மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 90

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ட்டியங்காட்டுக்கு நேர் மேற்கே இருக்கும் குன்றின் பெயர் `குளவன்திட்டு’. குழவிக் கல்போல் மேகத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கும் கரும்பாறை அது. காரமலையின் தோள்களின் மேலே பிதுங்கி நிற்கும் பகுதி. குளவன்திட்டின் பின்புறம் காரமலையின் கணவாய்க்குள் இருப்பவர்கள் கானவர்கள். மலைமக்களில் மிகப் பழைமையான குடியினர்.

பறம்புப்படை, முதன்முறையாக சமவெளியில் இறங்கிப் போரிடப்போகிறது; போர்விதிகள் என்னும் சட்டகங்களுக்குள் ஆயுதம் ஏந்தப்போகிறது. மூன்று பெரும் பேரரசுகளையும் எதிர்த்துச் சின்னஞ்சிறு குலம் ஒன்று பிடரி  சிலிர்த்துத் தரை இறங்கப்போகிறது. அதற்கு முன் தெரியவேண்டியது தரை இறங்கப்போகும் இடத்தைப் பற்றி.

தட்டியங்காடுதான் போர்க்களம் என முடிவானவுடன் அந்த இடம் பற்றி அறிய மையூர்கிழாரைத் தேடி ஆள் அனுப்பினார் குலசேகரபாண்டியன். கானவர்குடித் தலைவனைக் கண்டுவரச் சொல்லி ஆள் அனுப்பினான் வேள்பாரி.

பச்சைமலைத் தொடரின் தென்பகுதியில் பறம்புநாட்டை அடுத்து இருப்பவர் கானவர் குடியினர். எண்ணிக்கையில் மிகக் குறைந்த கூட்டம். உச்சிமலையில் கணவாயின் அடிவாரத்துக்குள் இருப்பதால் இப்படியொரு மனிதக்கூட்டம் இருப்பது மலைமக்களுக்கே பெரிதாகத் தெரியாது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 90

மலையின் செங்குத்துப் பிளவுக்குள் பல பனையாழத்தில் மரப்புதர்களிலும் பாறைக்குகைகளிலுமே தங்குபவர்கள். அதனாலேயே யார் கண்ணிலும் படாதவர்கள். இலையாடைகொண்டவர்கள். ஐந்து முதல் ஏழு வயதுக்குள் குறி தவறும் அம்புகளை எய்தி முடித்துவிடுவர். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அவர்களின் அம்புகள் குறி தவறுவதில்லை.

அந்தக் குலத்தலைவன் இகுளிக்கிழவன். அவனைக் காணத்தான் வாரிக்கையனும் தேக்கனும் வந்திருந்தனர். குளவன்திட்டின் பின்புறக்காட்டில் இறங்கிய அவர்கள், இரவில் நெருப்பினாலான குறியீட்டுமொழி மூலம் கானவர்களுக்குத் தங்களின் வரவைத் தெரிவித்தனர்.

சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த மரத்தின் மேலிருந்து ஒரு கிழவன் கீழிறங்கி வந்தான். பந்த வெளிச்சத்தில் அவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டார் வாரிக்கையன்.

மகிழ்ச்சியோடு அவனை அணைத்துக் கொண்டார். ``என்னைவிட வயதில் மூத்தவன் இகுளிக்கிழவன்” என்றார் வாரிக்கையன்.

``உன் தந்தையைவிட வயதில் மூத்தவன் நான்” என்றான் இகுளிக்கிழவன். இருவரும் சிறுவனிடம் விளக்குவதைப்போல தேக்கனிடம் விளக்கினர்.

`தந்தை’ என்ற சொல்லைச் சொல்லியபோது இகுளிக்கிழவனின் முகத்தில் எள்ளல் மிகுந்த சிரிப்பு ஓடியது. கானவர் குடியினர் இன்னும் தாய்வழிக் குலத்தினராகவே இருக்கின்றனர். கூட்டுவாழ்வில் `தந்தை’ என்ற உறவை அடையாளப்படுத்தும் சொல்லே கிடையாது. உயிர்களால் தாயை மட்டும்தானே அறிய முடியும். பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ அல்லது வேறு எந்தவோர் உயிரினத்துக்கோ இல்லாத பழக்கத்தை வேளிர் குடியினர் கொண்டிருப்பது கானவர் குடிக்கு வியப்பாகவும் கேலிக்குரிய ஒன்றாகவும் இருந்தது. அதன்பொருட்டே வேளிர் குடியினரை வேற்றுமனிதர்களாகப் பார்ப்பர். ஆனாலும் கானவர் குடியோடு நல்லுறவோடு இருந்தனர் வேளிர் குடியினர்.

நீண்ட காலத்துக்குப் பிறகு காண்பதால் பலவற்றைப் பேசிவிட்டு, இறுதியாக போர்நிலம் பற்றிக் கேட்டார் வாரிக்கையன்.

இகுளிக்கிழவன் கேட்டான், ``தட்டியங்காடு தான் போர்க்களம் என்று முடிவெடுத்தவன் யார்?”

