மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - வடிவு - 11

Godly woman - Vadivu
பிரீமியம் ஸ்டோரி
News
Godly woman - Vadivu

புள்ளைகுட்டியெல்லாம் நோய் நொடியில்லாம நிம்மதியா வெச்சிப்பா...

டிவு அந்த ஊரின் பெரிய தனக்காரர் மவ. பேருக்கேத்த மாதிரி வடிவாத்தான் இருப்பா. அப்பனுக்குத் தென்னந்தோப்பு, வாழைத்தோப்புன்னு ஏகப்பட்ட நிலபுலன்கள் உண்டு. ஆளு பேரு பஞ்சாயத்துன்னு பெரிய கையி.

வடிவுக்கு ரொம்ப நல்ல குணம். யாரு வந்தாலும் முகம் மலர ‘வாங்க’ன்னு கூப்பிட்டு உபசரிப்பா. ஏத்த இறக்கமெல்லாம் பாக்கத் தெரியாத வெள்ளந்திப் புள்ளை. ஊருல எல்லாருக்கும் அவளைப் புடிக்கும்.

பக்கத்தூர்ல சத்தக்காரன்னு ஒருத்தன். ரொம்ப ஏழ்மையான குடும்பம்.  ஊருக்கு ஒதுக்குப்புறமா வீடு. அந்தூரு சுடுகாட்டுல வெட்டியானா இருந்தான். ஆளு, வலுவா இருப்பான். நாலாளு வேலையை ஒத்தாளா செய்வான். ஊருல நல்லது கெட்டது எது நடந்தாலும் முன்னாடி நிப்பான். அப்பன் இல்லை... அம்மா மட்டும்தான்.  ஊரு மணியக்காரருக்கு சத்தக்காரனை ரொம்பப் புடிக்கும். எங்க போனாலும் கூடவே கூட்டிக்கிட்டுப் போவாரு. அவருக்குப் பின்னாடி கையைக் கட்டிக்கிட்டு நிப்பான் சத்தக்காரன். ஓட, ஓடியாறன்னு எல்லா உதவியும் செய்வான்.

Godly woman - Vadivu
Godly woman - Vadivu

ஒருக்கா, வடிவோட அப்பங்காரனுக்கு நெலம் அளவை செஞ்சு கல்லூன்றும் வேலை இருந்துச்சு. அவரு, மணியக்காரருக்கு ஆள் விட்டாரு. மணியக்காரர், சத்தக்காரனைக் கூட்டிக்கிட்டு வடிவு வீட்டுக்கு வந்தாரு. வூட்டுக்கு வந்த மணியக்காரரை ‘வாங்க’ன்னு கூப்பிட்டு நீச்சத்தண்ணி கொடுத்து உபசரிச்சா வடிவு. வீட்டுக்கு வெளியில கையக் கட்டிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தான் சத்தக்காரன். அவனைப் பாக்க பாவமா இருந்துச்சு. அவன் பார்வையில இருந்த உண்மையும் மரியாதையும் அவளுக்கு ரொம்பப் பிடிச்சது. அவனுக்கும் நீச்சத்தண்ணி கொடுத்து திண்ணையில இடம் ஒதுக்கித்தந்து உக்காரச் சொன்னா. தன்னை ஒரு பொருட்டாவே மதிக்காத பெரியதனக்கார வூட்டுல நீச்சத்தண்ணி கொடுத்து உக்காரவும் சொன்ன வடிவு மேல சத்தக்காரனுக்குப் பெரிய மரியாதை வந்திருச்சு. இன்னொருமுறை வடிவு வெளியில வரமாட்டாளான்னு மனசு ஏங்க ஆரம்பிச்சுச்சு.

