மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 91

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

மூவேந்தர்களின் கூட்டுப்படையில் மிகுவலிமைகொண்டது குதிரைப்படை. அதன் ஆற்றல் அளவிடற்கரியது. திறன்கொண்ட போர்க்குதிரைகள் அலையலையாய் அணிவகுத்து நின்றன. கருங்கைவாணனின் திட்டப்படி பறம்புப்படையை நிலைகுலையச் செய்யப்போவது இந்தக் குதிரைப்படையே. அதற்குப் பெருவீரன் உறுமன்கொடி தலைமையேற்றிருந்தான்.

உறுமன்கொடியின் கணிப்புப்படி வேந்தர்படையின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், இருபதில் ஒரு பங்குக் குதிரைகள்கூடப் பறம்பில் இருக்க வாய்ப்பில்லை. எனவே, பறம்புப்படையை வாரிச்சுருட்டிவிடும் மனநிலையில்தான் முரசின் ஓசையைக் கேட்டதும் தாக்குதலுக்கு விரைந்தான். நேரடித் தாக்குதல், திசைதிருப்பித் தாக்குதல், முன்படையின் சுழற்சிக்கேற்ப பின்படை சுற்றுதல் என, குதிரைப்படைக்குரிய எண்ணற்ற போர் உத்திகள் இருந்தாலும், அவை எவற்றையும் திட்டமிட வேண்டிய தேவையில்லை எனக் கருதினான். வலிமையோடு ஏறிப்பாயும் தனது படையின் முன் பறம்புப்படையால் நிலைகொள்ளவே முடியாது. தன் குதிரைகளின் மூன்றாம் அலைப்பாய்ச்சலில் பறம்பின் குதிரைப்படை முற்றாக நிலைகுலையும் எனக் கணித்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 91

போர் என்பது, ஆயுதங்களின் வழியே இறுதியாகத்தான் நடக்கிறது. அதற்கு முன் மனதின் பல தளங்களில் அது நிகழ்த்திப்பார்க்கப்படுகிறது. எண்ணற்ற வாய்ப்புகளின் வழியே அந்தத் தாக்குதலை நிகழ்த்திப்பார்ப்பவனால்தான் சிறந்த தளபதியாகக் களத்தில் வினையாற்ற முடிகிறது. எண்ணங்களும் கணிப்புகளும் உத்திகளுமே போரைச் செயல்படுத்துகின்றன. உறுமன்கொடியின் கணிப்பில் ஏற்பட்ட நம்பிக்கை அவனை உத்திகளின்பால் நேரத்தைச் செலவழிக்க அனுமதிக்கவில்லை. நேர்கொண்டு தாக்கி அழிக்கும் முறையே போதுமானது எனக் கருதினான்.

வேந்தர்களின் குதிரைப்படையின் வலிமையை நன்கு அறிவான் வேள்பாரி. மூவேந்தர்களின் ஒருங்கிணைந்த படையில் குதிரைகளின் எண்ணிக்கையும் அவற்றின் ஆற்றலும் இதற்கு முன் கண்டிராத ஒன்றாக இருக்கப்போகிறது எனக் கணித்தான். அதனால்தான் பறம்பின் தரப்பில் குதிரைப்படையின் தளபதியாக இரவாதனை நியமித்தான்.

பறம்பின் தரப்பில் வலிமைமிகுந்த தாக்குதலை நடத்தப்போவது விற்படையே எனக் கணித்தான் கருங்கைவாணன். பறம்பின் தாக்குதலின்கூர்முனை, விற்படையில்தான் இருக்கிறது என எண்ணினான். அதனால்தான் மற்ற படைத்தளபதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததைவிட அதிகமான சேனைவரையர்களை விற்படைத் தளபதி துடும்பனுக்கு வழங்கினான்.

பதினான்கு சேனைவரையர்களைக்கொண்ட துடும்பன், தனது உத்திகளின் மூலம் பறம்புப்படையை வீழ்த்த வீறுகொண்டு முன்னகர்ந்தான். உத்திகளின் தொடக்கம் மட்டுமே முன்முடிவாகிறது. அவற்றின் அடுத்தடுத்த கட்டங்களைக் களத்தின் போக்கே தீர்மானிக்கிறது.

முன்னேறிவரும் எதிரிகளின் விற்படையைச் சந்திக்கக் காத்திருந்தான் உதிரன். அவனது தலைமையில்தான் பறம்பின் விற்படை ஆயத்தநிலையில் இருந்தது. உதிரனும் நீலனும் பறம்பின் இணையற்ற தளபதிகள். தங்களது தாக்குதலின் மூலம் எதிரிகளை நிலைகுலையச் செய்பவர்கள். வாரிக்கையனும் சோமக்கிழவனும் முதல் தலைமுறையினர். தேக்கனும் கூழையனும் இரண்டாம் தலைமுறையினர். பாரியும் முடியனும் மூன்றாம் தலைமுறையினர். உதிரனும் நீலனும் நான்காம் தலைமுறையினர். இந்த நான்கு தலைமுறைப் போர் உத்திகளும் வீரமும் ஆற்றலும் இரு தோள்களிலும் இறங்கி நிற்கும் மாவீரர்களாக நீலனும் உதிரனும் இருந்தனர். ஆனால், நீலன் எதிரிகளால் சிறை யெடுக்கப்பட்டுள்ளான். அவனை மீட்கும் வரை பறம்புவீரன் எவனும் சோர்வடையப்  போவதில்லை. கைகளின் அயர்வை எவனும் உணரப்போவதில்லை.