``எதிரிகளின் தரப்பைச் சேர்ந்த கோல்சொல்லி” என்றான் தேக்கன்.

``ஏன் இந்த நிலத்தைத் தேர்வு செய்தான்?”

``போரிடும் இருதரப்பு எல்லைக்குள்ளும் இல்லாத நிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதைத் தேர்வுசெய்ததாகச் சொன்னான்.”

``மனிதர்கள் மனிதர்களுக்குரிய இடத்தில்தானே போரிடவேண்டும். இந்த இடத்தில் எப்படிப் போரிட முடியும்?”

``ஏன்... இது மனிதர்களுக்குரிய இடமில்லையா?”

``மனிதர்களுக்கு மட்டுமன்று, விலங்குகளுக்குரிய இடமுமன்று. செங்காவி நிற ஓணானைத் தவிர வேறு எந்த உயிரினமும் அங்கு வாழாது.”

சற்றே அதிர்ச்சியோடு ``என்ன காரணம்?” எனக் கேட்டான் தேக்கன்.

``கருமணலும் ஈக்கிமணலும் நிறைந்த நிலத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது. அந்த நிலத்தில் பத்து அடி தொலைவுக்குப் பாம்பு ஊர்ந்து சென்றால், அதன் அடிவயிறு கிழிந்து செத்துப்போகும்” என்றான்.

வாரிக்கையனும் தேக்கனும் திகைப்போடு அவனைக் கவனித்துக்கொண்டிருந்தனர். ``பாம்புக்கே இதுதான் நிலையென்றால், மற்ற உயிர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன? மண்ணுக்குள் வாழும் கறையான்களுக்கு மட்டுமே அது தாய்நிலம். வேறு எந்த உயிரினமும் வாழ முடியாது” என்றான் இகுளிக்கிழவன்.

``மரம், செடிகொடிகள்கூட இல்லையே... ஏன்?”

``அதற்கு அந்த நிலம் காரணமல்ல. எங்களின் தெய்வம்தான் காரணம்.”

``உங்களின் தெய்வம் அந்த நிலத்தை என்ன செய்தது?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 90

இகுளிக்கிழவன் பின்புறம் திரும்பி, காரமலையின் உச்சியில் இருந்த பிளவைக் காட்டினான். ``அந்தப் பிளவை `கணவாய்’ என்போம். அந்தக் கணவாய்க்குப் பின்புறம்தான் எங்களின் தெய்வங்களான கொம்மனும் கொம்மையும் இருக்கிறார்கள். அவர்கள் கோபமடையும்போது வாய் திறந்து ஊதுகின்றனர். ஆண் தெய்வமான கொம்மன் ஊதும்போது வெளிவருவது காற்று. பெண் தெய்வமான கொம்மை ஊதும்போது வருவது காற்றி.

ஆணின் குணமேறிய காற்று, குளவன்திட்டின் வலதுபுறமாக இறங்கி, தட்டியங்காட்டு மண்ணைச் சீவியெடுத்துக்கொண்டு போகும். பெண்ணின் குணமேறிய காற்றி, குளவன்திட்டின் இடதுபுறமாக இறங்கி,  உருட்டி எடுத்துக்கொண்டு போகும். அதனால்தான் தட்டியங்காட்டில் எந்த மரமும் செடியும் நிலைப்பதில்லை. எல்லாவற்றையும் காற்றும் காற்றியும் பிய்த்துக்கொண்டு போய்விடுகின்றன. புற்று மட்டும்தான்; அதுவும் ஒரு முழம் உயரத்துக்கு மட்டுமே நிலைகொள்ள முடியும். அதற்கு மேலே உயர்ந்தால் அதையும் அழித்துவிடும்.

மலை உச்சியிலிருந்து பாய்ந்துவரும் நீரின் வேகத்தில் கற்கள் அடிபட்டுச் சிதைந்து கூழாங்கற்களாகவும் மணலாகவும் மாறுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், காற்றின் தாக்குதலால் பாறைகள் உடைந்து செதில்செதிலாகச் சீவப்பட்டு ஈக்கிமணலாகவும் கருமணலாகவும் மாறுவதை இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். ஈக்கிமணல் என்பது, உடைபட்டுக் கிடக்கும் அம்பு போன்றது” என்றான் இகுளிக்கிழவன்.

வாரிக்கையனும் தேக்கனும் வியப்பு நீங்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

``நடுப்பகலுக்குப் பிறகு அந்த நிலத்தில் வெக்கை தாள முடியாது. கருமணலில் பட்டு காற்று கருகும். கருகிய புகை மேலெழ, உடலில் இருக்கும் நீரெல்லாம் வற்றி நா வறண்டு வீழ்வான் மனிதன்” என்றான் இகுளிக்கிழவன்.

