மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி

தங்கமயில் ஆட்டம்புதிய தொடர்ஓவியங்கள் : செந்தில்

யிலு குஞ்சுமோன் என்று ஒருவர் இருந்தார். அப்பாவின் தொலைதூரத்துச் சொந்தக்காரர். நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த கதையைத்தான் சொல்கிறேன். தன்னுடைய கிராமத்தில் ஒரு சினிமாக் கொட்டகையில் நடந்த அடிதடியில் சிக்கி, அங்கிருந்து தலைமறைவாகி எங்களூருக்கு ஓடிவந்தவர் அந்த மயில். ஒரு கெட்ட வார்த்தையைச் சற்றே மாற்றியபோது கிடைத்த மயிலு எனும் பட்டப்பெயரை அவர் கடுமையாக வெறுத்தார். “டேய் மயிலு..” என்று அழைப்பவர்களிடம் “பல கத்திக் குத்து கேசுல போலீஸு தேடிட்டிருக்கிற ஆளு நானு... தெர்மா?” என்றெல்லாம் வீம்புக்குக் கேட்பார். ஆனால், யாரோ கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் பயந்து நடுங்கி ஊரைவிட்டே ஓடி மலையேறி வந்தவன்தான் மயில் என்று என் அம்மா சொன்னார். எங்கள் மலைக் கிராமத்தில் மாமன்கள், மாமிகள், அண்ணன் தம்பிகள் எனப் பல தூரத்துச் சொந்தங்கள் மயிலுக்கிருந்தன. அந்த வீடுகள் ஒவ்வொன்றிலும் ஏறியிறங்கி சந்தோஷமாக வாழ்ந்தார். ஆனால், பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் தங்குவார். நேராநேரம் ருசியாக உண்பதும் எந்நேரமும் போர்த்திக்கொண்டு தூங்குவதும் மயிலின் கட்டாயத் தேவைகளாக இருந்தன. “டேய் குஞ்சுமோனே... இந்த வீட்டுல எவ்வளவு வேல கெடக்குதுடா? எதாவதொண்ணுக்கு நீயும் கொஞ்சம் ஒதவக் கூடாதா?” என்று என் அம்மா ஒரேயொரு முறை கேட்டதற்கு மயில் செய்த காரியம் என்னவென்று தெரியுமா?

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி

அம்மாவை ஏறெடுத்துப் பார்க்கவே பிடிக்காத ஒரு நாத்தனாரை, ‘சின்னப் பெங்ஙள்’ என்று அனைவரும் அழைத்துவந்த தனது தூரத்து மாமி ஒருவரை மயில் உசுப்பேற்றிவிட்டார். அந்தம்மா எங்கள் வீட்டுக்கு விரைந்து வந்து “ஏட்டீ கண்டார் வீட்டிலேந்து கட்டிக்கிட்டு ஏறிவந்த  ‘கூத்திச்சீ...’ எங்க வீட்டிலெல்லாம் பொம்பளைங்களுக்கில்லடீ... ஆம்பளைங்களுக்குத்தான்டீ குஞ்சு இருக்கு... கைக்கோட்டும் பறம்பு வீட்டில பொறந்த ஆம்பளைங்ககிட்ட வெளயாட நீ வளந்துட்டியாடீ ‘புலையாடீ…’ ” என்று பயங்கரமான கெட்ட வார்த்தைகளைப் பேசி பெரும் பிரச்னையைக் கிளப்பினார். அம்மா மௌனமாகிவிட்டார். மயில் முன்பைவிடச் சிறப்பாக உண்டு உறங்கினார். வார இறுதிகளில் அவர் இரட்டையார் நிர்மலா, கட்டப்பன சங்கீதா, நெடுங்கண்டம் தர்சனா, தங்கமணி ஜெமினி போன்ற சினிமாக் கொட்டகைகளைச் சென்று பார்வையிட்டார். அங்கே வந்துகொண்டிருந்த திரைப்படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து ரசித்த அந்த மயில்தான் ஏழே வயதான என்னையும் சினிமா வெறியின் அடியில்லா பள்ளத்துக்குள் தள்ளிவிட்டார்.

சினிமாப் பார்வையின் கிளுகிளுப்புகளுக்கு மயில் முதலில் அழைத்துச் சென்றது, பதினாறு வயதின் பாலியல் திக்குமுக்கில் அவஸ்தைப்பட்டு ஒல்லிக் குச்சியாகிப்போன தங்கனை. தங்கனும் எனது சொந்தக்காரப் பையன்தான். இரவில் இரண்டாம் ஆட்டங்கள் முடிந்த பின் மலைப்பாதைகளில் அடர்ந்து கசியும் இருட்டில் நெடுந்தூரம் நடந்து வீடு வந்துசேர மயிலுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. துணைக்குப்போகும் தங்கன், முழுநேரமும்  ‘சிலுமாக் கொட்டை’க்கு வெளியே நின்று படத்தின் ஒலிச்சித்திரத்தை மட்டும் கேட்பான். மயிலோ விஸ்தாரமாக உள்ளே அமர்ந்து படம் பார்ப்பார். ஆனால், தங்கன் ஒன்றும் சாதாரண ஆளில்லை. பள்ளிக்கூடமே போகவில்லை என்றாலும் அவனிடம் முக்கியமான சில ரகசியத் தகவல்கள் இருந்தன. அவற்றுக்குள்ளே மயிலை வளைத்து விழவைத்து விரைவில் தங்கனும் கொட்டகைக்குள் புகுந்து படம் பார்க்க ஆரம்பித்தான்.

