Published:Updated:

மெய்ப்பொருள் காண்

மெய்ப்பொருள் காண்
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண்

மெய்ப்பொருள் காண்

உயிரக்காரன் - ஜோ டி குருஸ்

டித்து, பல்வேறு நிலைகளில் அன்றாடம் உழன்று, உலக நிகழ்வுகளை தன் கையடக்கத் தகவல் தொழில்நுட்ப வசதியில் தெரிந்துகொள்ளும் இன்றைய தலைமுறையிடம் இருப்பது, சமூகத்தின் மீதான அக்கறையா அல்லது துவேஷமா? மிகவும் பதற்றத்தோடேயே இந்த வரியை எழுதுகிறேன். 

மெய்ப்பொருள் காண்

`நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்’ என்பது, எனக்குத் தெரிந்து உழைத்து வாழும் அத்தனை அடித்தளச் சமூகங்களின் நிலைப்பாடாகவே இருக்கிறது. சமூகரீதியாக யாருடைய அதிகாரமும் தங்கள் மேல் வருவதை யாரும் விரும்புவதில்லை. இன்றைக்கு சாதிரீதியாகப் பிரிந்து நிற்கும் அத்தனை சமூகங்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பங்காளிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். நாகரிகம், படிப்பு, வளர்ச்சி என்ற பெயரில் சுயநலமாக வெறுப்பை விதைத்துவிட்டோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் என் தாய்வழித் தாத்தா தொம்மந்திரையாருக்கும், குட்டத்து தங்கவேல் நாடார் தாத்தாவுக்கும் பரஸ்பரம் உறவு இருந்தது. உறவின் வெளிப்பாடாய்ப் பட்டதில் பருமீனைச் சுமந்துகொண்டு இவர் அங்கே கொடுப்பதும், விளைந்ததில் செழுமையானதை அவர் இங்கு கொண்டுவந்து தருவதும் நான் கண்டது. தீபாவளியோ, பொங்கலோ குட்டத்துக் கொண்டாட்டம், ஆமந்துறை வரை நீண்டது. அதுபோல் கிறிஸ்துமஸ், புதுவருடக் கொண்டாட்டங்கள் குட்டத்திலும்… நுங்கு போட்ட பதநீரும், மாலை மாம்பழப் பதநீரும், கருப்பட்டிக் கூப்பணியும் கல்கண்டும்... இன்று நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறவைத்துவிடுகின்றன. அந்தோணியார் திருவிழாவும், முத்தாரம்மன் கொடையும் வித்தியாசமாகத் தெரியவில்லை. நட்பைப் பேணுவதற்காக உயிரைக்கூடக் கொடுப்பார்களாம். இதுவே `உயிரக்காரன்’ உறவுமுறை.

மே மாத இறுதியில் தங்கவேல் தாத்தா ஆமந்துறை அந்தோணியார் கோயிலுக்கு ஆடு வெட்டி அசனம்வைக்க வருவார். ஏழைகளுக்குப் புண்ணியம் வைத்தார்களோ இல்லையோ, முதல் பந்தியில் நான் அமர்ந்து சாப்பிடுவேன். அந்தோணியாரின் ஆசி ஒருபுறமென்றால், மறுபுறம் கட்டித்தங்கம் ஆச்சியின் கைப்பக்குவத்தில் உருவாகும் அசனக்கறிக் குழம்பும் தங்கவேல் தாத்தா வீட்டில் கருவாட்டுக் குழம்பும் சுவையாக இருக்கும்.

1980-ம் ஆண்டு என நினைக்கிறேன். கடுமையான வாடைப்புயல் நேரம். இரவு 8 மணி அடித்து, ஊரே தூங்கிக்கொண்டிருந்த வேளையில் மீன்துறை அதிகாரிகள் ஜீப்பில் வந்து, ‘கடுமையான புயல் அபாயம் இருப்பதால், ஊரைக் காலிபண்ணச் சொல்லி எச்சரிக்கிறார்கள். புயலுக்கு முந்தைய அமைதி என்பார்களே, அதுபோல கடலும் அனக்கமில்லாமல் பயமூட்டியது. நடுச்சாமத்தில் கையில் கிடைத்த மூட்டை முடிச்சுகளை எடுத்தபடி ஊரே புலம்பெயர்ந்து வடக்கு நோக்கிப் போகிறது. என்னுடைய தலையிலும் ஒரு டிரங்க் பெட்டி. வடக்கே நாடார் மக்கள் வாழும் இடையன்குடி, அர்த்தராத்திரியில் ஆரவாரமாய் நுழையும் ஆமந்துறைப் பரதவர்களைப் பார்த்து அவர்கள் பயப்படவில்லை. மாறாக, அடுக்கடுக்காக ஒவ்வொரு வீட்டிலும் விளக்கு ஏற்றப்படுவதைப் பார்க்கிறேன். பரிதவித்து ஓடிவந்த பரதவர்களை இருகரம் விரித்து ஆரத்தழுவி வரவேற்றார்கள் நாடார் மக்கள். வீடுகளைத் திறந்துவிட்டார்கள். எங்கும் கதலியும் கருப்பட்டிக் காபியும் கலந்த மணம். எங்கிருந்து வந்தது இந்தப் பாசமும் நேசமும்? இன்று நினைத்தாலும் அந்த அப்பழுக்கற்ற அன்பில் மலைத்துப்போகிறேன்.

