பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“துணிச்சல்தான் அவளோட அழகு!”

“துணிச்சல்தான் அவளோட அழகு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“துணிச்சல்தான் அவளோட அழகு!”

சு.சூர்யா கோமதி - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

“அனுவுக்கு அசைவ உணவுகள் ரொம்பப் பிடிக்கும். மாடலிங் போனதுக்கு அப்புறம் அதையெல்லாம் குறைச்சுக்கிட்டா. ‘ஜெயிக்கிறதுக்காகச் சில விஷயங்களை இழக்கிறது தப்பில்லம்மா’னு சொல்லுவா. இருந்தாலும் எனக்குத்தான் மனசு கேட்காது. அவ வீட்டுக்கு வந்ததும், சூப்பரா ஒரு நான் வெஜ் விருந்து சமைக்கணும்’’ - இந்தியாவே தன் பெண்ணைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் தருணத்திலும், அக்மார்க் அம்மா கவலையில் இருக்கிறார் செலீனா. ‘ஃபெமினா மிஸ் இந்தியா 2018’ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நம் திருச்சிப் பெண் அனுக்ரீத்தி வாஸின் அம்மா.

“துணிச்சல்தான் அவளோட அழகு!”

சென்னை, லயோலா கல்லூரியின் பி.ஏ. பிரெஞ்சு இரண்டாம் ஆண்டு மாணவியான அனுக்ரீத்தி, ‘ஃபெமினா மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்றார். அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் நடந்த ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ பட்டத்தையும்  வென்றிருக்கிறார். அடுத்ததாக, ‘மிஸ் வேர்ல்டு’ போட்டியில் இந்தியா சார்பாகப் போட்டியிடவிருக்கிறார். இந்தியாவைவே திருச்சியைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் தன் பெண்ணால், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி இருக்கிறார் செலீனா. ஒரு பிபிஓ கம்பெனியில் பணிபுரியும், ‘மிஸ் இந்தியா’வின் அம்மாவிடம் பேசினேன்.

“என் பொண்ணு பிறந்தப்போ எவ்ளோ சந்தோஷப்பட்டேனோ, அப்படி ஓர் உணர்வை இப்போ மீண்டும் அனுபவிக்கிறேன். நேற்றுவரை திருச்சியின் ஒரு கடைக்கோடியில, எங்களுக்குனு எந்த பிரத்தியேக அடையாளமும் இல்லாம இருந்த நாங்க, இன்னைக்கு ஹெட்லைன் நியூஸ் ஆகியிருக்கோம். இது கனவான்னுகூடத் தோணுது.

“துணிச்சல்தான் அவளோட அழகு!”

நான் சிங்கிள் பேரன்ட். என் பொண்ணுக்கு நாலு வயசு இருக்கும்போது, அவ அப்பா எங்களை விட்டுப் பிரிந்துட்டார். அனுவையும், அவ தம்பியையும் அப்பாவும் அம்மாவுமா இருந்து வளர்த்து எடுத்தது, சில வரிகளில் சொல்லிக் கடந்துடுற கஷ்டம் இல்ல. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போனேன். குழந்தைகளை நல்லாப் படிக்கவைக்கணும் என்ற கவலை ஒருபுறம் இருக்க, நாம நின்னா, நடந்தா குத்தம் சொல்லன்னே இருக்கிற கூட்டத்தை எதிர்கொள்ற தைரியமும் தேவைப்படும். எனக்கு அப்போ அது இல்லை. என் பொண்ணுதான் எனக்கு வழிகாட்டியா இருந்தா. ‘நம்மால் எதுவும் செய்ய முடியும்மா’னு சொல்லிட்டே இருப்பா. அவளோட தன்னம்பிக்கை எப்பவும் வேற லெவல்ல இருக்கும்.

எந்தச் சூழ்நிலையிலும், அப்பா இல்லையே என்ற ஏக்கம் என் பிள்ளைகளுக்கு வந்துடக்கூடாதுனு பார்த்துப் பார்த்து வளர்த்தேன். நல்ல ஸ்கூல்ல படிக்கவெச்சேன். அனுகிட்ட யாராச்சும் அவங்க அப்பாவைப் பத்திக் கேட்டுட்டா, அவளுக்கு பயங்கர கோபம் வரும். ‘என் அம்மாதான் என் அப்பாவும்’னு அடுத்த நொடி பதில் சொல்லி அந்தப் பேச்சுக்கு ஃபுல்ஸ்டாப் வெச்சுடுவா. ஸ்கூல்ல படிக்கும்போதே டான்ஸ், ஸ்போர்ட்ஸ்னு எல்லாவற்றிலும் ஃபர்ஸ்ட் வருவா. சின்னப் பாராட்டுக்காக நிறைய மெனக்கெடுவா, போராடுவா. அந்தப் போராட்ட மனசுதான், எந்தப் பின்புலமும் இல்லாத அவ மேல இந்தியாவின் வெளிச்சம் விழவெச்சிருக்கு.