உதிரன், அதனினும் கூடுதலான சினமேறியவனாக இருந்தான். இந்தப் போரை எதிரிகள் பாரியை வெல்ல நடத்துகின்றனர். ஆனால், பறம்புவீரர்களைப் பொறுத்தவரை இந்தப் போர் நீலனுக்காக நடக்கிறது. பறம்புக்கு அடைக்கலமாக வந்த அகுதையின் குலக்கொடியை ஒருபோதும் பறம்பு இழக்காது. எந்த நிலையிலும் நீலனை மீட்காமல் இந்தப் போர் முடிவுக்கு வராது. எதிரில் நிற்பது எண்ணிக்கையில் கணக்கிடவேண்டிய படையன்று; கொன்று முடிக்கவேண்டிய படை என்பது மட்டுமே உதிரனுக்குத் தெரிந்தது. அதற்காக மலைமக்களின் மாபெரும் ஆயுதமான வில்லை ஏந்தி நின்றது உதிரனின் படை. போர் தொடங்க முரசு முழங்கியபோது காற்றைக் கிழித்து எகிறின அம்புகள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 91

வேந்தர்படையின் பெருவீரர்கள் குவிந்துகிடப்பது வாள்படையில்தான். கவசம் பூண்டு, கேடயம் தாங்கி, வாள் ஏந்தி நிற்கும் வீரன் ஒருவன் பல்லாண்டுக்காலப் பயிற்சிக்குப் பிறகுதான் போர்க்களத்துக்கு வந்து நிற்கிறான். நிலைப்படையில் இல்லாமல் அவ்வப்போது திரட்டப்படும் வீரர்கள் யாரும் வாள்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை. வாள்போர், எளிய பயிற்சியால் கைகூடுவதில்லை.

எல்லாக் காலங்களிலும் நிலைப்படையில் நின்று செயலாற்றும் வீரர்களால் மட்டுமே போர்க்களத்தில் தன்முனைப்போடு வாள் சுழற்ற முடியும். மூவேந்தர்களின் நிலைப்படைகள் அனைத்தும் ஒன்றிணையும்போது வாள் உயர்த்தி நிற்கும் வீரர்கள் பெரும் எண்ணிக்கை கொண்டிருந்தனர். கருங்கைவாணனை மகா சாமந்தனாகக்கொண்ட இந்தப் பெரும்படையின் உயிர்நாடியான பகுதியாக வாள்படை விளங்குகிறது. எவ்வளவு கடினமான சூழலிலும் எதிரிகளின் படையைப் பிளந்து முன்னகர்வதில் வாள்படைக்கு இணைசொல்ல முடியாது. அந்தப் பெரும்படைக்குச் சாகலைவன் தலைமையேற்றான்.

பறம்பின் தரப்பில் வாள்படைக்குத் தலைமைதாங்கியவன் தேக்கன். அவன்தான் எதிரியின் வலிமைமிகுந்த பகுதியை எதிர்கொள்ளப்போகிறவன். அவனிடம்தான் களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் பற்றி நீண்டநேரம் உரையாடினான் பாரி. வாள்படை, களத்தின் நடுப்பகுதியில் நிலைகொண்டிருந்தது. அதுவே தங்களுக்கு எல்லா வகைகளிலும் வாய்ப்பானது எனக் கருதினான் கருங்கைவாணன். பறம்பின் படையை நடுவில் பிளந்து உள்நுழையும்போது மொத்தக் கட்டுக்கோப்பும் விரைவாகக் குலைந்து சரியும் என மதிப்பிட்டான். அவனது கணிப்பைச் செயல்படுத்த வாளைச் சுழற்றி முன்னேறினான் சாகலைவன்.

வேந்தர்களின் தேர்ப்படைக்கு நகரிவீரன் தலைமையேற்று நின்றிருந்தபோது அதை எதிர்கொள்ள, பறம்பின் தரப்பில் கூழையன் நின்றிருந்தான். தளபதி உச்சங்காரியின் தலைமையில் வேந்தர்களின் யானைப்படை நின்றிருந்தது. ஆனால், பறம்பின் தரப்பில் யானைகள் எவையும் இதுவரை களத்துக்கு வந்துசேரவில்லை.

திசைவேழரின் கையசைவும் போர்முரசின் அதிர்வும் வீரர்களின் பேரோசையுமாகப் போர் தொடங்கியபோது கருங்கைவாணனின் கண்கள் முன்கள நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன. அவன் தனது பெரும்படையை மூன்றாகப் பகுத்திருந்தான்.