கொலை நிலம் என்பதன் பொருள் அந்த நிலத்துக்கே முழுமையாகப் பொருந்தும். ஆனாலும் அந்த நிலத்தில் போரிட்டு வெல்வது எப்படி எனச் சிந்தித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தனர். பொழுதாகிக்கொண்டிருந்தது. தட்டியங்காட்டைப் பற்றித் தெரிந்துகொண்ட செய்தியின் அடிப்படையில் ஆயத்த வேலைகளை உடனே செய்யவேண்டும். இரலிமேட்டில் அனைவரும் நமக்காகக் காத்திருப்பர் எனக் கருதி இருவரும் புறப்பட்டனர்.

அவர்களை வழியனுப்ப, கானவர்குடி எல்லை வரை இகுளிக்கிழவன் உடன் வந்தான். கும்மிருட்டில் தங்களின் நிலப்பாதையை மற்றவர்கள் அறிந்திராதபடிதான் எல்லாப் பாதைகளும் இருக்கின்றன. அவர்களின் தேவை அறிந்து குறுக்குவழியில் விரைவாக அழைத்து வந்தான் இகுளிக்கிழவன்.

வரும்வழியில் இருந்த ஆச்சைமரம் ஒன்றைக் கடக்கும்போது இகுளிக்கிழவன் நின்றுவிட்டான். `ஏன் நிற்கிறான்?’ என்று பின்னால் வந்த இருவரும் அந்த இடத்தை உற்றுப்பார்த்தபோது மரப் புதருக்குள் இரு கண்கள் மட்டும் தெரிந்தன. என்னவென உற்றுப்பார்த்தனர். பெருங்கிழவி ஒருத்தி உள்ளே உட்கார்ந்திருந்தாள்.

வந்துள்ளதன் காரணத்தைக் கேட்டாள்.

``சாமேட்டில் போரிடப்போவதற்காகக் கேட்க வந்துள்ளனர்” என்றான் இகுளிக்கிழவன்.

``சாமேட்டிலா?!” என்று வியப்போடு கேட்டாள் முதுகிழவி.

``ஆம்” என இகுளிக்கிழவன் சொல்ல, முதுகிழவி தானியங்களை உருட்டுவதைப்போல எதையோ சொன்னாள்.

விடைபெற்று வரும்வழியில் இகுளிக்கிழவன் சொன்னான், ``உங்களுக்கு வெற்றிகிட்டட்டும் என்றாள்.’’

``இது என்ன, அந்த இடத்துக்குப் புதுப்பெயரைச் சொன்னாய்?” எனக் கேட்டார் வாரிக்கையன்.

``அங்கேதான் சாவுப்பறவை முட்டையிடும். அந்தப் பறவையை அங்கு வைத்துதான் வேட்டையாடுவோம். எனவே, அந்த இடத்தை `சாமேடு’ என்றுதான் நாங்கள் கூறுவோம்” என்றான்.

``சாவுப்பறவையா... அது என்ன பறவை?” எனக் கேட்டான் தேக்கன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 90

``அதைக் கண்டால் உயிரினம் எல்லாம் அலறுமே! கணநேரத்தில் கழுத்தைவெட்டி எடுத்துக்கொண்டு காற்றில் பறக்குமே!” எனச் சொல்லி இரு கைகளையும் விரித்து, தலையை முன்தள்ளியபடி சொன்னான்.

அப்போதுதான் வாரிக்கையனுக்குத் தோன்றியது, `காக்காவிரிச்சியைச் சொல்கிறான் கிழவன்’ என்று. அதை நினைத்த கணத்தில் உடல் நடுங்கி மீண்டது. 

`எந்த உயிரினத்துக்கும் அதன் சாவைக் காட்டும் பறவை என்பதால், அதை `சாவுப்பறவை’ என்கின்றனர்’ என எண்ணிக் கொண்டிருக்கும்போதே பதறிக் கேட்டான் தேக்கன் ``அதை வேட்டையாடுவீர்களா?”

``ஆம்” எனத் தலையாட்டினான் இகுளிக்கிழவன். ``நீங்கள் சொல்லும் அந்த நிலம் முழுவதும் எந்தப் பறவையும் பறந்து கடக்காது. ஏனென்றால், சாவுப்பறவை அங்குதான் குதம் எரிய முட்டையிடும். பிறகு வெறிகொண்டு குளவன்திட்டை நோக்கித்தான் மேலேறி வரும். அதன் அப்போதைய தேவை பசியன்று; எரிச்சல் மிகுந்த கோபம். எனவே, கணவாய்க்குள் மனிதர்கள் இருப்பதால் வெட்டிச்சரிக்க உள்ளே இறங்கும். கண்ணில் சிக்குபவர்களின் தலைகளையெல்லாம் காற்றில் சரிக்கும். அதனால்தான் எங்கள் கானவர் கூட்டம் ஆதியிலே தழைக்காமல் சிறுத்துப்போனது” - கவலைதோய்ந்த குரலில் சொன்னான் கிழவன்.

கேட்டுக்கொண்டிருப்பது மனிதர்கள் சம்பந்தப்பட்ட கதையல்ல; மனிதனால் நம்பவே முடியாத கதை. எனவே, இமை மூடாமல் கவனித்தனர் இருவரும்.