வடிவுக்கும் மனசுக்குள்ள ஒரு குழப்பம். முதன்முறை பாத்தப்பவே சத்தக்காரன் மேல ஏதோ ஓர் ஈர்ப்பு. கூடை எடுக்கிற சாக்குல திரும்பவும் வீட்டைவிட்டு வெளியில வந்து சத்தக்காரனை ஓரக்கண்ணால பாத்தா. சத்தக்காரனும் பாத்துச் சிரிச்சான். வடிவோட அப்பனும் மணியக்காரரும் நிலபுலன் வேலைகளைப் பாக்க, வடிவும் சத்தக்காரனும் ஒருத்தரை ஒருத்தர் திருட்டுத்தனமா பாத்துக்கிட்டிருந்தாக.

வேலை முடிச்சு மணியக்காரர் கிளம்புனாரு. சத்தக்காரனுக்குக் கிளம்ப மனசேயில்லை. எத்தனையோ பொம்பளைகளைப் பாத்திருக்கான். அதுவும் பெரிய வூடுகள்ல இருக்கிற பொம்பளைக, புழுவைப் பாக்கிறாப்புலதான் பாப்பாக. தண்ணி குடுத்தா, குடிச்ச செம்பு மேல தண்ணி தெளிச்சு சுத்தப்படுத்தித்தான் எடுப்பாக. வடிவோ, தன்னையும் ஒரு சகவாசியா நெனைச்சு உக்கார வெச்சு, `வாங்க போங்க'ன்னு வேற பேசுறா.  இப்படியொரு மனுஷியைப் பாத்ததேயில்லையே. மனசு கெடந்து அடிச்சுக்குது.

வடிவுக்கும் அப்படித்தான் இருக்கு. சத்தக்காரன் மேல ஏதோ ஒரு பரிவு. நமக்கு எட்டாத எடத்துல இருக்கான்னு மூளை சொல்லுது. மனசு அதைக் கேக்க மறுக்குது. அவனைப் பாத்துக்கிட்டே இருக்கணும் போலிருக்கு. மணியக்காரர் பின்னாடி எழுந்து நடக்குறான். ஜன்னலுக்குப் பின்னாடி இருந்து அவனையே பாக்குறா வடிவு. ரெண்டு பார்வையும் கலக்குது.

சத்தக்காரனுக்கு இருப்புக்கொள்ளலே. எந்த வேலையிலயும் மனசு ஒட்டலே. எதைப் பாத்தாலும் வடிவு உருவமாவே தெரியுது. இதுவரைக்கும் அனுபவிக்காத புது உணர்ச்சியா இருக்கு. ராத்திரி தூக்கம் கொள்ளலே.

மறுநாளு காலையில மணியக்காரர் ஆளுவிட்டுக் கூப்பிட்டாரு. வேகவேகமா கெளம்பி அவருக்கு முன்னால போயி நின்னான். “ஏலே... சத்தக்காரா... நேத்து போனமில்லையா... அந்த வூட்டுக்குப் போயி அங்குள்ள ஆம்பிளைகிட்ட இந்தக் காயிதத்தைக் குடுத்துட்டு வாடா”ன்னாரு. சத்தக்காரனுக்கு நிலைகொள்ளல. அந்த இருளாண்டியே இப்படியொரு வாய்ப்பைக் குடுத்திருக்கான்னு மனசுக்குள்ள அவனுக்கு நன்றி சொல்லிட்டு, காயிதத்தை வாங்கிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சான்.