ஒருகாலத்தில் தங்கனும் நானும் மிக நெருக்கமாகயிருந்தோம். நெல்வயல்களில் வட்டகனையும் வாழைவரையனையும் துணித்துண்டால் வலைவீசிப் பிடிப்போம். குன்றோரப் புதற்களிலிருந்து சிற்றீந்துப் பழமும் துடலிப் பழமும் பறித்துத் தின்போம். அப்படி அலைந்து திரியும் நேரங்களில் தங்கன் அவனது அறிவுச் சுளைகளை ஒன்றொன்றாக எனக்கும் பகிர்ந்தான். ஊர்களுக்குள்ளே ஆணும் பெண்ணும் ஈடுபடும் சில ரகசிய நிகழ்வுகள். இப்படியாக ஒன்றுமே தெரியாத எனது ஆரம்பப் பாலியல் கல்வி, எதுவுமே தெரியாத தங்கனிடமிருந்து தொடங்கியது!

சிலநாள் முன்பு பார்த்த ஒரு  ‘சிலுமா’வின் கதையை தங்கன் என்னிடம் வர்ணிக்கிறான். “எடா ஷாயீ... யேசுவாஸுக்கு மிதக்கு மிதக்குன்னு இருக்கிற ஒருத்திகூட பயங்கரமான காதல். பாட்டுப் பாடிக்கிட்டு வர்ற யேசுவாஸ் அவள இறுக்கி க்கட்டிப்பிடிச்சு இச் இச்சுன்னு முத்தம் கொடுக்குறான். அதுக்கு நடுவுல கன்னங்கரேல்னு ஒரு தடிமாடன் அவள ஏறிப்பிடிச்சு அவ துணியெல்லாம் கிளிச்சுக் களட்டறான். அப்பொ யேசுவாஸ் டயிவ் அடிச்சு ஓடியாந்து அரையிலேந்து வாள் வலிச்சு உருவி அவன ஒரே வெட்டு. அப்றம் ரெண்டு பேரும் பயங்கரமான வாள் ப்ளெயிட். என்னா ஒரு ப்ளெயிட்... என்னா ஒரு ப்ளெயிட்...! அத நீ மட்டும் ஒருமுற பாத்தேன்னு வெச்சுக்கோ... அப்றம் நீ சிலுமாக் கொட்டயவிட்டு வெளியே வரவே மாட்ட.”

அதுநாள் வரைக்கும் ஒரு சினிமாகூடப் பார்த்திருக்கவில்லை என்றாலும் தங்கன் அப்படிச் சொன்னதில் எனக்குப் பெரும் சந்தேகம் ஏற்பட்டது. யேசுதாஸ் சினிமாவில் வாள்சண்டை போடுகிறாரா? பாடகர்தானே யேசுதாஸ்! தினமும் வானொலியில் அவரது பாட்டு கேட்கிறேனே! அவர் எப்படி சினிமாவுக்குள்ளே வருவார்? ஆனால், தங்கனுக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ரேடியோவில் பாடும் யேசுதாஸுக்கும் படத்தில் பார்த்த யேசுதாஸுக்கும் ஒரே குரல்தான். அதனால் அது யேசுதாஸ் அல்லாமல் வேறு யாருமில்லை. எனக்கோ பெருங்குழப்பம். நான் அம்மாவிடம் சென்று சந்தேகம் கேட்டேன். “நீயல்லாது வேறு யாராவது அந்த ‘வெடி’யன் சொல்லறதெல்லாம் நம்புவானாடா? வாயத் தொறந்தா அவன் வெடிதானே சொல்லுவான்? சினிமாவிலப் பாத்தது நஸீர் மாதிரி யாராவது நடிகராயிருக்கும்”. வெடியன் என்கின்ற நிந்தைப் பெயர் இருந்தாலும் அந்தக் கதையை தங்கன் உண்மையாகத்தான் சொன்னான். பாடுவதும் நடிப்பதும் ஒருவரல்ல என்பது அவனுக்குப் புரியவில்லை. அந்த நடிகனின் பெயர் பிரேம் நஸீர் எனபதையும் அவன் அறிந்திருக்கவில்லை. தங்கனைச் சொல்லிக் குற்றமில்லை. அந்த அளவுக்குத் தத்ரூபமாக இருந்தது நஸீருக்கும் யேசுதாஸுக்குமான குரல் ஒற்றுமை. தங்கன் சொல்வதையெல்லாம் நம்புவதை அத்துடன் நான் நிறுத்திக் கொண்டேன். இருந்தும் தங்கனும் மயிலும் சொல்லும் சினிமா அனுபவங்களைக் கேட்டு எனக்குத் தூக்கமே போய்விட்டது. சினிமா சினிமா என்று அவர்கள் சொல்லும் அந்தச் சம்பவம் எப்படி இருக்கும் என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. எப்படியாவது ஒரு சினிமா பார்த்தே ஆகணுமே. “என்னயும் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போ... என்னயும் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போ...” என்று மயிலிடமும் தங்கனிடமும் நான் மாறிமாறிக் கெஞ்சிக் கொண்டிருந்தேன். அந்த நாள்களில்தான் தங்கமணி கிராமத்திலுள்ள ஜெமினி கொட்டகையில் ‘ஸ்னாபக யோஹன்னான்’ என்ற மலையாளப் பக்திப் படம் வந்தது.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி

