Published:Updated:

அன்பும் அறமும் - 18

அன்பும் அறமும் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 18

சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்

குடை நிழல்!

சிற்றூரில் உள்ள வங்கி ஒன்றின் மேனேஜர் அறைக்குள் அமர்ந்திருந்தேன். அப்போது நெற்றி யில் விபூதி அணிந்து கண்களில் துலக்கத்துடன் வந்து நின்றார் இளைஞர் ஒருவர். எடுத்த எடுப்பிலேயே ``என்னுடைய பாத்திரக் கடையை விரிவாக்கம் செய்ய விரும்புகிறேன். எனக்கு லோன் வேண்டும்” என உடைந்த ஆங்கிலத்தில் கேட்டார். ஆனாலும் அவர் தன்னம்பிக்கையாக எல்லோரையும்விட நன்றாகவே பேசினார். கற்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்ட பிறகு, அவர் சீக்கிரமே அதில் கரை சேர்ந்தும்விடுவார். ``என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்கிறீர்கள்?” என மேனேஜர் கேட்டபோது, அவரிடம் ஒருசில அடையாள அட்டைகளைத் தவிர வேறொன்றும் இல்லை.

அவர் வாடகைக்கு இருக்கும் அந்தக் கட்டடத்துக்குக்கூட முறைப்படியான ஒப்பந்தம் போடவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட காலாவதியான ஒப்பந்தம் ஒன்றை எடுத்துக் காட்டினார். அதைப் புதுப்பிக்கவுமில்லை. வாடகை கொடுப்பது-வாங்குவது எல்லாமே கைப்புழக்கம்தான். வங்கிப் பரிவர்த்தனைகள் பக்கம் தலைவைத்துக்கூடப் பார்க்கவில்லை. ``நிச்சயமாகப் பரிசீலிக்கிறேன்’’ என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு, மேனேஜர் என்னிடம், ``நீங்களே பாருங்க. எந்த புரூஃப்பும் இல்லை. இன்னிக்கு நான் கொடுத்துடுவேன். திடீர்னு டிரான்ஸ்ஃபர் ஆகிட்டா வம்பு வழக்குன்னு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க முடியுமா? அதைக்கூட விடுங்க. ஒரு சேல் டீல்கூட சரியா போடாத பொறுப்பின்மையை நம்பி எப்படிக் கடன் கொடுக்கிறது, சொல்லுங்க. 70 வயசு பெரியவர் ஒருத்தருக்குக்கூட சின்னத் தொகை ஒண்ணை சொந்த ஜாமீன்ல கொடுத்திருக்கேன். இந்தப் பையனுக்கு ஏன் தயங்குறேன்னு புரியுதா” என நீளமாக விளக்கம் கொடுத்தார். அவருக்கும்கூட அந்தப் பையனுக்கு லோன் கொடுக்க ஆசைதான். அவனது பொறுப்பின்மை காரணமாக இவர் கையறுநிலையில் தவித்தார்.

அன்பும் அறமும் - 18

இதே மாதிரிதான் இன்னொரு தம்பி தடபுடலாக ஒரு வியாபாரம் செய்தான். ஒருசில ஆண்டுகளில் அந்தத் தொழில் வழியாகச் சில கோடிகளை உருட்டிப் போட்டு எடுத்தான். அத்தனையும் கைவழிப் பரிவர்த்தனைகள்தான். அவனுக்கு வங்கியை ஏமாற்ற வேண்டும் என்றெல்லாம் நோக்கமில்லை. மற்ற விஷயங்களிலெல்லாம் யோக்கியமான பையன். வங்கிப் பரிவர்த்தனைகள் என்றாலே ஓர் அச்சம். பேங்க்கில் போய் இன்னமும் செலானை நிரப்பத் தெரியாதவர்கள், படித்த கூட்டத்திலேயே எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? நானெல்லாம் அந்த வகையைச் சேர்ந்தவன்தான்.

பரீட்சையில் எக்ஸ்ட்ரா ஷீட் வாங்கு வதைப்போல, நான்கைந்து செலான்களை எடுத்துக்கொண்டு போய் அடித்துத் திருத்தி எழுதிக்கொண்டிருப்பேன். பணத்தை எழுத்தால் எழுதச் சொன்ன இடத்தில் ராயலாகக் கையெழுத்தைப் போட்டுவைப்பேன். தூரத்தில் இருந்து பார்த்தால், ஏதோ சக்ரவியூகத்தினுள் அபிமன்யூ நின்றதைப்போல் பேப்பரும் கையுமாக நின்றுகொண்டு, வரிசையில் பின்னால் நிற்கிறவர்களை ``நீங்க முன்னாடி போங்க அண்ணாச்சி. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு’’ என முன்னுக்குப் போகச் சொல்லிக்கொண்டி ருப்பேன். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