முதல்நிலைப் படை சீறிப்பாய்ந்து தாக்குதலைத் தொடங்கியது. தனது படையின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே முதல்நிலையில் நிறுத்தியிருந்தான். இரண்டாம்நிலைப் படை தேவைப்பட்டால் களம் இறங்க ஆயத்தமாக இருந்தது. மூன்றாம்நிலைப் படை எந்த வகையிலும் களமிறங்கும் சூழல் வராது எனக் கணித்திருந்தான். முதல்நிலைப் படையின் நடுவில் நின்றிருந்தான் அவன். இரண்டாம்நிலைப் படையின் இறுதிப்பகுதியில் சோழவேழனும் பொதியவெற்பனும் உதியஞ்சேரலும் நின்றிருந்தனர். அவர்களை அடுத்துதான் மூன்றாம்நிலைப் படை நின்றிருந்தது. அதைக் கடந்தே மூஞ்சல் இருந்தது. மூஞ்சலுக்குள்தான் குலசேகரபாண்டியன் இருந்தார். அவருக்கு அருகில் உள்ள கூடாரம் ஒன்றில் நீலன் கட்டப்பட்டுக்கிடந்தான்.

போர்க்களத்தின் தலைமைத் தளபதி தாக்குதலின் முகப்பில் நின்றால் அவனால் படையை வழிநடத்த முடியாது. ஆனால், தாக்குதலின் முகப்பில் தனது படை வெளிப்படுத்தும் ஆற்றலை உணர்ந்தவனாக இருக்க வேண்டும். அதற்குத் தகுந்தே போர்க்களத்தில் தளபதி இருக்கவேண்டிய இடம் தீர்மானமாகிறது. கருங்கைவாணன், தனது வாழ்வின் பெரும்பகுதியைப் போர்க்களத்தில் கழித்தவன். களத்தாக்குதலின் தன்மையையும் வேகத்தையும் அவனால் ஓசைகொண்டே மதிப்பிட முடியும்.

தளபதியின் வலிமை, படையைக் கொண்டுசெலுத்துவதில் இருப்பதாக ஒருகாலத்தில் நம்பப்பட்டது. ஆனால், களப்போர் என்பது வீரமும் ஏமாற்றும் கலந்த ஒரு கலவை. தாக்குவதும் திரும்புவதும் பின்வாங்குவதும் சம முக்கியத்துவம் உள்ள செயல்பாடுகளே. ஆனால், இவையெல்லாம் சரியான ஒருவனின் கணிப்பின் வழியே நடந்தால் மட்டுமே அந்தப் படை வெற்றியைக் கொய்ய முடியும். கருங்கைவாணன், வேறு எந்த ஒரு தளபதியையும்விட நீண்ட போர் அனுபவம்கொண்டவனாக இருந்தான். இதுவரை எந்த ஒரு மனிதனின் உத்தரவுக்கும் இவ்வளவு எண்ணிக்கையிலான படைவீரர்கள் கீழ்ப்பணிந்து நின்றது கிடையாது. முதன்முறையாக அந்தப் பெரும்வாய்ப்பு கருங்கைவாணனுக்குக் கிட்டியுள்ளது. முப்பெரும் பேரரசர்கள் தன்னோடு போர்க்களத்தில் வாள் ஏந்தி நிற்கின்றனர். அனைத்தையும் உணர்ந்தாலும் எதன்பொருட்டும் கவனத்தைச் சிதறவிடாமல் முன்களத்தில் நிகழும் ஆயுதங்களின் உரசல் ஓசையை மதிப்பிடுவதிலேயே கவனமாக இருந்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 91

குளவன்திட்டின்மீது இருந்து போரைப் பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. பள்ளத்தாக்கு ஒன்றில் வெகுதொலைவிலிருந்து மரம், செடிகொடிகளை அசைத்துவரும் காற்று செங்குத்தாய் நிற்கும் கரும்பாறையின் மீது மோதுவதுபோல, நீண்டு நகர்ந்துவரும் வேந்தர்படை பறம்புப்படையோடு மோதியது.

பாரி தனது படையை மூன்று நிலைகளாகப் பிரிக்கவில்லை; ஒரே நிலையில்தான் வைத்திருந்தான். ஆனால், தாக்குதல் உத்தியை மூன்றாகப் பிரித்திருந்தான். போர், பகலின் இருபது நாழிகையில் நடக்கிறது. முதல் பத்து நாழிகையில் கடைப்பிடிக்க வேண்டிய உத்தியை ஒன்றாகவும், அடுத்த ஐந்து நாழிகைக்கான உத்தியை வேறொன்றாகவும், இறுதி ஐந்து நாழிகைக்கான உத்தியை மற்றொன்றாகவும் தீர்மானித்திருந்தான்.