“யேசுவோட கைல ஆணி அடிச்சு எறக்கறதெல்லாம் நீ ஒருமுறை பாக்கணும்டா. ஹோ... பயங்கரம்!” வெள்ளிக்கிழமை முதல் காட்சியையே பார்த்துவிட்டு வந்த மயில் கதைச் சுருக்கத்தைக் கொஞ்சமாக வெளிப்படுத்தினார். இந்தப் புண்ணிய புராணப் படத்தையாவது பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா? என்னுடைய கெஞ்சல்களும் அடமும் தாங்கமுடியாமல், கடைசியில் மயில் எனது அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னார். “நல்ல பஸ்டு சினிமா. ஒண்ணாம் தரம் வைவிள் கத. சின்னப் பசங்க பாக்க வேண்டிய படமாக்கும். வேணும்னா எல்லாத்தையும் கூட்டிட்டுப் போய் நான் காட்டிட்டு வர்றேன்”. அது பலித்தது. அனுமதியும் பணமும் வழங்கப்பட்டது. அந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தாந்நிக்கல் வீட்டிலிருந்து பெண்களும் குழந்தைகளுமாக நாலைந்துபேர் மயிலு குஞ்சுமோனின் தலைமையில் தங்கமணி ஜெமினியை நோக்கிப் புறப்பட்டனர். முதன்முதலாக ஒரு சினிமா பார்க்கப்போவதன் குதூகலத்தில் என் கால்கள் தரையில் உறைக்கவில்லை.

அம்பலமேடு, மைக்குக் கவல, நீலிவயல் வழி, குன்று பள்ளங்களினூடாக வளைந்து நெளியும் இடுங்கலான மண்வழிகளில் நாங்கள் முறை வரிசையாக நடந்தோம். பாறைக்கடவு வழியாகப் போயிருந்தால் இன்னும் சற்று அகலமான வழி கிடைத்திருக்கும். ஆனால், அது நெடுந்தூரம் என்று மயில் சொன்னார். இந்த வழியுமே நடந்தாலும் நடந்தாலும் முடியவில்லையே என்று யோசித்தேன். ஒரு வழியாக நீலிவயல் குன்றுக்கு இப்புறத்தை அடைந்தபோது தங்கமணி ஊரின் தாழ்நிலத்திலிருந்து காற்று வடிகட்டி அனுப்பிய பாட்டு காதில் வந்து விழுந்தது. ‘காற்று வந்நூ.. கள்ளனெப் போலெ... காட்டு முல்லைக்கு ஒரும்மா கொடுத்து காமுகனெப் போலெ...’ படம் கரகாணாக் கடல். இசை தேவராஜன். பாடியது பி.சுசீலா. அந்தத் தகவலெல்லாம் அப்போதே எனக்குத் தெரியும். நாள் முழுவதும் ரேடியோவின் முன்னால் அமர்வதன் விளைவு. லலலல்லலா… லலலல்லலா… நீலிவயல் குன்றிலிருந்து ‘தரை தொடாமல்தான்’ நான், கீழிருக்கும் தங்கமணி ஜெமினி கொட்டகை வளாகத்தில் சென்று நுழைந்தேன்.

கூரைப்புல் வேய்ந்து முளைப் பாய்களால் சுவர்கட்டி மறைத்து, ஒருவகைச் சாம்பல் நிறத்தில் நீண்டு கிடந்தது அக்கொட்டகை. நாலா பக்கமும் மக்கள் குவிந்திருந்தனர். முளைகளாலான கூரைக் கூண்டின்மேல் உயரத்தில் கட்டி வைத்திருக்கும் வெள்ளி நிறமான கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் பாடல்கள் உரத்து ஒலித்தன. மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தின் ஓலம் பின்னால் எங்கேயோ ஒலிக்கிறது. கொட்டகையின் முன்னால், பெட்டி மாதிரி கட்டியிருந்த ஒற்றையறைக் கட்டடத்தின்மேல் உள்ளே, ஒரு கை செலுத்தும் அளவிற்கு வளைத்த ஓட்டைகள். கசேர ஒரு ரூபா, சாருபெஞ்ச் எழுபத்தஞ்சு பைசா, பென்ச் அறுபது பைசா, தரை நாற்பது பைசா என்று எழுதி வைத்திருந்தார்கள். எங்களை ஒரு மூலையில் ஒதுக்கி நிற்கவைத்து, மயில் சென்று கடவுச் சீட்டுகளை வாங்கி வந்தார். இளம்நீல வண்ணத்தில் ஒரு சிறிய காகிதத் துண்டு! இதற்கா எழுபத்தைந்து பைசா? எழுபத்தைந்து பைசாவுக்குத் தேனாலியின் சாயைக் கடையிலிருந்து பதினைந்து தோசை சாப்பிட்டிருக்கலாமே!

