது. இதைப் பற்றியே அவர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் சேரநாட்டு ஒற்றன் செய்தியொன்று கொண்டுவந்தான். ``இன்று பிற்பகலில் முசுகுந்தர் சிறைப்பிடிக்கப்பட்டு போர்க்களத்துக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.”

ஒற்றனின் செய்தி, பேரதிர்ச்சியை உருவாக்கியது. ``இது உண்மையா... என்ன காரணம்?” என்று அவனிடம் அடுத்தடுத்த  கேள்விகள் கேட்கப்பட்டன. ஒற்றனிடம் மிகக்குறைந்த விவரங்களே இருந்தன. ``பாண்டியப் பேரரசர் அருந்திய சுவைநீரில் நஞ்சு கலந்து சதிசெய்ய முற்பட்டார் என்ற காரணத்துக்காக முசுகுந்தர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால்,  பொதியவெற்பன் உள்ளிட்ட யாருக்கும் செய்தி தெரியாது’’ என்று கூறினான். கோல்சொல்லி யார் என முடிவெடுக்க நடந்த கூட்டத்தில்தான் இந்த முயற்சி நடந்ததாகவும் கூறினான்.

குலசேகரபாண்டியனின் செயல் மாற்றத்துக்கு இதுதான் காரணம் என அறிந்தபோது, கேட்டுக்கொண்டிருந்த மூவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் உதியஞ்சேரலுக்கு, தனது கருங்குரங்குக்குட்டி கத்தித் துள்ளியது நினைவுக்கு வந்தது. அன்றும் சுவைநீர் பருகும் நேரத்தில்தான் குரங்குக்குட்டி அவ்வாறு செய்தது. அப்படியென்றால், முசுகுந்தர் தொடர்ந்து ஏதோ ஒரு சதியில் ஈடுபட்டவாறே இருந்துள்ளார் என எண்ணினான். கபிலரோடு அவருக்கு இருந்த நெருக்கம் பற்றிய செய்தியும் பேச்சினூடே மேலெழுந்தது.

இன்று மாலை போர்க்களத்தில் கோல்சொல்லிகளின் அழைப்பை ஏற்று அனைவரும் வந்திருந்தபோது முசுகுந்தர் மட்டும் இல்லாதது நினைவுக்குவந்தது. ``குலசேகரபாண்டி யனின் முகம் இன்று மாலை மிகவும் தெளிவுகொண்டிருந்ததற்குக் காரணம் இதுதானோ?” எனக் கேட்டார் சோழவேழன்.

மனதுக்குள் இருந்த ஐயம் நீங்கிய கணம், போர்க்கொட்டிலிலிருந்து மேலெழுந்த ஓசை கூடாரம் முழுமையும் கேட்டது. `நாளைய போருக்கான ஆயுதங்களைக் கொடுத்தனுப்பும் வேலையை ஆயுதவாரிகள் செய்துமு டித்துவிட்டனர்’ என்ற செய்தியைச் சொல்ல வீரன் ஒருவன் உள்ளே வந்தான்.

இரவு முடிந்து விடியலின் கீற்று மேலெழுந்துகொண்டிருந்தது. கதிரவனின் புத்தொளி எங்கும் படர்ந்தபோது பகலின் முதல் நாழிகை தொடங்கியது. திசைவேழர் தனது கூடாரத்தை விட்டு வெளியில் வந்து தேர் ஏறினார்.

மாணவர்கள் எல்லோரும் முன்னரே புறப்பட்டுப் போயிருந்தனர். வலவன் குதிரைகளின் கடிவாளத்தைச் சுண்டி தேரை இயக்கினான்.

வழக்கமாக காலையில் கூடாரத்தை விட்டு வெளியில் வந்ததும் கதிரவனைப் பார்க்கும் திசைவேழர், இன்று சரிந்து நீண்டுகிடக்கும் தேரின் நிழலையே பார்த்தார்.

தட்டியங்காட்டுப் போர் தொடங்க இன்னும் மூன்று நாழிகையே இருக்கிறது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...