தீர்மானம் என்பது, முன்திட்டமிடல் மட்டும்தான். எந்த ஒரு முன்திட்டமிடலும் வாய்ப்புகளை மையப்படுத்தியே வடிவமைக்கப்படுகிறது. வாய்ப்பற்றவற்றின் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் அதற்கு வடிவம்கொடுக்க முடிவதில்லை. அதனால்தான் களத்தின் தேவைக்கேற்ப புதிய முடிவுகளை விரைந்து எடுக்கும் தளபதி வெற்றியை அடைகிறான். பறம்பின் தளபதிகள் அனைவருக்கும் திட்டம் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. ஆனால், நிலைமை என்பது போர்க்களத்தில்தான் தீர்மானமாகிறது. அதற்குத் தகுந்த புதிய முடிவுகளை அவர்கள் எடுப்பதில் எந்தத் தடையுமில்லை. ஆனால் வேந்தர்படையில் முடிவெடுக்கும் அதிகாரம், கருங்கைவாணனுக்கும் அவனுக்கு மேலே இருப்பவர்களுக்கும்தான் இருந்தது; முன்களத்தில் நின்று போரிடும் தளபதிகளுக்கில்லை.

கருங்கைவாணன் கணித்ததுபோலவே வேந்தரின் குதிரைப்படை எகிறி முன்னேறியது. எதிரி தாக்குப்பிடித்து நிற்பான் என அவன் கணித்ததில் பாதியளவு நேரம்கூடப் பறம்புப்படையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அலையலையாய் வந்து எகிறின குதிரைகள். பறம்புவீரர்களால் முன் நுழைந்து உள்ளே புகமுடியாத அளவுக்கு வேகமும் அடர்த்தியும்கொண்டதாக இருந்தது வேந்தர்படை. அதன் தாக்குதலின் வேகமறிந்து திசையைத் திருப்பியது பறம்புப்படை.

பறம்புப்படை திரும்பத் தொடங்கியதும் பெருங்கூச்சலிட்ட உறுமன்கொடி, கையில் இருந்த வாளை இருமுறை சுழற்றிப் பேரோசை எழுப்பினான். அவனது ஓசையைக் கேட்டதும் குதிரைப்படையின் முரசொலிப்பாளன் முரசுகளை மாற்றி ஒலித்தான். பின் திரும்பும் பறம்புவீரர்களை வேந்தர்களின் குதிரைப்படை வீரர்கள் உற்சாகத்தோடும் ஆவேசத்தோடும் விரட்டத் தொடங்கினர்.

ஆறு அணிகளாகப் பிரிந்து படைவீரர்கள் பின்னோக்கிச் செல்ல உத்தரவிட்டிருந்தான் இரவாதன். அந்த உத்தரவு, போர் தொடங்கும் முன்பே திட்டமிடப்பட்டது. வேந்தர்களின் படையை மிகச் சிறிது நேரம் மட்டுமே எதிர்கொண்டு தாக்கிவிட்டு, கலைந்து பின்செல்ல வேண்டும் என்பது முன்முடிவு. பறம்புவீரர்கள் திட்டமிட்டதுபோலவே குதிரையைத் திருப்பினர். ஆனால், திரும்பிய வேகத்தில் குதிரைகளின் ஓட்டம் பலமடங்கு பெருகியது. மலை மேடுகளிலே பாய்ந்து போகும் பழக்கம்கொண்ட பறம்பின் குதிரைகள், கணநேரத்தில் உச்சவேகத்தை அடைந்தன. அவர்களை அளவற்ற வேகத்தில் விரட்டிவந்தது வேந்தர்படை.

விரட்டிச்செல்லத் தன் படைகளை அடுத்தடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தான் உறுமன்கொடி. இத்துடன் பறம்பின் குதிரைப்படை முழுமுற்றாக அழியவேண்டும் என்னும் ஆவேசத்தோடு படைகளுக்கு உத்தரவிட்டான்.

இரவாதன் கணித்ததைவிட மிகக் குறுகிய தொலைவிலேயே வேந்தர்படைக் குதிரைகள் வேகத்தை இழந்தன. பாய்ந்து முன்னகரும் கால்களால் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியவில்லை. தேங்கத் தொடங்கின.