அடர்த்தியாக மணல் விரித்த கொட்டகையின் தரைக்கு மேல் மங்கலான வெளிச்சம் வெளிறிக்கிடந்தது. நாரங்ஙா முட்டாயி, மூட்டைப் பூச்சி, வேர்கடலை, பீடிப் புகை அனைத்தும் கலங்கிப் புழுங்கிய ஒரு வாடை அடித்தது. ‘மலரம்பன் வளர்த்துந்ந மந்தார வனிகையில் மதுமாசம் விரியிச்ச மலராணோ...” உரத்து ஆனால் தெளிவற்று ஒலிக்கும் பாடல். பாதி இருட்டில் சாருபெஞ்ச் தேடிப்பிடித்து ஒருவழியாக அமர்ந்தோம். விரைவில் டப்பு.. டுப்பு… என்று வெடிக்கும் சத்தத்துடன் பாடல் நின்று இருந்த வெளிச்சமும் அணைந்து போனது. “அதோ அந்த வெள்ளையா தெரியுதே... அதுதான்டா ஸ்ரீன்.” என்று மயில் சொல்லி முடிப்பதற்குள் முன்பக்கமாக இழுத்துக் கட்டியிருந்த வெள்ளைத் துணியில் மின்னலும் மினுங்கலுமாக வெள்ளி வெளிச்சம் பரவியது. ஓகோ... இதுதானா  ‘தங்கமணி ஜெமினியின் வெட்டித் திளங்கும் வெள்ளித்திரை’ என்று துண்டு பிரசுரங்களில் எழுதியிருந்த அந்தத் திரை! 

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி

அதை நான் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, திரையில் சாம்பல் நிறத்தில் பாப்பர பாப்பர பாப்பர ப்ராய்ய்ய்ய்… என்பதுபோன்ற ஓர் இசையின் அகம்படியுடன் ஒரு பூமிப்பந்து சுழல ஆரம்பித்தது. அதற்குமேலே கோவணம் மட்டுமே கட்டி வெளுவெளுத்த உடலும் கையில் வேலுமாய் பகவான் பாலமுருகன். அவருக்குக் கீழே மெறிலேன்ட் ஸ்டுடியோவின் வணிக முத்திரை. பகவானின் பின்னால் கறுப்பு வண்ணத்தில் ஒரு பெரிய மயில். நான் என் பக்கத்திலிருந்த மயிலை ஒரு நிமிடம் பார்த்தேன். முதன்முதலில் திரைப்படம் பார்க்கும் ஒருவரைப்போல் கண்களைத் திரையில் ஒட்டவைத்து அவர் படம் பார்த்துக் கொண்டிருந்தார். முருகர் மறையும் முன்னே ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது’ என்ற விவிலிய வாசகம் ஒலிக்கத் தொடங்கியது.

‘திரி கொளுத்துவின் சக்ரவாளங்ஙளே...’ என்று யேசுதாஸின் குரலில் பாடல் விருத்தம் முழங்கியபோது, மேலே வானத்தில் கால்களில்லாத இறைத்தூதிகள் ஒழுகி வந்தனர். கீழே ஆட்டு இடையர்கள் தூக்கம் கலைந்து விரைந்தெழுந்தனர்.  ‘பெத்லஹேமின்டெ திருமடித் தட்டிலெ’ என்று பி.லீலா பாடத்தொடங்கினார். அப்போது எதிர்பாராமல் ‘துடுப்ப்... துடுப்ப்...’ என்ற ஒரு பெரும் ஒலியுடன் அந்த வெள்ளித்திரை இரண்டாகக் கிழிவதுபோல் பிரிந்து வெளிச்சம் அணைந்துபோனது. “பிலின் அறுந்துபோச்சு! பத்துப் பன்னிரண்டு ஆண்டு பழைய கோப்பி அல்லியோ. அறுந்துதான் தீரும்.” என்று சொன்னார் மயில். அன்று படம் முடிவதற்குள் எத்தனையோ முறை அப்படிப் படச்சுருள் முறிந்தது! கொஞ்சநேரம் முறியாமல் ஓடினாலும் நடுவே நடுவே 10 9 8 X Y Z என்றெல்லாம் மின்னி சினிமா நின்றுபோகும். “ட்றீல் மாத்துறாங்க..” மயில் விளக்கம் சொல்வார்.