இகுளிக்கிழவன் சொல்லி முடித்ததும் தேக்கன் கேட்டான், ``அதை எப்படி வேட்டையாடுவீர்கள்?”

``எங்கள் தெய்வத்தின் துணையோடு.”

இருவரும் பேச்சின்றி, கிழவனைப் பார்த்தனர்.

``சாவுப்பறவை, முட்டையிட்ட பிறகு குளவன்திட்டை நோக்கித்தான் மேலேறி வரும். நாங்கள் குளவன்திட்டின் மேலே ஆயத்தநிலையில் இருப்போம். எங்களின் தெய்வங்கள் காற்றையும் காற்றியையும் ஊதி அனுப்புவர். அவர்கள் ஊதும் நேரம் அறிந்து நாங்கள் வில்லடிப்போம். அம்புகளை நாங்கள் எய்யும் வேகத்தைவிடப் பத்து மடங்கு வேகத்தில் காற்றும் காற்றியும் எடுத்துச்செல்லும். எங்களது சுருள் அம்புகளின் தாக்குதலை எதிர்த்து சாவுப்பறவையால் மேலே பறந்து வர முடியாது” என்றான்.

காக்காவிரிச்சியை அம்புகளால் வீழ்த்த முடியும் என்பதை நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்தனர் இருவரும். ஆனால் தேக்கனின் எண்ணம் முழுவதும், காற்றைப் பயன்படுத்தி அம்பு எய்யும் அவர்களின் உத்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதிலேயே இருந்தது.

வாரிக்கையன் கேட்டார், ``செங்காவி நிற ஓணான் மட்டும் எப்படி அங்கே உயிர் வாழ்கிறது?”

``சாவுப்பறவையின் முட்டைகளைத் தின்றுதான். ஓணான்கள் அந்த முட்டைகளை மட்டும் அழிக்கவில்லையென்றால், இந்நேரம் பச்சைமலை முழுக்க சாவுப்பறவைதான் பறந்துகொண்டிருக்கும்.”

தேக்கன் கேட்டான், ``காற்று, நாம் எய்யும் அம்பின் வேகத்தை பத்து மடங்கு அதிகப்படுத்துமா?’’

``படுத்தும். ஆனால், நாம் எய்யும் அம்பு வீசிவரும் காற்றின் முகப்போடு இணைய வேண்டும்.”

``காற்றை நாம் உணரும்போதே, அது நம்மைக் கடந்துவிடுமே. பிறகு எப்படி அதன் முகப்போடு இணைந்து அம்பைச் செலுத்த முடியும்?”

``காற்று வருவதறிந்து நாம் ஆயத்தமாகிவிட வேண்டும்.”

``எப்படி?”

``குளவன்திட்டின் உச்சியில் குகை ஒன்று இருக்கிறது. அதில் விளக்கேற்றுவோம். கணவாயினுள் காற்று வரப்போவதற்கு முன்னர் அந்த விளக்கின் சுடர் வலதுபுறம் நோக்கிச் சாய்ந்து எரியும்; காற்றி வருவதாக இருந்தால் இடதுபுறம் நோக்கிச் சாய்ந்து படபடத்து எரியும். சுடர் சாயத் தொடங்கியவுடன் நாணை இழுத்துவிடுவித்தால் அம்பு எகிறும்போது காற்றின் முகப்போடு இணையும்” என்றான் இகுளிக்கிழவன்.

பெருங்காற்று வருவதற்கு முன்னரே அதை உணர்ந்து வீசும் வேகத்தோடு அம்பை இணைக்கும் இவர்களின் அறிவுக்கூர்மை மெய்சிலிர்ப்பை உருவாக்கியது. அப்போதுதான் அடுத்த ஐயமும் வந்தது, ``அம்பு சுருள்வடிவில் இருந்தால் எப்படி காற்றில் ஏகிச்செல்லும், திசைமாறி விழுந்துவிடுமே!”

மறுமொழியின்றி அமைதியாக வந்தான் இகுளிக்கிழவன். இருட்டில் ஒடுக்குப்பாதையில் கவனமாக வரவேண்டும். அதைக் கடந்தவுடன் சொன்னான், ``கானவர்குடியின் தனித்த அடையாளம் அது. எனவே, மற்றவர்களோடு அதைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்.”

குலச்சமூகங்களின் ஆதிஆற்றல்கள் எல்லாம் இப்படியோர் இறுதி முடிச்சுக்குள் சிக்குண்டு விடுகின்றன. மிகத்தேர்ந்த மனிதர்களால் மட்டுமே சிக்கல் நிறைந்த இந்த முடிச்சுகளைக் கழற்ற முடியும்.

பேச்சை எப்படித் தொடர்வது என்பதறியாமல் திகைத்தபடி இருந்தான் தேக்கன். இவ்வளவு நேரம் பேச்சின்றி வந்த வாரிக்கையன் கேட்டார், ``செங்காவி நிற ஓணான்கள் இல்லையென்றால், சாவுப்பறவையின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் அல்லவா?”