Godly woman - Vadivu
Godly woman - Vadivu

வடிவு ஊருக்கும், சத்தக்காரன் ஊருக்கும் இடையில அடர்த்தியா மரங்க நிக்கும். தெக்கித்தோப்புன்னு அதுக்குப் பேரு. அதைக் கடந்துதான் ஊருக்குள்ளாற போவணும். அதைக் கடந்து வேகவேகமா நடக்குறான். வடிவு தாழ்வாரத்தைப் பெருக்கிக்கிட்டிருந்தா. அப்பன் வீட்டுல இல்லை. சத்தக்காரன், வாசல்ல போயி நின்னுக்கிட்டு, ‘அய்யா... அய்யா’ன்னு கூப்புட்டான். குரலே வடிவுக்குக் காட்டிக் குடுத்திருச்சு. வேகவேகமா விளக்குமாத்தைப் போட்டுட்டு வாசலுக்கு வந்தா. சத்தக்காரன் நின்னுக்கிட்டிருக்கான். வடிவுக்கு வெக்கத்துல முகம் செவந்துபோச்சு. “வாங்க”ன்னு கூப்பிட்டா. சத்தக்காரனுக்கும் முகம் பாக்க தைரியமில்லை. கீழே குனிஞ்சுக்கிட்டு “அய்யா இருக்காவளா”ன்னு கேட்டான். “இப்பத்தான் வெளியில போனாக... வந்திருவாக”ன்னு சொல்லிப்புட்டு திண்ணையைச் சுத்தம்பண்ணி உக்கார எடம் குடுத்தா. வீட்டுக்குள்ளாற ஓடி நீச்சத்தண்ணி ஊத்தியாந்து குடுத்தா.

வீட்டுக்கு முன்னால இருக்கிற களத்துல அறுத்துக்கட்டுன கருதுங்க குவிஞ்சு கெடக்கு. அதுகளை காக்காய்களும் குருவிகளும் வந்து கொத்தித் திங்குதுக. வெரட்ட ஆளில்லை. தென்னமரத் தோட்டத்துக்குள்ள நாலைஞ்சு பேரு நின்னு தண்ணியை வாகாப் பாச்சிக்கிட்டிருக்கானுவ. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு வெளித்திண்ணையில உக்காந்திருக்கான் சத்தக்காரன். அப்பப்போ வெறகெடுக்க, தண்ணியூத்தன்னு வாசலுக்கு வந்துவந்து ஓரக்கண்ணால பாத்துட்டுப் போறா வடிவு.

கொஞ்ச நேரத்துல அப்பங்காரன் வந்து சேந்தான். அவரைக் கும்பிட்டு மருவாதி செஞ்சுட்டு, மணியக்காரன் குடுத்தனுப்புன காயிதத்தைக் குடுத்தான். அதை வாங்கி சரிபாத்துட்டு, “ஏம்மா வடிவு, சத்தக்காரனுக்கு நீச்சத்தண்ணி ஊத்திக்குடு”ன்னு சொல்லிட்டு, தென்னந்தோப்புக்குள்ள தண்ணி பாச்சுறதை மேலாண்மை செய்யப் போயிட்டாரு அந்த மனுஷன். திரும்பவும் ஒரு செம்பு நீச்சத்தண்ணியைக் கொண்டாந்து குடுத்தா வடிவு. அதை வாங்கப்போகும்போது, யாரும் கவனிக்காத வகையில அவ கையைப் புடிச்சான் சத்தக்காரன். அந்தத் தொடுகையில ரெண்டு பேரோட மனசும் ஒண்ணா சேர்ந்திருச்சு.

அதுக்கப்புறம், ஏதோவொரு வேலை சொல்லி வந்துபோக ஆரம்பிச்சான் சத்தக்காரன். வயக்காடு, குளத்தங்கரைன்னு யாருமறியாம ரெண்டு பேரும் சந்திச்சுப் பேச ஆரம்பிச்சாக. ஆரம்பத்துல இதை சாதாரணமா எடுத்துக்கிட்ட ஊராளுக, ‘அடிக்கடி இந்தப் பய நம்ப ஊருல தென்படுறானப்பா’ன்னு சந்தேகமா பாக்க ஆரம்பிச்சாக.

அரசல் புரசலா செய்தி கசிய ஆரம்பிக்குது. சத்தக்காரனை ஊராளுக கண்காணிக்க ஆரம்பிச்சாக. சத்தக்காரனும் வடிவும் சந்திச்சுப் பேசுறதைக் கண்டுபிடிச்சுட்டாக. செய்தி, வடிவோட அப்பங்காரன் காதுக்குப் போச்சு. ஒருநா ராத்திரி எல்லாரும் கூடிப் பேசுனாக.