படம் ஓடும் நேரம் முழுவதுமே மயிலின் தொடர் விளக்கவுரை இருந்தது. “அதோ... அதுதான் திக்குறிசி, இது கொட்டாரக்கர, அங்கிட்டு நிப்பது மிஸ் குமாரி, மற்றது
எஸ்.பி.பிள்ள.” விசேஷமான ஓர் இசையின் அகம்படியுடன் ரோமன் படைநாயகனின் வேடத்தில் ஓர் ஆணழகன் தோன்றியபோது, அதோ நஸீர்... அதோ நஸீர்... என்று ஆவேசமானார் மயில். ஜோஸ் பிரகாஷ் என்ற நடிகர்தான் புனித யோவானாக நடித்தார். “இய்யாள் எல்லாப் படத்திலும் கொடூர வில்லன். இப்படத்தில் புனிதன்.” என்று சொன்னார் மயில். ஆனால், ஸ்னானக யோவானின் பெயர்கொண்ட அப்படத்தில் யோவானுக்குப் பெரிதாக எந்த வேலையும் இருக்கவில்லை. ஏன், யோவானைவிட அதிக நேரம் திரையில் வந்த யேசு கிருஸ்துவின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என மக்கள் அமர்ந்தும் நின்றும் படுத்தும் முயன்றபோதிலும் முடியவில்லை. யேசுவின் முகம் எப்போதுமே திரைக்கு வெளியேயோ இருட்டிலேயோ இருந்தது!

ஒரு மாபெரும் அரசமாளிகை. அதற்குள்ளே நிகழும் ஆடல் பாடல்கள், கதாநாயகனும் நாயகியும் நிகழ்த்தும் கிளுகிளுப்புக் காதல் காட்சிகள், ‘நீராடாம் நீலமலர் பொய்கயில்...’ என்று கதாநாயகியும் தோழிகளும் நடத்தும் விசாலமான நீச்சல் குளியல் காட்சி, பின்னர் அரசுக்கு எதிராக வில்லன்கள் கூட்டுச்சதித் திட்டமிடும் காட்சிகள், குதிரைப் படையோட்டங்கள், வாள்சண்டைகள் எனப் படம் ஒரே கலகலப்பு. திரையில் பார்த்தவை எல்லாமே எனக்கு மிகவும் பிடித்துப்போனது. விழித்திருக்கும்போதும் மிகத் தெளிவாக கனவுகளைக் காண்பதுபோல் இருந்தது எனக்கு. கனவிலும்கூட நினைக்க முடியாத காட்சிகள் இதோ உயிருள்ள சித்திரங்களாகக் கண் முன்னே. அந்த இரவில் சினிமா ஒரு வாதையாக எனக்குள் புகுந்துவிட்டது. அடிக்கடி படச்சுருள் அறுந்துபோவதும் இருக்கைகளின் இடையே நெருக்கியடித்து வேர்க்கடலை, இஞ்சி முட்டாயி, பீடி சிகரெட் விற்க ஆள்கள் வந்ததும் அந்த சினிமாக் கனவுக்கிடையே புகுந்த இடையூறுகள். குமுகுமுவெனப் பொங்கிவந்துகொண்டேயிருந்த பீடிப் புகையில் சினிமா இயந்திரத்திலிருந்து படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் ஒளிக்கீற்றுகள் ஏறியிறங்கி மின்னுவதும்கூட ஒரு மாயத்தோற்றம்போல் எனக்குக் காட்சியளித்தது.

ஒரு சினிமா நிபுணனாகயிருந்தும் அந்தப் படத்தில் பங்கேற்ற பல நடிகைகளின் பெயர்கள் மயிலுக்குத் தெரியவில்லை! முக்கியக் கதாநாயகியின் பெயர் எல்.விஜயலட்சுமி என்பதும், கெட்ட குணமுள்ள பெண்ணாக வந்த பங்கஜவல்லி மலையாளத்தின் எக்காலத்திற்கும் உரிய குணச்சித்திர நடிகை என்பதும் பிற்பாடு நான் தேடிக்கண்டுபிடித்த தகவல்கள். ஆனால், அப்படத்தின் மற்றுமொரு காதாநாயகியாக வந்து ‘தாராகுமாரிகளே தாழெ வரூ’ போன்ற பாடல்களுக்கு விலாச நடனமாடிய நடிகைதான் என் இதயத்தை முற்றிலுமாக ஆக்கரமித்தார். அவரது பிரமிக்கவைக்கும் அழகும் நடனமும் என் மனதில் பலகாலம் ஒளிமங்காமல் நின்றன. அந்நடிகையின் பெயர் கெ.வி.சாந்தி என்று அறிய எனக்குப் பல வருடங்களாயின. மறக்க முடியாத அந்த இரவில் கடும் தூக்கக் கலக்கத்திலும் தொய்விலும் தள்ளாடி மலைப்பாதைகளில் சிரமப்பட்டுத் திரும்பி நடக்கும்போது, அடுத்து ஒரு சினிமா எப்போது பார்க்க முடியும் என்ற ஒரே கவலைதான் என் மனதுக்குள் நிரம்பியிருந்தது.