``அதில் என்ன ஐயம்? நம் தலைக்கு மேல் வேறு எந்தப் பறவையும் பறக்காது” என்றான் இகுளிக்கிழவன்.

கேள்வி கேட்ட பிறகு அமைதியாக வந்தார் வாரிக்கையன்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, ``ஏன் இதைக் கேட்டீர்கள்?” என்றான் இகுளிக்கிழவன்.

``தட்டியங்காட்டில் இவ்வளவு பெரிய போர் நடக்கப்போகிறது. மனிதர்கள், குதிரைகள், யானைகள் எனப் பல்லாயிரம் உயிரினங்கள் களத்தில் இறங்கப்போகின்றன. இத்தனை பேரின் கால் மிதிக்குத் தப்பி, செங்காவி நிற ஓணான்கள் எப்படி உயிர் பிழைக்கப்போகின்றன?” என்றார் கவலை தோய்ந்த குரலில்.

இப்போது இகுளிக்கிழவன் அதிர்ச்சியானான். ``மனிதர்களாலும் குதிரைகளாலும் அவற்றுக்கு ஆபத்து நேராது. ஆனால், எண்ணிலடங்காத யானைகள் மோதிச் சண்டையிட்டால் மண்ணோடு மண்ணாய் ஓணான்கள் எல்லாம் நசுங்கிச் சாகும்” என்று சொல்லும்போதே அவனது உடலில் நடுக்கம் ஏற்பட்டது.

அதைக் கவனித்தார் வாரிக்கையன்.

ஆனாலும் பேச்சேதுமின்றி மூவரும் இருளுக்குள் நடந்தபடி இருந்தனர்.

இன்னும் குடில்களை உருவாக்காமல் மரப்பொந்துக்குள் வாழ்வதே சாவுப்பறவையால் ஏற்பட்ட அச்சத்தால்தான். அந்த அச்சம் அவ்வளவு எளிதில் அகன்று விடாது. குரல் சற்றே நடுங்க இகுளிக்கிழவன் கேட்டான், ``ஓணான்கள் அழியாமல் தடுக்க நீங்கள் உதவினால், சுருளம்புகளைக் கொடுத்து நாங்கள் உதவுகிறோம்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 90

``அது அழியாமல் நாங்கள் எப்படித் தடுக்க முடியும்?”

``யானைப் போரை மட்டும் தட்டியங்காட்டில் நடத்தாதீர்கள். ஓணான்கள் தப்பித்துவிடும்” என்றான் இகுளிக்கிழவன்.

வாரிக்கையன் இதை எதிர்பார்க்கவில்லை. போர்க்களம் தொடர்புடைய முடிவைப் பாரியும் தேக்கனும் முடியனும்தான் எடுக்க முடியும். தான் எடுக்கக் கூடாது. எனவே, தேக்கனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

எடுக்கப்போகும் முடிவின் முக்கியத்துவத்தை உணர்ந்தபடி ஆழ்ந்து சிந்தித்தான் தேக்கன். ``சரி, யானைப்போரைத் தட்டியங்காட்டில் நடத்தாமல் தவிர்க்கிறோம்” என்று வாக்களித்தான்.

இகுளிக்கிழவன் மகிழ்ந்து நன்றி சொன்னான்.

``பாறைகளுக்குள் நுழைந்துகிடக்கும் வேர், அதற்குரிய மரம் பட்டுப்போனவுடன் தானும் உயிரற்றுப்போகும். ஆனால், ஊழிப் பாறைக்குள் ஓடும் வேர், மரம் பட்டுப் போனவுடன் தானும் பட்டுப்போகாது. மாறாக, ஊழிக்கல்லின் குணமெய்யும். பனை மரத்தீக்கிபோலப் பாறையீக்கியாக அது மாறிவிடும். அதை எடுத்து வேண்டிய நீளத்துக்கு உடைத்து அம்பாகப் பயன்படுத்துவோம். அதன் பெயர்தான் `கல்லூழி வேர்’.”

இகுளிக்கிழவன் சொன்னதை வியப்போடு கேட்ட தேக்கன், ``பனையீக்கிபோல் நீண்டிருக்கும் என்றால் இரும்பை உருக்கி நீட்டியதுபோல்தானே இருக்கும். அதை எப்படிச் சுருளம்பு என்று சொல்கிறீர்கள்?”

இகுளிக்கிழவன் சொன்னான், ``கல்லூழி வேரில் துளியளவு ஈரம் பட்டதும் சுருண்டு கொள்ளும். எனவே, இந்த அம்பு மனிதனைத் தைத்து உள்ளுக்குள் போகும்போதே குருதியின் ஈரத்தில் சுருண்டுவிடும். அதன் பிறகு அதை எடுக்க முயன்றால் எலும்பும் சதையும் பிய்த்துக் கொண்டுதான் வெளிவரும். அதனால்தான் சாவுப் பறவையை எங்களால் வீழ்த்த முடிகிறது” என்றான்.

