மருத்துவ அறத்தை ஏற்கெனவே ஒரு பாடப்பிரிவாகக் கற்பித்துவரும் நாடுகளின் நீண்ட பட்டியலில் இப்போது இந்தியாவும் இடம்பிடித்திருக்கிறது. எம்.பி.பி.எஸ் (#MBBS) பாடத்திட்டத்தில், 21 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது. நீண்ட திட்டமிடல்களுக்குப் பிறகு வகுத்திருக்கும் இப்பாடத்திட்டத்தில் மனநலன், பொது சுகாதாரம், மொழித் திறன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி பாடத்திட்டம் கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் உடல் தானம் குறித்து ஆலோசனைகள் வழங்குவதை நோக்கமாக வைத்து புதிய பாடப்பிரிவு தொடங்கப்பட இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.
இந்தப் புதிய பாடப்பிரிவில், நோயாளிகளையும், அவர்களது உறவினர்களையும் கையாளும் நடைமுறைத் திறன்களான AETCOM, (Attitude, Ethics, and Communication) எம்.பி.பி.எஸ்ஸின் முதல் ஆண்டிலிருந்தே கற்பிக்கப்படவிருக்கிறது. சிக்கலான நேரங்களில் நோயாளிகளின் ஒப்புதலைப் பெறுதல், விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் திறன், நோயாளிகளின் பதற்றத்தை, உறவினர்களின் பதற்றத்தைக் கையாளும் விதம் என மருத்துவர் - நோயாளி உறவை சுமுகமாக வைப்பதற்கான சிறப்புப் பயிற்சியை AETCOM மூலமாகப் பெறமுடியும்.
மருத்துவ கவுன்சில் ஆணையத்தின் தலைவரான டாக்டர். வினோத் பால், புதிய பாடத்திட்டம் குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `90-களிலேயே மருத்துவ அறத்தைக் கற்பித்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. பல நாடுகளில் இது ஏற்கெனவே பாடத்திட்டத்தில் சேர்ந்துவிட்டது. பல சிக்கலான சூழ்நிலைகளில் கையாளும் திறமையும், முடிவெடுக்கும் திறனையும் இந்தப் பாடப்பிரிவு மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர்களின் சிறந்த பண்புகளை வெளிக்கொண்டு வருவதும், அதை மெருகேற்றுவதும்தான்தான் AETCOM-இன் நோக்கம். இதன் பலன் நிச்சயமாக நேர்மறையானதாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தடயவியல் அறிவியலிலும், மகப்பேறு பாடப்பிரிவிலும், திருமணத்தைத் தாண்டிய பாலுறவையும், லெஸ்பியன் உறவில் இருப்பவர்களையும் பாலியல் குற்றங்களின் பட்டியலில் கொண்டு வருகிறது இந்தப் புதிய பாடத்திட்டம். மேலும், மனநலப் பாடப்பிரிவில், இந்திய மனநலச் சட்டம் 1987-ல் குறிப்பிட்டிருப்பதைப் போல, எதிர்பாலினத்தவரைப் போல உடையணிவதும் பாலியல் கயமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியே தன்பாலின உறவுகள் குற்றமாகாது என்றும், மனநலச் சட்டம் 2017 திருத்தங்கள் செய்யப்பட்ட பின்பும் கூட பாடத்திட்டத்தில் இருக்கும் முரண்கள் குறித்துப் பேசிய வினோத் பால், ``இது சில நாள்களுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட பாடத்திட்டம். அது மட்டுமல்லாமல், இது இன்னும் நிறைவு பெறாத ஒன்றாகவே இருக்கிறது. திருத்தங்களை பரிசீலித்து ஏற்பதற்காகவே பொதுத்தளத்தில் பார்வைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என விளக்கமளித்தார்.
Ethical Healthcare மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் அருண் காத்ரேவிடம் பேசியபோது, ``அறத்துடனான மருத்துவத்தை அறிமுகப்படுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், மருத்துவக் கல்லூரிகளுக்குள் அத்தகைய அறத்தைக் கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் இல்லையென்றால், அது மாணவர்களுக்குப் பலனளிக்காது. ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டு சராசரியாகப் பார்த்தால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொஞ்சம் இடங்களை மட்டும் வைத்துக்கொண்டு, பொதுச் சந்தையில் கோடிக்கணக்கில் பணம் கட்டிப் படிக்கும் மாணவனிடம் பெரிய அளவில் அறத்தை எதிர்பார்க்க முடியாது.
நோயாளிகளைப் பராமரிப்பதைப் பொறுத்தவரை, அதிலிருக்கும் லாப நோக்கத்தைக் கைவிடாவிட்டால் இந்தப் பாடப்பிரிவுக்குப் பலனில்லை. மருத்துவம் தொடர்பான முடிவுகள், எடுத்துக்காட்டாக, நோயாளிக்கு எப்போது செயற்கைச் சுவாசத்தை அளிப்பது, உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்வது போன்ற `பயோ எதிக்கல்’ நடைமுறைகளுக்கு இந்தப் பாடத்திட்டம் உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக அற உணர்வை பாடத்திட்டத்தால் மட்டுமே சொல்லித்தர முடியாது. மருத்துவத்தை லாபமாக்காமல் இருப்பதற்கு பல்வேறு துறைகளின் பங்களிப்பு இதில் தேவைப்படுகிறது” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அடுத்த கல்வியாண்டிலிருந்து மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்தமான மருத்துவத் துறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட இருப்பதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்திருக்கிறது.