`ஈக்கிமணலும் கூர்முனைகொண்ட கருமணலும் தகித்துக்கிடக்கும் நிலம் அது’ என்று தட்டியங்காட்டு மண்ணைப் பற்றி இகுளிக்கிழவன் சொன்னதும் பாரி முடிவுசெய்தான், வேந்தர்படைக் குதிரைகளின் குளம்புகள் இவற்றைத் தாங்காது என்று. பறம்பின் குதிரைகள் மலைக்காடுகளில் காலம் முழுமையும் அலைபவை. எனவே, அவற்றுக்கு சமவெளிக் குதிரைகளுக்குப் போடுவதுபோல கால் குளம்பில் அரைவட்ட வடிவிலான குளம்புக்குறடு போடுவதில்லை. பாறைகளின் கூர்முனை, குளம்பின் இதர பகுதியைக் குத்திக் கிழித்துவிடும். தொடக்க நாளில் இதற்கு மாற்று என்ன செய்வது என, பறம்பின் மருத்துவர்கள் தீவிரமாக ஆலோசித்தார்கள். அப்போதுதான் செம்புக்களிமண்ணைப் பூசுவது என முடிவானது. செம்புக்களிமண்ணைப் பாதக்குளம்பு முழுவதும் பூசினால், அது ஆமையின் ஓட்டைத் திருப்பிப் போட்டதுபோல குளம்பின் மேல் முழுமையாக உட்கார்ந்துகொள்ளும். பாறை வெடிப்புகளிலும் கூர்முனைக் கல்லிலும் நடந்தாலும் தாவினாலும் குளம்புக்கு ஒன்றும் ஆகாது. எல்லாவகையான கவசமாகவும் அது இருக்கும். அன்றிலிருந்து பறம்பின் குதிரைகள் அனைத்துக்கும் செம்புக்களிமண்ணே குளம்புப்பூச்சாகப் பூசப்படுகிறது.
ஆனால், சமவெளிக் குதிரைகளுக்கு இரும்பால் ஆன அரைவட்ட வடிவிலான குளம்புக்குறடுதான் அடிக்கப்படும். குளம்பின் நடுப்பகுதி எதுவும் அடிக்கப்படாமல் தன்னியல்பிலேயே இருக்கும். போர்க்குதிரைகள் வீரனைச் சுமந்தபடி பாய்ந்து முன்னத்திக் கால்களை ஊன்றும்போது நிலத்தின் தன்மைக்கு ஏற்ப குளம்பின் கால் பகுதி முதல் முக்கால் பகுதி வரை மண்ணுக்குள் புதைந்து மேலெழும். இது, ஈக்கிமணலும் கருமணலும் நிரம்பியுள்ள நிலத்தில் குதிரைகளை என்ன வகையில் பாதிக்கும் என்பது எளிதாகக் கணிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருந்தது.

அதனால்தான் குதிரைப்படையின் தளபதியாக எப்போதும் செயல்படும் கூழையனைத் தேர்ப்படைக்கு நியமித்துவிட்டு, இரவாதனைக் குதிரைப்படையின் தளபதியாக அனுப்பிவைத்தான் பாரி. வேந்தர்களின் வலிமைமிகுந்த படையான குதிரைப்படையை எவ்வளவு வேகமாகக் குறைக்கிறோமோ அவ்வளவு வேகமாக வெற்றியை நெருங்க முடியும். எனவே, குதிரைப்படையைச் சூறைக்காற்றின் வேகத்தில் அழித்தொழிக்கும் உத்தியைக் கடைப்பிடிப்பது என முடிவெடுத்தான் பாரி. அதற்குப் பொருத்தமானவன் இரவாதனே. அவனது வாள்வீச்சின் வேகம் யாராலும் எதிர்கொள்ள முடியாதது. சூளுர் வீரர்களின் படைத்தொகுப்பு முழுமையும் இரவாதனின் கீழே அணிவகுக்கச்செய்து மொத்தக் குதிரைப்படையையும் அவனிடம் ஒப்படைத்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 91

பறம்புவீரர்களை விரட்டிவந்த வேந்தர்களின் குதிரைப்படை, பாய முடியாமல் தேங்கத் தொடங்கியது. மேலே அமர்ந்திருந்த வீரர்கள் அந்தக் குதிரைகளை அடித்து ஓட்ட முனையும்போது முன்காலைத் தூக்கி வைக்க முடியாமல் அவை திணறின.

இரவாதனும் அவன் தோழர்களும் கணித்த இடத்தைவிடச் சற்று முன்னதாகவே வேந்தர்களின் குதிரைப்படை தேங்கத் தொடங்கியதும், அவர்களை நோக்கித் தங்களின் குதிரைகளைத் திருப்பிய பறம்பு வீரர்கள், குதிரைகளின் கடிவாளங்களைச் சுண்டி இழுத்தனர். எதிரிகள், தங்களை நோக்கி வருவது அறிந்து வேந்தர்படை வீரர்கள் தங்களின் குதிரைகளை வேகவேகமாக இயக்க முற்படும்போது மின்னல் வேகத்தில் வந்த வாள்களால் தலைகள் சரிந்துகொண்டிருந்தன. இயங்க முடியாத குதிரைகளின் மேலிருந்து திணறிய வீரர்கள் அடுத்தடுத்த கணங்களில் குதிரையிலிருந்து சரிந்தனர்.

விரட்டிச் சென்ற தங்களின் குதிரைப்படை, எதிரியை முழுமுற்றாக அழித்துத் திரும்பும் எனப் பார்த்திருந்தான் உறுமன்கொடி. சிறிது நேரத்திலேயே பறம்பின் கொடி ஏந்திய குதிரைவீரன்தான் முன்னோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தான்.  உறுமன்கொடிக்கு, ஒரு கணம் எதுவும் புரியவில்லை. `பன்னிரு சேனைமுதலியைக்கொண்ட முதற்படைப்பிரிவு எங்கே போனது... ஏன் யாரும் மிஞ்சவில்லை?’ எனச் சிந்திக்கும் முன், அடுத்த சேனைவரையனின் தலைமையிலான பன்னிரு படைப்பிரிவுகளும் அடுக்கடுக்காகத் தாவிப் பாய்ந்து முன்னேறின.