அன்பும் அறமும் - 18


தம்பியும் அந்த மாதிரிதான் இதை நச்சுப்பிடித்த வேலையாக நினைத்துக்கொண்டான். சேமிப்புக்கணக்கைத் தவிர அவருக்கு வேறு எதுவும் வரவுசெலவுக் கணக்கில்லை. அந்தச் சேமிப்புக்கணக்கிலும் 2,000 ரூபாய் இருப்பு தாண்டாமல் பார்த்துக்கொண்டார். கீழே இருந்து தொழில் பார்க்க வருகிறவர்கள், பணத்தை அவர்கள் கைகளில் உருட்டிக்கொண்டே விளையாடப் பிரியப்படுகிறார்கள். மொத்தமாய் அதை ஓர் இடத்தில் ஸ்தூலமாகப் பார்த்தால்தான் அதன் மதிப்பை அவர்களால் எடைபோட முடிகிறது. இது ஒருவகையிலான சந்தைக்கடை மனநிலை.

தம்பியின் தொழில் திடீரென முடங்கிவிட்டது. இப்போது வேறு ஒரு தொழிலுக்கு முதலீட்டாளர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஓர் ஈ, காக்கா கிடைத்த பாடில்லை. அவர் தனது பழைய வியாபாரத்தில் வந்தவற்றை வங்கிகளின் வழியாகப் பரிமாற்றம் மட்டும் செய்திருந்தால், இப்படி அலைய நேர்ந்திருக்காது. முறைப்படியான ஆவணங்களை உருவாக்கி வைத்திருந்தால், தேடி வந்து வீட்டின் கதவைத் தட்டியிருப்பார்கள். அந்தத் தம்பி ஆவணங்களை உருவாக்குகிற அளவுக்கு வசதி படைத்தவர்தான். பாத்திரக் கடையை விரிவுபடுத்துகிற ஆவலில் வந்து நின்ற அவரும் இவரும் ஒரே தவற்றைத்தான் செய்தார்கள்.

எல்லாத் தொழிலுக்கும் ஓர் ஒழுங்கு இருக்கிறது. நான்கு பேருக்கு நடுவிலான வியாபாரம் என்கிறபோது அதையெல்லாம் மீறுவது சகஜம்தான். ஆனால், தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் இப்படிப் பொறுப்பின்மையைப் பொது இடங்களில் காட்டித் திரியக் கூடாது. `ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றப்போகிறவர்களுக்கு லோன் தரும் வங்கிகள், ஐந்து லட்சம் ரூபாய் கேட்பவருக்கு ஏன் தர மறுக்கின்றன?’ எனக் கேள்வி எழலாம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஆயிரம் கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டவன் கொத்துக் கொத்தாய்ப் பேப்பர்களை மேஜையில் அடுக்கினான். நம்ம ஆள்கள் முதல் பக்கம் கிழிந்த ரேஷன் அட்டையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு வந்து கேட்டால், பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்?

`என்னுடைய அரசு, என்னுடைய வங்கி’ என்றெல்லாம் தெருவில் நின்றுகொண்டு சத்தம் விடக் கூடாது. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். புரோநோட்டில் எழுதி வாங்காமல் எங்கேயாவது கடன் கொடுப்பார்களா?

கம்மலைக் கழற்றி வாங்கிக்கொண்டு 1,000 ரூபாயை வட்டிக்குக் கொடுக்கும் அக்கா ஒருவரைப் பார்த்திருக்கிறேன். ``கம்மல என் காதுலயா மாட்டிக்கிட்டுத் திரியப்போறேன். என்ன இருந்தாலும் பாதுகாப்புதானே! நகை லோன் பேங்ல வாங்கப்போனா பொட்டிக்குள்ள வாங்கி உரசிப்பார்த்து வெச்சுக்கிறான்ல. நான் என்ன இப்ப உரசியா  பார்த்தேன்... கவரிங்னுதான் நினைச்சேனா? எல்லாம் ஒரு நம்பிக்கைதான் பாத்துக்க” என அந்த அக்கா அதன் வியாபார விதிகளை எளிமையாக விளக்கினார். இந்த லட்சணத்தில் வங்கி மேனேஜர்களிடம் மட்டும் போய் எகிறினால் என்ன பயன்?