இந்தச் செய்தியே மிரட்சியை ஏற்படுத்தியது. கிழவன் சொன்னான், ``ஒரே நேரத்தில் ஆறு அம்புகளை விரல் இழுக்கும் நாண் பிடியில் பொருத்தி எய்ய முடியும். அந்த ஆறு அம்புகளின் மொத்தக் கனமும் நீங்கள் பயன்படுத்தும் அம்பின் கனத்தில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும்” என்றான்.

தங்களின் குதிரைகள் நின்றிருந்த மேட்டின் அருகில் வந்தனர். தேக்கன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். எங்கும் விண்மீன்கள் நிறைந்திருந்தன. குறுங்காது முயலின் குருதியில் தோய்ந்த நாணில் வைத்து கல்லூழி அம்புகளை எய்ய, காற்று அவற்றைச் சுமந்து சென்று வெளி முழுவதையும் தைக்க, கசியத் தொடங்கும் குருதித்துளிகளால் நிறைந்திருந்தது வானம்.

``உங்களுக்குத் தேவையான அம்புகள் அனைத்தும் நாளை அதிகாலை கிடைக்கும்” என்றான் இகுளிக்கிழவன்.

மிகுந்த நன்றியோடு வணங்கிவிட்டு இருவரும் குதிரையில் ஏறினர்.

புறப்படுகிறவர்களைப் பார்த்து இகுளிக்கிழவன் சொன்னான், ``அழித்தொழிக்கப்படும் உயிரினம் எதுவும் சமவெளியிலிருந்து மலைமேல் ஏறவிடக் கூடாது.”

ள்ளிரவுக்கு முன்பே இரலி மேட்டுக்கு வந்து சேர்ந்தனர் வாரிக்கையனும் தேக்கனும். அவர்களின் வரவை எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். முறியன் ஆசானிடம் வெக்கை நிறைந்த அந்த நிலத்தின் தன்மையை விளக்கினான் தேக்கன். `நடுப்பகலுக்குப் பிறகு வீரர்கள் யாராலும் நீரின்றி அந்த நிலத்தில் நிற்க முடியாது’ என்று இகுளிக்கிழவன் சொன்னதைக் கூறினான்.

போர்க்களத்தில் நீர் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. காடுகளாக இருந்தால் ஓரவத்திக்கொடி எங்கும் இருக்கும். மேலும் கீழும் ஒரே நேரத்தில் வெட்டினால் ஒரு முழக்கொடியில் மூன்று ஆள் குடிக்கும் அளவுக்கு நீர் இருக்கும். ஆனால், சமவெளி நிலத்தில் என்ன செய்வது எனச் சிந்தித்த முறியன் ஆசான், நீர்வேலி படர் கொடிகளை வெட்டி வரச் சொன்னார். வெட்டி எடுக்க இரவோடு இரவாக ஆள்கள் போயினர். 

நாகக்கரட்டிலிருந்து படைவீரர்கள் அனைவரும் குளவன்திட்டின் அடிவாரத்துக்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். பாரியிடம் கல்லூழி வேரைப் பற்றி வாரிக்கையன் சொன்னார். ``இப்படியோர் அம்பு இருக்கிறதா?!” என்று வியந்தான் பாரி.

``கருமணல், ஈக்கிமணல் ஆகியவற்றின் தன்மை என்ன?” என்று கேட்டான். இகுளிக்கிழவன் சொன்னதை விளக்கிக் கூறினார் வாரிக்கையன். மணலீக்கிகளை நம்முடைய ஆயுதமாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி சிந்தித்தான் பாரி. இகுளிக்கிழவன் சொன்ன ஒவ்வொரு சொல்லிலிருந்தும் காக்கும் மருந்தை முறியன் ஆசானும், தாக்கும் ஆயுதத்தை வேள்பாரியும் உருவாக்கத் தொடங்கினர். அவர்களுக்குக் கிடைத்ததென்னவோ நள்ளிரவு கழிந்த மிச்சப்பொழுதுதான். ஆனாலும் அவர்களால் அதைச் செயல்படுத்த முடிந்தது. புதிய ஒன்று கிடைக்கிறது என்ற மகிழ்வே ஆற்றலைப் பல மடங்கு  பெருக்கும்.

பறம்பின் ஆற்றல் பல்கிப்பெருகிக் கொண்டிருந்தது. களப்போர் என்பது பறம்புக்குப் புதிது. தாக்குதல் மட்டுமன்று, ஒருங்கிணைப்பும் ஒத்திசைவும் மிக முக்கியம். அதை உருவாக்க, புதிதாகச் செய்யவேண்டியது என்ன என்பதே பாரியின் சிந்தனையாக இருந்தது.