குழந்தைகள் அவசியம் பார்க்கவேண்டிய படம்


வலிய தோவாள என்ற ஊரில் என் அம்மாவின் பிறந்த வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் நான்காவது படித்த காலம். குழந்தைகளை அடித்தும் மிரட்டியும் கிழித்த கோட்டின்மேல் நிறுத்தும் இலந்தூர் ரோசம்மா எனும் ஆசிரியை, எங்கள் 40 பேரை இரண்டு மைல் தொலைவிலுள்ள இரட்டையார் நிர்மாலா எனும் கொட்டகைக்குக் கொண்டுசென்றார். அங்கே திரையிடப்படும் ‘நாழிகக் கல்லு’ எனும் படத்தை எங்களைப் பார்க்க வைப்பதுதான் நோக்கம். குழந்தைகள் அவசியம் பார்க்கவேண்டிய படமாம். காய்ந்த தென்னைமர ஓலைகள் வேய்ந்த ஓலைக் கொட்டகை ‘நிர்மாலா’. கூரையில் இருக்கும் எண்ணற்ற ஓட்டைகள் வழியாக நிறைய பகல் வெளிச்சம் அரங்கிற்குள்ளே விழுந்துகொண்டிருந்தது. திரைச்சீலையின் மூலையில் அழுக்கு மழைவெள்ளம் விழுந்து உலர்ந்த தடம், யாரோ வரைத்துவைத்த வரைபடம்போல் தோன்றியது. ‘நாழிகக் கல்லி’லும் பிரேம் நஸீர்தான் கதாநாயகன். நாயகியின் பெயர் ஷீலா என்பதைப் பிற்பாடு அறிந்துகொண்டேன். புத்தகங்களைப் பிடித்துக்கொண்டு கல்லூரிக்குப் போகும் கதாநாயகன், நாயகியின் பின்னால் பாட்டுப் பாடித் திரிகிறான். ‘நின் பதங்ஙளில் நிர்த்தமாடிடும் என்டெ ஸ்வப்னஜாலம்...” அவன் அந்தப் பெண்ணின் சேலையைப் பிடித்து இழுக்கிறான். அவளை நடக்கவிடாமல் வழிமுடக்கி நிற்கிறான். கால்கொலுசு கிலுக்கி முன்னும் பின்னுமிளக்கி நடந்துபோகும் கதாநாயகி கோபத்தைக் காட்டுகிறாள். “உனக்கு வெட்கமே இல்லையா..? நான் யாரென்று உனக்குக் காட்டித்தாரேன்...” என்றெல்லாம் பாட்டிற்கிடையே பேசும் அப்பெண்மணி அவ்வப்போது ரகசியமாக வெட்கப்படவும் புன்னகைக்கவும் செய்கிறாள். அப்படத்தில் வரும் மற்றுமொரு பெண்மணி ஆண்களுடன் அமர்ந்து சிகரெட் குடிக்கிறாள், தண்ணியடிக்கிறாள், பணம் வைத்துச் சீட்டு ஆடுகிறாள். 

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி

‘செம்பவிழச் சுண்டில் சும்பன முந்திரிப் பூவுண்டோ...’ எனும் காமச்சுவைப் பாடலைப் பாடிக்கொண்டு ஆணும் பெண்ணும் கட்டியணைத்து முத்தமிட்டு விளையாடுகிறார்கள். குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! தங்கன் இருந்திருந்தால் அவனுக்கு ரொம்பப் பிடித்திருக்கும். எனக்கு அப்படம் அறவே பிடிக்கவில்லை. ரோசம்மா ஆசிரியைக்கும் கடுமையான கோபம் வந்தது. படம் முடியும் முன்னே அவர் எங்களைக் கொட்டகையிலிருந்து வெளியேற்றி அடித்து ஒதுக்கி பள்ளிக்கூடத்திற்கே திரும்பக் கொண்டு போனார். அன்றைக்கு அப்படம் பார்க்க எதற்காக அந்த எட்டுவயது குழந்தைகளான எங்களைக் கொண்டுசென்றார்கள் என்று இன்று வரைக்கும் புரியவில்லை. அப்படத்தில் கனு கோஷ் எனும் வங்கதேச இசையமைப்பாளரின் இசையில்  எஸ்.ஜானகி பாடிய ‘சந்தனத் தொட்டில் இல்லா’ எனும் அற்புதமான தாலாட்டுப் பாடல் மட்டும் பலகாலம் என் மனதில் நீடித்து ஒலித்தது.