“என்னா தைரியம் இருந்தா அந்தப் பய, நம்ம ஊருக்குள்ள வந்து நம்ம புள்ளை மனசை மாத்தியிருப்பான்... அவனைச் சும்மா விடக்கூடாது”ன்னு ஒரு வயசாளி சொன்னான். “நம்ம புள்ளைக்கு புத்தி எங்க போச்சு... அவஞ்சாதி என்ன... அவம்பாக்குற வேலையென்ன... அவன்கூட போயி எப்படி உரசிக்கிட்டு நின்னு பேசுது. ரெண்டு பேரையும் வெட்டித் தள்ளணும்”னு இன்னொரு இளந்தாரிப் பய ஆவேசப்பட்டான். ஆளாளுக்கு வசவசன்னு பேசிக்கிட்டிருந்தாக.

கடைசியா ஒரு பெரிய மனுஷன் பேசுனாரு, “தப்பு பண்ணினது அந்தப் பய... அதுக்கு நம்ம புள்ளையை எதுக்குத் தண்டிக்கணும். அடுத்தமுறை அந்த சத்தக்காரன் இந்த ஊருக்குள்ள வந்தா, உயிரோட திரும்பக் கூடாது...”ன்னு சொல்லிட்டு, எதிர்ல உக்காந்திருந்த நாலைஞ்சு இளந்தாரிப் பயலுகளைப் பாத்தாரு. அந்தப் பயலுகளும் தலையாட்டிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பிட்டானுவ.

சத்தக்காரனுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லே. நாலைஞ்சு நாளா படுத்த படுக்கையாயிட்டான். வடிவுக்கு அவனைப் பாக்காம இருக்க முடியலே. தெனமும் வழக்கமா சந்திக்கிற இடத்துக்குப் போறதும், காத்திருந்து பாத்துட்டு திரும்புறதுமா திரிஞ்சா. ஒருவழியா உடம்பு குணமாகி, வடிவைப் பாக்கக் கிளம்புனான் சத்தக்காரன்.

தெக்கித்தோப்பு வழியா வரும்போது மரத்துமேல இருந்து மொத்தி மொத்தியா கிளைகள்லாம் ஒடிஞ்சு விழுந்துச்சு. சத்தக்காரன் அண்ணாந்து பாத்தான். மேலே நாலைஞ்சு இளந்தாரிங்க அருவாளோட நின்னுக்கிட்டிருந்தானுவ. “ஏலே... சத்தக்காரா... அந்தக் கிளைகளை அள்ளி ஓரமா போட்டுட்டுப் போப்பா”ன்னான் ஒருத்தன். சத்தக்காரன் குனிஞ்சு கிளைகளை எல்லாம் எடுத்தாம் பாருங்க... சுத்திலும் ஈட்டி, கம்போட ஒளிஞ்சிருந்த அஞ்சாறு பேரு சத்தக்காரன் மேல பாய்ஞ்சானுக. உடம்புல ஓர் இடம் விடலே. வெட்டுக் குத்துன்னு மாறி மாறி விழுந்துச்சு. ஒருத்தன் சரியா கழுத்துல அரிவாளைப் பாய்ச்சி இழுத்தான். ரத்தம் தோப்பெல்லாம் பெருக்கெடுத்து ஓடுச்சு. எதிர்ப்பே காட்டாம மொத்தமா அடங்கிப்போனான் சத்தக்காரன். ஒரு புதராப் பாத்து குழியை வெட்டி சத்தக்காரனைப் போட்டுப் புதைச்சுட்டு கிளம்பிட்டானுவ எல்லாரும்.