நள்ளிரவு கடக்கும் முன்னே கருங்கைவாணன் முழுத் திட்டமிடலையும் முடித்திருந்தான். வாள்படையின் தளபதி சாகலைவனிடம் பன்னிரு சேனைவரையர்கள் இருந்தனர். ஒவ்வொரு சேனைவரையனும் தனக்குக் கீழ் பன்னிரு சேனைமுதலிகளைக்கொண்டிருந்தான். ஒவ்வொரு சேனைமுதலியின் கீழும் இருநூறு படைவீரர்கள் இருந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 90

போர் என்பது. பயிற்சிபெற்ற வீரர்களின் களம். எந்த ஒரு தாக்குதலையும் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரும்போது இயல்பிலேயே அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகிநிற்கும். வேந்தர் படையின் வலிமையே போர்க்களச் செயல் பாட்டில் அது கொண்டிருக்கும் இணையற்ற அனுபவம்தான். ஒவ்வொரு சேனைமுதலியும் தனித்த முரசங்களையும் பதாகைகளையும் கொண்டிருந்தனர்.  இருநூறு பேர்கொண்ட தனது படை, தாக்குதலை எப்போது தொடங்க வேண்டும் அல்லது தாமதிக்க வேண்டும், முன்னேறுவது அல்லது நின்ற இடத்திலேயே நிலைகொள்வது, எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் அல்லது பின்வாங்க வேண்டும் என எல்லா வற்றையும் தாக்கும் களத்தின் செயல்பாடு களுடனேயே செய்து முடிக்கக்கூடிய பயிற்சியைக் கொண்டவர்கள். முரசுகள் எழுப்பும் ஓசைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்களின் செயல் பாடுகளை அமைத்துக்கொள்வர். போர்ப்பயிற்சி என்பதன் சாரம் அதுதான்.

போர்க்களத்தில் ஒரு படை பின்னோக்கி நகர்வது என்பது, பின்வாங்கல் ஆகாது. ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் உத்தியின் பகுதியே ஆகும். எனவேதான், பயிற்சிகொண்ட படை எளிதில் களத்தை விட்டுச் சிதைந்துவிடாது. படைப்பிரிவில்  ஒவ்வொரு வீரனும் மாவீரனாக இருக்கவேண்டிய தேவையேதும் இல்லை. உத்தரவுகளையும் ஒழுங்குகளையும் பின்பற்றும் ஒருவனாக இருந்தால் மட்டுமே போதுமானது. அவன் குறைந்தளவு ஆற்றலைக் கொண்டவனாக இருந்தாலும் போதும். அவனது திறன், படையின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. ஏனென்றால், இந்தத் தாக்குதல் முறையே ஒன்றையொன்று இறுகப் பின்னிய சங்கிலித் தொடர்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்ணில் உரசி நகரும் சங்கிலி எதை நோக்கி நகர்கிறது என்பதை அந்த இடத்திலிருந்து பார்க்கும் ஒருவனால் தீர்மானிக்க முடியாது.  அது எங்கோ போய்க்கொண்டிருக்கிறது என்றுதான் நினைப்பான். ஆனால், இறுதியில் அது தனது காலை இறுக்கும்போதுதான் ஆபத்தை உணர்வான்.

எண்ணற்ற  கண்ணிகளால் இணைக்கப்பட்ட சங்கிலித்தொடரைப் போர்க்களம் எங்கும் வீசியெறிந்துவிட்டு விடியலுக்காகக் காத்து நின்றான் கருங்கைவாணன். ஐந்து தளபதிகளும் அறுபது சேனைவரையன்களும் எழுநூற்றி இருபது சேனைமுதலிகளும் அவர்களின் கீழ் இயங்கும் எண்ணிலடங்கா வீரர்களும் பெருஞ் சங்கிலித் தொடரின் கண்ணிகளாக இறுகப் பொருத்தப் பட்டிருந்தனர். மொத்தப் படையின் அசைவு களையும் தன் உத்தரவுகளால் துல்லியமாக இயக்கக்கூடியவனாக நிலைகொண்டிருந்தான் கருங்கை வாணன்.

பொழுது விடிந்தது. தட்டியங்காட்டுக்குள் திசைவேழரின் தேர் வந்து நின்றது. நாழிகை வட்டில் வைக்கப்பட்டிருந்த பரண்மீது ஏறினார் திசைவேழர். இரு பக்கங்களிலும் நின்றிருந்த அவரின் மாணவர்கள், அவர் மேலேறுவதற்கு உதவிசெய்தனர்.

பரண் மேலேறி நின்று பார்த்தார். நேரெதிரே கதிரவன் சுடர் வீசி மேலெழுந்தான். செந்நிறக் கீற்றுகளின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. கதிரவனுடைய ஒளிக்கைகளின் நிறம் பார்த்தே நாழிகையைச் சொல்ல முடியும் அவரால். கண்களை மூடி இரு கைகளைக் குவித்துக் கதிரவனை வணங்கினார்.

தலையை மெள்ளத் திருப்பி, படைகளைப் பார்த்தார். அவரின் பார்வை விளிம்புக்கு அப்பாலும் பெருகிக்கிடந்தது வேந்தர்படை.