ஆபிஜாத்யம் என்பது யாதெனில்…

அந்த நாள்களில் ஒருமுறை வழியோரத்தில் கிடந்த ஒரு துண்டுப்பிரசுரம் என் கையில் சிக்கியது. ‘பிரம்மாண்டமான சினிமா திரையிடல். படம் ஆபிஜாத்யம். நடிகர்கள் மது, சாரத, அடூர் பாஸி, சங்கராடி. சனிக்கிழமை மூன்று மணிக்கும் ஏழு மணிக்கும் இரண்டு காட்சிகள். இடம் எழுகும்வயல் ஜெய்மாதா பள்ளிக்கூடம். எழுகும்வயலுக்கு மேலேயுள்ள கூம்பன் மலை எனும் இடத்தில்தான் அம்மிணிப் பேரம்மாவின் வீடு. என் அம்மாவின் மூத்த அக்கா. பயங்கரமான பக்தியும் கறாரான குணங்களும் கொண்டிருந்தாலும் மிகவும் அன்பானவர் என் பேரம்மா. பல சமயங்களில் அம்மாவைவிட அவர்தான் எனது பிரியத்திற்குரியவராக இருந்தார். சனிக்கிழமை காலையிலேயே நான் நான்கு மைல் தொலைவிலுள்ள பேரம்மாவின் வீட்டிற்கு விரைந்தேன். அப்போதெல்லாம் நான் ஏழெட்டு மைல் தூரமெல்லாம் தனியாக நடந்து செல்ல ஆரம்பித்திருந்தேன். நடக்கும் நேரத்தில் இந்த ஆபிஜாத்யம் என்பது என்ன மாதிரியான சினிமாப் பெயர்? அதன் அர்த்தம்தான் என்ன என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். எதுவாகயிருந்தாலும் படம் பார்க்கும்போது தெரிய வருமே என்று எண்ணிக்கொண்டேன்.

கொஞ்சம் பயம் இருந்தபோதிலும் சென்றவுடன் பேரம்மாவிடம் “பேரம்மா... பள்ளிக்கூடத்துல சினிமா பாக்கப் போகட்டுமா?” என்று கேட்டேன். “சினிமா பார்க்க பள்ளிக்கூடமாடா? பள்ளிக்கூடத்துல படிக்காத்தானே போவாங்க! நல்ல பசங்க சினிமா பாக்கற மாரி அனுசரணம்கெட்ட வேலையெல்லாம் செய்யமாட்டாங்க. இங்கே பசங்களெல்லாம் மிளகுத் தோட்டத்துல பேரப்பனுக்கு ஒதவ போயிருக்காங்க. நீயும் வேண்னா அவங்ககூடப் போ. இல்லேன்னா எங்கேயாவது ஒரு மூலயில அடங்கி ஒக்காந்துக்கோ.” நான் மனமுடைந்துபோனேன். பேரம்மா சொன்னால் அது முடிவுதான். நான் படம் பார்க்க அனுமதி கேட்கவில்லையே. பேரம்மாவிடம் சீட்டு வாங்க காசு கேட்கத்தானே வந்தேன். எப்படியாவது ஆபிஜாத்யம் பார்க்கணுமே.எனக்குப் பதற்றம் அதிகரித்தது. பேரம்மா மேல் எனக்கிருந்த அன்பு, கொஞ்சம் குறைந்துபோனது. மேற்கொண்டு என்ன செய்வது? யோசித்தேன். “பேரம்மா... அப்டீன்னா நான் வீட்டுக்குப் போறேன். அப்பாட்ட சொல்லாம வந்தேன். சாயங்காலத்துக்கு முன்னெ திரும்பலன்னா அடிப்பாரு.” “சொல்லாமக் கொள்ளாம ஏன்டா வந்தே...? சரி சீக்கிரம் போயிடு. இருட்டுக்கு முன்னே வீடுபோய்ச் சேரு.” என்று அவர் சொல்லி முடிக்கும்முன் நான் அங்கிருந்து இறங்கி ஓடினேன்.

‘ஊஞ்சாலா… ஊஞ்சாலா…’ தூரத்திலிருந்தே சினிமாப் பாட்டு காதில் விழுந்தது. மின்சார உற்பத்திக்கான இயந்திரத்தின் ஃபட்ட் ஃபட்ட் சத்தம் காதைக் கிழித்தது. பள்ளிக்கூடத்தின் முன் நல்ல கூட்டம். அனைவரது கைகளிலும் கடவுச் சீட்டுகள் தெரிகின்றன. சீட்டில்லாமல் உள்ளே கடக்க முயற்சிக்கலாமா? திருட்டுத்தனம் செய்யப் பெரும்பயம் ஒருபுறம் இருக்கு. ஆனால், படம் பார்க்காமல் இருக்கவும் முடியாது. முதல் காட்சி ஆரம்பிக்கப்போகிறது. உள்ளே செல்லத் துடிக்கும் கூட்டம் பள்ளிக்கூட வாசலில் அலைமோதுகிறது. உயரமும் எடையும் குறைந்து உருவத்தில் சிறியவனாக இருந்த நானும் அக்கூட்டத்தில் ஏறி நின்று நெருக்கியடித்தேன். அந்த நெரிசலில் எப்படியோ ஒருவழியாக நான் உள்ளே சென்றேறினேன். கையிலும் காலிலும் பலத்த உதையும் மிதியும் விழுந்தாலும் சினிமா சினிமா என்ற மோகத்தில் அவற்றின் வலியை நான் உணரவே இல்லை.