அன்பும் அறமும் - 18

அந்தக் கதையை விட்டுவிடலாம். ஆயிரம் கோடி ரூபாய் ஆட்டையைப்போட்ட வர்களை விட ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியவர்கள், அதைக் கட்டுவதில் அதிக நேர்மை காப்பார்கள். வங்கியில் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கிய முதியவர் ஒருவர் அதன் கடைசித் தவணையைக் கட்டும்போது, ``நெஞ்சு அறுத்துக்கிட்டே இருந்துச்சு. கை நீட்டி வாங்கிய கடனைக் கட்ட முடியாமப்போயிடுமோன்னு நினைச்சேன். இப்பதான் நிம்மதியா இருக்கு. என்ன இருந்தாலும் கடனைத் திருப்பிக் கட்டி முடிக்கிறது ஒரு சொகம்தான்” என்றார். அந்தச் சுகம் 5,000 கோடி ரூபாயில் இருக்குமா எனத் தெரியவில்லை.

வாங்கிய கடனை ஊதாரிபோல செலவழித்துவிட்டு, இன்னொரு நாட்டில் தப்பிப்போய் அமர்ந்துகொள்கிறவர்களை எல்லாம் என்னால் தோற்றுப்போன தொழிலதிபர் லிஸ்ட்டில் வைக்கவே முடியாது. அவர் தொழிலில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு, `அடுத்தவரிடம் பெற்ற கடனை வட்டியோடு முறையாகத் திருப்பித் தந்துவிடு! அடுத்தவர் பணத்தைக் கையாளும்போது, கூடுதல் பொறுப்போடு செயல்படு’ என்றுதான் சின்ன வயதிலிருந்தே சொல்லித்தந்திருக்கிறார்கள்.

பார்ட்னர்ஷிப் கடை ஒன்றில் ஒருவர் அவரின் பார்ட்னர் இல்லாத சமயத்தில் ஒரு பொட்டலம் பக்கோடா வாங்கக்கூடக் காசை எடுக்க மாட்டார். பார்ட்னர் இருக்கும்போது உரிமையாகச் சொல்லிவிட்டு எடுப்பார். கேட்டால், ``இது என்னுடைய பணம் மட்டுமில்லை, ரெண்டு பேரோட பணம். அதைப் பொறுப்பா கையாளணும்” என்பார். இரண்டு பேர் சேர்ந்து ஆரம்பிக்கும் வாய்வழி ஒப்பந்தத் தொழிலிலேயே இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால், கூட்டுத் தொழில்களில் அதுவும் மக்கள் பணப் பங்களிப்புகொண்ட தொழில்களில் எவ்வளவு பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்!

இப்போதெல்லாம் தொழில்முறையாக வணிகப் பொறுப்புகள் குறித்து கற்றுத்தர நிலையங்கள் நிறைய வந்துவிட்டன. வணிகப் படிப்பு படிப்பவர்களுக்கு இத்தகைய போதனைகள் கற்பிக்கப்படுகின்றன. கூடவே, ஒரு நிறுவனத்தைக் கட்டி எழுப்பும்போதே அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டுகிற மாதிரியான ஆவணங்களைத் தயார்செய்கிறார்கள். கிடைக்கும் எல்லா அரசுச் சலுகைகளையும் பயன்படுத்திக்கொண்டு மேலே பறக்கச் சொல்லித்தருகிறார்கள். இதுமாதிரி தொழில்முறையான கூட்டம் இந்தச் சமூகத்திலேயே கிளை பரப்பி வளரவும் ஆரம்பித்துவிட்டது.

ஒரு வியாபாரம் பேசப் போன இடத்தில் நண்பர் ஒருவரிடம், ``இந்தத் தொழிலுக்கு அரசாங்கத்தில் மானியத்துடன் நிறைய லோன் கொடுக்கிறார்கள்’’ என்று சொன்னதற்கு, ``லோனெல்லாம் வேண்டாம் சார். நச்சுப்பிடிச்ச வேலை. கையில இருக்கிறதைப் போட்டுச் செய்வோம்’’ என்றார். எனக்குப் புரியவில்லை. எதற்காக வணிகம் செய்கிறோம்? ஒருவர் லோன் கொடுக்கிறேன் என வந்து நிற்கும்போது, எதற்காகக் கைக்காசைப் போட்டுத் தொழில் நடத்த வேண்டும்? குறைவான வட்டியைக் கொடுத்துவிட்டுப் போகலாமே!

அரசாங்கத்திடம் கையேந்தக் கூடாது என்பது பழைய மனநிலை. இது தொழில்முறை மனநிலை அல்ல. அந்த லோனின் கடைசித் தவணையைக் கட்டிய பெரியவரின் மனநிலை. அதையும் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், தொழில் முறையாக, பெரிதாக கிளை விரிக்கத் துடிப்பவர்கள், துறை சார்ந்த ஒழுங்கை மேற்கொள்வதில் உள்ள தயக்கங்களை உடைத்தாலே போதுமானது. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. இப்போதெல்லாம் கையை நன்றாகக் கழுவிவிட்டு வந்துதான் முற்றத்தில் நிற்கும் காக்காயைக்கூட விரட்டுகிறார்களாம்!