மூஞ்சலில் தனது கூடாரத்தில் அமர்ந்திருந்தார் குலசேகரபாண்டியன். அவரது பார்வையில் விரிக்கப்பட்ட தோல் வரைபடத்தில் தட்டியங் காட்டுப் பரப்பு முழுவதும் குறியீடுகளால் நிரம்பி யிருந்தது. மூன்று மெய்க்காவலர்களும் இரண்டு சேனைவரையர்களும் உடன் நின்றுகொண்டிருந்தனர். படைப்பிரிவின் எல்லா நகர்வுகளும் முன்தீர்மானிக்கப்பட்டவையாக இருந்தன.

இந்த நிலம் இதுவரை கண்டிராத பெரும் படையின் தாக்குதலை, வரைபடத்தைப் பார்த்தபடி குலசேகரபாண்டியன் உச்சரிக்கும் சொற்களே தீர்மானித்தன. அவர் சொல்லப் போகும் சொற்கள் கருங்கைவாணனைச் சென்றடைய எத்தனை இமைப்பொழுதுகள் ஆகும் என்பதைக் கணித்திருந்தான் தலைமைக்கணியன் அந்துவன்.

புதிய அமைச்சன் ஆதிநந்தி வலதுபுறமும் அந்துவன் இடதுபுறமும் நிற்க, வரைபடத்தை உற்றுக்கவனித்தபடி இருந்தார் குலசேகர பாண்டியன். இந்தப் போருக்காகப் பாண்டிய நாட்டின் முதற்படைப் பிரிவு இங்கு வந்து ஓராண்டு ஆகப்போகிறது. இவ்வளவு நெடிய காலம் காத்திருந்து, திட்டமிட்டு, மூவேந்தர்களையும் அணி சேர்த்து, வலிமையைக் கூட்டி, மலையை விட்டுக் கீழிறங்கி வர வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்ட பாரியை சமதளத்தில் இறங்கிப் போரிடும் சூழலை உருவாக்கியதே குலசேகரபாண்டியனின் பெருவெற்றியாகச் சொல்லப்பட்டது. வெற்றிப் புகழுரைகள் அவன் செவிகளில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன. ஆனாலும் கண்ணிமைக்காமல் வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் விரிந்துகிடக்கும் முழுப் படையையும் பார்த்துக்கொண்டிருந்தான் வேள்பாரி. குளவன்திட்டின் உச்சியில் நின்றிருந்தான் அவன். அவனது வலதுபக்கம் இகுளிக்கிழவனும் இடதுபக்கம் காலம்பனும் நின்றிருந்தனர். அவனுக்குப் பின்னால் கூவல்குடியின் வீரர்கள் நின்றிருந்தனர்.

போர்க்களத்தின் இடதுபுறம் வேந்தர்படை நின்றிருந்தது. பரவிக்கிடக்கும் படையின் இறுதி எல்லையில் சிறிதாகத் தெரிந்தன கூடாரங்கள். அதுதான் மூஞ்சல். அதன் உள்ளேதான் நீலன் இருக்கிறான். பாரியின் கண்கள் அந்த இறுதி எல்லையில் நிலைகுத்தி நின்றன.

மூஞ்சலுக்கு நேர் மேற்கே நாகக்கரட்டின் உச்சியில் வாரிக்கையன் நின்றிருந்தார். குளவன்திட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் இடையில் கூவல்குடியினர் ஒலிப்பின்னலை உருவாக்கினர். பெரும் மலைத்தொடர்களையே துல்லியமான ஒலிக்குறிப்புகளால் இணைக்கக்கூடிய அவர்களுக்கு, சில காதத்தொலைவு கொண்ட இந்த இடைவெளி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. குளவன்திட்டிலிருந்து நாகக்கரடு வரை அணிவகுத்து நிற்கும் வேந்தர்படையின் தன்மையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் வேள்பாரி.

பரண்மேல் நின்றிருந்த திசைவேழர், நாழிகை வட்டிலை உற்றுப்பார்த்தபடி இருந்தார். அவரது திசை நோக்கி நீண்டுகிடந்த நாழிகைக்கோலின் நிழல் சிறிது சிறிதாக உள்வாங்கியது. அவர், கண்களைச் சுருக்கிப் பார்த்தபடி இருந்தார். பரப்பப்பட்ட மணலில் துகள்களுக்கு இடையே ஏறி இறங்கிப் பின்வாங்கிக்கொண்டிருந்தது நிழல். ஐந்தாம் நாழிகையைக் குறிக்கும் கோட்டை நோக்கிச் சுருங்கி உள்ளிழுத்து வந்து சேர்ந்தது. மஞ்சள் பூசிய கருநிழல் சிறுகோட்டைத் தொட்டதும், இமைப்பொழுதும் இடை வெளியின்றிக் கையை உயர்த்தினார். அவரின் கை அசைந்தபோது முரசுகளின் பேரொலி எங்கும் எதிரொலித்தது. இருபுறங்களிலும் நிற்கும் எண்ணற்ற பரண்களிலிருந்து முரசொலி எழுந்தபோது நிலமெங்குமிருந்து வெடித்துக் கிளம்பியது வீரர்களின் பேரோசை.

தட்டியங்காட்டுப் போர் தொடங்கியது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...