பள்ளிக்கூடத்தின் ஜன்னல்களெல்லாம் இலக்கொம்புகளாலும் கறுப்புச் சீலைகளாலும் மறைத்து மூடப்பட்டிருந்தன. உள்ளே மங்கலான வெளிச்சம் மட்டுமே. எதுவும் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஒருவழியாக நீங்கி நிரக்கி திரைக்குப் பக்கத்தில் தரையில் அமர்ந்திருக்கும் மற்ற பையன்களுடன் சென்று அமர்ந்தேன், எனது சீட்டைக் கிழிக்க யாராவது வருவாங்களா என்று பயந்து நடுங்கிக்கொண்டே. படத்தைத் திரையிடும் சிறிய இயந்திரம் ஃபிர்ர்ர்ர்ர்ர்ர்... என்ற ஒலியுடன் ஓடத் தொடங்கியது. கொட்டகைகளில் காணப்படும் திரைச்சீலையில் கால்வாசிகூட அகலமோ உயரமோ இல்லாத திரையில் படம் ஓட ஆரம்பித்தது. தொடக்கமே ஒரு ஆடல் பாடல். “ராசலீலக்கு வைகியதெந்து நீ ராஜீவ லோசனே…” பின்னர் நகைச்சுவை நடிகர் அடூர் பாஸியும் சில குழந்தைகளும் சேர்ந்து, ஓடாமல் வழியில் கிடக்கும் ஒரு பேருந்தை தள்ளிக்கொண்டு சென்று பாடும் ஒரு நகைச்சுவைப் பாடல். ஒரு பேருந்தை நேரில் பார்த்தவர்கள் மிகக் குறைவாகயிருந்த எங்களது ஊரில், முழுவதும் பேருந்தில் எடுக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சி ஓர் அதிசயமாகவே பார்க்கப்பட்டது.

படச்சுருள் மாற்றும் இடைவேளை ஒன்றில் சீட்டில்லாத என்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தேன். நானிருக்கும் வரிசைக்குப் பின்னால் அதோ அமர்ந்திருக்கிறான் சாபு! அம்மிணிப் பேரம்மாவின் பிரியமான மகன். மிளகுத் தோட்டத்தில் பேரப்பனுக்கு உதவப் போயிருப்பதாகச் சொல்லப்பட்டவன். அவனுக்கும் எனக்கும் ஒரே வயது. அவனும் சீட்டில்லாமல்தான் உள்ளே நுழைந்திருந்தான். படம் முடிந்து வெளியே வரும்போது, எங்கள் இருவருக்கும் கொலைப்பசி. சாபுவின் கையில் கொஞ்சம் பணமிருந்தது. அதைவைத்து அவனும் நானும் பப்பட போளியும் உண்டம்பொரியும் வாங்கிச் சாப்பிட்டோம். வயிறு நிரம்பியதும் எனக்கொரு புது எண்ணம். அடுத்த காட்சியையும் பார்த்தால் என்ன? மீண்டும் சீட்டெடுக்காமல் உந்தித் தள்ளி உள்ளே சென்றோம். மறுபடியும் ஆபிஜாத்யம் பார்த்தோம்.

எல்லாம் முடியும்போது இரவு ஒன்பதரை மணி. அதுவரைக்கும் இரவில் தனியாக எங்கேயும் போனதில்லை. சாபு இருக்கிறானே. அவன்கூட அவன் வீட்டிற்கே போயிடலாம். கல்லும் கரடுமான மலை வழிகளினூடாக இருட்டில் தப்பியும் தேடியும் சறுக்கி விழுந்து தோற்காயங்க ளிலிருந்து ரத்தம் சொட்டியும் ஒருவழியாகப் பேரம்மாவின் வீட்டை அடைந்தோம். பேரம்மா கவலையோடு சாபுவுக்காகக் காத்திருந்தார். குற்ற விசாரணையின்போது சாபுவும் நானும் முரணுக்குமேல் முரணாகப் பேசியதும் பேரம்மாவிற்கு எல்லாமே புரிந்துபோனது. மரஅகப்பை ஒன்றை எடுத்து சாபுவை அவர் அடித்துத் துவைத்தார். போதுமான அளவிற்கு எனக்கும் அடி விழுந்தது. ‘ஆபிஜாத்யம்’ என்றால் உயர்வான இடத்தில் பிறந்து உயர்வாக வாழ்தல் என்று பொருள். அந்த வார்த்தையை எங்கே கேட்டாலும் அன்றைக்கு அப்படத்தை இரண்டுமுறை பார்க்க நான் செய்த ‘உயர்வான’ காரியங்கள்தாம் நினைவுக்கு வரும். ஆனால், விரைவில் அதைவிடவும் பலமடங்கு  ‘உயர்வான’ எத்தனையோ சாகசங்களை சினிமாவெறி தலைக்கேறி நான் செய்தேன். அதற்கு எனக்குப் பெருமளவில் உதவியவன் சாத்தான்.

(தொடரும்…)