இரவாதன் குழு, மோதல்போக்கைச் சற்றே வெளிப்படுத்திவிட்டு, குதிரைகளை மீண்டும் பின்னோக்கித் திருப்பியது. தங்களின் முதற்பிரிவை அழித்த எதிரிகளைப் பழிதீர்க்கும் எண்ணத்தில் வேந்தர்களின் படைவீரர்கள் குதிரைகளை விரட்டி வந்தனர். ஈக்கிமணல் குதிரைகளின் குளம்புகளைக் கிழித்து உள்ளிறங்கும்போது பறம்பின் வாள்கள் அதைவிட ஆழமாக வீரர்களின் உடல்களுக்குள் இறங்கிக்கொண்டிருந்தன. குதிரைப்படையை அடுத்தடுத்து விரைவுபடுத்த ஆயத்தமாக இருந்தான் உறுமன்கொடி.

விற்படைத் தளபதி உதிரனின் உத்தரவுப்படி முதல்நிலைத் தாக்குதலில் அளவில் சிறுத்த அம்புகளையே பயன்படுத்தினர் வீரர்கள். நாண்களின் விசை கூட்டிக்கொடுக்க, அடுத்தடுத்து வெவ்வேறுநிலை அம்புகளைப் பயன்படுத்தினர். பறம்புவீரர்கள் தொடுக்கும் அம்புகள் எதிரிகளின் மீது ஈட்டியைப்போலப் பாய்ந்தன. அவற்றின் வேகமும் வலிமையும் ஒப்பிட முடியாததாக இருந்தன.

எதிரிகளைத் தங்களின் அம்புகளால் வலிமையோடு தாக்கத் தேவையான தொலைவுக்கு முன்செல்ல வேந்தர்படையால் முடியவில்லை. ஏனென்றால், அதைவிட ஒரு பங்கு அதிகமான தொலைவிலிருந்தே பறம்புவீரர்களால் வலிமையான தாக்குதலைத் தொடுக்க முடிந்தது.

பறம்புவீரர்கள் எய்யும் அம்புகள் சீறிப்பாய்ந்தவண்ணமிருக்க, வேந்தர்படையின் அம்புகள் பலவும் பாதிப்பு ஏதுமின்றிப் பணிந்துகொண்டிருந்தன. உதிரன் தனது படைக்குக் கொடுத்த உத்தரவு, வலிமை குறைந்த அம்புகளை மட்டுமே தொடக்கநிலையில் பயன்படுத்த வேண்டும் என்பது.

துடும்பன் இதை எதிர்பார்த்துதான் இருந்தான். பறம்புவீரர்களை விற்போரில் வீழ்த்த முடியாது என அவனுக்கு நன்கு தெரியும். அவர்களின் தாக்குதல் மற்ற படைப்பிரிவின் பக்கம் போய்விடாமல், தங்களை நோக்கியே இருக்குமாறு பார்த்துக்கொள்வதுதான் துடும்பனுக்குக் கருங்கைவாணனின் உத்தரவு. எனவே, தாக்கியவாறு முன்னகரும் பறம்புப்படையைச் சமாளித்தபடி சற்றே பின்வாங்கிக்கொண்டிருந்தான் துடும்பன்.

வேந்தர்களின் வாள்படை, முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. தேக்கன் தலைமையிலான பறம்புப்படை, முன்வகுத்த திட்டத்தின்படி பின்நகர்வதற்கான உத்தியையே பின்பற்றின. சாகலைவன் உற்சாகப்பெருக்கில் தனது படையை முன்னகர்த்திக்கொண்டிருந்தான்.

தேர்ப்படையின் தளபதி நகரிவீரனுக்கு, தனக்கு முன்னால் நிற்பதை ஒரு படை எனக் கருதவே மனமில்லை. தாக்குதலுக்கான வடிவத்தில் வலிமை மிகுந்த தேர்கள் வரிசை வரிசையாக முன்னகர்ந்துகொண்டிருந்தன. ஆனால், பறம்பின் தரப்பில் நின்றவற்றை `தேர்’ என்றே வகைப்படுத்த முடியாது எனத் தோன்றியது. உழவு வண்டிகளைப் போர்த்தேர்களாக மாற்றி எடுத்துவந்துள்ளனர் எனக் கருதினான். வலிமையற்ற அவற்றின் தன்மை பார்வையிலேயே தெரிந்தது.

தேரின் மீது நிற்கும் வீரன்தான் மற்ற அனைத்துப் படைவீரர்களையும்விடத் திறன்மிக்கவனாக இருக்க வேண்டும். வில், வாள், வேல் ஆகிய மூன்று ஆயுதங்களையும் கையாளத் தெரிந்த பெருவீரன் மட்டுமே தேரின் மீது நின்று போரிட முடியும்.