“துணிச்சல்தான் அவளோட அழகு!”

நான் அவளைப் படிக்கவெச்சதைத் தவிர, எதுவுமே பிரத்யேகமா பண்ணினதில்லை. எல்லா இடங்களிலும் அவளுக்கான வாய்ப்பை அவளே உருவாக்கிக்கிட்டா. பள்ளிப் படிப்பு முடிந்ததும் சென்னை, லயோலா கல்லூரியில் சேர்ந்தா. திடீர்னு ஒருநாள் வந்து, ‘அம்மா நான் மாடலிங் பண்ணப் போறேன், எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையா இருக்கு’னு சொன்னா. ஏற்கெனவே ஆண் துணை இல்லாம இருக்கோம். அவ மாடலிங்னு சொன்னதும், ‘நம்மை மாதிரி மிடில் க்ளாஸுக்கு அதெல்லாம் செட் ஆகாதும்மா’னு சொன்னேன். ‘நம்மைச் சுத்தி நாமே ஏன் வட்டம் போட்டுட்டு அதுக்குள்ள இருக்கணும்? எல்லாத் துறைகளிலும்தான் ரிஸ்க் இருக்கும். அதை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இருக்கு. என்னால் என்னைக் கேரி பண்ணிக்க முடியும்’னு சொன்னா. அப்போதான், அனு மெச்சூரிட்டியில் என்னைவிட வளர்ந்துட்டதை உணர்ந்தேன். அவ தைரியத்துக்கு மதிப்பு கொடுத்து, அவ விருப்பத்துக்கு விட்டேன். 

காலேஜ்ல, அவளுக்கு ஹாஸ்டல் ஃபீஸ் மட்டும்தான் நான் கட்டுவேன். ‘நீ தம்பியைப் பாரும்மா, நான் என்னைப் பார்த்துக்குவேன்’னு சொல்லி, தன்னோட செலவுகளை மாடலிங் செய்து சமாளிச்சுக்குவா. மேலும், ‘உனக்கு என்ன வேணும், சொல்லும்மா’னு படிக்கிற வயசுலேயே கேட்டு வாங்கிக் கொடுத்தவ என் பொண்ணு. அவளோட நண்பர்கள் அவளுக்குப் பலமா அமைந்தாங்க, நிறைய உதவுவாங்க. எதுவாயிருந்தாலும் என்கிட்ட ஷேர் பண்ணிடுவா. எத்தனை ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும், அவளுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் நான்தான்.

“துணிச்சல்தான் அவளோட அழகு!”

அனு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வாங்கியதை டி.வி-யில்தான் பார்த்தேன். ஆனந்தக் கண்ணீர் என்பது இதுபோன்ற ஒரு தருணத்தில் இயல்புதான். நானும் அழுதேன். வைராக்கியமா இருக்கிறது எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பழகிப்போன ஒண்ணு. அப்படி இருந்ததற்கான பலனை அடைந்த அந்த நாள்ல, அதுவரை நாங்கள் பட்ட எல்லாக் கஷ்டமும் கரைஞ்சுபோச்சு. அனுவோட போட்டோவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தேன்” என்று நெகிழ்ந்த செலீனா, சட்டென மகிழ்ச்சி மோடுக்கு மாறுகிறார்.

“ ‘மாடலிங்ல டஸ்க்கி ஸ்கின்னுக்கு எல்லாம் வேல்யூ இல்லை’னு பலர் என் பொண்ணுகிட்டயே நேரடியா சொன்னாலும், எல்லாத்தையும் தன்னோட தன்னம்பிக்கையால உடைச்சு எறிஞ்ச துணிச்சல்தான் அவளோட அழகு.  இனி நம்ம பொண்ணுங்களுக்கு அழகுக்கான வரையறைகளைச் சரியா சொல்லிக் கொடுப்போம், அவங்களை ஆளுமைகளா வளர்த்தெடுப்போம்!”