மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்!

சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர், படம்: ப.சரவணக்குமார்

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது எதற்குப் பொருத்தமோ இல்லையோ, நிதி சார்ந்த திட்டங்களுக்கு மிகவும் பொருத்தம். 20  ஆண்டுகளுக்குமுன் நாம் கேட்டிராத சொற்கள் இன்று ஆட்சி நடத்துகின்றன. எங்கள் ஆபீஸில் புதிதாகச் சேர்ந்த இளம்பெண், கிராமத்துப் பெண்ணாகத் தெரிந்தாள். நானும், என் தோழியும் சுடிதார் அணிவோம்; அவள் புடவை அணிந்திருந்தாள்.

ஒருநாள் மதியச் சாப்பாடு நேரம். அவளுக்கு ஒரு போன் வந்தது. `ஆமாங்கண்ணா, இன்ஃபோசிஸைக் குடுத்துருங்க;

ஹெச்.சி.எல் டெக்கை வாங்கிடுங்க' என்று அவள் பேசப் பேச எனக்கும் தோழிக்கும் ஒரே ஷாக்; அவள் பேசுவது எதுவும் புரியாமல் பரிதாபமாக விழித்தோம். போனை வைத்தவள், “இந்த முறை 20% டாக்ஸ் போயிடும்போல. ஷார்ட் டெர்ம் கெயின் ரூ.50 ஆயிரத்தைத் தாண்டிடுச்சு’’ என்றும் சொன்னாள். 

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்!

சக்ரவியூகத்தின் உள்ளே...

அதுவரை அந்த ஆபீஸில் நானும் தோழியும்தான் முதலீட்டு குரு. ஐந்தாண்டு டாக்ஸ் சேவர் பாண்ட், பி.பி.எஃப், இ.பி.எஃப்  என்று எங்களுக்குத் தெரிந்த பல திட்டங்கள் நிறையப் பேருக்குத் தெரியாது என்பதால், அலுவலகத்தில் எங்களுக்கு மரியாதையே தனி. ஆனால், மறுநாள் ஆபீஸுக்குள் நுழைந்து பார்த்தால், என் தோழி அந்தப் புதுப்பெண் சீட்டுக்குப் பக்கத்தில் தன் சீட்டை மாற்றிவிட்டிருந்தாள். அன்றுதான் அறிவின் பலத்தை நான் உணர்ந்தேன்! 

நாம் சம்பாதிப்பதில் குறைவில்லை; சேமிப்பதில் தவறுவதில்லை. ஆனால், முதலீட்டு முறைகள் அன்றாடம் மாறி வருவதால், திக்குத்திசை புரியாமல் திகைத்து நின்றுவிடுகிறோம். புதிய முதலீட்டு முறைகள் ரிஸ்க் நிறைந்தவை; ஆனால், ரிஸ்க்குக்கு நிகரான வருமானம் தரக்கூடியவை. நாமோ, ரிஸ்க்கை நினைத்துப் பயந்து, இந்த முதலீடுகள் பற்றித் தெரிந்துகொள்ளாமலே இருந்துவிடுகிறோம். கூடுதலாகப் பெறும் வருமானத்தை இழக்கிறோம். கொஞ்சம் துணிந்துவிட்டால் போதும்;  இந்தச் சக்ரவியூகத்தின் உள்ளே நுழையவும், லாபத்தை ஈட்டி, லாகவமாக வெளியே எடுக்கவும் நம்மால் முடியும். அதற்கு நமக்குக் கள அறிவு அவசியம்.

சேமிப்பு வேறு; முதலீடு வேறு!

`அடிக்கடி முதலீடு முதலீடு என்கிறீர்களே, நான் போட்ட எஃப்.டி முதலீடு இல்லையா, வாங்கிய நிலம், தங்கம், போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் எல்லாம் முதலீடு இல்லையா?' என்று என்னுடன் சண்டைக்கு  வருகிறீர்களா? 

இவை எல்லாமே முதலீடுகள்தாம். ஆனால், காலத்தால் மங்கிப்போன முதலீடுகள். இவற்றிலிருந்து இன்றைக்குக் கிடைக்கும் வருமானம் 3 - 7.6% மட்டுமே. இன்றைய வாழ்க்கைமுறைக்கும், இன்னும்
30 ஆண்டுகள் வாழ்வதற்கும் இந்த வருமானம் போதுமா? இந்த வருமானத்தில் வரி, பண வீக்கம் ஆகியவை தின்றதுபோக என்ன மிஞ்சும்?

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்!

`முதலீடு என்றால், நீங்கள் பங்குச் சந்தை பற்றிச் சொல்கிறீர்களா, அது ஆபத்தாயிற்றே?' என்பீர்கள். இன்றைக்கு எதில் இல்லை ஆபத்து? கார் ஓட்டுவதுகூட ஆபத்தானதுதான். ஆனால், நாம்  கார் ஓட்டத்தானே செய்கிறோம்? 

`சரி, முதலீடு செய்யத் தயார். ஆனால், எல்லாப் பணத்தையும் முதலீட்டில் போட்டு விட்டால் அவசரத் தேவைக்கு?' என்று கேட்கிறவர்களுக்குத் தாராளமாக ஒரு ‘ஓ’ போடலாம். நம் எல்லாப் பணத்தையும் வங்கிச் சேமிப்புக் கணக்கில் வைப்பது தவறு என்றால், அத்தனை பணத்தையும் முதலீடு செய்வதும் தவறுதான். முதலீடுகள்  வளர எப்போதுமே அதிக காலம் எடுத்துக்கொள்ளும். நம் குறுகிய காலத் தேவைகளுக்குச் சேமிப்புதான் கைகொடுக்கும்.

எங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பண்டிகைச் செலவு, ஸ்கூல் ஃபீஸ், இன்ஷூரன்ஸ் பிரீமியம் போன்ற வருடாந்திரச் செலவுகளுக்குத் தனித்தனியே ஆர்.டி போட்டுவிடுவார். மகன், மகள் மேற்படிப்பு, கல்யாணம், வீடு கட்டுதல், ஓய்வுக்காலம் போன்றவற்றுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார். நமக்கு அவசரமாகத் தேவைப்படாத பணத்தை மட்டுமே, ஷேர் மார்கெட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற இடங்களில் முதலீடு செய்யலாம். குறுகிய காலத் தேவை களுக்கு வங்கி எஃப்டி, போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகள்தாம் பெஸ்ட்.  

ஒரு கேள்வி...

உங்கள் குறுகிய காலத் தேவைகளுக்கான தொகை எவ்வளவு? இந்தத் தொகையை எப்படிச் சேமிக்கிறீர்கள்?

ப(ய)ணம் தொடரும்