அதைவிட முக்கியம், போரிடும் வீரனுக்கும் தேரை ஓட்டும் வளவனுக்கும் இருக்கவேண்டிய ஒத்திசைவு. குதிரைகளை அசையவிடாமல் நிறுத்திவைக்கவும் இசைவுக்கு ஏற்ப திருப்பிவைக்கவும் அவன் வீரனின் மனமறிந்து செயல்படுபவனாக இருக்க வேண்டும். போர்நிலம், எவ்விடமும் சமதளத்தைக் கொண்டதன்று; மேடுபள்ளங்களும் ஏற்ற இறக்கங்களும்கொண்ட பாழ்நிலமாகத்தான் இருக்கும். எனவே, தேரைச் சிறிது முன்னேற்ற வேண்டுமானாலும் குதிரைகளை விரைந்து இழுக்கச் செய்து முன்னகர்த்த வேண்டும். சுண்டி நகரும் தேரின் மீது நின்று போரிடுபவன் ஆயுதங்களைக் கையாளுதல் எளிதன்று.

சக்கரங்களை உருட்டுவதையும் உருட்டாமல் நிறுத்துவதையும் திறம்படச்செய்கிற வளவனின் கையில்தான் மேலே நின்று போராடும் வீரனின் முழு ஆற்றலும் இருக்கிறது.

நாக்குக்கு மத்தியில் கடைவாயிலில் பொருந்தியிருக்கும் கடிவாளத்தை எந்த நேரமும் இழுத்துப் பிடித்தபடியே இருக்கும் சூழல் ஏற்பட்டால், எந்தக் குதிரையும் தனது ஒழுங்கை ஒரு துள்ளலில் உதறியெறிந்துவிடும். அதை உணர்ந்தவனாக வளவன் இருந்தால் மட்டுமே முழுநாளும் போர்க்களத்தில் கட்டுப்பாடு இழக்காமல் குதிரையைச் செலுத்த முடியும். வளவன் தேரை நிறுத்தும் தன்மையைப் புரிந்துகொண்டு தாக்குதலை முன்னெடுக்கும் குணமும் புரிதலும் போரிடும் வீரனுக்கு வேண்டும்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 91

குதிரையின் மனநிலை, வளவனின் திறமை, வீரனின் வலிமை ஆகிய மூன்றும் இணைந்தே தேர்ப்படையின் ஆற்றலாய் வெளிப்படுகிறது. கூழையன் தனது படையை சீரான வேகத்தில் தாக்குதலைத் தொடுக்க ஆணையிட்டி ருந்தான். ஆனால், வேந்தர்களின் படைத்தளபதி நகரிவீரன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி முன்னேறப் பாய்ந்து செல்ல உத்தரவிட்டான்.

நாழிகைப்பரணின் நேர் எதிரே கண் பார்வையின் கடைசிப் பகுதியைத்தான் யானைப்போருக்கான களமாக திசைவேழர் ஒதுக்கியிருந்தார். தட்டியங்காட்டின் கடைக்கோடிப் பகுதி அது. உச்சங்காரியின் தலைமையில் வேந்தர்களின் யானைப்படை நின்றிருந்தது. பறம்பின் தரப்பில் எந்த ஒரு யானையும் களத்துக்கு வரவில்லை.

நீண்டநேரத்துக்குப் பிறகு ஒரே ஒருவன் மட்டும் குதிரையில் போர்க்களம் நோக்கி வந்தான். வருவது யார் என உற்றுப்பார்த்திருந்தான் உச்சங்காரி.

வந்து நின்றான் வேட்டூர்பழையன். யானைப்படையை எதிர்த்துத் தன்னந்தனியாக ஒரு கிழவன் குதிரையில் வந்து நிற்பது எதனால் என யாருக்கும் புரியவில்லை.

வேட்டூர்பழையன் சொன்னான், ``பறம்பின் தரப்பில் யானைப்படை ஏதுமில்லை.”

உச்சங்காரி அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். போர்விதிகளின்படி யானைப்படை யானைப்படையோடு தான் மோத வேண்டும். அப்படியென்றால் என்ன செய்வது எனச் சிந்தித்த அடுத்த கணம் உச்சங்காரி முடிவெடுத்தான், ``அப்படியென்றால் நாங்கள் பறம்புக்குள் நுழைவோம்.”
வேட்டூர்பழையன் கைகளை விரித்துக் காட்டிச் சொன்னான், ``உங்களின் விருப்பம்.”

அதே வேகத்தோடு உச்சங்காரி தனது படைகளுக்கு ஆணை பிறப்பிக்க ஆயத்தமானான். அதற்குள் அருகில் இருந்த இரண்டாம்நிலைத் தளபதி சொன்னான், ``தளபதி, நம்மைச் சிக்கவைத்து அழிக்கும் திட்டம் இதற்குள் இருப்பதாகக் கருதுகிறேன். எனவே, அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.”