அவன் வருவான் வருவான்னு காத்திருக்கா, வடிவு. அந்தப் பக்கமா போய் வர்ற சத்தக்காரனோட ஊராளுககிட்ட விசாரிக்கிறா. யாருக்கும் தகவல் தெரியலே. வீட்டுக்கே வர்றதில்லைன்னு சொல்றாக. ஆளு, நூலா மெலிஞ்சிட்டா. சாப்பாடில்லை. தூக்கமில்லை. ‘சத்தக்காரன் எப்ப வருவான்... எப்போ பாக்கலாம்’னு மனசு கெடந்து அலைபாயுது.

மெள்ள மெள்ள செய்தி வெளியே வருது. ‘சத்தக்காரனை நம்மூரு ஆளுகள்லாம் சேர்ந்து கொலை பண்ணி தெக்கித்தோப்புக்குள்ளாற வெச்சுப் புதைச்சுட்டாங்க’ன்னு அவ தோழியொருத்தி சொல்லிட்டா. வடிவு ஒடைஞ்சு போனா. கதறி அழுவுறா. எழுந்து நேரா தெக்கித்தோப்புக்கு ஓடுறா. மக பின்னாடி அப்பங்காரனும் ஓடுறான். அதைப்பாத்து ஊராளுக எல்லாம் ஓடுறாக.

தெக்கித்தோப்புக்குள்ள ஓடின வடிவு, சத்தக்காரனைப் புதைச்ச எடத்தைத் தேடிக் கண்டுபிடிச்சு, விழுந்து புரண்டு அழுவுறா. அந்த மண்ணை அள்ளி தலையில போட்டுக்கிட்டு கதறுறா. ஆளுங்க எல்லாம் தூக்கி ஆறுதல் சொல்றாங்க. ஆனா, வடிவு எழுந்திருக்கலே. பேச்சு மூச்செல்லாம் நின்னுபோச்சு. அப்பங்காரன் மகளை மடியில தூக்கி வெச்சுக்கிட்டு “வடிவு... வடிவு”ன்னு கத்துறான். பதில் இல்லை. அந்தச் சத்தக்காரன் போன இடத்துக்கே வடிவும் போய்ச் சேந்துட்டா.

அந்தச் சம்பவத்துக்குப் பெறவு, தெக்கித்தோப்புப் பக்கமா மக்கள் நடமாட்டமே இல்லாமப் போச்சு. வருஷம் தவறாம பெஞ்ச வானம் பொட்டுத் துளி தூறலே. வயக்காடெல்லாம் காஞ்சு கருவாடாப்போச்சு. ரெண்டு ஊர்லயும் அம்மை பரவி, கொத்துக் கொத்தா ஆளுக செத்துப்போனாக. சத்தக்காரன் ஊராளுகளுக்கு நிலவரம் புரிஞ்சுபோச்சு. அகாலமா செத்துப்போன புள்ளைகளின் வெம்மைதான் நம்மைப்போட்டு வெளுக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு, ரெண்டு பேருக்கும் எல்லையில சிலையெடுத்து படைப்புப் போட்டாக. அதுக்குப் பெறகு, வானம் கறுத்து மழை பெய்ய ஆரம்பிச்சுச்சு. புள்ளைகுட்டியெல்லாம் நோய் நொடியில்லாம நிம்மதியா இருந்துச்சுக.

வடிவையும் சத்தக்காரனையும் பாக்கணும் போலிருந்தா, தஞ்சாவூர்ல, நாஞ்சிக்கோட்டை பக்கத்துல இருக்கிற வல்லுண்டாம்பட்டுக்குப் போங்க. ஊருக்கு மேற்கே, கையில அரிவாளோட ஆவேசமா நின்னுக்கிட்டிருக்கான் சத்தக்காரன். பக்கத்துலயே அமைதியா உக்காந்திருக்கா வடிவு. வடிவு, வடிவச்சியம்மாவாகி காலப்போக்குல அப்புச்சி அம்மனாயிட்டா... அவ முகத்துல தாய்மையும் அன்பும் கருணையும் தளும்பி நிக்குது!