இவர்களோடுதானே உரசல் வருகிறது. சிலவேளை அதுவும் கைமீறிப்போய் கலகமாக மாறிவிடுகிறதே! ஏக்கத்தோடு தங்கவேல் தாத்தாவிடம் ஒருநாள் கேட்டேன், ``அய்யா, பேரப்புள்ள வேறொண்ணுமில்லங்கேம். ஒறவு இருந்தாத்தான ஒரசல் வரும். அண்ணனும் தம்பியும், மாமனும் மச்சினனும்தான் சண்டைபோடுவான். தலகீழா நின்னாலும் அய்யமாருகூட நம்ம சண்ட புடிக்கப்போறதில்லல்லா, அங்கன ஒறவும் இல்ல பாத்துக்கிடுங்க.’’ என்றார்.

நான் பெரிதும் மதிக்கும் பொன்னீலன் அண்ணாச்சியும் எங்களது சமீபத்திய உரையாடலில் இந்த ‘உயிரக்காரன்’ உறவுமுறையைச் சிலாகித்துப் பேசினார். இந்தத் தலைமுறைகளிடம் இதுபோன்ற ‘உயிரக்காரன்’ உறவுமுறையைப் பேணும் பக்குவம் இல்லாமல்போனதா அல்லது இருந்தும் நம் கண்களுக்குத் தெரியவில்லையோ, தெரியவில்லை.

பொற்றை - ஜெயமோகன்

குமரி மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள சொல், `பொற்றை’. மேடு, கரடு என்று மையநிலத் தமிழில் சொல்வதுதான். மேடான வெறும்நிலம் என்று பொருள். கேட்டாலே தெரியும், தமிழ் வேர்கொண்ட சொல்தான். மலையாளம் தவிர, இன்றுள்ள வேறெந்த மொழியிலும் இந்தச் சொல்லின் ஏதேனும் ஒலிவடிவம் இல்லை.

மெய்ப்பொருள் காண்

எஸ்.வையாபுரிப் பிள்ளையின் பேரகராதி, சொற்பிறப்பியலைச் சுட்டுவதும்கூட. மிகையான உய்த்தல்களும் முன்முடிவுகள்கொண்ட தாவல்களும் இல்லாமல், நாமே கண்கூடாகச் சொற்பிறப்பைப் பார்க்க அதில் வாய்ப்புண்டு. ஒரு சொல்லின் முன்னும் பின்னும் உள்ள சொற்களின் நிறையைப் பார்த்தால் மட்டும் போதும். ஆனால், `பொற்றை’யின் முன்னும் பின்னும் உள்ள சொற்கள் அதனுடன் இணையவில்லை.

புணர்ச்சி இலக்கண அடிப்படையில் வேர்ச்சொல் எடுத்துப் பார்த்தால், பொள்ளல் என்பதிலிருந்தே பொற்றை வந்திருக்க வாய்ப்பு. `பொள்ளுதல்’ என்றால் மேலெழுதல், உப்புதல் என்று பொருள். மலையாளத்தில் அதுவும் புழக்கத்தில் உள்ள சொல்தான். `கரிமீன் பொள்ளிச்சது’ என்றால், தோசைத் தட்டில்வைத்து பொக்குளம் வர வேகவைத்த கரிமீன். `பப்படம் பொள்ளுதல்’ என்பார்கள். தமிழில் சிற்பவியலில் மட்டும் அந்தச் சொல் புழக்கத்திலுள்ளது. உள்ளீடற்ற உலோகச் சிற்பங்கள் வடிக்கும் முறைக்குப் `பொள்ளல்முறை’ என்று பெயர். உள்ளீடற்ற தன்மையை `பொள்ளையானது’ என்று சொல்வதுமுண்டு.

இன்னொரு கோணத்தில் வந்தால், பொக்குதல் என்ற சொல்லிலிருந்து பொற்றை வந்திருக்கலாம். பொக்குதல் என்றால், மலையாளத்திலும் பழந்தமிழிலும் தூக்குதல், மேலே உயர்த்துதல். பொக்கப்பட்டது ‘பொக்கை’ ஆகிப் பொற்றை ஆகியிருக்கலாம். பொக்கை என்றால் தமிழில் உள்ளீடின்மை.

பொள் என்னும் வேரிலிருந்து வந்தவையே மேலே காணும் இரு சொற்களும். மேலும் சொற்களைத் தேடிச் சென்றால், பொக்கணம், பொகுட்டு, பொங்கல், பொச்சம், பொச்சு, பொச்சை போன்ற பல சொற்கள் இந்த வரியில் வரலாம். பொக்குள் என்றால், மலையாளத்தில் தொப்புள். அது ஒரு கொப்புளம்தானே? பொட்டல், பொந்தர் போன்ற சொற்கள் இதன் முளைகளாக இருக்கலாம். பொற்றுதல், பொன்றுதல் இதிலிருந்து வந்திருக்கலாம்.

வேர்ச்சொல் தேடிச் செல்கையில் நாம் எப்போதும் மொழிக்கு முந்தைய பழங்குடி உள்ளத்தைச் சென்றடைகிறோம். அவர்களின் கற்பனையையும் அதற்குக் காரணமாக அமைந்த அழகிய அறியாமையையும், நுண்ணிய நோக்கையும் காண்கிறோம். பொற்றையைப் பொள்ளையானது என்று பார்த்திருப்பாரோ அந்த மூத்தபாட்டா? எந்த முதுமக்கள் தாழிக்குள் எங்கே உறங்குகின்றனவோ அவன் எலும்புகள். எங்கிருந்தாலும் அவனுக்கு வணக்கம்!