வட்டாற்றுத் தாக்குதலில் சோழனின் யானைப்படையை முழுமுற்றாக அழிந்த கதை அனைவருக்கும் தெரியும். அறிவிப்புக்கு ஆயத்தமான உச்சங்காரி, சற்றே நிதானம்கொண்டான். கருங்கைவாணனை ஆலோசித்து, பிறகு முடிவெடுக்கலாம் என நினைத்தான்.

முதல்நிலைப் படையின் இறுதிப்பகுதியில் நின்றிருந்த கருங்கைவாணனுக்கு ஒவ்வொரு திசையிலிருந்தும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அவனிடமிருந்து வேந்தருக்குச் செய்திகள் சென்றவண்ணம் இருந்தன. சம வலிமைகொண்ட இரு படைகள் மோதினால், மோதலின் தொடக்கமே மொத்த ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு நிலைமை அப்படியன்று. சின்னஞ்சிறு படை ஒன்று மாபெரும் படையின் மீது தாக்குதல் தொடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே, பெரும்படையின் தலைமைத் தளபதி மிக நிதானத்தோடு வந்துசேரும் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

எதிர்பார்த்ததைப்போல வாள்படையும் தேர்ப்படையும் முன்னேறிக்கொண்டிருந்தன. சாகலைவனும் நகரிவீரனும் அடுத்தடுத்த செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தனர். விற்படையின் தளபதி துடும்பனும் வகுக்கப்பட்ட உத்தியின் அடிப்படையில் எதிரியின் தாக்குதலைக் கையாண்டுகொண்டிருந்தான். மூன்று படைப்பிரிவுகளிலும் எத்தனை சேனைமுதலிகள் முன்களத்தில் போரிட்டுக்கொண்டிருக்கின்றனர் என்ற கணக்கை அருகில் இருந்தவர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.

கருங்கைவாணன் பெரிதும் எதிர்பார்த்திருந்த குதிரைப்படையின் முன்னேற்றம் பற்றி இன்னும் செய்திகள் வந்துசேராமல் இருந்தன. அங்கிருந்துதான் முதல்நிலை வெற்றியை அவன் எதிர்பார்த்திருந்தான். அந்த வெற்றியின் அடிப்படையில்தான் அவனது திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. பறம்பின் மொத்தப் படைவீரர்களின் எண்ணிக்கையைவிட வேந்தர்களின் குதிரைப்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, முதல்நிலையில் பறம்புப்படை பின்வாங்கிவிட்டால் உறுமன்கொடி தனது வலிமையான குதிரைப்படையைக்கொண்டு பறம்புப்படையை அரைவட்டச் சுற்றில் வளைக்கும் வியூகத்தைத் திட்டமிட்டிருந்தான்.

இடதுமுனையிலிருந்து வந்து சேர்ந்த செய்தி, யானைப்படை பற்றியதாக இருந்தது. உச்சங்காரி, பறம்புக்குள் நுழைய அனுமதி கேட்டுச் செய்தி அனுப்பினான். வட்டாற்றுத் தாக்குதலில் சோழனிடமிருந்து கைப்பற்றப்பட்ட யானைகளே பெரும் எண்ணிக்கையிலானவை. எனவே, பறம்பின் தரப்பில் வலிமையான யானைப்படை இருக்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தங்களிடம் யானைப்படை இல்லை என்று எதிரிகள் சொல்வது போர்த்தந்திரமன்றி வேறில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ``அவர்களின் திட்டத்தில் நாம் போய்ச் சிக்கிக்கொள்ளக் கூடாது. எனவே, பறம்புக்குள் போய்த் தாக்கும் நடவடிக்கை வேண்டாம். அடுத்து என்ன செய்வது என்பதை உத்தரவு கிடைத்த பிறகு நிறைவேற்றுக” என்று கூறினான் கருங்கைவாணன்.

இந்தச் செய்தி போய்க்கொண்டிருக்கும் போதுதான் குதிரைப்படைத் தளபதி உறுமன்கொடி அனுப்பிய செய்தி வந்துசேர்ந்தது. ``ஒரு சேனைவரையனும் பதினாறு சேனைமுதலிகளும் நமது தரப்பில் இறந்துள்ளனர்” என்றான் அவன்.

ஒரு கணம் திணறிப்போனான் கருங்கை வாணன். முற்பகலுக்குள் பறம்புப்படையை அழித்தொழிக்கும் வலிமைகொண்டது என எதிர்பார்க்கப்பட்ட குதிரைப்படையிலிருந்து வந்துள்ள முதற்செய்தி, எந்த வகையிலும் நம்பமுடியாததாக இருந்தது.

உறுமன்கொடியை நோக்கி விரையலாமா என நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் காரமலையின் மேலிருந்து காரிக்கொம்பூதும் ஓசை கேட்டது. ஓசைவந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தான் கருங்கைவாணன்.

பாரியின் திட்டப்படி முதல் பத்து நாழிகை முடிவடைந்ததைக் குறிக்கும் காரிக்கொம்பு ஓசை அது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...